Skip to content
Home » H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #18

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #18

34. ரோமாபுரிக்கும் சீனாவுக்கும் நடுவில்

பொ.ஆ.மு.2-1-ம் நூற்றாண்டுகள் மனித இன வரலாற்றில் புதிய அத்யாயத்தின் தொடக்கமாக விளங்கியது. மெசோபொடேமியா மற்றும் கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதிகளின் மீதான ஆர்வம் முற்றிலுமாக மறைந்தே போனது. மெஸொபொடேமியாவும் எகிப்தும் வளமான, அதிக மக்கள்தொகை கொண்ட மற்றும் செழிப்பான பகுதிகளாகத் திகழ்ந்தாலும் உலகை ஆளும் பிரதேசங்களாக இல்லை. அதிகாரம் மேற்கிலும் கிழக்கிலும் கைமாறியது. புதிய ரோமானிய சாம்ராஜ்யம், மறுமலர்ச்சி சீன சாம்ராஜ்யம் ஆகிய இரு சாம்ராஜ்யங்களும் இப்போது உலகைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தன.

ரோமாபுரி தனது அதிகார எல்லையை யூஃப்ரடீஸ் வரை மட்டுமே விஸ்தரிக்க முடிந்தது. தொலை தூரம் என்பதால், அதைத் தாண்டி விரிவுபடுத்த முடியவில்லை. யூஃப்ரடீஸைத் தாண்டி முன்பு செல்யூகஸ் நிகேட்டார் ஆளுகையின் கீழிருந்த பாரசீக மற்றும் இந்தியா செல்யூசிட் ராஜ்ஜியங்களை இப்போது பலர் ஆண்டு கொண்டிருந்தனர். ஷி-ஹுவாங்க்-டி (Shi-Hwang-ti) மரணத்தைத் தொடர்ந்து டிசின் (Ts’in) பரம்பரை ஆட்சி முடிவுக்கு வரவே, ஹான் (Haan) பரம்பரை ஆட்சியைக் கைப்பற்றி இருந்தது. திபெத்தைத் தாண்டி பாமீர் (Pamir) கணவாய் ஊடே மேற்கு துருக்கிஸ்தான் வரை எல்லைகளை விரிவுபடுத்தியது.

உலகிலேயே மிகப் பெரிய, நன்கு கட்டமைக்கப்பட்ட, சிறந்த நாகரிக அரசியல் கட்டமைப்பைக் கொண்ட நாடாக அப்போது சீனா நிலவியது. பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் ரோமானிய சாம்ராஜ்யத்தைவிடவும் பல மடங்கு பெரிதாக உச்சநிலையிலும் இருந்தது. ஒரே உலகில், வெவ்வேறு திசைகளில், ஒரே நேரத்தில், பிரமாண்ட இரு சாம்ராஜ்யங்கள் சீரும் சிறப்புடனும் செழித்துக் கொண்டிருந்தன. ஆனால் ஒன்றுக்கு ஒன்று அறிமுகம் இல்லாமலும் தெரியாமலும் இருந்தன. கடல் அல்லது நிலம் வழியே இரு சாம்ராஜ்யங்களும் ஒன்றோடு ஒன்று நட்பை வளர்க்கவோ மோதுவதற்கோ கூட வாய்ப்பின்றித் தொடர்புகள் முழுமையான வளர்ச்சியைப் பெறவில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

இருப்பினும் இரு சாம்ராஜ்யங்களுக்கும் இடைப்பட்ட பகுதிகளான மத்திய ஆசியா மற்றும் இந்தியாவில் தங்கள் வியாபாரத்தை மிகச் சிறந்த முறையில் மேற்கொண்டனர். பாரசீகம் வழியே ஒட்டகங்கள் மூலமும் இந்தியப் பெருங்கடல் மற்றும் செங்கடல் வழியே கப்பல்கள் மூலம் வாணிகத்திலும் ஈடுபட்டனர். அலெக்ஸாண்டரைப் பின்பற்றி பொ.ஆ.மு.66-ல் பாம்பே (Pompey) கேஸ்பியன் கடற்கரைவரை தனது படைகளுடன் ஊடுருவினார். பொ.ஆ.102-ல் பேன் சௌ (Pan Chau) தலைமையிலான பயணக் கப்பல் கேஸ்பியன் கடலை அடைந்தது. அங்கிருந்தவாறே, ரோமானிய சாம்ராஜ்யத்தின் படைபலம் குறித்த தகவல்களை தூதர்கள் மூலம் சீனாவுக்கு அனுப்பிவைத்தார். ஆனாலும்கூட ஐரோப்பாவுக்கும் கிழக்கு ஆசியாவுக்கும் இடையே நேரடியான கலை, பண்பாடு மற்றும் அறிவுசார் பரிமாற்றங்கள் நிகழ இன்னும் பல நூற்றாண்டுகள் தேவைப்பட்டன.

இரு சாம்ராஜ்யங்களுக்கும் வடக்கே காட்டுமிராண்டிகளைக்கொண்ட மிகப் பெரிய அடர்ந்த வனப்பகுதி நிலவியது. இப்போது ஜெர்மனி என்றழைக்கப்படும் நாடு அப்போது காடுகள் நிறைந்த இடமாக இருந்தது. இக்காடுகள் கிட்டத்தட்ட ரஷியாவரை பரவியிருந்தன. இக்காடுகளில் யானையைப் போன்ற பிரமாண்ட உருவம் கொண்ட ஆரோக்ஸ் (Aurochs) என்று அழைக்கப்படும் எருதுகள் இருந்தன. தற்போது இந்த இனம் முற்றிலுமாக அழிந்துவிட்டது.

ஆசியாவின் நீண்ட நெடிய மலைகளுக்கு மேற்கே பாலைவனங்கள், புல்வெளிகள், காடுகள் மற்றும் உறைபனி நிலங்கள் பரவியிருந்தன. ஆசியாவின் கிழக்கில் மஞ்சூரியாவின் முக்கோணப்பகுதி இருந்தது. இப்பிராந்தியங்களின் பெரும் பகுதி தெற்கு ரஷியா மற்றும் துர்கிஸ்தானுக்கு இடையே மஞ்சூரியாவுக்குள் ஊடுருவிக் கிடந்தது. மனித உயிர்களை அச்சுறுத்தும் தட்ப வெப்ப நிலை அப்போதும் சரி, இப்போதும் சரி, இப்பிராந்தியங்களில் நிலவுகிறது. கடந்த சில நூற்றாண்டுகளாக இங்கே அபரிமிதமாக மழை பொழிகிறது. இங்குள்ள நிலங்களும் மனிதனுக்கு நட்பாக இல்லை. சில ஆண்டுகள் மேய்ச்சலுக்கும் சாகுபடிக்கும் உகந்தவையாக இருக்கும். பிறகு தீடீரென வறண்டு விளைச்சலுக்குப் பயனின்றி வறட்சிக்குக் காரணமாகும்.

ஜெர்மன் காடுகளின் மேற்குப் பகுதி தொடங்கி தெற்கு ரஷியா மற்றும் துர்கிஸ்தான் வரையும் கோத்லேண்ட் தொடங்கி ஆல்ப்ஸ் மலை வரையும் நார்டிக் மக்களும் ஆரிய மொழி பேசுவோரும் வாழும் பிராந்தியங்கள். கிழக்குப் புல்வெளிகளும் மங்கோலியப் பாலைவனங்களும் ஹன்னிஷ் (Hunnish) அல்லது மங்கோலியர்கள் அல்லது டார்டார் (Tartar) அல்லது துருக்கியர்கள் வசிக்கும் பகுதிகள். இவ்வகை மனிதர்கள் அனைவருக்கும் இனம் மொழி, பண்பாடு, வாழ்க்கை பொதுவாகவே காணப்பட்டன. நார்டிக் மக்களின் ஜனத்தொகை தொடர்ந்து பெருகவே, எல்லைகள் தாண்டி வளரும் நாகரிங்களான மெஸொபொடேமியா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் ஊடுருவினர். அதேபோல் ஹன்னிஷ் இனமும் தங்களது அதிகப்படியான மக்களைச் செழிப்பான சீனப் பிரதேசங்களுக்குள் நாடோடிகளாகவும் ஆக்கிரமிப்பாளர்களாகவும் அனுப்பி வைத்தது. செழிப்பாக இருக்கும் போது மக்கள் தொகை வடக்கே அதிகரித்துக் காணப்படும். பஞ்சமும் பட்டினியும் வறட்சியும் நிலவினால் தெற்கு நோக்கி மக்கள் நகர ஆரம்பிப்பார்கள்.

குறிப்பிட்ட காலம்வரை இரு சாம்ராஜ்யங்களுமே, நாகரிகம் குறைந்தவர்கள் எல்லை தாண்டி ஊடுருவாமல் பாதுகாத்துக்கொண்டனர். வடக்கு சீனா தொடங்கி மங்கோலியா வரை ஹான் (Han) சாம்ராஜ்யம் வலுவாக இருந்தது. பாதுகாப்பு அரணாகக் கட்டப்பட்ட சீனப் பெருஞ்சுவரைச் சுற்றிலும் சீன மக்கள் அதிக எண்ணிக்கையில் பரவலாகக் குடியேறினர். எல்லைக் காவலர்களைத் தொடர்ந்து, சீன விவசாயிகளும் குதிரைகள் மற்றும் கலப்பைகளுடன் மேய்ச்சல் நிலங்களை உருவாக்கினர். ஆனால், மறுபுறம் குடியேறியவர்களின் வீடுகளை ஹன்னிஷ் மக்கள் சூறையாடிக் கொன்று கொண்டிருந்தனர்.

சீனாவுக்குள் ஊடுருவும் பயணிகளுக்கு இரண்டே வாய்ப்புகள்தான். கலப்பை பிடித்து விவசாயப் பணிகளில் ஈடுபட்டு சீன வரி செலுத்துவோராக மாற வேண்டும். அல்லது, பசுமையான வேறு மேய்ச்சல் நிலங்களைத் தேடிச் செல்ல வேண்டும். சிலர் விவசாயிகளாகவும் வரி செலுத்துவோராகவும் மாற ஒப்புக்கொண்டதால் சீனா ஏற்றுக் கொண்டது. சிலர் வட கிழக்காகவும் கிழக்காவும் மலைக் கணவாய்கள் வழியே பயணித்து மேற்குத் துருக்கிஸ்தானுக்குள் நுழைந்தனர்.

மேற்கு நோக்கிய மங்கோலியப் பயணம் பொ.ஆ.மு.200 முதல் தொடங்கியது. மேற்கிலிருந்த ஆரிய இனத்தின் மீது ஒருவகையான அழுத்ததை உருவாக்க அது உள்ளே நுழையக் காத்திருந்த ரோமானியர்கள் மீது அழுத்தத்தை விரிவுபடுத்தியது. பொ.ஆ.மு.1-ம் நூற்றாண்டில் யூஃப்ரடீஸில் குடியேறிய மங்கோலியக் கலவையுடன் கூடிய பார்த்தியன்கள் (Parthian), சிதியன் (Scythian) மக்கள் என்பது வெளிப்படை. மாவீரன் பாம்பே கிழக்குப் பகுதிகளில் படையெடுத்தபோது அவருக்கு எதிராகப் போரிட்டனர். க்ராஸஸ்ஸை (Crassus) தோற்கடித்துக் கொன்றவர்களும் இவர்களே. பாரசீகத்தை ஆண்டு கொண்டிருந்த செல்யூசிட் (Seleucid) முடியாட்சியை விரட்டியடித்து, அதற்குப் பதிலாக அர்ஸாசிட் (Arsacid) வம்சத்தைச் சேர்ந்த பார்த்தியன் மன்னர்களை ஆட்சியில் அமர்த்தியதும் இவர்கள்தான்.

வேட்டைப் பசியுடன் அலைந்து கொண்டிருந்த நாடோடிகள் குறைந்தபட்ச எதிர்ப்பை மேற்கிலோ கிழக்கிலோ சந்திக்கவில்லை. ஆனால், மத்திய ஆசியாவிலும் தென் கிழக்கிலும் இந்தியாவுக்குள் கைபர் கணவாய் வழியே எதிர்கொண்டனர். ரோமானிய மற்றும் சீனா ஆதிக்கம் செலுத்திய நூற்றாண்டுகளில், மங்கோலியர்கள் இந்தியாவுக்குள் குறிப்பாக பஞ்சாபுக்குள் ஊடுருவிக் கொலை, கொள்ளை, தீயிட்டுக் கொளுத்துதல் என அராஜகச் செயல்களில் ஈடுபட்டனர். அசோகரின் பிரம்மாண்ட சாம்ராஜ்யம் சிதறுண்டது. மங்கோலியர்களின் படையெடுப்பு இந்தியா வரலாற்றை இருளில் தள்ளியது. படையெடுத்த ஒரு பிரிவினரான இந்தோ-சிதியன் (Indo-Scythian) நிறுவிய குஷான் (Kushan) வம்சம் வட இந்தியாவைச் சில காலம் ஆண்டது.

பல நூற்றாண்டுகள் மாறிமாறி பல படையெடுப்புகள் நடைபெற்றன. பொ.ஆ.5-ம் நூற்றாண்டு முழுவதும் எஃப்தலைட்ஸ் (Ephthalites)அல்லது வெள்ளை ஹன்ஸ் (White Huns) இந்தியாவை ஆங்காங்கே ஆண்டு கொண்டிருந்த சிறு ராஜ்ஜியங்கள் மீது தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தனர். எஃப்தலைட்ஸ் ஒவ்வொரு கோடைக்காலத்தில் மேற்கு துருக்கிஸ்தானிலும் இலையுதிர் காலத்தில் கணவாய் வழியே இந்தியாவுக்குள் படையெடுத்து அச்சுறுத்திக் கொண்டிருந்தனர்.

பொ.ஆ.2-ம் நூற்றாண்டில் ரோமானிய மற்றும் சீன சாம்ராஜ்யங்களில் நிகழ்ந்த பல எதிர்பாரா சம்பவங்கள் காரணமாக, அவற்றின் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கியது. இந்நிலை சீனாவில் பதினோரு ஆண்டுகள் நீடித்து, அதன் சமூகக் கட்டமைப்பைப் பாதித்தது. ஹான் (Han) வம்சத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, சீனாவில் குழப்பமும் பிரிவினையும் அமைதியின்மையும் நிலவின. ஏழாம் நூற்றாண்டில் டாங் (Tang) வம்சம் அதிகாரத்துக்கு வரும் வரை இந்நிலையே தொடர்ந்தது.

அமைதியின்மையும் குழப்பமும் தொற்றுபோல் ஆசியா தொடங்கி ஐரோபா வரை பரவியது. பொ.ஆ.164 – 180 வரை ரோமானிய சாம்ராஜ்யம் தத்தளித்ததுடன் வலுவிழந்தும் போனது. ரோமானிய மாகாணங்களில் மக்கள் தொகைக் குடியேற்றமும் குறையத் தொடங்கியதுடன், அரசின் திறமையும் வீரியமும் கடுமையான சீரழிவைச் சந்தித்தன. ரோமானியர்கள் வெல்ல முடியாதவர்கள் என்னும் தகுதியை மெள்ள இழக்க ஆரம்பித்தனர். ஸ்வீடன் நாட்டின் கோத்லேண்ட் (Gothland) பகுதியைச் சேர்ந்த கோத்ஸ் (Goths) என்னும் புதிய நார்டிக் மக்கள், ரஷியா வழியாக வோல்கா பிராந்தியத்திலும் கருங்கடல் கரையோரங்களிலும் குடியேறினர். கடலைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், கடற்கொள்ளைகளிலும் ஈடுபட்டனர்.

பொ.ஆ.247-ல் டேன்யூப் ஆற்றைக் கடந்து, தற்போது சைபீரியா என்றழைக்கப்படும் நிலப்பரப்பை ஆண்டு கொண்டிருந்த டெஷியஸ் (Decius) மன்னனைத் தோற்கடித்துக் கொன்றனர். பொ.ஆ.236-ல் மற்றொரு ஜெர்மன் இனத்தவரான ஃப்ராங்க்ஸ் (Franks) தலைமையில், ரைன் (Lower Rhine) நதியைக் கடந்து படையெடுத்தனர். ஊடுருவியவர்களைக் கௌல் படையினர் விரட்டி அடித்தாலும் பால்கன் தீபகற்பம் மீது கோத்ஸ்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். காலப்போக்கில் டேஷியா (Dacia) மாகாணம் ரோமானிய வரலாற்றிலிருந்தே காணாமல் போனது. சரிந்து கொண்டிருந்த ரோமானிய சாம்ராஜ்யத்தின் நம்பிக்கையையும் கௌரவத்தையும் மீட்டெடுத்த பெருமை பொ.ஆ.270-275 ஆட்சி செய்த அரேலியன் (Aurelian) மன்னனையே சேரும்.

35. தொடக்க கால ரோமானிய சாம்ராஜ்யத்தில் சாதாரண மனிதனின் வாழ்க்கை

அகஸ்டஸ் சீசர் காலம் தொடங்கி, அமைதியோடும் பாதுகாப்போடும் சீரும் சிறப்புமாகத் திகழ்ந்த ரோமானிய சாம்ராஜ்யம் அடுத்த இருநூறு ஆண்டுகளில் சிதறிப்போனது. இந்த வரலாற்றைப் படிப்பதற்கு முன் அப்போது வாழ்ந்த சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரம் பற்றி சற்று ஆராய்வோம். இப்போது நாம் காணவிருக்கும் வரலாறு, இன்றைய தேதியிலிருந்து, சற்றேறக் குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டதாகச் சுருங்கிவிட்டது. ரோமாபுரி மற்றும் ஹன் வம்சங்களின் காலத்தில் வாழ்ந்த நாகரிக மக்களின் வாழ்க்கை, இன்றைய அவர்களது வாரிசுகளின் நாகரிக வாழ்க்கையோடு ஒப்பிடுகையில், தெள்ளத் தெளிவாக ஒத்திருப்பதன் தொடக்கமாக இருக்கிறது.

மேற்கத்திய உலகில் நாணயப் பணத்தின் பயன்பாடு இப்போது சர்வ சாதாரணம். பூசாரிகளின் உலகத்தைத் தாண்டி அரசு அதிகாரிகளாகவோ பூசாரிகளாகவோ இல்லாமல், தனித்துவத்துடன் விளங்கிய பலர் இருந்துள்ளனர். மக்கள் பல்வேறு இடங்களுக்குத் தங்கு தடையின்றிச் சுநத்திரமாகவும் எளிதாகவும் பயணித்தனர். சீரான சாலை வசதிகளும் வழியில் இளைப்பாறுவதற்குச் சிறப்பான விடுதிகளும் இருந்தன. பொ.ஆ.500 வருடங்களுக்கு முன் நிலவிய இறுக்கமான வாழ்க்கையோடு ஒப்பிடுகையில் சற்றுத் தளர்ந்திருந்தது எனக் கூறலாம். நாகரிக மக்கள் வெளியே செல்லாமல் ஊர், நாடு, பாரம்பரியம் என ஒரு வட்டத்துக்குள் வாழ்ந்தனர். நாடோடிகள் மட்டுமே இடம் விட்டு இடம் புலம் பெயர்ந்தனர்.

ஆனால் ரோமானிய மற்றும் ஹான் வம்சத்தினர் ஆதிக்கம் செலுத்திய பிரமாண்டப் பகுதிகளில் வாழ்ந்த மக்களிடையே சீரான நாகரிகம் இருக்கவில்லை. ஊருக்கு ஊர் வேறுபாடுகளும் மாறுபாடுகளும் வித்தியாசங்களும் ஏற்றத்தாழ்வுகளும் இப்போது பிரிட்டிஷ் இந்தியாவில் நிலவுவதுபோல், அப்போது அங்கே நிலவின. ரோமானியர்களில் பேச்சு மொழியாக இலத்தீன் இருந்தாலும் வழிபாட்டில் பல கடவுள்கள் இருந்தன. தங்களுக்குப் பிடித்தமான கடவுளை, பாரம்பரிய வழக்கப்படி வழிபட்டனர். ஆனால் கிரேக்கத்திலோ ஆசியா மைனரிலோ எகிப்திலோ இலத்தீன் மொழி பரவலாகவில்லை.

துருக்கியில் பிறந்த சால் ஆஃப் டார்சஸ் (Saul of Tarsus) பின்னாளில் புனித பௌல் (Apostole Paul) ஆனார். இவர் பிறப்பால் யூதர் எனினும் ரோமானிய குடிமகன். ஆனால் ஹீப்ரூவை விடவும் கிரேக்க மொழியையே பேசினார்; எழுதினார். பாரசீகத்தில் கிரேக்க செல்யூசிட்களை, பார்த்தி வம்சம் வீழ்த்திய பின்பும் அவர்களது அரசவையில் கிரேக்க மொழியே அலுவல் மொழியாக இருந்தது. ரோமானிய சாம்ராஜ்யத்தின் எல்லைகள் கடந்தும் பல பகுதிகளில் கிரேக்க மொழியே பரவலாகக் காணப்பட்டது. அதேபோல் ஸ்பெயின் மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் கார்த்தேஜ் வம்சம் அழிந்த பிறகும் கார்தேஜீனிய மொழியின் பயன்பாடு நீண்ட காலம் நிலவியது.

ரோமானியர்களின் படையெடுப்புக்கு முன்பும் பின்பும் செழிப்பான நகரமாகத் திகழ்ந்த செவிலி (Seveille) தனது செமிட்டிக் பெண் தெய்வங்களையும் செமிட்டிக் மொழியையும் பல தலைமுறைகளுக்கு விட்டுக் கொடுக்கவில்லை. பொ.ஆ.`193-211-ல் ஆட்சி செய்த செப்டிமியஸ் செவெரஸ் (Septimius Severus) என்னும் ரோமானிய மன்னன், கார்தெஜீனிய மொழியைத் தாய்மொழியாகவே போற்றினார். அவரது தாய்மொழியான இலத்தீனை அந்நிய மொழியாகவே கற்றுக்கொண்டார். அவரது சகோதரியோ கடைசி வரை தாய்மொழியான இலத்தீனைக் கற்றுக் கொள்ளவே இல்லை. விட்டில் உள்ளவர்களுடன் ப்யூனிக் – கார்தேஜீனிய மொழியிலேயே உரையாடினார்.

கௌல் மற்றும் பிரிட்டன் நாடுகளிலும் டேஷியா (Dacia – இன்றைய ருமேனியா) மற்றும் பெனோனியா (Pannonia – இன்றைய ஹங்கேரி) உள்ளிட்ட மாகாணங்களிலும் பெரிய அளவிலான நகரங்களோ கோயில்களோ நாகரிகமோ கலாச்சாரமோ இல்லை. எனவே ரோமானியர்கள் இவற்றின் மீது படையெடுத்துத் தங்கள் இலத்தீன் மொழியையும் கலாசாரத்தையும் நாகரிகத்தையும் புகுத்தினர். புதிதாக உருவாக்கிய நகரங்களிலும் ஊர்களிலும் இலத்தீன் மொழியே பேச்சு மொழியானது. ரோமானியக் கடவுள்களும் ரோமானிய பழக்க வழக்கங்களும் அறிமுகமாயின. இலத்தீன் மொழியின் பல்வேறு பிரிவுகளாக இன்றைக்கு விளங்கும் ருமேனியன், இத்தாலியன், ஃபிரஞ்ச் மற்றும் ஸ்பானிஷ் மொழிகள், பண்டைய இலத்தீன் மொழியையும் பழக்க வழக்கங்களையும் நமக்கு நினைவுபடுத்துகின்றன.

வடமேற்கு ஆப்பிரிக்காவில் இலத்தீன் திணிக்கப்பட்டது. ஆனால் அண்டை நாடுகளான கிரேக்கம் எகிப்து மற்றும் கிழக்கிலுள்ள பகுதிகள் இலத்தீன் பேசாமல் தங்கள் நாகரிகத்தையும் கலாசாரத்தையும் மொழியையும் உள்ளத்தாலும் உணர்வாலும் தக்கவைத்துக் கொண்டன. ஆனால் ரோமானிய கல்வியாளர்கள் மற்றும் மேட்டுக்குடியில் பிறந்தவர்கள் தசய்மொழியான இலத்தீனை விடவும் கிரேக்கத்தில் பேசுவதையும் எழுதுவதையுமே உயர்வாகக் கருதி முக்கியத்துவம் அளித்தனர்.

உலகின் எந்தப் பகுதியாக இருப்பினும் குடியேறிய மக்களின் முக்கியத் தொழிலாக விவசாயமே விளங்கியது. ஆரம்பகால ரோமானியக் குடியரசின் முதுகெலும்பாக விளங்கியவர்கள் விவசாயிகள்தான். ஆனால் ப்யூனிக் போர்களுக்குப் பிறகு சிறைபிடிக்கப்பட்ட கைதிகள், பெருமளவில் தோட்டங்களில் அடிமைகளாகப் பணியமர்த்தப்படவே, விவசாயிகளின் உழைப்பு வீணாகிப் போனது. கிரேக்க உலகில் பல்வகை வேளாண்மை முறைகள் நிலவின. ஆர்காடியன் (Arcadian) முறையில் ஒவ்வொரு குடிமகனும் விவசாய நிலங்களில் சுதந்திரமாக வேலை செய்தார். மாறாக ஸ்பார்டா (Spara) முறையில் விவசாயப் பணிகளை ஹீலாட்ஸ் (Helots) என்னும் அடிமைகளே மேற்கொண்டனர்.

ஒரு கட்டத்தில் அனைத்துமே ஹெலென்மயமானது (Hellenized) அதாவது கிரேக்கமயமானது. தோட்ட வேலையும் அடிமை முறையும் பரவியது. பல நாடுகளுடன் நடைபெற்ற போர்களில் சிறைப்பிடிக்கப்பட்ட கைதிகள் ஒரு வகை அடிமைகள். ஒன்னொரு வகை பிறவி முதற்கொண்டே அடிமைகள். எதுவாக இருப்பினும் ஒவ்வொரு அடிமைக்கும் தாய்மொழி வேறுபட்டதால் ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ள முடியவில்லை. எழுதப் படிக்கத் தெரியாததால் கல்வியறிவு கிடையாது. ஒருவர் எழுதுவதையோ பேசுவதையோ அடுத்தவரால் புரிந்துகொள்ளவும் இயலவில்லை. அவர்களுக்கான உரிமைகள் குறித்தோ கடமைகள் பற்றியோ எந்த அறிவுமில்லை. அடிமைகளுக்குள் ஒற்றுமை இல்லாததால், அடக்குமுறையை எதிர்க்கும் துணிவுமில்லை. நாட்டின் பூர்வ குடிமக்களுக்கு இணையாக, அடிமைகளின் மக்கள் தொகைப் பெருக்கம் நிலவினாலும் அவர்களால் போராட்டத்தையோ கிளர்ச்சியையோ வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியாமைக்கு மேற்கூறியவையே முக்கியக் காரணிகளாக இருந்தன.

கிளாடியேட்டர் (Gladiator) என்போர் அவர்களுக்குள்ளும் விலங்குகளோடும் சண்டையிடப் பயிற்சி பெற்ற அடிமைகள். சண்டையில் உயிரிழப்பு சர்வ சாதாரணம். சண்டையைக் காண வரும் மக்களை மகிழ்விக்கும் ஒருவகை பிரசித்தி பெற்ற விளையாட்டு. கிளாடியேட்டர்களின் தலைவனான ஸ்பார்டகஸ் (Spartacus) தலைமையில் பொ.ஆ.மு.1-ம் நூற்றாண்டில் மிகப் பெரிய போராட்டம் வெடித்தது. இதுவே அடிமைகள் நடத்திய முதல் போராட்டமாகக் கருதப்படுகிறது.

ரோமானியக் குடியரசின் பின்னாளிலும் சாம்ராஜ்யத்தின் தொடக்கத்திலும் விவசாய அடிமைகள் கடுமையான துன்பங்களை அனுபவித்தனர். இரவில் தப்பிச் செல்லாமலிருக்கக் கைகளிலும் கால்களிலும் விலங்குகளால் கட்டப்படுவர். எளிதாக அடையாளம் காண தலைமுடி பாதியாகச் சிரைக்கப்படும். அவர்களுக்கு மனைவி, மக்கள், குடும்பம் உறவுகள் என எதுவும் இருக்காது. அநாதை அடிமைகளை விலை கொடுத்து வாங்கிய முதலாளிகள் அடித்துக் கொன்றாலும் கேட்பதற்கு நாதியில்லை. காட்டில் திரியும் விலங்குகளைக் கொல்ல அடிமைகளே செல்ல வேண்டும். இதில் விலங்குகளுக்கு இரையாகும் அடிமைகளே அதிகம். அடிமை தனது முதலாளியைக் கொன்றால் அவன் மட்டுமின்றி அங்கே பணியாற்றும் எல்லா அடிமைகளும் ஈவு இரக்கமின்றிச் சிலுவையில் அறையப்படுவார்கள். எனவே, காட்டுமிராண்டிகளாக ஊடுருவியவர்களை, அடிமைகள் எதிரிகளாக எண்ணாமல் தங்களை விடுவிக்க வந்தவர்களாகவே கருதினர்.

அடிமை வர்த்தகம் அந்நாளில் நிலவிய மிகப் பெரிய வணிகங்களுள் ஒன்று. எல்லாத் துறைகளிலும் அனைத்து வகையான பணிகளிலும் அடிமைகளின் பயன்பாடு பரவியது. சுரங்க வேலை, உலோகங்களை வெட்டி எடுத்தல், படகுகளில் துடுப்பு போடுதல், சாலை அமைத்தல், கட்டுமானப் பணி என எல்லா இடங்களிலும் அடிமைகள் பணி அமர்த்தப்பட்டனர். வீட்டு வேலைக்கும் அடிமைகளே நியமிக்கப்பட்டனர். இவர்களுக்குப் போட்டியாக அடிமைகள் இல்லாத சுதந்திரமான கூலிக்காரர்களும் பணத்துக்காகப் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டனர். ஆனால் ஒட்டு மொத்த மக்கள் தொகையில், கூலிக்கு வேலை பார்த்தவர்கள் எண்ணிக்கை தெரியவில்லை.

அடிமைகளிலும் பல வகை உண்டு. சில அடிமைகள் இரவில் ஓடி விடுவார்கள் என்பதற்காக சங்கிலிகளால் கட்டி வைக்கப்படுவார்கள். ஆனால் சிலர் தங்களது உழைப்பு மற்றும் விசுவாசம் காரணமாக, மனைவி குழந்தைகளுடன், கொஞ்சம் சுதந்திரமாக வேலை செய்ய அனுமதிக்கப்படுவர். சில அடிமைகள் ஆயுதங்களுடன் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள். பொ.ஆ.மு.264-ல் ப்யூனிக் போர்களின் ஆரம்பத்தில், அடிமைகள் தங்கள் வீரத்தை நிரூபிக்க மற்ற அடிமைகளுடன் சண்டையிட்டு ஜெயிக்கும் விளையாட்டை, மீண்டும் ரோமானியர்கள் புதுப்பித்தனர். இதன் மூலம் எவர் சண்டையில் அடுத்தவரைக் கொல்கிறாரோ அவரே பாதுகாப்புக்கு ஏற்ற சிறந்த அடிமையெனத் தேர்வு செய்யப்படுவார். நாளடைவில் அடிமைகளை வைத்துக்கொள்வது நாகரிகத்தின் அடையாளமானது.

ஒவ்வொரு பணக்கார ரோமானியரும் அடிமை க்ளாடியேட்டர்களை வைத்துக்கொள்ளத் தொடங்கினர். இவர்கள் அவ்வப்போது களத்தில் இறங்கி மற்ற க்ளாடியேட்டர்களுடன் சண்டை போட்டாலும் எஜமானர்களின் தனிப்பட்ட மெய்க்காப்பாளராகவே செயல்பட்டனர். அடிமைகள் அனைவரும் கல்வியறிவு இல்லாதவர்கள் என்று கூற முடியாது. சில படித்த அடிமைகளும் உண்டு. கிரேக்கம் வட ஆப்பிரிக்கா, ஆசியா மைனர் உள்ளிட்ட கல்வியில் முன்னேறிய நாடுகளையும் நகரங்களையும் ரோமானியர்கள் கைப்பற்றியபோது, பிணைக் கைதிகளாகப் பிடிபட்டவர்களில் பெரும்பான்மையினர் படித்தவர்களே.

சில வசதியான ரோமானியக் குடும்பங்களில் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொண்டுக்கும் அடிமைகள் படித்தவர்களாகவே இருந்தனர். ரோமானியப் பணக்காரர்கள் நூலகராகவும் செயலாளர்களாகவும் கல்வியறிவு பெற்ற அடிமைகளை வைத்திருந்தனர். சுறுசுறுப்பும் புத்திசாலித்தனமும் நிறைந்த அடிமைச் சிறுவர்களை விலைக்கு வாங்கி அவர்களைக் கடைகளில் வியாபாரத்தை கவனிக்கும் பணியில் ஈடுபடுத்தினர். இன்னும் சிலர், படித்த அடிமைகளை, நூல்களைப் படி எடுக்கவும் நகைகள், ஆபரணங்களைத் தயாரிக்கவும் பயிற்சி அளித்துப் பணியமர்த்தினர். சிற்பம் தச்சு, கட்டுமானம் உள்பட பல்வேறு துறைகளில் அடிமைகளே கைவினைக் கலைஞர்களாக விளங்கினர்.

அடிமைகளின் சுதந்திரம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. அடுத்த 400 ஆண்டுகளுக்குள் அடிமைகளின் நிலையில் தலைமீழ் மாற்றம் ஏற்பட்டது. பொ.ஆ.மு.2-ம் நூற்றண்டில் பிடிபடும் போர்க் கைதிகளின் எண்ணிக்கை அபரிமிதமாக இருந்தது. உரிமைகள் அற்றவர்களாக மனிதாபிமானம் இன்றி கொடூரமாக நடத்தப்பட்டனர். இந்நிலை அடுத்த 200 ஆண்டுகள் நீடித்தது. பொ.ஆ.1-ம் நூற்றாண்டில்தான் ரோமானிய நாகரிகம் அடிமைகள் மீது கொஞ்சமேனும் கரிசனம் காட்டத் தொடங்கியது. இதற்கு முக்கியக் காரணம் அடிமைகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதால், அவர்களின் தேவை அதிகரித்தது. அடிமைகள் கிடைப்பது அரிதாகிப் போனது.

அடிமைகள் மீதான சமூகக் கண்ணோட்டம் மாறத் தொடங்கியது. ரோமானியர்களின் கொடுந்தன்மையை, கிரேக்கத்தின் ஒழுக்கம் நீதி, சமநிலை உள்ளிட்ட உயர் பண்புகள் ஆக்கிரமிக்கத் தொடங்கின. அடிமைகள் மீதான வன்முறைகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. விலங்குகளுடன் நிராயுதபாணியாக அடிமைகள் மோதும் விளையாட்டுகள் தடை செய்யப்பட்டன. அடிமை செய்த வேலைக்கு ஏற்ப சொத்துரிமை அளிக்கப்பட்டது. ஊதியமும் வழங்கப்பட்டது. அடிமைகளால் தங்களுக்குக் கிடைக்கும் லாபம் மற்றும் அனுகூலத்தை எஜமானர்கள் உணரத் தொடங்கினர். அடிமைகள் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. விவசாயப் பணிகளில் ஈடுபடும் அடிமைகள் உற்பத்தியில் ஒரு பங்கை முதலாளிகளுக்கு அளித்தனர்.

பொது ஆண்டு தொடங்கிய முதல் இரு நூற்றாண்டுகளில் இலத்தீன் – கிரேக்கம் பேசும் ரோமானிய சாம்ராஜ்யம் எவ்வாறு அடிமைகள் நாடாக விளங்கியது என்று பார்த்தோம். காலப்போக்கில் அடிமைகள் மீதான வன்முறையும் அடக்குமுறையும் படிப்படியாகக் குறையத் தொடங்கின. குடும்ப வாழ்க்கை என்னும் கட்டமைப்பு இல்லை. பள்ளி கல்லூரிகள் அதிகமில்லை. சுதந்திரமான கருத்துக்கும் எண்ணத்துக்கும் வழியில்லை. அடுத்த தலைமுறையை வியக்க வைத்த பெரிய சாலைகளும் கட்டுமானங்களின் சிதிலங்களும் சட்டமும் ஒழுங்கும் அதிகாரமும் முறியடிக்கப்பட்ட விருப்பங்கள், முடக்கப்பட்ட நுண்ணறிவு, ஊனமுற்ற மற்றும் வக்கிரமான ஆசைகள் மீது உருவாக்கப்பட்டவை என்பதை மறக்கக் கூடாது.

கட்டுப்பாடு மற்றும் கட்டாய உழைப்போடு, பரந்த ஆட்சியின் மீது ஆதிக்கம் செலுத்திய சிறுபான்மையினரும் தங்களது ஆத்மாக்களில் அமைதி இன்றியும் மகிழ்ச்சி இன்றியும் இருந்தனர். சந்தோஷ மனங்களில் குடியிருந்த கலை, இலக்கியம் அறிவியல், தத்துவம் ஆகியவை மறைந்தே போயின. ஏராளமான கலைஞர்கள், படித்தவர்கள் ஆகியோரிடமும் அடிமைத்தனம் ஆகியவை காணப்பட்டன. இருப்பினும் ஒரே நூற்றாண்டில் சின்னஞ்சிறு ஏதென்ஸ் நகரத்தின் துணிச்சலான மற்றும் உத்தமமான நுண்ணறிவுச் செயல்களுக்கு இணையாகவோ அதைத் தாண்டியோ, கடந்த நானூறு ஆண்டுகளில் ரோமானிய சாம்ராஜ்யம் எதுவுமே செய்யவில்லை. மாறாக ரோமானிய ஆட்சியின் கீழ் ஏதென்ஸ் பொலிவிழந்தது. அலெக்ஸாண்ட்ரியாவின் அறிவியல் சிதைந்து போனது. மனிதரின் உணர்வுகளும் அவற்றுடன் சீரழிந்து கொண்டிருந்தது.

(தொடரும்)

H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
ஜனனி ரமேஷ்

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *