21. யூதர்களின் பண்டைய வரலாறு
வரலாற்றின் பின்னாளில், யூதர்களின் செல்வாக்கு அதிகரித்த அளவுக்கு ஆரம்பத்தில் செமிட்டிக் மக்களாக வாழ்ந்த காலத்தில், ஹீப்ரூக்கள் பிரபலமாகவோ முக்கியமானவர்களாகவோ கருதப்படவில்லை. பொ.ஆ.மு.1000-ல் ஜுதேயாவில் (Judea) குடியேறிய யூதர்களின் தலைநகரம் அப்போது ஜெரூசலம். தெற்கிலே எகிப்து மற்றும் வடக்கிலே மாறிக்கொண்டிருந்த சிரியா, அஸ்ஸிரியா, பாபிலோனிய சாம்ராஜ்யங்களுக்கு நடுவே, யூதர்களின் வரற்று பின்னிப் பிணையப்பட்டுள்ளது. இவற்றுக்கு இடையே தவிர்க்க முடியாததாக யூதர்களின் நாடு விளங்கியது.
உலகளவில் யூதர்களின் முக்கியத்துவத்துக்குப் பல்வேறு காரணங்களைக் கூறலாம். எழுதப்பட்ட இலக்கியம், உலக வரலாறு, சட்டங்களின் தொகுப்பு, நாளாகமம், சங்கீதம், அறிவுசார் நூல்கள், கவிதை, புனைவு, அரசியல் உரைவீச்சுகள் உள்ளிட்ட அனைத்தும் பின்னாளில் கிறிஸ்தவர்களின் பழைய ஏற்பாடு, ஹீப்ரூ விவிலியம் என்றானது. இந்த இலக்கியத்தின் காலம் பொ.ஆ. மு.4 அல்லது 5 ஆம் நூற்றாண்டு.
இந்த இலக்கியம் பாபிலோனில் முதன் முதலில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கலாம். மெடீஸ், பாரசீகம், சால்டீன் ஆகியவற்றுக்கு எதிராக உயிரைப் பாதுகாத்துக்கொள்ள அஸ்ஸிரியா போராடிக்கொண்டிருந்தது. இந்தத் தருணத்தில், ஃபேரோ இரண்டாம் நேச்சோ, அஸ்ஸிரியா மீது படையெடுத்தார். அவரை எதிர்த்த ஜூதா (Judah) மன்னன் ஜோசய்யா (Josiah) பொ.ஆ.மு.608-ல் தோற்கடிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து எகிப்தின் ஓர் அங்கமானது ஜூடா. புதிய சால்டீன் மன்னராக பாபிலோனில் முடிசூடிக் கொண்ட மாவீரன் நெபுகெட்நெசர் எகிப்தின் கீழ் நேச்சோவை அடிமைப்படுத்தினார்.
ஜெரூசலத்தில் சில தலையாட்டி சிற்றரசர்களை நியமித்து ஜூடாவை நிர்வகித்தார். ஆனால் இந்த முயற்சியை மக்கள் விரும்பாமல் பாபிலோனிய அதிகாரிகளைக் கொன்று குவித்தனர். இதனால் வெகுண்ட மன்னர், எகிப்துடன் ஒத்துழைக்காமல் ஓயாமல் எதிர்த்துக் கொண்டிருந்த இச்சிறிய நாட்டைத் துண்டு துண்டாகக் கூறுபோட்டார். ஜெரூசலத்தைத் தீயிட்டுக் கொளுத்திச் சாம்பலாக்கி மண்ணோடு மண்ணாகினார். கண்ணில்பட்டவர்களைக் கொன்று குவித்தார். உயிர் பிழைத்தவர்களைப் பிணைக்கைதிகளாக அடிமைகளாக பாபிலோனுக்குப் பிடித்துச் சென்றார்.
பாபிலோனை பொ.ஆ.மு.538-ல் சைரஸ் கைப்பற்றும் வரை யூதர்கள் அங்கேயே இருந்தனர். சைரஸ் அவர்களை ஒருங்கிணைத்து மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்து மறுவாழ்வு அளித்தார். ஜெரூசலத்தில் இடிந்த வீடுகளையும் சுவர்களையும் சிதிலமடைந்த கோயில்களையும் புனரமைத்துக் கட்டித் தந்தான். இதற்கு முன் யூதர்கள் ஒற்றுமையாகவோ நாகரிகமானவர்களாகவோ இருந்ததில்லை. ஒரு சிலர் மட்டுமே எழுதவும் படிக்கவும் தெரிந்தவர்களாக இருந்தனர். அவர்களுடைய சொந்த வரலாற்றிலேயே ஆரம்பகால விவிலியப் புத்தகங்களைப் படித்ததாக எந்தச் செய்தியும் கிடையாது. ஜோசய்யா காலத்தில்தான் புத்தகம் பற்றிய முதல் குறிப்பே வருகிறது. பாபிலோனியர்களிடம் கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்ட போதுதான் நாகரிகமானார்கள். தங்களுடைய சொந்த இலக்கியம் மற்றும் அரசியல் விழிப்புணர்வுக்கும் திரும்பினர்.
அவர்கள் காலத்து விவிலியத்தில், பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்கள், அதாவது, பெண்டாடெச் (Pentateuch) மட்டுமே இருந்ததெனக் கூறப்படுகிறது. இவை தவிர, தனியாகப் பல புத்தங்கள் வைத்திருந்தனர். பின்னாளில் பெண்டாடெச்சுடன் சேர்த்துத் தற்போதைய ஹீப்ரூ விவிலியத்துடன் (Hebrew Bible) இணைக்கப்பட்டன. உதாரணத்துக்கு நாளாகமம் (Chronicles), சங்கீதம் (Psalms) மற்றும் நீதி மொழிகள் (Proverbs) ஆகியவற்றைச் சொல்லலாம்.
உலகத்தின் படைப்பு, ஆதாம், ஏவாள், வெள்ளம் என விவிலியத்தின் தொடக்கம் பாபிலோனியப் புனைவுகள் / புராணக் கதைகளோடு மிக நெருக்கமாக இருக்கின்றன. அனைத்து செமிட்டிக் மக்களின் பொதுவான நம்பிக்கைகளின் ஓர் அங்கமாக அவை இருப்பதாகத் தெரிகிறது. மோசஸ் மற்றும் சாம்சன் கதைகளுக்கு இணையாகச் சுமேரிய மற்றும் பாபிலோனியக் கதைகளும் உள்ளன. ஆனால் ஆபிரஹாம் கதை தொடங்கும் போதுதான் யூத இனத்தின் பிரத்யேகமும் தனித்துவமும் காணப்படுகிறது.
பாபிலோனில் ஹமுராபி வாழ்ந்த தொடக்க காலம் முதற்கொண்டே ஆபிரஹாமும் வாழ்ந்திருக்க வேண்டும். அவர் ஓர் ஆணாதிக்கச் செமிட்டிக் நாடோடி. அங்குமிங்குமாக நாடோடியாக அலைந்தது, பிள்ளைகள் மற்றும் பேரக் குழந்தைகள் பெற்றது; எகிப்தில் சிறைப்பிடிக்கப்பட்டது உள்ளிட்ட கதைகளுக்கு ஜெனிசிஸ் (Genesis) புத்தகத்தைப் படிக்க வேண்டும். கேனான் (Canaan) வழியே பயணித்தபோது, ஆபிரஹாமின் கடவுள், செழிப்பான மற்றும் வளமான நகரங்களை அவருக்கும், பிள்ளைகளுக்கும் வழங்கியதாக விவிலியம் கூறுகிறது.
எகிப்தில் நீண்ட காலம் தங்கிய பிறகு, மோசஸ் தலைமையில் ஐம்பது ஆண்டுகள் நாடோடியாக அலைந்து திரிந்த பின்னர், ஆபிரஹாமின் குழந்தைகள் பன்னிரண்டு இனங்களாகப் பிரிந்து, அரேபியப் பாலைவனங்களிலிருந்து கிழக்கு நோக்கி கேனான் பகுதிக்குள் படையெடுத்தனர். இந்த ஊடுருவலை அவர்கள் பொ.ஆ.மு.1600-1300-ல் செய்திருக்கவேண்டும். இதற்கு வலுசேர்க்க மோசஸ் அல்லது கேனான் நகர் பற்றிய விவரங்கள் எதுவும் எகிப்திய குறிப்புகளில் இதே காலகட்டத்தில் காணப்படவில்லை. இருப்பினும் அங்குள்ள மலைப்பிரதேசங்களைத் தவிர அவர்களால் ஏனைய பகுதிகளைக் கைப்பற்ற முடியவில்லை.
கடற்கரைப் பகுதிகள் கேனானியர்களிடம் இல்லை. மாறாகப் புதிதாக வந்த ஏஜியன் அதாவது ஃபிலிஸ்டைன் மக்களின் ஆதிக்கத்தில் இருந்தன. காஸா (Gaza), காத் (Gath), அஷ்டோட் (Ashdod), ஆஸ்கலான் (Ascalon) மற்றும் ஜோப்பா (Joppa) ஆகிய நகரங்கள் ஹீப்ரூக்களின் தாக்குதல்களைச் சமாளித்து முறியடித்தன. பல தலைமுறைகளாக ஆபிரஹாமின் வாரிசுகள், ஃபிலிஸ்டைன், மாவோபைட்ஸ் (Moabites), மிடியானைட்ஸ் (Midianites) இனங்களுடன் இடைவிடாத சண்டை சச்சரவுகளுடன் அதிகம் அறியப்படாதவர்களாகவே வாழ்ந்தனர். பழைய ஏற்பாடு ஹீப்ரூ விவிலியத்தின் ‘புக் ஆஃப் ஜட்ஜஸ் (Book of Judges) புத்தகத்தில் அவர்களின் போராட்டங்கள், தோல்விகள் மற்றும் பேரழிவுகளின் பதிவுகளை வெளிப்படையாகக் காணலாம்.
முத்த குடிமக்கள் தேர்ந்தெடுத்த பூசாரிகளும் மத நீதிபதிகளுமே பெரும்பான்மைக் காலங்களில் ஹீப்ரூக்களை ஆண்டனர். பொ.ஆ.மு.1000-ல் தங்களின் மன்னனாகவும், போரில் தலைமை தாங்கவும், சால் (Saul) என்பவரை மக்கள் தேர்ந்தெடுத்தனர். இருப்பினும் மத நீதிபதிகளைத் தாண்டி, சால் மன்னனால் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. கில்போ மலையில் (Mount Gilboa) நடைபெற்ற போரில், ஃபிலிஸ்டைன் அம்புகள் உடலைச் சல்லடையாகத் துளைக்க, மரணத்தைத் தழுவினார். அவரது கவசம் ஃபிலிஸ்டைன் வீனஸ் கோயிலுக்குள் வைக்கப்பட, உடலை பெத்-ஷான் (Beth-Shan) நகரில் சுவரோடு சுவராக ஆணியடித்துத் தொங்கவிட்டனர்.
சால் மன்னனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த டேவிட் வீரமும் விவேகம் உள்ளவராகப் பல வெற்றிகளைக் குவித்தார். ஹீப்ரூ மக்கள் விடியலையும் செழிப்பையும் கண்டது டேவிட் ஆட்சியில்தான். இதற்குக் காரணம் டேவிட் புத்திசாலித்தனம் நிறைந்த ஃபோனீஷிய நகரான டயரின் (Tyre) மன்னன் ஹிரம் (Hiram) என்பவருடன் நட்பு பாராட்டி, அவருடன் நல்லுறவில் இருந்ததுதான். வழக்கமாக ஃபோனீஷிய வர்த்தகப் பாதை எகிப்து வழியே செங்கடலைச் சென்றடையும். ஆனால் எகிப்தில் அப்போதை நிலை சீராகவும் அமைதியாகவும் இல்லை என்பதால் ஹீப்ரூ மலை நாடு வழியே செங்கடல்வரை வர்த்தகப் பாதை அமைக்க விரும்பினார்.
பிரச்னைகளைத் தவிர்க்கவும், ஃபோனீஷிய வர்த்தகப் பாதையை ஹீப்ரூ மலை நாடு வழியே அமைக்கவும், ஆட்சியிலிருந்த டேவிட் மற்றும் சாலமன் ஆகியோரிடம் நெருங்கிப் பழகினார். இதற்குக் கைமாறாக மதில்கள், அரண்மனை மற்றும் ஜெரூசலம் தேவாலயம் உருவாக ஹிரம் உதவினார். வர்த்தகப் பாதை தடையின்றி அமையவே, செங்கடலில் ஹிரம் கப்பல்களைக் கட்டி வெள்ளோட்டம் விட்டார். ஜெரூசலம் வழியே வடக்கு தெற்காக வர்த்தகம் செழித்தது. அதுவரை இல்லாத அளவுக்குச் சாலமன் செல்வமும் செல்வாக்கும் மிக்கவராக உயர்ந்தார். சாலமனை (Solomon) மருமகனாக்கிக் கொள்ள விரும்பிய ஃபேரோ, தனது மகளை அவருக்கு மணமுடித்து வைத்தார்.
இருப்பினும் சில விஷயங்களை மனத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். புகழ் பெற்ற மன்னராக சாலமன் விளங்கினாலும், அவர் ஒரு சின்னஞ்சிறிய நகரத்தின் சிற்றரசர். அவ்வளவுதான். அவருடைய அதிகார எல்லையும் மிகக் குறுகிய வட்டமே. எனவே அவர் இறந்த அடுத்த சில ஆண்டுகளில், இருபத்தி இரண்டாவது பரம்பரையின் முதல் ஃபேரோவான ஷிஷாக், (Shishak) ஜெரூசலத்தைக் கைப்பற்றிச் சொத்துக்களைக் கொள்ளை அடித்தார். கிங்க்ஸ் அண்ட் க்ரானிகிள்ஸ் (Kings and Chronicles) புத்தகங்களில் காணப்படும் சாலமன் பற்றிய பல்வேறு கதைகள் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. சாலமனைப் பெருமப்படுத்த பின்னாளில் வந்த எழுத்தாளர்களின் கற்பனையில் உதித்த புனைவுகள். ஆனால் விவிலியத்தில் சாலமன் பற்றிய குறிப்புகளை முதலில் மேலோட்டமாகப் படிக்கும்போது ஏற்படுத்திய பரவசம் கவனமுடன் கூர்ந்து படிக்கையில் எந்த தாகத்தையும் ஏற்படுத்தவில்லை.
சாலமன் கட்டிய கோயிலின் அளவுகளைப் பார்க்கும்போது, அதை ஒரு சிறிய தேவாலயத்துள் அடக்கிவிடலாம். அஹப் (Ahab) அஸ்ஸிரியப் படைகளுக்கு அனுப்பிய 2000 ரதங்களுடன் ஒப்பிடுகையில், சாலமனின் 1400 ரதங்கள் பாதிக்கும் கொஞ்சம்தான் அதிகம். மேலும் சாலமன் கேளிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டும், அதிக வரிகள் விதித்து மக்களை வாட்டிய குறிப்புகளும் காணப்படுகின்றன. அவருடைய மரணத்துக்குப் பின்னர் ராஜ்ஜியத்தின் வடக்குப் பகுதி ஜெரூசலத்திலிருந்து பிரிந்து இஸ்ரேல் என்னும் தனி ராஜ்ஜியமானது. ஜெரூசலம் தொடர்ந்து ஜுதேயாவின் தலைநகராக இருந்தது.
ஹீப்ரூ மக்களின் செழிப்பும் செல்வாக்கும் நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஹிரம் மாணத்தைத் தொடர்ந்து டயர் (Tyre) நகர உதவியும் ஆதரவும் எந்த வகையிலும் ஜெரூசலத்தை வலுப்படுத்தப் பயன்படவில்லை. எகிப்து மீண்டும் வல்லரசானது. இஸ்ரேல் மற்றும் ஜுதேயா அரசர்களின் குறிப்புகள், சிரியாவுக்கும் அஸ்ஸிரியாவுக்கும் இடைப்பட்ட, பின்னர், வடக்கே பாபிலோனுக்கும் தெற்கே எகிப்துக்கும் இடைப்பட்ட, சிறு நாடுகளின் வரலாறானது. அனைத்துமே, நாகரிகம் குறைந்தவர்களை ஆளும் நாகரிகம் குறைந்த அரசர்களின் கதைகளாகவே உள்ளன. பொ.ஆ.மு.721-ல் இஸ்ரேல் ராஜ்ஜியத்தை அஸ்ஸிரியர்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து அதன் வரலாறு மங்க ஆரம்பித்தது. பொ.ஆ.மு.604 வரை ஜுதேயாவும் போராடி இறுதியில் இஸ்ரேலைப் போலவே அதன் புகழும் தேய்ந்தது. ஹீப்ரூ வரலாறு பற்றிய விவிலியத்தின் விவரங்கள் விமர்சனத்துக்கு உள்ளாகலாம். ஆனால் கடந்து நூற்றாண்டில் எகிப்து, அஸ்ஸிரியா மற்றும் பாபிலோன் அகழ்வாய்வுகள் பல உண்மைகளை நமக்குப் புலப்படுத்தி உள்ளன.
ஹீப்ரூக்கள் தங்களது முழு வரலாற்றையும் பாரம்பரியத்தின் பரிணாம வளர்ச்சியையும் மொத்தமாகப் பெற்றது பாபிலோனிலிருந்துதான். சைரஸ் ஆணைக்கேற்ப ஜெரூசலத்துக்குத் திரும்பிய மக்கள், முன்பு கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்படும்போது இருந்ததை விடவும், இப்போது அறிவிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கினர். நாகரிகத்தையும் பண்பாட்டையும் கற்றுக்கொண்டனர். அவர்களது வித்தியாசமான குணத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க மனிதர்கள் முக்கியப் பங்களித்தனர். இவர்கள் ஒரு வகை தீர்க்கதரிசிகள். இவர்களின் வரவு மனித சமூகத்தின் சீரான வளர்சிக்கும் புதிய மற்றும் சிறப்பான ஆற்றலுக்கும் வழிவகுத்தது.
22. ஜுதேயா பூசாரிகளும் தீர்க்கதரிசிகளும்
செமிட்டிக் மக்களுக்கு ஏற்பட்ட தொடர்ச்சியான முதல் சீரழிவுகள் அஸ்ஸிரியா மற்றும் பாபிலோன் வீழ்ச்சிதான். பொ.ஆ.மு.7-ம் நூறாண்டில் இந்த நாகரிக உலகம் முழுவதுமே செமிட்டிக் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருப்பதைப்போல் தோன்றியது. எகிப்தை வென்ற சூழலில் அஸ்ஸிரியன் சாம்ராஜ்யம் முழுவதும் செமிட்டிக் ஆட்சியாளர்களின் கீழ் இருந்தது. அஸ்ஸிரியா, பாபிலோன், சிரியா உள்ளிட்ட அனைவரும் செமிட்டிக்களே. அவர்கள் அனைவரும் பேசிய மொழிகளும் பரஸ்பரம் புரிந்துகொள்ளக் கூடியதே. உலக வர்த்தகமும் செமிட்டிக் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.
ஃபோனீஷிய கடற்கரைத் தாய் நகரங்களான டயர் (Tyre) மற்றும் சிடான் (Sidon) ஆகியவை ஸ்பெயின், சிசிலி, ஆப்பிரிக்கா ஆகியவற்றைவிடவும் பிரம்மாண்ட நகரங்களாக உருவெடுத்தன. பொ.ஆ.மு.800-ல் நிறுவப்பட்ட கார்த்தேஜ் (Carthage) மக்கள் தொகை ஒரு மில்லியனுக்கும் அதிகம். அந்தக் காலத்தில் பூமியில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் இதுவே. பிரிட்டனையும் தாண்டி அட்லாண்டிக் பெருங்கடலில் இவர்களது கப்பல்கள் மிதந்தன. அவை மெடீரா (Madeira) வர சென்றிருக்கலாம். செங்கடல் வழியே அரேபியா மற்றும் இந்தியாவுடனான வர்த்தகத்துக்கு எவ்வாறு சாலமனுடன் இணைந்து ஹிராம் கப்பல்களைக் கட்டினார் என்று பார்த்தோம். ஃபேரோ நேச்சோ காலத்தில் ஃபோனீஷியக் கப்பல் ஆப்பிரிக்கா முழுவதும் பயணம் செய்தது.
இந்தக் காலகட்டத்திலும் ஆரியர்கள் இன்னும் நாகரிகம் குறைந்தவர்களாகவே இருந்தனர். கிரேக்கர்கள் அவர்கள் அழித்த இடிபாடுகள் மீது புதிய நாகரிகத்தைக் கட்டமைத்துக் கொண்டிருந்தனர். அஸ்ஸிரியன்கள் கல்வெட்டுகளின்படி மத்திய ஆசியாவில் மெடீஸ் (Medes) வலிமையானவர்களாக உருவெடுத்துள்ளனர். பொ.ஆ.மு.3-ம் நூற்றாண்டுக்கு முன்பாகவே செமிட்டிக் சாம்ராஜ்யம் முழுவதுமே ஆரிய மொழி பேசுவோரால் வெல்லப்பட்டு முற்றிலுமாகத் துடைத்தெறியப்படும் என்றோ, செமிட்டிக் மக்கள் பல்வேறு நாடுகளில் சிதறி ஓடுவார்கள் என்றோ பொ.ஆ.மு.8-ம் நூற்றாண்டில் யாருமே கணித்திருக்க முடியாது. அரேபியாவின் வடக்குப் பாலைவனங்களில் பிடோயின் (Bedouin) இன மக்கள், முதலாம் சர்கோன் மற்றும் அக்காடியன்களைப் போல் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இந்த அரேபிய பிடோயின் இனத்தவர்களை மட்டும் ஏனோ ஆரியர்களால் ஜெயிக்க முடியவில்லை.
மேற்கண்ட ஐந்து நூற்றாண்டுகளில் நாகரிக செமிட்டிக் மக்கள் தோற்கடிக்கப்பட்டுத் துரத்தப்பட்டனர். இருப்பினும் ஒரேயொரு இன மக்கள் மட்டும் தங்கள் பண்டைய பாரம்பரியங்களை விடாமல் பிடித்துக் கொண்டு பின்பற்றினர். அவர்கள்தான் பாரசீக மன்னர் சைரஸால், ஜெரூசலத்தை மீண்டும் சீரமைக்கவும், புனரமைக்கவும், அனுப்பப்பட்ட யூத இனத்தவர்கள். இது சாத்தியப்படக் காரணம், அவர்கள் பாபிலோனில் இருந்தபோது தொகுத்து உருவாக்கிய புனித இலக்கியமான விவிலியம். யூதர்கள் விவிலியத்தை உருவாக்கினார்கள் என்பதைவிட விவிலியமே யூதர்களை உருவாக்கியது என்று சொல்வது சரியாக இருக்கும். மாபெரும் உத்வேகமும் ஊக்கமும் அளிக்கும் சிந்தனைகள் அதில் இருக்கின்றன. 25 நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரு நம்பிக்கையை அவர்களுக்குள் விதைத்து அவர்கள் அதை விடாமல் இறுகப் பற்றிக் கொண்டுவாழ அதுவே வழிசெய்திருக்கிறது.
யூத எண்ணங்களில் மிக முக்கியமானது அவர்களது கடவுள் கண்களுக்குப் புலப்படாமல் எங்கோ தொலைவிலிருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார்; மனிதனின் கைகளால் கட்டப்படாத தேவாலயத்தில் பார்வைக்குத் தெரியாமல் மறைந்திருக்கிறார்; நீதி தேவன் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கிறார். ஆனால் ஏனைய மக்களின் கடவுள்கள் ஓவியங்களிலும் சிலைகளிலும் பொதிந்தபடி கோயில்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்தக் கடவுளின் ஓவியங்களும் சிலைகளும் உடைக்கப்பட்டு, அவை குடியிருக்கும் கோயில்களும் இடித்துத் தரைமட்டமானவுடன், உள்ளிருக்கும் கடவுள்களும் இறந்துவிடும். இதுவொரு புதிய சிந்தனை. பூசாரிகள் மற்றும் பலிகளைவிட உயர்ந்த யூதர்களின் கடவுள் சொர்க்கத்தில் உள்ளார்.
யூதர்களின் நம்பிக்கையின்படி, ஆப்ரஹாமின் இக்கடவுள், வித்தியாசமான மனிதர்களாக இவர்களைத் தேர்ந்தெடுத்து, நீதியும் நேர்மையும் நிறந்த உலகின் தலைநகராக ஜெரூசலத்தைப் புனரமைக்கவும் மீடெடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். தங்களைத் தாங்களே உயர்ந்தவர்கள் எனக் கருதும் உயர்வு மனப்பான்மை கொண்டவர்களாக இவர்கள் விளங்கினர். பாபிலோனில் சிறைக்கைதிகளாக அடைபட்டு மீண்டும் ஜெரூசலம் திரும்பிய பிறகே, இந்த அதீத நம்பிக்கையும் உயர்வு மனப்பான்மையும் அவர்களின் நிறைந்து காணப்பட்டன.
பாபிலோனியர்களும் சிரியர்களும் ஃபோனீஷியர்களும் ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டும் அடிமைப்படுத்தப்பட்டும் இருந்த காலங்களில் அவர்கள் அனைவரும் ஒரே மொழியைத்தான் பேசினார்கள். ஒரே கலாசாரம், பழக்க வழக்கங்கள், விருப்பு, வெறுப்புகள், பண்பாடுகளைக் கடைப்பிடித்தனர் என்பது அதிசயம்; ஆனால் உண்மையும் கூட. டயர், சிடான், கார்த்தேஜ், ஸ்பெயின் ஃபோனீஷிய நகரங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு ஃபோனீஷியர்கள் என்ன காரணத்தினாலோ திடீரென வரலாற்றிலிருந்து முற்றிலும் காணாமல் போகின்றனர். இது ஜெரூசலத்தில் மட்டுமின்றி, ஸ்பெயின், ஆப்பிரிக்கா, எகிப்து, அரேபிய மற்றும் கீழை நாடுகள் உள்பட ஃபோனீஷியர்கள் எங்கெல்லாம் தடம் பதித்தார்களோ அங்கெல்லாம் யூதர்களின் சமூகம் பரவியிருப்பதைக் காண்கிறோம். இவர்கள் அனைவரும் விவிலியத்தாலும் விவிலியம் படிப்பதாலும் ஒன்றிணைக்கப்பட்டனர்.
ஜெரூசலம் தொடக்கம் முதற்கொண்டே யூதர்களுக்குப் பெயரளவுக்கே தலைநகராக விளங்கியது. அவர்களது உண்மையான தலைநகரம் ‘புத்தகங்களின் புத்தகம்’ (Book of Books) அதாவது விவிலியம் (Bible). வரலாற்றில் இதுவொரு புதுவகை. சித்திர வடிவத்திலிருந்து எழுத்துக்கு எகிப்தியர்களும் சுமேரியர்களும் மாறிய போதே, இதற்கான விதைகள் நீண்ட காலம் முன்பே தூவப்பட்டன. யூதர்களும் புது வகை இனத்தவர். அவர்களுக்கு மன்னனும் இல்லை; வழிபட இப்போது கோயிலும் இல்லை (பொ.ஆ.70-ல் ஜெரூசலம் சிதறிப் போனது) என்றாலும், பன்முக உறுப்புகள் எதுமின்றி, எழுதிய சொல்லின் வலிமையால் ஒன்றாகப் பிணைத்து ஒருங்கிணைக்கப்பட்டனர்.
யூதர்களின் மனதளவிலான இந்த ஒன்றிணைப்பு திட்டமிட்டோ, முன்பே கணிக்கப்பட்டோ, பூசாரிகளால் நடத்தப்படவோ இல்லை. யூதர்களின் வரவு மற்றும் வளர்ச்சியைத் தொடர்ந்து, புதுவகைச் சமூகம் மட்டுமின்றி, புது வகை மனித இனமே வரலாற்றுக்குள் அடியெடுத்து வைத்தது. சாலமன் காலத்தில் யூதர்கள் பிற மனிதர்களைப் போலவே அரண்மனை, கோயில் என்று மன்னர்கள் ஆதிக்கத்திலும் பூசாரிகளின் வழிகாட்டுதல்களிலும் வாழ்ந்து வந்தனர். ஆனால் நாம் சொல்லும் புது மனிதனை, தீர்க்கதரிசியை, விவிலியத்தைப் படிக்கும் வாசகன் தெரிந்து கொண்டிருப்பான். பிரிந்து கிடக்கும் ஹீப்ரூகளிடையே பிரச்னைகள் தோன்றும் போது இந்த தீர்க்கதரிசிகளின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.
இந்த தீர்க்கதரிசிகள் யார்? இம்மனிதர்களின் பிறப்பிடங்களும் மூலங்களும் வேறுபட்டவை. தீர்க்கதரிசி எஜிகீல் (Ezekiel) பூசாரிகள் இனத்தைச் சேர்ந்தவர். பூசாரி அமோஸ் (Amos) மேய்ப்பரைப்போல் ஆட்டுத் தோலை அணிந்திருந்தார். ஆனால் அவர்கள் அனைவரிடமும் ஓர் ஒற்றுமை காணப்பட்டது. நீதி தேவனிடம் மட்டுமே விசுவாசமாக இருந்தனர். மக்களிடம் நேரடியாகப் பேசினர். அவர்களிடம் எந்த உரிமமோ அர்ப்பணிப்போ இல்லை. ‘இப்போது ஆண்டவனுடைய வார்த்தை எனக்கு உண்டானது’ என்பதான் அடிப்படை சூத்திரம்.
அவர்களிடம் அரசியல் தீவிரமாக குடிகொண்டிருந்தது. எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காத நிலையில், எகிப்து, அஸ்ஸிரியா அல்லது பாபிலோனுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டு உபதேசித்துக் கொண்டிருந்தனர். பூசாரிகளின் சோம்பேறித்தனம், மன்னர்களின் அப்பட்டமான பாவங்கள் ஆகியவற்றைக் கண்டித்தனர். ‘சமூக சீர்த்திருத்தம்’ என்று நாம் இப்போது கூறுவோமே அதன் மீது சிலர் கவனம் செலுத்தினர்.
பணக்காரர்கள் ஏழைகளைச் சுரண்டிக் கொண்டிருந்தனர்; வசதி படைத்தவர்கள் குழந்தைகளின் ரொட்டியை அபகரித்தனர். செல்வந்தர்கள் வெளிநாட்டினருடன் நட்பு பாராட்டி அவர்களது ஆடம்பரத்தையும், தீய பழக்கங்களையும் பின்பற்றத் தொடங்கினர். இதன் காரணமாக ஆப்பிரஹாமின் கடவுளான ஜிஹோவா (Jehovah) கோபமுற்றுத் தண்டிக்கத் துணிந்தார்.
இந்த எச்சரிக்கையும் சீற்றமும் எழுதப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டன. யூதர்கள் செல்லும் இடமெல்லாம், இவர்களும் சென்று புதிய மத உணர்வைப் பரப்பினர். பூசாரி மற்றும் கோயில், மன்னன் மற்றும் அரண்மனை ஆகியவற்றைப் புறக்கணித்துச் சாதாரண மனிதனை முன்னிலைப்படுத்தினர். நீதியின் ஆட்சி முன்பாக நேருக்கு நேர் அவனை நிறுத்தினர். மனித வரலாற்றில் இதுவே உச்சகட்ட முக்கியத்துவம் பெறுகிறது. ஏசய்யாவின் (Isaiah) வார்த்தைகளில் தீர்க்கதரிசியின் குரல் ஓங்கி ஒலித்தது. அபரிமிதமான எதிர்பார்ப்புகள் மற்றும் முன்னறிவிப்புகளின் அடிப்படையில், ஒரே தேவனின் கீழ் பிரபஞ்சமே ஒன்றிணைய சமாதானம் நிலவியது. அப்போது முதல் யூதர்களின் தீர்க்கதரிசனங்கள் உச்சம் தொட ஆரம்பித்தன.
அனைத்து தீர்க்கதரிசிகளும் இதே பாணியில் பேசவில்லை. தீர்க்கதரிசிகளின் நூல்களைப் படிக்கும் புத்திசாலிகள் அவற்றில் வெறுப்பும் தவறான முன்கணிப்பும் இருப்பதைக் காணலாம். அவை அனைத்தும் தீமையானவை என்பதுடன் இன்றைய பிரசாரங்களைப் போலிருப்பதும் நினைவுக்கு வரும். இருப்பினும் அக்காலத்திய ஹீப்ரூ தீர்க்கதரிசிகள், பாபிலோன் சிறைப்பிடிப்பு ஆகியவை, உலகின் புதிய அதிகார மையத்தின் தோற்றத்தைக் குறிக்கின்றன. இதுவரை நமது இனத்தைச் சேணமிட்டுக் கடிவாளப்படுத்திய கருணையற்ற தியாகங்களுக்கும் அடிமை விசுவாசங்களுக்கும் எதிராகவும், தனி மனித தார்மீக முறையீட்டின் ஆற்றலாகவும், மனித சமூகத்தின் மனசாட்சிக்கும் ஒரு வேண்டுகோளாக விளங்கின.
(தொடரும்)
H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.