23. கிரேக்கர்கள்
சாலமனுக்குப் (பொ.ஆ.மு.960) பின்னர் பிரிந்து கிடந்த இஸ்ரேல் மற்றும் ஜுதேயு ராஜ்ஜியங்கள் எல்லாம் பேரழிவு மற்றும் நாடு கடத்தல் உள்ளிட்ட துயரங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன. பாபிலோனில் கைதிகளாக இருந்தநிலையிலும், யூதர்கள் தங்கள் பாரம்பரியத்தைக் கைவிடாமல் பாதுகாத்து வளர்ப்பதில் கவனம் செலுத்தி வந்தனர். அதே தருணம் மனித இனத்தின் மற்றொரு சக்தியான கிரேக்கப் பாரம்பரியமும் வேகமாக உருவெடுத்துக் கொண்டிருந்தது. ஹீப்ரூ தீர்க்கதரிசிகள், மக்களுக்கும் உலகளாவிய நீதி தேவனுக்கும் இடையே, புதிய உணர்வுபூர்வமான நேரடி தார்மிகப் பொறுப்பை போதித்துக் கொண்டிருந்தனர். ஆனால் கிரேக்க தத்துவவாதிகளோ புது வகையான மற்றும் அறிவுசார் சாகச உணர்வைப் பெற, மனித மனதுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தனர்.
நாம் ஏற்கெனவே சொன்னதுபோல் ஆரிய மொழி பேசும் தண்டின் ஒரு கிளைதான் கிரேக்க இனம். பொ.ஆ.மு.1000க்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே அவர்கள் ஏஜியன் நகரங்கள் மற்றும் தீவுகளுக்கு வந்துவிட்டனர். யூஃப்ரடீஸ் நதியைத் தாண்டி ஃபேரோ தோத்மீஸ் (Thothmes) யானைகளை வேட்டையாச் செல்வதற்கு முன்பே, தெற்கு நோக்கி பயணிக்கத் தொடங்கிவிட்டனர். அந்தக் காலத்தில் மெசொபொடேமியாவில் யானைகளும் கிரேக்கத்தில் சிங்கங்களும் இருந்தன.
நோஸ்ஸோஸ் (Cnossos) நகரை கிரேக்கர்கள் தீயிட்டுக் கொளுத்தியதற்கான சாத்தியங்கள் உண்டென்றாலும், அதைச் செய்த கிரேக்க மன்னன் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை. கிரேக்கத்தின் க்ரீட் (Crete) மன்னன் மினோஸ் (Minos), அவனது லேபிரிந்த் (Labyrinth) அரண்மனை, க்ரீட் கைவினைக் கலைஞர்கள் திறன் ஆகியவை குறித்த கதைகள் மட்டுமே கிடைத்துள்ளன.
பெரும்பான்மை ஆரியர்களைப் போலவே கிரேக்கர்களும் பாடகர்களாகவும் கவிஞர்களாகவும் இருந்துள்ளனர். இவர்களும், இல்லியட் (Iliad) மற்றும் ஒடிசி (Odyssey) ஆகிய இரு காப்பியங்களும் சமூகத்துடனான இணைப்புக்கு முக்கியமாக விளங்கின. கிரேக்கப் பழங்குடியினர் ஆசியா மைனரிலுள்ள ட்ராய் (Troy) நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றியதை விளக்குவது இல்லியட். ட்ராய் நகரிலிருந்து சொந்தத் தீவுக்குத் திரும்பும் ஒடிசிஸ் என்பவரின் நீண்ட நெடிய சாகசக் கதையைக் கூறுவது ஒடிசி.
பொ.ஆ.மு.8 அல்லது 7 ஆம் நூற்றாண்டில் கிரேக்கர்கள் தங்களுக்கான மொழியின் எழுத்தைப் பயன்படுத்தத் தொடங்கியபோது இவ்விரு காப்பியங்களும் எழுதப்பட்டிருக்கலாம். கண்பார்வை இழந்த மில்டன் ‘இழந்த சொர்க்கம்’ (Paradise Lost) பாடல்களைப் புனைந்ததுபோல், பார்வையற்ற ஹோமர் இல்லியட் மற்றும் ஒடிசி காப்பியங்களைப் புனைந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் உண்மையிலேயே ஹோமர் என்றொரு கவிஞர் இருந்தாரா அவர்தான் இவ்விரு காப்பியங்களையும் புனைந்தாரா அல்லது யாரோ சொல்லச் சொல்ல இவர் எழுதிச் செம்மைப்படுத்தினாரா என்பதெல்லாம் விவாதங்களுக்கும், ஆய்வுகளுக்கும் உட்பட்ட விஷயங்கள். ஆனால் இவை குறித்து நாம் அதிகம் கவலைப்படத் தேவையில்லை.
நம்மைப் பொறுத்தவரை அவ்விரு காப்பியங்களும் கிரேக்கர்களுக்குச் சொந்தமானவை, பொ.ஆ.மு.8-7-ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டவை என்பதுடன் பல்வேறு கிரேக்கப் பழங்குடிகளை இணைக்கும் பொதுவான காப்பியங்களாகத் திகழ்ந்தன என்பது மட்டும் உண்மை. வீரம், குணம் ஆகிய பொதுவான எண்ணங்களை இனங்களுக்குள் பகிர்ந்து கொள்ளவும், உறவுகளை இணைக்கவும், தொடக்கத்தில் பேச்சு மொழியாகவும், பின்னர் எழுத்து மொழியாகவும் விளங்கியது.
கிரேக்கர்கள் நாகரிகம் குறைந்தவர்களாகவும், இரும்பின் பயன்பாடு தெரியாதவர்களாகவும், கல்வி அறிவு இல்லாமலும் நகரங்கள் உருவாக்காதவர்களாகவும் காப்பியங்கள் காட்டுகின்றன. அவர்கள் இடித்துத் தள்ளிய எஜியன் நகரங்களின் இடுபாடுகளுக்கு வெளியே, தலைவர்களின் அறைகளைச் சுற்றி அமைந்த திறந்தவெளி கிராமங்களிலுள்ள குடிசைகளில் முதலில் வசித்ததாகத் தெரிகிறது. பிறகு ஜெயித்த மக்களின் நடைமுறையைப் பின்பற்றி, நகரங்களைச் சுற்றிச் சுவர்களும் கோயில்களும் எழுப்பினர். பண்டைய நாகரிகங்களின் நகரங்களில், சில பழங்குடி இனக்கடவுளின் பலிபீடமும், சுவர்களும் கட்டப்பட்டன. சில கிரேக்க நகரங்களில், கோயில் உருவாவதற்கு முன்பே, சுவர் எழுப்பப்பட்டதாகத் தெரிகிறது. வியாபார நிமித்தமாகப் பயணங்களை மேற்கொண்டனர்.
முந்தைய ஏஜியன் நகரங்களும் நாகரிகமும் மெள்ள மறந்தும் மறைந்தும் போக, புதிய நகரங்கள் பொ.ஆ.மு.7-ம் நூற்றாண்டில் கிரேக்கப் பள்ளத்தாக்குகளிலும் தீவுகளிலும் தோன்றின. அவற்றுள் ஏதென்ஸ் (Athens), ஸ்பார்ட்டா (Sparta), கோரிந்த் (Corinth), தீப்ஸ் (Thebes), ஸாமோஸ் (Samos), மிலெடஸ் (Miletus) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. கருங்கடல், இத்தாலி, சிஸிலி ஆகியவற்றில் ஏற்கெனவே கிரேக்க குடியிருப்புகள் இருந்தன. இத்தாலியின் பாதமாக மேக்னா க்ரேஷியா (Magna Graecia) விளங்க, முந்தைய ஃபோனீஷியன் காலனியின் மீது மார்சேல்ஸ் (Marseilles) கிரேக்க நகரம் நிறுவப்பட்டது.
போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் நீண்ட நிலப் பகுதிகள், யூஃப்ரடீஸ், நைல் போன்ற பெரிய நதிகள் உள்ள நாடுகள், பொதுவான ஆட்சியின் கீழ்வர முயன்றன. இதற்கு உதாரணமாக எகிப்து மற்றும் சுமேரிய நகரங்கள் ஒரே ஆட்சி அமைப்பின் கீழ் இயங்கின. ஆனால் கிரேக்க மக்களோ தீவுகள் மற்றும் மலைப் பள்ளத்தாக்குகளில் பிரிந்து கிடந்தனர். கிரேக்கமும் மேக்னா க்ரேஷியாவும் மலைப் பிரதேசங்கள். வரலாற்றுக்குள் கிரேக்கர்கள் வரும்போது, பல்வேறு சிறு நாடுகளாகப் பிரிந்து கிடநத்தால், ஒரே குடையின் கீழ் அவர்கள் ஒருங்கிணைவதற்கான அறிகுறியே தென்படவில்லை.
ஒரே இனமாக இல்லாமல் ஐயோனிக் (Ionic), ஏயோலின் (Aeolian) அல்லது டோரிக் (Doric) என வேறுபட்டுக் காணப்பட்டனர். இன்னும் சிலர் கிரேக்க மக்களின் கலவையாகவும் முந்தைய கிரேக்க மத்தியதரைக்கடல் நாட்டுப்புற மக்களின் வழித்தோன்றல்களாகவும் திகழ்ந்தனர். இன்னும் சிலர் ஸ்பார்டா நகரத்து ஹீலாட் (Helot) மக்களைப் போன்று, எந்தக் கலவையும் இல்லாத குடிமக்களாக விளங்கினர். சில முத்த தலைமை ஆரியக் குடும்பங்கள் பிரபுத்துவ அந்தஸ்தில் வாழ்ந்தன. சில ஆரியக் குடும்பங்களில் ஜனநாயகம் நிலவியது. சிலவற்றில் தேர்ந்தெடுத்த அல்லது பரம்பரை மன்னர்கள், இன்னும் சிலவற்றில் அபகரித்தவர்கள் அல்லது கொடுங்கோலர்கள் இருந்தனர்.
புவியியல் மற்றும் இயற்கைச் சூழல்கள் கிரேக்க நாடுகளைப் பல்வேறாகப் பிரித்துச் சிறிதாக வைத்தன. கிரேக்கத்தின் பெரிய நாடுகளாகக் கருதப்பட்டவை இங்கிலாந்தின் கௌண்டிகளை விடவும் சிறியவை. பெரும்பான்மை நாடுகளின் மக்கள்தொகை அதிகபட்சம் மூன்று லட்சங்களுக்கும் அதிகமில்லை. இன்னும் சிலவற்றின் மக்கள் தொகை 50,000க்கும் குறைவு. ஒரு சில அம்சங்களில் ஒற்றுமை நிலவினாலும் ஒருங்கிணைப்பு காணப்படவில்லை. பல்வேறு இனங்களாகப் பிரிந்தாலும், இரு விஷயங்கள் கிரேக்கர்களை ஒருமுகப்படுத்தி ஒருங்கிணைத்தன. முதலாவது இலியட், ஒடிஸி ஆகிய காப்பியங்கள் மற்றும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் முக்கியமானவை.
ஒலிம்பிக் போட்டிகள் போரையோ பகையையோ தடுக்கவில்லை என்றாலும், அவ்வகை எண்ணங்களைக் குறைத்தன. இதன் காரணமாக நிலவிய அமைதி, பங்கேற்பாளர்களையும் பார்வையாளர்களையும் ஊக்குவித்து, அச்சமின்றி விளையாட்டுகளைக் காணவும், பாதுகாப்பாகச் சென்று வரவும் உதவின. காலப்போக்கில் எபிரஸ் (Epirus), மேசிடோனியா (Macedonia) உள்ளிட்ட அண்டை நாட்டு விளையாட்டு வீரர்களும் ஒலிம்பிக் போட்டிகளில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
வணிகத்திலும் முக்கியத்துவத்திலும் கிரேக்க நகரங்கள் தொடர்ந்து வளரத் தொடங்கின. கிரேக்க நாகரிகம் பொ.ஆ.மு. 700–600-ல் உச்சத்தைத் தொட்டது. ஏஜியன் மற்றும் ஆற்றங்கரைப் பள்ளத்தாக்கு நாகரிகங்களிலிருந்து கிரேக்கர்களின் சமூக வாழ்க்கை பெரிதும் மாறுபட்டிருந்தது. அற்புதமான கோயில்களைக் கட்டினாலும் பண்டைய உலக நகரங்களில், அறிவுக் களஞ்சியங்களாகவும், சிந்தனைச் சிற்பிகளாகவும் கருதப்பட்ட பூசாரிகளுக்கு இருந்த பாரம்பரியப் பெருமை காணப்படவில்லை.
தலைவர்கள் மற்றும் உயர்குடியில் பிறந்த குடும்பங்கள் இருந்தாலும், அரை-தெய்விக மன்னரோ அவரைச் சுற்றி அரசவையோ இல்லை. அவர்களுடைய ‘ஜனநாயகதில்’ பிரபுத்துவம் நிறைந்திருந்தது. குடிமக்களாகக் கருதப்பட்டவர்கள் பொது விவகாரங்களில் பங்கேற்றனர். ஆனால் எல்லா மக்களுக்கும் குடிமக்கள் என்ற அந்தஸ்து அளிக்கப்படவில்லை. இன்றைய ஜனநாயகத்தில் அனைவருக்கும் வாக்குரிமை இருப்பது போன்று கிரேக்க ஜனநாயகம் இல்லை.
பெரும்பான்மை கிரேக்க ஜனநாயகங்களில் அதிகபட்சம் சில நூறு அல்லது சில ஆயிரம் குடிமக்களே வசித்தனர். ஆனால் ஆயிரக்கணக்கான அடிமைகளும் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களும் இருந்தனர். இவர்கள் அனைவரும் குடிமக்களாகக் கருதப்படாததால், வாக்குரிமையும் கிடையாது; பொது விவகாரங்களில் பங்கேற்கவும் முடியாது. பொது விவகாரங்களைக் கவனிக்கவும் முடிவெடுக்கவும் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே அதிகாரம் உண்டு. அவர்களுடைய மன்னர்களும் கொடுங்கோலர்களும் ஏனைய மனிதர்களைப் போலவே முன்நிறுத்தப்படுவர் அல்லது தலைமையை அபகரித்து முன்னிலைப்படுத்தப்படுவர்.
ஃபேரோ அல்லது மினோ அல்லது மெசொபொடேமியா மன்னர்களைப்போல் இவர்கள் அபரிமித சக்தி கொண்ட அரை-தெய்விக மனிதர்கள் அல்ல. ஏனைய பழைய நாகரிகங்களைப் போலின்றி எண்ணத்துக்கும், அரசுக்கும், கிரேக்கத்தில் சுதந்திரம் நிலவியது. தனித்துவம், நாடோடி வாழ்க்கையின் தனிப்பட்ட முனைவு, ஆகியவற்றைக் கிரேக்கர்கள் தமது நகரங்களில் அறிமுகப்படுத்தினர். வரலாற்றின் முக்கியமான முதல் குடியரசு இவர்களே.
நாகரிகம் குறைந்த போர்முறை நிலையிலிருந்து வெளிப்படும்போது அவர்களது அறிவுசார் வாழ்க்கையில் புதிய விஷயம் தெளிவாவதைக் காண்கிறோம். பூசாரிகளுக்கு மட்டுமே உரிமை கொண்டாடிய அறிவுசார் தேடல் மற்றும் பதிவுகளிலும் வாழ்க்கையின் மர்மங்கள் பற்றிக் கேட்பதிலும் பூசாரிகள் அல்லாதவர்களும் கவனம் செலுத்தினர். பொ.ஆ.மு.6-ம் ஆம் நூற்றாண்டில் பாபிலோனில் இசய்யா தீர்க்கதரினம் வழங்கிய அதே தருணம், மிலெடஸ் நகரின் தாலெஸ் (Thales) மற்றும் அனாக்ஸிமாண்டெர் (Anaximander), எஃபிசஸ் (Ephesus) நகர ஹிராக்ளைடஸ் (Heraclitus) ஆகியோர் இன்றைக்கு நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகம் பற்றியும், உண்மையான இயற்கை குறித்தும், விதி என்றால் என்னவென்றும், கேள்விகள் கேட்டனர். ஏற்கெனவே தயாராக இருந்த முந்தைய பதில்களை ஏற்கவும் மறுத்தனர்.
கிரேக்க மனத்தில் இருந்த பிரபஞ்சம் மீதான கேள்விகள் குறித்து பின்னர் பார்ப்போம். பொ.ஆ.மு.6-ம் நூற்றாண்டில் இதுபோன்ற கேள்விகளைக் கேட்டவர்களே உலகின் முதல் ‘அறிவு விரும்பிகள்’ அல்லது ‘தத்துவ ஞானிகள்’. மனித இன வரலாற்றில் பொ.ஆ.மு. 6-ம் நூற்றாண்டு எத்தனை முக்கியமானது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. உலகம் மற்றும் அதில் வாழும் மனிதன் குறித்த தெளிவான சிந்தனையுடன், முதன் முதலில் ஆய்வைத் தொடங்கியவர்கள் கிரேக்கத் தத்துவ ஞானிகளே. யூத தீர்க்கதரிசனங்களை இசய்யா பிரசாரம் செய்த அதே தருணம், இந்தியாவில் கௌதம புத்தர், சீனாவில் கன்ஃப்யூஷியஸ் மற்றும் லாவோ-ட்சே ஆகியோர் தத்தம் கருத்துகளைப் பரப்பினர். ஏதென்ஸ் தொடங்கி பசிஃபிக் வரை மனித மனம் உச்சநிலையில் இயங்கிக் கொண்டிருந்தது.
24. கிரேக்கர்கள் மற்றும் பாரசீகர்களின் போர்கள்
கிரேக்க நகரங்கள் தெற்கு இத்தாலி மற்றும் ஆசியா மைனர் பகுதிகள் அறிவுசார் கேள்விகளிலும், பாபிலோன் மற்றும் ஜெரூசலத்தின் கடைசி ஹீப்ரூ தீர்க்கதரிசிகள் மனித இனத்துக்கான மனசாட்சி உருவாக்கலிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இத்தருணத்தில், இரு ஆரிய சாகஸக்காரர்களான மெடீஸ் மற்றும் பாரசீகர்கள், பண்டைய உலகின் நாகரிகத்தைக் கைப்பற்றி இருந்தனர். இருவரும் கூட்டாக இணைந்து இதுவரை உலக வரலாறு காணாத பிரமாண்ட பாரசீக சாம்ராஜ்யத்தை உருவாக்கினர். சைரஸ்ஸின் (Cyrus) ஆட்சியில் பாபிலோன் மற்றும் செல்வச் செழிப்பும் புராதன நாகரிகமும் கொண்ட லிடியா ஆகியவை, பாரசீக சாம்ராஜ்யத்துடன் இணைக்கப்பட்டன.
லெவன்ட் (Levant) பிராந்தியத்திலுள்ள ஃபோனீஷிய நகரங்களும் ஆசியா மைனரிலுள்ள கிரேக்க நகரங்களும் கப்பம் செலுத்தும் சிற்றரசுகள் ஆயின. பொ.ஆ.மு. 521-ல் எகிப்தைக் கேம்பைஸஸ் (Cambyses) மற்றும் மெடீயை (Mede) முதலாம் டேரியஸ் ஆகியோர் கைப்பற்றினர். டார்டெனெல்லஸ் (Dardanelles) தொடங்கி சிந்து வரையும் மேலை எகிப்து முதல் மத்திய ஆசியா வரையிலும் அவனது ஆணைக்கு உட்பட்டு இருந்தன.
கிரேக்கம், இத்தாலி, கார்த்தேஜ், சிசிலி, ஸ்பானிஷ் ஃபோனீஷியக் குடியிருப்புகள் பாரசீகத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. இருப்பினும், அவை அனைத்தும் கணிசமான மரியாதையுடன் நடத்தப்பட்டன. ஆனால் தெற்கு ரஷியா மற்றும் மத்திய ஆசியாவிலுள்ள சிதியன்கள் (Scythian) வடக்கு மற்றும் வட-கிழக்கு எல்லைகள் மீது படையெடுத்துத் தொல்லை கொடுத்தனர். ஆனால், இந்தப் பிரம்மாண்ட பாரசீக சாம்ராஜ்யத்தின் மக்கள் அனைவரும் பாரசீகர்கள் அல்ல. அங்குள்ள பெரும்பான்மை மக்களை வென்ற பாரசீகர்கள் சிறுபான்மையினர்.
பாரசீகர்கள் வருவதற்கு முன்பே அங்கு பழங்காலம் தொட்டே வாழும் பூர்வகுடி மக்களே பெரும்பான்மையாக விளங்கினர். அவர்கள் பேசிய பாரசீக மொழியே நிர்வாக மொழியாகும். மத்தியதரைக் கடல் துறைமுக நகரங்களான செமிட்டிக், டயர், சிடான் நகரங்கள் வணிகம் மற்றும் நிதி விவகாரங்களில் சிறந்து விளங்கின.
ஒவ்வொரு இடமாகப் பயணித்துக்கொண்டிருந்த செமிட்டிக் வியாபாரிகளுக்கு ஹீப்ரூ பாரம்பரியம் மற்றும் ஹீப்ரூ எழுத்துகள் மீது ஒருவகை ஈர்ப்பும் வசதியும் ஏற்பட்டன. மேலும் இந்த சாம்ராஜ்யத்தில் மிக வேகமாகப் பரவிய ஓர் அம்சம் கிரேக்கமே. கடலில் செமிட்டிகளுக்குக் கடுமையான போட்டியாக கிரேக்கர்கள் உருவெடுத்தனர். அவர்களுடைய வீரமும் நுண்ணறிவும் மிகப் பெரிய அளவில் உதவின.
சிதியன்களைத் தோற்கடிக்கவே, முதலாம் டேரியஸ் ஐரோப்பாவின் மீது படையெடுத்தார். சிதியன் குதிரை வீரர்களின் தாயகமான தெற்கு ரஷியாவுக்குச் செல்வதே அவரின் திட்டம். மிகப் பெரிய படையுடன் பாஸ்ஃபோரஸ் (Bosphorus) ஜலசந்தியைக் கடந்து பல்கேரியா வழியே டேன்யூப் (Danube) நதியை அடைந்தார். படகுகளால் பாலம் அமைத்து ஆற்றைக் தாண்டினார். ஆனாலும் டேரியஸ் படுதோல்வியைத் தழுவினார்.
அவருடைய சேனையில் காலாட்படை வீரர்களே நிறைந்திருந்தனர். ஆனால் சிதியன் சேனையில் குதிரைப் படை வீரர்கள் அதிகமிருந்த காரணத்தால் காலாட்படை வீரர்களை மிக எளிதாகச் சுற்றி வளைத்தனர். குடிநீர் மற்றும் உணவுப் பொருள்கள் கிடைப்பதைத் தடை செய்யவே, வீரர்கள் தாகத்திலும் பசியிலும் வாடி வதங்கினர். போரில் இறக்காமல் பலர் பசியில் இறந்தனர். எனவே தொடர்ந்து முன்னேற்றமுடியாமல் படைகள் பின்வாங்கத் தொடங்கின. இவ்வாறாக களத்தில் போரிடாமலேயே சிதியன்கள் வெற்றி பெற்றனர்.
சூசா (Susa) நகருக்குத் திரும்பும் வழியில் த்ரேஸ் (Thrace) மற்றும் மேசிடோனியாவில் (Macedonia) படைகளை நிறுத்தினார். மேசிடோனியா எளிதாக டேரியஸிடம் வீழ்ந்தது. இப்படுதோல்வி காரணமாக ஆசியாவிலுள்ள கிரேக்க நகரங்களில் உள்நாட்டுக் கலகம் மூளவே ஐரோப்பிய கிரேக்கர்கள் களமிறங்கினர். ஐரோப்பாவில் கிரேக்கர்கள் அடிபணிவது தொடர்பாக டேரியல் முடிவெடுத்தார்.
ஃபோனீஷியன் படைகள் அவரது கட்டுப்பாட்டில் இருக்கவே, ஒன்றன் பின் ஒன்றாகப் பல தீவுகளைக் கைப்பற்றினார். நிறைவாக பொ.ஆ.மு.490-ல் ஏதென்ஸ் மீது படையெடுத்தார். ஆசியா மைனர் மற்றும் கிழக்கு மத்திரதரைக்கடல் துறைமுகங்களிலிருந்து அவரது கடற்படைக் கப்பல்கள் புறப்பட்டு ஏதென்ஸ் வடக்குப் பகுதியான மாரதானில் (Marathon) நங்கூரமிட்டன. இருப்பினும் ஏதீனியன் படைகளை வெல்ல முடியாமல் டேரியஸ் தோற்றுப் போனார்.
அதே நேரம் எதிர்பாரா விஷயங்களும் அரங்கேறின. கிரேக்கத்தில் ஏதென்களின் பரம விரோதிகளாக விளங்கியவர்கள் ஸ்பார்ட்டன்கள் (Spartan). ஆனால் இப்போது அதே ஏதென்கள், எந்தச் சூழலிலும் கிரேக்கர்கள் என்னும் நாகரிகம் குறைந்தவர்களிடம் அடிமைகளாகாமல் தங்களைக் காப்பாற்ற வேண்டுமென ஸ்பார்ட்டன்களுக்குத் தூது விடுத்தனர். எதிரிகளிடமிருந்து கிரேக்கத்தைப் பாதுகாக்க விரோதங்களை மறந்து இணைந்து செயல்பட விருப்பினர். இந்த ஓலையை எடுத்துக்கொண்டு மிக வேகமாக ஓடும் வீரர் ஒருவர் (இந்த ஓட்டத்தை இப்போது நடைபெறும் ‘மாரதான்’ ஓட்டங்களுக்கு முன்னோடியாகக் கொள்லலாம்) இரண்டே நாள்களில் கிட்டத்தட்ட 100 மைல்களைக் கடந்து சாதனை படைத்தார்.
ஸ்பார்ட்டன்களும் பெருந்தன்மையாக ஏதென்களின் வேண்டுகோளுக்கு இணங்கி உதவி செய்ய முன்வந்தனர். மூன்று நாள்கள் கழித்து ஸ்பார்ட்டன்களின் படைகள் ஏதென்ஸை அடைந்தபோது போர்க்களம் மயான பூமியாகக் காட்சியளித்தது. போரில் உயிரிழந்த பாரசீக வீரர்களின் உடல்கள் குவியல் குவியலாகச் சிதறிக் கிடந்தன. பாரசீகக் கடற்படை ஆசியாவுக்குத் திரும்பியது. கிரேக்கம் மீதான முதல் பாரசீகப் படையெடுப்பு இவ்வாறாக முடிவுற்றது.
இரண்டாவது இன்னும் சுவாரஸ்யமானது. மாரதான் படுதோல்வி டேரியஸைக் கடுமையாகப் பாதிக்கவே உடல் நலம் குன்றி இறந்தார். ஆட்சிக்கு வந்த அவரது மகன் க்ஸெர்ஸெஸ் (Xerxes), கிரேக்கர்களைத் தோற்கடிக்கப் பகை உணர்வு கொண்டவர்களை நான்கு ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருந்தார். கிரேக்கம் மீதான அச்சமே அதற்கு எதிராக அனைவரையும் ஒன்றிணைத்தது. கிரேக்கர்களைத் தோற்கடிக்க க்ஸெர்ஸெஸ் திரட்டிய படைதான் உலக வரலாற்றிலேயே திரண்ட மிகப் பெரிய படை. முரண்பாடான கூறுகளைக் கொண்ட படையாக இருந்தாலும், அதன் ஒரே நோக்கம் கிரேக்கத்தை வெல்வதுதான்.
பொ.ஆ.மு.480-ல் டார்டெனெல்லஸ் (Dardanelles) ஜலசந்தியைக் கடந்து சென்றனர். கூடவே படைகளுக்குத் தேவையான உணவுப் பொருள்களும் எடுத்துச் செல்லப்பட்டன. தெர்மோபைலே (Thermopylae) என்னும் குறுகலான இடத்தில் ஸ்பார்டன் லியோனிடாஸ் தலைமையில் சுமார் 1400 வீரர்கள் கடுமையாக எதிர்த்தும், சமாளிக்க முடியாமல் மரணம் எய்தினர். அனைவரும் கொல்லப்பட்டாலும் இறப்பதற்கு முன் பாரசீக படையீனர் மீது நடத்திய தாக்குதல் வீரத்துக்கான மிகப் பெரிய சான்றாக இருந்தது. க்ஸெர்ஸெஸ் படைகள் தேப்ஸ் மற்றும் ஏதென்ஸ் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுத்தன. தேப்ஸ் சரணடைய, ஏதென்ஸ் மக்கள் ஊரைக் காலி செய்துவிட்டு ஓட்டம் பிடித்தனர். ஏதென்ஸ் தீக்கிரையானது.
கிரேக்கம் எதிரிகளிடம் வீழ்ந்துவிட்டதோ என்று எண்ணிய நிலையில், எதிர்பாராதவிதமாக அனைத்துத் தடைகளையும் தகர்த்து கிரேக்கம் வெற்றிக் கொடி நாட்டியது. பாரசீக கப்பற்படையுடன் ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்குகூட இல்லாத கிரேக்கக் கப்பல் படை, சலமீஸ் (Salamis) வளைகுடாவில் நடைபெற்ற போரில் பாரசீகத்தைத் துவம்சம் செய்தது. க்ஸெர்ஸெஸ் படைகளுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டதில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பாதிப் படைகளுடன் ஆசியாவுக்குத் திரும்ப, மீதிப் படைகள் பொ.ஆ.மு. 479-ல் ப்ளோடோவில் (Plateau) நடைபெற்ற போரில் தோற்றுப் போயின. பாக்கியிருந்த பாரசீக கடற்படையை, ஆசியா மைனரிலுள்ள மைகேலில் (Mycale) கிரேக்கர்கள் அழித்தனர்.
பாரசீகத்தின் அச்சுறுத்தல் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. ஆசியாவிலிருந்த பெரும்பான்மை நகரங்கள் விடுதலை பெற்றன. எழுதப்பட்ட முதல் வரலாற்றுப் பதிவான ‘ஹீரோடோடஸின் வரலாறு’ (History of Herodotus) இதை விரிவாகக் கூறுகிறது. ஆசியா மைனரிலுள்ள ஹாலிகார்னசஸ் (Halicarnassus) நகரில் பொ.ஆ.மு.484-ல் பிறந்த ஹீரோடோடஸ் ஆய்வுகளுக்காகப் பாபிலோன் மற்றும் எகிப்துக்குப் பயணம் செய்தார். பரம்பரை ஆட்சியாளர்கள் பிரச்னை காரணமாக பாரசீகம் குழப்பத்தில் மூழ்கியது. பொ.ஆ.மு. 465-ல் க்ஸெர்ஸெஸ் படுகொலையைத் தொடர்ந்து எகிப்து, சிரியா மற்றும் மீடியாவில் புரட்சி வெடித்தது.
பாரசீகம் பலவீனமடைந்ததால், ஹீரோடோடஸ் வரலாறு அழுத்தத்துக்கு உள்ளானது. அதாவது பாரசீகத்தை வெற்றிகொள்ள கிரேக்கம் ஒன்றிணைந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்னும் நோக்கத்தில், இன்றைக்கு இதைவொரு பிரசார நூலாகவே கருதலாம். ஹீரோடோடஸ் இந்நூலில் அரிஸ்டாகோராஸ் (Aristagorus) என்றொரு கதாபாத்திரத்தை உருவாக்குகிறார். இந்தக் கதாபாத்திரம் கையில் உலக வரைபடத்துடன் ஸ்பார்டன்களிடம் சென்று பின்வருமாறு சொல்வதாக எழுதியுள்ளார் : ‘பார்பேரியக் காட்டுமிராண்டிகள், சண்டையில் நிபுணர்கள் அல்ல. ஆனால் நீங்களோ போர்த்திறனில் நிபுணத்துவம் பெற்றவர்கள். தங்கம், வெள்ளி, வெண்கலம், பூத்தையல் ஆடைகள், விலங்குகள், அடிமைகள் என உலகின் வேறெந்த நாட்டிலும் இல்லாத செல்வங்கள் உங்களிடம் உள்ளன. நீங்கள் விரும்பினால் இவை அனைத்தையும் நீங்களே வைத்துக்கொள்ளலாம்’.
(தொடரும்)
H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.