Skip to content
Home » H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #7

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #7

13. விவசாயத்தின் ஆரம்பம்

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, உலகில் விவசாயம் மற்றும் குடியிருப்பின் தொடக்கம் குறித்துப் பல்வேறு ஆய்வுகளும் யூகங்களும் கணிசமான அளவில் நடைபெற்றாலும், அவை குறித்து நாம் இன்னும் தெளிவாக அறியாமலேயே உள்ளோம். இப்போதைக்கு நம்மால் உறுதியுடன் சொல்ல முடிந்தது இதுதான்: 15,000 – 12,000 பொ.ஆ.மு. ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் அஜிலியன் (Azilian) மக்களும் பழைய வேட்டைக்காரர்களில் எஞ்சியவர்களும் வடக்கு மற்றும் கிழக்கு நோக்கி நகர்ந்தனர். அந்த இடம் வட ஆப்பிரிக்கா அல்லது மேற்கு ஆசியா அல்லது இப்போது மத்திய தரைக் கடலுக்குள் மூழ்கிய மத்திய தரைக் கடல் பள்ளத்தாக்காக இருக்கலாம். அங்கிருந்த மக்கள் விவசாயம் மற்றும் வீட்டு விலங்குகளை வளர்த்தல் ஆகிய இரு முக்கியமான பணிகளைச் செய்துகொண்டிருந்தனர். வேட்டையாடுவதற்குத் தேவையான கூர்மையான ஆயுதங்களைச் செதுக்குவதுடன், பளபளப்பான கற்களான கருவிகளையும் தயாரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கூடை பின்னுதல், தாவர இலைகளால் ஆடை நெய்தல், கச்சா வடிவிலான மண்பானை செய்தல் ஆகிய கலைகளையும் கண்டுபிடித்திருந்தனர்.

நியோலித்திக் அதாவது புதிய கற்காலம் என்னும் மனித அத்யாயத்தின் புதிய கட்டத்துக்குள் அவர்கள் நுழைந்து கொண்டிருந்தனர். இது க்ரோ-மேக்னார்ட்ஸ் (Cro-Magnards), கிரிமால்டி (Grimaldi) மற்றும் அஜிலியன் (Azilian) மக்களை உள்ளடக்கிய பண்டைய பேலியோலிதிக் அல்லது பழைய கற்காலத்தை விடவும் மாறுபட்டது. இந்த நியோலித்திக் மக்கள் மெதுவாக உலகின் கதகதப்பான பகுதிகளுக்குப் பரவத் தொடங்கினர். கற்ற கலைகளும் தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களும், அவர்களை விடவும் இன்னும் சிறப்பாகவும் வேகமாகவும், விரிவாகவும், ஏனைய இடங்களுக்குப் பரவ உதவின. 10,000 பொ.ஆ.மு. வாக்கில் மனித இனம் பெரிமளவுக்கு நியோலித்திக் கட்டத்தையே எட்டியிருந்தது.

இன்றைய நவீன சிந்தனைக்கு உலகம் உருண்டை என்பது தெரிந்திருப்பதைப்போல், நிலத்தை உழுதல், விதை விதைத்தல், அறுவடை, கதிரடித்தல் அரைத்தல் ஆகியவையும் வெளிப்படையான இயல்பான நியாயமான நடவடிக்கைகளாகத் தோன்றும். வேறென்ன செய்ய இயலும்? இல்லையா… ஆனால் இன்று நமக்கு வெளிப்படையாகவும், உறுதியாகவும் உள்ள செயல் மற்றும் பகுத்தறிவு அமைப்புகள் எதுவுமே 20.000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதி மனிதனுக்கு வெளிப்படையாக இல்லை. பல்வேறு பரிசோதனைகள் மற்றும் தவறான எண்ணங்கள், அருமையான, தேவையற்ற விரிவாக்கங்களுடனும், தவறான விளக்கங்கள் ஆகியவற்றினூடாகவே பயனுள்ள நடைமுறைக்கான வழியை ஒருவழியாகக் கண்டடைந்தனர். மத்திய தரைப் பிராந்தியத்தில் எங்கேயோ ஓரிடத்தில் கோதுமை அதிகம் விளைந்தது. விதைகளை விதைப்பதற்கு நீண்ட காலம் முன்பே அவற்றை அரைத்து உணவாக்கும் முறையை மனிதன் கற்றிருந்தான். விதைக்கும் முன்பே அறுவடை செய்தான்!

உலகம் முழுவதும் எங்கெல்லாம் விதைப்பும் அறுவடையும் நடைபெறுகின்றனவோ, அங்கெல்லாம், வலுவான பழங்குடித் தொடர்பின் சுவடுகள் காணப்படுகின்றன என்பது அதிசயமான விஷயம். ஒவ்வொரு முறை விதைக்கும்போதும், இரத்த பலி, குறிப்பாக மனிதனையே பலி கொடுக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. இவ்விரு சிக்கலான விஷயங்களின் ஆய்வு, ஆர்வமுள்ள மனத்துக்குக் கவர்ச்சிகரமானது. ஆர்வமுடையவர்கள் சர் ஜே ஜி ஃப்ரேசர் எழுதிய கோல்டன் போ (Golden Bough) என்னும் இணையற்ற நூலில் அதை விரிவாகக் காணலாம். இது குழந்தைத்தனமான, கனவு காணும், கற்பிதங்களை உருவாக்கும் ஆதி மனதில் உருவான சிக்கல் என்பதை, நாம் நினைவில் கொள்ளவேண்டும். தர்க்க ரீதியான எந்த முறையும் இதை விளக்க முடியாது.

ஆனால் 12,000–20,000 ஆண்டுகளுக்கு முந்தைய உலகில் நியோலித்திக் மக்களிடம் விதைப்புக்கான நேரம் வரும் போது மனித உயிர்ப்பலி நிகழ்ந்துள்ளது. பலி கொடுக்கப்பட்ட நபரும் சாதாரண அல்லது ஒதுக்கப்பட்ட மனிதன் அல்ல. இளைஞன் அல்லது இளைஞி பலிக்காகப் பிரத்யேகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவனுக்கு / அவளுக்கு அபரிமிதமான மரியாதை தரப்படும். உயிர்ப்பலி அளிக்கப்படும் தருணம் வரை அவன் / அவள் கடவுளாகவே வணங்கப்படுவார். தனது இன்னுயிரைத் தியாகம் செய்யும் கடவுள் – ராஜாவாகவே போற்றப்படுவார். இவரது உயிர்ப் பலி, வயது முதிர்ந்த மற்றும் விவரம் அறிந்தோர் முன்னிலையிலும், வழிகாட்டுதலின்படியும், சடங்காகவும், சம்பிரதாயமாகவும் நடைபெறும்.

ஆரம்பகால மனிதர்களுக்குத் தொடக்கத்தில் பருவகாலம் குறித்துத் தோராயமான எண்ணம் மட்டுமே இருந்தது. விதைப்பதற்கும் பலி கொடுப்பதற்கும் சரியான நேரம் எதுவென முடிவெடுக்கச் சிரமப்பட்டனர். மனித இனத்தின் தொடக்கத்தில், ஆண்டுகள் பற்றி எந்த யோசனையும் இல்லாததற்குக் காரணமுண்டு. முதல் கால வரிசை, சந்திரனை அடிப்படையாகக் கொண்ட மாதங்களில் அமைந்திருந்தது. விவிலிய ஆதி மனிதர்களின் ஆண்டுகள் சந்திரனை அடிப்படையாகக் கொண்டது. விதைப்பதற்கான நல்ல நேரத்தைக் குறிக்கப் பதின்மூன்று சந்திர மாதங்களைக் கொண்ட சுழற்சியைக் கணக்கிடும் தனித்துவமான தடயங்களை பாபிலோனிய நாட்காட்டி தெரிவிக்கிறது.

நாட்காட்டியில் அப்போதிருந்த சந்திரனின் ஆதிக்கம் நமது காலம் வரை இன்றும் தொடர்கிறது. அதன் தொடர் பயன்பாடு விநோதமான நம் உணர்வை மழுங்கடிக்கவில்லை எனில், அது உண்மையில் குறிப்பிடத்தக்க விஷயம் என்றே எண்ண வேண்டும். இயேசு சிலுவையில் அறையப்பட்டதையும், உயிர்த்தெழுந்ததையும், கிருத்தவ தேவாலயங்கள் அந்த நாட்களில் நினைவு கூர்வதில்லை. மாறாகச், சந்திரனின் வளர்ச்சி, தேய்வுகளுக்கு ஏற்ப ஆண்டுக்கு ஆண்டு மாறும் தேதிகளில் அனுசரிக்கின்றன என்பது கனிக்கத்தக்கது.

தொடக்க கால விவசாயிகள், நட்சத்திரங்களைக் கூர்ந்து கவனித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். பயணம் செய்யும் திசைகளைத் தெரிந்து கொள்ள வசதியாக, நட்சத்திரங்களை முதன் முதலில் கூர்ந்து கவனித்தவர்கள், இடம் விட்டு இடம் புலம்பெயர்ந்த இடையர்களாக இருக்கவே வாய்ப்பு அதிகம். ஆனால் பருவ காலங்களை நிர்ணயிக்கும் பழக்கம் ஏற்பட்ட பின்னர், விவசாயத்தில் அவற்றின் முக்கியத்துவம் அதிகரித்தது. விதை விதைப்பதற்கு முன் கொடுக்கப்படும் உயிர்ப்பலிக்கான நல்ல நேரமும், ஏதோவொரு நட்சத்திரத்தின் வடக்கு அல்லது தென் திசையோடு இணைக்கப்பட்டது. எனவே, ஆதி மனிதன் வாழ்க்கையில் நட்சத்திரத்தின் கற்பிதமும், தொன்மமும், வழிபாடும், தவிர்க்க முடியாத அம்சமானது.

இரத்த பலி, நட்சத்திரங்கள் குறித்த அறிவும், அனுபவமும் கொண்ட மனிதருக்கு ஆரம்ப நியோலித்திக் உலகில், எப்படியான முக்கியத்துவம் இருந்திருக்கும் என்பதைத் தெரிந்து கொள்வது முக்கியம். அசுத்தம் மற்றும் தீட்டு குறித்த அச்சம், சுத்தப்படுத்தும் முறைகள் எல்லாம் இந்த அறிவார்ந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் மற்றொரு ஆதார சக்திகளாக அமைந்தன. ஆதி காலத்திலிருந்தே சூனியக்காரிகள், மந்திரவாதிகள் இருந்ததுபோலவே ஆண், பெண் பூசாரிகளும் இருந்துவந்துள்ளனர். ஆரம்ப கால பூசாரி மதம் சார்ந்த மனிதராக இல்லாமல் பயன்பாட்டு அறிவியல் மனிதராகவே இருந்தார். அவரது அறிவியல் அனுபவபூர்வமானதாக இருந்தாலும், பெரும்பாலும் தவறாகவே இருந்துள்ளது. பொறாமை காரணமாக அதை வெகு ரகசியமாகவே பாதுகாத்தார். இருப்பினும் அவரது அடிப்படைக் குணம் அறிவார்ந்த தேடலே; நடைமுறைப் பயன்பாடே அவரின் முக்கிய இலக்கு இவற்றொலெல்லாம் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

12,000 அல்லது 15,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆதி உலகின் வெதுவெதுப்பான மற்றும் தண்ணீர் நிறைந்த பகுதிகளில், நியோலித்திக் மனித சமூகங்கள், பாரம்பரியப் பெருமைமிகு ஆண் பெண் பூசாரிகளோடும், விவசாய நிலங்களோடும், கிராம நகர வளர்ச்சியோடும் பரவிக் கொண்டிருந்தனர். காலம் செல்லச் செல்லச், சமூகங்களுக்கு இடையே கருத்துப் பரிமாற்றமும், வேறுபாடும் நிலவின. எலியாட் ஸ்மித் மற்றும் ரிவர்ஸ் ஆகியோர் முதன் முதலில் தோன்றிய வேளாண் குடிமக்களின் கலாச்சாரத்தை ‘ஹீலியோலித்திக் கலாச்சாரம்’ (Heliolithic culture) என்றழைத்தனர்.

ஹீலியோலித்திக் (சூரியன் மற்றும் கல்) என்பது இதற்கான சரியான சொல் அல்ல; இருப்பினும் அறிவியல் பெருமக்கள் இதற்கான சரியான சொல்லை நமக்குத் தரும் வரை இச்சொல்லையே பயன்படுத்துவோம். மத்தியதரை மற்றும் மேற்கு ஆசிய பகுதியில் எங்கோ தொடங்கிக் காலங்காலமாகக் கிழக்கே ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்கு பசிஃபிக் வழியே பயணம் செய்து, அமெரிக்கா வரை பரவினர். வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்த மங்கோலாயிட் (Mongoloid) குடியேறிகளின் ஆதி பழங்குடி வாழ்க்கை முறையோடு ஒன்று கலந்தனர்.

ஹீலியோலித்திக் கலாச்சாரத்துடன் எங்கெல்லாம் பழுப்பு நிற மக்கள் பயணித்தார்களோ, அங்கெல்லாம் தொகுக்கப்பட்ட சுவாரஸ்யமான யோசனைகளையும், நடைமுறைகளையும் எடுத்துச் சென்றனர். மனநல நிபுணர் விளக்கமளிக்கும் வகையில் இவை வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் இருந்தன. பூசாரிகளின் வானியல் கண்காணிப்புகளுக்கு உதவும் வகையில், மிகப் பெரிய அளவில் பிரமிட்கள் (Pyramid), மேடுகள், கற்களாலான வட்டங்கள், இறந்த போனவர்களின் உடல்கள் அழுகாமல் இருக்க மம்மிக்கள் (Mummies) ஆகியவற்றை உருவாக்கினர். பச்சை குத்திக்கொள்வதையும், ஆணுறுப்பு முனைத் தோல் நீக்குவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். மனைவியின் பேறு காலத்தின் போது, கணவன் போலியாக பிரசவ வலி உள்ளதுபோல் காட்டிக்கொண்டு ஓய்வெடுக்கும் விநோதமான பழக்கமும் நிலவியது. ‘ஸ்வஸ்திக்’ (Swastik) சின்னம் அதிர்ஷ்டத்தைத் தருமென்றும் நம்பினர்.

மேற்கூறிய தொகுக்கப்பட்ட நடைமுறைகள், எந்த அளவுக்கு தடையங்களை விட்டுச் சென்றன என்பதைக் காட்ட, அவற்றை புள்ளிகளாக்கி உலக வரைபடத்தை உருவாக்க விரும்பினால் ஸ்டோன்ஹெஞ்ச் மற்றும் ஸ்பெயின் தொடங்கி மெக்ஸிகோ மற்றும் பெரு வரை, மிதமான மற்றும் துணை-வெப்ப மண்டல கடலோரப் பகுதிகள் வழியே, உலகின் குறுக்கே பயணித்து, ஒரு கோடு வரைய வேண்டும். ஆனால் நடுநிலக் கோட்டுக்குக் கீழேயுள்ள ஆப்பிரிக்கா, வடக்கு மத்திய ஐரோப்பா மற்றும் வடக்கு ஆசியப் பகுதிகளில் இந்தப் புள்ளிகளைக் காண முடியாது. அங்கே வாழ்ந்த இனங்கள் தங்களுக்கான தனித்துவமான நடைமுறைகளைக் கடைப்பிடித்து வந்ததே இதற்குக் காரணம்.

14. ஆதி நியோலித்திக் நாகரிகங்கள்

பொ.ஆ.மு.10,000-ல் உலகின் பொதுவான புவியியல் அமைப்பு, இன்றைய உலகுக்கு இருப்பதைப் போன்றே ஏறத்தாழ இருந்தது. மத்தியதரைப் பள்ளத்தாக்கு கடல்நீர்ப் பகுதியில், அதுவரை மீன்பிடிக்கரையாக விளங்கிய ஜிப்ரால்டர் ஜலசந்திக்குக் குறுக்கே, பெரிய தடுப்பு இருந்தது. அது தற்போது கடலில் மூழ்கியிருக்க வேண்டும். மத்தியதரைப் பகுதி கடலாக, இப்போது உள்ளதைப்போலவே, அப்போதும், அதே கடற்கரை ஓரங்களைக் கொண்டிருக்கவேண்டும். கேஸ்பியன் (Caspian) கடல் தற்போதைய அளவை விடவும் காகஸஸ் (Caucasus) மலைத்தொடருக்கு வடக்கே கருங்கடல்வரை இன்னும் விரிவடைந்திருக்கும். இப்போது புல்வெளிகளாகவும், பாலைவனங்களாகவும் திகழும் மத்திய ஆசியக் கடல் நிலங்கள், அப்போது செழிப்பாகவும், மக்கள் வாழத்தக்கதாகவும் விளங்கின. உலகம் பொதுவாகவே ஈரமாகவும், வளமாகவும் இருந்தது. ஐரோப்பிய ரஷியா, இப்போது இருப்பதை விடவும், சதுப்பு நிலமாகவும், ஏரியாகவும் அப்போது காட்சியளித்தது. பெர்ஹிங்க் (Behring) ஜலசந்தியில் ஆசியாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் பெரும் நிலப்பரப்பு இருந்திருக்கலாம்.

மனித குலத்தின் முக்கிய இனப்பிரிவுகளை இன்றைக்கு நாம் வேறுபடுத்த அறிந்திருப்பதுபோல், அன்றைக்கும் சாத்தியப்பட்டிருக்கலாம். வெதுவெதுப்பான மற்றும் அடர்ந்த காடுகளைக் கொண்ட உலகின் மிதமான வெப்பநிலைப் பிராந்தியங்களிலும், கடற்கரைகளின் ஊடேயும், இப்போது வாழ்பவர்களின் மூதாதையர்கள் வசித்தனர். குறிப்பாக, ஹீலியோலித்திக் கலாச்சாரத்தைப் பின்பற்றும் பழுப்பு நிறத்தவர்களான மத்தியதரைக் கடல் பெர்பெர்கள் (Berber), எகிப்து, தெற்கு மற்றும் கிழக்கு ஆசியப் பகுதிகளில் வாழ்ந்தனர்.

இந்த மிகப் பெரிய இனத்தில் பல்வேறு பிரிவுகள் இருந்தன. ஐபீரியன் அல்லது மத்தியதரை அல்லது அட்லாண்டெக் மற்றும் மத்தியதரைக் கடற்கரையோரக் கருப்பு-வெள்ளை இனங்கள், பெர்பெர்களையும் எகிப்தியர்களையும் உள்ளடக்கிய ஹேமிட்டிக் (Hamitic) மக்கள், இந்தியாவின் கருப்பு நிறத் திராவிடர்கள், கிழக்கிந்தியர்கள், பாலினீசியன் இனங்கள், மாவோரிஸ் (Maoris) உள்ளிட்ட அனைவரும் மிக பெரிய மனித இனக் குழுவின் பல்வேறு பிரிவுகளே.

கிழக்கே வாழ்ந்த இனத்தவரைவிடவும், மேற்கத்திய பிரிவினர் வெள்ளை நிறத்தவராகக் காணப்பட்டனர். மத்திய மற்றும் வடக்கு ஐரோப்பியக் காடுகளில் வசித்தோர் சிவந்த சருமத்தோடும், நீலநிறக் கண்களோடும், பழுப்பு நிறத்தவர்களிடமிருந்து பிரிந்தும், வேறுபட்டும் விளங்கினர். இவர்களில் பெரும்பான்மையோர் இப்போது நார்டிக் (Nordic) பேசும் இனத்தவர்கள். வட கிழக்கு ஆசியப் பிரதேசங்களிலுள்ள பழுப்பு நிற மங்கோலிய இன மக்களுக்குக் குறுகிய கண்கள், உயரமான கன்ன எலும்புகள், மஞ்சள் நிற சருமம், செங்குத்தான கருப்பு முடி என மேலும் பல வித்தியாசங்கள் இருந்தனர்.

தெற்கு ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு ஆசியாவின் வெப்ப மண்டலப் பகுதிகளில், தொடக்க கால நீக்ராயிட் (Negroid) மக்கள் வாழ்ந்த தடயங்கள் காணப்படுகின்றன. ஆப்பிரிக்காவின் மத்தியப் பகுதிகளை உள்ளடக்கிய பிராந்தியம், ஏற்கெனவே பல இன மக்களின் கலவையாகவே விளங்குகிறது. இன்றைக்கு நாம் ஆப்பிரிக்காவில் காணும் எல்லா இன மக்களும் நீக்ராயிட் ஆதார மூலக்கூறுடன் கூடிய வடக்கு பழுப்பு நிற மக்களின் கலவையால் உருவானவர்களே.

அனைத்து மனித இன மக்களும் , மேகங்களைப்போல் ஒருவருடன் ஒருவர் கலந்து இனவிருத்தி செய்யவோ, இணையவோ, பிரியவோ, மீண்டும் இணையவோ முடியுமென்பதை நினைவில் கொள்ள வேண்டும். மீண்டும் இணையாத மரக்கிளைகளைப்போல், மனித இனம் கிளைகளைப் பரப்புவதில்லை. எனவே மனித இனங்கள் பிரியலாம், மீண்டும் ஒன்று சேரலாம் என்னும் முக்கியமான விஷயத்தை மறக்காமல் தொடர்ந்து மனத்தில் நிலைநிறுத்துவது அவசியம்.

இவ்வாறு செய்யும் பட்சத்தில், கொடுமையான கற்பிதங்கள் மற்றும் ஆராயாமல் முன்கூட்டியே தவறாக முடிவெடுத்தல் ஆகியவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். மக்கள் ‘இனம்’ என்ற சொல்லை, மனம்போன போக்கில் பயன்படுத்துவதுடன், அபத்தமான அனைத்துப் பொதுமைகளையும் அதன் மீது சுமத்துகின்றனர். தூய ‘பிரிட்டிஷ்’ இனம் அல்லது ‘ஐரோப்பிய’ இனம் பற்றிப் பேசுவார்கள். ஆனால், கிட்டத்தட்ட அனைத்து ஐரோப்பிய நாடுகளும் பழுப்பு, கருப்பு-வெள்ளை, வெள்ளை மற்றும் மங்கோலியர்களாகக் குழப்பமான கலப்பினங்களாக உள்ளன.

மனித வளர்ச்சியின் நியோலித்திக் கட்டத்தில் மங்கோலிய இன மக்கள் அமெரிக்காவுக்குள் முதன் முதலாகத் தடம் பதித்தனர். பெஹ்ரிங்க் ஜலசந்தி வழியே நுழைந்து தெற்கே பரவினார்கள். வடக்கே கரிபோ என்னும் அமெரிக்கக் கலைமானையும், தெற்கே கூட்டம் கூட்டமாகக் காட்டெருமைகளையும் பார்த்தனர். தென் அமெரிக்காவை அடைந்தபோது க்ளிப்டோடன், (Glyptodon), பிரம்மாண்ட ஆர்மடில்லோ (armadillo) மற்றும் கொடூரமான யானை அளவு உயரமான விகாரமான மெகாதெரியம் (Megatherium) ஆகிய உயிரினங்கள் அங்கு வாழ்ந்து கொண்டிருந்தன. மெகாதெரியம் இனத்தின் பிரம்மாண்ட உருவமே அதற்கு வினையானது. எவ்வளவு பெரிய உருவத்துடன் இருந்ததோ அவ்வளவு பலமற்றும் இருந்ததால் ஏனைய உயிரினங்கள் சேர்ந்து அந்த இனத்தையே முற்றிலுமாக அழித்துவிட்டன.

அமெரிக்கப் பழங்குடியின் பெரும் பகுதியினர், வேட்டையாடும் நாடோடி நியோலித்திக் வாழ்க்கை முறையைத் தாண்டி, அதிக அளவில் வளரவில்லை. இரும்பின் பயன்பாட்டைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் தங்கத்தையும் செம்பையும் முக்கிய உலோகங்களாக வைத்திருந்தனர்.

ஆனால் மெக்ஸிகோ, யுகடான் (Yucatan) மற்றும் பெரு நாடுகளில் விவசாயத்துக்கான சூழல் நிலவியது. பொ.ஆ.மு. 1000-ல் பண்டைய உலக நாகரிகங்களுக்கு இணையான, சுவாரஸ்யமான, ஆனால், வித்தியாசமான நாகரிகம் எழுந்தது. பழைய உலகின் பழங்கால நாகரிகங்களைப் போலவே இச்சமூகங்களும், விதை விதைக்கும் மற்றும் அறுவடைநேரங்களில் மனிதர்களை பலிகொடுப்பதில் வெகுவாக முன்னேற்றிய நிலையை எட்டியிருந்தன. ஆனால், பழைய உலகில் இந்த அடிப்படை எண்ணங்கள் குறுக்கப்பட்டுச் சிக்கலாக்கப்பட்டிருந்தன. அமெரிக்காவில் அதிகபட்ச தீவிரத்துடன் விரிவுபடுத்தப்பட்டன. அமெரிக்க நாகரிகப் பகுதிகள் அனைத்துமே அடிப்படையில் மதகுருமார்களின் கட்டுப்பாட்டிலிருந்த மதசார்புள்ள பகுதிகள். அவற்றின் போர்ப் படைத் தளபதிகளும், அரசர்களும், கடுமையான சட்டங்கள் மற்றும் சகுனங்களுக்கு உட்பட்டே ஆட்சி செய்தனர்.

மதகுருமார்கள் வானியல் அறிவியலில் உச்ச கட்ட நுணுக்கங்களைப் பெற்றிருந்தனர். ஆண்டுக் கணக்கைப் பாபிலோனியர்களை விடவும் நன்கு அறிந்திருந்தனர். யுகடானில் வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான ‘மாயன்’ (Mayan) வகை எழுத்து பரவலாக இருந்தது. இந்த எழுத்தை இதுவரை ஆய்வு செய்த வகையில், சிக்கலான மற்றும் நுட்பமான நாட்காட்டிகளைத் தயாரிக்கவே மதமார்கள் நுண்ணறிவுடன் பயன்படுத்தி உள்ளனர். மாயன் நாகரிகம் பொ.ஆ.பி 700 – 800-ல் முடிவுக்கு வந்தது. மாயன் மக்களின் நாகரிகமும், கலையும், அழகும், மரபும், நுணுக்கமும், இன்றைய ஆய்வாளர்களை ஆச்சரியத்திலும், குழப்பத்திலும் ஆழ்த்தி உள்ளன. பண்டை உலகில் இதற்கு இணையாக வேறொன்றையும் கூற இயலாது. இதற்கு மிக மிக நெருக்கமானதாக தொன்மையான இந்தியச் சிற்பங்களை ஒப்பிடலாம். உள்ளும், புறமும், எல்லா இடங்களிலுள்ள சிற்பங்களில் பின்னப்பட்ட சிறகுகளும், பாம்புகளும் காணப்படுகின்றன. பெரும்பான்மை மாயன் கல்வெட்டுகள் ஐரோப்பிய மன நலக் காப்பகங்களில் இருப்பவர்கள் வரையும் ஓவியங்களைப் போலவே இருக்கின்றன; பழைய உலகின் படைப்புகளைப்போல இல்லை. பழைய உலகின் சிந்தனையிலிருந்து மாயனின் மனம், வித்தியாசமான கோணத்தில், மாறுபட்ட எண்ணங்களுடன் வளர்ந்துள்ளதை இவை காட்டினாலும், இதைப் பகுத்தறிவுடன் செயல்பட்ட மனதின் வெளிப்பாடு என்று கூற இயலாது.

நரபலி மூலம் மனித இரத்தத்தைச் சிந்தும் அசாதாரண வெறித்தனம் நிலவுவதை வைத்து. இயல்புக்கு மாறான அமெரிக்க நாகரிகங்களைப் பொதுவான மனப்பிறழ்வு எண்ணங்களுடன் இணைத்துப் பார்த்து ஆய்வுகள் செய்யப்படுகின்றன. மெக்ஸிகன் நாகரிகத்தில் இரத்தம் ஆறாக ஓடியது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மனிதர்களைப் பலி கொடுத்தார்கள். உயிருடன் மனித உடல்களைப் பிளப்பது, துடித்துக் கொண்டிருக்கும் இதயங்களைக் கிழிப்பது ஆகிய செயல்கள் விநோதமான மதகுருமார்களின் மனங்களிலும், வாழ்க்கையிலும் நிறைந்திருந்தன. பொது வாழ்விலும், தேசியத் திருவிழாக்களிலும், இக்கொடூரமான படுகொலைகள் அமோகமாக அரங்கேறின. இச்சமூகங்களில் பொது மக்களின் சாதாரண வாழ்க்கை, வேறெந்தக் காட்டுமிராண்டி விவசாயியைப் போலவே, சாதாரணமாகவே காணப்பட்டது.

அவர்களின் மண்பாண்டக் கைவினைத் திறன், நெசவு மற்றும் சாயம் போடுதல், நன்றாகவே இருந்தன. மாயன் எழுத்துகள் பாறைகளில் செதுக்கப்பட்டதுடன், சருமங்களின் மீது எழுத்தாகவும், வண்ண ஓவியமாகவும் தீட்டப்பட்டன. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அருங்காட்சியங்களில் புதிரான பல மாயன் கையெழுத்துப் பிரதிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றின் காலத்தைத் தவிர, பெரும்பான்மையானவை இன்னும் புரிந்து கொள்ளப்படாமலேயே இருக்கின்றன. இது போன்ற எழுத்து பெரு நாட்டில் தொடக்கத்தில் காணப்பட்டாலும், கயிறுகளை முடிச்சுப்போட்டு ஆவணங்களைப் பாதுகாத்து வைத்திருக்கும் முறைக்கு விரைவில் மாறியது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சீனாவிலும் இதுபோன்ற முறை பயன்பாட்டில் இருந்தது.

பொ.ஆ.மு. 4000 – 5000-ல் அமெரிக்க நாகரிங்களைப் போலவே, வேறு பழைய நாகரிகங்களும் இருந்தன. வழிபாட்டு மையத்தை மையமாகக் கொண்ட, இரத்தம் பெருக்கெடுக்கும் ஏராளமான நரபலிகள், இவற்றை வழிநடத்தும் வானியல் சாஸ்திரம் அறிந்த பூசாரிகளைக் கொண்ட நாகரிகங்கள் காணப்பட்டன. ஆனால் பழைய உலகில் பழைமை நாகரிங்கள் ஒன்றின் மீது ஒன்று எதிர்வினையாற்றி வேறுநிலைகளுக்கு மேம்படுத்திக்கொண்டன. ஆனால், அமெரிக்காவில் நிலவிய பழைய நாகரிகங்கள் இந்தப் பண்டைய நிலையைத் தாண்டி முன்னேறவே இல்லை. ஒவ்வொன்றும் அதற்குச் சொந்தமான சிறிய உலகாகவே விளங்கின. ஐரோப்பியர்கள் அமெரிக்காவுக்கு வரும் வரை, பெருவை பற்றி மெக்ஸிகோவுக்கு எதுவுமே தெரியாது அல்லது மிகக் குறைந்த அளவே தெரியும். பெருவில் முக்கிய உணவாக விளங்கும் உருளைக் கிழங்கு பற்றி மெக்ஸிகோ எதுவுமே அறிந்திருக்கவில்லை.

ஆண்டுகள் உருண்டோடிக் காலங்கள் மாறினும், மக்கள் தங்கள் கடவுள்களைக் கண்டு வியந்தும், நரபலி கொடுத்தும் வாழ்ந்து மறைந்தனர். மாயன் கலை, அலங்கார அழகாக, மிக உயரிய தர நிலைகளை எட்டியது. ஆண்கள் காமக் களியாட்டங்களில் தங்களை மறக்க, குலங்கள் தங்கள் வீரத்தைப் போர்க் களத்தில் காட்டின. வறட்சி மற்றும் செழிப்பு, கொள்ளை நோய் மற்றும் ஆரோக்கியம் ஆகியவை ஒன்றையொன்று தொடர்ந்தன. பூசாரிகள் இன்னும் பல நூற்றாண்டுகளுக்குத் தங்கள் நாட்காட்டியையும், நரபலி சடங்குகளையும் விரிவுபடுத்தினர். ஆனால், மற்ற துறைகளில் ஏனோ எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

(தொடரும்)

H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
ஜனனி ரமேஷ்

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *