Skip to content
Home » உலகின் கதை #4 – பிரேசில் நாட்டின் பல்லுயிரியம்

உலகின் கதை #4 – பிரேசில் நாட்டின் பல்லுயிரியம்

பிரேசில் நாட்டின் பல்லுயிரியம்

சார்லஸ் டார்வின் நிலவியலில் ஆர்வமுள்ளவர் என்று சொல்லி இருந்தேன் அல்லவா. 1849இல் கப்பல் படை அலுவலர்களுக்கான அறிவியல் தகவல்களைக் கொண்ட புத்தகமொன்று தொகுக்கப்பட்டபோது நிலவியல் குறித்து அதில் எழுதுமாறு சார்லஸைக் கேட்டுக்கொண்டார் புத்தகத்தின் பதிப்பாசிரியர். புவியியல், காந்தவியல், வானவியல், உயிரியல், தாவரவியல் என அந்தப் புத்தகத்தின் மற்ற அத்தியாயங்களை பல்வேறு துறை வல்லுநர்கள் எழுதினார்கள். அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் கப்பல் படை அலுவலர்களின் கையேடாகத் திகழ்ந்தது இந்தப் புத்தகம்.

இதை எதற்கு நினைவூட்டினேன் என்றால், பெர்னாண்டோ நொரோனா தீவு எரிமலை இயக்கத்தால் உருவானது. ஆனால், அது சமீபத்திய நிகழ்வல்ல. சுமார் 2 மில்லியன் முதல் 12 மில்லியன் வரையிலான காலகட்டத்துக்கு முன்னால் ஏற்பட்ட நிலவியல் மாற்றம் என்பதைப் பார்த்த மாத்திரத்தில் சரியாகக் கணித்தார். தீவில் இருந்த குன்றுகளின் அமைப்பையும் தன்மையையும் கொண்டு அவை எப்படி உருவாகியிருக்கும் என்பதையும் அவற்றில் என்னென்ன கனிமங்களும் வேதிப் பொருட்களும் உள்ளன என்பதையும் துல்லியமாகச் சொன்னார். இதுபோன்ற பல விஷயங்களால் இன்றளவும் நிலவியலில் வல்லுநராகக் கொண்டாடப்படுகிறார் சார்லஸ் டார்வின்.

எச்.எம்.எஸ்.பீகிளின் ஐந்து வருடப் பயணத்தின்போது எந்த மனிதரையும் போலவே சார்லஸுக்கும் கடல் குமட்டல் நோய் ஏற்பட்டது, வீடு பற்றிய நினைவு வந்தது, பிரிவுத் துயரில் வாடினார். அறிவியலாளராகவும் இயற்கையியல் வல்லுநராகவும் முத்திரை பதிக்கவேண்டும் என்ற குறிக்கோள் இருந்தால் பல வருடங்கள் தொடர்ந்து பயணத்திலேயே இருந்தாக வேண்டுமென்ற கட்டாயத்தையும் உணர்ந்தே இருந்தார். அன்றாடம் எழுதும் குறிப்பேட்டில் அனைத்தையும் பதிவு செய்தார்.

இங்கிலாந்தை விட்டுக் கிளம்பிச் சரியாக இரண்டு மாதங்கள் ஆகியிருந்தன. பெர்னாண்டோ நொரோனா தீவில் இருந்து புறப்பட்ட எச்.எம்.எஸ். பீகிள் கப்பல் அடுத்தது பிரேசில் நோக்கிப் பயணமானது. அந்தக் காலகட்டத்தில் தென் அமெரிக்கக் கண்டம் ’புதிய உலகம்’ என அழைக்கப்பட்டது. ஒரு காலை நேரத்தில் அந்தப் ’புதிய உலகின்’ கரையைத் தொட்டது கப்பல். இன்று சான் சால்வடார் என்று அறியப்படும் பிரேசிலின் பஹியா நகரில் கரை இறங்கினார் சார்லஸ் டார்வின்.

அங்கே அவர் கண்ட இயற்கை எழிலையும் பசும்பொழிலையும் விவரிப்பதற்கான சொற்களே இல்லை. வெப்பமண்டலக் காடுகளின் பல்வகைத் தாவரங்களையும் உயிரினங்களையும் பார்த்துப் பரவசமடைந்தார். பச்சைப் புற்களின் நளினத்திலும் ஒட்டுண்ணி வகைத் தாவரங்களின் புதுமையிலும் மலர்களின் அழகிலும் மனதைப் பறிகொடுத்தார். இங்கிருக்கும் மலர் வகைகளையும் அவற்றின் வண்ணங்களையும் பார்த்தால் ஒரு மலர் விற்பனையாளர் பரவசத்தில் ஆழ்ந்துவிடுவார்.

அமைதியும் ஓசையும் ஒருங்கே தவழ்ந்த அதிசயத்தை அங்கே கண்டேன் என்கிறார். மரங்கள் அடர்ந்த வனப் பகுதியில் இருக்கும் பூச்சிகள் எழுப்பும் ஒலி பல மைல் தூரத்துக்குக் கேட்டது. அதே நேரம் வனங்களின் உட்பகுதியில் அமைதி நிலவியது. இவற்றையெல்லாம் பார்த்ததும் சார்லஸின் வீட்டைப் பிரிந்த துயர் பறந்துபோனது என்றுதான் சொல்லவேண்டும்.

ஒரு முறை சார்லஸ் டார்வின் ஆய்வுக்காக எங்கோ சுற்றித் திரிந்துவிட்டுத் தங்கியிருந்த இடத்துக்குத் திரும்புகையில் மழை பெய்யத் தொடங்கியது. உடனே அருகில் இருந்த பெரிய மரத்தின் அடியில் ஒதுங்கினார். ஆனால் அதனால் எந்தப் பிரயோசனமும் இருக்கவில்லை, தொப்பலாக நனைந்துவிட்டார். இரண்டே நிமிடங்களில் மரத்தின் அடிப்பாகத்தில் ஒரு சிற்றாறு போல மழை நீர் வழிந்தோடி அதன் அடியில் நிலத்தில் இருந்த புல்லுக்கும் மற்ற தாவரங்களுக்கும் பொசிந்தது.

சன்னமாகப் பெய்யும் இங்கிலாந்து மழைக்கும் வெப்பமண்டலத்தின் புயல் மழைக்கும் இடையே உள்ள வித்தியாசம் அப்போதுதான் அவருக்குப் புரிந்தது. இப்படி அடைமழை பெய்வதால்தான் அடர்ந்த காடுகளுக்கு நடுவில் இருக்கும் மற்ற தாவரங்களும் செழித்து வளர்கின்றன என்பதை உணர்ந்தார்.

பிரேசில் நாட்டின் நீளமான கடற்கரைகளிலும் உள் நாட்டின் சில பகுதிகளிலும் கருங்கல் பாறைகள் காணப்பட்டன. அதுபோலவே சிறிய ஆறொன்று கடலில் கலக்கும் ஆற்றுமுகத்தில் இருந்த பாறைகளில் கறுப்பு நிறத்தில் மெலிதான காரீயப் பூச்சுபோலப் படிந்திருந்தது. இந்த நிலவியல் மாற்றங்கள் எப்படி ஏற்படுகின்றன என்பது குறித்த கேள்விகளையும் அதற்கான விடைகளையும் தேடும் முயற்சியில் ஈடுபட்டார்.

கடல் பயணத்தின்போது கடல் நீரில் மிதக்கும் அல்கே எனப்படும் பலவிதமான பாசிப் பூக்களையும் பார்த்தார். நீலமும் பச்சையும் கலந்த இனம் ஒன்றையும் வெள்ளை வண்ணத்தில் நார்த் திசுக்களைப் போல இருந்தவற்றையும் செம்பழுப்பு வண்ணத்தில் வெட்டப்பட்ட வைக்கோல் போலத் தோற்றமளித்த இன்னொரு இனத்தையும் பார்த்தார். கடல்வாழ் உயிரினங்களுக்குத் தேவையான நைட்ரஜன் வாயுவை அவை பயன்படுத்தத் தக்க வகையில் மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன பாசிப் பூக்கள்.

மத்தியக் கிழக்குப் பகுதியில் இருக்கும் கடலில் இந்தச் செம்பழுப்பு வண்ணப் பாசிப் பூக்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. சிவப்புக் கடலின் நிறத்துக்கும் பெயருக்கும் காரணம் இந்தப் பாசிப் பூக்கள்தான்.

அட்லாண்டிக் கடற்பகுதியில் காணப்படும் பல்வேறு கடல்வாழ் உயிரினங்களையும் உற்றுக் கவனிக்கும் வாய்ப்பு சார்லஸுக்குக் கிடைத்தது. அவற்றைப் பற்றிய ஏராளமான குறிப்புகளை எழுதிவைத்துள்ளார். அவற்றுள் டயோடன் ஆன்டெனட்டஸ் என்று அழைக்கப்படும் போர்க்குபைன் மீன் இனத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல்களும் அடங்கும். இந்த மீன் இனம் தமிழில் பேத்தை மீன், பேத்தையன் மீன் அல்லது முள்ளம்பன்றி மீன் என அறியப்படுகிறது. தொளதொளப்பான மேல்தோலுடன் காணப்படும் இந்த மீன் காற்றையும் நீரையும் உறிஞ்சுவது மூலம் உடலை உப்ப வைத்து பந்துபோல உருண்டையாக்கிக் கொள்ளும். இது எப்படிச் சாத்தியமாகிறது என்பதைக் கண்டுபிடித்தார் சார்லஸ் டார்வின்.

போர்க்குபைன் மீன்
போர்க்குபைன் மீன்

முள்ளம்பன்றி மீன் பந்துபோல உருமாறுகையில் உடலில் நீட்டிக்கொண்டு இருக்கும் முட்களால் எதிரிகளிடம் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறது. சில நேரங்களில் எதிரியைக் கடிக்கும், வாய் வழியாக நீரை வேகமாகப் பீய்ச்சி அடிக்கும், அதே நேரத்தில் தாடைப் பகுதியை அசைப்பது மூலம் வித்தியாசமான ஒலியை எழுப்புமாம்.

இந்த மீன் பற்றிய இன்னொரு அதிசயமான விஷயத்தையும் பதிவு செய்துள்ளார் சார்லஸ் டார்வின். இதன் வயிற்றுப் பகுதியில் இருந்து வெளிப்படும் அடர்ந்த சிவப்பு வண்ணத் திரவம் காகிதத்திலும் தந்தத்திலும் ஏற்படுத்தும் கறை பல வருடங்கள் ஆனாலும் மங்குவதில்லை. ஆனால் இது எப்படி நடக்கிறது என்பதும் மீனுக்கு எப்படி உதவுகிறது என்பதும் தெரியவில்லை என்கிறார்.

தற்காலத்தில் ஒவ்வொரு வருடமும் பிரேசிலில் நடைபெறும் கார்னிவலைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். லெண்ட் நோன்பை ஒட்டி நடைபெறும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக் கொண்டாட்டம். சுமார் 190 வருடங்களுக்கு முன்னர் இதே கார்னிவல் கொண்டாட்டத்தைப் பார்க்கும் வாய்ப்பு சார்லஸ் டார்வினுக்குக் கிடைத்தது. இப்போதுபோல ஒரு வாரத்துக்கு நடந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் மக்கள் குதூகலத்துடன் கொண்டாடினார்கள். ஒருவர்மீது ஒருவர் நீர் அடைக்கப்பட்ட மெழுகுப் பந்துகளை வீசி விளையாடினர்.

பிரேசிலில் கார்னிவல்
பிரேசிலில் கார்னிவல்

சார்லஸ் டார்வினுக்கும் அவருடைய எச்.எம்.எஸ். பீகிள் சகாக்களுக்கும் அந்த விளையாட்டில் ஈடுபடுவதில் விருப்பமில்லை. மக்களின் கொண்டாட்டத்தில் சிக்கி நனைந்துபோகக்கூடாது என்று முடிவுசெய்து மாற்று வழியில் வீடு திரும்பினர். ஆனால் பாருங்கள், திடீரென மழை பெய்ததால் தொப்பலாக நனைந்து போயினர். நனைந்தாக வேண்டும் என்ற விதி இருந்தால் அதை மாற்றவா முடியும்!

பிரேசில் நாட்டின் மண் வளமாக இருந்ததால் எங்கு பார்த்தாலும் பசுமை கொழித்தது, பயிர்கள் செழித்தன. மனிதர்களின் உடல் உழைப்பில் விளைந்த பயிர்களும் தானாக வளரும் காட்டுத் தாவரங்களும் ஒன்றோடொன்று இயைந்து வளரும் காட்சியை முதன்முதலில் பிரேசிலில்தான் கண்டார் சார்லஸ் டார்வின். ஊடுபயிர் வழக்கம் விரவி இருந்ததையும் குறிப்பிடுகிறார். அத்தோடு வனப்பகுதிகளில் பயிர்களை விளைவிக்கும் வழக்கமும் இங்கே இருந்தது.

பிரேசிலின் பெரும்பாலான இடங்களுக்குக் குதிரையில் பயணம் செய்தார் டார்வின். பிரேசில் நாட்டுக் குதிரைகள் இங்கிலாந்துக் குதிரைகளைவிட வலிமையும் ஆரோக்கியமும் கொண்டவையாக இருந்தன. நோய்வாய்ப்பட்டாலும் இரண்டொரு நாளில் உடல்நலம் தேறிவிடும்.

வெப்பமண்டலப் பிரதேசமான பிரேசிலில் இருந்த வித்தியாசமான முதுகெலும்பில்லாத பூச்சியினங்களையும் மின்மினிப் பூச்சிகளையும் வண்ணத்துப்பூச்சிகளையும் வண்டுகளையும் சேகரித்து அவற்றை உன்னிப்பாகக் கவனித்தார்.

வண்ணத்துப்பூச்சி என்றவுடன் வானில் அங்குமிங்கும் பறக்கும் காட்சிதானே கண் முன்னே விரியும். ஆனால், மரத்தின் மேல் நடக்கும் வண்ணத்துப்பூச்சி இனம் ஒன்றை இங்கே பார்த்தார். ஆரஞ்சுத் தோட்டங்களில் காணப்படும் பாப்பிலோ ஃபெரோனியா எனப்படும் இந்த வண்ணத்துப்பூச்சி வானில் சிறகடித்துப் பறக்கும் என்றாலும் அவ்வப்போது மரங்களின்மீது இறங்கி நடக்கும். அப்போது அதன் தலை கீழ்ப்பக்கமாக இருக்கும், இறக்கைகளை விரித்து வைத்துக்கொள்ளுமாம்.

பிரேசில் நாட்டின் இயற்கை அழகிலும் பல்லுயிரிகளின் வகையிலும் மனதைப் பறிகொடுத்தார் என்றாலும் சார்லஸ் டார்வினுக்குப் பிடிக்காத விஷயமொன்றும் அந்த நாட்டில் இருந்தது – அங்கே பின்பற்றப்பட்ட அடிமைத்தனம். சார்லஸ் டார்வினின் தந்தையும் பாட்டனாரும் அடிமைத்தளையை ஒழிக்கவேண்டும் என்ற கருத்தை வழிமொழிந்தவர்கள். 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தும் ஏனைய பல நாடுகளும் அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளை மேற்கொண்டன. இப்படி ஒரு சூழலில் வளர்ந்த இளம் சார்லஸின் மனதில் அடிமைத்தனத்துக்கு எதிரான வலிமையான கருத்துகள் வேர்கொண்டதில் ஆச்சரியமில்லை.

பிரேசில் நாட்டில் பின்பற்றப்பட்ட அடிமைத்தனம்
பிரேசில் நாட்டில் பின்பற்றப்பட்ட அடிமைத்தனம்

சான் சால்வடாரில் இருந்து ரியோ டி ஜெனிரோ நகருக்குச் செல்கையில் அடிமைத்தளையில் இருந்து தப்பி வந்து தனியே வாழ முனைந்த கறுப்பின அடிமைகளின் கூட்டம் ஒன்று வாழ்ந்த இடத்தைப் பார்த்தார். ஆனால் அவர்கள் விடுதலைக் காற்றை முழுமையாகச் சுவாசிக்கும் முன்னர் காவல் வீரர்கள் அவர்களைப் பிடித்துவிட்டனர்.

அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த வயதான பெண்மணி ஒருவர் மீண்டும் அடிமை வாழ்வில் உழல்வதைவிடச் சாவதே மேல் என்று நினைத்தார். மலையின் உச்சியில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார். இதைச் செய்தது ஒரு ரோமானியப் பெண் என்றால் அவருக்குள் கிளர்ந்த உயர்வான விடுதலை உணர்வை மெச்சியிருப்பார்கள், ஆனால் கறுப்பினத்தவர் என்பதால் முரட்டுப் பிடிவாதம் என்று சித்தரித்தனர் என்று எழுதுகிறார் சார்லஸ் டார்வின்.

(தொடரும்)

பகிர:
கார்குழலி

கார்குழலி

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதுபவர். பல்வேறு அரசுத் துறைகளோடும் பன்னாட்டு அரசு சாரா அமைப்புகளோடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடும் நாளிதழ்களோடும் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். துலிகா, பிரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்களில் குழந்தைகளுக்காக நாற்பத்தைந்துக்கும் அதிகமான நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *