Skip to content
Home » H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #14

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #14

27. அலெக்ஸாண்டிரியாவில் அருங்காட்சியகம் மற்றும் நூலகம்

அலெக்ஸாண்டரின் வருகைக்கு முன்பே கிரேக்கர்கள் வாணிகர்கள், கலைஞர்கள், அதிகாரிகள், கூலிப்படை வீரர்கள் என பாரசீகத்தின் பெரும்பான்மைப் பகுதிகளில் பரவியிருந்தனர். க்ஸெர்ஸெஸ் மரணத்தைத் தொடர்ந்து ஆட்சியைக் கைப்பற்ற ஏற்பட்ட வம்ச மோதல்களில், 10,000க்கும் அதிகமான கிரேக்க கூலிப்படையினர் க்ஸெனோஃபன் (Xenophon) தலைமையில் திரண்டு முக்கியப் பங்களித்தனர். பாபிலோனிலிருந்து இவர்கள் ஏஷியாடிக் கிரேக்கத்துக்குத் திரும்பிய போர்க் கதைகளைப் ’பத்தாயிரத்தின் திரும்ப வருதல்’ (Retreat of the Ten Thousand) என்னும் தலைப்பில் வரலாற்றுப் பதிவாக முதன் முதலில் எழுதிய படைத் தளபதி இவரே.

அலெக்ஸாண்டரின் வெற்றிகளும் அவரது மரணத்தைத் தொடர்ந்து தளபதிகள் சாம்ராஜ்யத்தைப் பிரித்துக்கொண்டதும், கிரேக்கர்களின் வீரம், பண்பாடு, நவீனம் ஆகியவை பண்டைய உலகில் ஊடுருவப் பெருமளவு உந்து சக்தியாக விளங்கின. தொலை தூர மத்திய ஆசியாவிலும் வட மேற்கு இந்தியாவிலும் கிரேக்கப் பரவலின் தடையங்கள் காணப்பட இதுவே காரணம். இந்தியக் கலைகளின் வளர்ச்சியில் கிரேக்கத்தின் செல்வாக்கும் ஆதிக்கமும் ஆழமாக ஊடுருவியுள்ளது.

பல நூற்றாண்டுகளுக்கு ஏதென்ஸ் கலை மற்றும் கலாச்சார மையமாகப் பெருமைமிகு இடத்தைத் தக்கவைத்துக்கொண்டது. அவர்களது பள்ளிகள் பொ.ஆ. 529 வரை சற்றேறக் குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு நீடித்தன. ஆனால், தற்போது அறிவுசார் செயல்பாடுகளின் தலைமைப் பண்பு, மத்தியதரைக்கடல் தொடங்கி அலெக்ஸாண்டர் நிறுவிய புதிய வணிக நகரான அலெக்ஸாண்ட்ரியா வரை பாவியிருந்தது. இங்கே மேசிடோனிய தளபதி டோலெமி (Ptolemy) ஃபேரோ ஆனார். அவரது அரசவையின் மொழி கிரேக்கம். அலெக்ஸாண்டர் அரசராவதற்கு முன்பே அரிஸ்டாடிலிடம் ஒன்றாகப் படித்த சக மாணவன் என்ற முறையில் அவருடன் டோலெமிக்கு நெருக்கம் அதிகம். ஆற்றலும் நுண்ணறிவும் புலனாய்வுத் திறனும் கொண்டவர். அலெக்ஸாண்டரின் படையெடுப்புகள் பற்றி டோலெமி எழுதிய வாலாறுப் பதிவுகள் கால வெள்ளத்தில் காணாமல் போனது பெரும் சோகம்.

அரிஸ்டாடிலின் உபதேசங்களைப் பரப்ப அலெக்ஸாண்டர் போதிய நிதி உதவிகளை வழங்கினார். ஆனால் முதலாம் டோலெமிதான் அறிவியலுக்கான அறக்கட்டளையை நிறுவினார். அலெக்ஸாண்ட்ரியாவில் ஓர் அமைப்பை நிறுவி அதை ம்யூஸெஸ் (Muses) என அழைக்கப்படும் அலெக்ஸாண்ட்ரியா அருங்காட்சியகத்துக்கு அர்ப்பணித்தார். இதைத் தொடர்ந்து அடுத்த மூன்று அல்லது நான்கு தலைமுறைகளுக்கு அலெக்ஸாண்ட்ரியாவில் நடைபெற்ற அறிவியல் ஆய்வுகள் சிறப்பாக இருந்தன.

பூமியின் அளவு குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட யூக்ளிட் (Euclid) மற்றும் எராடோஸ்தெனெஸ் (Eratosthenes) அதன் உண்மையான குறுக்களவுக்கு 50 மைல்கள் வரை வந்துவிட்டார். அப்போலோனியஸ் (Apollonius) கூம்புப் பிரிவுகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார். ஹிப்பார்கஸ் (Hipparchus) முதல் நட்சத்திர வரைபடத்தையும் அட்டவணையையும் வரைந்தார். முதல் நீராவி எந்திரத்தை ஹீரோ வடிவமைத்தார். இவர்கள் அனைவரையுமே அறிவியல் முன்னோடிகள் எனலாம். சைராக்யூஸ் (Syracuse) நகரிலிருந்து அலெக்ஸாண்ட்ரியாவுக்குப் படிக்கவும், ஆய்வுகளை மேற்கொள்ளவும் வந்த ஆர்க்கிமிடீஸ் (Archimedes) அருங்காட்சியகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

கிரேக்க உடற்கூறு வல்லுனர்களுள் சிறந்தவராகக் கருதப்படும் ஹீரோஃபிலஸ் (Herophilus) ஆய்வுகளுக்காக உயிருள்ள விலங்குகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. முதலாம் மற்றும் இரண்டாம் டோலெமி ஆட்சிகளின்போது அலெக்ஸாண்ட்ரியா அறிவிலும் கண்டுபிடிப்புகளிலும் உச்சத்தைத் தொட்டது. பொ.ஆ.16-ம் நூற்றாண்டு வரை பெருமளவில் உலகம் இவைபோல் வேறெங்கும் காணவில்லை. அலெக்ஸாண்டிரியாவிலும் இவை தொடராமைக்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

மறைந்த பேராசிரியர் மஹாஃபி (Mahaffy) ஆய்வின்படி ‘அலெக்ஸாண்ட்ரியா அருங்காட்சியகம் மன்னருக்குச் சொந்தமானது என்பதால் அங்குள்ள பணியாளர்கள் நியமனம் தொடங்கி ஊதியம் வழங்குவது வரை ஃபேரோதான். முதலாம் டோலெமி மற்றும் அவனது நண்பர் அரிஸ்டாடில் உயிரோடு இருந்தவரை அனைத்தும் சீராகச் சென்றன. ஆனால், காலப்போக்கில் டோலெமிக்களின் பரம்பரை எகிப்தியமயமானது. எகிப்திய பூசாரிகள், எகிப்திய மதம் என முற்றிலும் பாதை மாறியதால், அருங்காட்சியகத்தின் பணிகள் பொ.ஆ.1-ம் நூற்றாண்டு தொடங்கி மெல்ல மெல்லக் குறைந்து, பின்னர் முற்றிலுமாக நின்றே போனது’ என்கிறார்.

அறிவுசார்ந்த மக்கள் மற்றும் தந்துவ ஞானிகளை நாடிய முதலாம் டோலெமியின் அறிவுத் தேடல் பாராட்டத்தக்கது. அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தில் ஞானக் கலைக்களஞ்சியத்தை நிறுவினார். நூல்களைப் படியெடுக்கும் இடமாகவும் நூலகளின் விற்பனைக்கூடமாகவும் விளங்கியது. நூல்களை மூல ஏட்டிலிருந்து நகலெடுக்கும் பணிக்காகப் பலர் பணியமர்த்தப்பட்டிருந்தனர். அருங்காட்சியகமும் நூலகமும் மனித வரலாற்றின் மிகப் பெரிய சகாப்தங்களுள் ஒன்று. நவீன வரலாற்றின் உண்மையான தொடக்கம் இதுவே.

ஆனால் ஆய்வு மற்றும் பரவலாக்கும் பணிகள் சீராகத் தொடரமுடியாமல் பல்வேறு இடர்களுக்கு உள்ளாயின. இவற்றுள் முக்கியமானது தத்துவாதியைப் பிரித்த மிகப் பெரிய சமூக இடைவெளி. வணிகர், கைவினைக் கலைஞர், உலோகம் மற்றும் கண்ணாடிப் பணியாளர்கள் என உடலுழைப்பில் கவனம் செலுத்திய இவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால், மனதளவில் சிந்தனையாளர்களுடன் இணையவில்லை.

அழகான வண்ண வண்ணக் கண்ணாடி மணிகளையும் சிமிழ்களையும் தயாரித்தார்கள். ஆனால் கண்ணாடிக் குடுவைகளையும் பூதக் கண்ணாடிகளையும் உருவாக்கவில்லை. தெளிவாக ஊடுருவிப் பார்க்கும் கண்ணாடிகள் ஏனோ அவர்களை ஈர்க்கவில்லை. ஆயுதங்களையும் அணிகலன்களையும் உருவாக்கிய உலோகப் பணியாளர்கள், இரசாயனச் சமநிலையை அறியவில்லை. அணு மற்றும் இயற்கைப் பொருள்கள் குறித்து கணிக்கத் தெரிந்த தத்துவவியலாளருக்குப் பற்சிப்பிகள், நிறமிகள் பற்றிய நடைமுறை அனுபவமில்லை. எனவே நுண்ணோக்கிகள் இல்லை. ஹீரோ (Hero) நீராவி எந்திரத்தைக் கண்டுபிடித்தாலும், தண்ணீர் ஏற்றி இறைக்கவோ படகைச் செலுத்தவோ பயன்படுத்தப்படவில்லை. மருத்துவத்தில் மட்டும் அறிவியல் செய்முறை சிறிதளவு காணப்பட்டது.

அறிவியல் பெரிய அளவுக்கு ஊக்கம் பெறாவிட்டாலும், தனிநபர்களின் செய்முறைகளாலும் ஆர்வங்களாலும் நீடித்தது. முதலாம் மற்றும் இரண்டாம் டோலெமிக்களின் மறைவுக்குப் பின்னர், அறிவுசார் ஆர்வலர்களும் ஊக்குவிப்போரும் இல்லாமல் போனது. அருங்காட்சியகத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை தெளிவற்ற கையெழுத்துப் பிரதிகளாகப் பதிவாயின. அறிவியல் மறுமலர்ச்சி ஏற்பட்ட பிறகே மக்களைப் பரவலாகச் சென்றடைந்தது.

நூலகம் இருந்தாலும் புத்தகத் தயாரிப்பில் எந்த முன்னேற்றமும் செலுத்தவில்லை. கூழிலிருந்து பல்வேறு அளவுகளில் காகிதம் செய்யும் தொழில்நுட்பம் பண்டைய உலகில் கிடையாது. சீனாவின் கண்டுபிடிப்பான காகிதம் பொ.ஆ.9-ம் நூற்றாண்டுவரை மேற்கத்திய உலகுக்கு வரவில்லை. பதப்படுத்திய ஆட்டுத்தோல், பாபிரஸ் எனப்படும் நாணல் கீற்றுகளில் எழுதுவார்கள். பிறகு அவற்றின் முனைகள் துளையிடப்பட்டு ஒரே கட்டாகக் கட்டப்படும். இவையே அக்காலத்திய புத்தகங்கள்.

முனைகளைக் கட்டிச் சுருட்டுவதால் அவற்றை முன்னும் பின்னுமாகப் புரட்டிப் படிப்பது அவ்வளவு சுலபமான விஷயமும் அல்ல. பண்டைய சுமேரியாவில் முத்திரைகள் இருந்தன. அச்சு வசதி இருந்தாலும், காகிதம் என்னும் முக்கியப் பொருள் கண்டுபிடிக்கப்படாத காரணத்தால், புத்தகங்களை அச்சிடுவது சாத்தியமே இல்லாமல் போனது. அப்படியே அச்சு வசதி கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், நகல் எடுப்போரின் வேலை வாய்ப்புகள் பறிபோகும் என்பதால், தொழிற்சங்கம் அதைத் தடுத்து நிறுத்தியிருக்கும். மேற்கண்ட முறையில் அலெக்ஸாண்ட்ரியா ஏராளமான புத்தகங்களைத் தயாரித்தது. ஆனால் அவை அதிக விலைக்கு விற்கப்பட்டதால், வசதியும் செல்வாக்கும் படைத்தவர்களே வாங்கும் தகுதியைப் பெற்றிருந்தனர்.

முதலிரண்டு டோலெமிக்களின் ஆதரவு பெற்ற தத்துவாதிகளுடன் தொடர்புள்ள மக்களின் சிறிய வட்டத்தைத் தாண்டி, அறிவுசார் விஷயங்கள் செல்லவே இல்லை. குடத்திலிட்ட விளக்காக வெளி உலகுக்குத் தெரியாமல் உள்ளுக்குளேயே எரிந்து கொண்டிருந்தது. இங்கு விதைக்கப்பட்ட அறிவியல் அறிவு, எதிர்காலத்தில் மிகப் பெரிய விருட்சமாக வளர்ந்து புரட்சியை ஏற்படுத்தும் என்ற விழிப்புணர்வும் இல்லாமல், உலகம் பழைய வழிகளில் மூழ்கிக் கிடந்தது.

தற்போது அலெக்ஸாண்ட்ரியா மீது அடுத்தவர் பண்பாட்டை வெறுக்கும் இருள் பரவத் தொடங்கியது. அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு அரிஸ்டாடில் விதைத்த விதை மறைந்து கிடந்தது. பின்னர் திடீரென அது கிளர்ந்து முளைவிட்டது. அடுத்த சில நூற்றாண்டுகளில், இன்றைக்கு மனித வாழ்க்கை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கும் அறிவு மற்றும் தெளிவான எண்ணங்களின் வளர்ச்சியாக விரிவடைந்தது.

பொ.ஆ.மு.3-ம் நூற்றாண்டில், கிரேக்க அறிவுசார் செயல்பாடுகளின் மையமாக விளங்கிய அலெக்ஸாண்ட்ரியாவைத் தாண்டி இன்னும் பல நகரங்களும் மிகச் சிறந்த அறிவுசார் வாழ்க்கையைக் காட்சிப்படுத்தின. உதாரணத்துக்கு கிரேக்க நகரான சிசிலியிலுள்ள சைராக்யூஸில் (Syracuse) சற்றேறக்குறைய இரு நூற்றாண்டுகளுக்கு சிந்தனையும் அறிவியலும் செழித்தன. ஆசியா மைனரிலுள்ள பெர்காமம்மில் (Pergamum) பெரிய நூலகம் இருந்தது. ஆனால் இந்த மிகச் சிறந்த ஹெல்லெனிக் (Hellenic) உலகம், வடக்கிலிருந்து வந்த படையெடுப்பு காரணமாக பாதிக்கப்பட்டது. நார்டிக் காட்டுமிராண்டிகள், கௌல்கள் (Gaul) ஆகியோர் முந்தைய கிரேக்க, ஃப்ரைஜியன் (Phrygian) மற்றும் மேசிடோனிய மூதாதையர்களைப் போலவே, நகரங்களுக்குள் ஊடுருவித் தாக்கித் தீயிட்டு அழித்தனர்.

கௌல்களைத் தொடர்ந்து இத்தாலியிலிருந்து ரோமானியர்களின் புதிய வெற்றிப்படை புறப்பட்டது. டேரியஸ் மற்றும் அலெக்ஸாண்டர் சாம்ராஜ்யங்களின் மேற்குப் பகுதியின் ஒரு பாதியைப் படிப்படியாக ஊடுருவி அடிமைப்படுத்தினர். கலை மற்றும் அறிவியலை விடவும் சட்டம் மற்றும் பொருளாதார வெற்றிகளுக்கு முக்கியத்துவம் அளித்தனர். மத்திய ஆசியாவிலிருந்தும் புதிய படையெடுப்பாளர்கள் செலூசிட் (Seleucid) சாம்ராஜ்யத்துக்குள் ஊடுருவி மேற்கத்திய உலகையும், இந்தியாவையும் மீண்டும் பிரித்தனர்.

குதிரையில் பாய்ந்தபடியே அம்பெய்யும் கலையில் சிறந்த பார்தியன்கள் (Parthian) பொ.ஆ.மு.6-7-ம் நூற்றாண்டுகளில் பெர்செபோலிஸ் (Persepolis) மற்றும் சூசாக்களின் (Susa) கிரேக்க – பாரசீக சாம்ராஜ்யங்களில் ஊடுருவியதைப் போலவே இவர்களும் பொ.ஆ.மு.3-ல் படையெடுத்தனர். இவர்களைத் தொடந்து இப்போது வடகிழக்கிலிருந்தும் நார்டிக் அல்லாத ஆரிய மொழி பேசும் மங்கோலியப் பேச்சு கொண்ட மஞ்சள் நிற மக்கள் ஊடுருவினர். இவர்கள் பற்றிப் பின்வரும் அத்தியாயங்களில் விரிவாகப் பார்ப்போம்.

28. கௌதம புத்தர் வாழ்க்கை

புத்தருடைய வரலாற்றைத் தெரிந்து கொள்ள இன்னும் மூன்று நூறாண்டுகள் பின்னோக்கிச் செல்லவேண்டும். ஆசிய மத சிந்தனையிலும், உணர்விலும் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியவர் இவர். கௌதம புத்தர் இந்தியாவில் காசியில் தனது சீடர்களுக்கு உபதேசித்த அதே தருணம், பாபிலோனில் யூதர்களிடையே ஐசய்யா (Isaiah) மற்றும் எஃபிசஸ் (Ephesus) நகரில் ஹீராக்ளைடஸ் (Heraclitus) ஆகியோரும் உபதேசித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் மூவருமே பொ.ஆ.மு.6-ம் நூற்றாண்டில் உலகின் வெவ்வேறு பகுதிகளில் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாமலேயே வாழ்ந்து கொண்டிருந்தனர்.

உலக வரலாற்றில் பொ.ஆ.மு.6-ம் நூற்றாண்டை மிகச் சிறந்த காலமாகக் கொள்ளலாம். உலகின் பல்வேறு நாடுகள், சீனா உள்பட, மக்களின் மனங்கள் புதிய சிந்தனையைத் துணிச்சலாக வெளிப்படுத்தின. மன்னராட்சி, பூசாரிகள், பாரம்பரியங்கள், ரத்த உயிர் பலி ஆகியவற்றை எதிர்க்கும்விதமாகக் கேள்விகள் கேட்டனர். சற்றேறக் குறைய 20,000 ஆண்டுகளாக குழந்தைப் பருவத்திலிருந்த மனித இனம், இப்போதுதான் இளமைப் பருவத்தை எட்டியதாகக் கருதலாம்.

இந்தியாவின் பண்டை வரலாறு முழுமையாகப் பதிவு செய்யப்படாமல் தெளிவற்றதாகவே உள்ளது. பொ.ஆ.மு.2000-ல் ஆரிய மொழி பேசும் மக்கள் வடமேற்கிலிருந்து ஒன்று அல்லது பல்வேறு படையெடுப்புகள் மூலம் இந்தியாவுக்குள் நுழைந்தனர். தங்கள் மொழி மற்றும் பாரம்பரியங்களை வட இந்தியா ழுழுவதும் பரப்பினர். ஆரியர்கள் பேசிய வித்தியாசமான மொழியே ‘சமஸ்கிருதம்’. சிந்து முதல் கங்கை நதிகளுக்கு இடையே கரும்பழுப்பு நிறைமுடைய, நாகரிகம் மிகுந்த அதேநேரம் உத்வேகம் குன்றிய மக்களைக் கண்டனர். இருப்பினும் கிரேக்கர்கள் அல்லது பாரசீகர்களைப் போல் இவர்கள் முந்தைய மக்கள் குழுக்களுடன் எளிதில் ஒன்று கலக்கவில்லை.

வரலாற்று ஆசிரியருக்கு இந்தியாவின் பண்டைக் காலம் தெளிவின்றி, மங்கலாகத் தெரியத் தொடங்கியபோதே, இந்தியச் சமூகம் பல்வேறு உட்பிரிவுகளாகவும் அடுக்குகளாகவும் பிரிந்து கிடந்தது. உட்பிரிவுகளுக்குள் திருமணம் செய்துகொள்வதோ, ஒன்றாக அமர்ந்து உண்பதோ, சுதந்திரமாகப் பழகுவதோ காணப்படவில்லை. இந்தச் ‘சாதிப்’ பாகுபாடு வரலாற்றுக்காலம் முழுவதும் தொடர்கிறது. ஐரோப்பிய மற்றும் மங்கோலிய சமூகங்களிடையே சர்வ சாதாரணமாகக் காணப்படும் இனக்கலப்பு இந்திய மக்களிடையே இடையே இல்லை. இதைச் சமூகங்களின் சமூகம் என்றும் அழைக்கலாம்.

சித்தார்த்த கௌதமன் இமயமலைச் சரிவுகளிலுள்ள சிறிய மாவட்டத்தை ஆண்ட மன்னர் குடும்பத்தில் பிறந்தார். பத்தொன்பது வயதில் அழகும் அறிவும் நிறைந்த உறவுக்காரப் பெண்ணை மணந்தார். வேட்டையாடியும், தோட்டங்களும், தோப்புகளும், அரிசி விளையும் வயல்களிலும் விளையாடியும் ஆனந்தமாக வாழ்ந்தார். திடீரென அவரது வாழ்க்கையில் அதிருப்தி ஏற்பட்டது. ஏதோவொரு வகையான மகிழ்ச்சியின்மை மனத்தில் குடிகொண்டது. வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை உண்மையான வாழ்க்கை அல்ல; வாழ்க்கை நிலையில்லாதது. கொஞ்சம் கூடுதலாக நிலைத்திருக்கும் நீர்க்குமிழி போன்றது என்று உணர்ந்தார்.

நோய், இறப்பு, பாதுகாப்பின்மை, மகிழ்ச்சியின்மை, அனைத்தும், கௌதமரின் மனதை ஆட்கொண்டன. இந்த மனநிலையில் இருந்தபோது இந்தியாவில் ஏராளமான எண்ணிக்கையில் ஊர் ஊராக நாடோடித் துறவிகளாக அலைந்து கொண்டிருக்கும் நபர்களில் ஒருவரைச் சந்தித்தார். இந்தத் துறவிகள் தீவிர சட்ட திட்டங்களுக்கு உட்பட்டும், தியானத்தில் ஈடுபட்டும், மதம் தொடர்பான வாத விவாதங்களிலும் பங்கேற்றும், கடுமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தனர். வாழ்க்கையின் ஆழமான உண்மையைத் தேடி அலையும் அவ்வகை மனிதர்களைக் கண்டவுடன், கௌதமருக்கும் அதுபோன்ற தேடலில் ஈடுபடும் எண்ணம் உருவானது.

தியானத்தின் ஆழ்ந்திருந்த கௌதமரிடம் அவரது மனைவி முதல் ஆண் குழந்தையை ஈன்றெடுத்த தகவலைச் சொன்னபோது ‘அறுத்தெறிய இன்னொரு உறவு’ என்று சொன்னதாகவும் கதையுண்டு. கௌதமர் தன் ஊருக்குத் திரும்பியபோது புது வரவைக் கொண்டாடும் விதமாக, விருந்து, நடனம், கூத்து என ஊரே மகிழ்ச்சிக் கடலில் நீந்திக் கொண்டிருந்தது. ஏதோவொரு உள்ளுணர்வு ஆட்கொள்ள கௌதமர் நள்ளிரவில் திடீரென விழித்துக் கொண்டார். தூங்கிக் கொண்டிருப்பவரிடம் ‘உன் வீடு தீப்பிடித்து எரிகிறது’ என்று சொன்னால் எப்படி அதிர்ச்சியில் எழுவாரோ அப்படி எழுந்தார் கௌதமர். இலக்கில்லாத, அற்ப சுகங்களில் அமிழும் வாழ்க்கையைத் துறக்க முடிவெடுத்தார்.

மனைவி இருக்கும் அந்தப்புரத்தை அடைந்தார் கௌதமர். அங்கே சிறிய எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் மனைவியையும் அவளது கைகளின் அணைப்புக்குள் தூங்கும் பச்சிளம் குழந்தையும் கண்டார். அரண்மனையை விட்டுச் செல்வதற்கு முன்பாக, முதலும் கடைசியுமாகக் குழந்தையைக் கையிலெடுத்துக் கொஞ்ச நினைத்தார். ஆனால் மனைவியின் கைகளை விலக்கிக் குழந்தையைத் தூக்கும் போது மனைவி எழுந்துவிடுவாளே என்ற அச்சம் தடுத்தது. யாரும் அறியாவண்ணம் அமைதியாகக் குதிரை மீதேறி அரண்மனையை விட்டு வெளியேறினார். நள்ளிரவு நிலவின் ஒளியில் உலகைக் காணப் புறப்பட்டார்.

குதிரையில் நீண்ட நேரம் பயணித்து அவரது ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பகுதியின் எல்லையை அடைந்தார். ஆற்றங்கரை ஓரம் குதிரையை நிறுத்திக் கீழே இறங்கினார். வாள், அணிகலன், ஆபரணங்கள் உள்ளிட்ட அரசனுக்குரிய அடையாளங்களைக் கழற்றினார். அனைத்தையும் குதிரை மீதேற்றி அரண்மனைக்கு அனுப்பிவிட்டு நடக்கத் தொடங்கினார். வழியில் பிச்சைக்காரர் ஒருவரைச் சந்தித்துத் தான் அணிந்திருந்த பட்டாடைகளை அவரிடம் தந்து கிழிந்த உடைகளைப் பெற்றுக்கொண்டார். சொந்த பந்தங்களையும், உறவுகளையும் அறுத்தெறிந்து, லௌகிக வாழ்விலிருந்து விடுபட்டு, மெய்ஞானத்தைத் தேடி நெடும் பயணம் மேற்கொண்டார். குருமார்களும் முனிவர்களும் நிறைந்த தெற்கிலுள்ள விந்திய மலைப்பகுதி நோக்கி நடந்தார். குகைகளில் வாழ்ந்தும், அன்றாட ஜீவனத்துக்காக ஊருக்குள் சென்று பிக்ஷை எடுத்தும், நன்நெறியைக் கற்பித்தும் வாழும் ஞானிகளைக் கண்டார். கௌதமர் தனது வயதுக்கும் மீறிய மெய்ப்பொருள் தத்துவங்களைக் குறைவறக் கற்றார்; எனினும், கிடைத்த தீர்வுகளால், அவருடைய துல்லிய நுண்ணறிவு திருப்தி அடையவில்லை.

தீவிரத் துறவு, உண்ணா நோன்பு, தூக்கமின்மை, தன்னைத் தானே வருத்திக் கொள்ளுதல் ஆகியவற்றின் மூலமே ஆன்மிக சக்தியையும் ஆற்றலையும் பெற முடியும் என்பது இந்திய சிந்தனை. எனவே இவை அனைத்தையும் பரிசோதித்துப் பார்க்க கௌதமர் முடிவு செய்தார். தன்னுடன் ஐந்து சீடர்களை மட்டும் அழைத்துக்கொண்டு, கடுந்தவம் மேற்கொள்ளக் காட்டுக்குள் சென்றார். உயரமான விதானத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் மணியின் ஓசை எல்லாத் திசைகளிலும் கேட்பதுபோல், கௌதமரின் புகழ் தேசமெங்கும் பரவியது. ஆனாலும் கூட அவர் தேடிய உண்மை புலப்படவில்லை. அன்ன ஆகாரமின்றித் தவமிருந்ததால் உடல் பலவீனமானது. நடக்கக்கூட முடியாமல் தீடீரென மயங்கிக் கீழே விழுந்தார். மயக்கம் தெளிந்து கண் விழித்தபோது திடீரென ஏதோ மூளையில் உதித்தது. மேற்கண்ட வழிகளால் ஞானத்தைப் பெறமுடியாது என உள்ளுணர்வு சொல்லியது.

இதுவரை செய்த எதையும் தொடர மறுத்து, தனது சீடர்களிடம் அனைவரும் உண்ணும் உணவைக் கொண்டு வருமாறு கௌதமர் ஆணையிட்டார். இதைக் கேட்டு சீடர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஊட்டச்சத்து மிக்க உணவை உட்கொண்டு ஆரோக்கிய உடல் மூலமே மெய் ஞானத்தை மனிதன் உணர முடியும் என்னும் புதிய சிந்தனை உருவானது. இது காலம் காலமாக ஊறிக்கிடக்கும் இந்தியப் புலனடக்கப் பாரம்பரியத்துக்கும் பண்பாட்டுக்கும் முற்றிலும் வேறானது. கௌதமனின் புதிய சித்தாந்தத்தை ஏற்க மறுத்த சீடர்கள் ஒவ்வொருவராக விட்டுப் பிரிந்து காசிக்குச் சென்றனர். ஆனாலும் கௌதமர் மனம் தளராமல் தன்னந்தனியே பயணத்தைத் தொடர்ந்தார்.

சிக்கலான பிரச்னைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும்போது அதிலிருந்து விடுபட மனம் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கும். தொடக்கத்தில் எந்த முன்னேற்றமும் கிடைக்காவிட்டாலும், திடீரென ஓர் ஒளி தோன்றி வெற்றிக் கனியைப் பறிக்கும். கௌதமருக்கும் இதுதான் நடந்தது. ஆற்றங்கரை ஓரமுள்ள மரத்தடியில் அமர்ந்தபோது கௌதமருக்குத் திடீரெனத் தெளிவான ஞானம் உண்டானது. கௌதமர், புத்தர் ஆனார். வாழ்க்கை ஒரு பாலைவனமாகத் தோன்றியது. நீண்ட சிந்தனையோடு இரவும் பகலும் ஆழ்ந்த தியானத்துக்குப் பின்னர் இந்த உலகுக்குப் போதிக்கப் புறப்பட்டார்.

காசியை அடைந்த புத்தர் அங்கே தன்னை விட்டுச் சென்ற சீடர்களைக் கண்டுபிடித்தார். காசியிலுள்ள மான்கள் பூங்காவில் பள்ளிகள்போல் குடிசைகளைக் கட்டி உபதேசிக்கத் தொடங்கினார். அவரது உபதேசங்களைக் கேட்கவும் ஞானத்தைப் பெறவும் மக்கள் நாடி வர ஆரம்பித்தனர்.

‘நான் ஏன் முழுமையான மகிழ்ச்சியுடன் இல்லை?’ என்ற கேள்வியுடன் அவரது உபதேசங்கள் தொடங்கும். அவர் இளைஞனாக இருந்தபோது எழுந்த வினா இது. தனக்குத் தானே கேள்வி கேட்டு விடை தேடும் சுய-பரிசோதனை. பிரபஞ்சத்தின் பிரச்னைகளைச் சமாளிக்க தாலேஸ் (Thales) மற்றும் ஹிராக்ளைடஸின் (Heraclitus) வெளிப்படையான தன்னிலை மறந்த வெளிப்புற ஆர்வம், அல்லது ஹீப்ரூ மனதில் தீர்க்கதரிசிகள் திணித்த தார்மிகக் கடமையின் தன்னிலை மறந்த சுமை ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், முற்றிலும் வேறான கேள்வி இது. இந்திய ஞானி ‘தன்’ அல்லது ‘சுய’ என்பதை மறக்கவில்லை. அதில் தீவிர கவனம் செலுத்தி அதை அழிக்க முற்பட்டார்.

‘தனி மனிதப் பேராசையே அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம்’ என்று உபதேசித்தார். தனிப்பட்ட விருப்பங்களையும் ஆசைகளையும் மனிதர் வென்றெடுக்காதவரை அவரது வாழ்க்கை துன்பத்தில் உழன்று சோகத்தில் முடியும் என்றார். வாழ்க்கையில் ஏற்படும் விருப்பம் அல்லது ஆசைக்கு மூன்று முக்கிய வடிவங்கள் உள்ளன. இவை மூன்றும் தீமையானவை. முதலாவது பசி, பேராசை, உணர்வின் அனைத்து வடிவங்கள் மீதான விருப்பம். இரண்டாவது சுயநலம், அழியாமை மீதான விருப்பம். மூன்றாவது தனிப்பட்ட வெற்றி, உலகியல் மீதான விருப்பம். வாழ்க்கையில் நிகழும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் விடுபட அனைத்து வகையான ஆசைகளையும் விட்டொழிக்க வேண்டும். ஆசைகளைத் துறந்த பிறகே, தான் என்னும் அகந்தையை அழித்த பிறகே, ‘நிர்வாணா’ அல்லது மோட்சம் என்னும் தூய்மையான ஆன்மப் பேரின்ப நிலையை அடைய முடியும்.

இவையே புத்தரின் போதனைகளின் சாராம்சம். உண்மையை அச்சமின்றி, சரியாகப் பார்த்துப் புரிந்துகொள்ளப் போதிக்கும் கிரேக்கத்தைப் போலவோ, கடவுளுக்கு அஞ்சி நீதியை நிலைநாட்டக் கட்டளையிடும் ஹீப்ரூவைப் போலவும் இவரது மென்மையான மற்றும் மெய்ப்பொருளியல் உபதேசதங்களைப் புரிந்துகொள்வது கடினம். புத்தரின் நேரடி சீடர்களுக்குக்கூட அவரது போதனைகள் தெளிவாகப் புரிந்திருக்குமா என்பது சந்தேகமே.

புத்தரின் மறைவுக்குப் பிறகு உபதேசங்கள் கரடுமுரடாயின. ஒவ்வொரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர், ‘ஞானம்’ பூமிக்கு வருகை தரும் என்பது இந்தியாவில் நிலவும் நம்பிக்கை. அவ்வாறு அவதாரம் எடுக்கத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவரே ‘புத்தர்’ என்றழைக்கப்படுவார். ‘புத்தர்’ என்ற சொல்லுக்கு ‘அறிஞர்’ அல்லது ‘ஞானி’ என்பது அர்த்தம். கௌதமரின் சீடர்கள் அவரைப் ‘புத்தர்’ என்றழைக்கத் தொடங்கினர். கௌதமரேகூட தனக்குப் புத்தர் என வழங்கப்பட்ட பட்டத்தை ஏற்றுக்கொண்டாரா என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. அவரைச் சுற்றிப் பல கதைகளும் பின்னப்பட்டன. நேர்மையான ஒழுக்கம் நிறைந்த தார்மிக முயற்சிக்கு, அதிசயப் பூச்சுகளைப் பூசவிரும்புவது, மனிதரின் இயற்கைக் குணம். அதற்கேற்பக் கௌதம புத்தர் அதிசய அவதாரமானார்.

இருப்பினும், உலகுக்குக் கணிசமான லாபம் கிடைத்தது. பெரும்பான்மை மக்களின் கற்பனைகளுக்கு நிர்வாணா என்னும் மோட்சம் மிக உயரியதாக இருந்தபோதிலும், கௌதமரின் வாழ்க்கையில் நிகழ்ந்த சாதாரண நிகழ்வுகள் தொன்ம உருவாக்கத் தூண்டுதலுக்கு சாதகமாக இருந்தன. கௌதமரின் ஆரியன் அல்லது உன்னதமான பாதை அல்லது எண் மார்க்க வாழ்க்கையிலிருந்து வழிகாட்டலை எடுத்துக்கொள்ளலாம். நல்லொழுக்கம், சரியான இலக்குகள், இதமான வார்த்தைகள் பேசுதல், இதமாக நடந்துகொள்ளுதல், நேர்மையான வாழ்வாதாரம், ஆகியவற்றுக்கு மிகுந்த அழுத்தம் தரப்பட்டது. மனசாட்சியை துல்லியப்படுத்துதல், தாராள தயாள சிந்தனை மற்றும் சுய நலம் மறந்த செயல்பாடுகள் ஆகியவையும் முக்கிய குணங்களாக போதிக்கப்பட்டன.

(தொடரும்)

H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
ஜனனி ரமேஷ்

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *