Skip to content
Home » உலகின் கதை #2 – டார்வினை உருவாக்கிய பயணம்

உலகின் கதை #2 – டார்வினை உருவாக்கிய பயணம்

கலாபகஸ் தீவு

பள்ளியில் அறிவியல் பாடத்தை ஆர்வமாகக் கற்றவர் என்றால் கலாபகஸ் தீவுகளைப் பற்றி அறிந்திருப்பீர்கள். இல்லையென்றால் பரவாயில்லை. சார்லஸ் டார்வினின் பெயரை நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆமாம், மனித இனத்துக்குக் குரங்கினத்தோடு உள்ள தொடர்பு, உயிரினங்களின் தோற்றம், படிவளர்ச்சிக் கொள்கை, தக்கன பிழைக்கும், இயற்கைத் தேர்வு, பொது மரபுவழி ஆகிய அறிவியல் கோட்பாடுகளை வகுத்தவர்.

இந்தக் கோட்பாடுகள் புதிய சிந்தனை, பார்வை ஆகியவற்றின் விளைவு என்பதால் புரட்சிகரமானவையாகவும் இருந்தன. இவை முழுமையான வடிவம் பெற பல பத்தாண்டுகள் ஆனது என்றாலும் சார்லஸ் டார்வின் கலாபகஸ் தீவுகளுக்கு மேற்கொண்ட பயணமும் ஒரு முக்கிய காரணம்.

அந்தப் பயணம் அவர் சிந்தனையை எப்படியெல்லாம் வடிவமைத்தது? கலாபகஸ் தீவுகளில் என்ன பார்த்தார்? வேறு எங்கும் காணக்கிடைக்காத விஷயங்கள் என்ன அங்கே இருந்தன? கலாபகஸ் தீவுகள் ஏன் முதல் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறிய வேண்டுமென்றால் சார்லஸ் டார்வினின் வாழ்க்கை பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.

சார்லஸ் டார்வின் 1809ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி இங்கிலாந்தில் இருக்கும் ஷ்ரூஸ்பரி என்ற ஊரில் பிறந்தார். அவர் தந்தை ராபர்ட் டார்வினும் தந்தை வழிப் பாட்டனார் எராஸ்மஸ் டார்வினும் மருத்துவர்கள். சொல்லப்போனால் டார்வின் குடும்பத்தில் பல மருத்துவர்கள் இருந்தனர். எனவே, சார்லஸ் டார்வின் தந்தை சொல்படி எடின்பரோ பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்; ஆனால் படிப்பை முடித்துப் பட்டம் பெறவில்லை. வகுப்பறையில் அமர்ந்து பேராசிரியர்களின் உரைகளைக் கேட்பதையும் அறுவை சிகிச்சை செய்வதையும் அறவே வெறுத்தார்.

மருத்துவப் படிப்பை முடிக்கவில்லை என்றால் இறையியல் படித்துச் சமயக் குருவாகும் வழியையாவது பார் என்று சொன்னார் சார்லஸின் தந்தை. அந்தக் காலத்தில் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கவோ ஆராய்ச்சிகளோ செய்யவேண்டுமென்றால் சமயக்கல்வியையும் கற்றிருப்பது அவசியமாக இருந்தது. தந்தையின் கட்டளைப்படி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தாலும் சார்லஸுக்குச் சமயப் படிப்பிலும் நாட்டமில்லை. பின்னாளில் சமயத்தின் பெயரில் உலவிவந்த கோட்பாடுகளைப் புரட்டிப் போடும் கண்டுபிடிப்புகளை வெளியிடப்போகிறோம் என்பது அவருக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை. என்றாலும் இறையியல் படிப்பு தனக்கானதல்ல என்பது தெளிவாகப் புரிந்தது.

மருத்துவப் படிப்பைப் பாதியில் நிறுத்திய சார்லஸ் வேறு பல விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஈடுபட்டார். இயற்கையின்மீதும் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சிகளைச் செய்வதிலும் இருந்த ஆர்வத்தால் இயற்கையியல் அறிஞராக வேண்டும் என நாட்டம்கொண்டார்.

இறந்துபோன விலங்குகளைப் பதப்படுத்தும் கலையையும் தாவரங்களை வகைப்படுத்துவது பற்றியும் துறை வல்லுநர்களிடம் கற்றுக்கொண்டார். கடல்வாழ் உயிரினங்கள் குறித்த ஆய்வினைச் செய்யும் பேராசிரியர் ஒருவருடனும் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. கடல்வாழ் முதுகெலும்பிலிகளின் வளர்ச்சி, உறவு குறித்த ஆய்வுகள் மற்ற விலங்குகளின் பரிணாம வளர்ச்சி குறித்த புதிர்களை விடுவிக்கும் என்று இந்தப் பேராசிரியர் நம்பினார் என்பது கவனத்துக்குரியது.

வண்ணத்துப்பூச்சிகளையும் வண்டுகளையும் ஊன்றிக் கவனித்துச் சேகரிப்பதில் ஆர்வம்கொண்டார் சார்லஸ் டார்வின். பூச்சியினங்கள் பற்றிய அவருடைய கண்டுபிடிப்புகள் புகழ்பெற்ற அறிவியல் ஏடுகளில் வெளியாகின. இதன்மூலம் சார்லஸ் ஹென்ஸ்லோ என்ற தாவரவியல் துறைப் பேராசிரியரின் அறிமுகம் கிடைத்தது. அவருடன் நெருக்கமாகப் பழகியதோடு தன்னுடைய வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டார் சார்ல்ஸ்.

தன் பாட்டனார் எராஸ்மஸ் டார்வின் பரிணாமக் கோட்பாடு பற்றி எழுதியிருந்த குறிப்புகளைப் படித்த சார்லஸுக்கு அந்தக் கருத்துகளின்மீது ஈர்ப்பு ஏற்பட்டது. தன்னைப் போலவே இயற்கை வரலாற்றில் ஆர்வம்கொண்ட சகமாணவர்களுடன் பழகும் வாய்ப்பு பரிணாமக் கோட்பாடு குறித்த புதிய கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள உதவியது.

எடின்பரோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களிலும் மாணவர்களிலும் பலர் சமயம் சார்ந்த கருத்துகளை எதிர்க்கும் புரட்சிகரமான சிந்தனை கொண்டவர்களாக இருந்தனர். அவர்களின் ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியீடுகளையும் ஆர்வத்தோடு படித்ததோடு அவர்களோடு பழகும் வாய்ப்பையும் பெற்றார் சார்லஸ் டார்வின். அந்தப் புதுமையான, புரட்சிகரமான கருத்துகள் எல்லாம் அந்த இளைஞன் அறியாமலே ஆழ்மனதில் விதையாக ஊன்றின. அவையெல்லாம் முழுமையான வடிவம் பெற்றுக் கோட்பாடுகளாக முற்றிக் கனியக் காலமும் அனுபவமும் ஒரே புள்ளியில் இணையக் காத்திருப்பது அவசியமாக இருந்தது.

1830களில் இயற்கை வரலாறு, நிலவியல் குறித்த ஆராய்ச்சிக்காகச் சகமாணவர்களுடன் கேனரி தீவுகளுக்குப் பயணம்செல்லும் யோசனை இருந்ததால் இன்னொரு பேராசிரியரிடம் நிலவியல் பற்றிய செயல்முறைப் பாடத்திட்டம் ஒன்றையும் பயின்றார் சார்லஸ் டார்வின்.

நண்பர்களுடன் சில நாட்களைக் கழித்துவிட்டு வீடு வந்தவருக்குக் கடிதம் ஒன்று காத்திருந்தது. 1831ஆம் ஆண்டு எச்.எம்.எஸ். பீகிள் என்ற கப்பல் தென் அமெரிக்காவின் கடற்கரைப் பகுதிகளில் நீர்நிலைப் பரப்பாராய்ச்சித் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஆயத்தமானது. ஹிஸ் அல்லது ஹெர் மெஜெச்டிஸ் சர்விஸ் என்பதன் சுருக்கமே எச்.எம்.எஸ்; அதாவது ’மாட்சிமை பொருந்திய அரசரின் அல்லது அரசியின் சேவையில்’ என்பது பொருள்.

கப்பலின் தலைமை மாலுமியாகப் பொறுப்பேற்றிருந்த ராபர்ட் ஃபிட்ஸ்ராய் ஒரு விஞ்ஞானியும்கூட. இரண்டு ஆண்டுகள் உலகைச் சுற்றிவந்து ஆய்வுகளை நடத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. அந்தப் பயணத்தில் சார்லஸ் டார்வின் கலந்துகொள்ளவேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தைக் கடிதத்தில் தெரிவித்திருந்தார் பேராசிரியர் சார்ல்ஸ் ஹென்ஸ்லோ. ஆனால் அந்தப் பயணத்தினால் எந்தப் பயனும் இல்லை, அது வெட்டிவேலை என்று நினைத்த சார்லஸின் தந்தைக்குப் பயணக் கட்டணத்தைத் தருவதில் விருப்பமில்லை. தந்தையை ஒரு வழியாகச் சமாளித்துப் பயணக் குழுவோடு இணைந்துகொண்டார் இளம் சார்ல்ஸ்.

இரண்டு ஆண்டுகள் அல்ல, ஐந்து ஆண்டுகள் நீடித்த அந்தப் பயணம் சார்லஸின் வாழ்வில் மட்டுமல்ல, இயற்கை வரலாறு, அறிவியல் துறைகளிலும் மாபெரும் திருப்புமுனையாக இருக்கப் போகிறது என்பது அப்போது யாருக்கும் தெரியவில்லை, ஏன் சார்லஸுக்கே கூடத் தெரியவில்லை.

வாழ்க்கையில் பல விஷயங்கள் அப்படித்தானே ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை போலத் தொடக்கத்தில் தோற்றமளிக்கின்றன. எல்லாப் பயணங்களும் முன்பே நிர்ணயிக்கப்பட்ட வாழ்க்கையின் இலக்கை நோக்கி நம்மை இட்டுச் செல்கின்றன என்பதைக் கடந்தகாலத்தை அசைபோடுகையில்தான் புரிந்துகொள்ளமுடிகிறது.

பீகிளின் பயணக் கதை

1831ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கிலாந்தில் இருந்து எச்.எம்.எஸ். பீகிளின் பயணம் தொடங்கியது. அப்போது சார்லஸ் டார்வினின் வயது 22. கடல் பயணம் எளிதாக இருக்கவில்லை. உப்புக் காற்றும் அலைகளின் ஆட்டமும் குமட்டலை ஏற்படுத்தியது. ஒரே இடத்தில் அடைந்து கிடப்பது உள்ளத்தையும் பாதித்தது. இருந்தும் பயணத்தைத் தொடர்ந்தார். கப்பல் நின்ற இடங்களில் கள ஆய்வுக்காகச் சில வாரங்கள் நிலத்தில் வசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது; அது சிறிது இளைப்பாறுதலைத் தந்தது. இந்தப் பயணக்கதையை ‘பீகிளின் கடற்பயணம்’ (The Voyage of the Beagle) என்ற புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார் சார்லஸ் டார்வின்.

முதலில் ஸ்பெயின் நாட்டின் கேனரித் தீவுக்கூட்டத்தின் டெனெரிஃப் தீவை அடைந்தார்கள். ஆனால் கப்பலில் இருப்பவர்கள் தரை இறங்க அனுமதி கிடைக்கவில்லை. பயணிகளுக்குக் காலரா தொற்று இருக்குமோ என்ற பயமே அதற்குக் காரணம். மறுநாள் காலை கப்பலில் இருந்தபடியே கேனரித் தீவின் பின்னணியில் சூரியன் உதித்ததைப் பார்த்ததாகவும் அந்த அழகிய காட்சி அந்த நாளை இனிமையானதாக மாற்றியது என்றும் எழுதுகிறார் சார்லஸ் டார்வின்.

அடுத்து வட ஆப்பிரிக்காவின் மேற்குக் கரையோரம் இருக்கும் கேப் வெர்டே தீவுக்கூட்டத்தின் செயிண்ட் ஜேகோ தீவின் கரையை அடைந்தது கப்பல். எந்தக் காலத்திலோ வெடித்துக் கொட்டிய எரிமலைக் குழம்பும் சாம்பலும் ஆறிப்போய் நிலமெங்கும் கெட்டிப்பட்டு இருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பச்சைப் புல்லோ பூண்டோ தெரியவில்லை. இருந்தாலும் ஆட்டு மந்தைகளும் மாடுகளும் திரிந்தன.

வருடத்தில் எப்போதாவதுதான் மழை பெய்தது என்றாலும் கொட்டித் தீர்த்துவிடும். அந்தச் சமயத்தில் நிலம் முழுவதும் பச்சை போர்த்திக்கொள்ளும். மழைப் பொழிவு நின்றதும் எல்லாம் வறண்டுவிடும். இந்தக் காய்ந்த புல்லைத்தான் ஆடு மாடுகள் மேயும். தீவின் உட்பகுதியில் பல சிற்றூர்கள் இருந்தன. அங்கெல்லாம் நன்னீர் ஊற்றுகள் நிலத்தைச் செழிப்பாக்கின. அந்த இயற்கை எழில் கொஞ்சும் அழகு கண்ணுக்கு விருந்தாக இருந்தது.

இந்தத் தீவில் இருந்த மீன்கொத்திப் பறவை நிறம், வசிப்பிடம், பறக்கும் விதம், பழக்கவழக்கம் என எல்லாவற்றிலும் இங்கிலாந்தில் காணப்படும் இனத்தில் இருந்து பெரிதும் மாறுபட்டிருந்தன என்பதைக் கவனித்தார் சார்லஸ் டார்வின். வறண்ட பள்ளத்தாக்கில் இருந்த இலையுதிர்ந்த மரக் கிளைகளில் அமர்ந்தபடி வெட்டுக்கிளிகளையும் பல்லிகளையும் பிடித்துத் தின்றன.

செயிண்ட் ஜேகோ தீவின் துறைமுகத்துக்குள் கப்பல் நுழைகையில் எரிமலைப் பாறைகளாலான செங்குத்தான ஓங்கலில் அகன்ற வெண்ணிறப் பட்டையொன்று பல மைல் தூரத்துக்கு நீண்டிருந்தது. அந்த பட்டையில் கிளிஞ்சல்கள் புதைந்திருந்ததே வெண்ணிறத்துக்குக் காரணம்.

காலப்போக்கில் நிலமட்டமும் கடல்மட்டமும் மேலேயும் கீழேயுமாக எழுவதும் விழுவதுமாக இருந்ததால் இந்த நிலவியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பது புரிந்தது. அந்தச் சமயத்தில் நிலவியல் தொடர்பான புத்தகம் ஒன்றை எழுதவேண்டுமென எண்ணினார் சார்லஸ் டார்வின். நாம் ஒன்று நினைக்க வாழ்க்கை வேறொன்றை முடிவு செய்கிறது என்பதற்கு இதைவிடவும் பொருத்தமான சான்று இருக்கமுடியாதல்லவா?

(தொடரும்)

பகிர:
கார்குழலி

கார்குழலி

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதுபவர். பல்வேறு அரசுத் துறைகளோடும் பன்னாட்டு அரசு சாரா அமைப்புகளோடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடும் நாளிதழ்களோடும் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். துலிகா, பிரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்களில் குழந்தைகளுக்காக நாற்பத்தைந்துக்கும் அதிகமான நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.View Author posts

1 thought on “உலகின் கதை #2 – டார்வினை உருவாக்கிய பயணம்”

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *