Skip to content
Home » H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #21

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #21

38. சர்ச் – கோட்பாட்டு கிறிஸ்தவத்தின் வளர்ச்சி

நான்கு நற்செய்திகளில் இயேசுவின் ஆளுமையையும் பிரசங்கங்களையும் காண்கிறோம். ஆனால் கிறிஸ்தவ தேவாலயத்தின் கோட்பாட்டைக் குறைவாகவே பார்க்கிறோம். இயேசு நாதரின் சீடர்கள் பிறகாலத்தில் எழுதிய கடிதங்களில்தான் கிறிஸ்தவக் கோட்பாடுகளும் நம்பிக்கைகளும் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கிறிஸ்தவக் கோட்பாட்டை உருவாக்கியவர்களுள் முதன்மையானவர் புனித பால் (Paul). அவர் இயேசுவைப் பார்த்ததும் இல்லை; அவரது பிரசங்கங்களைக் கேட்டதும் இல்லை. இவருடைய இயற்பெயர் சால் (Saul). இயேசு சிலுவையில் அறையப்பட்ட பிறகு, அவரது சீடர்களைக் கொண்ட சிறிய குழுவைக் கடுமையாகத் துன்புறுத்திவந்தார். ஆனால், திடீரென ஒரு நாள் கிறிஸ்தவத்துக்கு மாறியதுடன், சால் என்ற தனது இயற்பெயரையும் பால் என்று மாற்றிக் கொண்டார்.

பால் மிகச் சிறந்த அறிவாளியாகவும் அவரது காலத்திய மத இயக்கங்களின் மீது ஆழ்ந்த பற்றும் ஆர்வமும் கொண்டவராகவும் திகழ்ந்தார். அக்காலத்தில் பிரபலமாக விளங்கிய யூத மதம் (Judaism), மித்ர மதம் (Mithraism) மற்றும் அலெக்ஸாண்ட்ரிய மதம் (Alexandrianism) ஆகிய மூன்று மதக் கோட்பாடுகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். அம்மதங்களில் காணப்பட்ட சிந்தனைகளையும் வெளிப்படுத்தும் முறைகளையும் கிறிஸ்தவப் பரப்புரைகளில் புகுத்தினார்.

இயேசுவின் மூல போதனைகள் மற்றும் தேவனின் பரலோக சாம்ராஜ்யம் குறித்த விவரங்களை வளர்க்கவோ விரிவுபடுத்தவோ எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இயேசு, நம்பிக்கை அளித்த கிறிஸ்துவராக இருந்ததுடன், யூதர்களின் நம்பிக்கை நாயகனாகவும் விளங்கினார், என பிரசங்கம் செய்தார். மனித குலத்தை மீட்பதற்காக, முற்கால நாகரிகங்களில், பழங்கால தியாகத்தால் பாதிக்கப்பட்டோரின் மரணத்துக்கு இணையானது, இயேசுவின் தியாகம் என்றார்.

மதங்கள் சமகாலத்தில் அருகருகே செழிப்பாகப் பரவும்போது, அடுத்ததின் சடங்கு மற்றும் வெளிப்புறத் தனித்தன்மைகளை ஈர்த்துக்கொள்ளும். உதாரணத்துக்குச் சீனாவில் பௌத்த மதம் பரவத் தொடங்கியபோது, லா சே (Lao-Tse) கொள்கைகளைப் பின்பற்றும் தாவோயிஸத்தின் (Taoism), மதக் கோயில்கள், பூசாரிகள் மற்றும் வழிபாட்டு முறைகளை ஈர்த்துக்கொண்டது. இதில் முக்கிய விஷயம் என்னவெனில் பௌத்தம் மற்றும் தாவோயிசக் கொள்கைகள் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி முற்றிலும் முரணானவை என்பதுதான்.

கிறிஸ்தவப் பிரசங்கங்கள், அலெக்ஸாண்ட்ரியனிஸம் மற்றும் மித்ராயிசம் மதம் ஆகியவற்றில் காணப்படும் மழித்த பூசாரி, வேண்டுதல்கள், பலிபீடம், மெழுகுவர்த்தி, ஜெபித்தல், படங்கள் ஆகியவற்றுடன் பக்திப் பாடல் வரிகளையும் இறையியல் கருத்துகளையும் ஏற்றுக்கொண்டது. அனைத்து மதங்களும் சமகாலத்தில் செழித்துக்கொண்டிருந்தாலும் அவற்றுள் பெரும்பான்மை குறைந்த அளவிலான முக்கிய வழிபாட்டு முறைகளைக் கொண்டிருந்தன. ஒவ்வொரு மதமும் பின்பற்றுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க முனைந்ததால், மதங்களுக்குள் இங்கும் அங்குமாக மாறுவோரும் கண்டிப்பாக இருந்திருக்கவேண்டும். அவற்றுள் சில அரசின் ஆதரவைப் பெற்றிருக்கலாம். ஆனால், ஏனைய போட்டி மதங்களைவிடவும் கிறிஸ்தவம் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டது. யூதர்களைப் போலவே, கிறிஸ்தவத்தைப் பின்பற்றுவோரும் சீசரைக் கடவுளாக்கி வழிபடும் முறைகளை ஏற்காததே, இதற்குக் காரணம்.

ஒஸிரிஸ் (Osiris) போன்றே இயேசுவும் கடவுள் என்றும் மனிதர்களுக்கு மரணமில்லாத நிலையான வாழ்வைத் தரவே இயேசு மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்றும் புனித பால் தனது சீடர்களுக்குப் போதித்தார். கடவுள் இயேசுவுக்கும் மனித குலத்தின் பிதாவான கடவுளுக்கும் இடையேயான உறவிலுள்ள சிக்கலான இறையியல் சர்ச்சைகளில், கிறிஸ்தவ சமூகம் சிக்கிக் கொண்டது.

இயேசு தெய்விகம் எனினும் பிதாவோடு ஒப்பிடுகையில் தாழ்ந்தும் முற்றிலும் மாறுபட்டும் இருந்தார் என்பது ஏரியான் (Arian) பிரிவினரின் வாதம். சபேலியனியன் (Sabellian) என்னும் மற்றொரு பிரிவினரோ, இயேசு பிதாவின் அம்சம் என்றும் மனிதன் தந்தையாகவும் கலைஞனாகவும் இருப்பதைப் போன்று, கடவுள் இயேசுவாகவும் பிதாவாகவும் ஒரே நேரத்தில் இருந்தார் எனச் சொல்லிக் கொடுத்தது.

ட்ரைனிடேரியன் (Trinitarian) கோட்பாடு இன்னும் நுட்பமாக, கடவுள் ஒன்று மற்றும் பிதா, சுதன், பரிசுத்த ஆவி என மூன்றும் ஆனவர் எனக் கற்றுத் தந்தது. தொடகத்தில் ஏரியான் பிரிவே தனது போட்டியாளர்களைத் தோற்கடித்து ஜெயிக்கும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், நிறைவாக, வாத விவாதங்கள் வன்முறை மற்றும் போர்களைத் தொடர்ந்து, ட்ரைனிடேரியன் வழிமுறையே அனைத்து கிறிஸ்தவ மக்களாலும் நாடுகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதீனீஷியன் நம்பிக்கையில் (Athanasian Creed) இதன் முழுமையான வெளிப்பாட்டைக் காணலாம்.

இச்சர்ச்சைகள் பற்றி நான் எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை. இயேசு நாதரின் தனிப்பட்ட பிரசங்கங்கள் வரலாற்றின்மீது தாக்கத்தை ஏற்படுத்தியதுபோல், என் கருத்துகள் வரலாற்றின் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இயேசுவின் போனைகள், நமது மனித இனத்தின் தார்மிக மற்றும் ஆன்மிக வாழ்க்கையில், நிச்சயம் புதிய சகாப்தத்தை உருவாக்கியிருப்பதுபோலவே தோன்றுகிறது. மனித குலத்தின் அனைத்துச் சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தவே, உலகளாவிய கடவுளின் தந்தைத்துவம் அனைத்து மனிதர்களின் சகோதரத்துவத்துவம் ஒவ்வொரு மனித ஆளுமையிலும் கடவுள் வாழும் கோயிலாகப் புனிதத் தன்மை ஆகியவற்றை வலியுறுத்தினார்.

இயேசுவின் போதனைகளை உள்ளடக்கிய பிரசங்கம் காரணமாக, உலகில் மனிதனுக்கு மனிதர் என்ற வகையில் புதிய அடையாளம் கிட்டியது. கிறிஸ்துவத்தை விமர்சிப்பவர்கள் சொல்வதுபோல், அடிமைகள் கீழ்ப்படிந்து நடக்க வேண்டுமென அது உபதேசித்தது நிஜம். ஆனால் சுவிசேஷ நற்செய்திகளில், பாதுகாக்கப்பட்ட இயேசுவின் போதனைகளின் சாராம்சம், மனிதனுக்கு மனிதன் அடிபணிவதற்கு எதிராக இருந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மையே. ரோமானிய சாம்ராஜ்யத்தில், மனிதர்கள் குறிப்பாக அடிமைகள் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டு மற்றவரைக் கொல்வதை மக்கள் கைதட்டி ஆர்ப்பரிக்கும் குரூர விளையாட்டே கிளாடியேட்டர். மனிதன் மீதான வன்முறைத் தாக்குதல்களை கிறிஸ்தவம் எதிர்த்ததையும் குறிப்பிட வேண்டும்.

இயேசுவுக்குப் பிந்திய இரு நூற்றாண்டுகளில் கிறிஸ்தவ மதம் ரோமானிய சாம்ராஜ்யம் முழுவதும் பரவியது. புதிய சிந்தனைகள் மற்றும் விருப்பங்களைக் கொண்ட புதிய சமயத்தில் தங்களை இணைத்துக்கொள்ள மதம் மாறியவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. மன்னர்களின் அணுகுமுறை விரோதம் மற்றும் சகிப்புத்தன்மை என அடிக்கடி மாறிக் கொண்டிருந்தது. இந்தப் புதிய சமயத்தை ஒடுக்கவும் அடக்கவும் பொ.ஆ.2 மற்றும் 3-ம் நூற்றாண்டுகளில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

நிறைவாக பொ.ஆ.303 மற்றும் அதற்குப் பிந்திய ஆண்டுகளில் மன்னன் டயோக்ளேடியன் (DIOCLETIAN) ஆட்சியில் மிகப் பெரிய அளவில் கிறிஸ்தவம் துன்புறுத்தலுக்கு உள்ளானது. தேவாலயச் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டன; பைபிள்கள் மற்றும் மத நூல்கள் பறிமுதலாகி அழிக்கப்பட்டன. கிறிஸ்தவர்களைச் சட்டப் பாதுகாப்பிலிருந்து வெளியேற்றிக் கொன்று குவித்தனர். புனித நூல்களின் அழிப்பு குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் புதிய சமயத்தின் மீதான ஈர்ப்புக்கும் ஒருங்கிணைப்புக்கும் எழுதப்பட்ட சொற்களுக்குள்ள வலிமையையும் ஆற்றலுமே காரணமென நிரூபணமாகிறது.

கிறிஸ்தவ மற்றும் யூத மதங்கள் கல்வியறிவைப் புகட்டியதால் அவை ‘புத்தக மதங்கள்’ என அழைக்கப்பட்டன. அவற்றின் கோட்பாட்டு சிந்தனைகளை மக்கள் படிக்கவும் புரிந்து கொள்ளவும் செய்தால்தான் அவை உயிர்ப்புடன் திகழமுடியும் என்ற நிலை இருந்தது. பழைய மதங்கள் இதுபோன்ற எழுத்து வடிவிலான நூல்கள் மூலம் மக்கள் அணுகவில்லை. மேற்கு ஐரோப்பாவில் நாகரிகம் குறைந்த குழுக்களின் குழப்பங்கள் நீடித்த சூழலில், கிறிஸ்தவ தேவாலயங்களே, கற்றலில் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகித்தன.

வளரும் கிறிஸ்தவ சமயத்தின் செல்வாக்கை மன்னன் டயோக்ளேடியனின் துன்புறுத்தலாலும் அடக்குமுறையாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. பெரும்பான்மை மாகாணங்களில் வசித்த மக்களும் அதிகாரிகளும் அதிகப்படியாக கிறிஸ்தவர்களாக இருந்தமையால், மன்னனின் உத்தரவு முழுமையாக அமலாகவில்லை. பொ.ஆ.311-ல் சகிப்புத்தன்மை ஆணையை மன்னர் கலேரியஸ் (Galerius) பிரகடனப்படுத்தினார். பொ.ஆ.334-ல் ரோமானிய சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியான கான்ஸ்டண்டைன் (Constantine) ஞானஸ்தானம் பெற்று கிறிஸ்தவனாக மதம் மாறினார். அதுவரை அணிந்திருந்த தெய்விக அடையாளங்களை அகற்றிவிட்டுப் படைகளின் கேடயங்களிலும் பதாகைகளிலும் கிறிஸ்தவக் குறியீடுகளைப் பொறித்தார்.

அடுத்த சில ஆண்டுகளில் ரோமானிய சாம்ராஜ்யத்தின் அதிகாரப்பூர்வ மதமாக கிறிஸ்தவம் அங்கீகரிக்கப்பட்டது. ஏனைய மதங்கள் கிறிஸ்தவத்தின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் மறைந்தன அல்லது அதன் புகழால் ஈர்க்கப்பட்டுக் கொள்கைகளை உள்வாங்கிக்கொண்டன. பொ.ஆ.390-ல் மன்னன் தியோடோசியஸ் (Theodosius) அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள பிரம்மண்ட ஜுபிடர் செராபிஸ் (Jupiter Serapis) சிலையை உடைக்க ஆணையிட்டார். பொ.ஆ.5 நூற்றாண்டு தொடங்கி ரோமானிய சாம்ராஜ்யத்தில், கிறிஸ்தவ தேவாயலங்கள் மற்றும் பாதிரியார்களைத் தவிர, வேறேந்த கோயிலோ பூசாரியோ இல்லை என்னும் நிலை உருவானது.

39. கிழக்கிலும் மேற்கிலும் சாம்ராஜயத்தை இரண்டாக உடைத்த காட்டுமிராண்டிகள்

சமூக ரீதியாகச் சிதைந்தும் தார்மிக ரீதியாக நசிந்தும் ரோமானிய சாம்ராஜ்யம் பொ.ஆ.3-ம் நூற்றாண்டு முழுவதும் காட்டுமிராண்டிகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தது. ரோமானிய சக்ரவர்த்திகள் ராணுவ எதேச்சதிகாரத்துடன் ஆண்டனர். சாம்ராஜ்யத்தின் தலைநகரை, அத்யாவசிய ராணுவத் தளவாடங்களுடன் வடக்கு இத்தாலியிலுள்ள மிலனுக்கு மாற்றினர். இத்தாலியின் பாதி தூரத்தைத் தாண்டிக் கீழ்ப்பகுதியில் ரோமாபுரி அமைந்துள்ளதால், சாம்ராஜ்யத்தின் தலைநகராக இருக்க வசதிப்படவில்லை எனக் கருதியதே முக்கியக் காரணம்.

சாம்ராஜ்யம் முழுவதும் தொடர்ந்து அமைதி நிலவியதால் ஆயுதம் ஏந்தாமலேயே வீரர்கள் நடமாடிக் கொண்டிருந்தனர். ராணுவமே தொடர்ந்து அதிகாரத்தின் ஒற்றைமையமாகத் திகழ்ந்தது. சக்ரவர்த்திகள் தங்கள் படைகளையே சார்ந்திருந்ததுடன், பாரசீக மற்றும் கீழைத்தேய மன்னர்களைப் போன்று எதேச்சிகாரத்துடன் செயல்பட்டனர். அரச மகுடத்தையும் ஆடைகளையும் டயோக்ளேடியன் அணிந்து கொண்டார்.

இருப்பினும் ரைன் மற்றும் டேன்யூப் நதிக்கரைகளை ஒட்டிய சாம்ராஜயத்தின் எல்லைப் பகுதிகளில் எதிரிகளின் நடமாட்டம் தென்பட்டது. ஃப்ராங்க் மற்றும் ஜெர்மன் பழங்குடியினர் ரைன் நதிக்கரை வரை வந்தனர். வடக்கு ஹங்கேரியில் வண்டல் (Vandal) பிரிவினரும் முன்பு டாஸியா (Dacia) என்றும் இப்போது ருமேனியா (Rumania) என அழைக்கப்படும் இடத்தில் விஸிகோத் (Visigoth) அல்லது மேற்கு கோத் (West Goth) இனத்தவர் குடியேறினர். இவற்றைத் தாண்டி தெற்கு ரஷியாவிலும் ஆலன்ஸ் (Alans) என்னும் வோல்கா (Volga) பிராந்தியத்திலும் கிழக்கு கோத் (East Goth) அல்லது ஆஸ்ட்ரோகோத் (Ostrogoth) இனத்தவர் நிறைந்திருந்தனர். இத்தருணத்தில் மங்கோலியர்கள் ஐரோப்பாவில் ஊடுருவ, ஹன்ஸ் இன மக்களோ ஆலன்ஸ் மற்றும் ஆஸ்ட்ரோகோத் மக்களை மேற்கு நோக்கி விரட்டி அடிப்பதில் தீவிரமாக இருந்தனர்.

ஆசியாவில் ரோமானிய எல்லைகள் புதிதாகப் பிறந்த பாரசீகத்தால் சுருங்கத் தொடங்கின. இந்தப் புதிய பாரசீகம் அதாவது சஸ்ஸானிட் (Sassanid) மன்னர்களின் பாரசீகம் ஆசியாவிலுள்ள ரோமானிய சாம்ராஜ்யத்துக்குக் கடுமையான போட்டியாக, அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு விளங்கியது. ஐரோப்பிய வரைபடத்தைப் பார்த்தால் சாம்ராஜ்யத்தின் விநோதமான பலவீனத்தைத் தெரிந்து கொள்ளலாம். தற்போது, போஸ்னியா (Bosnia) மற்றும் செர்பியா (Serbia) என்றழைக்கப்படும் பிராந்தியங்களில் உள்ள ஏடிரியாடிக் (Adiatric) கடலிலிருந்து சுமார் இருநூறு மைல் தூரத்தில் டான்யூப் (Danube) ஆறு ஓடுகிறது. அந்த இடத்தில் மறுநுழைவுக்கான சதுரமான கோணத்தை ஏற்படுத்துகிறது.

கடல்வழித் தொடர்பை ரோமானியர்கள் முறையாகப் பராமரிக்கவில்லை. சாம்ராஜ்யத்தின் இலத்தீன் மொழி பேசும் வடக்குப் பகுதிக்கும் கிரேக்க மொழி பேசும் கிழக்குப் பகுதிக்கும் இந்த 200 மைல் நீள நிலப்பரப்பே தொடர்புக்கான களமாக இருந்தது. டான்யூப் சதுர கோணப் பகுதியில் காட்டுமிராண்டிகளின் அழுத்தம் அதிகமாகக் காணப்பட்டது. அவர்களுடைய ஊடுருவல் மற்றும் படையெடுப்பு காரணமாக சாம்ராஜ்யம் இரண்டாக உடைவது தவிர்க்க முடியாமல் போனது.

ரோமானிய சாம்ராஜ்யம் வலுவாக இருந்திருக்கும் பட்சத்தில், கடுமையாகப் போராடி டாஷியாவை மீட்டிருக்க முடியும். ஆனால் அத்தகைய வீரியம் எதுவும் அதனிடம் காணப்படவில்லை. மாவீரன் கான்ஸ்டண்டைன் (Constantine) உண்மையிலே விசுவாசி மற்றும் பலசாலியும் கூட. பால்கன் பிராந்தியங்களிலிருந்து ஊடுருவிய கோத்களை விரட்டியடித்தார். ஆனால் டான்யூப் நதியைத் தாண்டிய எல்லைப் பகுதிகளுக்குச் செல்லப் போதிய படைபலம் அவரிடம் இல்லை. ரோமானிய சாம்ராஜ்யத்தில் நிலவிய உள்நாட்டுக் குழப்பங்களைக் கவனிக்கவே அவருக்கு நேரம் சரியாக இருந்தது. சரிந்து கொண்டிருக்கும் சாம்ராஜ்யத்தின் உணர்வைத் மீட்டெடுக்க கிறிஸ்தவத்தின் ஒற்றுமை மற்றும் ஒழுக்க சக்தியை முன்னெடுத்தார்.

ஹெலிஸ்பாண்ட் (Hellespont) என்ற பிராந்தியத்திலுள்ள பைஜாண்டியம் (Byzantium) பகுதியை நிரந்தரத் தலைநகராக மாற்ற கான்ஸ்டண்டைன் முடிவு செய்தார். பைஜாண்டியம் என்னும் இந்த நகருக்கு தனது நினைவாகக் ‘கான்ஸ்டாண்டிநோபிள்’ (Constantinople) என்னும் புதிய பெயரையும் சூட்டினார். ஆனால் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே மரணத்தைத் தழுவினார். அவரது ஆட்சிக் காலத்தின் கடைசி கட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்தது. கோத்கள் (Goths) அழுத்தம் காரணமாக வாண்டல்கள் (Vandals) ரோமானிய சாம்ராஜ்யத்துக்குள் வரவேற்கப்பட்டனர். டான்யூப் நதிக்கு மேற்கே, இப்போது ஹங்கேரி என்றழைக்கப்படும் பனோனியா (Pannonia) பகுதியில் அவர்களுக்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டன. அவர்களது படையில் இருந்தவர்கள் பெயரளவுக்குப் போர் வீரர்கள் ஆனார்கள். அவர்களது முந்தைய தளபதிகளின் கீழேயே தொடர்ந்து செயல்பட்டனர். ஆனால் ரோமாபுரி இவர்களைச் சமாளிக்கத் தவறிவிட்டது.

தனது சாம்ராஜ்யத்தை மறுசீரமைத்துக்கொண்டிருக்கும் போதே கான்ஸ்டண்டைன் மரணத்தைத் தழுவினார் என ஏற்கனவே கூறினோம். எல்லைகளில் மீண்டும் மோதல்கள் வெடித்து விசிகோத்கள் (Visogoth) கான்ஸ்டாண்டினோபிளை நோக்கி முன்னேறினர். அப்போது ஆட்சியிலிருந்த வேலன்ஸ் (Valens) மன்னன் ஏட்ரியானோபிளில் (Adrianople) தோற்கடிக்கப்பட்டார். இப்போது பல்கேரியா என அழைக்கப்படும் இடத்தில் உடன்படிக்கை கையெழுத்தானது. இது பனோனியா பகுதியில் வாண்டல்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு இணையானது. மேலோட்டமாகப் பார்க்கும்போது மன்னனின் கீழுள்ள குடிமக்கள் போல் தோன்றினாலும் உண்மையில் அவர்கள் வெற்றியாளர்களே.

பொ.ஆ.379 – 395 வரை மாமன்னன் தியோடோசியஸ் (Theodosius) எந்தப் பிரச்னையும் இன்றிச் சீராக ஆட்சி புரிந்தார். இத்தாலி மற்றும் பனோனியா படைகளுக்கு ஸ்டிலிசோ (Stilicho) என்னும் வாண்டலும் பால்கன் தீபகற்பப் படைகளுக்கு அலாரிக் (Alaric) என்னும் கோத்தும் தலைமை தாங்கினர். பொ.ஆ.4-ம் நூற்றாண்டு இறுதியில் தியோடோசியஸ் இறக்கும்போது சிறுவர்களான தனது இரு மகன்களை வாரிசுகளாக விட்டுச் சென்றார். இவர்களுள் ஆர்காடியஸ் (Arcadius) என்பவரை கான்ஸ்டாண்டினோபிளில் அலாரிக்கும் மற்றொருவரான ஹோனோரியஸை (Honorius) இத்தாலியில் ஸ்டிலிசோவும் ஆதரித்தனர். சாம்ராஜ்யத்தைக் கைப்பற்ற வாரிசுகளான ஆர்காடியஸ் மற்றும் ஹோனோரியஸ் ஆகிய இருவருக்கும் இடையேயான சண்டை என்பதைவிடவும் அலாரிக் மற்றும் ஸ்டிலிசோ ஆகியோருக்கு இடையேயான மோதல் என்பதே சரியாக இருக்கும். நிறைவாகப் பொ.ஆ.410-ல் அலாரிக் வெற்றி வாகை சூடி ரோமாபுரிக்குள் நுழைந்தார்.

பொ.ஆ.5-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் ஐரோப்பிய ரோமானிய சாம்ராஜ்யத்தின் பெரும்பான்மைப் பகுதி நாகரிக வளர்ச்சியற்ற கொள்ளைக்கார படைகளுக்கு இரையானது. அந்தத் தருணத்தில் உலகில் நிலவிய சூழலை கண் முன்னே காட்சிப்படுத்துவது கடினம். முந்தைய சாம்ராஜ்யத்தில் செழிப்பாக விளங்கிய ஃபிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி மற்றும் பால்கன் தீபகற்பம் உள்ளிட்ட பெரு நகரங்கள் வறண்டும் மக்கள் குடியேற்றம் குறைந்தும் சிதைந்தும் காணப்பட்டன.

மக்களின் வாழ்க்கை, பிடிமானம் இன்றியும் சராசரியாகவும் நிச்சயமற்றதாகவும் இருந்தது. தொலைவிலிருந்து இயக்குபவராகவும் எளிதில் அணுக முடியாத வகையிலும் மன்னன் இருந்த காரணத்தால், உள்ளூர் அதிகாரிகள் அகங்காரத்துடனும் ஆணவத்துடனும் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டினர். படிப்பறிவு இல்லாத பாதிரியார்களுடன் தேவாயலங்கள் இயங்கின. கல்வி அறிவு குறைந்தும் மூட நம்பிக்கையும் அச்சமும் நிறைந்திருந்தன. கொள்ளைகாரர்கள் அழித்ததுபோக, மீதி இடங்களில் தப்பிப் பிழைத்த புத்தகங்களும் ஓவியங்களும் சிலைகளும் கலைப் பொருள்களும் காணப்பட்டன.

கிராமங்களில் மக்கள் வாழ்க்கை இன்னும் சீரழிந்தது. ரோமானிய உலகம் களை இழந்து அசுத்தமானது. தொடர்ந்து நடைபெற்ற போர்கள் மற்றும் கொள்ளை நோய் காரணகாக விவசாய நிலங்களைக் கவனிக்க ஆளின்றி புதர்மண்டின. சாலைகளையும் காடுகளையும் கொள்ளையர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். எதிர்க்க ஆளே இல்லாமல் எல்லாப் பிராந்தியங்களிலும் கொள்ளையர்கள் நுழைந்து ஆக்கிரமித்தனர். தங்களது விசுவாசிகளைத் தலைவர்களாக நியமித்து அவர்களுக்கு ரோமானியர்களின் அதிகாரப்பூர்வ பட்டங்களைச் சூட்டினர்.

அரை-நாகரிகக் காட்டுமிராண்டிகளாக இருந்தாலும் நகரங்களைக் கையகப்படுத்தி, அவ்வூர் பெண்களை மணந்தும் அவர்களுடன் இணைந்தும் இலத்தீன் மொழியையும் ஏற்றுக் கொண்டனர். ஆனால் பிரிட்டினிலிருந்து ரோமானிய சாம்ராஜ்யத்தை அழித்த ஜூட்(Jute), ஆங்கிலே (Angle) மற்றும் சாக்ஸன் (Saxon) பிரிவினர் விவசாயிகள் என்பதால் நகரங்களைக் கைப்பற்றுவதில் ஆர்வம் செலுத்தவில்லை. தெற்கு பிரிட்டனில் குடியிருந்த ரோமானிய மக்களை முழுவதுமாக அழித்துவிட்டு, அவர்களது சொந்த மொழியான டியோடோனின் (Teutonic) பேச்சுவழக்கு மொழியை அறிமுகப்படுத்தினர். இந்த மொழியே காலப்போக்கில் ஆங்கிலமானது.

சீர்குலைந்து நொறுங்கிப்போன ரோமானிய சாம்ராஜ்யதின் மூலைமுடுக்கெல்லாம் ஜெர்மன் மற்றும் ஸ்லொவேக் பழங்குடியினர் ஊடுருவிக் கொள்ளையடித்தனர்; தங்களுக்கான குடியிருப்புகளையும் நிறுவினர். இருப்பினும் அவர்கள் பற்றிய விவரங்களைப் பட்டியலிட இந்நூலில் போதிய இடமில்லை.

கிழக்கு ஜெர்மனிக்குள் ஊடுருவிய வாண்டல்கள் பனோனியாவில் குடியேறினர் என்பதை ஏற்கெனவே பார்த்தோம். அங்கிருந்து பொ.ஆ.425-ல் இடைப்பட்ட ஸ்பெயின் மாகாணங்களுக்குள் நுழைந்தனர். அங்கு ஏற்கனவே தெற்கு ரஷியாவிலிருந்து வந்த விஸிகோத் மற்றும் ஏனைய ஜெர்மன் பழங்குடியினர் மன்னர்களாகவும் பிரபுக்களாகவும் அதிகாரத்திலிருப்பதைக் கண்டனர். எனவே வாண்டல்கள் ஜென்செரிக் (Genseric) என்பவன் தலைமையில் ஸ்பெயினை விட்டுப் கப்பலில் புறப்பட்டு பொ.ஆ.429-ல் வடக்கு ஆப்பிரிக்காவை அடைந்தனர். பொ.ஆ.439-ல் கார்த்தேஜைக் கைப்பற்றித் தங்களுக்கென கப்பற்படையை உருவாக்கிக் கொண்டனர். அரை நூற்றாண்டுக்கு முன்பு விசீகோத் மன்னனான அலாரிக் (Alaric) கொள்ளையிலிருந்து ரோமாபுரி மீண்டு எழுவதற்குள், வாண்டல்கள் ரோமாபுரியை கைப்பற்றித், தங்கள் பங்குக்குக் கொள்ளையடித்தனர். தொடர்ந்து சிஸிலி, கார்ஸிகா, சார்டீனியா உள்ளிட்ட மத்தியத் தரைக் கடல் பகுதிகளை முற்றுகையிட்டுக் கைப்பற்றினர். 700 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்தேஜ்கள் நிறுவிய கடல் சாம்ராஜ்யத்துக்கு இணையாக, வாண்டல்கள் மத்தியத் தரைக் கடல் பிராந்தியங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பொ.ஆ.477-ல் வாண்டல்களின் ஆட்சி முடிவுக்கு வரும் தருணத்தை எட்டியது. சாம்ராஜ்யம் முழுவதையும் ஒரு சிலரே தங்கள் அதிகாரத்தில் வைத்திருந்தனர். மிகச் சரியாக அடுத்த நூற்றாண்டில் முதலாம் ஜஸ்டினியன் (Justinian I), பொலிவிழந்த கான்ஸ்டாண்டினோபிள் ரோமானிய சாம்ராஜ்யத்தை மீண்டும் உருவாக்க, இழந்த பகுதிகள் அனைத்தையும் வென்று மீட்டெடுத்தார்.

இதுவரை வாண்டல்களின் சாகசங்களைப் பார்த்தோம். அனைத்து நாசக்காரர்களிலும் மோசமான எந்தவித ஒட்டும் உறவுமற்ற, மிகவும் சந்தேகத்துக்குரிய, மங்கோலிய ஹன்ஸ் (Mangolian Huns) அல்லது தார்தர்களை (Tartars) ஐரோப்பிய உலகம் சந்தித்தது. ஐரோப்பிய உலகம் இதுவரை எதிர்கொண்டதில்லை என்று சொல்லும் அளவுக்கு, மஞ்சள் நிறம் கொண்ட கொடுங்கோலர்களாக மங்கோலிய ஹன்ஸ் விளங்கினார்கள்.

(தொடரும்)

H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
ஜனனி ரமேஷ்

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *