7. முதல் பறவைகளும் முதல் பாலூட்டிகளும்
மெஸோஜோயிக் காலத்தைச் சேர்ந்த பசுமையான தாவரங்கள் மற்றும் ஊர்வன பற்றிப் பார்ப்போம். அலறல், கூக்குரல் மூலம் அடர்ந்த காடுகள், சதுப்பு நிலங்களில் டைனசர்களும் காடுகளில் ‘பறக்கும் பல்லி’களான டெரோடாக்டைல்ஸ்களும் (Pterodactyls) தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்த நேரத்தில், புதர்களும் மரங்களும் இன்னும் பூ பூக்கத் தொடங்கியிருக்கவில்லை. கவனத்தை ஈர்க்காத, எண்ணிக்கையில் குறைந்த வடிவங்களைக் கொண்ட உயிரினங்கள், தங்கள் இனத்துக்கான சக்தியையும், தகவமைப்புத் தன்மையையும் பெறத் தொடங்கியிருந்தன. சூரியன் மற்றும் பூமியின் இதமான பெருந்தன்மை மங்க ஆரம்பித்த தருணத்தில், அதாவது பல உயிரினங்களின் வாழ்நாள் முடிவுக்கு வரத் தொடங்கிய காலத்தில் இந்த உயிர்களின் இந்த விசேஷ குணங்கள் மிகப் பெரிய அளவில் கைகொடுத்தன.
தத்தித் தாவும் ஊர்வனவற்றின் பல குலங்கள், இனங்கள், டைனசோர் வகையைச் சேர்ந்த சிறு உயிரினங்கள் ஆகியவை பரிணாமப் போட்டி மற்றும் எதிரிகளின் துரத்தல் ஆகியவற்றினால் அழிவில் இருந்து தப்பிக்கவும் கடும் குளிர் நிலவிய மலை உச்சி அல்லது கடலோரம் ஆகியவற்றில் வாழ தகவமப்பு பெறவும் தள்ளப்பட்டிருக்கலாம். இடர்களுக்கு உள்ளான இனங்களுக்குப் புது வகையான செதில்கள் உருவாகிப் பின்பு நீண்டு வளர்ந்திருக்கும். பறவைகளுக்குத் தற்போதுள்ள சிறகுகளின் தொடக்கமாக இவற்றைக் கூறலாம். அதுவரை காணப்பட்ட உயிரினங்களிலிருந்து மாறுபட்டு, ஒன்றன் மீது ஒன்றாக உருவான சிறகுகளைப் போன்ற செதில்கள், உறையைப்போல் வெதுவெதுப்பைத் தந்து குளிரிலிருந்து பாதுகாத்தன. இதுவரையிலும் உயிரினங்கள் எதுவும் வாழ்ந்திராத குளிர் பிரதேசங்களுக்குச் சென்று வாழ இவை வழியமைத்துத் தந்தன.
அநேகமாக இதே காலகட்டத்தில் இதுபோன்ற மாற்றங்களுடன் இவ்வகை உயிரினங்களுக்குள் தங்கள் முட்டைகள் மீதான ஆர்வமும் எழுந்திருக்கக்கூடும். இதுவரையில் பெரும்பான்மை ஊர்வனங்கள் அவற்றின் முட்டைகள் பொரிப்பது தொடர்பாகக் கவனக்குறைவுடன் இருந்தன. வெய்யில் படும் இடங்களில் அல்லது உரிய காலம் வந்ததும் தாமாகப் பொரிந்து குஞ்சுகள் வெளிவந்துகொள்ளட்டும் என்று முட்டைகளையிட்டுவிட்டுச் சென்றுவிடும். இதனைத் தொடர்ந்தே சில வகை உயிரினங்கள் உடல் சூட்டில் முட்டைகளை வெதுவெதுப்பாக அடைகாத்துக் குஞ்சுகளைப் பொரிக்கும் புது வழக்கமும் உண்டானது.
குளிர் மற்றும் அக மாற்றங்களின் தகவமைப்பு நடைபெற்றதன் காரணமாக, முற்காலப் பறவைகள், வெப்ப ரத்த உயிரினங்களாக, சூரிய ஒளியைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமின்றி உருவாயின. ஆரம்பகாலப் பறவைகள் கடற்பறவைகளாக மீன்களைச் சாப்பிட்டு வாழ்ந்தன. முந்தைய பறக்கும் பறவைகளின் வழித்தோன்றலாக இல்லாமல், சாதாரண சிறகுகளுடன், பறக்கும் சக்தியற்ற இந்த வித்தியாசமான பண்டை காலப் பறவையான நியூசீலாந்தின் ‘கிவி’ (Kiwi) பறவைகளின் முன்னங்கால்கள் சிறகுகளாக இல்லாமல், பென்குவின் பறவைகளின் துடுப்புகள் போலிருந்தன.
பறவைகளின் பரிணாம வளர்ச்சிக்கேற்பச் சிறகுகள் படிப்படியாக இறக்கைகளாயின. சிறகு உருவான அக்கணமே அவற்றின் விரிவாக்கமும் தொடங்கி, பின்னர் இறக்கைகளாக உருமாறின. டெரோடாக்டைல் மற்றும் மெசோஜோயிக் காலப் பறவையைப்போல், ஊர்வனத்தின் தாடையில் பற்களும் நீளமான வாலும், பறக்கும் சக்தி கொண்ட இறக்கையும் காணப்பட்டன. இப்படியான வகையில் குறைந்தபட்சம் ஒரேயொரு பறவையின் புதைபடிம எச்சமேனும் நமக்குத் தெரியும்.
இருப்பினும் மெசோஜோயிக் காலத்தில் பறவைகளின் வகைகளோ எண்ணிக்கையோ அதிகமில்லை. ஒருவேளை மனிதருக்கு பண்டைய மெசோஜோயிக் காலத்துக்குப் பின்னோக்கிச் செல்ல முடிந்தால், பறவை என்னும் உயிரினத்தைப் பார்க்கும் வாய்ப்பே அவருக்குக் கிடைக்காது. மாறாக, ஏராளமான டெரோடாக்டைல்களையும், இலைகள் மற்றும் நாணல்களில் பூச்சிகளையுமே காணமுடியும். மெசோஜோயிக் காலத்தில் மனிதனால் காண முடியாத மற்றுமொரு உயிரினம் பாலூட்டி. பறவை என்றழைக்கப்படும் ஓர் உயிரினம் தோன்றுவதற்கு கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்பு, சின்னஞ்சிறு உருவில், அதிக கவனத்தை ஈர்க்காத பாலூட்டிகள் இருந்திருக்கலாம்.
பண்டைய பறவைகளைப் போலவே, பண்டைய பாலூட்டிகளுக்கும் கடுமையான பரிணாமப் போட்டி நிலவியது. கடினமான வாழ்க்கை மீதான நாட்டம் மற்றும் குளிருக்கு ஏற்ப மாறும் சூழலுக்குத் தள்ளப்பட்டன. செதில் பின்னாளில் தூவலைப்போல வெப்பத்திலிருந்து உடலைப் பாதுகாக்கும் கவசமாக உருமாறியது. இதுவும் பிறகு சூரிய ஒளியைச் சார்ந்திருக்கும் அவசியமற்ற வெப்ப ரத்த உயிரினமாக வேறு வகையான மாற்றங்களுக்கு உள்ளானது. சிறகுகளுக்குப் பதிலாக ரோமம் உருவானது. முட்டைகளைக் கண்காணிப்பதற்குப் பதிலாக அவை முதிர்ச்சி அடையும்வரை தனது இறக்கைகளுக்குள் வெதுவெதுப்பாக அடைகாத்தது. இவற்றுள் பெரும்பாலானவை உயிரோட்டம் பெற்று தங்கள் குஞ்சுகளை இவ்வுலகுக்கு உயிருடன் கொண்டு வந்தன. குஞ்சுகள் பிறந்த பின்னரும் அவற்றைப் பாதுகாத்து உணவூட்டி வந்தன.
பெரும்பாலான பாலூட்டிகளுக்குப் பால் சுரக்கும் முலைகள் வந்ததால் குட்டிகளுக்குப் பாலூட்டின. வாத்துக்குள்ள அலகு கொண்ட ப்ளேடிபஸ் (Platypus) மற்றும் எசிட்னா (Echidna) ஆகிய இரு வகை பாலூட்டிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தன. அவற்றுக்கு முலைகள் இல்லாவிட்டாலும், தோலுக்குக் கீழே கசியும் ஊட்டச் சத்து மிக்க திரவத்தைக் குஞ்சுகளுக்குப் பாலாக ஊட்டின. எசிட்னா தோல் போன்ற முட்டைகளை இட்டுத் தனது வயிற்றுக்குக் கீழுள்ள பையில் சுமந்தவாறே வெதுவெதுப்புடனும் பாதுகாப்புடனும், குஞ்சு பொரிக்கின்றன.
மெசோஜோயிக் கால உலகுக்குப் செல்லும் பயணிகள் நாள்கணக்கில், வாரக்கணக்கில் அலைந்து தேடினாலும் ஒரு பறவையைக் கூடக் காண முடியாது. அதைப்போல், எங்கு சென்றால் எதைப் பார்க்கலாம் என்ற விவரம் தெரியாவிட்டால், பாலூட்டியைத் தேடும் அவரது பயணம் தோல்வியில்தான் முடியும். இதற்குக் காரணம், மெசோஜோயிக் காலத்தில் பறவைகளும் பாலூட்டிகளும், விசித்திரமான, முக்கியமற்ற மற்றும் இரண்டாம் நிலை உயிரினங்களாகவே இருந்தன.
ஊர்வனவற்றின் காலம் தற்போதைய ஊகத்தின்படி சுமார் 80 மில்லியன் ஆண்டுகள் நீடித்தது. ஏதேனுமொரு செயற்கை மனித நுண்ணறிவு, கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத நீண்ட நெடிய காலத்தின் ஊடே, உலகைக் கூர்ந்துநோக்கும் பட்சத்தில், பாதுகாப்பான மற்றும் நிலைத்த சூரிய ஒளியையும், பிரம்மாண்ட டைனசோர்களையும், பறக்கும் பல்லிகளையும் பார்க்கும். பிரபஞ்சத்தின் மர்மமான மாற்றங்களும், திரளும் ஆற்றல்களும், இந்த நிலையற்ற- நித்திய நிலைத்தன்மைக்கு எதிராகத் திரும்பின. உயிரின வாழ்க்கையின் அதிருஷ்ட ஓட்டம் முடிவை நெருங்கிக் கொண்டிருந்தது. யுகங்கள் பல கடந்தன; கோடிக்கணக்கான ஆண்டுகள் சுழன்றோடின; தடைகளும் பின்னடைவுகளும் ஏற்பட்டன; துன்பங்களும் துயரங்களும் கடினமான சூழல்களும் நிலவின.
நிறைவாக மலைகளும் கடல்களும் பெரும் மாற்றங்களுக்குள்ளாகின. நீண்ட நெடிய மெசோஜோயிக் காலத்திய பாறைகளின் படிவுகளில் ஒன்றைத் தெரிந்துகொண்டோம். அப்போது நிகழந்த நிலையான, நீடித்த மற்றும் கணிசமான மாற்றங்கள் காரணமாக, வாழும் வடிவங்களில் பெரிய அளவிலான ஏற்ற இறக்கங்களும், புதிய மற்றும் வித்தியாசமான இனங்களும் தோன்றின. அழிவதற்கான அச்சுறுத்தல்கள் அதிகரிக்கவே, பழைய இனங்கள் முழு திறனுடன் உயிர் பிழைப்பதற்கான தகவமைப்புகளை ஏற்கத் தொடங்கின. புதை படிமங்கள், உதாரணத்துக்கு, மெசோஜோயிக் காலம் தொடர்பான இந்த அத்யாயத்தின் கடைசிப் பக்கங்களில், பல அற்புதமான வடிவங்களை வெளிப்படுத்தின.
செளகரியமான நிலையான சூழல்களில் புதுமைகளுக்கு இடமில்லை. தேடல் வளர்வதில்லை, மாறாக அழுத்தப்படுகின்றன. மிகச் சிறந்த தன்மை என்பது ஏற்கெனவே அங்குள்ளது. எனவே, நூதனமான சூழல்களில் சாதாரண வகையே பாதிப்புக்கு உள்ளாகும். உயிர்பிழைக்கவும் நிலை நிறுத்திக் கொள்ளவும் நல்ல வாய்ப்பு கொண்டிருக்கும் புதுமைகள் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும்.
பாறைகளின் படிவுகள் இல்லாத காலம் ஒன்று இடையில் பல லட்சக்கணக்கான ஆண்டுகள் நீடித்தது. இந்தக் காலகட்டத்தில் என்ன நடந்தது என்று இன்று வரையிலும் எதுவும் தெரியவில்லை. உயிர் வாழ்க்கை வரலாற்றின் விவரத் தொகுப்பின் மீது ஒரு திரைமூடப்பட்டுள்ளது. அத்திரை விலகும் காலத்தில் ஊர்வனங்களின் காலம் முடிவுக்கு வருகிறது. டைனசோர் (dinosaur), ப்ளெசியோசர் (plesiosaur), இச்தையோசர் (ichthyosaur) மற்றும் டெரோடக்டைல் (pterodactyl) உள்பட ஏராளமான உயிரினங்களும், அவற்றின் வகைகளும் முற்றிலும் அழிந்து போயின. சிறப்புடன் வாழ்ந்த அந்த உயிரினங்கள் சந்ததிகளை உருவாக்கமல் மடிந்தன. கடுமையான குளிர் அவற்றைக் கொன்றுவிட்டன. அவை மேற்கொண்ட இறுதிக்கட்ட மாற்றங்கள் எதுவும் உயிர் பிழைக்கப் போதுமானதாக இல்லை. தகவமைப்பு நிர்பந்தங்களுக்கு அவற்றால் ஈடுகொடுக்கமுடியவில்லை. இந்த உலகம், அவற்றின் தகவமைப்புத் திறனைத் தாண்டிய நெருக்கடியான சூழல்கள் நிலவிய கட்டத்தைக் கடந்துசென்றது. மெசோசாயிக் வாழ்க்கையின் மெதுவான மற்றும் முழுமையான படுகொலை அரங்கேறியது. இப்போது உலகில் கூடுதல் வலிமைகொண்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் தோன்ற ஆரம்பித்தன.
உயிரினங்களின் வாழ்க்கை என்னும் புத்தகத்தின் புதிய அத்யாயம் தொடங்கும் இந்த இடமும் இன்னும் இருண்டும் மங்கியுமே உள்ளது. சைகாட் (cycad) என்னும் ஒரு வகைப் பனைமரங்களும், வெப்ப மண்டல ஊசியிலை மரங்களும் (conifer), கடுமையான பனிக்காலங்களில் அழிவைத் தவிர்க்கும் வகையில், இலைகளை உதிர்க்கும் மரங்களுக்கும், பூப்பூக்கும் தாவரங்களுக்கும், புதர்களுக்கும், இடமளித்துள்ளன. ஏராளமான ஊர்வனங்களும், பல்வகையான பறவைகளும் பாலூட்டிகளும் புதிதாகத் தோன்றிக் கொண்டிருந்தன.
8. பாலூட்டிகளின் காலம்
உலகில் அடுத்த கட்ட உயிரினங்கள் தோன்றிய மிகப் பெரிய காலம் கைனோஜோயிக் காலம் (Cainozoic period). இதை மிகப் பெரிய நிலவியல் எழுச்சியும் தீப்பிழம்பைக் கக்கும் எரிமலைகள் வெடிப்புகளும் நடந்த காலம் என்றும் சொல்லலாம். இக்காலத்தில்தான் இப்போதுள்ள ஆல்ப்ஸ் (Alps), இமயம் (Himalayas), ராக்கீஸ் (Rockies), ஆண்டீஸ் (Andes) ஆகிய உயரமான மற்றும் நீண்ட மலைத்தொடர்களும், பெருங்கடல்களும், கண்டங்களும் தோன்றின. இப்போதுள்ள உலக வரைபடத்தின் முதல் மற்றும் மங்கலான பிரதிபலிப்பு, அப்போது காட்சியளிக்கத் தொடங்குகிறது. இன்றைய நாளிலிருந்து சற்றேறக் குறைய 40 – 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிலவியதே கைனோஜோயிக் காலம்.
கைனோஜோயிக் காலத்தில் உலகத் தட்பவெப்பம் சாதாரணமாகவே நிலவியது. நாளடைவில் வெதுவெதுப்பு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து திடீரென அதிகரித்தது. படிப்படியாகச் சூழல் மீண்டும் கடினமாக மாறவே, கடுங்குளிர் நிலவும் உறைபனிப் பாறைகளின் காலச் சுழற்சிக்குள் பூமி சிக்கிக் கொண்டது. அதிலிருந்து இப்போது மெதுவாக தெளிவாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
தற்போதுள்ள தட்பவெப்ப மாற்றங்களுக்கான போதிய காரணிகள் நமக்குத் தெரியாத காரணத்தால், நம் முன்னே இருக்கும் தட்ப வெப்ப நிலையின் சாத்தியமான ஏற்ற இறக்கங்களைக் கணிக்க முடியாது. அதிகரிக்கும் சூரிய ஒளி அல்லது மற்றுமொரு உறைபனிப் பாறைகள் காலத்தை நோக்கி நாம் பயணிக்கலாம். அதேபோல் தீப்பிழம்புகளைக் கக்கும் எரிமலைகளின் தீவிரமும், மலைத் தொடர்களின் எழுச்சியும், அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். எது நடக்கும் என்பது போதிய அறிவியல் தெளிவின்மையால் நமக்குத் தெரியாது.
இக்காலத்தின் தொடக்கத்தில் புற்கள் தோன்றின. முதல் முறையாக உலகுக்கு மேய்ச்சல் நிலம் கிடைத்தது. ஆரம்பத்தில் தெளிவின்றி இருந்த பாலூட்டி வகைகள் இப்போது முழுமையான வளர்சியைப் பெற்றதைத் தொடர்ந்து தாவரங்களை உண்ணும் விலங்குகளும், அவற்றின் இறைச்சியை உண்ணும் மாமிச விலங்குகளும் தோன்றின.
இவ்வகைப் பாலூட்டிகள் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்து மறைந்த தாவர வகை மற்றும் மாமிச வகை ஊர்வனவற்றிலிருந்து ஒரு சில குணாதிசயங்களிலிருந்து மட்டுமே மாறுபடுவதுபோல் ஆரம்பத்தில் தோன்றின. இப்போது தொடங்கியுள்ள இந்த இரண்டாவது நீண்ட மிதவெப்ப காலத்தில், இயற்கை, முந்தைய காலத்தில் படைத்தவற்றையே மீண்டும் படைக்கிறதோ என்று பிழையாக ஆய்வாளர்கள் கருதக்கூடும். அதாவது, அப்போதைய தாவர மற்றும் டைனசோர் போன்ற மாமிச விலங்குகளுக்குப் பதிலாக மீண்டும் தாவர மற்றும் மாமிச விலங்குகளும், டெரோடக்டைல்களுக்குப் பதிலாகப் பறவைகளும் தோன்றின. இதுவொரு மேலோட்டமான ஒப்பீடே. இந்தப் பிரபஞ்சத்தின் வகைப்பாடு எல்லையற்றது மற்றும் இடைவிடாதது. இதன் முன்னேற்றம் நித்தியமானது. வரலாற்று நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நடைபெறுவதில்லை மற்றும் இணைகள் இல்லை என்பதும் முற்றிலும் உண்மை. மெசோஜோயிக் மற்றும் கைனோஜோயிக் கால வாழ்க்கைகளுக்கு இடையேயான வேறுபாடுகள் அவற்றின் ஒற்றுமைகளைவிட இன்னும் ஆழமானவை.
அனைத்து வேற்றுமைகளிலும் மிகவும் அடிப்படையான முக்கியமான வேறுபாடு இரு காலங்களுக்கு இடையேயான உயிரினங்களின் மனம் சார்ந்த வாழ்க்கையில்தான் இருக்கிறது. ஒப்பீட்டளவில் சந்ததிகளுக்குப் பெற்றோருடனான நீடித்த பந்தம் என்பது ஊர்வனங்களின் வாழ்க்கையிலிருந்து பாலூட்டிகள் மற்றும் பறவைகளின் வாழ்க்கையை வேறுபடுத்துகிறது. ஒரு சில விதிவிலக்குகள் தவிர்த்துப் பெரும்பான்மை ஊர்வன வகை உயிரினங்கள் முட்டைகள் இட்டவுடன் அவை தாமாகவே குஞ்சு பொரிக்கத் தனியே விட்டுவிடுகின்றன. முட்டையிலிருந்து வெளியே வரும் குஞ்சுகளுக்குப் பெற்றோர் குறித்து எதுவும் தெரிந்திருப்பதில்லை. எனவே அதன் மனம் சார்ந்த வாழ்க்கை, சொந்த அனுபவங்களில் தொடங்கி அவற்றிலேயே முடிகிறது. சக உயிரினங்களின் வாழ்க்கையை அது சகித்துக்கொண்டாலும், அவற்றுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை. அவற்றைப் பின்பற்றுவதுமில்லை, எதையும் கற்றுக் கொள்வதுமில்லை. அவற்றுடன் ஒருங்கிணைந்து வாழும் திறனுமில்லை. தனித்து வாழும் தனி உயிர்கள் போன்றவையே இவை.
குஞ்சுகளுக்குப் பாலூட்டுதல் மற்றும் நேசத்துடன் பராமரித்தல், ஆகியவை புதிய பாலூட்டிகள் மற்றும் பறவைகளின் தனித்துவமான குணங்களே. இவற்றைப் பின்பற்றுவதன் மூலம் கற்றல், எச்சரிக்கை ஒலிகளுடன் கூடிய தொடர்பு, ஒருங்கிணைந்த செயல்பாடு, பரஸ்பரக் கட்டுப்பாடு மற்றும் தகவல் தொடர்புகளுக்கு வழிவகுத்தன. கற்பிக்கத்தக்க வாழ்க்கை வகை உலகுக்கு வந்தது.
கைனோஜோயிக் ஆரம்ப காலப் பாலூட்டிகள் எல்லாம் சுறுசுறுப்பான மாமிச டைனசோர்களுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட ஒரே அளவான மூளையையே கொண்டுள்ளன. ஆனால் நவீன காலம் நோக்கிய நகர்வை எடுத்துப் பார்த்தால், ஒவ்வொரு பாலூட்டியின் மரபு மற்றும் இனத்தில், பொதுவாகவே மூளைத் திறன் வளர்ச்சி இருப்பதைக் காணலாம். உதாரணத்துக்கு இக்காலத்தின் தொடக்கத்தில், காண்டா மிருகம் போன்ற விலங்குகள் தோன்றக் காண்கிறோம். டைடனோதீரியம் (Titanotherium) என்ற வகை விலங்குகள் இந்தக் காலகட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் வாழ்ந்தன. அதன் பழக்க வழக்கங்கள், தேவைகள் எல்லாம் காண்டாமிருகத்தைப் போலிருந்தாலும், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் காண்டாமிருகத்தின் மூளைத்திறனுடன் ஒப்பிடுகையில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லை.
பழங்காலப் பாலூட்டிகள், குட்டிகளுக்குப் பாலூட்டும் காலம் முடிந்தவுடனேயே அவற்றிடமிருந்து பிரிந்துவிடும். ஆனால், இரண்டுக்கும் பரஸ்பரப் புரிதல் திறன் தோன்றத் தொடங்கியதும், பந்தம் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்தன. ஏராளமான பாலூட்டி இனங்கள் கூட்டமாகவும், மந்தையாகவும், குழுவாகவும், ஒன்றையொன்று பார்த்துப் பின்பற்றுவதையும், அடுத்தவர் செயல் அல்லது குரல் மூலம் எச்சரிக்கைகளை எடுத்துக் கொள்வதையும் அதாவது உண்மையான சமூக வாழ்க்கை வாழ்வதையும் தற்போது காண்கிறோம்.
முதுகெலும்புள்ள விலங்குகளிடையே இப்படியான ஒன்றை இந்தக் காலகட்டம்வரையான உலகம் முன்னெப்போதும் பார்த்ததில்லை. ஊர்வனவையும் மீன்களும் திரளாகவும் கூட்டமாகவும்தான் வாழ்ந்தன. குஞ்சுகள் ஏராளமாகப் பொரிப்பதுடன், ஒருமித்த சூழல்களும் ஒன்றாக ஒருங்கிணைக்கவும் வைத்தன. ஆனால், சமூக மற்றும் கூட்டமாக வாழும் விலங்குகளில் இந்த ஒருங்கிணைப்பு, புற அம்சங்களினால் அல்லாமல், அகத் தூண்டல் காரணமாகவே எழுந்துவந்தது. ஒன்றைப்போல் மற்றொன்று இருப்பதுடன், ஒரே நேரத்தில் ஒரே இடத்திலும் இருக்கின்றன. ஒன்றையொன்று விரும்புவதன் காரணமாகவே இணைந்தும் உள்ளன.
ஊர்வனவற்றின் உலகுக்கும், நமது மனித மனங்களின் உலகுக்கும், உள்ள வேறுபாட்டை உணர, நம்மால் உணர்வுரீதியாகப் புரிந்துகொள்ளமுடிவதில்லை. ஊர்வனங்களின் உடனடி நோக்கம், பசி, அச்சம், வெறுப்பு ஆகியவையே. அந்த தன்னிச்சையான வேகமான, சிக்கலற்ற, துடிப்புகளை நமக்குள் உருவாக்கிக் கொள்ள முடியாது. நமது நோக்கங்கள் அனைத்தும் சிக்கலானவை என்பதால் ஊர்வனவற்றின் உணர்வுகளின் எளிமையை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் பாலூட்டிகளுக்கும் பறவைகளுக்கும், சுய கட்டுப்பாடும், அடுத்தவற்றின் மீது கவனமும் உண்டு. இதன் விளைவாக அவற்றின் அனைத்து வகைகளோடு நம்மால் உறவுகளை வளர்த்துக் கொள்ள முடியும். துன்பப்படும்போது அழுதும் மற்றும் சில அசைவுகள் மூலமும் நம்மில் உணர்ச்சிகளை அவற்றால் தூண்டமுடியும். பரஸ்பர அங்கீகாரம் மூலமே செல்லப் பிராணிகளைப் புரிந்துகொள்ள இயலும். வீட்டு விலங்குகள்போல் வளர்த்து, கற்பித்து அவற்றைக் கட்டுப்படுத்த நம்மால் முடியும்.
கைனோஜோயிக் காலத்தின் முக்கிய அம்சம் இயல்புக்கு மாறான மூளை வளர்ச்சியே. இதுவே புதிய வகை தகவல் தொடர்புகள் மற்றும் தனி வகை உயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்திருப்பது ஆகிய மாற்றங்கள் உயிர் வாழ்க்கையில் ஏற்பட முக்கிய காரணம். பின்வரும் அத்தியாயங்களில் கூறவிருக்கும் எதிர்கால மனிதச் சமூகங்களின் வளர்ச்சிக்கான குறியீடாக இவற்றைக் கொள்ளலாம்.
கைனோஜோயிக் காலத்தின் பரவலைத் தொடர்ந்து இன்றைய உலகில் நாம் காணும் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் தோற்ற ஒற்றுமை அதிகரித்துள்ளது. யூயிண்டதெரெஸ் (Uintatheres) மற்றும் டைடானோதெரெஸ் (Titanotheres) போன்ற விகாரமான விலங்குகள் மறைந்தன. இன்றைக்கு உலகில் வாழும் ஒட்டகச்சிவிங்கி, ஒட்டகம், குதிரை, யானை, மான், நாய், சிங்கம், புலி ஆகியவற்றின் மூதாதையர்களான கோரமான (Grotesque) மற்றும் விகாரமான மிருகங்கள் தோன்றின. குதிரையின் பரிணாம வளர்ச்சி புவியியல் பாறைப் படிவுகளில் தெளிவாக உள்ளது. ஆரம்ப கைனோஜோயிக் காலத்தில் சிறிய பன்றி வகையைச் சேர்ந்த தாபீர் (Tapir) இனத்தின் மூதாதையர் தொடங்கி தொடர்ச்சியாக பல வடிவங்களின் முழுமையான தொடர் வரிசை காணப்பட்டது. துல்லியமானவகையில் தற்போது புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் உயிரின வளார்ச்சித் தொடராக லாமா ஒட்டகவகை (Llama) மற்றும் பிற ஒட்டகங்களைச் சொல்லலாம்.
(தொடரும்)
H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.