Skip to content
Home » உலகின் கதை #7 – நைல் நதிக்கரை

உலகின் கதை #7 – நைல் நதிக்கரை

நைல் நதிக்கரை

ஆதிமனிதன் நாடோடியாக அலைந்து திரிகையில் காடு, குகை என எங்கே தனது வசிப்பிடத்தை அமைத்துக்கொண்டாலும் அருகே நீர்நிலைகள் இருக்கும் இடத்தைத் தேர்வுசெய்தான். காட்டு விலங்குகளைப் பழக்கித் தன்னோடு வளர்க்கவும் உணவுதேடி அலைவதை நிறுத்திப் பயிர்செய்யவும் தொடங்கியது வருடமுழுவதும் தொடர்ந்து நீர்வரத்து இருக்கும் வற்றாத நதிகளின் கரைகளில்தான். இந்தப் பகுதிகளின் மண்வளத்தினால் பயிர்கள் செழித்து வளர்ந்தன. உணவாக உண்டதுபோக மிகுதியானவற்றை மற்றவர்களிடம் விற்றான், வருங்காலத்துக்காகச் சேமித்துவைத்தான். அப்புறம் அந்த நதிகளின் அருகிலேயே குடியிருப்புகளை அமைத்துகொண்டான்.

பல குடியிருப்புகளின் தொகுதி நகரமானதும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அரசாங்கங்களும் ஆட்சியாளர்களும் உருவானார்கள். இப்படி மனித இனத்தின் படிப்படியான வளர்ச்சிக்கு ஆதாரமாக இருந்ததால் நதிகளை நாகரிகத் தொட்டில்கள் என்று அழைக்கிறோம்.

இந்தியாவின் சிந்து நதி, சீனாவின் மஞ்சள் நதி எனப்படும் யாங் ட்ஸே கியாங், இன்றைய ஈரானின் ஒரு பகுதியான பண்டைய மெசபடோமியாவின் யூப்ரடிஸ், டைக்ரிஸ் நதிகள், எகிப்தின் நைல் நதி ஆகியவை பாய்ந்த சமவெளிகளில் மனித நாகரிகம் தழைத்து வளர்ந்தது. இவற்றுள் எகிப்தின் நைல் நதியின் கரையில் மனிதர்களால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வடிவமைக்கப்பட்ட கட்டடங்களும் கலை வடிவமைப்புகளும் இன்றளவும் காணக்கிடைக்கின்றன. எகிப்தின் பிரமிடு தொகுதிகளையும் இஸ்பிங்ஸையும்தான் சொல்கிறேன். உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் இவை உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகவும் இருக்கின்றன. எகிப்தின் கலாசார வளங்கள் இந்தப் பட்டியலில் எப்படி, எப்போது இடம்பெற்றன?

1960களில் நைல் நதியின் குறுக்கே அசுவான் அணை கட்டப்பட்டபோது நைல் பள்ளத்தாக்கிலும் அதன் கழிமுகத்தைச் சுற்றியிருந்த பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. அப்போது அங்கே இருந்த தொன்மையான கலாசார வளங்கள் வெள்ளத்தில் முழுகி அழிந்துபோகும் அபாயம் ஏற்பட்டது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட யுனெஸ்கோ அமைப்பு அவை அழியாமல் பாதுகாக்கப்படவேண்டும் என்று முடிவுசெய்தது. உலக நாடுகளின் நிதி உதவியையும் வல்லுநர்களின் ஆலோசனைகளையும் பெற்று நினைவுச்சின்னங்களைப் பிரித்து எடுத்துகொண்டுபோய் வேறு இடத்தில் நிறுவியது.

உலக வரலாற்றில் இதுவரை யாருமே முயன்றிராத ஒன்றை வெற்றிகரமாகச் செய்துமுடித்தது யுனெஸ்கோ. இந்தச் செயல் உலகிலேயே அதிகப் பழமையான நாகரிகமொன்றின் கலாசார சொத்தைப் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை உலக மக்களுக்கு உணர்த்தியது. உலக நாடுகளுக்கிடையே உலகப் பாரம்பரிய ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கவும் வழிவகுத்தது.

0

நைல் என்ற பெயர் நீலோஸ் என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து தோன்றியது. பண்டைய எகிப்தியர்கள் ‘ஔர்’ (Aur) என்று அழைத்தனர். நைலின் வண்டல்மண் கறுப்பு நிறத்தில் இருந்ததால் அந்த நிறத்தைக் குறிக்கும் வகையில் அது பாய்ந்த நிலப்பகுதியை ‘கெமி’ அல்லது ‘கெம்’ என்றும் அழைத்தனர். நைல் நதியைக் கடவுளின் பரிசாக எண்ணினார்கள்.

மற்ற எல்லாப் பெரிய நதிகளும் வடக்கு தெற்காக ஓடும்போது நைல் மட்டுமே தெற்கில் தோன்றி வடக்கே இருக்கும் மத்தியத்தரைக் கடலில் சென்று கலக்கிறது. எல்லா நதிகளிலும் மழைக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுக்கும் என்றால் நைல் நதி கோடையில் பெருக்கெடுத்தது. பண்டைய எகிப்தியர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் இது ஆச்சரியமூட்டியது.

நைல் நதியின் வடிநிலப் பரப்பு ஆப்பிரிக்காவின் மொத்தப் பரப்பளவில் பத்தில் ஒரு பங்காகும். கிட்டத்தட்ட 6600 கிலோமீட்டர் நீளமானது. புருண்டி, தான்சானியா, ருவாண்டா, காங்கோ, கென்யா, உகாண்டா, சூடான், எத்தியோப்பியா, எரித்திரியா, தெற்கு சூடான், எகிப்து எனப் பதினோரு நாடுகளின் வழியாகப் பாய்கிறது. வெள்ளை நைல், நீல நைல், அத்பரா என்ற மூன்று துணை ஆறுகளைக் கொண்டது.

நைல் நதியின் தோற்றுவாய் ஒன்றல்ல, பல ஏரிகள். அதேபோல வெவ்வேறு நிலப்பகுதிகளில் வெவ்வேறு ஆறுகள் அதனுடன் கலக்கின்றன. உகாண்டா நாட்டின் விக்டோரியா ஏரியில் கலக்கும் பல ஆறுகளின் வெள்ளத்தில் இருந்து பிறக்கும் நைல் நதி, வடக்கு நோக்கி ஓடி கடலில் கலக்கிறது.

நைல் நதியின் பாய்ச்சலால் வளம்பெற்ற ஆப்பிரிக்காவின் வடகிழக்கில் இருந்த பண்டைய எகிப்தின் காலம் கி.மு. 3100இலிருந்து கணக்கிடப்படுகிறது. கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கு எகிப்திய நாகரிகம் தழைத்திருந்தது என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அதற்கான சான்றுகளை இன்றும் நம்மால் கண்கூடாகப் பார்க்கமுடிகிறது.

0

மெம்ஃபிஸ் நகரம் நைல் நதியின் கழிமுகமும் வியாபாரத் தடங்களும் ஒன்றிணையும் இடத்தில் அமைந்திருந்தது. ஒரே நேரத்தில் மேல் எகிப்தையும் கீழ் எகிப்தையும் ஆட்சிசெய்யவும் நிர்வகிக்கவும் விரும்பும் ஆட்சியாளர்களுக்கு தலைநகராகக் கொள்வதற்கு அதைத் தவிரவும் சிறப்பான தேர்வு வேறு எதுவும் இருக்கமுடியாது. பழைய பேரரசு முதல் எல்லாப் பேரரசுகளின் தலைநகரமாக விளங்கியது. மெம்ஃபிஸில் அரசர்களின் வசிப்பிடம், நடுவண் அரசாங்கம் ஆகியவை அமைந்திருந்தன. இங்கிருக்கும் தொன்மையான கட்டடங்களின் இடிபாடுகளைக் கொண்டு பண்டைய எகிப்திய நகர வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

மெம்ஃபிஸ் நகர சிதிலங்கள்
மெம்ஃபிஸ் நகர சிதிலங்கள்

மெம்ஃபிஸ் கடவுள்களின் புனிதமான இடமாகவும் கருதப்பட்டது என்பதால் பல கடவுளர்களுக்கான கோயில்களை இங்கே பார்க்க முடிகிறது. மிட் ரஹினா என்ற இடத்தில் ப்டாஹ் என்ற கடவுளின் கோயில் அமைந்துள்ளது. படைத்தல் கடவுளான இவர் கைவினைக் கலைஞர்களின் புரவலராகவும் இருக்கிறார். அபு குரப், அபுசிர் என்ற இரு இடங்களில் சூரியக் கடவுளின் கோயில்கள் உள்ளன.

சுமார் எட்டு அரச பரம்பரைகளின் தலைநகரமாக இருந்ததால் பல அரண்மனைகள் காணப்படுகின்றன. ஏப்ரீஸ் அரண்மனையைச் சுற்றிலும் கைவினைக் கலைஞர்களின் பணிமனைகளும் பட்டறைகளும் தொழிற்கருவிகளும் மக்களின் வசிப்பிடங்களும் அமைந்திருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது.

மெம்ஃபிஸ் நகரில் சிதிலமடைந்த ஒரு கோயில்
மெம்ஃபிஸ் நகரில் சிதிலமடைந்த ஒரு கோயில்

பிரமிடுகள் பண்டைய எகிப்தின் தலைநகராகவும் முக்கியமான நகரங்களுள் ஒன்றாகவும் இருந்த மெம்ஃபிஸ் நகரை ஒட்டிய பகுதியில் இருக்கும் சிதிலங்களுக்கு இடையே காணப்படுகின்றன. எகிப்தில் மட்டுமில்லாமல் சூடான், மெக்ஸிகோ, கிரீஸ், இத்தாலி, ஜாவா, கம்போடியா, பெரு, அமெரிக்கா எனப் பல நாடுகளில் பிரமிடுகளும் அவற்றையொத்த கட்டட அமைப்புகளும் இருக்கின்றன. இவை வழிபாட்டுத் தலங்களாகவும் இறந்தவர்களின் மறுமைக்கான தலங்களாகவும் இருந்தன.

மெம்ஃபிஸின் நினைவுச் சின்னங்கள் அடங்கிய பகுதி கீஸா பீடபூமிக்குத் தெற்கே உள்ளது. வடக்கில் தாஹ்ஷுர் வரையிலும் பரவியுள்ளது. எகிப்திய வரலாற்றின் முதல் கல்லாலான கட்டடங்களையும் மஸ்தாபா எனப்படும் அரசர்களின் நினைவிடங்களையும் இங்கே பார்க்கலாம். பிற்காலத்தில் கட்டப்பட்ட பிரமிடுகளின் தொடக்க நிலை அமைப்புகள்தாம் இந்த மஸ்தாபாக்கள் என்பது புரிகிறது. இங்கு மொத்தம் 38 பிரமிடுகள் இருக்கின்றன. இவற்றுள் பண்டைய காலத்தின் சான்றாக நிற்கும் குஃபுவின் பெரிய பிரமிடும் அடங்கும். இதனுடன் இஸ்பிங்சஸ் இன்னும் பல ஆயிரக்கணக்கான பாறைக் கல்லறைகளும் இங்கே அமைந்துள்ளன.

தாஹ்ஷுர் பிரமிடு

கீஸா பிரமிடும் அதைச் சுற்றியுள்ள பிரமிடு தொகுதியும் சுவையான ரகசியங்களை உள்ளடக்கிய கட்டட அமைப்பாக இருக்கின்றன. பிரமிடின் கூர்ங்கோபுர வடிவம் ஆச்சரியமூட்டுவதோடு பரந்து விரிந்த மணல்வெளியில் மனிதனால் அமைக்கப்பட்ட கலை வடிவம் என்பதால் அது குறித்த செய்திகளை அறிந்துகொள்வதில் ஆவல் ஏற்படுகிறது.

அகழ்வாராய்ச்சியாளர்களோடு இயற்பியல் வல்லுநர்களும் பொறியாளர்களும் இணைந்து பிரமிடுகள் ஏன், எதற்கு, எப்படிக் கட்டப்பட்டன என்று ஆராய்ச்சி செய்கிறார்கள். ஓரளவுக்கு விடை தெரிந்துவிட்டது என்றாலும் தோண்டத் தோண்ட இன்னுமின்னும் புதிய தகவல்களும் பரிமாணங்களும் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.

பிரமிடுகள் நைல் ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்திருப்பதற்கு தத்துவார்த்தமான காரணம் சொல்லப்படுகிறது. பண்டைய எகிப்தியர்களின் வாழ்வோடு சூரியன் பின்னிப் பிணைந்திருந்தது. மேற்கில் மறையும் சூரியன் மறுநாள் மீண்டும் பிறப்பது போலவே இறந்து போன எகிப்திய பாரோக்களின் ஆன்மா நிலைபேறுடைய வாழ்க்கையைப் பெறும் என்பதைக் குறிப்பதாக இருக்கிறது.

0

2021ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் பண்டைய எகிப்தோடு தொடர்புடைய செய்தி ஒன்றைப் படித்தேன். எகிப்திய மன்னர் குஃபு புதைக்கப்பட்ட கீஸா பிரமிடின் அருகில் மண்ணுக்குள் புதைந்திருந்த பிரம்மாண்டமான சூரிய கப்பல் ஒன்று கீஸா அருங்காட்சியகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. உலகிலேயே மரத்தாலான மிகவும் பெரியதும் பழைமை வாய்ந்ததுமான கைவினைப் பொருளைப் பாதுகாத்து வைப்பதற்காக இதைச் செய்வதாக எகிப்திய அரசாங்கம் சொன்னது.

4600 வருடம் பழைமை வாய்ந்த அந்தக் கப்பல் 126 மீட்டர் நீளமும் 20 டன் எடையும் கொண்டது. 1954ஆம் ஆண்டு நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது. பண்டைய எகிப்தியர்கள் மறுமையில் நம்பிக்கை கொண்டவர்கள் என்பதால் மன்னரை வானுலகுக்கு அழைத்துச் செல்வதற்காக வடிவமைத்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

(தொடரும்)

பகிர:
கார்குழலி

கார்குழலி

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதுபவர். பல்வேறு அரசுத் துறைகளோடும் பன்னாட்டு அரசு சாரா அமைப்புகளோடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடும் நாளிதழ்களோடும் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். துலிகா, பிரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்களில் குழந்தைகளுக்காக நாற்பத்தைந்துக்கும் அதிகமான நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *