36. ரோமானிய சாம்ராஜ்யத்தில் சமய வளர்ச்சி
கிறிஸ்தவ சகாப்தத்தின் முதல் இருநூறு ஆண்டுகளில், கிரேக்க மற்றும் இலத்தீன் சாம்ராஜ்யங்களின் கீழிருந்த மனிதர்கள் கவலையும் விரக்தியும் நிறைந்த ஆத்மாவாக இருந்தனர். கட்டாயப்படுத்தலும் கொடூரமும் கோலோச்சின. பெருமிதம் இருந்தது, மதிப்பு, மரியாதை, அமைதி, மகிழ்ச்சி இல்லை. துரதிருஷ்டசாலிகள் இகழ்ச்சிக்கும் அல்லலுக்கும் உட்பட்டனர்; அதிர்ஷ்டசாலிகள் பாதுகாப்பின்றியும் இலவசங்கள் மீது அதீத ஆர்வத்துடனும் காணப்பட்டனர். மனிதர்களும் விலங்குகளும் சண்டை போட்டுக் கொண்டு குருதி வழிய மரணத்தைத் தழுவினர். ரோமானிய சிதிலங்களிலும் இடிபாடுகளிலும் முக்கியமானவை ஆம்ஃபி (Amphi) தியேட்டர்கள் எனப்படும் திறந்தவெளி அரங்கம். வாழ்க்கை இவ்வாறாக ஓடிக் கொண்டிருந்தது. ஆண்களின் இதயத்தில் நிலவிய சஞ்சலம் தீவிர மத அமைதியின்மையாக வெளிப்பட்டது.
பண்டைய நாகரிகங்களின் மீது ஆரியப் படையெடுப்பு நிகழ்ந்த காலம் தொட்டுப் பழைய கடவுள்களும் பூசாரிகளும் புதிய தழுவல்களுக்கு உட்பட்டனர் அல்லது முற்றிலுமாக மறைந்தே போயினர். பல நூறு தலைமுறைகளாக அழகிய நாகரிகங்களின் விவசாய மக்கள், தங்கள் வாழ்க்கையையும் எண்ணங்களையும் கோயில் வாழ்க்கையை மையப்படுத்தியே அமைத்துக் கொண்டனர். தியாகங்கள், மர்மங்கள் குறித்த அச்சம் மனத்தை ஆக்கிரமித்துக் கொண்டன.
ஆரியமயமாக்கப்பட்ட உலகைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், நமது நவீன மனங்களுக்கு அவர்களது கடவுள்கள் கொடூரமாகவும் நியாயமற்றதாகவும் தோன்றின. ஆனால் இந்தப் பழைய நாகரிக மக்களுக்கு, கனவில் கண்டதுபோல், தெய்வங்களுக்கு உடனடி உறுதியும் தெளிவும் இருந்தன. சுமேரியா அல்லது பண்டைய எகிப்திலுள்ள ஒரு நகரை மற்றொன்று வெற்றி கொள்வது என்பது, ஆண் அல்லது பெண் கடவுள்களை மாற்றுவது அல்லது அவற்றின் பெயர்களை மாற்றுவதாகும். ஆனால் வடிவத்தையோ, வழிபாட்டு உணர்வையோ அப்படியே வைத்துக்கொண்டனர். பொதுவான குணங்களிலும் எந்த மாற்றமும் இல்லை.
கனவுகளில் காணப்படும் உருவங்கள் மாறினாலும் கனவுகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. பண்டைய செமிட்டிக் வெற்றியாளர்கள் மாற்றங்கள் ஏதுமின்றி, அடிபணிய வைத்த மெஸொபொடேமிய நாகரிக மதத்தைக் கையகப்படுத்தும்போது, சுமேரிய உணர்வுடனேயே காணப்பட்டனர். ஆனால் எகிப்து மதப் புரட்சி ஏற்படும் அளவுக்கு அடிபணிந்து போகவில்லை. டாலமீக்கள் (Ptolemies) மற்றும் சீசர்களின் ஆட்சிகளின் போதும் எகிப்து தனது கோயில்களையும் பலிபிடங்களையும் பூசைத் தத்துவங்களையும் மாற்றாமல், எகிப்திய அடிப்படையோடே நீடித்தது.
ஒரே சமூக மற்றும் மதப் பழக்க வழக்கங்களைக் கொண்ட மக்களுக்கு இடையே, போர்கள் நடைபெற்ற போது, ஒரு பிராந்தியம் அல்லது கோயிலின் கடவுளை, மற்றொரு கடவுளுடன் தொகுப்பதோ இணைப்பதோ சாத்தியப்பட்டது. இரு கடவுள்களும் ஒரே குணத்தைக் கொண்டிருந்ததால் எளிதாக அடையாளப்படுத்தப்பட்டனர். அதே கடவுள் வேறொரு பெயரில் இருப்பதாக பூசாரிகளும் மக்களும் நம்ப வைக்கப்பட்டனர். கடவுள்களின் இணைப்பு அல்லது கலப்பு இறையச்சம் (theocrasia) எனப்பட்டது. பொது ஆண்டுக்கு முந்தைய பல்லாயிரம் ஆண்டு வெற்றிகள் இறையச்ச காலத்தைச் சேர்ந்தவை.
உள்ளூர் கடவுள்கள் மாற்றப்பட்டு அல்லது மொத்தமாக ஓரங்கட்டப்பட்டு, வேறு கடவுள்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். பாபிலொனில் உள்ள கடைசி ஹீப்ரூ தீர்க்கதரிசிகள், நீதியின் கடவுள் (God of Righteousness) என ஒருவரைப் பிரகடனப்படுத்தியபோது, மக்களின் மனங்கள் அதை முழுமையாக ஏற்றுக் கொள்ளத் தயாரானது. ஆனால் அத்தகைய ஒருங்கிணைப்புக்கு கடவுள்கள் இடையே ஒற்றுமை காணப்படாததால், நம்பத்தகுந்த வேறு உறவுகள் மூலம் அவர்கள் குழுக்களாகத் தொகுக்கப்பட்டனர்.
கிரேக்கர்கள் வருவதற்கு முன்பிருந்த ஏஜியன் (Aegean) உலகம் தாய்க் கடவுள்களின் (Mother Gods) மீது ஈர்ப்பு கொண்டதாகும். ஒரு பெண் கடவுளுக்கும் ஆண் கடவுளுக்கும் திருமணம் நடைபெறும். மிருகக் கடவுளோ நட்சத்திரக் கடவுளோ மனிதனாக்கப்படும். பாம்பு அல்லது சூரியன் அல்லது நட்சத்திரம் ஓர் அணிகலனாகவோ சின்னமாகவோ மாற்றப்படும். தோற்றுப்போன மக்களின் கடவுள், ஜெயித்த மக்களின் கடவுளுக்கு, வீரியம் மிக்க எதிரியாகிப் போவார். ஒரு காலத்தில் உள்ளூர் கடவுள்களாக இருந்தவை பின்னாளில் இப்படியான ஏற்பு, சமரசம், பகுத்தறிப் பார்வை இவற்றால் நிரம்பி வழிவதே இறையச்ச வரலாறு.
பல்வேறு நகரங்கள் ஒன்றிணைந்த ஐக்கிய ராஜ்ஜியமாக எகிப்து உருவானபோது, இந்த இறையச்சம் அதிகமாகக் காணப்பட்டது. பேசுவதற்கான முதன்மைக் கடவுள் தியாக வடிவம் கொண்ட ஓசிரிஸ் (Osiris). ஃபேரோ பூமியில் ஜனித்த இவரது பிறப்பு அவதாரமாகக் கருதப்படுகிறது. ஜனனம் – மரணம் – ஜனனம் என்னும் தொடர் சுழற்சியின் பிரதிநிதியாக ஓசிரிஸ் விளங்கியது. விதையாகவும் அறுவடைத் தானியமாகவும் மனிதனின் அழியாத் தன்மைக்கான வழிமுறையாக, சிந்தனையின் இயற்கை விரிவாக்கமாகவும் திகழ்ந்தது.
இதன் சின்னங்களுள், மீண்டும் உயிர்த்தெழத் தனது முட்டைகளைப் புதைக்கும் அகன்ற இறக்கைகளைக் கொண்ட ஸ்கேரபியஸ் வண்டு (Scarabeus Beetle), மேற்கிலே மறைந்து மீண்டும் கிழக்கிலே உதிக்கும் ஒளிரும் சூரியன் ஆகியவை முக்கியமானவை. பின்னாளில் இக்கடவுள் ஆபிஸ் (Apis) என்னும் புனிதமான எருது விலங்குடன் அடையாளப்படுத்தப்பட்டது. இந்த ஆண் கடவுளுடன் இணைந்திருக்கும் பெண் கடவுள் ஐசிஸ் (Isis). இந்தப் பெண் கடவுள் ஹேதோர் (Hathor) என்ற பெயரில் பசு தேவதை என்றும் பிறை நிலா என்றும் கடல் நட்சத்திரம் என்றும் அழைக்கப்படுகிறாள்.
ஓசிரிஸ் மரணிக்கும் போது ஹோரஸ் (Horus) என்னும் ‘பருந்து கடவுள்’ குழந்தையாகப் பிறந்தது. அது வளர்ந்து மீண்டும் ஓசிரிஸ் ஆனது. பச்சிளம் குழந்தை ஹோரஸ்ஸைக் கைகளில் தாங்கிக் கொள்ள, பிறை நிலவில் நின்று கொண்டு ஐசிஸ் உதவுகிறாள். இது தர்க்கரீதியான உறவுகள் இல்லை; எனினும் மனித மனம் முறையாகச் சிந்திக்கத் தொடங்குவதற்கு முன்பே, கனவு போன்ற ஒத்திசை ஏற்படுகிறது. இந்த மூன்று கடவுள்கள் அணியின் கீழ், கருப்பு எகிப்திய கடவுள்கள், தீய கடவுள்கள், நாய்த் தலையோடு அனுபிஸ் (Anubis), கருப்பு இரவு, விழுங்குபவர்கள், தூண்டுபவர்கள், கடவுளுக்கும் மனிதர்களுக்கும் எதிரிகள் உள்ளிட்ட ஏனைய கடவுள்களும் இருக்கின்றனர்.
காலபோக்கில் ஒவ்வொரு மத அமைப்பும் மனித ஆன்மாவின் வடிவுக்குள் தன்னைப் பொருத்திக் கொள்கிறது. எனவே நியாயமற்ற மற்றும் அருவெறுப்பான சின்னங்களிலிருந்தும் கூட, எகிப்திய மக்கள் உண்மையான பக்தியையும் ஆறுதலையும் வித்தியாசமாகச் செய்தனர் என்பதில் எந்த ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. எகிப்தியர்களின் மனத்தில் மரணமில்லா வாழ்வுக்கான ஆசை வலுவாகப் பதிந்த காரணத்தால், எகிப்தின் மத வாழ்க்கை முறை அந்த விருப்பத்தை ஒட்டியே மாறியது. வேறெந்த மதத்தைவிடவும் எகிப்திய மதமே அழிவாற்ற மதமாகவே விளங்கியது. ஆனால், எகிப்து அந்நியர்களால் வெல்லப்பட்டு, அவர்களது ஆதிக்கத்தின் கீழ் வந்த பிறகு, எகிப்திய கடவுள்களின் அரசியல் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது.
கிரேக்கர்களின் வெற்றிக்குப் பிறகு, புதிய நகரான அலெக்ஸாண்ட்ரியா எகிப்துக்கு மட்டுமின்றி, ஒட்டு மொத்த ஹெல்லெனிக் (Hellenic) உலக மத வாழ்க்கையின் மையமாகவே மாறியது. முதலாம் டாலெமி (Ptolemy I) தெய்வங்களின் மும்மூர்த்திகளைக் கொண்ட செராப்பியம் (Serapeum) என்னும் மிகப் பெரிய கோயிலைக் கட்டி வழிபட்டார். ஐசிஸ் (Isis), ஹோரஸ் (Horus) ஆகிய இரு தெய்வங்களுடன், மூன்றாவதாக, ஓசிரிஸ் – ஏபிஸ் (Osiris-Apis) என்ற பழைய தெய்வத்தின் பெயருக்குப் பதிலாகச் செராபிஸ் (Serapis) என்னும் புதிய பெயரைச் சூட்டினார். இம்மூன்று கடவுளையும் தனித்தனியாகக் கருதாமல், மூன்று குணங்களும் கொண்ட ஒரே கடவுளாக வழிபட்டனர். இவர்கள் கிரேக்க ஜீயஸ் (Zeus), ரோமானிய ஜுபிடர் (Jupiter) மற்றும் பாரசீக சூரியக் (Sun) கடவுள்களுக்கு இணையாகக் கருதப்பட்டனர்.
வட இந்தியா, மேற்கு சீனா உள்பட ஹெல்லினியச் செல்வாக்கு உலகில் எங்கெல்லாம் பரவியதோ அங்கெல்லாம் இந்த வழிபாடு விரிவடைந்தது. பொது வாழ்க்கை நம்பிக்கை இன்றிக் கிடந்த நிலையில், அழியாத்தன்மை என்னும் எண்ணம் உலகளாவிய பரவலான வரவேற்பைப் பெற்றது. ‘ஆன்மாக்களின் காப்பாளர்’ என்று செராபிஸ் அழைக்கப்பட்டார். ‘மரணத்துக்குப் பிறகு’ எனத் தொடங்கும் அந்நாளைய பாடலில் ‘அவரது பாதுகாப்பில் நாம் இன்னும் இருக்கிறோம்’ என்ற வரிகள் காணப்படும். ஐசிஸ் பல பக்தர்களை ஈர்த்தாள். சொர்க்கத்தின் ராணியாகப், பச்சிளம் குழந்தை ஹோரஸ்ஸைக் கரங்களில் தாங்கியபடி அவளது உருவங்கள் கோயில்களை அலங்கரித்தன. மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு, நேர்த்திக் கடன்களும் செலுத்தப்பட்டன. நன்கு மழிக்கப்பட்ட முகங்களுடன் பிரம்மச்சாரிப் பூசாரிகள் பலிபீடத்தில் காத்திருந்தனர்.
ரோம சாம்ராஜ்ஜியத்தின் வளர்ச்சி, இந்தக் கலாசாரத்தை மேற்கு ஐரோப்பிய உலகுக்கு அறிமுகப்படுத்தியது. செராபிஸ் – ஐசிஸ் (Serapis – Isis) கோயில்கள், பூசாரிகளின் ஜெபம் மரணமில்லா வாழ்க்கை மீதான நம்பிக்கை உள்ளிட்ட ரோமானியத் தரக் கட்டுப்பாடுகள் ஸ்காட்லாந்துக்கும் ஹாலந்துக்கும் பரவின. இருப்பினும் செராபிஸ் – ஐரிஸ் மதத்துக்குக் கடுமையான பல போட்டி நிலவின. இவற்றுள் முக்கியமானது மித்ராயிஸம் (Mithraism) என்னும் பாரசீகத்தை மூலமாகக் கொண்ட மதம். புனிதமான மற்றும் நற்குணமுள்ள எருதைப் பலி கொடுக்கும் இப்போது மறந்துபோன மித்ராஸ் (Mithras), மர்மங்களை மையமாகக் கொண்ட மதம். செராபிஸ் – ஐசிஸ் மதங்களின் சிக்கலான மற்றும் நவீன நம்பிக்கைகளை விடவும் பழமையான மற்றும் முதன்மையான சிலவற்றைக் காண்கிறோம். இவை மனித இனக் கலாசாரத்தில், இரத்த உயிர்ப்பலிகள் நடைபெற்ற ஹீலியோலித்திக் காலத்துக்கு, நம்மை அழைத்துச் செல்கின்றன. மித்ராயிக் நினைவுச் சின்னங்களில் உள்ள எருதின் உடலிலிருந்து, உள்காயம் காரணமாக, எப்போதும் ரத்தம் வடிந்து கொண்டேயிருக்கும். இந்த ரத்தம் புத்துயிர் அளித்து புனர்வாழ்வு அளிக்கும். மித்ராயிசம் பக்தன் பலியான எருதின் ரத்தத்தில் குளித்தார். ரத்தம் உடலெங்கும் வழிவதற்கு வசதியாகப், பக்தன் எருதைப் பலி கொடுக்கும் மேடையின் கீழ் அமர்ந்து கொள்வார்.
இவ்விரு மதங்களும் ரோமானிய சக்ரவர்த்திகளுக்கு அடிமைகளும் குடிமக்களும் விசுவாசமாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கும் மரபுகளைக் கொண்ட தனிப்பட்ட சமயங்கள். அவற்றின் நோக்கம் தனிப்பட்ட இரட்சிப்பு மற்றும் தனிப்பட்ட அழியாமை. பழைய மதங்கள் தனி நபர் விஷயங்களில் கவனம் செலுத்தவில்லை. அவை சமூகச் சிந்தனையோடு இருந்தன. ஆண் அல்லது பெண் கடவுள்களின் தெய்வத்தன்மை நகரத்துக்கு அல்லது நாட்டுக்குத்தான். தனி நபர்களுக்கு அல்ல. பலி நிகழ்வுகள் தனியாக நடைபெறாமல், பொது மக்கள் முன்னிலையில் நடைபெறும். அப்போது கிரேக்கர்களும் இப்போது ரோமானியர்களும் அரசியலிலிருந்து மதங்களை அப்புறப்படுத்தி உள்ளனர். எகிப்தியப் பாரம்பரிய வழிகாட்டுதலுடன் மதம் வேறொரு உலகுக்குப் பின்வாங்கிச் சென்றுவிட்டது.
தனிநபர்களுக்கான அழியாமை மற்றும் இரட்சிப்புக்கான இந்தப் புதிய மதங்கள், ஏற்கனவே இருந்த பழைய மதங்களின் இதயத்தையும் உணர்வையும் எடுத்துக்கொண்டாலும் அவற்றுக்கு மாற்றாக இல்லாமல் இணைந்தே இருந்தன. உதாரணத்துக்கு முந்தைய ரோமானிய சக்ரவர்த்திகளின் சாம்ராஜ்யத்தில் எல்லா வகையான கடவுள்களின் ஏராளமான கோயில்களைக் காணலாம். ரோமாபுரியின் கடவுளான கேபிடால் ஜுபிடருக்கு (Capitol of Jupiter) ஒரு கோயிலும் ஆட்சி புரியும் சீசருக்கு ஒரு கோயிலையும் பார்க்கலாம். மன்னர்கள் கடவுள்களாக இருக்கும் சாத்தியக் கூறுகளை எகிப்திய ஃபாரோக்களிடமிருந்து சீசர்கள் கற்றுக் கொண்டனர்.
இதுபோன்ற கோயில்களுக்குச் செல்வோரின் வழிபாடு, முழுமையாக அரசியல் சார்ந்தே இருக்கும். மன்னர் மீது தனது விசுவாத்தைக்காட்ட நினைப்பவன், கோயிலில் ஒரு சிட்டிகை வாசனைப் பொருளைக் கொளுத்துவார். ஆனால், சொர்க்கங்களின் ராணியான ஐசிஸ் கோயிலுக்குச் செல்பவர்கள் தங்களுக்குள்ள தனிப்பட்ட துன்பங்கள், துயரங்கள், கஷ்டங்களைச் சொல்லி ஆறுதலையும் நிவாரணத்தையும் வேண்டுவார்கள். சில உள்ளூர் மற்றும் விசித்திரமான கடவுள்களும் உண்டு. உதாரணத்துக்கு செவில் (Sevillee) என்னும் புதிய கடவுள், நீண்ட காலமாக வழிபட்டு வந்த பழைய கார்த்தஜீனியன் வீனஸ் (Carthaginian Venus) கடவுள் வழிபாட்டைப் பாதித்தது.
படைவீரர்கள் அல்லது அடிமைகள் பராமரிக்கும் குகை அல்லது பாதாளக் கோயிலில் கட்டாயம் மித்ராஸ் (Mithras) கடவுளுக்குப் பலிபீடம் இருக்கும். விவிலியத்தைப் படிக்கவும் பூமியின் கடவுளை வழிபடவும் யூதர்கள் ஒன்றுகூடும் ஜெப ஆலயம் உண்டு. அவ்வப்போது, யூதர்களுடன் அரசு -மதம் தொடர்பாக அரசியல் ரீதியான மோதல்களும் ஏற்படுவதுண்டு. உருவ வழிபாட்டை ஏற்காத பொறாமையும் சகிப்பின்மையும் தங்கள் கடவுளுக்கு இருப்பதாக யூதர்கள் நம்புவதால், சீசருக்காக நடைபெறும் பலியிடும் சடங்குகளில் பங்கேற்பதில்லை. உருவ வழிபாடு மீதான அச்சம் காரணமாக ரோமானிய பழக்க வழக்கங்களை மதித்ததுமில்லை, வணங்கியதுமில்லை.
கிழக்கிலே, புத்தர் காலத்துக்கு முன்பிருந்தே சந்நியாசமும் வாழ்க்கையின் மகிழ்ச்சிகளை விலக்கியும் திருமணத்தையும் சொத்தையும் நிராகரித்தும் வாழ்ந்த ஆண்களும் பெண்களும் இருந்தனர். இவர்கள் வலி, துன்பம் மற்றும் தனிமை உலகின் அழுத்தங்களிலிருந்தும் மரணங்களிலிருந்தும் தப்பிக்க ஆன்மிகத்தை ஏற்றுக் கொண்டனர். கடுமையான துறவை புத்தர் எதிர்த்தாலும் அவருடைய சீடர்கள் அதாவது புத்த பிட்சுகள் துறவில் தீவிரம் செலுத்தினர். தெளிவற்ற கிரேக்க வழிபாட்டு முறைகளின் கீழ் தங்களைத் தாங்களே சிதைத்துக் கொள்ளும் முரட்டுத் துறவையும் பின்பற்றினர்.
பொ.ஆ.மு.1-ம் நூற்றாண்டு யுதேயா (Judea) மற்றும் அலெக்ஸாண்ட்ரியாவைச் சேர்ந்த யூத சமூகங்களில் இத்துறவு நிலை காணப்பட்டது. எஸ்ஸீன்ஸ் (Essenes) சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் உலக எண்ணங்களைத் துறந்து சிக்கன மற்றும் மாய சிந்தனைகளில் மூழ்கினர். பொ.ஆ.2 மற்றும் 3-ம் நூற்றாண்டுகள் முழுவதும் உலகெங்கும் வாழ்க்கை சுகங்களைத் துறந்து சந்நியாசம் மேற்கொள்ளுதலும் அழுத்தங்களிலிருந்து விடுபட இரட்சிப்பைத் தேடுதலும் நிலவின.
நிறுவப்பட்ட பழைய ஒழுங்கின் பண்டைய பாரம்பரியம் பூசாரி, கோயில், சட்டம் ஆகியவற்றின் மீதான நம்பிக்கை, பக்தி அனைத்தும் மறைந்தன. அடிமைத்தனம், கொடுமை, அச்சம் கவலை, வீணடித்தல், காட்சிப்படுத்துதல், சுய ஈடுபாடு, ஆகியவற்றுக்கு இடையேயும் சுயத்தை மறுத்தலும் மனப் பாதுகாப்பின்மையும் தொடர்ந்தன. துறவு மற்றும் தன்னார்வத் துன்பத்தை ஏற்ற நிலையில் அமைதிக்கான தேடல் நிலவியது. செராப்பியம் (Seraperum) என்னும் கோயிலில் தனது பாவங்களுக்காக அழும் விசுவாசிகளை நிரம்பச் செய்தது. மதம் மாறியவர்களை, இருளும் குருதியும் நிறைந்த மித்ராயிஸ (Mithraic) குகைக்குள் கொண்டு வந்து சேர்த்தது.
(தொடரும்)
H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.