Skip to content
Home » உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #32 – மாக்சிம் கார்க்கி – தனிமையில் இருக்கும் மனிதனின் சுபாவம்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #32 – மாக்சிம் கார்க்கி – தனிமையில் இருக்கும் மனிதனின் சுபாவம்

Maxim Gorky

மங்கிப்போன வெளிர்நிறக் காலுறை அணிந்த இளம் பெண் ஒருவரை, நான் இன்று ட்ராய்ட்ஸ்கி பாலம் அருகில் பார்த்தேன். கீழே பாயும் நெவா ஆற்றில் விழந்துவிடுவோமோ என்ற பதற்றத்தில், பாலத்தின் விளிம்புச் சுவற்றைப் பிடித்துக் கொண்டே மெல்லமாக நடந்தார். ஒருகணம், நிலவைப் பார்த்து கேலியாக நாக்கைத் துருத்தி அதட்டுவதுபோல் சைகை செய்தார்.

நிலவில் வசிக்கும் நரைமுடிக் கிழவன், புகை மண்டிய மேகக் கூட்டங்களோடு அங்குமிங்கும் அலைபாய்ந்தான். இயல்பைக்காட்டிலும் அவன் பெரிதாகத் தோற்றமளித்தான். இளஞ்சிவப்பு நிறக் கன்னங்களோடு அவனைப் பார்க்க, அதிகம் குடித்தவன் போலத் தெரிந்தான். பாலத்தில் நின்றுகொண்டிருந்த இளம் பெண்மணி, நிலவிலிருக்கும் அந்நபரை இன்னும் விளையாட்டாக மிரட்டிக் கொண்டிருந்தார். ஒருவகையில் இது பழிதீர்க்கும் செயல்போலத் தெரிந்தது.

இதைக் கவனித்துக் கொண்டிருக்கையில், என் நினைவுக்கிடங்கில் சேகரமான நெடுநாளைய சிந்தனையொன்றின் இழை மின்னல்போல வந்துசென்றது. தனிமையில் இருக்கும்போது, மனிதர்களின் சுபாவம் மிக அந்நியமாக இருப்பதாக நான் அடிக்கடி யோசித்ததுண்டு. அதை விளக்க ‘பைத்தியக்காரத்தனம்’ என்ற சொல்லைத் தாண்டி வேறொரு பொருத்தமான வார்த்தையை என்னால் தேடிப்பார்க்க முடியவில்லை.

நான் இதைச் சிறுவனாக இருந்தபோது, முதல்முறையாகப் பார்த்தேன்: இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த ரோண்டேல் எனும் பெயருடைய கோமாளி ஒருவர் இருந்தார். அவர் சர்க்கஸ் கூடாரத்தின் வெறுமையான பகுதியில், ஒளி மங்கிய பாதையின் வழியாக நடந்து வந்தார். அப்போது அவர் நடந்துகொண்ட விதம் விசித்திரமாக இருந்தது. தான் அணிந்திருந்த கோமாளித்தனமான தொப்பியைக் கையிலேந்தி, எதிரில் இருந்த கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்து தாமே தலை வணங்கினார்.

அவர் என்னைப் பார்க்கமுடியாதபடி, உயரமான மேடையில் அவருக்கு மேல் நான் அமர்ந்திருந்தேன். கோமாளியின் சுயமரியாதைச் செய்கைக்குப் பிறகு, நான் என் தலையை உயர்த்தி மேலெழுந்தேன். இந்த விசித்திரச் செயலுக்குப் பின்னால், கோமாளி வாழ்க்கையின் இருளடைந்த பக்கங்களும் துன்பகரமான அனுபவங்களும் என்னை அமைதியிழக்கச் செய்தன. அவர் ஒரு கோமாளி. அதைத்தாண்டி அவர் ஓர் ஆங்கிலேயர். விசித்திரமாகவும் நூதனமாகவும் நடந்துகொள்வதுதான் அவர் வேலை!

பிறகு என் அண்டை வீட்டுக்காரர் எ. செக்காஃப் அவர்களை, ஒருமுறை தோட்டத்தில் வைத்து தனிமையில் பார்த்தேன். சூரிய ஒளிக் கதிரை தன் தொப்பியில் பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். தான் நினைத்த காரியம் கைகூடாமல் போனதால், விரக்தியின் எல்லைக்குச் சென்றார். ஆத்திரத்தில் அவர் முகம் சிவந்தது. தொப்பியைத் தன் கால் முட்டியில் பலமாகத் தட்டி, தலையில் போட்டுக்கொண்டார். நாயைக் கோபத்துடன் அதட்டி விரட்டினார்.

ஒற்றைக் கண்ணை மூடிய நிலையில், வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டே தன் வீட்டை நோக்கி நடைபோட்டார். வாசலில் நின்றுகொண்டிருந்த என்னைப் பார்த்ததும், மெல்லமாக முறுவல் பூத்து, ‘காலை வணக்கம்’ சொன்னார். மேலும், ‘சூரியன், புற்களைப்போல் நறுமணம் வீசும் என்று சொன்ன பெல்மோன்ட்டி-ன் கவிதைகளை வாசித்திருக்கிறீர்களா?’ என்று என்னைக் கேட்டார். ‘அது கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறது, இல்லையா? ரஷ்யாவில் கஜான் சோப்புபோல் வாசனை வீசும் சூரியன், இங்கு டார்டார் வியர்வைபோல நாற்றம் அடிக்கிறது’ என்று சொல்லி நகர்ந்தார்.

மற்றொருமுறை, தடிமனான சிகப்பு பென்சிலை மருந்து புட்டியின் கழுத்துப் பகுதியில் அழுத்தமாகச் சொருக முயற்சித்துக் கொண்டிருந்தார். இயற்பியல் விதிகளுக்கு மாறாக அவர் முயற்சித்ததால், மருந்து புட்டி உடைந்துவிட்டது. இருந்துபோதும், விஞ்ஞானிபோல மீள அந்தப் பரிசோதனையை விடாமல் முயற்சித்தார்.

ஒருமுறை, லியோ டால்ஸ்டாய் ஒரு பல்லியைப் பார்த்து, ‘நீ சந்தோஷமாக இருக்கிறாயா?’ என்று மெல்லிய குரலில் கேட்டாராம்.

டுல்பர் போகும் வழியில் உள்ள சாலையில், புதர்களுக்குப் பின்னாலிருக்கும் சிறிய பாறை மீது ஏறி உட்கார்ந்து, வெயிலில் தன் உடலை உலர்த்திக் கொண்டிருந்தது அப்பல்லி. தன் கைகளை பெல்ட் மீது தளர்த்திக்கொண்டு, அந்தப் புகழ்பெற்ற எழுத்தாளர் சொன்னாராம், ‘ம்ம். நான்தான் சந்தோஷமாக இல்லை!’

ரசவாதத் துறையைச் சார்ந்த பேராசிரியர் டிக்வின்ஸ்கை, என் வீட்டு உணவறையில் உட்கார்ந்திருந்தபோது ஒரு சம்பவம் நடந்தது. தேநீர் கொண்டுவந்து கொடுத்த செப்புத் தட்டில், தன் உருவப் பிரதியைப் பார்த்த அவர், ‘மூத்தவனே, அப்பறம் வாழ்க்கை எப்படிப் போகுது?’ என்றார்.

செப்புத் தட்டில் தெரிந்த உருவம் பதில் பேசவில்லை. பேராசிரியர் பெருமூச்சு விட்டார். தன் கையால் தட்டில் தோன்றிய உருவத்தை அழித்தார். புருவங்களை மேலும் கீழும் அசைத்து, சிரிப்பூட்டக்கூடிய பாவனைகளில் முகத்தை வெவ்வேறு நிலைகளில் வைத்தார். அவர் மூக்குக் குட்டி யானையின் துதிக்கைபோல் இருந்ததால், எல்லாக் கோணத்திலும் வேடிக்கையாகத் தெரிந்தார்.

ஒருமுறை என்.எஸ்.லெஸ்காஃப் அவர்கள் பருத்திப் பஞ்சுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக, ஒருவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். மேஜையில் உட்கார்ந்து கொண்டிருந்தவர், பருத்திப் பஞ்சைக் காற்றில் பறக்க விட்டாராம். பஞ்சு கீழே விழும்போது, பீங்கான் பாத்திரத்தால் அதை ஏந்தி பிடித்தாராம். அங்ஙனம் கீழே விழும் பஞ்சு, பீங்கானில் படும்போது சத்தம் எழும்புகிறதா என்று அருகில் சென்று அவர் காது வைத்துக் கேட்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்!

மற்றொரு சமயம், பாதிரியார் எஃப். விளாடிமிர்ஸ்கி தன் முன்னால் காலணியைக் கழட்டிவைத்துவிட்டு, ‘இப்ப, போ!’ என்று தீவிரமாகக் கத்திக்கொண்டிருந்தார். சில நொடிகளில், ‘ஓ, உன்னால போக முடியாதா?’ என்றார்.

சற்றே பெருமையும் பெருமிதமும் கூடிய தொனியில், ‘பார்த்தியா, நான் இல்லாம அசையக்கூட முடியாது உன்னால!’ எனச் சொன்னார்.

அக்கணம் உள்ளே நுழைந்த நான், ‘என்ன பண்றீங்க ஃபாதர்?’ என்று கேட்டேன்.

அவர் என்னைப் பார்த்துச் சொன்னார், ‘இதோ, இந்தக் காலணிதான். சரியாகக் குதிங்கால் பகுதியில் கிழிந்துவிட்டது. இப்போதெல்லாம் காலணிகளின் தரம், மிகக் கீழ்த்தரமாக இருக்கிறது!’

மனிதர்கள் தனிமையில் இருக்கும்போது எங்ஙனம் அழுவார்கள், எங்ஙனம் சிரிப்பார்கள் என்று நான் அடிக்கடிப் பார்த்திருக்கிறேன். எனக்குத் தெரிந்த ஓர் எழுத்தாளர் இருக்கிறார். அவருக்குக் குடிப்பழக்கம் கிடையாது. தனிமையில் இருக்கும்போது வாய்விட்டு அழுதுவிடுவார். சில நேரங்களில் கொடுமையான சத்தத்தில், ‘நான் தன்னந்தனியா வீதியில் நடக்கும் நேரத்திலே’ என்று படுமோசமாக விசில் அடிப்பார். பெண்களைப்போல் நடந்துகொள்வார். அவர் உதடுகள் துடிக்கும். கண்ணீர் துளிகள் மெல்லமாகப் புரையோடி, கருந்தாடிக்குள் மறைந்து கொள்ளும்.

ஒருமுறை விடுதி அறையில், தன் முதுகை ஜன்னலில் சாய்த்துக்கொண்டு அழுதார். அவர் உடல் குலுங்கியது. பார்ப்பதற்கு நீச்சலடிப்பதுபோலத் தெரிந்தாலும், உண்மையில் அவர் உடற்பயிற்சி செய்யவில்லை. உடல் அசைவுகள் மென்மையாக, வலுவின்றி, ஒத்திசைவு இன்றி இருந்தன.

இருந்தாலும் இதை அந்நியச் செயலாகச் சொல்லமுடியாது. மக்கள் தம் உணர்ச்சிகளை, அழுகையிலும் சிரிப்பிலும் வெளிப்படுத்துவது மிகச் சாதாரணமான ஒன்று. இதனால் யாரும் குழப்பமடைய மாட்டார்கள். வயல்வெளியிலும் காடுகளிலும் சமவெளிப் பகுதியிலும் கடலிலும் தன்னந்தனியாக இருக்கும் நபர்கள், இரவில் ஜெபம் செய்வதை யாரும் விசித்திரமாகப் பார்க்க மாட்டார்கள்.

நியாகி வோரில் எனது அண்டைவீட்டில் வசிக்கும் ஒருவர், இரவில் ஒரு நாள் தவறுதலாக என் வீட்டிற்குள் வந்துவிட்டார். அவருக்கு வோரோநோஜ் மாவட்டத்தில் சொந்தமாக வீடு உள்ளது. அரைகுறை ஆடை உடுத்தியிருந்தாலும், அவர் குடிபோதையில் இல்லை. நான் விளக்குகளை அணைத்துவிட்டு, படுக்கையில் சாய்ந்துவிட்டேன். நிலா ஒளியில் அறை முழுக்க வெளிச்சம் பரவியிருந்தது. விலகிய திரையின் இழையளவு இடைவெளியில், நான் அவரின் சிரிப்புப் பூத்த விசித்திர முகத்தைப் பார்த்தேன். தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தவர்போலத் தெரிந்தார்.

‘யார் அங்கே?’

‘நான்தான்.’

‘இது உன் அறை இல்லை’

‘ஓ, என்னை மன்னித்து விடுங்கள்!’

‘தயவுசெய்து . . .’

அவர் தனக்குள் பேசுவதை நிறுத்திக்கொண்டார். ஒருகணம் அறையைச் சுற்றிப் பார்த்து, எதிரிலிருந்த கண்ணாடியில் தன் மீசை மயிரைக் கம்பீரத்துடன் ரசித்தார். பின் அவரின் மென்மையான பாடல் தொடங்கியது:

‘நான் வந்த இடம் தவறானது..

எப்படி இது இங்கு நேர்ந்தது?’

இதற்குப் பிறகும்கூட, அவர் அறையைவிட்டு வெளியேறாமல் அருகிலிருந்த புத்தகத்தை மேசைமீது தலைகீழாகக் கவிழ்த்தார். உள்ளிருந்தபடியே வீதியை நோட்டமிட்டு, வெளியிலிருப்பவரை அதட்டுவதுபோல் கத்தினார், ‘இப்போது பயங்கர வெளிச்சமாக இருக்கிறது. ஆனால் பகலில் பயங்கொள்ளும்படி கும் இருட்டுக் கவ்விக் கொள்கிறது. என்ன விசித்திரமோ?’

பிறகு குதிங்கால் தரையில் படாமல், கைகளால் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு ஜாக்கிரதையாக வெளியே சென்றார். சத்தமே இல்லாமல் கதவை மெல்லச் சாத்திவிட்டு மறைந்தார்.

புத்தகத்தில் காணும் படத்தை, விரல் வைத்து வெளியே எடுக்க முயற்சிக்கும் குழந்தைகள் சாதாரணமானவர்கள்தான். ஆனால் ஒரு விஞ்ஞானி, ஒரு பேராசிரியர் இதே காரியத்தைச் செய்வதைப் பார்ப்பது வழக்கத்திற்கு மாறானது இல்லையா? எங்கு இதை யாரேனும் பார்த்து விடுவார்களோ என அஞ்சி அஞ்சிப் பதுங்குவது வேடிக்கையானது இல்லையா?

சம்பவத்திற்கு உட்பட்ட பேராசிரியர், புத்தகத்தில் உள்ள படங்களை வெற்றுக் கரங்களால் பெயர்த்து எடுத்து தன் சட்டைப் பையில் வைத்துக்கொள்ளலாம் என்று நம்பிக்கை உடையவராய் இருந்தார். புத்தகத்திலிருந்து ஏதோவொன்றை உருவுவதுபோல் இருமூன்று முறை செய்து, தன் சட்டைப் பையில் நாணயங்களை வைப்பதுபோல் பாவனை செய்தார். ஆனால் தன் கரங்களில் ஒன்றுமில்லாததை எண்ணி, வெறுப்படைந்தவராய் புத்தகப் பக்கங்களை வேகமாகத் தேய்த்தார். இறுதியில் இம்முறை ஒத்துவராததை எண்ணி, புத்தகத்தைத் தூக்கி எறிந்து, அறையைவிட்டுக் கோபமாக வெளியேறினார்.

நான் அந்தப் புத்தகத்தைப் பரிசோதித்தேன். ஜெர்மானிய மொழியில் எழுதப்பட்ட, தொழில்நுட்பம் சார்ந்த நூல் அது. மின் இயந்திரங்களும் அதன் உதிரி பாகங்களும், படங்களாய் அச்சிடப்பட்டிருந்தன. ஆனால் அதில் ஒற்றைப் படம்கூட, பசைகொண்டு ஒட்டியதல்ல. கூடவே, அச்சிடப்பட்ட படங்களை ஒருபோதும் விரல்களால் பெயர்த்தெடுத்து பாக்கெட்டில் சொருக முடியாது என்று எல்லோருக்கும் தெரியும். அப்பேராசிரியர் மனிதவளம் சார்ந்த துறையில் பணிபுரிந்தாலும், தொழில்நுட்பம் சார்ந்த இவ்வடிப்படை அறிவுகூட இல்லாமல் இருக்க நிச்சயம் வாய்ப்பில்லை.

பொறுமையைச் சோதிக்கும்படியான விளையாட்டுகளிலும், கழிவறைக் கண்ணாடி முன்பும் பெண்கள் அடிக்கடி தம்முள் பேசிக்கொள்வர். ஆனால் நான் ஒரு விசித்திரமான பெண்ணைச் சந்தித்தேன். அவருக்கு நன்கு படித்தவர் போன்ற தோற்றம் இருந்தது. ஐந்து நிமிடங்களுக்கு மேலாக, தனி ஆளாய் மிட்டாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். கரண்டியால் ஒவ்வொரு மிட்டாயாக எடுத்து, ‘நான் உன்னைச் சாப்பிடப் போகிறேன்’ எனச் சொல்லி விழுங்கினார்.

‘அடுத்து யார்?’ எனக் கேள்வி கேட்டு, ‘உன்னைத்தான் சாப்பிடப் போகிறேன்’ என்று வரிசையாகச் சொன்னார். பிறகு ஆச்சரியமாக, ‘நான் உன்னைச் சாப்பிடவில்லை’ என வாதிட்டார்.

அப்போது மாலை 5 மணி இருக்கும். ஜன்னலருகில் சௌகரியமான நாற்காலியில், உட்கார்ந்து கொண்டிருந்தார். அறைக்கு வெளியே உள்ள இரைச்சல் மிகுந்த நகரத்தின் சத்தம் தெளிவாகக் கேட்டது. ஆனாலும் அப்பெண், தன் மடியிலிருந்த முட்டாய் பெட்டியைத்தான் கண்களை உருட்டி மும்முரமாகப் பார்த்தார்.

ஒருமுறை அரங்கவாயிலில் கருமையான கேசம் கொண்ட ஓர் அழகான பெண்ணை நான் பார்க்க நேர்ந்தது. அவர் நிகழ்வுக்குத் தாமதமாக வந்ததால், அங்கிருந்த கண்ணாடி முன்பு நின்று, தன் தலைமுடியைச் சரிசெய்து கொண்டிருந்தார். உரக்கமான குரலில், சற்றே தீவிரமாக அவர் சொன்னார்:

‘இறுதியில் நாமெல்லோரும் சாகத்தானே வேண்டும்?

அந்த நடைபாதையில் நான் ஒருவன் மட்டுமே இருந்தேன். அந்நிகழ்வுக்குத் தாமதமாக வந்தவர்களுள் நானும் ஒருவன். அப்பெண்மணி என்னைக் கவனிக்கவில்லை போலும். ஒருவேளை கவனித்திருந்தால் இத்தனை அசௌகரியமான கேள்வியை, அவர் என்முன் வைத்திருக்க மாட்டார் என நம்புகிறேன்.

பல மனிதர்கள் தனிமையில் இருக்கும்போது, விசித்திரமான சுபாவங்களை வெளிப்படுத்துகின்றனர். மற்றொரு சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள்:

அலெக்சாண்டர் ப்ளாக் என்பவர், பொது நூலகப் படிக்கட்டில் நின்றுகொண்டு பென்சிலால் புத்தகத்தின் விளிம்பில் எதையோ எழுதிக் கொண்டிருந்தார். சடாரென்று யாரோ ஒருவரின் வருகைக்கு வணக்கம் செலுத்துவதுபோல, படிக்கட்டின் மற்றொரு மூலைக்கு நகர்ந்தார். நான் அவரை அணுக்கமாகப் பார்த்தேன். அலெக்சாண்டருக்குப் பின்னால் ஒருவரும் இல்லை. படிக்கட்டின் மேலுச்சியில் இருந்த எனக்கு, எல்லாம் நன்றாகத் தெரிந்தன.

முகமலர்ந்த சிரிப்புடன், கற்பனையான மனிதரைப் பின்னிருந்து முன் அனுப்பிவைத்த அலெக்சாண்டருக்கு, நான் இதைப் பார்த்ததால் பதற்றம் உண்டாகியது. எதேச்சையாக பென்சிலைத் தவறவிட்டவர்போல, கையிலிருந்து நழுவவிட்டார். அதைக் குனிந்து எடுப்பது போல், ‘என்னால் தாமதமாகி விட்டதா?’ என அசடு வழிந்து கேட்டார்.

0

_________
‘Man’s Behaviour When Alone’ by Maxim Gorky

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *