Skip to content
Home » உலகின் கதை #3 – அட்லாண்டிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்கள்

உலகின் கதை #3 – அட்லாண்டிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்கள்

அட்லாண்டிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்கள்

கேப் வெர்டே தீவுக்கூட்டத்தில் சார்லஸ் டார்வினுக்கு வெப்பமண்டலப் பிரதேசத்தின் விலங்கினங்களையும் தாவரங்களையும் காணும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்க்கையில் முதன்முதலாகச் செயிண்ட் ஜேகோ தீவில்தான் ஆரஞ்சுப் பழத்தையும் வாழைப்பழத்தையும் சுவைத்தார். இனிப்புச் சுவைகொண்ட வாழைப்பழம் அவருக்கு அத்தனை விருப்பமானதாக இல்லை. புளியம்பழம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு இவற்றோடு சீலா மீன் உணவையும் சாப்பிட்டார். கொய்யா, பப்பாளி, தென்னை மரங்களும் கரும்புச் செடிகளை இங்கேதான் முதலில் பார்த்தார்.

செயிண்ட் ஜேகோவிலும் அதைச் சுற்றியுள்ள மற்ற தீவுகளிலும் ஆப்பிரிக்க இனத்து மக்களும் ஸ்பானியர்களும் வசித்தனர். சிறிய கோட்டை, கிறிஸ்தவ தேவாலயம் இவற்றோடு மருத்துவமனை ஒன்றும் அங்கே இருந்தது. இந்தத் தீவுகளின் இயற்கை அழகை ரசித்ததோடு நிறுத்திவிடாமல் இயற்கையியல் குறித்தும் ஆராய்ச்சி செய்து குறிப்புகளை எழுதினார் சார்லஸ் டார்வின்.

ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படும் பவோபாப் எனப்படும் பருத்த அடிப்பாகத்தைக் கொண்ட மரத்தை இந்தத் தீவில் பார்த்தார். தமிழில் பெருக்க மரம் அல்லது பப்பரப்புளிய மரம் என அழைக்கப்படுகிறது. ஆப்பிரிக்காவின் வறண்ட தட்பவெப்பத்துக்கும் நிலவியலுக்கும் ஏற்பத் தகவமைத்துக் கொண்ட பவோபாப்பின் அடிமரம் சுமார் 1,20,000 லிட்டர் தண்ணீரைச் சேமித்து வைக்கும் தன்மை கொண்டது. இதனால் மழை இல்லாத காலத்திலும் சத்து மிகுந்த பழங்களை ஈனுகிறது. இதை ‘உயிர் தரும் மரம்’ என்று அழைக்கிறார்கள் – பொருத்தமான பெயராகத்தான் தெரிகிறது!

கேப் வெர்டே தீவுக்கூட்டத்தைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் இருக்கும் பேய்க்கணவாய் (ஆக்டோபஸ்), கூடில்லாத நத்தை (ஸ்லக்), கணவாய் (கட்டில் மீன்) போன்ற கடல்வாழ் உயிரினங்களின் கண்ணைப் பறிக்கும் வண்ணங்களிலும் வித்தியாசமான பண்புகளிலும் மனதைப் பறிகொடுத்தார் சார்ல்ஸ் டார்வின். கூடவே ஏன், எப்படி, எதற்கு, எதனால் போன்ற கேள்விகள் தோன்றின. உயிரினத்தின் தோற்றம் பற்றிய கோட்பாடு உருவாக இந்தக் காட்சிகளும் அவற்றை ஒட்டிய அவருடைய சிந்தனையும் காரணமாக இருந்தன என்பதில் சந்தேகமில்லை.

அடுத்த சில நாட்களில் கேப் வெர்டேயில் இருந்து கிளம்பித் தென் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியை நோக்கிப் பயணம்செய்தது எச்.எம்.எஸ். பீகிள். தென் அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதிக்கு மேலே உள்ள கடல் பகுதியில் இருக்கும் செயிண்ட் பீட்டர் மற்றும் செயிண்ட் பவுல் தீவுக்கூட்டத்தைச் சென்றடைந்தது. பிரேசில் நாட்டுக்குச் சொந்தமான இந்தத் தீவுக்கூட்டத்தில் பார்த்தவற்றைச் சுவைபட எழுதுகிறார் சார்லஸ் டார்வின்.

செயிண்ட் பவுல்ஸ் ராக்ஸ் எனப்படும் தீவின் சுற்றளவு 1.2 கிலோமீட்டர். கடல்மட்டத்தில் இருந்து கணக்கிட்டால் அதன் மிக உயரமான மலை சுமார் 15 மீட்டர் மட்டுமே இருக்கும். ஆனால், அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழத்தைக்கொண்டு கணக்கிட்டால் இந்த மலையின் உயரம் 4000 மீட்டர் ஆகும். கடல் படுகையில் இருந்து எழுந்து கடல் மட்டத்துக்கு மேலே எட்டிப் பார்க்கும் மலைகள்தான் தீவுகள் என்ற தகவல் வியப்பை அளிக்கிறதல்லவா!

கண்டங்களை விட்டு நெடுந்தொலைவில், பெருங்கடல்களுக்கு நடுவே அமைந்திருக்கும் எல்லாத் தீவுகளும் கடலின் மலைகளே. பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்ற எரிமலை இயக்கத்தினாலோ பவழப் பாறைகளாலோ உருவானவை – இரண்டு தீவுகளைத் தவிர. அந்த இரண்டில் ஒன்று செயிண்ட் பவுல்ஸ் ராக்ஸ், மற்றொன்று செஷல்ஸ்.

செயிண்ட் பவுல்ஸ் ராக்ஸ் தீவில் இருக்கும் பச்சை நிறப் பாறைகள் பாம்பின் உடலில் இருக்கும் செதில்களைப் போன்ற அமைப்பைக் கொண்டிருந்தன. சில பகுதிகள் கண்ணாடியில் கீறல் ஏற்படுத்தும் அளவுக்குக் கூர்மையாக இருந்தன. பொதுவாக, இந்த வகைப் பாறைகள் கடல் படுகையின் மேலடுக்கில் மட்டுமே காணப்படும், நிலத்தில் இருக்காது. இவை எப்படித் தீவின் மேல்பகுதிக்கு வந்தன என்பதைச் சிந்தித்தார் சார்லஸ் டார்வின். அட்லாண்டிக் பெருங்கடல் உருவாகும் சமயத்தில் நிகழ்ந்த கண்டங்களின் மோதல், அடுக்குகளின் உராய்வு, அழுத்தம் போன்ற புவியியல் நிகழ்வுகளால் இவை மேல் நோக்கித் தள்ளப்பட்டிருக்கலாம் என்ற விடையைக் கண்டறிந்தார்.

தற்காலத்தில் இருப்பது போன்ற தொழில்நுட்பமோ தகவல்தொடர்புக் கருவிகளோ இல்லாத காலம்; சார்லஸ் டார்வினின் வயதோ இருபத்து இரண்டு. எத்தனை நுட்பமான அவதானிப்பும் புவியியல் அறிவும் இருந்திருந்தால் இதைக் கண்டுபிடித்திருப்பார் என்பது வியப்பாக இருக்கிறது அல்லவா!

செயிண்ட் பவுல்ஸ் ராக்ஸ் தீவில் மற்றுமொரு விந்தையான விஷயமும் இருந்தது. தூரத்தில் இருந்து பார்க்கையில் தீவின் பாறைகள் பளீரென்ற வெள்ளை நிறத்தில் இருந்தன. அருகே சென்று ஆராய்ந்த பிறகுதான் இங்கே வசிக்கும் கடல் பறவைகளின் எச்சம் நிலத்தில் படிந்து நாளடைவில் தொல் படிமமாகி இந்த நிறத்தைத் தருகிறது என்பது தெரியவந்தது. இந்தப் படிமங்கள் கிளிஞ்சலைப் போன்ற வழவழப்பும் பளபளப்பும் கொண்டிருப்பதோடு பற்களின் வெளிப்பாகமான பற்சிப்பியைப் போன்ற கடினமான வெளிப்பாகத்தைக் கொண்டவை என்பதால் பல புவியியல் ஆய்வாளர்கள் இவை எரிமலை இயக்கத்தால் உருவானவையாக இருக்குமோ என்று முதலில் நினைத்தார்கள் என்கிறார் சார்லஸ் டார்வின்.

செயிண்ட் பவுல்ஸ் ராக்ஸ் தீவில் இரண்டே பறவை இனங்கள் மட்டுமே வசித்தன – பூபி, நாடி. இரண்டும் படு முட்டாள், மனிதர்களையே பார்த்தது இல்லை என்பதால் பயமில்லாமல் கப்பலில் வந்து இறங்கியவர்களிடம் நெருங்கி வந்தன. அவற்றை யாரும் மிக எளிதாகப் பிடித்துவிட முடிந்தது.

பூபி வெற்றுப் பாறையின்மீது முட்டை இட்டது. நாடி கொஞ்சம் பரவாயில்லை, கடல் செடிகளைக் கொண்டு எளிமையான கூடு கட்டிக்கொள்வது எப்படி என்று தெரிந்து வைத்திருந்தது. இந்தக் கூடுகளின் அருகே பறக்கும் மீன் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. முட்டைகளை அடைகாக்கும் பெண் பறவைக்காக ஆண் பறவை தேடி வந்த இரை.

பெரிய பறவைகள் சற்று நகர்ந்தாலோ கவனமின்றி இருந்தாலோ பாறை இடுக்கில் வசிக்கும் பெரிய நண்டு ஒன்று மீனைக் கவர்ந்து சென்றுவிடும். கொஞ்சம் அசந்தால் பறவைக் குஞ்சுகளும் இவற்றுக்கு இரையாகி விடுவதுண்டு.

இந்த இரண்டு பறவை இனங்களோடு வேறு என்னென்ன உயிரினங்கள் இந்தத் தீவில் காணப்பட்டன? பறவைகளின் மேல் வளரும் ஈ, உண்ணி; பறவைகளின் சிறகுகளை உண்ணும் அந்துப் பூச்சி; அவற்றின் எச்சத்தை உண்ணும் வண்டு இனங்கள்; இந்தப் பூச்சிகளை எல்லாம் சாப்பிடும் எட்டுக்கால் பூச்சி என்று ஒரு பெரிய சூழலியில் வலைப்பின்னலே செயிண்ட் பவுல்ஸ் ராக்ஸ் தீவில் இருக்கிறது என்று பட்டியல் இடுகிறார் சார்லஸ் டார்வின்.

ஆனால், மருந்துக்குக்கூட ஒரு தாவரம் கிடையாது, லிச்சன் எனப்படும் கற்பாசி உட்பட. பசிபிக் பெருங்கடலில் ஒரு பவழப் பாறைத் தீவு உருவானதும் தென்னையும் மற்ற வெப்ப மண்டலத் தாவரங்களும் அங்கே முளைக்கின்றன; அவற்றைத் தேடிப் பறவை இனங்களும் அதைத் தொடர்ந்தும் மனிதனும் வந்து சேருகிறான் என்ற கருத்தில் சிறிதளவும் உண்மையில்லை.

பூச்சிகளும் ஒட்டுண்ணிகளுமே தீவுகளின் முதல் குடிமக்களாக இருக்க முடியும் என்கிறார் சார்லஸ் டார்வின். அந்தக் காலத்தில் நிலவிய சூழலியல் குறித்த கருத்துகளுக்கு முற்றிலும் மாறான கோட்பாடு இது. என்றாலும் தான் நேரில் பார்த்தவற்றை வைத்து இந்த முடிவுக்கு வந்தார் சார்லஸ் டார்வின்.

எச்.எம்.எஸ். பீகிளின் பயணம் தொடர்ந்தது. பொதுவாக, அந்தக் காலத்தில், கப்பல் நில நடுக்கோட்டைக் கடந்து தெற்கு அரைக்கோளத்துக்குப் பயணப்படுவதை மாலுமிகள் முக்கியமான நிகழ்வாகக் கொண்டாடுவது வழக்கம். குறிப்பாக, முதன்முறையாகப் பயணம் செய்பவர்களை அனுபவசாலிகள் கேலி விளையாட்டுகளில் ஈடுபடச் செய்வார்கள்.

தற்காலத்தில் கல்லூரிகளில் நடக்கும் ‘ராகிங்’ போலச் சில விளையாட்டுகள் மோசமான விளைவுகளையும் துயரமான நினைவுகளையும் தருவனவாக அமைவதும் உண்டு. ஒரு சில பயணிகள் இறந்துபோன சம்பவங்களும் உண்டு. சார்லஸ் டார்வினின் அனுபவம் அத்தனை மோசமானதாக இல்லை என்பதையும் சொல்லவேண்டும்.

உயர்குடியில் பிறந்த சார்லஸ் டார்வினுக்கு மாலுமிகளின் போக்கும் நடவடிக்கையும் தொடக்கத்தில் அத்தனை உகந்ததாக இல்லை. என்றாலும், பயணத்தின் போது அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களில் பல அலுவலர்களுடன் நீண்டகால நட்பும் அமைந்தது. இவர்களில் சிலர் பிற்காலத்தில் சார்லஸ் டார்வினின் ஆய்வுகளுக்குப் பேருதவியாக இருந்தார்கள் என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும்.

கப்பல் அடுத்து பெர்னாண்டோ நொரோனா என்ற தீவை அடைந்தது. எரிமலை இயக்கத்தால் உருவான தீவு இது. அங்கே சில மணி நேரம் மட்டுமே தங்கினார்கள். மொத்தத் தீவும் அடர்ந்த காட்டின் வலைப்பின்னலாக இருந்தது. ஒவ்வொரு மரத்திலும் பூக்களோ பழங்களோ தொங்கின. சில மரங்களில் ஒற்றை இலைகூட இல்லை என்றாலும் மென் சிவப்பு நிற மலர்கள் பூத்துக் குலுங்கியது கண்ணுக்கு இதமாக இருந்தது.

பெர்னாண்டோ நொரோனா தீவு 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களால் கண்டறியப்பட்டது. 18ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பிரேசில் நாட்டின் சிறையாக மாற்றப்பட்டது. இந்தத் தீவில் இருக்கும் கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்காகப் 2001ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களப் பட்டியலில் இணைக்கப்பட்டது.

(தொடரும்)

பகிர:
கார்குழலி

கார்குழலி

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதுபவர். பல்வேறு அரசுத் துறைகளோடும் பன்னாட்டு அரசு சாரா அமைப்புகளோடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடும் நாளிதழ்களோடும் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். துலிகா, பிரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்களில் குழந்தைகளுக்காக நாற்பத்தைந்துக்கும் அதிகமான நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *