Skip to content
Home » உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #33 – ஆல்பர்ட் காம்யூ – ஆபத்தான முறையில் உருவாக்குங்கள் – 1

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #33 – ஆல்பர்ட் காம்யூ – ஆபத்தான முறையில் உருவாக்குங்கள் – 1

ஆல்பர்ட் காம்யூ

கீழைத்தேயத்தில் வாழும் ஒரு புத்திமான், தான் வாழ்வதற்கென்று ஆரவாரம் இல்லாத நிதானமான காலக்கட்டத்தைத் தன்மேல் கருணை சொரிந்து அருளுமாறு இறைவனிடம் வேண்டிக்கொள்வது வழக்கம். நாம் ஒன்றும் அத்தனை விவேகமுடையவர் அல்லர். எனவே இறைவன் நமக்கு உணர்ச்சிப் பிழம்பான ஆரவாரம் கூடிய காலக்கட்டத்தில் வாழும் வாழ்க்கையைத்தான் நிர்பந்தித்துள்ளார்.

இக்கால எழுத்தாளர்களுக்கு இச்சூழல் நன்குத் தெரியும். நாட்டு நடப்புகளில் கவனம் செலுத்தவேண்டிய கட்டாயத்தை உணர்ந்திருக்கிறார்கள். கிளர்ந்தெழுந்து குரல் கொடுத்தால், விமர்சனத்தோடு தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கள்ள மௌனம் சாதித்தால், ஏன் குரல் கொடுக்கவில்லை என்ற வசைகளைப் பொறுத்தருள வேண்டியுள்ளது.

இத்தகையப் பெரும் கூச்சலுக்கு மத்தியில், ஓர் எழுத்தாளர் கரையொதுங்கி நின்று தன் விருப்பத்திற்கு உண்டான படிமங்களையும் உருவங்களையும் மீள தக்கவைத்து எழுத முடியாமல் திணறுகிறார். முந்தையக் காலக்கட்டத்தில் இத்தகைய நெருக்கடிகள் இல்லை. தனக்கு ஒன்றில் உடன்பாடு இல்லையென்றால், மக்கள் அமைதியாகக் கடந்துவிடுவர் அல்லது வேறொரு விஷயத்தைப் பற்றி பேச்சு எடுப்பர்.

ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. மௌனத்திற்குகூட அர்த்தம் கற்பிக்கிறார்கள். தமக்கு ஒன்றில் அபிப்பிராயம் இல்லையென்று சொல்வதைக்கூட, பக்கச் சார்புடைய அபிப்பிராயமாகக் கருதுகின்றனர். அதைக்கொண்டு பாராட்டவும் பலிசுமத்தவும் காரணம் தேடும் சூழலில், தனக்கென்று ஓர் அபிப்பிராயத்தை அவசர அவசரமாக வெளிக்காட்டும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறான், கலைஞன்.

தன்முனைப்பு இன்றி, கட்டாயத்தின் பெயரால் தனக்கென்று ஓர் அபிப்பிராயத்தைச் சூடிக்கொள்ள விளைகிறான். இன்றையக் காலத்தில் கலைஞன் என்பவன், அடிமைக் கப்பலில் ஏற்றப்பட்ட பிணைக் கைதியைப்போல், விருப்பு வெறுப்பின்றி வேலை செய்யும் கட்டாயத்திற்கு உட்பட்டிருக்கிறான்.

தான் பயணம் செய்யும் கப்பலின் கடந்தகால வரலாறு எத்தனை மோசமாக இருந்தாலும்; முதலாளிகளின் எண்ணிக்கை கணக்கில் அடங்காவிட்டாலும்; மாலுமியின் கரங்கள் பழுதுபட்டுக் கிடந்தாலும் எழுத்தாளன் அதைச் சகித்துக் கொண்டு வாழவேண்டும். நாம் இப்போது நடுக்கடலில் உள்ளோம். எனவே சராசரி மனிதர்களைப்போல், கலைஞனும் துடுப்புக்கு ஏற்ப அசைந்து கொடுத்து முடிந்தவரை தன்னை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள போராடவேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால்: உன் வாழ்கையை வாழ்; அர்த்தமுள்ள படைப்புகளை உருவாக்கிக் கொண்டே இரு!

உண்மையைச் சொன்னால், இதுவொன்றும் அத்தனை எளிதான காரியமல்ல. எழுத்தாளர்கள் முன்பு அனுபவித்த சௌகரியங்கள், ஏன் இப்போது கைக்கூடவில்லை என்று என்னால் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. மாற்றம் சற்றே கொடுமையானது. கடந்த கால வரலாற்று அரங்கில் சிங்கங்களும் தியாகிகளும் சேர்ந்தே இருந்தனர். வறட்டு வரலாற்றுச் சம்பவங்களை மாமிசமாய் நம்பி சிங்கங்களும், நிலைபேறுடைய தேற்றுதல்களை நம்பி தியாகிகளும் உயிர் வாழ்ந்தனர்.

மிகச் சமீபத்திய காலம்வரை, கலைஞன் என்பவன் பார்வையாளர்போலவே அங்கம் வகித்தான். தனக்காகவும் பிறர்க்காவும் பாடல் இயற்றினான். தியாக ஜீவன்களின் ஏமாற்ற வாழ்வைச் சற்றே மடைமாற்றி; சிங்கத்தின் பசியை முடிந்தவரை மறக்கச் செய்வதற்கு தன்னால் முடிந்த பணியைச் செய்தான். ஆனால் இப்போது அவன் வரலாற்று அரங்கில் நிற்கவைக்கப்பட்டுள்ளான். இயல்பாகவே அவன் குரல் ஒடிந்துவிட்டது. முன்பிருந்த வலிமை இப்போதில்லை.

இத்தகு அழுத்தத்தினால் கலையுலகம் எதையெல்லாம் இழக்கப்போகிறது என்று முன்கூட்டியே பார்ப்பது மிகச்சுலபம். மொசார்ட் படைப்புகளில் காணப்படுவது போலான சுதந்திரமும் இலகுதன்மையும் முதலில் குறைபடும். ஏன் நம் படைப்புகள் உருவாவதில் சிரமம் ஏற்படுகிறது, சட்டென்று உருக்குலைகிறது என்று மெல்லமாகத் தெரியவரும்.

இதனால்தான் படைப்பிலக்கியவாதிகளைவிடப் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை ஏராளமாக இருக்கிறது. செசான் போன்ற துணிகர ஓவியர்களைவிடப் பத்தோடு பதினைந்தாக இருப்பது சிறப்பென்று கருதுபவர் அதிகம் உலாவுகின்றனர். ‘வார் ஆண்ட் பீஸ்’, ‘தி சார்ட்டர் ஹவுஸ் ஆஃப் பர்மா’ போன்ற நாவல்களின் இடத்தைத் துப்பறியும் கதைகளும் மெல்லுணர்ச்சி கதைகளும் அபகரிக்கின்றன.

இந்த மாற்றங்களைக் கண்டு மக்கள் நிச்சயம் வேதனைப்படுவார்கள். ‘தி பொசஸ்டு’ கதையில் வரும் ஸ்டெபன் ட்ரோஃபிமோவிக்கின் நிஜ உலகக் கதாப்பாத்திரம்போல் மாற்றம் அடைவார்கள். நீங்களும் ஸ்டெபன்போல, உங்கள் நாட்டை எண்ணி வருத்தமடையலாம். ஆனால் இந்தச் சோகவுணர்ச்சி மட்டுமே இப்போதிருக்கும் நிலையை மாற்றியமைக்காது. எனது அபிப்பிராயப்படி, மக்கள் இந்தச் சூழலைப் புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்‌. பொத்தான் துளையில் பூச்சூடி, கை வைத்த நாற்காலியில் சாவகாசமாக அமர்ந்திருக்கும் மதிக்கத்தக்க கலைஞர்களின் காலம் இப்போது முடிந்துவிட்டது. புதிய சகாப்தம் இதைத்தானே விரும்புகிறது.

இன்றையக் காலத்தில் கலைப்படைப்பை உருவாக்குவது, ஆபத்தைக் கையிலெடுப்பதற்குச் சமானம். நீங்கள் ஒரு படைப்பை வெளியிடும்போது, இக்காலத்தின் மன்னிப்பு இல்லா மேடையில் நின்றுகொண்டு உங்கள் மீது விமர்சன ஒளிக்கதிரைப் படரவிடுகிறீர்கள். இது கலையுலகத்திற்கு வேண்டிய படைப்பா, இல்லை நிராகரிக்க வேண்டியதொன்றா என்பதல்ல கேள்வி. இந்த உலகில் எண்ணிலடங்காத நம்பிக்கைகள், தேவாலயங்கள், இன்னும் பற்பல வேற்றுமைகள் குடிகொண்டுள்ளபோதும் கலைப் படைப்பில்லாமல் உயிர் வாழமுடியாதவர்களுக்கும், அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு வாழ எத்தனிக்கிறவர்களுக்கும் நாம் ஒரு படைப்பை உருவாக்குவதற்கான சுதந்திரம் எங்கிருந்து கிடைக்கிறது என்பதுதான் கேள்வி!

மாகாணத்தின் ஆட்சியதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களால், ஒரு கலைஞன் மிரட்டலுக்கு உள்ளாகிறான் என்பது ஏற்புடையதாக இல்லை. ஒருவேளை அது உண்மையாய் இருந்தால், அதற்கு எதிராகச் சண்டை அல்லது சமாதானம் என இரண்டில் ஒருமுடிவை கலைஞன் தேர்ந்திருப்பான். படைப்பாளியிடமே சிக்கல் வலுத்திருப்பதை அறிந்துகொண்டால் ஒழிய, இந்தப் பிரச்சினையின் பூதாகர வடிவத்தைப் புரிந்துகொள்ள முடியாது. கலை மீதான வெறுப்பை இக்காலச் சமூகத்தில் வெளிப்படையாகக் காண்கிறோம். சிலநேரங்களில் படைப்பாளி மட்டுந்தான் அதை உயிர்ப்போடு வைக்கப் போராடுகிறான்.

நமக்கு முன்பிருந்த படைப்பாளிகள், தங்கள் திறமைமீது சந்தேகம் கொண்டனர். ஆனால் இன்று படைப்பே அவசியம்தானா என்று கேள்வி கேட்கத் தொடங்கி, நம் இருப்பின் அவசியத்தைகூடச் சந்தேகிக்கிறோம். ரசீன் போன்ற ஓர் எழுத்தாளர் 1957ஆம் ஆண்டில் உயிரோடு இருந்தால், ‘பெரனீஸ்’ நாடகத்தை எழுதுவதற்குப் பதில், ‘நான்டஸ் பிரகடனம்’ (Edict of Nantes) பற்றிப் பேசத்தான் துணிந்திருப்பார்.

எழுத்தாளர்கள் தங்கள் படைப்பின் மீது கேள்வி எழுப்புவதற்கு, பல காரணங்கள் உண்டு. சமகால நடப்புகளைத் தன் எழுத்தில் பதிவு செய்யாமல்போவது பெருங்குற்றம் என்றும், அவ்வாறு எழுதும் படைப்பு பிரயோஜனம் அற்றது என்றும் அவர்கள் மத்தியில் ஒரு கருத்து எழுந்துள்ளது. இதுவும் ஒரு முக்கியக் காரணம்!

பெருந்திரள் கூட்டத்தின் போராட்டங்களை மக்கள் செவிமடுத்துக் கேட்கத் தொடங்கியுள்ளனர். ஏழைகளின் துன்பங்களும் நலிந்தோர் படும் இன்னல்களும் முன்பைவிட அதிகம் உற்றுநோக்கப்படுகிறது. இதுவே நம் காலக்கட்டத்தை வேறுபடுத்திக் காட்டுகிறது. நாம் முன்பு மறந்துபோனவர்கள், இன்றும் இச்சமூகத்தில் உயிரோடு இருப்பதை கண்முன் காண்கிறோம். இதனால் பிரபுக்களும் பணக்காரர்களும் நல்லவராகிவிட்டனர் என்று பொருளல்ல. முன்பைவிட மக்கட் பெருந்திரளின் பலம் அதிகரித்துவிட்டது; எவராலும் தவிர்க்க முடியாதவராகிவிட்டனர் என்றுதான் அர்த்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.

படைப்பாளிகள் சரணடைந்து ஓடுவதற்கு வேறுசில காரணங்களும் உண்டு. சில காரணிகள் உன்னதமானவை அல்ல. அவை என்னவாக இருப்பினும், சொல்லும் கருத்து ஒன்றுதான்: படைப்பாளியின் சுயநம்பிக்கையைத் தகர்த்து, சுதந்திர வெளிக்கான ஊக்கத்தைக் கெடுத்தல். ‘தன் அறிவாளுமையை மதித்து அதற்குக் கீழ்படிந்து நடப்பதுதான், பற்றுகோடான பொருள்களிலேயே மகோன்னதமானது’ என்று எமர்சன் சொல்வார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மற்றொரு அமெரிக்க அறிஞர், ‘சுயநம்பிக்கை கொண்ட மனிதருக்கு அரசாங்கம், சமூகம், சூரியன், சந்திரன் முதலாக நட்சத்திரங்கள் வரை அனைத்தும் சாதகமாயிருக்கும்’ என்றார். அத்தகு அசாதாரண நம்பிக்கைமேல் இன்றைக்கு இடி விழுந்துவிட்டது. பல சந்தர்ப்பங்களில், தன்மீதும் தான் அனுபவித்து வரும் சலுகைகள் மீதும் எழுத்தாளன் நாணம் கொள்கிறான். கலைஞன் முன்னிருக்கும் பெரும் கேள்விக்கு அவர்களாகவே பதில் சொல்ல வேண்டும்: உண்மையிலேயே கலைப்படைப்பு ஓர் ஏமாற்று வேலையா?

0

இதற்கு நேர்மையான பதில்: ஆம். சில சந்தர்ப்பங்களில் கலைப்படைப்பு, ஓர் ஏமாற்று வஸ்துவாகத்தான் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, அடிமைக் கப்பலில் முதுகுத் தண்டு ஒடிய கனரகத் தொழில் செய்யும் பல அடிமைகளுக்கு மத்தியில், நட்சத்திரக் கூட்டம் பற்றிப் பாட்டிசைக்கும் ஒருவரை நீங்கள் பார்க்க முடியும். சிங்கத்தால் ஒருவன் வேட்டையாடப்படும் வேளையில், சமூக வாழ்க்கைப் பற்றி கலந்துரையாடும் ஒருவரை அரங்கத்தினுள் எளிமையாகக் கண்டடைய முடியும்.

கடந்தகாலத்தில் சிறப்புப் பெற்று விளங்கிய கலைவடிவம் மீது தாக்குதல்களை முன்வைப்பது எளிதல்ல. இருந்தாலும் உலகம் எவ்வளவோ முன்னேறிவிட்டது. இப்பூமிப்பந்தின் மேல் துன்பத்தில் உழல்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துவிட்டது. இந்த ரணங்களுக்கு இடையிலும் ஆடம்பர விவகாரங்களைத்தான் கலை முன்னிறுத்தும் என்றால், கலை பொய்யாகத்தான் இருக்கவேண்டும்.

படைப்பாளி பின்னர் எதைப்பற்றிதான் பேசவேண்டும்? சமூகத்தின் பெருவாரியான மக்களுக்கு எது விருப்பமாக இருக்கிறதோ அதைப் பின்தொடர முயற்சித்தால், கலைப்படைப்பு கேலிக்கூத்தாக முடிந்துவிடும். ஒருவேளை சமூகத் தேவைகளை முற்றிலும் நிராகரித்து, தன்னளவில் கற்பனை செய்து ஒரு படைப்பை உருவாக்கினால், மக்கள் அதை நிராகரித்து விடுவர். இவ்விரண்டு வகையிலும் பார்த்தால், ஒருபுறம் கேலிக்கைப் பொருளாகவும், மறுபுறம் சட்டாம்பிள்ளையாகவும் விளங்கும் கலைப் படைப்புகள், எதார்த்த வாழ்க்கையிலிருந்து நழுவி ஓடுகின்றன. கடந்த நூறு ஆண்டுகளாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகம் பணத்தைக் காட்டிலும், பணத்தின் அருவக் குறியீடுகளால் நிரம்பியுள்ளது.

வணிகச் சமூகத்தில் பொருட்களுக்கான மதிப்பு குறைந்தும், குறியீடுகளுக்கான மதிப்பு மிகுந்தும் காணப்படுவது வழக்கம். நிலம், தங்கம் முதலியவற்றை ஏக்கர், எடை நிகரனுக்குப் பதிலாக, விற்பனைக்கு உட்படும் பண்டங்களின் எண்ணிக்கை அளவுடன் ஒப்பிட்டால் வணிகச் சமூகத்தில் அது அநியாயமாகப் பார்க்கப்படும் அல்லவா?

குறியீடுகளால் நகரும் சமூகம், தன்னளவில் செயற்கையான அமைப்பைக் கொண்டுள்ளது. மனிதச் சரீரத்தின் உண்மைகூட அங்குச் செயற்கையாகவே கருதப்படும். அப்பேர்பட்ட சமூகத்தில், அப்பழுக்கற்ற ஒழுக்கமுறைக்கு மதம் எனப் பெயர் சூடுவதும், சிறைச்சாலை மற்றும் நீதித்துறை ஆலயங்களில் ‘சுதந்திரம்’, ‘சமத்துவம்’ என்ற வாசகங்கள் பொறித்திருப்பதும் ஆச்சரியமான விஷயமல்ல.

முக்கியமான வார்த்தைகளைத் தவறாகப் பிரயோகித்துவிட்டால், மீண்டுமதை அள்ளமுடியாது. இன்றைக்குச் சுதந்திரம் என்ற பதத்திற்கான மகோன்னதம் மிகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை மனிதர்களில் இருவகை புத்திசாலிகள் உண்டு – ஒன்று அதி புத்திசாலி, மற்றொன்று மட புத்திசாலி. சில மிடுக்கான புத்திசாலிகள், சுதந்திரம் என்பது முன்னேற்றப் பாதையின் தடைக்கல் எனச் சொல்கிறார்கள். இத்தகைய முட்டாள்தனமான வாதங்கள், ஒரு நூற்றாண்டுக்கால வணிகச் சமூகத்தின் ஒருதலைப்பட்சமான புரிதலின்வழிப் பிறந்திருக்கிருக்கின்றன. சுதந்திரம் என்பது கடமை என்பதற்குப் பதில், உரிமை எனப் பாடம் புகட்டியுள்ளனர். பிறர்மீது ஒடுக்குமுறை கையாள்வதற்காக, சுதந்திரம் என்ற ஆயுதத்தைத் தேவைப்படும் போதெல்லாம் கூச்சநாச்சமின்றிப் பயன்படுத்தியுள்ளனர்.

இம்மாதிரியான சமூகத்தில் கலைப்படைப்புகள் விடுதலைக்கான ஊடகமாய் இல்லாமல், வெற்றுக் கேலிக்கையாகவும் சட்டாம்பிள்ளையாகவும் இருப்பதைக் கண்டு இன்னும் ஆச்சரியப்படுவதற்கு ஏதும் இருக்கிறதா? பணம் தொடர்பான தொல்லைகளும், மெல்லுணர்வு சார்ந்த வருத்தங்களும் நிறைந்த இச்சமூகத்தில், தம் இயங்குவெளி சார்ந்த நாவல்களைக் கொண்டு சில பத்தாண்டுகள் திருப்தி அடைந்தனர். ஆஸ்கர் வைல்ட் சிறை செல்வதற்கு முன்பு, ‘எல்லாவற்றையும்விட மோசமானது மேம்போக்கான அறிவு’ என்றார். கிட்டத்தட்ட இம்மக்களும் கலை பற்றிய மேம்போக்கான புரிதலைத்தான் பெற்றுள்ளனர்.

ஐரோப்பாவின் நடுத்தர வர்க்கக் கலை உற்பத்தியாளர்கள் (நான் இங்கு கலைஞர்களைக் குறிப்பிடவில்லை) 1900ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் தங்கள் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டனர். பொறுப்புடையவராக இருக்கவேண்டுமானால், சமூகத்திலிருந்து அந்நியப்பட்டு விலகியிருக்க வேண்டும். (அவ்வாறு சமூகத்தோடு உறவை முறித்துக் கொண்ட சிலர் : ராம்போ, நீட்சே, ஸ்ட்ரின்ட்பெர்க். இதனால் அவர்கள் அனுபவித்த துயரங்களையும் நாம் அறிவோம்)

அச்சமயத்தில் ‘கலை கலைக்காத்தான்’ என்றொரு கோட்பாடு உருப்பெற்றது. வேறெதன் பொருட்டும் சமரசம் செய்யாமல், கலையின் நிமித்தமே கலைப்படைப்புகள் உருவாக்க வேண்டும் என்ற அறைகூவலை முன்வைத்தது. படைப்பாளியின் பிரித்தியேக இன்பத்திற்காக உருவாக்கப்படும் படைப்புகளில், செயற்கையான தன்னலம் பேணும் சமூக அமைப்பே வெளிப்பட்டது. குறுகிய மக்கள் கூட்டத்தை மனத்திலிறுத்தி இயற்றப்படும் இப்படைப்புகள், நிஜவுலகத்தின் அத்தனைப் பிணைப்புகளில் இருந்தும் அறுபட்டன.

எனவே இதுபோலான படைப்புகள் வெகுசிலரை வேண்டுமானால் திருப்திப்படுத்தலாம், பெரும்பாலான கலை ரசிகர்களைச் சிதைக்கும் அபாயம் உண்டு. இறுதியில் சமூகத்துடனான எல்லாத் தொடர்புகளையும் அப்படைப்பு முறித்துக்கொள்கிறது. அதை உருவாக்கிய படைப்பாளி, புகழ்பெற்றவராக இருந்தாலும் இனி தன் சொச்ச வாழ்வை ஏதிலியாக தனிமையில் வாழவேண்டும். பத்திரிகை, ரேடியோ போன்ற ஊடகங்களின் வழி தன் நாட்டு மக்களுக்கு அவர் அடையாளம் காட்டப்படலாம்.

ஒரு கலைப்படைப்பு குறிப்பிட்ட மையம் சார்ந்த பிரித்தியேகப் பொருளாக இருந்தால், அதைப் பிரபலப்படுத்துவதற்கான தேவை அதிகம் உண்டு. எனவே இலட்சக்கணக்கான மக்கள், நம் காலத்தின் மகத்தான படைப்பாளிகளை நாளிதழ் செய்திகளில் கேனரி பறவையை வளர்ப்பவராகவும், ஆறு மாதத்திற்குள் திருமண உறவை முறித்துக் கொண்ட யாரோ ஒருவராகவுமே அறிந்து கொள்கின்றனர்.

படைப்பாளியின் எழுத்துக்களை வாசித்துப் புரிந்துகொள்வதற்கு முன்பே, அவரைப் பற்றிய தூற்றுதல் – போற்றுதல்களை வைத்து எடைபோடும் சூழல் இன்று நிலவுகிறது. இப்படித்தான் எழுத்தாளர்கள் இன்று உலகறியப்படுகின்றனர். ஓர் எழுத்தாளர் இச்சமூகத்தில் வெற்றிபெற விரும்பினால், புகழ்ச்சி பெறுவது அவராக இருக்காது. அவர் பெயரைத் தாங்கிய வேறொருவராக இருக்கும். அந்நபர் ஒருகட்டத்தில் எழுத்தாளரின் சுயபிம்பத்தைக் காலி செய்வதோடு, அவருள் உறைந்திருக்கும் அசல் எழுத்தாளரையே ஒருநாள் கொலை செய்ய நேரும்.

19, 20ஆம் நூற்றாண்டில், வணிக நோக்கம் கொண்ட ஐரோப்பியக் கண்டத்தில் உருப்பெற்ற அனைத்துமே, கிட்டத்தட்ட இலக்கியம்போல அக்காலச் சமூகத்திற்கு எதிரான உருவம் கொண்டதில் ஆச்சரியம் இல்லை. பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்புவரை, இலக்கியத்தில் புதுமைகள் ஏற்படவில்லை. சமூக ஓட்டத்திற்கு ஒத்திசைவான படைப்புகளே வெளிவந்தன. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்பு, நடுத்தர வர்க்கத்தினரின் பலம் அதிகரிக்கத் தொடங்கியது. இயல்புக்கு மாறாக, புரட்சி இலக்கியங்கள் வளர்ச்சிப் பெற்றன.

ஃபிரான்ஸில் வழக்கமான இயங்கு நெறிகள் பல்வேறு குழுக்களால் தூக்கியெறியப்பட்டன. கற்பனாவாதிகள், ராம்போ போன்ற புரட்சிகர இலட்சியம் கொண்டவர்கள் அதற்கெதிராகக் கலகம் செய்தனர். விக்னி, பால்சாக் போன்ற எழுத்தாளர்கள் பிரபுத்துவக் கொள்கையைச் செயலாக்குவதில் சிக்கிக்கொண்டனர். நாகரிகச் சமூகத்தின் இரு அங்கத்தினரும் (பொதுமக்கள் மற்றும் பிரபுக்கள்) தங்கள் காலத்தில் இயங்கிய செயற்கைச் சமூகத்தைக் கூட்டுச் சேர்த்துக் கண்டித்திருக்கிறார்கள்.

இந்நீண்ட எதிர்ப்புப் பிரச்சாரம், பலகாலம் தொடர்ந்தது. இதனால் யாதொரு பிரயோஜனமும் ஏற்படவில்லை. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த சமூகத்தைப் புறக்கணிப்பதால்தான், ஒரு கலைஞன் உன்னத நிலையை அடைகிறான் எனும் கருத்து நிலவியது. விக்னி எழுதிய சாட்டர்டன் இதற்கொரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. தொடக்கத்தில் இக்கருத்து சரியென்பதுபோல இருந்தது. பொருள் மைய சமூகத்தில் அசல் கலைஞனால் சமரசம் அடைய முடியாது எனச் சொன்னாலும், கண்மூடித்தனமாக எல்லாவற்றையும் ஒரு கலைஞன் நிராகரிக்க முடியாது என்பதால் இக்கருத்தோட்டம் உடைந்துபோனது.

பல எழுத்தாளர்கள் தனித்துவ அங்கீகாரத்தின் பின்னால் ஓடி அலைகின்றனர். அங்கீகாரம் கிடைக்காவிட்டால் குற்றவுணர்வு சூழ்கிறது. கைத்தட்டல்களும் விமர்சனங்களும் ஒரே தட்டில் பரிமாறப்பட வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் இச்சமூகம் சோர்வடைந்து விட்டது. கலைப்படைப்பின் மீது ஆர்வம் குறைந்துவிட்டது என்றும் சொல்லலாம். எனவே கைத்தட்டும் ஓசையும், விமர்சனக் குரலும் மிக அரிதாகவே கேட்கின்றன. இதன் காரணமாக, தன்னைக் கவர்ச்சியாக வைத்துக்கொள்ள இன்றைய அறிவுஜீவிகள் பெரிதும் மெனக்கெட்டு வேலை செய்கின்றனர்.

கலை மரபு உட்பட எல்லாவற்றையும் நிராகரிப்பதால், தற்காலப் படைப்பாளி தனக்கென்று ஒரு சட்ட விதிகளை ஏற்படுத்திக்கொண்டு, தானே கடவுள் என்பதுபோல கருதுகிறான். தனக்கான நிஜத்தைத் தானே உருவாக்க முடியும் என நம்புகிறான். ஆனால் சமூகத்தில் இருந்து பிரிந்து வரும்போது, அவன் உருவாக்கும் படைப்புகள் அருவமாக, சலிப்பூட்டும்படி அமைகின்றன.

வாசிப்பு அனுபவமாக அவை நம்முள் தாக்கம் உண்டாக்கினாலும், அசல் படைப்பை அணுகும்போது ஏற்படுகின்ற விதிர்விதிர்பு தோன்றவில்லை; மக்களை ஒருங்கிணைக்கும் கலையம்சம் துளியும் இல்லை. சுருக்கமாகச் சொன்னால், நவீனப் படைப்பாளிகளின் நுணக்கமான எழுத்துக்களும் அருவமான அம்சங்களும் டால்ஸ்டாய், மோலியர் போன்றோரின் எழுத்துக்களோடு ஒப்பிட்டால் பன்மடங்கு வேறுபடுகின்றன. உழவோட்டிய நிலத்தின் வளமான மண்ணைப்போல் செம்படைப்புகள் இருக்கும் வேளையில், காணாத கோதுமையைக் கோட்டை எழுப்பி சேகரிப்பதுபோல் நவீனப் படைப்புகள் உருவாகின்றன.

(தொடரும்)

_________
‘Create Dangerously’ (1957) by Albert Camus

பகிர:
nv-author-image

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *