9. குரங்குகள், வாலில்லாக் குரங்குகள் மற்றும் மனிதக் குரங்குகள்
இயற்கை இயலாளர்கள் பாலூட்டி இனத்தைப் பல வகைகளாகப் பிரிக்கின்றனர். அவற்றுள் தலையானது லெமூர் (Lemur) எனப்படும் குரங்கின வகை, குரங்குகள், வாலில்லாக் குரங்குகள் மற்றும் மனிதர் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரைமேட்ஸ் (Primates). இவற்றின் பிரிவு உடற்கூறு ஒற்றுமைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டனவே தவிர, மனம் சார்ந்த குணங்களின் அடிப்படையில் அல்ல.
பிரைமேட்ஸின் கடந்த காலத்தை புவியியல் பாறைப் படிவுகளிலிருந்து புரிந்துகொள்வது மிகவும் கடினம். அவற்றுள் காடுகளில் வாழும் லெமூர்கள் (Lemur) மற்றும் குரங்குகள் அல்லது வெற்றுப் பாறைப் பகுதிகளில் வசிக்கும் ஆசிய / ஆப்பிரிக்கக் குரங்குகளை உள்ளடக்கிய விலங்குகளே பெரும்பான்மையானவை. இவ்வினங்களின் எண்ணிக்கை அதிகமில்லை என்பதால், குதிரைகள், ஒட்டகங்களின் மூதாதையர்கள் போன்று மூழ்கியோ, வண்டல் மண்ணால் மூடப்பட்டோ, புதை படிமங்களிலோ பெருமளவில் காணப்படுவதில்லை. கைனோஜோயிக் காலத்தின் தொடக்கத்தில், அதாவது, சுமார் 40 மில்லியன் வருடங்களுக்கு முன்பு பழமையான குரங்குகளும், லெமுராயிட் உயிரினங்களும், பிந்திய வழித்தோன்றல்கள் போல் சிறப்பாக இல்லாமல், மந்த புத்தியுடனேயே தோன்றின.
மத்திய கைனோஜோயிக் காலத்தின் கோடைக்காலம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து உயிரினங்களின் வரலாற்றில் நிலக்கரி சதுப்பு நிலங்கள் (Coal Swamps) மற்றும் ஊர்வனவற்றின் காலம் (Age of Reptiles) ஆகிய இரு மாபெரும் கோடைக்காலங்கள், உயிரினங்களின் வாழ்க்கையில் தொடர்ந்தன. மீண்டும் உறைபனிப் பாறைகள் காலத்தை நோக்கிப் பூமி சுழன்றது. உலகம் உறைபனி, கொஞ்சம் கோடை, மீண்டும் உறைபனி என அடுத்தடுத்து மாறியது. கோடைக்காலத்தில் மிதமான வெப்பத் தாவரங்கள் நிறைந்த சேற்றில் நீர்யானைகள் புரளப் பட்டாக்கத்தி போன்ற நீளமான வளைந்த பற்களைக் கொண்ட பயங்கரமான புலிகள் தங்களுக்கான இரையை வேட்டையாடிக் கொண்டிருந்தன. இவற்றைத் தொடர்ந்து இருண்ட காலமும், இன்னும் மோசமான இருண்ட காலமும் நிலவின. உயிரினங்களின் களையெடுப்பும் அழிவும் நிகழ்ந்தன. குளிரைச் சமாளிக்கும் வகையில் ரோமங்கள் நிறைந்த கம்பளி காண்டாமிருகம், பிரம்மாண்ட கம்பளி யானை, வடதுருவ கஸ்தூரி எருது மற்றும் கலைமான் ஆகியவை தோன்றின.
பனிக்காலப் பாறைகளில் எஞ்சிய வடதுருவப் பனிக்கட்டிகள் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு தென்திசை நோக்கி ஊர்ந்தன. இங்கிலாந்தில் தேம்ஸ் நதிக்கரையையும், அமெரிக்காவில் ஒஹையோ மாகாணத்தையும் அடைந்தன. அடுத்த சில ஆயிரம் ஆண்டுகளுக்கு வெப்பம் நிலவவே மீண்டும் கடுமையான குளிர்காலத்துக்குத் திரும்பியது.
இந்தக் குளிர் காலகட்டங்களைப் புவியியலாளர்கள் ஒன்றாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் உறைபனிக்காலங்கள் என்றும்; இடைப்பட்ட காலத்தை உறைபனிக் காலங்களுக்கு இடையேயான காலம் எனவும் பட்டியலிடுகின்றனர். கடுங்குளிரினால் பல பகுதிகளில் உயிர் வாழ்க்கை சாத்தியமற்றும் பிறபகுதிகளில் அச்சுறுத்தப்பட்டும்வரும் உலகில், இன்றைக்கு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முதல் உறைபனிக் காலம் சுமார் 600,000 வருடங்களுக்கு முன்பும், நான்காம் உறைபனிக் காலம் சுமார் 50,000 வருடங்களுக்கு முன்பும் நிகழ்ந்தன. இந்த நீண்ட நெடிய உலகளாவிய குளிரின் பனிப்பொழிவுகளுக்கு நடுவேதான், இந்தப் பூமியில் மனிதரைப் போன்ற முதல் உயிரினங்கள் வாழ்ந்தன.
கைனோஜோயிக் காலத்தின் இடையே அரை-மனிதரைப்போன்ற தாடைகள், கால் எலும்புகள் அமைப்புடன் பலவகை வாலில்லாக் குரங்கினங்கள் தோன்றின. இருப்பினும் உறைபனிக் காலத்தை நாம் நெருங்கும்போதுதான் ‘கிட்டத்தட்ட மனிதரைப் போலவே’ இருந்த உயிரினத்தின் தடயங்கள் பற்றிப் பேச முடியும். இத்தடயங்கள் எலும்புகள் அல்ல; கருவிகள். ஐரோப்பாவில் 5 – 10 லட்சம் வருடங்களுக்கு முந்தைய காலப் படிவுகளில் எரிகற்களையும், கற்களையும் காண்கிறோம். மண்ணைத் தோண்டுவதற்கும் தாக்குவதற்கும் இவை கூராக்கப்பட்டுள்ளன. இவ்வகைக் கூரான கற்களுக்கு ‘இயோலித்’ (Eolith) என்று பெயர். இத்தகைய பொருள்கள் உருவாகக் காரணமாக இருந்த உயிரினத்தின் எலும்புகளோ வேறு மிச்சங்களோ ஐரோப்பாவில் காணப்படவில்லை. மனிதருக்கிருக்கும் குணங்கள் முழுமையாக இல்லாவிட்டாலும், புத்திசாலிதனமுள்ள குரங்கு என்று இந்த இனத்தை ஓரளவு நிச்சயமாகச் சொல்லலாம்.
ட்ரினில் (Trinil) , ஜாவா (இந்தோனீஷியா) பகுதியில் வாலில்லா மனிதக் குரங்கின் மண்டை ஓட்டின் ஒரு பகுதியும், பற்களும், எலும்புகளும் கிடைத்தன. அதன் மூளை இப்போது வாழும் வாலில்லாக் குரங்கை விடவும் பெரிது. அதோடு, நிமிர்ந்து நேராகவும் நடந்தது. இந்த நடமாடும் வாலில்லா மனிதக் குரங்கின் தற்போதைய பெயர் பிதேகேந்த்ரோபஸ் எரெக்டஸ் (Pithecanthropus erectus). கூரான கற்களைச் செய்தது ஒருவேளை இவ்வகை வாலில்லா மனிதக் குரங்குகளாகக்கூட இருக்கலாம் என்று நாம் யூகிக்க உதவுவது, இவற்றின் எலும்புகள் மட்டுமே.
சுமார் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மணற்பரப்பை எட்டும்வரை, மனிதனுக்குச் சற்றே குறைந்த உயிரினத்தின், எந்தவொரு தடயத்தையும் பார்க்க முடியவில்லை. இருப்பினும் ஏராளமான கருவிகள், தரத்தைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டு வந்ததைத் தரவுகளில் காண்கிறோம். கற்களான ஆயுதங்கள் கோணல் மாணலாக இல்லாமல், கைத்திறனுடன் நன்கு வடிவமைக்கப்பட்ட கருவிகளாக உள்ளன. பிற்காலத்தில், உண்மையான மனிதர்கள் வடிவமைத்த கருவியை விடவும் பெரிதாக இருந்தன. ஹீடல்பெர்க்கிலுள்ள (Heidelberg) மணற்குழியில் ஒற்றை அரை மனிதனின் விகாரமான தாடை எலும்பைக் கண்டெடுத்தார்கள். கன்னங்கள் இல்லாமல், உண்மையான மனிதனின் தாடை எலும்பை விடவும் எடை அதிகமாகவும், குறுகலாகவும் இருந்ததால், நாக்கைச் சுழற்றி அந்த உயிரினத்தால் நிச்சயம் பேசியிருக்க முடியாது. இத்தாடை எலும்பின் வலிமை மற்றும் எடையைக் கருத்தில் கொண்டு, இந்த உயிரினம், பிரம்மாண்ட உருவத்துடன், நீண்ட கைகால்களுடன், அடர்த்தியான முடியுடன், மனித அரக்கனாக இருந்திருக்க வேண்டும் என்பது ஆயவாளர்கள் கருத்து. அவனை ‘ஹீடெல்பெர்க் மனிதன்’ (Heidelberg Man) என்று அழைத்தனர்.
நமது மனித ஆர்வத்துக்கு உலகிலேயே அதிகத் துன்பம் தரும் பொருள்களுள், தாடை எலும்பே முக்கியமானது என நினைக்கிறேன். இதைப் பார்ப்பது குறைபாடுள்ள கண்ணாடி மூலம் கடந்த காலத்தைப் பார்ப்பதுபோன்றது. மங்கலாக, தெளிவற்ற காட்சியாக இருண்ட வனப்பகுதிக்குள் இந்த அரைமனிதன் நீண்ட வளைந்த கூரான பற்களைக் கொண்ட புலியிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள புதர் மறைவில் மறைந்தபடியும் ரோமங்கள் நிறைந்த காண்டாமிருகத்தை பயத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதையும் நாம் கற்பனையில் பார்க்கமுடியும். அந்த அரை மனிதனை மேலும் கூர்ந்து ஆய்வு செய்வதற்குள் அந்தக் கோரமான மனித உயிரினம் அங்கிருந்து அப்படியே மறைந்துவிடுவதுபோலாகிவிடுகிறது. இருப்பினும் அவருடைய பயன்பாட்டுக்காக அவர் செதுக்கிய அழிக்க முடியாத கருவிகள், நம் ஆய்வுக்காக மண்ணில் ஏராளமாகச் சிதறிக் கிடக்கின்றன.
ஸசெக்ஸ் (Sussex) மாகாணம் பில்ட்டௌனில் (Piltdown) ஓர் உயிரினத்தின் கவர்ச்சியான, ஆனால், புதிரான எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் காலம் 1,00,000 – 1,50,000 வருடங்களுக்கு முன்பிருக்கும் என்று கணித்தாலும், சில ஆய்வாளர்கள் ஹீடெல்பெர்க் மனிதனின் தாடை எலும்புக் காலத்தை விடவும் பழமையானது எனகின்றனர். வாலில்லாக் குரங்கு மற்றும் சிம்பன்ஸி குரங்குகளின் தாடை எலும்பைவிடவும் பெரிதான, மனிதனைவிடக் குறைந்த உயிரினத்தின் (Sub-human) கெட்டியான, மண்டை ஓட்டின் எச்சங்கள் கிடைத்துள்ளன. யானையின் எலும்பைக் கிரிக்கெட் மட்டையைப்போல் செதுக்கி அதன் நடுவே ஒரு துளையையும் போட்டுள்ளனர். பால் கணக்குக்கு சுவரில் கரியால் கோடு கோடுகளாகப் போடுவதுபோல் கோடுகள் செதுக்கப்பட்ட மானின் தொடை எலும்பும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆற அமர உட்கார்ந்துகொண்டு எல்லா எலும்புகளிலும் ஓட்டையையும் கோடுகளையும் போட்ட இந்த உயிரினம் எந்த வகை விலங்காக இருக்கக் கூடும்?
அறிவியல் அறிஞர்கள் இம்மனிதருக்கு ‘இயாந்த்ரோபஸ் (Eoanthropus – the Dawn Man) எனப் பெயரிட்டுள்ளனர். ஆனால் அவர் குடும்ப உறவுகளிடமிருந்து மாறுபட்டும், ஹீடெல் பெர்க் உயிரினமாக அல்லது வாலில்லாக் குரங்காக இல்லாமலும், வித்தியாசமாக இருக்கிறார். அவரைப் போன்று வேறொன்று அதே அடையாளத்துடன் உள்ளதாகத் தெரியவில்லை. ஆனால் கடந்த 1,00,000 வருடங்களாகச், சிக்கி முக்கிக் கல் மற்றும் அது போன்ற கல்லாலான கருவிகளின் சரளைகளும், படிமங்களும் தொடர்ந்து கிடைத்துவந்திருக்கின்றன. தற்போதைய தொல்பொருள் ஆய்வாளர்கள் இவற்றைச் சிக்கி முக்கிக் கல்லால் ஆன கருவிகள் என்று பொத்தம் பொதுவாகக் கூறாமல், சுரண்டும் கருவிகள், துளைப்பான்கள், கத்திகள், ஈட்டிகள், எறி கற்கள், கைக் கோடரிகள் என வித்தியாசப்படுத்திப் பட்டியலிட்டுள்ளனர்.
இப்போது நாம் மனிதனுக்கு வெகு அருகில் நெருங்கிக் கொண்டிருக்கிறோம். அடுத்த அத்யாயத்தில் மனித இனத்தின் எல்லா முன்னோடிகளிலும் வினோதமானவர்களை, அதாவது, நியாண்டெர்தால்களைப்பற்றி விவரிக்க உள்ளோம். அவர்கள் கிட்டத்தட்ட மனிதர்கள்; ஆனால், மனிதர்கள் இல்லை!
இன்றைய அறிவியல் மனிதர் ஹீடெல்பெர்க் மனிதன் அல்லது இயாந்த்ரோபஸ் (Eoanthropus) உள்ளிட்ட எந்தவொரு உயிரினங்களையும், இன்றைய மனிதர்களின் நேரடி மூதாதையர்களாகக் கருதுவதில்லை. இவர்கள், மனிதர்களுடன் தொடர்புடைய, மிக நெருக்கமான வடிவங்கள் மட்டுமே.
10. நியாண்டெர்தாலர்கள் (Neanderthalers) மற்றும் ரொடீஷியர்கள் (Rhodesians)
சுமார் 50,000 அல்லது 60,000 ஆண்டுகளுக்கு முன் அதாவது நான்காவது பனிக்காலத்துக்கு முன்பு, மனிதரைப் போன்ற உயிரினம் உலகில் வாழ்ந்தது. இதனுடைய எச்சங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மனிதர்தான் என்று கருதப்பட்டது. அவற்றின் மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகளுடன் தயாரித்துப் பயன்படுத்திய பெரிய கருவிகளின் குவியல்களும் நம்மிடம் உள்ளன. நெருப்பை உண்டாக்கிப் பயன்படுத்தியிருக்கின்றனர். கடுங்குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள குகைகளில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். கரடு முரடான தோல்களை ஆடைகளாக உடுத்திக் கொண்டனர். மனிதர்களைப்போல் வலது கைப் பழக்கம் கொண்டவர்களாக விளங்கினர்.
இருப்பினும் தற்போதைய இனவியலாளர்கள் இவ்வகை உயிரினங்கள் உண்மையான மனிதர்கள் இல்லை என்கின்றனர். இவை ஒத்த பண்புடைய ஒரே இனக் கூட்டத்தின் வெவ்வேறு இன வகைகள். கனமான நீண்ட தாடைகள், குறுகிய நெற்றிகள் மற்றும் கண்களுக்கு மேலே பெரிய அடர்ந்த புருங்களையும் கொண்டிருந்தன. மனிதர்களுக்கு இருப்பதைப்போல் பிற விரல்களை விடவும் உறுதியான கட்டை விரல்கள் இல்லை. கழுத்தை அசைக்க முடியாது என்பதால் தலையை உயர்த்தி வானத்தைப் பார்க்க முடியாது. குனிந்தவாறே, கழுத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு நடந்தனர். அவற்றின் முகவாய்க்கட்டை இல்லாத தாடை எலும்புகள், மனிதர்களின் தாடை எலும்புகளைப் போலின்றி ஹீடெல்பெர்க் தாடை எலும்பைப் போலிருந்தது. அவற்றின் பல்வரிசையும் மனிதர்களின் பல்வரிசையிலிருந்து மிகப் பெரிய அளவில் வேறுபட்டிருந்தது.
கன்னத்தை ஒட்டிய பல்வரிசை நமக்கிருப்பதைவிடவும் சிக்கலான கட்டமைப்பைக் கொண்டிருந்தது. ஆனால், அந்த அரை மனிதர்களுக்கு நமக்கிருக்கும் கோரைப் பற்கள் இல்லை. அவர்களின் மண்டை ஓட்டுத் திறன் மனிதர்களைப் போலிருந்தாலும், மனித மூளையைவிடவும், பின்புறம் பெரியதாகவும், முன்புறம் சிறியதாகவும் இருந்தது. அவர்களின் அறிவுசார் புலன்கள் வேறுவகையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. அவை மனித வழித்தோன்றல்களுக்கு முன்னோடிகள் இல்லை. மனத்தாலும் உடலாலும் மனிதர்களிடமிருந்து வேறுபட்டிருந்தனர்.
அழிந்துபோன இம்மனித இனத்தின் மண்டை ஓடுகளும் எலும்புகளும், நியாண்டெர் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டன. எனவே வித்தியாசமான, வினோதமான மனித முன்மாதிரிகள் நியாண்டெர்தால் மனிதர்கள் அல்லது நியாண்டெர்தாலர்கள் என்றழைக்கப்பட்டனர். அவர்கள் ஐரோப்பாவில் பல நூறு அல்லது ஆயிரக் கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும்.
தற்போது உள்ளதைவிடவும் அக்காலத்திய உலகின் தட்பவெப்பமும் புவியியலும், மிகவும் மாறுபட்டே இருந்தன. உதாரணமாக ஐரோப்பா முழுவதும், மத்திய ஜெர்மனி, ரஷியா மற்றும் தெற்கே தேம்ஸ் வரை பனிக்கட்டி படர்ந்திருந்தது. இங்கிலாந்தையும் ஃபிரான்ஸையும் பிரிக்கும் கால்வாய் கிடையாது. மத்தியதரைக் கடலும் செங்கடலும் பள்ளத்தாக்குகளாக இருந்தன. அவற்றின் ஆழமான பகுதிகளில் ஏரிகளும் தற்போதை கருங்கடல் (Black Sea) தொடங்கி, தெற்கு ரஷியா ஊடே, மத்திய ஆசியா வரை, மிகப் பெரிய அளவில் உள்நிலக் கடல் பரவியிருந்தது.
பனிக்கட்டிகள் காணப்படாத ஸ்பெயின் மற்றும் ஐரோப்பாவின் உட்பகுதிகள் மேட்டு நிலங்களாகவும், லேப்ரடாரை (Labrador) விடவும் வெப்பம் அதிகமாகவும் இருந்தன. வட அமெரிக்காவை எட்டிய பிறகே மிதமான தட்பவெப்ப நிலையை உணர முடியும்படியாக அன்று இருந்தது. அரிதான வடதுருவத் தாவரங்களைக் கொண்ட தென் அமெரிக்காவின் குளிர்ந்த புல்வெளிப் பகுதிகளில், யானையை விடப் பிரம்மாண்ட கம்பளி மாமூத் (Mamooth), கம்பளி காண்டாமிருகம், பெரிய எருது, கலைமான் ஆகியவை தாவரங்களைத் தேடி, வசந்த காலத்தில் வடக்கேயும் இலையுதிர் காலத்தில் தெற்கேயும் பயணம் செய்தன.
நியாண்டெர்தாலர் என்னும் அரை மனிதர் இதுபோன்ற சூழலில்தான், அங்குமிங்கும் அலைந்தும், பழங்கள், பெர்ரிகள், கிளைகள் மற்றும் வேர்களை உணவாகச் சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருந்தார். அநேகமாக இவர் தாவர உணவு உண்பவராக இருந்திருக்க வேண்டும். கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகளிலுள்ள பல்வரிசையும் தன்மையும், தாவர உணவு உண்ணும் வகையில் இருந்தன. அவருடைய குகைகளில் பெரிய விலங்குகளின் நீண்ட எலும்புகள் காணப்பட்டன. இந்த எலும்புகளிலிருந்து அவர் மஜ்ஜைகளை எடுத்திருக்கலாம். பிரம்மாண்ட விலங்குகளைக் கைவசமுள்ள ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொன்றிருக்க வாய்ப்பில்லை.
அவற்றைப் பிடிக்க ஆழமான பள்ளங்களை வெட்டியிருக்கலாம். ஆறுகளைக் கடக்கும்போது எதிர்வரும் மிருங்களின் தாக்குதல்களைச் சமாளிக்க ஈட்டிகளை உபயோகப்படுத்திருக்கலாம். மந்தைகளைப் பின்தொடர்ந்து சண்டையின்போது இறந்தவற்றை நரிகளைப் போலவும், அவர் காலத்தில் வாழ்ந்த வளைந்த நீண்ட கூரான பற்களைக் கொண்ட புலிகளைப் போலவும் உண்டு வாழ்ந்திருக்கலாம். நீண்ட நெடுங்காலமாக தாவர உணவு உண்பவராக வாழ்ந்த இவ்வகை மனிதர், உறைபனி காலத்தில் விலங்குகளை வேட்டையாடத் தொடங்கியிருக்கலாம்.
நியாண்டெர்தாலர் என்னும் அரை மனிதர் எப்படி இருந்திருப்பார் என நம்மால் யூகிக்க இயலவில்லை. உடலெங்கும் அடர்த்தியான ரோமங்களுடன், தற்போதைய மனிதருக்குள்ள தோற்றமின்றி இருந்திருப்பார். முதுகை வளைக்காமல் நிமிர்ந்து நடந்திருப்பாரா என்பது கூடச் சந்தேகமே. கீழே விழாமலிருக்க விரல் கணுக்களையும் பாதங்களையும் பயன்படுத்தியிருக்கலாம். தனியாகவும், குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட சிறு குழுக்களாகவும் திரிந்திருப்பார். அவருடைய தாடை அமைப்பைப் பார்த்தால் பேசும் ஆற்றல் பெற்றிருக்க வாய்ப்பில்லை என்றே தெரியவருகிறது.
தொடர்ச்சியாக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இவ்வகை நியாண்டெர்தாலர் மனிதர்களே, ஐரோப்பா இதுவரை கண்டிராத அளவுக்கு பிராந்தியம் முழுவதும் பரவலாக வாழ்ந்த மிருகங்கள். பிறகு சுமார் 30,000 அல்லது 35,000 ஆண்டுகளுக்கு முன்பு மிதமான தட்ப வெப்பம் நிலவத் தொடங்கியபோது, புத்திசாலித்தனமான, அதிக விஷயங்கள் தெரிந்த, ஒருவருகொருவர் பேசி உறவாடும் உறவுகளின் இனம், தெற்கிலிருந்து நியாண்டெர்தாலர் உலகுக்குள் நுழைந்தது.
நுழைந்தவர்கள், அங்கு வசித்துக் கொண்டிருந்த நியாண்டெர்தாலர்களைக் குகைகளிலிருந்தும், கூடி உட்காரும் இடங்களிலிருந்தும் வெளியேற்றினர். அவர்கள் உண்ட அதே உணவை வேட்டையாடினார்கள். கொடூரமான முன்னோடிகளுடன் சண்டையிட்டுக் கொன்று குவித்தனர். இந்தப் புதுமுகங்களின் பிறப்பிடம் தெற்கா கிழக்கா என்பது இதுவரை நமக்குத் தெரியாது. ஆனால் நியாண்டெர்தாலர்களின் இனத்தை முற்றிலுமாக அழித்த இவர்கள்தான், நமது ரத்தமும் சதையுமான மூதாதையர்கள்.
ஆம். இவர்களே, உலகின் முதல் உண்மையான மனிதர்கள். அவர்களின் மூளையைச் சுற்றியுள்ள மண்டையோடு, கட்டை விரல்கள், கழுத்து மற்றும் பற்களை உள்ளடக்கிய உடற்கூறியல் நம்மைப் போலவே உள்ளன. க்ரோ-மேக்னன் (Cro-Magnon) மற்றும் க்ரிமால்டி (Grimaldi) ஆகிய இடங்களில் ஏராளமனான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை நமக்குக் கிடைத்த ஆதி மனித எலும்புக் கூடுகளில் இவையே புராதனமானவை.
பாறைகளின் ஆவணப் படிவுகளுக்குள் நமது இனம் தடம் பதிக்க, மனித குலத்தின் கதை ஆரம்பமாகிறது. கடுங்குளிர் நிலவிய சூழலில், இப்போது போலவே அப்போதும், உலகம் வளர்ந்து கொண்டிருந்தது. ஐரோப்பா கண்டத்தில் உறை பனிக் காலப் பனிப்பாறைகள் உருகத் தொடங்கின. மாமூத் என்னும் பிரம்மாண்ட யானை இனம் தெற்கு ஐரோப்பாவில் அரிதாகிப் பின்னர் வடக்கில் முற்றிலுமாக அழிந்தது. ஃபிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் வாழ்ந்த கலைமான்களும் மறையத் தொடங்கவே புல்வெளிகளில் புற்களின் விளைச்சல் பெருகிக் குதிரைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் அதிகரித்தன.
உண்மையான மனிதர்கள் (True Men) முதலில் தோன்றிய இடம் எதுவென்று தெரியவில்லை. ஆனால் 1921 கோடையில் தென் ஆப்பிரிக்கா புரோக்கன் ஹில் பகுதியில் எலும்புக்கூட்டின் உடைந்த பாகங்களுடன் சுவாரஸ்யமான மண்டை ஓடு கிடைத்தது. நியாண்டெர்தாலர் மற்றும் மனிதன் ஆகிய இருவரின் குணத்துடன் மூன்றாம் வகை மனிதரோ என எண்ணும் வகையில் மண்டை ஓட்டின் குணங்கள் இருந்தன. மூளைக்கூட்டை ஆய்வு செய்கையில், நியாண்டெர்தாலர் மூளையை விடவும், முன்பக்கம் பெரியதாகவும் பின்பக்கம் சிறியதாகவும் இருந்தது. முதுகெலும்பின் மீது செங்குத்தாக மண்டை ஓடும், பற்களும், எலும்புகளும் இப்போதைய மனிதருக்கு இருப்பதைப் போலவே காணப்பட்டன. முகத்தில் ஏராளமான புருவ முகடுகளும், மண்டை ஓட்டின் நடுவே ஒரு முகடும் குரங்கைப் போலவே இருந்தன. பேசத் தெரிந்த, குரங்கைப் போன்று, நியாண்டெர்தாலர் முகத்தைக் கொண்ட இந்த உயிரினம் உண்மையான மனிதர்தான். நியாண்டெர்தாலர் மனிதரை விடவும், ரொடீஷியன் (Rhodesian) மனிதரே, உண்மையான மனிதருக்கு நெருக்கமாக இருந்தான்.
உலகில் வாழ்ந்த துணை மனிதர்களின் மண்டை ஓடுகள் குறித்த நீண்ட பட்டியலை ஆய்வு செய்கையில், ரொடீஷியன் மண்டை ஓடு இரண்டாம் இடம் வகிக்கிறது. இவர்கள், உறை பனிக் காலத் தொடக்கம் மற்றும் அவர்களின் பொது வாரிசு அல்லது அவர்களை அழித்த உண்மையான மனிதர் தோன்றிய காலங்களுக்கு நடுவே மண்ணில் வாழ்ந்தவர்கள். ரொடீஷியன் மண்டை ஓடே பழமை வாய்ந்ததாக இருக்க வாய்ப்பில்லை. இந்தப் பதிப்பு அச்சேறும் வரை (முதல் பதிப்பு 1922, மூன்றாம் பதிப்பு 2006) இதன் வயது துல்லியமாக உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் இந்தத் துணை மனித உயிரினம் தென் ஆப்பிரிக்காவில் சமீப காலம் வரை வாழ்ந்ததாகத் தெரிகிறது.
(தொடரும்)
H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.