17. முதல் கடற்பயணிகள்
சற்றேறக்குறைய 25,000 அல்லது 30,000 ஆண்டுகளுக்கு முன்பே, படகுகள் மற்றும் கப்பல்கள் பயன்பாட்டுக்கு வந்திருக்கவேண்டும். நியோலித்திக் ஆரம்ப காலத்திலேயே, மரக்கட்டை அல்லது காற்றடித்த தோல் பை உதவியுடன் மனிதன் தண்ணீரில் மிதக்கக் கற்றுக்கொண்டிருந்தான். நமக்குத் தெரிந்தவரை எகிப்திலும் சுமேரியாவிலும் கூடைபோல் பின்னப்பட்டும், தோலால் மூடப்பட்டும் படகுகள் தயாரிக்கப்பட்டன. அயர்லாந்து, வேல்ஸ் மற்றும் அலாஸ்காவில் நீர்நாய் / கடல் நாய்த் தோலால் தயாரிக்கப்பட்ட படகுகள் இன்றைக்கும் பெஹ்ரிங்க் ஜலசந்தியைக் கடக்கப் பயன்பாட்டில் உள்ளன. மரக்கட்டைகளாலான ஆழமான படகுகளும் பின்னர் கப்பல்களும் இயல்பாகவே அடுத்தடுத்துக் கண்டுபிடிக்கப்பட்டன.
உலகின் பெரும்பான்மை மக்களிடம் சொல்லப்பட்ட ‘ஊழி வெள்ளம்’ பற்றிய கதையும், அதனின்றும் தப்பிக்க அனைத்து உயிரினங்களும் ‘நோவாவின் கப்பலில்’ ஏறித் தப்பித்த கதையும், மத்திய தரைக் கடல் படுகையில் ஏற்படும் வெள்ளங்களின் முன்னோட்டமாகவும் தொடர் பாரம்பரியமாகவும் இருக்கலாம்.
எகிப்தில் பிரமிட்களின் கட்டுமானங்களுக்கு முன்பே, செங்கடல், மத்திய தரைக் கடல் மற்றும் பாரசீக வளைகுடாவில், ஏராளமான கப்பல்கள் பொது.ஆ.மு.7000-ல் மிதந்து கொண்டிருந்தன. இவை பெரும்பாலும் மீன்பிடிக்கும் கப்பல்களாகவும் இன்னும் சில வர்த்தக மற்றும் கடல் கொள்கையர்களின் கப்பல்களாகவும் இருந்தன. ஆம். முதல் மாலுமிகள் கொள்ளைக்காரர்களாகவும் கொள்ளை அடித்த பொருளை விற்கும் வியாபாரிகளாகவுமே இருந்தனர்.
முதல் கப்பல்கள், அதிக ஆழமற்ற உள்நிலக் கடல்களிலேயே சாகசப்பயணங்கள் மேற்கொண்டன. உள்நிலக் கடல்களில் காற்று மிதமாகவே வீசும். நாள்கணக்கில் மயான அமைதிகூட நிலவும். இவை காரணமாகவே ஏதோவொரு துணைப்பயன்பாட்டைத் தாண்டிக் கப்பல் பயணம் பெரிய அளவில் வளரவேயில்லை. கடந்த 400 ஆண்டுகளாகத்தான் விரிவான கடற்பயணங்கள் மேற்கொள்ளத்தக்கவகையில், கப்பல்கள் நன்கு கட்டமைக்கப்பட்டன. பழங்காலக் கப்பல்களைத் துடுப்புகளால் இயங்கும் சிறு படகுகள் என்றுதான் அழைக்க வேண்டும். கடல் அலைகளின் சீற்றம் அதிகமிருந்தால் அவை உடனே கரைக்குத் திரும்பிவிடும். காலப்போக்கில் கப்பல்களின் அளவு பெரிதாகவே துடுப்புகளின் நீளமும், எண்ணிக்கையும் அதிகமாயின. இவற்றை இயக்கச் சிறைப்பிடிக்கப்பட்ட போர்க் கைதிகளையும், அடிமைகளையும் பயன்படுத்தினர். இதனால் போர்க்கைதிகளுக்கும், அடிமைகளுக்குமான தேவை பெருகத் தொடங்கியது.
சிரியா மற்றும் அரேபியப் பிராந்தியங்களில் செமிட்டிக் மக்களின் தோற்றம் அலைந்து திரிபவர்களாகவும் நாடோடிகளாகவும் காணப்பட்டதை ஏற்கெனவே கூறினோம். சுமேரியாவை வீழ்த்தி முதல் அக்காடியன் (Akkadian) மற்றும் பாபிலோனிய (Babylonian) சாம்ராஜ்யங்களை நிறுவினர். மேற்கே, இதே செமிட்டிக் மக்கள் கடற்கரைப்பகுதிகளையும் ஆக்கிரமித்தனர். மத்தியதரைக் கடல் கிழக்குக் கடற்கரையோரம் வரிசையாகத் துறைமுக நகரங்களை உருவாக்கினர். இவற்றுள் டயர் (Tyre) மற்றும் சிடான் (Sidon) நகரங்கள் முக்கியமானவை. பாபிலோனிய மன்னரான ஹமுராபியின் (Hammurabi) ஆட்சியின்போது மத்திய தரைக்கடல் வடிநிலம் முழுவதும் வணிகர்களாகவும் அலைந்து திரிபவர்களாகவும் குடியேற்றவாதிகளாகவும் பரவினர்.
இவ்வகைக் கடல் செமிட்டிகள் பின்னாளில் ஃபோனீஷியன்கள் (Phoenicians) என அழைக்கப்பட்டனர். ஸ்பெயினில் வாழ்ந்துகொண்டிருந்த பழைய ஐபீரியன் பாஸ்க் (Iberian Basque) மக்களை விரட்டிவிட்டு அங்கு குடியேறினர். ஜிப்ரால்டர் (Gibraltar) ஜலசந்தி வழியே கடல் பயணங்களை மேற்கொண்டு ஆப்பிரிக்காவின் வடக்குக் கடலோரம் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர்.
மத்தியதரைக் கடலில் நீண்ட துடுப்புகளைக் கொண்ட பெரிய கப்பல்களை ஃபோனீஷியன்கள் மட்டுமே வைத்திருந்தனர் என்று சொல்லமுடியாது. அக்கடலின் கரையோரங்களிலும், தீவுகளிலும் ஏற்கெனவே ஏராளமான நகரங்களும் ஊர்களும் காணப்பட்டன. இங்கு வசித்து வந்த ஏஜியன் (Aegean) இன மக்கள் இரத்தத்தாலும் மொழியாலும் மேற்கே பாஸ்க்ஸ் (Basques), தெற்கே பெர்பர்ஸ் (Berbers) மற்றும் எகிப்தியர்களோடு தொடர்பில் இருந்தனர். நமது வரலாற்று விவரணையின் பிற்பகுதியில் வரும் கிரேக்கர்களுடன் இவர்களைக் குழப்பிக் கொள்ளக்கூடாது. இவர்கள் கிரேக்கர்களுக்கு முந்தைய இனத்தைச் சேர்ந்தவர்கள். எனினும், கிரேக்கம், ஆசியா மைனர், மைசினே (Mycenae), ட்ராய் (Troy), கிரேட் நாசஸ் (Crete Cnossos) ஆகிய நகரங்களில் பெரிய குடியிருப்புகளை ஏற்படுத்தியிருந்தனர்.
கடந்த அரை நூற்றாண்டு காலமாகத்தான் அகழ்வாராய்வுத் துறையினர் ஏஜியன் மக்களின் நாகரிகத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளனர். நாசஸ் (Cnossos) நன்கு அகழ்வாய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதன் இடிபாடுகளையும் சிதிலங்களையும் அழிக்கும் அளவுக்கு பெரிய நகரம் ஏதுவும் வெற்றி பெறவில்லை என்பது மகிழ்ச்சியான விஷயம். எனவே மறந்து போன இந்த நாகரிகம் குறித்த தகவல்களை, ஓரளவேனும் நாம் அறிந்துகொள்ள இதுவே முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.
எகிப்து வரலாற்றுக்கு உரிய அதே பண்டையப் பாரம்பரியப் பெருமை, மேற்கூறிய நாசஸ் நகருக்கும் உண்டு. இரு நாடுகளுமே பொ.ஆ.மு.4000-ல் கடல் வாணிகத்தில் தீவிரமாக ஈடுபட்டன. பொ.ஆ.மு.2500-ல் அதாவது முதலாம் சார்கான் (Sargon) மற்றும் ஹமுராபி ஆகியோர் ஆட்சிகளின் இடைப்பட்ட காலத்தில் க்ரேடன் (Cretan) நாகரிகம் உச்சத்தில் இருந்தது.
கிரேடன் மன்னனுக்கும் மக்களுக்குமான பிரம்மாண்ட அரண்மனைக் கட்டுமான அளவுக்குக் கூட க்ரேடன் ஊர் இல்லை. கோட்டைக் கொத்தளங்களும் கிடையாது. பின்னாளில் ஃபோனீஷியன்கள் வலுவடைந்தபோதுதான் கோட்டைகள் கட்டப்பட்டன. வடக்கிலிந்து கடல் வழியே புதிய மற்றும் பயங்கரமான கடற்கொள்ளையர்களின் இனமான கிரேக்கர்களும் வந்தனர்.
எகிப்திய மன்னரின் பெயர் ஃபேரோ (Pharaoh) என்பதுபோல் கிரேடன் மன்னர் மினோஸ் (Minos) என்றழைக்கப்பட்டார். அகழ்வாய்வில் சிதிலங்களை ஆய்வுசெய்த போது இவரது அரண்மனையில் தண்ணீர், குளியலறை என பல்வேறு வசதிகள் கண்டறியப்பட்டன. பண்டிகைகள், திருவிழாக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. காளை மாடுகளைப் பிடிக்கும் போட்டிகளைக் கிட்டத்தட்ட இப்போது ஸ்பெயினில் நடைபெறும் போட்டிகளுடன் ஒப்பிடலாம். மாடு பிடிப்போர்க்குத் தனி ஆடைகள் உண்டு. பெண்கள் கார்செட் (Corset) மற்றும் ஃபௌன்ஸ் (Flounce) வகை ஆடை அணிகலன்களுடன் நவ நாகரிக நங்கைகளாகத் தோன்றினர். உடற்பயிற்சிகள் மற்றும் மல்யுத்தக்கூடங்களில் ஆண்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பானை, ஜவுளி, சிற்பம், ஓவியம், நகை, தந்தம், உலோகம் எனக் க்ரேட்டன்களில் கைவண்ணம் கண்களைக் கவரும் வகையில் மிளிர்ந்தன. அவர்கள் ஏதோ ஒரு வகை எழுத்தை எழுதினர். நன்கு புரிந்துகொள்ள அது விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.
மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைந்த இந்த நாகரிகம் பல நூற்றாண்டுகள் நீடித்தது. பொ.ஆ.மு.2000-ல் நாசஸ் மற்றும் பாபிலோனிய நகரங்களில் நாகரிகம் மிக்க மக்கள் நிறைந்து காணப்பட்டனர். பண்டிகைக் கொண்டாட்டங்கள் களைகட்டின. வீட்டு வேலை செய்ய அடிமைகளைப் பணியமர்த்தியதுடன், அடிமை வியாபாரத்திலும் ஈடுபட்டிருந்தனர். நாசஸ் மக்கள் வசதியாகவும் பாதுகாப்புடனும் வாழ்ந்தனர். இவர்களது சமகால எகிப்தில் பகுதி காட்டுமிராண்டி-மேய்ப்பர் அரசர்களின் ஆட்சியில், செல்வமும் செல்வாக்கும் வளமும் குறைந்து காணப்பட்டது.
அரசியல் ஆர்வலர்கள் சற்று உற்று நோக்கினால், எகிப்து, பாபிலோன், டைக்ரிஸில் நினேவே (Nineveh) உருவாக்கம், ஜிப்ரால்டர் ஜலசந்தியிலுள்ள ஹெர்குலிஸின் தூண்கள் (Pillars of Herculis) வரை மேற்கு நோக்கிய கடற்பயணம், கடற்கரை ஓரங்களில் குடியிருப்புகளை நிறுவுதல் என செமிட்டிக் மக்கள் எல்லா இடங்களிலும் சிறகு விரித்துப் பறந்து திரிந்தனர். நாசஸ் மக்களுள் சிலர் சுறுசுறுப்பானவர்களாகவும் சாகச ஆர்வலர்களாகவும் இருந்துள்ளனர். கிரேடன் கைவினைக் கலைஞனான டேடலஸ் (Daedalus) விண்ணில் பறக்கும் வானூர்தி போன்ற எந்திரத்தைத் தயாரிக்க முயன்று அது கடலில் விழுந்து நொறுங்கியது எனப் பின்னாளில் கிரேக்கர்கள் பதிவு செய்துள்ளனர்.
நாசஸ் மக்களுக்கும் தற்போது நாம் வாழும் வாழ்க்கை முறைக்கும் நிறைய வேறுபாடுகளும் ஒற்றுமைகளும் உள்ளன. பொ.ஆ.மு.2500-ல் வாழ்ந்த கிரேடன் மக்களுக்கு இரும்பு என்பது வானத்திலிருந்து மண்ணில் விழுந்த ஓர் அபூர்வ உலோகம். விண்கல் என்னும் பெயரில் கல் இருந்தாலும், உண்மையில் அதில் இரும்பும் உலோகம் இருப்பதால், விண் இரும்பு என்றுதான் அழைக்க வேண்டும். பூமிக்கு அடியில் இரும்பு இருப்பதையோ பயன்படுத்துவதையோ கிரேடன் மக்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் வானத்திலிருந்து விழுந்த விண்கல் அல்லது விண் இரும்பையே அறிந்திருந்தார்கள். ஆனால் இன்றைக்கு மண்ணிலிருந்து எடுக்கப்படும் இரும்புதான் உலகெங்கும் பயன்பாட்டில் உள்ளது.
அதேபோல், குதிரை என்பது கிரேடன் மக்களுக்கு நேர் பரிச்சயமில்லாத புராண விலங்காகவே இருந்தது. கருப்புக் கடலைத் தாண்டி வடக்கு நிலப் பகுதிகளில் வாழ்ந்தவை ஒருவகையான உயர்ரகக் கழுதையே. கிரேடான்களைப் பொறுத்தவரை நாகரிகம் என்பது ஏஜியன் கிரேக்கம் மற்றும் ஆசியா மைனரில் பிரதானமாக வாழ்ந்த லிடியன், கேரியன் மற்றும் ட்ரோஜான் மக்களின் வாழ்க்கையும் மொழியுமே.
ஸ்பெயின் மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவிலும் ஃபோனீஷியன்களும் ஏஜியன்களும் வாழ்ந்தார்கள் என்றாலும் அவை கிரேடான்களின் கற்பனைக்கு எட்டாத தொலைதூரப் பிரதேசங்கள். இத்தாலி இன்னும் அடந்த காடுகளைக் கொண்ட வெறிச்சோடிய வனாந்திரப் பகுதியாகவே விளங்கியது. ஆசியா மைனரிலிருந்து இன்னும் பழுப்பு நிறச் சருமம் கொண்ட எட்ரூஸ்கான்ஸ் (Etruscans) அங்கே இன்னும் ஊடுருவவில்லை.
க்ரேடான் கனவான் ஒருவர் சிறைப்பிடிக்கப்பட்ட கைதிகளைப் பார்வையிட துறைமுகத்துக்குச் சென்றிருந்தபோது, அங்கே நீலக் கண்களுடன் சிவந்த நிறம் கொண்ட கைதியைப் பார்த்தார். அவனுடன் பேச முயற்சிசெய்தபோது, புரியாத மொழியில் அர்த்தமில்லாமல் பதிலளிப்பதுபோல் உணர்ந்தார். கருங்கடலைத் தாண்டி எங்கோ ஓரிடத்திலிருந்து வந்த இரக்கப்படத்தக்கவன் போலத் தோன்றினான். உண்மையில் அவன் ஓர் ‘ஆரியப்’ பழங்குடி வம்சாவழியைச் சேர்ந்தவன். இந்த இனம் மற்றும் கலாச்சாரம் குறித்துப் பின்னர் நாம் விரிவாகக் காணலாம். அவன் பேசிய வித்தியாசமான புரியாத ‘சமஸ்கிருத’ மொழியே பின்னாளில் பாரசீகம், கிரேக்கம், இலத்தீன், ஜெர்மன், ஆங்கிலம் உள்ளிட்ட உலகின் பெரும்பான்மை முக்கிய மொழிகளிலிருந்து வேறுபட்டிருந்தது.
இவ்வாறாக நாசஸ், நுண்ணறிவு, முனைவு, மகிழ்ச்சி என அனைத்திலும் உச்சத்தில் இருந்தது. ஆனால், பொ.ஆ.மு.1400-ல் இதன் செல்வாக்கும், சீரும் சிறப்பும் பெருமையும் திடீரெனப் பேரழிவுக்கு உள்ளானது. மினோஸ் அரண்மனை மண்ணோடு மண்ணாகத் தரைமட்டமானது. அதன் சிதிலங்களும் இடிபாடுகளும் இதுவரை மீண்டும் கட்டப்படவில்லை. மக்களும் மறுபடியும் குடியேறவில்லை. இந்தப் பேரழிவு எவ்வாறு நிகழ்ந்தது என்பதும் நமக்குத் தெரியவில்லை.
அரண்மனை கொள்ளை அடிக்கப்பட்டுத் தீயின் கோரமான நாக்குகளுக்கு இரையாகியிருக்க வேண்டுமென அகழ்வாய்வாளர்கள் கூறுகின்றனர். பயங்கரமான நிலநடுக்கத்துக்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. நாசஸ் அரண்மனைப் பேரழிவுக்கு, இயற்கை மட்டுமே காரணமாக இருந்திருக்க வேண்டும் அல்லது நிலநடுக்கம் தொடங்கியதை, கிரேக்கர்கள் முடித்து வைத்திருக்கவேண்டும்.
18. எகிப்து, பாபிலோன் மற்றும் அஸ்ஸிரியா
செமிட்டிக் மேய்ப்பர்களின் ஆட்சியை எகிப்தியர்கள் எந்நாளும் மனமுவந்து ஏற்றுக் கொள்ளவில்லை. பொ.ஆ.மு.1600-ல் தோன்றிய விடுதலை இயக்கம் அந்நியர்களை நாட்டை விட்டு விரட்டி அடித்தது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட எகிப்தின் மறுமலர்ச்சியை, எகிப்திய வரலாற்று ஆய்வாளர்கள் புதிய சாம்ராஜ்யம் என்றழைக்கின்றனர். ஹைக்சோஸ் (Hyksos) படையெடுப்புக்கு முன் ஒருங்கிணைக்கப்படாத எகிப்து, இப்போது ஐக்கிய நாடாக விளங்குகிறது.
அடிபணிதலும் வெகுண்டெழுதலும் தொடர் கிளர்ச்சிகளும் எகிப்திய மக்களிடையே போர்க் குணத்தை விதைத்திருந்தது. ஃபேரோக்களே பின்னாளில் முரட்டுத்தனமான வெற்றியாளர்களாக உருவெடுத்தனர். ஹைக்சோஸ் போர்களுக்காகக் கொண்டு வந்த குதிரைகளையும், தேர்களையும் எகிப்திய ஃபேரோக்கள் பயன்படுத்தத் தொடங்கினர். மூன்றாம் தொத்மீஸ் (Thothmes) மற்றும் அமீனோஃபிஸ் (Amenophis) ஆகியோரின் ஆட்சியில், எகிப்து தனது சாம்ராஜ்யத்தை யூஃப்ரடீஸ் வரை ஆசியாவில் விரிவுபடுத்தியது.
மெஸொபொடேமியா மற்றும் நைல் நாகரிங்கள் தனித்திருந்தபோது, இரண்டுக்கும் இடையே சுமார் ஆயிரம் ஆண்டுகள் நடைபெற்ற போர்க்காலத்துக்குள் நுழைகிறோம். அப்போது எகிப்து ஏறுமுகத்தில் இருந்தது. மூன்றாம் தொத்மீஸ் (Thothmes), மூன்றாம் – நான்காம் அமினோஃபிஸ் (Amenophis), ராணி ஹடாஸு (Hatasu) ஆகியோரை உள்ளடக்கிய பதினேழாம் தலைமுறை, அறுபத்தியேழு ஆண்டுகள் ஆட்சி செய்த இரண்டாம் ரமேசெஸ் (Rameses) உள்ளடக்கிய பத்தொன்பதாம் தலைமுறை ஆகியோரின் ஆட்சியில் எகிப்து மிகப் பெரிய உச்சத்தைத் தொட்டது.
இடையிடையே, சிரியா மற்றும் தெற்கே எதியோபியாவின் படையெடுப்புகளால் எகிப்து தோல்வியைத் தழுவியது. மெசொபொடேமியாவில் பாபிலோனியர்களும் பின்னர் ஹிட்டிடீஸ்களும் (Hittites), டமாஸ்கஸ்ஸின் சிரியர்களும் சிறிது காலம் ஆதிக்கம் செலுத்தினர். நினேவே (Nineveh) அஸ்ஸிரியர்களின் வளம் செழித்து வழிந்தது. அஸ்ஸிரியர்கள், பாபிலோனை ஆண்டுகொண்டு எகிப்தைத் தாக்கினர். எகிப்தியர்கள் மற்றும் ஆசியா மைனர், சிரியா, மெஸொபொடேமியா பகுதிகளின் செமிட்டிக் மன்னர்களின் படை பலம் பெருகத் தொடங்கியது. போர்களில் வீரர்களைச் சுமக்கவும், தேர்களை இழுக்கவும் ஏராளமான குதிரைகள் பங்கேற்றன. இதே காலகட்டத்தில் மத்திய ஆசியாவின் பண்டை நாகரிகங்களிலும் குதிரைகளின் பயன்பாடு பரவலானது.
பண்டய வரலாற்றில் முக்கிய அங்கம் வகித்த நினேவேயைக் கைப்பற்றிய மிட்டானி (Mitanni), மன்னன் துஷ்ரட்டா (Tushratta), பாபிலோனைக் கைப்பற்றிய அஸ்ஸிரியாவின் முதலாம் டிக்லத் பிலேசர் (Tiglath Pileser) ஆகியோரைப் பற்றிய விவரங்கள் அதிகம் காணப்படவில்லை. நிறைவாக அப்போது அஸ்ஸிரியன்கள் மிகப் பெரிய படை பலம் கொண்டவர்களாக உருவெடுத்தனர். மூன்றாம் டிக்லத் பிலேசர் பொ.ஆ.மு. 745-ல் பாபிலோனை வெற்றி கொண்டு, வரலாற்று ஆய்வாளர்கள் கூறும் புதிய அஸ்ஸிரியன் சாம்ராஜ்யத்தை நிறுவினார்.
வடக்கிலிருந்து வந்த இரும்பு உலோகம் மக்களின் பயன்பாடுக்கு வந்தது. அர்மீனியர்களின் முன்னோடிகளான ஹிட்டிடீஸ் இரும்பைப் பயன்படுத்தியதுடன், அதன் உபயோகத்தை அஸ்ஸிரியர்களுக்கும் கற்றுக் கொடுத்தார். அஸ்ஸிரியாவின் இரண்டாம் சர்கோன் (Sargon) தனது படைகளில் இரும்பினால் தயாரிக்கப்பட்ட கருவிகளை அறிமுகப்படுத்தினார். இரும்பைப் பயன்படுத்திப் போர்களில் முதன் முதலில் வெற்றிகளைக் குவித்தது அஸ்ஸிரியாதான்.
சர்கோனின் மகன் சென்னாசெரிப் (Sennacherib) எகிப்தைக் கைப்பற்ற, அதன் எல்லை வரை படைகளைத் திரட்டிச் சென்றார். ஆனால் அவருடைய துரதிருஷ்டம், திடீரெனப் பரவிய பிளேக் கொள்ளை நோய் காரணமாக அவரது படை வீரர்கள் மரணமடையவே தோல்வியைத் தழுவினார். சென்ன்சாசெரிப் பேரன் அஸ்ஸுர்பனிபால் (இவனது கிரேக்கப் பெயர் –Sardanapalus- சர்டானாபாலஸ்) பொ.ஆ.மு.670-ல் எகிப்த்தை வீழ்த்தித் தாத்தாவின் கனவை நனவாக்கினார். எதியோப்பிய பரம்பரையினரால் ஏற்கெனவே பலமுறை தொடர்ந்து எகிப்து வெற்றி கொள்ளப்பட்ட நிலையில், சர்டானாபாலஸும் தனது பங்குக்கு எகிப்தைத் தோற்கடித்தார்.
அடிக்கடி உருமாறிக்கொண்டிருக்கும் அமீபா (Amoeba) உயிரினத்தைப்போல், கிட்டத்தட்டப் பத்து நூற்றாண்டுகள் நீண்டு நீடித்த நெடிய வரலாற்றில், எகிப்தின் எல்லைகள் விரிந்தும் சுருங்கியும் போனது. பாபிலோனிய செமிட்டிக் நாடுகள், அஸ்ஸிரியன்கள், ஹிட்டிடீஸ் மற்றும் சிரியன்கள் எகிப்தின் மீது படைபெடுப்பதும், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வதுமாக இருந்துள்ளன. ஆசியா மைனருக்கு மேற்கே, லிடியா போன்ற சிறு ஏஜியன் நாடுகளின் தலைநகரங்களாக சார்டிஸ் மற்றும் கேரிய விளங்கின.
ஆனால் பொ.ஆ.மு. 1200-ல் வட கிழக்கிலிருந்து, வட மேற்கிலிருந்தும் பண்டைய உலகின் வரைபடத்துக்குப் புதிய பெயர்கள் வந்து சேர்ந்தன. இரும்பு ஆயுதங்களையும் குதிரைகள் பூட்டிய தேர்களையும் பயன்படுத்தும் சில பழங்குடி இனங்களின் பெயர்களாக இருந்தன. இவர்கள் வடக்கு எல்லைகளில் எஜியன் மற்றும் செமிட்டிக் நாகரிகங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவானார்கள். இவர்கள் அனைவரும் பேசிய பல்வேறு மொழிகள், ஆர்யன் (Aryan) என்னும் ஒரே மொழியின் பிரிவுகளாகும்.
கருங்கடல் மற்றும் காஸ்பியன் கடலின் வட கிழக்கைச் சுற்றி மெடிஸ் (Medes) மற்றும் பாரசீகர்கள் இருந்தனர். ஆனால் இவர்களுக்கும் அப்போதிருந்த சிந்தியன்கள் (Scythians) மற்றும் சர்மேஷியங்கள் (Sarmatians) ஆகியோருக்கும் இடையே பெயர்க் குழப்பம் நிலவியது. வடகிழக்கு அல்லது வடமேற்கிலிருந்து அர்மீனியன்கள், வட மேற்கிலிருந்து பால்கன் (Balkan) தீபகற்பம் வழியே சிம்மேரியன்கள் (Cimmerians), ஃபிரிஜியன்கள் (Phrygians) மற்றும் இப்போது நாம் கிரேக்கர்கள் என்றழைக்கும் ஹெலெனிக் (Hellenic) பழங்குடியினர் ஊடுருவினர். கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் ஆரியர்கள் வந்தனர். எல்லோரையும் போன்று இவர்களும் மேய்ப்பர்களாகத் திரிந்தனர். கிழக்குப் பகுதியில் எல்லைகளைத் தாண்டி ஊடுருவியவர்கள் கொள்ளை அடித்தனர். ஆனால் மேற்குப் பகுதியில் ஊடுருவியவர்கள் நகரங்களைத் தாக்கி ஆக்கிரமித்ததுடன், அங்கு வாழ்ந்து கொண்டிருந்த ஏஜியன் மக்களையும் விரட்டி அடித்தனர்.
விரட்டி அடிக்கப்பட்ட ஏஜியன் மக்கள் ஆரியர்களின் ஆதிக்க எல்லைகளைத் தாண்டிய நிலங்களில் தங்களது புதிய இல்லங்களை அமைத்துக் கொண்டனர். சிலர் எகிப்திலுள்ள நைல் நதியின் கழிமுக வடிநிலப் பகுதிகளில் குடியேற முயன்றபோது, அங்கு ஏற்கெனவே வாழ்ந்து கொண்டிருந்த எகிப்தியர்களால் துரத்தியடிக்கப்பட்டனர். சில எட்ரூஸ்கான்கள் (Etruscans) ஆசியா மைனரிலிருந்து மத்திய இத்தாலியின் காட்டுப்பகுதிக்குள் தஞ்சம் அடைந்தனர். இன்னும் சிலரோ, மத்தியத்தரைத் தென் கிழக்குக் கடலோரங்களில் நகரங்களை உருவாக்கிக் கொண்டனர். பின்னாள் வரலாறுகளில், இவர்களே ஃபிலிஸ்டின்கள் (Philistines) என்றழைக்கப்பட்டனர்.
பண்டைய நாகரிகங்கள் மீது தாக்குதல்களை நடத்திய ஆரியர்கள் குறித்து வரும் பக்கங்களில் விரிவாகப் பார்ப்போம். இப்பிராந்தியங்களில், படிப்படியாக ஆனால் நிதானமாக, ஆரியர்கள் நடத்திய தாக்குதல்கள், பொ.ஆ.மு.1600–600 வரை நடைபெற்றன. ஃபோனீஷிய மற்றும் ஃபிலிஸ்டின் கரையோரங்களுக்குப் பின்னுள்ள மலைகளில் வசித்த செமிட்டிக் மக்கள், அதாவது ஹீப்ரூக்கள் (Hebrews) பற்றியும், பின்வரும் அத்யாயங்களில் விரிவாகப் பார்ப்போம். இவ்வின மக்களே பின்னாளில் உலக வரலாற்றில் கணிசமான கவனத்தை ஈர்த்தனர். இவர்கள்தான் இலக்கியச் செறிவு மிக்க நூல்கள், பாடல்கள், வரலாறுகள், ஞானம் மற்றும் ஹீப்ரூ விவிலியம் உள்பட தீர்க்கதரிசனப் புத்தகங்களைப் படைத்தனர்.
ஆரியர்களின் ஊடுருவல், பொ.ஆ.மு.600 வரை, மெசொபொடேமியா மற்றும் எகிப்தில் பெரிய அளவில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. கிரேக்கர்களின் வருகைக்கு முன்பே ஏஜியன்களின் வெளியேற்றமும், நாசஸின் அழிவும், எகிப்து மற்றும் பாபிலோனிய மக்களைப் பாதிக்கவில்லை. இந்நாகரிகங்களின் தொட்டில்களில், பல பரம்பரைகளின் ஆட்சிகள் வந்து போனாலும், மனித வாழ்க்கையின் முக்கியக் குணம் மட்டும் மாறாமல் தொடர்ந்தது. காலங்களுக்கு ஏற்ப மெருகேற்றமும் சிக்கலும் சிறிது சிறிதாகத் தொடர்ந்தது.
இன்றைக்கும் பார்வையாளர்களுக்குக் காட்சிப்பொருட்களாகவும், நினைவுச் சின்னங்களாகவும், விளங்கும் எகிப்திய பிரமிட்கள், மூவாயிரம் ஆண்டுகள் பழைமையுடன், பாரம்பரியப் பெருமையைப் பறைசாற்றுகின்றன. இவற்றுக்கு இணையாக பதினேழாம் மற்றும் பத்தொன்பதாம் பரம்பரையில், கர்னாக் (Karnak) மற்றும் லக்ஸர் (Luxor) கோயில்கள் உள்பட பிரம்மாண்ட கட்டுமானங்களும் கட்டப்பட்டன. பெரிய கோயில்களும், மனிதத் தலைகளும் இறக்கைகளும் கொண்ட எருதுகளின் நினைவுச் சின்னங்களும், மன்னர்கள், தேர்கள், சிங்க வேட்டையைப் பிரதிபலிக்கும் சுவரில் செதுக்கப்பட்ட சிலைகளும், பொ.ஆ.மு.1600-600 வரை நினேவேவை அலங்கரித்தன. இதே காலகட்டத்தில் பாபிலோனிலும் பல சிறப்புகள் அரங்கேறின.
மெஸோபொடேமியா மற்றும் எகிப்திலிருந்து ஏராளமான பொது ஆவணங்கள், வணிகக் கணக்குகள், கதைகள், பாடல்கள், தனிநபர் கடிதத் தொடர்புகள் ஆகியவை கிடைத்துள்ளன. பாபிலோன் மற்றும் எகிப்திய தேப்ஸ் (Thebes) நகரங்களைச் சேர்ந்த செல்வமும் செல்வாக்குமுள்ள மக்களின் வாழ்க்கை, இன்றைக்கு வாழும் மக்களுக்குக் கிடைக்கும் வசதிக்கும் ஆடம்பரத்துக்கும் இணையாக இருந்தது. அழகான, அலங்கரிக்கப்பட்ட மற்றும் பிரம்மாண்ட வீடுகளில் குடியிருந்தனர். உயர்தர ஆடைகளையும் ஆபரணங்களையும் அணிந்திருந்தனர்.
பண்டிகைகள், கொண்டாட்டங்கள், இசை, நாட்டியம் எனக் கட்டமைக்கப்பட்ட சடங்கு, சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கும் வாழ்க்கை வாழ்ந்தனர். காவலர்களும் வேலைக்காரர்களும் பயிற்சி பெற்ற பொது மருத்துவர்களும் பல் மருத்துவர்களும் இருந்தனர். நெடுந்தூரம் பயணம் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. கோடைக்காலங்களில் நைல் மற்றும் யூஃப்ரடீஸ் நதிகளில் படகுகளில் சுற்றுலா போகும் பழக்கமுண்டு.
பொதி சுமக்கக் கழுதைகளையும் போர்க்களத்தில் குதிரைகளையும் பயன்படுத்தினர். கோவேறு கழுதைகள் பயன்பாட்டுக்கு வரவில்லை. மெசொபொடேமியாவில் பரவலாக காணப்படும் ஒட்டகம், எகிப்தில் அறிமுகமாகவில்லை. இரும்பு, செம்பு, வெண்கல உலோகங்களை உபயோகப்படுத்தினர். பருத்தி ஆடைகளை மக்கள் உடுத்தினர். ஆனால் பட்டுத் துணிகள் இருந்ததற்கான சான்றுகள் இல்லை. வண்ணம் தீட்டப்பட்ட கண்ணாடிக் குடுவைகளும் கோப்பைகளும் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் பூதக் கண்ணாடி, மூக்குக் கண்ணாடி ஆகியவற்றை அறிந்திருக்கவில்லை. தங்கப் பல் கட்டும் பழக்கம் இருந்திருக்க வேண்டும்.
பழைய தேப்ஸ் அல்லது பாபிலோனுக்கும் இன்றைய நவீன வாழ்க்கைக்கும் உள்ள ஒற்றை வேறுபாடு, பணப் பரிவர்த்தனையில் நாணயங்கள் இல்லாமைதான். பண்டமாற்று முறையில்தான் வர்த்தகம் நடைபெற்று வந்தது. எகிப்தை விடவும் நிதி ஆதாரங்களில் பாபிலோன் பன்மடங்கு வளம் பெற்றிருந்தது. தங்கமும் வெள்ளியும் பரிமாற்றங்களுக்கான செல்வமாக விளங்கின. அவை கட்டிகளாகச் சேமிக்கப்பட்டன. விலை உயர்ந்த இந்த உலோகங்கள் மீது அவற்றின் எடைகளையும் பெயர்களையும் பொறித்திருந்தனர். வணிகர் அல்லது பயணி இவற்றை விற்றுத் தனது தேவைகளை நிறைவு செய்துகொண்டார். அடிமைகளாக இருந்த பணியாளர்களுக்குப் பணமாகக் கொடுக்காமல் பொருட்களாகக் கொடுத்தனர். பணப் பரிமாற்றம் வரத் தொடங்கிய பின்னர் அடிமை முறை குறைய ஆரம்பித்தது.
இவ்விரு பண்டைய நகரங்களுக்குத் தற்காலப் பயணிகள் யாரேனும் செல்லும் பட்சத்தில், கோழி மற்றும் கோழி முட்டை ஆகிய இரு முக்கிய உணவுகளைக் காணாமல் திகைப்பது நிச்சயம். குறிப்பாக பாபிலோனுக்கு ஃபிரெஞ்ச் சமையல்காரர்கள் வந்தால் இவற்றைக் காணாமல் வருத்தப்படுவர். கடைசி அஸ்ஸிரியன் சாம்ராஜ்யத்தின் போதுதான் கோழியும் முட்டையும் கிழக்கிலிருந்து வந்தன.
மற்ற விஷயங்களைப் போலவே மத சம்பிரதாயங்களும் மிகப் பெரிய அளவில் மறுசீரமைப்புக்கு உள்ளாயின. நரபலி முற்றிலுமாக மறைந்து போனது. மனிதர்களுக்குப் பதிலாக விலங்குகளைப் பலியிடத் தொடங்கினர். ஆனால் ஃபோனீஷியன்கள் குறிப்பாக ஆப்பிரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான கசர்த்தேஜ் (Carthage) இனத்தவர்கள், பலி கொடுக்க மனிதர்களைத் தீயிட்டுக் கொளுத்தியதாகப் பின்னர் குற்றம் சுமத்தப்பட்டனர்.
பண்டைக் காலத்தில் இனத் தலைவர் ஒருவர் இறந்துபோனால், அவரது மனைவிகளையும் அடிமைகளையும் பலி கொடுப்பது வழக்கமாக இருந்தது. மேலும் அவரது கல்லறையில் வில்லையும் ஈட்டியையும் ஒடித்து வைப்பார்கள். மண்ணுலம் நீங்கி ஆவி உலகம் செல்லும் அத்தலைவர், ஆயுதம் இல்லாமல் வெறுங்கையுடன் செல்லக்கூடாது என்பதே இந்தச் சடங்குக்கான காரணம்.
எகிப்தில் வேறுவகையான சம்பிரதாயம் நிலவியது. இறந்தவர் உடலோடு அவர் வாழ்ந்த வீடு, கடை, வேலையாட்களுடன், சிறு உருவங்களும் பயன்படுத்திய பொருட்களும் புதைக்கப்படும். 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய அவர்களது நாகரிகம் பண்பாடு பயன்படுத்திய பொருள்கள் ஆகியவை அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டன. வடக்குக் காடுகள் மற்றும் சமவெளிகளிலிருந்து ஊடுருவிய ஆரியர்களின் வருகைக்கு முந்தைய பண்டைய உலகம், இப்படித்தான் இருந்தது.
இந்தியாவிலும் சீனாவிலும் இணையான வளர்ச்சிகள் காணப்பட்டன. பழுப்பு நிற மனிதர்கள் வாழும் இவ்விரு பிராந்தியங்களின் பெரிய பள்ளத்தாக்குகளில் விவசாய நகரங்கள் உருவாயின. ஆனால் மெஸொபொடேமியாவும் எகிப்தும் வேகமாகப் பெற்ற மேம்பாட்டையோ ஒருங்கிணைப்பையோ இந்தியா அடையவில்லை. பண்டைய சுமேரிய அல்லது அமெரிக்க மாயன் நாகரிகங்களின் வளர்ச்சி அளவையே பெற்றிருந்தனர். சீனாவைப் பொறுத்தவரை அதன் வரலாற்றை ஆய்வாளர்கள் இன்னும் நவீனப்படுத்துவதுடன் புராண விஷயங்களையும் தெளிவுபடுத்த வேண்டும். ஒருவேளை இந்தியாவைவிடவும் சீனா அதிக வளர்ச்சி பெற்றிருக்கலாம்.
எகிப்தின் பதினேழாம் பரம்பரை ஆட்சியின் சம காலத்தில், சீனாவில் ஷாங்க் பரம்பரை அதிகாரத்தில் இருந்தது. சிற்றரசர்களைக் கொண்ட தளர்வான சாம்ராஜ்ஜியத்தை பூசாரி- சக்கரவர்த்திகள் ஆண்டனர். பருவகாலங்களுக்கு ஏற்பப் பலி கொடுப்பதே அக்காலப் பண்டைய மன்னர்களின் முக்கியக் கடமையாக விளங்கியது. ஷாங்க் பரம்பரை ஆட்சிக் காலத்தில் பயன்படுத்திய அழகிய வெண்கலப் பாத்திரங்கள், இன்றைக்கும் காட்சிப் பொருட்களாக உள்ளன. இவற்றின் அழகையும் கைவினை நேர்த்தியையும் காணும்போது, இவற்றின் தயாரிப்புக்குப் பல நூற்றாண்டுகள் முன்பே மிகச் சிறந்த நாகரிகம் நிலவியிருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வரத் தோன்றுகிறது.
(தொடரும்)
H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.