Skip to content
Home » உலகின் கதை #5 – கலாபகஸ் தீவின் வரலாறும் புவியியலும்

உலகின் கதை #5 – கலாபகஸ் தீவின் வரலாறும் புவியியலும்

கலாபகஸ் தீவு ஆமை

பிரேசிலில் பல மாதங்கள் தங்கி ஆய்வுகளைச் செய்தார் சார்லஸ் டார்வின். பிறகு அங்கிருந்து கிளம்பி அர்ஜெண்டினாவுக்கும் தென் அமெரிக்காவின் தென்முனையில் இருந்த படகோனியா நிலப்பகுதிக்கும் பயணம் செய்தார். அங்கிருந்த சமவெளிகளில் பெரிய பாலூட்டிகளின் தொல் எச்சங்களும் புதிய சிப்பிகளும் அருகருகே இருப்பதைக் கண்டார்.

காண்டாமிருகம் அல்லது யானையைப் போன்ற பெரிய தாவர உண்ணி, பசுவின் உயரம் இருக்கும் ஆர்மடில்லோ, ஸ்லாத் ஆகிய விலங்குகளின் எலும்புகளை ஆர்வத்துடன் சேகரித்தார். இந்த விலங்குகள் ஏன், எப்படி அழிந்தன என்ற கேள்வி சார்ல்ஸின் மனதில் எழுந்தது. அந்தப் பகுதியில் குறிப்பிடத்தக்க பருவநிலை மாற்றமோ இயற்கைப் பேரழிவோ ஏற்படவில்லை. ஆகவே அந்தப் பாலூட்டிகள் அண்மைக்காலத்தில்தான் அழிந்துபோயிருக்கும் என்பதைக் கண்டுபிடித்தார்.

சில இடங்களில் சமவெளியில் படிக்கட்டு போன்ற அமைப்புகள் உருவாகி இருப்பதையும் அவற்றில் கிளிஞ்சல்களும் கடல்வாழ் உயிரினங்களின் தொல் எச்சங்களும் பொதிந்திருப்பதையும் கண்டார். இப்படியொரு மாற்றத்தை ஏற்படுத்த அப்படியென்ன இயற்கை நிகழ்வு நடந்திருக்கும் என்று சிந்தித்தார். சீலே நாட்டில் அவர் தங்கியிருந்தபோது இந்தக் கேள்விக்கான விடை கிடைத்தது.

ஓர் இரவில் சீலோ என்ற தீவருகே இருந்த மூன்று எரிமலைகள் அடுத்தடுத்து வெடித்தன. இரண்டாம் எரிமலை பல நூறு மைல்களும் மூன்றாம் எரிமலை பல ஆயிரம் மைல்களும் தள்ளி இருந்தன. இவற்றுள் ஒரு எரிமலை 26 ஆண்டுகளாக இயக்கம் ஏதுமில்லாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது எதேச்சையான நிகழ்வா அல்லது நிலத்தடியில் மூன்று எரிமலைகளும் ஒன்றோடொன்று இணைந்திருந்தனவா என்பது தெரியவில்லை.

அடுத்த சில மாதங்களில் சீலே நாட்டின் கடற்கரை நகரமொன்றில் சார்லஸ் டார்வின் தங்கியிருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிகழ்வு பாதுகாப்பின்மையையும் வாழ்வின் நிலையாமையையும் ஒரே நொடியில் அவருக்கு உணர்த்திவிட்டது. தாழ் ஓதக் காலமாக இருந்தாலும் கடல் அலைகள் சற்றே உயரமாக எழுந்தன என்பது தெரிய வந்தது.

அதே கடற்கரையை ஒட்டிய தீவொன்றின் துறைமுகத்தில் சரக்கு அறைகளில் இருந்த பொருட்கள் நாசமாகின. வீடுகள் சில மணித்துளிகளில் இடிந்து தரைமட்டமாகின. பிரம்மாண்டமான அலை எழுந்து எஞ்சிய இடிபாடுகளை அடித்துக்கொண்டு போனது.

பல இடங்களில் கடல்படுகையில் இருந்த பாறைகளும் கடல்வாழ் உயிரினங்களின் தொல் எச்சங்களும் நிலத்துக்கு மேலே கிடப்பதைக் கண்டார். அதில் ஒரு பாறை ஆறு அடி நீளமும் மூன்று அடி அகலமும் இரண்டு அடி பருமனும் கொண்டது. ஒரு நூற்றாண்டில் கடல் அரிப்பும் வானிலையும் ஏற்படுத்தும் மாற்றத்தை இந்த நிலநடுக்கம் ஓரிரு நிமிடங்களில் செய்துவிட்டது என்கிறார் சார்லஸ் டார்வின்.

உயிரினங்களின் தோற்றம் பற்றிய கோட்பாட்டுக்கு முன்னர் சார்லஸ் டார்வின் கண்டுபிடித்த கோட்பாடு எதுவென்று தெரியுமா? பவழத் தீவுகளும் திட்டுகளும் எங்கே எப்படி உருவாகின்றன என்ற கோட்பாடுதான் அது. அந்தக் காலத்தில் கடலில் பயணம் செய்யும் கப்பல்கள் பவழத் தீவுகளும் பாறைகளும் இருப்பது தெரியாமல் அவற்றில் மோதி விபத்துகள் ஏற்படுவது வாடிக்கை.

சில சமயங்களில், கடல் நடுவே இருக்கும் எரிமலைகளின் இயக்கம் நின்று போன பிறகு அவற்றின் உச்சியில் பவழப் பாறைகள் வளரும். நாளடைவில் எரிமலைகள் கீழே அமிழ்ந்துவிடும். உச்சியில் இருக்கும் பவழத் திட்டுகள் மாத்திரம் கடல்மட்டத்துக்கு மேலே வளையல் போன்ற அமைப்பில் தோற்றம் அளிக்கும்.

1950களில் பசிபிக் பெருங்கடலில் இருந்த பவழத் திட்டினை விஞ்ஞானிகள் குடைந்து பார்த்தபோது கீழே எரிமலைப் பாறைகள் இருப்பது தெரியவந்தது. இத்தகைய தொழில்நுட்பம் இல்லாத காலத்திலேயே நுட்பமான அவதானிப்பு, கூர்நோக்கு, நிலவியல் அறிவு ஆகிய திறன்களின் வழியே இந்த அறிவியல் உண்மையைக் கண்டுபிடித்த டார்வினைப் பார்த்து வியக்காமல் என்ன செய்வது?

இந்தப் பிரபஞ்சத்தில் எதுவுமே தனித்த செயல்பாடல்ல. இயற்கையியல், நிலவியல் இரண்டும் தனித்தனியான பொருட்களல்ல. ஒன்று மற்றொன்றைப் புரிந்துகொள்ள இன்றியமையாதது என்பது தெளிவாகிறது. இரண்டிலும் நாட்டம்கொண்ட சார்லஸுக்கு இந்த நிகழ்வுகளும் காட்சிகளும் விலைமதிப்பற்ற கள அனுபவங்களாக அமைந்தன. ஒவ்வோர் இடத்திலும் ஆர்வமுடன் தொல் எச்சங்களையும் படிமங்களையும் சேகரித்தார். நேரில் கண்டவற்றையும் தன்னுடைய ஊகங்களையும் குறிப்பேட்டில் எழுதினார். இந்தப் பல்லாண்டு கால ஆய்வு, நேரடி அனுபவம், மற்ற அறிவியல் வல்லுநர்களுடன் அறிவுப் பரிமாற்றம், நுட்பமான சிந்தனை ஆகியவற்றின் விளைவாகத்தான் பல்வேறு கோட்பாடுகளும் முழு வடிவம் பெற்றன என்றால் மிகையல்ல.

தென் அமரிக்காவின் மேற்குக் கடற்கரையோரம் பயணித்த எச்.எம்.எஸ். பீகிள், 15 செப்டெம்பர் 1835 அன்று கலாபகஸ் தீவுகளைச் சென்றடைந்தது. எக்குவடார் நாட்டின் மேற்குக் கடற்கரை அருகே பசிபிக் பெருங்கடலில் இருக்கும் இந்தத் தீவுக்கூட்டம் புதிதாக உருவானதொன்று.

உலகில் எத்தனையோ தீவுகள் இருக்கையில் இந்தத் தீவுக்கூட்டம் ஏன் உலகப் பாரம்பரியக் களமாக, அதுவும் முதலாவது களமாக அறிவிக்கப்பட்டது? கலாபகஸின் சிறப்பு என்ன, அதன் வரலாறு என்ன? இங்கே சார்லஸ் டார்வின் என்ன பார்த்தார்?

எக்குவடார் நாட்டின் ஒரு மாகாணமான கலாபகஸ் தீவுக்கூட்டத்தின் அதிகாரபூர்வ பெயர் கொலம்பஸ் தீவுக்கூட்டம். இதில் 13 பெரிய தீவுகள், 6 சிறிய தீவுகள் என மொத்தம் 19 தீவுகள் உள்ளன. இதுபோக கடல் நடுவே இருக்கும் நிறைய குட்டித் தீவுகளும் பாறைத் திட்டுகளும் இதைச் சேர்ந்தவைதான். இங்கே ஸ்பானிஷ் மொழி பேசப்படுகிறது, தற்போதைய மொத்த மக்கள்தொகை 25000-க்கும் கொஞ்சம் அதிகம்.

கலாபகஸ் தீவு - கொலம்பஸ் தீவுக்கூட்டம்
கலாபகஸ் தீவு – கொலம்பஸ் தீவுக்கூட்டம்

உள்ளதிலேயே பெரிய தீவு இசபெல்லா. கலாபகஸின் உயரமான மலையான அசுல் இங்கேதான் இருக்கிறது. இசபெல்லாவில் ஐந்து பெரிய எரிமலைகள் உள்ளன, அவற்றுள் இரண்டு இன்னமும் இயங்கிக்கொண்டிருப்பவை ஆகும். அடுத்த பெரிய தீவு சாண்டா குரூஸ். மூன்றாவது பெரிய தீவு பெர்னாண்டினா, கடைசியாக உருவானது. இந்தத் தீவின் பெரும்பகுதி இன்னும் இயங்கிகொண்டிருக்கும் எரிமலையின் வாய்ப்பகுதி என்பதால் இங்கே மனிதர்கள் வசிப்பதில்லை.

கலாபகஸ் தீவுக்கூட்டம் எரிமலையின் இயக்கத்தால் உருவானது. இங்கே இருக்கும் எரிமலைகள் 20 மில்லியன் ஆண்டுகளாகக் கனன்று கொண்டுள்ளன, இன்றளவும் அவை வெடிப்பது தொடர்கிறது. இதனால் இசபெல்லா, பெர்னாண்டினா ஆகிய இரண்டு தீவுகளிலும் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை நிலம் மேல் நோக்கித் தள்ளப்படுகிறது. 1992இல் இருந்து 1998 வரையில் இசபெல்லா தீவில் நிலமட்டம் 240 சென்டிமீட்டர் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. 2009இல் பெர்னாண்டினா தீவில் இருக்கும் எரிமலை வெடித்தபோது நிலமட்டம் 90 சென்டிமீட்டர் வரையில் மேலே தள்ளப்பட்டது. இந்த இயற்கை நிகழ்வுகளைப் பார்ப்பதுமூலம் இந்தத் தீவுகள் எப்படி உருவாகின என்பதை அறிவியலாளர்களால் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்தத் தீவுக்கூட்டத்தை ‘எரிமலை வாய்களின் நிலம்’ என்று வர்ணித்தார் சார்ல்ஸ் டார்வின். மொத்தம் 2000 எரிமலை வாய்கள் இருப்பதாகத் தற்போதைய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஒவ்வொரு தீவிலும் இருந்த எண்ணற்ற எரிமலை வாய்களை ஆச்சரியத்துடன் பார்த்தார். எரிமலை கக்கும் சாம்பலில் இருந்து உருவாகும் பாறைகள் பற்றிச் சரியாக விவரித்த முதல் நிலவியலாளர் சார்ல்ஸ் டார்வின்தான்.

இந்தத் தீவுகள் இருப்பது குறித்துப் பல நூற்றாண்டுகளாக வெளியுலகுக்குத் தெரியவில்லை. 1535ஆம் ஆண்டு இந்த வழியே பயணம் செய்த பனாமா நாட்டின் பேராயரால் எதிர்பாராதவிதமாகக் கண்டுபிடிக்கப்பட்டு உலகுக்கு அறிவிக்கப்பட்டது. தன்னுடைய குறிப்புகளில் சொக்கவைக்கும் இயற்கை அழகுகொண்ட இடம் என்று எழுதிவைத்தார். இங்கே பிரம்மாண்டமான ஆமைகள் அதிக அளவில் காணப்பட்டதால் கலாபகஸ் என்று பெயரிடப்பட்டது. ஸ்பானிஷ் மொழியில் கலாபகஸ் என்றால் ஆமை என்று பொருள்.

17ஆம் நூற்றாண்டில் இங்கே வந்த அம்ப்ரோஸ் கௌலீ என்ற கடற்கொள்ளையன் இங்கிலாந்து அரச குடும்பத்தினர், உயர்குடியைச் சேர்ந்த பிரபுக்கள், தன்னுடைய சகாக்கள் என்று மனதில் தோன்றியவர்களின் பெயரையெல்லாம் ஒவ்வொரு தீவுக்கும் சூட்டினான். அதிகாரபூர்வமான வரைபடங்களிலும் இந்தப் பெயர்களே இடம்பெற்றன. 19ஆம் நூற்றாண்டில் ஸ்பானியர்களிடம் இருந்து இந்தத் தீவுகளை விடுவித்த எக்குவடார் நாட்டின் அரசாங்கம் அவற்றுக்குப் புதிய பெயர்களைச் சூட்டும் வரையில் அவை புழக்கத்தில் இருந்தன.

18ஆம் நூற்றாண்டில் திமிங்கில வேட்டைக்காரர்களும் கடல்வாழ் உயிரினங்களின் மென்முடித்தோல் வணிகர்களும் ஆமைகளை வரைமுறையின்றி வேட்டையாடியதில் பல அரிய இனங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. போர்க் கப்பல்கள் ஒரே நாளில் 700 முதல் 1200 ஆமைகள் வரை கொன்று குவித்தன. அதுதவிர இந்தத் தீவில் வசிக்கும் மக்களும் காட்டுப் பன்றி, ஆடு இவற்றோடு ஆமைக் கறியையும் உண்டனர்.

ஆமைகள் பல மாதங்களுக்கு உணவும் தண்ணீரும் இல்லாமல் உயிர்வாழும் என்பதால் கப்பலில் ஏற்றிச் சென்று நீண்ட தூரப் பயணத்தின்போது கொன்று தின்றார்கள். எச்.எம்.எஸ். பீகிளின் பயணிகளும், சார்ல்ஸ் டார்வின் உட்பட, இதைச் செய்தனர்.

நிலநடுக்கோட்டுக்கு நேர் மேலே இருப்பதால் இந்தத் தீவுக்கூட்டத்தில் பகுதியில் வெப்பம் அளவுக்கு அதிகமாக இருக்கும் என நினைக்கலாம். ஆனால், தென் துருவ நீரோட்டத்தினால் மிதமான வெப்பமே நிலவுகிறது. மேகங்கள் தாழ்வாக இருந்தாலும் அடிக்கடி மழை பெய்வதில்லை. தீவுகளின் உயர்வான பகுதிகளில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் தாவரங்கள் தழைத்து வளர்கின்றன.

எச்.எம்.எஸ். பீகிள் குழுவினர் முதலில் சதம் என்று அழைக்கப்பட்ட தீவில் இறங்கினர். இதன் தற்போதைய பெயர் சான் கிறிஸ்டோபெல். கரையெங்கும் கெட்டிப்பட்ட கறுப்பு நிற பசால்ட் எரிமலைக் குழம்பு பரவியிருந்தது. வறண்ட நிலமும் உஷ்ணமான காற்றும் உடைந்த மரக்கிளைகளும் என எந்த உயிரோட்டமும் இல்லாத காட்சியைத்தான் காணமுடிந்தது. தீவின் உட்பகுதியில்தான் செழித்து வளர்ந்த செடிகளும் அவற்றில் பூத்துக் குலுங்கும் மலர்களும் இருந்தன.

அடுத்து சார்லஸ் தீவுக்குப் போனார்கள். ஆமாம், தீவின் பெயரும் சார்லஸ்தான். இங்கிருக்கும் இன்னொரு தீவின் பெயர் ஜேம்ஸ். இரண்டும் இங்கிலாந்து மன்னர்களின் பெயர்கள், 19ஆம் நூற்றாண்டில் சூட்டப்பட்டவை. சார்லஸ் தீவு தற்போது ஃபிளோரியானா என்று அழைக்கப்படுகிறது. எக்குவடாரின் முதல் பிரதமரின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டது. இங்கேயும் உயரமான பகுதிகளில் தாவரங்கள் பச்சைப் பசேலென்று இருக்கின்றன. இங்கிருக்கும் வளமான கரிசல் மண்ணில் வாழையும் சர்க்கரைவள்ளிக் கிழங்கும் பயிரிடப்பட்டது.

(தொடரும்)

பகிர:
கார்குழலி

கார்குழலி

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதுபவர். பல்வேறு அரசுத் துறைகளோடும் பன்னாட்டு அரசு சாரா அமைப்புகளோடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடும் நாளிதழ்களோடும் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். துலிகா, பிரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்களில் குழந்தைகளுக்காக நாற்பத்தைந்துக்கும் அதிகமான நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *