Skip to content
Home » H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #13

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #13

25. கிரேக்கத்தின் சிறப்பு

பாரசீகம் தோற்கடிக்கப்பட்ட நூற்று ஐம்பது ஆண்டுகளுக்குப் பிந்திய காலமே, கிரேக்க நாகரிகத்தின் மிகப் பெரிய சாதனைக் காலம். ஏதென்ஸ், ஸ்பார்ட்டா மற்றும் ஏனைய நாடுகளுக்கு (பெலோபோனீஷியன் போர் பொ.ஆ.மு.431-404) இடையே ஆட்சியைக் கைப்பற்ற நடைபெற்ற போராட்டங்களில் கிரேக்கம் சிதறியது. பொ.ஆ.மு.338-ல் மேசிடோனியர்கள் கிரேக்கத்தைக் கைப்பற்றினர். இந்தக் காலத்தில் சிந்தனை, படைப்புத்திறன், கலை ஆகியவற்றில் கிரேக்கம் உச்சம் தொட்டது. மனித குலத்துக்கும் ஏனைய உலக வரலாறுகளுக்கும் குன்றிலிட்ட விளக்காக கிரேக்கம் ஒளி வீசியது.

கிரேக்கத்தின் சிறப்புகள் அனைத்துக்கும் மூளையாகவும் இதயமாகவும் விளங்கியது ஏதென்ஸ் நகரம். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக (பொ.ஆ.மு.468-428) கிரேக்கத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர் மனத்தில் வீரியமும் தாராளத்தன்மையும் கொண்ட பெரிகிள்ஸ் (Pericles) என்பவர். பாரசீகத்தினர் தீயிட்டு அழித்த கிரேக்கத்தை அதன் சாம்பலிலிருந்து மீட்டுருவாக்கம் செய்த பெருமை அவருக்குண்டு. இன்றைக்கும் ஏதென்ஸின் சிதிலங்களும் இடிபாடுகளும் ஓரளவுக்கேனும் அழகாக இருக்கின்றன எனில், அந்தப் பெருமை எல்லாம் நகரைப் புனரமைத்த பெரிக்கிள்ஸையே சேரும்.

கல்லையும் மண்ணையும் கொண்டு ஏதென்ஸை உருவாக்காமல் நுண்ணறிவுப்பூர்வமாக மறுகட்டமைத்தார். கட்டடக் கலை வல்லுனர்கள், சிற்பிகள், கவிஞர்கள், நாடக ஆசிரியர்கள், தத்துவ ஞானிகள், ஆசிரியர்கள் ஆகியோரையும் ஆதரித்தார். பொ.ஆ.மு.438-ல் ஹீரோடோடஸ், தான் எழுதிய வரலாற்றை சபை முன் படித்துக்காட்ட ஏதென்ஸுக்கு வந்தார். சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் பற்றிய அறிவியல் விளக்கத்தை அனெக்ஸாகோரஸ் (Anaxagoras) தந்தார். அசிலஸ் (Aeschylus), ஸோஃபோகிள்ஸ் (Sophocles) மற்றும் யூரீபைட்ஸ் (Euripides) ஆகியோர் கிரேக்க நாடகக் கலையை அழகியலோடும் உயர் பண்போடும் உச்சத்துக்கு எடுத்துச் சென்றனர்.

பெலோபோனீஷியன் (Peloponnesian) போர் காரணமாகவும், ஆட்சியைக் கைப்பற்றத் ‘தேவையற்ற’ நீடித்த போராட்டம் தொடங்கிய காரணத்தினாலும், கிரேக்கத்தின் அமைதி குலைந்தது. இருப்பினும், ஏதென்ஸின் நுண்ணறிவு வாழ்க்கைக்கு பெரிகிள்ஸ் அளித்த உத்வேகம், அவரது மரணத்துக்குப் பிறகும் தொடர்ந்தது. இப்படியான அரசியல் நெருக்கடிகள் உண்மையில் அவர்களைப் பலவீனப்படுத்தாமல் ஒருவகையில் விரைந்து துடிப்புடன் செயல்படவே வைத்தது.

பெரிக்கிள்ஸ் காலத்துக்கு முன்பிருந்தே கிரேக்கக் கல்வி நிலையங்களில் விவாதங்களின் திறனுக்கு முக்கியத்துவம் அளித்தன. முடிவெடுக்கும் அதிகாரம் மன்னரிடமோ பூசாரியிடமோ இல்லை. மாறாக மக்கள் கூடும் அவைக்கும் முக்கிய மனிதர்களிடமும் இருந்தது. பேச்சாற்றலும் வாதத் திறனும் விரும்பத்தக்க சாதனைகள் ஆயின. இதன் காரணமாக, இவ்வகைக் கலைகளில் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்க, சோஃபிஸ்ட் (Sophist) என்னும் தத்துவ ஆசிரியர் பிரிவு உண்டானது. பேச்சுக்கலை நுண்ணறிவுக்கு வித்திட்டது. சோஃபிஸ்ட்களின் செயல்பாடுகளும் அவர்களுக்கு இடையேயான போட்டிகளும் இயற்கையாகவே மதிப்புமிக்க சிந்தனைகளுக்கும் வாதங்களுக்கும் வழிவகுத்தன.

பெரிக்கிள்ஸ் மறைவைத் தொடர்ந்து, வாதத்திறமையிலும் விமர்சனத்திலும் சிறந்தவராக சாக்ரடீஸ் பிரபலமடைந்து கொண்டிருந்தார். அறிவுசார்ந்த இளைஞர் பட்டாளம் எப்போதும் அவரைச் சுற்றியிருக்கும். பிழையான வாதங்களின் தீவிர விமர்சகராக அவர் இருந்தார். சோபிச்ட்களின் வாதங்கள் பெரிதும் பிழையானவையாகவே இருந்தன. எனவே இறுதியில் மக்கள் மனங்களைக் குழப்பும் கலகக்காரன் எனக் குற்றம் சுமத்தி அவருக்கு மரண தண்டனை (பொ.ஆ.மு.399) விதிக்கப்பட்டது. அக்கால ஏதென்ஸ் மரண தண்டனை முறைகளின்படி, கைதி தானே விஷத்தை அருந்தித் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். சாக்ரடீஸும் அவ்வாறே ஹெம்லாக் (Hemlock) என்னும் ஒருவகை நஞ்சுச் செடி இலைச்சாற்றைக் குடித்து மரணத்தைத் தழுவினார். இருப்பினும் அவரது இறப்புக்குப் பின்னரும் மக்களிடையே அவரது கொள்கைகளை மாணவர்கள் பரப்பிக் கொண்டிருந்தனர்.

சாக்ரடீஸின் மாணவர்களுள் முக்கியமானவர் பிளோட்டோ (பொ.ஆ.மு.427-347) அகாடமியில் தத்துவ ஆசிரியராகப் போதித்துக் கொண்டிருந்தார். மனித சிந்தனையின் அடிப்படைகளும் முறைகளும் மற்றும் அரசியல் அமைப்புகளின் பரிசோதனைகள் என அவரது போதனைகளை இரு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். உடோபியா (Utopia) என்னும் கற்பனை உலகு பற்றி முதன் முதலில் எழுதியவர் பிளோட்டோ. ஏற்கெனவே உள்ள சமூகத்தை விடவும் சிறப்பான சமூகத் திட்டத்தைக் கனவு கண்டார். தற்போதைய சமூகப் பாரம்பரியங்கள், நடைமுறைகள், பற்றி யாருமே கேள்வி கேட்காத நிலையில், புதிய சமூகம் பற்றிய அவரது துணிச்சலான பதிவுகள் முன்னெப்போதும் யாருமே செய்யாதது.

மனித இனத்துக்குப் பிளேடோ சொன்ன அறிவுரை ‘நீங்கள் படும் துன்பங்களுக்குக் காரணமான பெரும்பான்மை சமூக மற்றும் அரசியல் கேடுகள் அனைத்தும் உங்கள் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. ஆனால் அவற்றை மாற்றும் திண்மையும், மன உறுதியும் உங்களிடம் இருக்க வேண்டும். சிந்தித்துச் சிறப்பாகச் செயல்பட்டால், அறிவார்த்த முறையில் நீங்கள் வாழலாம். உங்களிடம் புதைந்திருக்கும் ஆற்றல் குறித்த விழிப்புணர்வு உங்களுக்கில்லை’.

இது உயரிய சாகச போதனை. நமது இனத்தின் பொதுவான நுண்ணறிவுக்குள் இன்னும் ஆழமாக ஊடுருவவில்லை. அவரது ஆரம்பகால படைப்புகளுள் ஒன்றான ‘குடியரசு’ (Republic), ஒரு கம்யூனிஸ்ட் அதிகாரவர்க்கத்தின் கனவு. முடிவுறாத அவரது கடைசி படைப்பான ‘சட்டங்கள்’ (Laws), மற்றுமொரு கனவு உடோபியன் நாட்டுக்கான சட்ட விதிகளாகும்.

பிளேடோவின் மரணத்தைத் தொடர்ந்து அவரது மாணவரும், லைசியம் (Lyceum) பள்ளி ஆசிரியருமான அரிஸ்டாடில் (Aristotle) சிந்தனை மற்றும் அரசு முறைகள் பற்றிய விமர்சனங்களைத் தொடர்ந்தார். மேசிடோனியாவில் உள்ள ஸ்டாகிரா (Stagira) நகரைச் சேர்ந்தவர் அரிஸ்டாடில். அவரது தந்தை மேசிடோனியா மன்னரின் அரசவை மருத்துவர். சிறிது காலம் மேசிடோனிய இளவரசன் அலெக்சாண்டரின் ஆசிரியராக அரிஸ்டாடில் இருந்தார். மிகப் பெரிய சாதனைகள் புரிந்த அலெக்சாண்டர் பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

சிந்தனை முறைகள் குறித்து தர்க்க அறிவியலை உள்ளடக்கிய அரிஸ்டாடிலின் பணிகள் அடுத்த 1500 ஆண்டுகளுக்கும் அதிகமாக மக்களிடையே பரவலாகப் பேசப்பட்டன. பின்னர் வந்த இடைக்கால அறிவுசார் பெருமக்கள் பண்டைய கேள்விகளை மீண்டும் எழுப்பினர். அவர் எந்த வகையான உடோபியன் கனவு சமூகத்தையும் காணவில்லை. பிளேட்டோ கருத்தியலின்படி, எந்தவொரு மனிதனுக்கும் தனது விதியைத் தானே கட்டுப்படுத்த, ஏற்கெனவே உள்ள அறிவைத் தாண்டி, இன்னும் நுணுக்கமான அறிவு தேவையென உணர்ந்தார்.

அரிஸ்டாடில் குறிப்பிடும் முறையான அறிவுசார் தொகுப்பே இன்றைக்கு நாம் கூறும் ‘அறிவியல்’ ஆகும். உண்மை விவரங்களைச் சேகரிக்கப் பல இடங்களுக்கு ஆய்வாளர்களை அனுப்பினார். ‘இயற்கை வரலாற்றுக்கான தந்தை’ எனப் போற்றப்படுகிறார். ‘அரசியல் அறிவியல்’ நிறுவனரும் அவரே. லைசியம் பள்ளியில் படித்த அவரது மாணவர்கள் அப்போது நிலவிய 158 நாடுகளின் அரசியல் அமைப்புச் சட்டங்களை ஆய்ந்தும் ஒப்பிட்டும் பார்த்துள்ளனர்.

பொ.ஆ.மு.4-ம் நூற்றாண்டில் ‘நவீன சிந்தனைவாதிகள்’ பலர் இருந்ததைக் காண்கிறோம். வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்க்க, குழந்தைத்தனமான, கனவு போன்ற பழைமைச் சிந்தனைகளை ஒதுக்கி, கட்டுப்பாடான மற்றும் தீவிர விமர்சனங்களுக்கு வழிவகுத்தனர். இதுவரை இடையூறு விளைவித்த விசித்திரமான & பயங்கரமான குறியீடுகள், கற்பனைத் தெய்வங்கள் & அரக்கர்கள், தடைகள், பிரமிப்புகள் & கட்டுப்பாடுகள் உள்ளிட்ட அனைத்தும் முழுமையாகப் புறந்தள்ளப்பட்டன. சுதந்திரமான, துல்லியமான மற்றும் முறையான சிந்தனை தொடங்கியது. வடக்கிலிருந்து வந்த இவர்களின் புத்துணர்வும் இடையூறில்லாத மனமும் கோயில்களின் மர்மங்களுக்குள் தன்னைத் திணித்துக்கொண்டு புத்தொளியைப் பாய்ச்சியது.

26. மாவீரன் அலெக்சாண்டர்

பொ.ஆ.மு.413-404-ல் நடைபெற்ற பெலோபோனீஷியன் போர்கள் கிரேக்கத்தை வீழ்த்தின. இதற்கிடையே வடக்கு கிரேக்கத்தில் உள்ள மேசிடோனியாவின் உறவு நாடு, ஆற்றலிலும் நாகரிகத்திலும் மெதுவான மற்றும் சீரான வளர்ச்சியைப் பெற்றிருந்தது. மேசிடோனியர்கள் பேசிய மொழி கிரேக்கத்துக்கு நெருக்கமாக இருந்ததால், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் மேசிடோனிய வீரர்கள் பல முறை பங்கேற்றுள்ளனர். பொ.ஆ.மு.359-ல் மிகப் பெரிய திறமைகள் மற்றும் நோக்கங்களுடன் அந்தச் சிறிய நாட்டுக்கு ஒருவர் மன்னனார். அவர்தான் ஒரு காலத்தில் கிரேக்கத்தில் பிணைக்கைதியாக இருந்த ஃபிலிப்ஸ் (Philips). முழுக்க முழுக்க கிரேக்க கல்வி முறையைப் பயின்று வளர்ந்ததால், ஹீரோடோடஸ் எண்ணங்கள் குறித்த விழிப்புணர்வும் அவருக்கு இருந்தது. ஒருங்கிணைந்த கிரேக்கத்தால் ஆசியாவை வெற்றிகொள்ளமுடியும் என்னும் ஐசோக்ரேட்ஸ் (Isocrates) சிந்தனையும் அவருள் ஊறியிருந்தது.

ஃபிலிப்ஸ் முதலில் தனது ராணுவத்தை மறுசீரமைத்து விரிவுபடுத்தினார். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகக் குதிரைகள் பூட்டப்பட்ட தேர்களே போர்களின் முடிவை நிர்ணயிப்பவையாக இருந்தன. மிக நெருக்கமாகப் பெரும் எண்ணிக்கையில் போரிடத் தனது காலாட்படைக்கு மேசிடோனிய முறையில் வியூகம் அமைத்துப் பயிற்சி அளித்தார். கட்டுப்பாடின்றித் தன்னிச்சையாகச் சண்டை போட்டுக்கொண்டிருந்த குதிரை வீரர்களை ஒன்றிணைத்துக் குதிரைப்படையை அமைத்தார். எனவேதான், ஃபிலிப்ஸ் மற்றும் அவரது மகன் அலெக்ஸாண்டர் நடத்திய போர்களில் குதிரைப்படையே முக்கியப் பங்கு வகித்தது. முன்பக்கம் எதிரியின் காலாட்படையை ஃபிலிப்ஸின் வியூகம் முன்னேறவிடாமல் தடுக்க, குதிரைப்படை சுற்றி வளைத்துப் பின்பக்கமாகக் காலட்படையையும் குதிரைகளையும் துவம்சம் செய்தது. வீரர்களின் வில்லிலிருந்து சீறிப் பாய்ந்த கணைகள், குதிரைகளை வீழ்த்தித் தேர்களைத் தவிடுபொடியாக்கின.

புதிய வியுகத்துடன் கட்டமைக்கப்பட்ட ராணுவ பலத்துடன் ஃபிலிப்ஸ் தனது எல்லைகளை தெஸ்ஸாலி (Thessaly) வழியாக கிரேக்கம்வரை விரிவுபடுத்தினார். பொ.ஆ.மு.338-ல் ஏதென்ஸ் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கும் எதிராக நடைபெற்ற செரோனியா (Chaeronia) போரில் கிரேக்கம் அவரது காலடியில் வீழ்ந்தது. ஹீரோடோடஸ் (Herodotus) கனவும் கணிப்பும் உண்மையாகின. பாரசீகத்துக்கு எதிரான க்ரேகோ-மேசிடோனியா (Graeco-Macedonia) கூட்டமைப்பின் தலைமைத் தளபதியாக கிரேக்க நாடுகள் ஒரு மனதாக ஃபிலிப்ஸை நியமித்தன.

பொ.ஆ.மு.336-ல் ஆசியாவுக்குப் படைகளைத் திரட்டிக்கொண்டு செல்கையில், ஃபிலிப்ஸ் தனது சொந்த மெய்க்காப்பாளராலேயே கொல்லப்பட்டார். ஃபிலிப்ஸ் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதால் கோபடைந்த அவரது மனைவியும் அலெக்ஸாண்டரின் தாயுமான ஒலிம்பியாஸ் (Olympias), திட்டமிட்டு அவரைக் கொன்றதாகச் சொல்லப்படுகிறது. ஏராளமான பெண்களைத் திருமணம் செய்துகொண்டு பல பிள்ளைகளைப் பெற்றாலும், மற்றவர்களைவிடவும் அலெக்ஸாண்டர்மீது ஃபிலிப்ஸுக்குத் தனிப்பற்றும் பாசமும் இருந்தது உண்மையே. குறிப்பாக அலெக்ஸாண்டருக்குச் சிறப்பான கல்வியை வழங்கவேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்தினார். உலகப் பெரும் தத்துவஞானியான அரிஸ்டாடிலிடம் பாடம் கேட்கத் தனது மகனை அனுப்பி வைத்தார். இருப்பினும் அலெக்ஸாண்டர் மாவீரனாக வேண்டும் என்னும் ஆசையில், தனது எண்ணங்களை அவனுடன் பகிர்ந்து கொண்டதுடன், ராணுவ அனுபவத்தையும் ஃபிலிப்ஸ் திணித்தார்.

செரோனியா குதிரைப்படைக்குப் பதினெட்டு வயதே நிரம்பிய அலெக்ஸாண்டர் தலைமை தாங்க அனுப்பி வைக்கப்பட்டார். எனவே தந்தையின் மறைவின்போது, இருபதே வயது இளைஞனான அலெக்ஸாண்டருக்குப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் எந்தத் தயக்கமும் ஏற்படவில்லை. தந்தை ஃபிலிப்ஸின் கனவை நனவாக்க, பாரசீக சாகசப் பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கினார். மேசிடோனியா மற்றும் கிரேக்கத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும் உறுதிப்படுத்தவும் பொ.ஆ.மு.334-ல் தொடங்கி இரு ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆசியாவில் நுழைந்து கிரேனிகஸ் (Granicus) போரில் பாரசீகத்தைத் தோற்கடித்ததுடன், ஆசியா மைனரிலுள்ள ஏராளமான சிறு நகரங்களையும் கைப்பற்றினார்.

கடற்கரையோர நகரங்களைக் கைப்பற்றுவதில் தீவிரம் செலுத்தினார். டயர் மற்றும் சிடான் துறைமுக நகர கப்பல்கள் மீது பாரசீகர்கள் ஆதிக்கம் செலுத்தியதால், கடற்கரையோரக் காவலை அதிகரிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஒருவேளை அப்படிச் செய்யாதிருந்தாலும் பாரசீகப் படைகள் பலத்த சேதத்தை ஏற்படுத்திருக்கும். பொ.ஆ.மு.333-ல் நடைபெற்ற இஸ்ஸஸ் (Issus) போரில் மூன்றாம் டேரியஸின் (Darius) பெரும்படையைத் தோற்கடித்தார். நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு டார்டெனெல்லஸ் (Dardanellus) ஜலசந்தியைக் கடந்து க்ஸெர்ஸெஸ் (Xerxes) சென்றபோது இருந்ததைப்போன்று, பொருத்தமற்ற குழுக்களின் குவியலாகவும் ஏராளமான நீதிமன்ற அதிகாரிகளாலும் அந்தப்புர மகளிர்களாலும் சூழப்பட்டு இருந்தது.

சிடான் உடனடியாகச் சரணடைந்தது. ஆனால் டயர் பிடிவாதமாக மல்லுக்கட்டியது. நிறைவாக அலெக்ஸாண்டரின் படைகள் நகருக்குள் ஊடுருவி, கொள்ளையடித்துத் தீக்கிரையாக்கியது. காஸா (Gaza) நகரும் இதேபோல் அழிவைச் சந்தித்தது. பொ.ஆ.மு.332-ல் பாரசீகர்களைத் தோற்கடித்து அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்த எகிப்தைக் கைப்பற்றினார். அலெக்ஸாண்ட்ரெட்டா (Alexandretta) மற்றும் அலெக்ஸாண்ட்ரியா (Alexandria) நகரங்களைப் புனரமைத்துப் பிரமாண்டமாகக் கட்டினார். ஃபோனீஷிய நகரங்களின் வணிகத்தை இந்நகரங்களுக்குத் திருப்பிவிட்டார். மத்தியதரைக் கடல் ஃபோனீஷிய நகரங்கள் திடீரென வரலாற்றிலிருந்தே காணாமல்போக, அலெக்ஸாண்ட்ரிய யூதர்கள் மற்றும் அலெக்ஸாண்டர் நிறுவிய புதிய நகரங்கள் தோன்றின.

பொ.ஆ.மு.331-ல் அலெக்ஸாண்டர் தனது முன்னோர்களான தொத்மீஸ் (Thothmes), ரமேசெஸ் (Rameses) மற்றும் நேச்சோ (Necho) ஆகியோரைப்போல் எகிப்திலிருந்து பெரும்படையுடன் பாபிலோன் நோக்கிப் புறப்பட்டார். நினெவே இடிபாடுகளுக்கு அருகேயுள்ள ஆர்பெலா (Arbela) என்னும் இடத்தில் டேரியஸுடன் போர் மூண்டது. முன்னேறும் அலெக்ஸாண்டரின் படைகளைத் தடுக்க டேரியஸ் எந்த முயற்சியும் எடுக்காமல் வடக்கு நோக்கி மெடீஸ் நகருக்குத் தப்பி ஓடினார். பாபிலோன், சூஸா, பெர்செபோலிஸ் (Persepolis) எனத் தொடர்ச்சியாக அலெக்ஸாண்டரின் படை வெற்றிகளைக் குவித்தது. வெற்றி விழா மதுபானக் களியாட்டத்துக்குப் பிறகு, மன்னர்களின் மன்னர் எனப் போற்றப்பட்ட டேரியரிஸின் அரண்மனை தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

பாரசீக சாம்ராஜ்யம் பரவியிருந்த பகுதிகள் முழுவதும், குறிப்பாக மத்திய ஆசியாவில், தனது படைகளை அணிவகுத்துச் சென்றார் அலெக்ஸாண்டர். தப்பிச்சென்ற டாரியஸை அவரது மக்களே கொன்றுவிட, அவரது பிணத்தைத்தான் அலெக்ஸாண்டரால் பார்க்க முடிந்தது. காஸ்பியன் கடலோரமாக மேற்கு துர்கெஸ்தான் (Turkestan) மலைப்பகுதியை அடைந்தார். அங்கிருந்து ஹெராட் (Hearat), காபூல் (Kabul) மற்றும் கைபர் கணவாய் (Kyber Pass) வழியே இந்தியாவுக்குள் நுழைந்தார்.

சிந்து நதிக்கரையில் அலெக்ஸாண்டருக்கும் இந்திய மன்னன் மாவீரன் போரஸுக்கும் (Porus) இடையே போர் மூண்டது. மேசிடோனிய வீரர்கள் முதன் முறையாக யானைப் படையைச் சந்தித்தனர் என்றலும் போரில் வெற்றி பெற்றனர். கப்பல்கள் மூலம் சிந்து நதி முகத்துவாரம் நோக்கிப் பயணித்து பலுசிஸ்தான் கடற்கரையோரமாக சூசாவை (Susa) அடைந்தார். சற்றேறக் குறைய ஆறு ஆண்டுகள் இடைவெளியில் பொ.ஆ.மு. 324-ல் மீண்டும் சூசாவுக்குள் நுழைந்தார். தான் வென்றேடுத்த பிரம்மாண்ட சாம்ராஜ்யத்தை ஒருங்கிணைத்துக் கட்டமைத்தார். மேலும் பல ராஜ்ஜியங்களை வெற்றிகொள்ள வியூகங்களையும் வகுத்தார்.

பாரசீக மன்னனைப்போல் நீண்ட அங்கிகளையும் தலைப்பாகையையும் அணிய ஆரம்பித்த போது, எனைய மேசிடோனிய தளபதிகள் அலெக்ஸாண்டரைப் பார்த்துப் பொறாமைத் தீயில் வெந்தனர். அலெக்ஸாண்டருக்கும் தளபதிகளுக்கும் இடையே நிலவிய நல்லுறவில் திடீரென விரிசல் விழுந்தது. அவர்களைச் சமாதானப்படுத்தப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். மேசிடோனிய தளபதிகளுக்குப் பாரசீக மற்றும் பாபிலோனிய பெண்களைத் திருமணம் செய்து வைத்தார்: ‘கிழக்குக்கும் மேற்குக்கும் இடையேயான கல்யாணம்’.

ஆனால், திட்டமிட்டபடி தனது பிரமாண்ட சாம்ராஜ்யத்தை ஒருங்கிணைத்துக் கட்டமைக்க வேண்டுமென்ற அலெக்ஸாண்டரின் விருப்பம் மட்டும் நிறைவேறவே இல்லை. அவர் அருந்திய மதுபானத்தால் காய்ச்சல் ஏற்பட்டு பொ.ஆ.மு.323-ல் பாபிலோனில் மரணத்தைத் தழுவினார். அலெக்ஸாண்டரின் திடீர் இறப்பைத் தொடர்ந்து அவரது பாந்து விரிந்த சாம்ராஜ்யம் சீட்டுக் கட்டைப்போல் சரிய ஆரம்பித்தது.

சிந்து முதல் எஃபிசஸ் (Ephesus) வரையிலான அலெக்ஸாண்டரின் பழைய பாரசீக சாம்ராஜ்யத்தின் பெரும் பகுதியை அவரது முக்கியத் தளபதிகளுள் ஒருவரான செல்யூகஸ் (Seleucus) கைப்பற்றினார். மற்ற தளபதிகளான டோலெமி (Ptolemy) எகிப்தையும், ஆண்டிகோனஸ் (Antigonus) மேசிடோனியாவையும் ஆக்கிரமித்துக்கொண்டனர். சாம்ராஜ்யத்தின் ஏனைய பகுதிகளில் புரட்சி வெடிக்க, அதை அடக்க ஆளின்றி, உள்ளூர் தலைவர்களின் கைகளில் அதிகாரம் சென்றது. வடக்கிலிருந்து ஊடுருவிய காட்டுமிராண்டிகள் கொள்ளையடித்துத் தங்கள் எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டனர். நிறைவாக மேற்கிலிருந்து வந்த ஓர் அதிகாரமையம் துண்டு துண்டாகச் சிதறிக் கிடந்த ராஜ்யங்களை அடிபணியவைத்து ஒருங்கிணைத்துப் புதிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியது. அதுதான் ரோமானிய சாம்ராஜ்ஜியம்.

(தொடரும்)

H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
ஜனனி ரமேஷ்

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *