‘எந்த வேலைக்குப் போகவேண்டும் என்பது உங்களுடைய நெடுநாளைய கனவு?’ அலுவலகத்தில் மெய்நிகர் அரட்டை அறையில் நடந்த விளையாட்டு ஒன்றில் கேட்கப்பட்ட கேள்வி இது. ‘சுற்றுலா வழிகாட்டியாக உலகம் முழுவதும் சுற்றி வரவேண்டும் என்பதே என் கனவு’ என்று பதில் சொல்லியிருந்தார் உடன்பணியாற்றும் நண்பர்.
‘ஆஹா! எத்தனை அருமையான கனவு, நமக்கு ஏன் இது தோன்றவில்லை’ என்று நினைத்துக்கொண்டேன். அவர் கனவு கிடக்கட்டும், உன்னுடைய கனவு வேலை என்ன என்று கேட்கிறீர்களா? புத்தகங்கள் படிப்பதும் எழுதுவதும் மனதுக்கு நெருக்கமானவை என்பதால் எழுத்தாளராக வேண்டும் என்பதே இளவயதுக் கனவாக இருந்தது.
கூடவே உலகைச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்பதும் நீண்டநாள் ஆசை. இந்தக் கனவுக்கும் ஆசைக்கும் ஒவ்வொரு இரவும் கதை சொல்லித் தூங்க வைத்த பெற்றோரும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஜோனதன் ஸ்விஃப்ட் எழுதிய கலிவரின் பயணக் கதைகளைச் சுவாரசியமாகச் சொல்வார் அம்மா. ரஷ்ய நாட்டுக் கதைகள், ஜூல்ஸ் வெர்ன், கல்வி கோபாலகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களின் அறிவியல் தகவல்களைக் கொண்ட பயணக் கதைகள் என்று நூலகத்தில் இருந்து பல புத்தகங்களை எடுத்துவந்து தருவார். இயற்கை பற்றிய வர்ணனைகளும் இதுவரை கேள்விப்பட்டிராத மக்களின் வாழ்க்கைமுறை குறித்த விவரிப்பும் நேரில் சென்று அவற்றையெல்லாம் பார்க்கவேண்டும் என்ற ஆவலை உண்டாக்கியது.
விவரம் தெரிந்த நாளில் இருந்தே உலகம் எப்படித் தோன்றியது என்ற கேள்வியும் மனதில் கனன்றது. குரங்கில் இருந்து பிறந்து பரிணாம வளர்ச்சியடைந்த ஆதிமனிதன் காட்டிலும் மேட்டிலும் அலைந்து திரிந்து நாளடைவில் நிரந்தரமாக ஓர் இடத்தில் இருப்பிடத்தை அமைத்துக்கொண்டு வாழப் பழகிய கதை சுவாரசியமாக இருந்தது.
ஆதி மனிதன் பல்விதத் தாவரங்களும் உயிரினங்களும் வசிக்கும் பசும் காடுகளையும் அலைவீசும் கடலையும் நெடிதுயர்ந்த பனிமூடிய சிகரங்களைக்கொண்ட மலைகளையும் ஆழமான பள்ளத்தாக்குகளையும் பரந்த வெளிகளில் பாய்ந்து செழிப்பூட்டும் நதிகளையும் பரவசத்தோடு பார்த்தானா? ஒவ்வொரு நிலப்பரப்பும் மலையும் பள்ளத்தாக்கும் வெவ்வேறு வடிவத்திலும் நிறத்திலும் இருப்பதையும் நதிகளின் பாய்ச்சலையும் ரசித்தானா? பல்வேறு விதமான உயிரினங்களையும் அவற்றின் தோற்றத்தையும் செயல்பாடுகளையும் பார்த்துப் பயந்தானா? இப்படி ஒன்றல்ல, பற்பல கேள்விகளும் கூடவே எழுந்தன.
தொடக்கத்தில் பருவநிலை மாற்றம், இயற்கையின் சீற்றம் போன்றவற்றில் இருந்தும் விலங்குகளிடம் இருந்தும் தப்பிப் பிழைப்பதற்கான வசிப்பிடங்களை அமைத்தவன் கலைநயம் மிகுந்த வழிபாட்டுத் தலங்களையும் சிலைகளையும் கட்டடங்களையும் எப்போதிருந்து உருவாக்கத் தொடங்கினான் என்பதற்குத் தர்க்கரீதியான விளக்கத்தைத் தெரிந்துகொள்ளும் ஆவல் ஏற்படுவதும் இயல்புதானே!
அறிவியல், தொழில்நுட்பம், தகவல் தொடர்பு எல்லாம் பெருவளர்ச்சி பெற்றுள்ள தற்காலத்தில் பெரிய கட்டடங்களை அமைப்பதற்கு இத்தனை மெனக்கெட வேண்டியிருக்கிறதே, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இதை எப்படிச் சாதித்தனர் என்பதைப் புரிந்துகொள்வதற்கு உதவும் வகையில் மிகச் சில இடங்களில் மட்டுமே பதிவுகளோ சான்றுகளோ கிடைத்துள்ளன.
அந்தக் காலகட்டத்தில் பயன்படுத்திய கச்சாப் பொருட்கள், கருவிகள், இயந்திரங்கள் போன்றவை குறித்துப் பல வருட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு வரலாற்றுத் துறை வல்லுநர்களும் புதைபொருள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் கட்டடக் கலைஞர்களும் ஓரளவுக்குக் கணித்துச் சொல்ல முடிந்திருக்கிறது. இந்த விளக்கங்களில் இருக்கும் வெற்றிடத்தை நம்முடைய தற்போதைய புரிதலில் இருந்தும் ஊகங்களின் வழியாகவும் நிரப்பிக்கொள்கிறோம்.
இயற்கையாக அமைந்தவையோ செயற்கையாக மனிதனால் கட்டப்பட்டவையோ அழகும் கலைநயமும் மிளிரும் இடங்களைப் பார்க்கையில் பரவசமும் மகிழ்ச்சியும் பொங்குகின்றன. இந்தப் பாரம்பரியமிக்க களங்களையும் செல்வங்களையும் காலாகாலத்துக்கும் பாதுகாத்து வைக்கவேண்டும், அடுத்த தலைமுறையினரும் பார்த்து மகிழ்வதோடு மனித இனத்தின் வளர்ச்சியையும் இந்த உலகின் கதையையும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணமும் வலுவாக ஏற்படுகிறது.
ஆனால் வரலாற்றுச் சிறப்புமிக்க களங்களைப் பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணத்துக்குச் செயல்வடிவம் கொடுப்பது தனி ஒருவரால் நிறைவேற்றக் கூடியதல்ல, கூட்டு முயற்சியால் மட்டுமே சாதிக்கமுடியும்.
ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) என்ற அமைப்பின் செயல்பாடுகள் குறித்து உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். உலக நாடுகளிடையே அமைதியையும் ஒற்றுமையையும் நல்லுறவையும் பேணுவதற்காக நிறுவப்பட்ட ஐ.நா., மனித இனத்தின் மேம்பாட்டுக்கான முயற்சிகளைச் செய்துவருகிறது. இதற்கென பல்வேறு துணை அமைப்புகளையும் நிறுவனங்களையும் அது வெவ்வேறு காலகட்டங்களில் தொடங்கியது.
’ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு’ ஐ.நா.வின் முக்கியத் துணை நிறுவனங்களில் ஒன்றாகும். சுருக்கமாக யுனெஸ்கோ (UNESCO) என்று அழைக்கப்படும் இந்த நிறுவனம் 1945ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி நிறுவப்பட்டது. ஐ.நா.வின் உறுப்பு நாடுகளிடையே கல்வி, அறிவியல், பண்பாடு, தகவல் பரிமாற்றம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் பணியைச் செய்கிறது. பல்வேறு நாட்டு மக்கள் தங்களின் அறிவு வளம், சிந்தனை, கருத்து ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்வது மூலம் நாடுகளுக்கிடையே அமைதியையும் புரிதலையும் பரப்ப முடியும் என்று உறுதியாக நம்புவதோடு அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்கிறது.
உலக நாடுகளில் அமைந்துள்ள பாரம்பரியக் களங்களைப் பாதுகாத்து நீடித்திருக்கச் செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த யுனெஸ்கோ இயற்கை மற்றும் பண்பாடு சார்ந்த பாரம்பரியக் களங்களைப் பாதுகாக்கும் பன்னாட்டு ஒப்பந்தம் ஒன்றை 1972ஆம் ஆண்டில் இயற்றியது. இதன்படி ஒவ்வொரு நாடும் அதன் எல்லைக்குள் அமைந்திருக்கும் இயற்கை, பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த களங்களை அடையாளம் கண்டு அவற்றைப் பாதுகாக்கவும் தற்போதைய நிலைமாறாமலும் சேதமைடையாமலும் வைத்துக்கொள்ளவும் யுனெஸ்கோவின் வழிகாட்டுதலை நாடலாம்.
உலகப் பாரம்பரியம் என்ற அடையாளம் உலகின் எந்த நாட்டிலும் நிலப்பரப்பிலும் இருக்கும் களத்துக்கும் பொருந்தும். இவை ஒட்டுமொத்த மனித இனத்தின் சொத்து. எல்லா நாடுகளையும் உலகப் பாரம்பரிய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு அதில் கையெழுத்திடச் செய்வது உலகப் பாரம்பரியத்தின் முதன்மைக் குறிக்கோள். அத்துடன், உறுப்பு நாடுகள் தத்தம் எல்லைக்குட்பட்ட நிலத்தில் இருக்கும் களங்களை உலகப் பாரம்பரியப் பட்டியலில் இணைப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்கிறது.
அவ்வாறு பட்டியலில் சேர்க்கப்பட்ட களங்களைப் பாதுகாப்பதற்காகத் தீட்டப்பட்ட மேலாண்மைத் திட்டங்களையும் அவற்றை நடைமுறைப்படுத்தியது குறித்த அறிக்கையையும் தொடர்ச்சியான கால இடைவெளியில் வெளியிடுமாறு அந்தந்த நாட்டின் அரசுகளை யுனெஸ்கோ கேட்டுக்கொள்கிறது. கூடவே, பாரம்பரியக் களத்தைப் பாதுகாக்கத் தேவையான தொழில்நுட்பப் பயிற்சியையும் வல்லுநர் வழிகாட்டுதலையும் வழங்குகிறது. அழிவுநிலையை எட்டிய களங்களைப் பாதுகாக்கத் தேவையான அவசரகால உதவியையும் அளிக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, உறுப்பு நாடுகளின் மக்களிடையே உலகப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஊட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுகிறது. களத்தைப் பாதுகாக்கும் பணியில் பொதுமக்கள் பங்குகொள்வதை ஊக்குவிக்கிறது. உறுப்பு நாடுகள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.
பாரம்பரியக் களங்களைப் பாதுகாக்கும் பன்னாட்டு ஒப்பந்தம் 1972ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது என்று பார்த்தோம். 1975ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு இருபது நாடுகள் உறுப்பினராகச் சேர்ந்தன. அடுத்து, அழிவுநிலையில் இருக்கும் களங்கள் என்னென்ன என்று பட்டியலிடப்பட்டது. இவற்றையெல்லாம் பாதுகாக்க உலக நாடுகளின் சிறப்பு கவனிப்பும் உதவியும் தேவை என்பதை வலியுறுத்த பட்டியல் அவசியமாக இருந்தது. இதற்கான நிதியைத் திரட்டுவதற்காக உலகப் பாரம்பரிய நிதியம் அமைக்கப்பட்டது.
உலகப் பாரம்பரியப் பட்டியலில் ஒரு களத்தை இணைப்பதற்கான விதிமுறைகள் 1978ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டன. அந்த வருடம் பன்னிரெண்டு களங்கள் உலகப் பாரம்பரியப் பட்டியலில் இணைக்கப்பட்டன. பட்டியலில் இடம்பிடித்த முதல் பாரம்பரியக் களம் எது தெரியுமா? எக்குவடார் நாட்டைச் சேர்ந்த கலாபகஸ் தீவுகளுக்குத்தான் அந்தப் பெருமை கிடைத்தது.
உயிரினங்களின் தோற்றத்தைப் பற்றிய கோட்பாடு உருவாகக் காரணமாக இருந்த உலகப் பாரம்பரியக் களத்திலிருந்து உலகின் கதையைத் தெரிந்துகொள்ளும் நம் பயணத்தைத் தொடங்குவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
(தொடரும்)
பயணமும், பயணம் பற்றிய நினைவுகளும், கற்பனைகளும் அது பற்றிய கதைகளும் பரவசமூட்டும் ஒன்று. மனித குல வரலாற்று பயணம் என்பது படிக்க சுவாரஸ்யமானது. படிப்போம். தோழி கார்குழலியின் மொழிபெயர்ப்பு கதைகள் மிக பிரசித்தம்.
மிக்க நன்றி