Skip to content
Home » உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #31 – ஃபிரான்சிஸ் பேக்கன் – கற்றல்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #31 – ஃபிரான்சிஸ் பேக்கன் – கற்றல்

Francis Bacon

வாசிப்பால் மூன்று உன்னதங்கள் உருவாகும். ஒன்று, பெருமகிழ்ச்சி. தனிமையிலும், துவண்டுபோன சூழலிலும் வாசிப்பாற்றல் உங்கள் முகத்தில் உவகைத் தோன்ற வைக்கும். இரண்டு, மேன்மையான தோற்றம். பிறருடன் பேசும்பொழுது, கல்வியால் நீங்கள் பக்குவப்பட்ட மனிதராக வசீகரிக்கும்படித் தோற்றமளிப்பீர்கள். மூன்று, ஆளுமைத் திறன். இக்கட்டான சூழலில் சரியான முடிவைத் தேர்ந்தெடுக்கவும், எடுத்த காரியங்களை நேர்த்தியாகக் கையாளவும் உங்கள் படிப்பாற்றல் கைகொடுக்கும்.

ஒருவேளை கைக்கொண்ட காரியம் சிறியதென்றாலும், புலம்சார்ந்த புரிதல் வேண்டுமென்றாலும், அத்துறை சார் வல்லுநர்களின் உதவி நமக்குப் போதுமானதாக இருக்கலாம். ஆனால் பெரிய திட்டங்களை ஒருங்கிணைக்க விரும்பினால், மெத்தப் படித்த கல்வியாளரிடம் அறிவுரை பெறுவதே பொருத்தமான செயல்.

வாசிப்புக்கு அதிக நேரம் ஒதுக்கினால், சோம்பேறித்தனம் ஆட்கொள்ளும். பகட்டாக வெளிக்காட்டிக்கொள்ள விரும்பி அந்நியமாக நடந்துகொண்டால், போலி என்று மக்கள் முத்திரை குத்துவார்கள். ஏட்டறிவை மட்டுமே கொள்கலனாக வைத்து நடுநாயகமான முடிவுக்கு வருவார்களேயானால், மெத்தப் படித்த சான்றோரும் கேளிக்குரியவராய் இனம் கொள்ளப்படுவர்.

வாசிப்பும் அறிவாற்றலும் ஒருவரின் இயற்கையான திறன்களை மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அத்துடன் நேரடி வாழ்வியல் அனுபவங்கள் சேகரமாகும்போதுதான் அவன் பண்படுகிறான். செடிகளின் வாதை நறுக்கிவிடும்போதுதானே அவை மேலும் செழிப்பாக வளரத் தொடங்குகின்றன‌?

நீங்கள் ஏட்டில் படித்த புத்தகச் செய்தியெல்லாம், பொதுவாழ்வில் புழக்கத்திற்குக் கொண்டுவராதவரை பொத்தாம் பொதுவான பாடங்களாகவே மூளையில் பொதிந்திருக்கும்.

புத்திமான்கள் படிப்பதை நிந்திப்பார்கள்; சாதாரண மனிதர்கள் படிப்பை ஆராதிப்பார்கள்; அறிவுள்ளவனே அதைப் பயன்படுத்திக்கொள்கிறான். எங்ஙனம் அறிவாளி ஆகவேண்டும் என்று அவர்கள் ஒருபோதும் நமக்குச் சொல்லித்தர மாட்டார்கள். மாறாக உலகை அவதானிப்பதன் மூலமே அறிவாற்றல் பெறமுடியும் என்று உணர்த்த முயல்வார்கள்.

நீங்கள் ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது, விதண்டாவாதமாகவோ கண்மூடித்தனமாகவோ அந்தப் பிரிதியை அணுகக்கூடாது. அத்தோடு உரையாடல் மேற்கொள்ளவோ, கண்துடைப்பான வெளி வேஷத்திற்காகவோ வாசிக்கக் கூடாது. மாறாய், அச்செய்திகளைப் படித்து அசை போடுங்கள். கருத்துகளைக் கவனமாய் உள்வாங்குங்கள்.

சில புத்தகங்களை ஓரிரு பக்கங்கள் ருசிக்காகத் தொட்டுக்கொள்ளலாம். சிலவற்றை மென்று, விழுங்கி, அரைத்துச் செரிக்காமல் கீழே வைக்கக்கூடாது. வேறு சிலவற்றை அங்கங்கு படித்தால் போதும். ஆனால் ஒருசில அரிய நூல்களை மட்டும் கவனம் சிதறாமல், அப்படியே முழுமையாக உள்வாங்க வேண்டும்.

எல்லாப் புத்தகங்களையும் கவனத்தோடு வாசிக்க வேண்டிய கட்டாயமில்லை. உங்களுக்கு மாற்றாக வேறு ஒருவரைப் படிக்கச் சொல்லி அதன் சாரத்தைக் கேட்டுக்கொள்ளலாம். யாரோ ஒருவரால் எழுதப்பட்ட அதன் சுருக்கத்தை மட்டும் செவிமடுத்து உள்வாங்கலாம். ஆனால் இவை எல்லாப் புத்தகங்களுக்கும் பொருந்தாது. குறைந்த மதிப்பீடு உடைய நூல்களுக்கு மட்டும் இம்முறையைப் பிரயோகிக்க வேண்டும். மற்றபடி சாறு பிழிந்த புத்தகங்கள் எல்லாம் காய்த்து வடிகட்டிய தண்ணீரைப்போல், பெரிதாகப் பயன்தராதவை.

வாசிப்புத்திறனால் ஒருவன் அறிவாற்றல் பெறுகிறான். விவாதங்கள் மூலம் அவ்வறிவைப் பயன்படுத்தி அனுபவசாலி ஆகிறான். எழுத்தாற்றல் அவனைத் துல்லியமான மனிதனாக உருமாற்றுகிறது. எனவே அதிகம் எழுத்துப் பழக்கம் இல்லாதவர்களுக்கு, நுட்பமான ஞாபகசக்தி இருக்க வேண்டும். மேலதிகம் விவாதம் செய்யத் தெரியாதவர்கள், சமயோசித புத்திக்கூர்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். பெரிதாகப் படிப்பு வாசனை இல்லாதவர்கள், தம்மிடம் எந்தச் சரக்கும் இல்லாவிட்டால்கூடப் போலியாகப் பாவனைச் செய்யக் கற்றுக்கொள்ளவேண்டும்.

வரலாறு படிப்பதன் மூலம் நீங்கள் பாண்டித்தியம் பெறலாம்‌. கவிதைகளின் வழிக் கற்பனாவாதி ஆகலாம். கணிதத்தின் மூலம் தந்திரங்கள் கற்கலாம். அறிவியல் பாடத்தால் நுண்மான் நுழைபுல ஆற்றல் வாய்க்கலாம். நீதிபோதனை, இலக்கணப் பாடங்களால் தீவிரச் சிந்தனையும் சொல்லாட்சித் திறமும் கைக்கூடலாம்.

நீங்கள் வாசிக்கும் புத்தகங்களே உங்கள் குணாதிசயமாக மாறும். உடலில் ஏற்படும் கோளாறுகளைத் தகுந்த உடற்பயிற்சியின் மூலம் விரட்டுகிறோம். சான்றாக, பந்துருட்டு விளையாட்டின் மூலம் சிறுநீரகம், மூத்திரப்பை தொடர்பான வியாதிகள் குணமடைவதும், துப்பாக்கிச் சுடுதல் மூலம் நுரையீரல் மற்றும் இருதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் சீராவதும், நிதானமாக நடைப்பயிற்சி செய்வதனால் வயிற்றுக்கு நன்மை உண்டாவதும், பயணம் மேற்கொள்வதால் தலைக்கு அனுகூலம் உண்டாவதும் யாவரும் அறிந்த உண்மைகள். அதுபோல் முறையான வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால், நம்மை விட்டகலா மனத்தடைகள் எல்லாம் தொலைதூரம் ஓடிவிடும்.

எதற்கும் அடிபணியாமல் அலைபாயும் மனம் கொண்டவர்கள், உறுதியாகக் கணிதம் படிக்கத் தொடங்கலாம். கணிதத்தில் ஒரு கணம் பார்வைச் சிதறினால்கூட, மீண்டும் தொடக்கத்திலிருந்து தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு. வேறுபாடுகளைப் பகுத்தறியத் திணறுபவர்கள், ஆதி முதல் அந்தம் வரை கிரகித்து உணர்ந்த தத்துவவாதிகளின் படிப்பினைகளை வாசிக்க வேண்டும். தான் படித்தவற்றைத் திறம்படப் பிறருக்கு எடுத்துரைக்கவோ, அதில் ஆழங்கால்பட்டுப் பயணிக்கவோ தயக்கம் கொள்பவர்கள், வக்கீல்கள் வாதாடும் வழக்குகளை வாசித்து அதன்மூலம் திறன் மேம்படுத்தலாம். இவ்வாறாக மூளை நலிவடையும் ஒவ்வொரு உபாதைக்கும், கற்றல் மூலம் ஒரு மாற்றுவழி உண்டு.

0

_________
‘Of Studies’ by Francis Bacon (1597)

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *