Skip to content
Home » உலகின் கதை #8 – ஹட்ஷெப்சூட்: எகிப்தின் அரசி

உலகின் கதை #8 – ஹட்ஷெப்சூட்: எகிப்தின் அரசி

ஹட்ஷெப்சூட்

பாரோக்கள் எகிப்தின் ஆட்சியாளர்கள் மட்டுமல்ல மதத் தலைவர்களாகவும் விளங்கினார்கள். பாரோ என்றால் ‘பிரம்மாண்டமான வீடு’ என்று பொருள். அவர்கள் வசித்த அரண்மனைகளைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்ட சொல் நாளடைவில் அவர்களைக் குறிக்கும் சொல்லாக மாறியது.

பாரோக்கள் எண்ணற்ற எகிப்தியக் கடவுளர்களையும் மக்களையும் ஒன்றிணைக்கும் தெய்வீக இடையீட்டாளராகக் கருதப்பட்டார்கள். வெவ்வேறு கடவுள்களை வழிபட்ட மக்களுக்கு இடையே நல்லிணக்கத்தைப் பேணுவதும் வழிபாடுகளிலும் விழாக்களிலும் ஈடுபவதும் இவர்களின் முக்கியக் கடமையாக இருந்தது. சட்டங்களை இயற்றுவது, வரி வசூலிப்பது, போர் தொடுப்பது, தங்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளைப் பராமரிப்பது இவையெல்லாம் அவர்களின் அரசாங்கப் பணிகள்.

எகிப்தின் முதல் பாரோ யார் என்று உறுதியாகச் சொல்லமுடியவில்லை. நார்மர் என்ற மன்னனாகத்தான் இருக்கவேண்டும் எனப் பல வரலாற்று அறிஞர்கள் நம்புகிறார்கள். ‘இரண்டு நிலங்களின் தேவன்’ என்ற பட்டப்பெயரால் அழைக்கப்படுவதால் மேல் எகிப்தையும் கீழ் எகிப்தையும் ஒன்றிணைத்து ஆட்சிசெய்த முதல் மன்னன் இவன்தான் என்றும் கருதப்படுகிறது.

பெரும்பாலும் ஆண்களே பாரோக்களாக இருந்தனர் என்றாலும் மெர்னீத், ஹட்ஷெப்சூட், நெஃபெர்டீட்டீ, நெஃபர்டாரீ, கிளியோபாட்ரா போன்ற பெண்ணரசிகளைப் பற்றிய குறிப்புகளும் கிடைத்துள்ளன. கிளியோபாட்ராவைத் தெரிந்த அளவுக்கு மற்றவர்களைப் பற்றி எவரும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

இவர்களில் ஹட்ஷெப்சூட் எதிர்பாராதவிதத்தில் அரியணை ஏறினார் என்றாலும் சிறந்த ஆட்சியாளராக இருந்தார் என்கிறது வரலாறு. ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு அவரைப் பற்றிய கல்வெட்டுக்களும் நினைவுச் சின்னங்களும் முற்றிலும் அழிக்கப்பட்டன. அந்த அழகிய புன்னகை சிந்தும் முகத்தைச் சிதைக்கும் எண்ணம் ஏன் ஏற்பட்டது, அதற்கான காரணம் என்ன என்பதைக் கட்டுரையின் பிற்பகுதியில் பார்க்கலாம்.

பண்டைய எகிப்தில் புதிய பேரரசு எழுச்சி பெற்றிருந்த காலம் அது. கி.மு. 1506இல் வாழ்ந்த பதினெட்டாம் வம்சத்தின் முதலாம் தூட்மோஸுக்கும் அவரின் பட்டத்து அரசியான அஹ்மோஸுக்கும் பிறந்த மகள் ஹட்ஷெப்சூட். முதலாம் தூட்மோஸ் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற கவர்ச்சியும் செல்வாக்குமிக்க அரசன். தன்னை எதிர்த்தவர்களின்மீது போர்தொடுத்து எல்லோரையும் தன் அதிகாரத்துக்குக் கீழே கொண்டுவந்தார். அவர் அரசராக முடிசூடிய ஆண்டில்தான் ஹட்ஷெப்சூட் பிறந்திருக்கவேண்டும் என்று கருதுகிறார்கள் வரலாற்று அறிஞர்கள்.

தந்தையின்மீது பெருமதிப்பும் வியப்பும் கொண்டவளாக வளர்ந்தாள் ஹட்ஷெப்சூட். மிகுந்த திறமைசாலியாகவும் இருந்திருக்கவேண்டும். ஆனால் எடுத்த எடுப்பிலேயே தன்னுடைய மகளை பாரோவாக்கும் எண்ணமெல்லாம் மன்னருக்கு இல்லை. வழி வழியாக ஆண் வாரிசுகள் மட்டுமே பாரோவாக முடிசூட்டிக் கொண்டனர். விதியின் விளையாட்டால் அவருடைய பட்டத்து அரசியான அஹ்மோஸுக்கு பிறந்த ஆண் குழந்தைகள் இளம் வயதிலேயே இறந்துபோனார்கள்.

முதலாம் தூட்மோஸின் இன்னொரு மனைவியான மூட்னோஃப்ரெட்டுக்குப் பிறந்த இரண்டாம் தூட்மோஸை பாரோவாக முடிசூட்டினார். கூடவே ஹட்ஷெப்சூட்டை அவளது சகோதரன் முறைகொண்ட இரண்டாம் தூட்மோஸுக்கு மணமுடித்து வைத்தார். அரச குடும்பத்தின் வம்சாவளியைப் பாதுகாப்பதற்காகவும் குடும்பத்துக்குள் வெளியாட்கள் ஊடுருவாமல் இருக்கவும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர சகோதரியர் திருமணம் செய்துகொள்வது பண்டைய எகிப்திய அரச குடும்பத்தின் வழக்கமாக இருந்தது.

ஹட்ஷெப்சூட்டுக்கும் இரண்டாம் தூட்மோஸுக்கும் ஆண் வாரிசு இல்லை. நெஃபரூரே என்ற மகள் மட்டுமே இருந்தாள். அதனால் இரண்டாம் தூட்மோஸ் இறந்தபோது ஆட்சிப்பொறுப்பு அவனது இன்னொரு மனைவியின் ஆண் வாரிசான மூன்றாம் தூட்மோஸிடம் கைமாறியது. மூன்றாம் தூட்மோஸ் கைக்குழந்தை என்பதாலும் அவனுடைய தாய் அந்தப்புரத்தில் இருந்த அரசி என்பதாலும் அவன் சார்பாக ஆட்சிப் பொறுப்பை ஹட்ஷெப்சூட் ஏற்றுக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டது.

முதல் ஏழு வருடம் மாற்றாம் குழந்தையின் பிரதிநிதியாக ஆட்சி புரிந்தவர் ஏழாம் ஆண்டின் முடிவில் தானே முடிசூட்டிக்கொண்டு தனக்கான பட்டப்பெயரையும் தேர்ந்தெடுத்தார். மூன்றாம் தூட்மோஸ் வளர்ந்த பின்னரும் ஹட்ஷெப்சூட்டும் இணை அரசராக இருந்தார். வெவ்வேறு காலத்தைச் சேர்ந்த வரலாற்று அறிஞர்கள் ஹட்ஷெப்சூட்டின் செயல்பாட்டை வெவ்வேறு விதமாகப் பார்த்தார்கள் என்பது சுவையாக இருக்கிறது.

‘அரசாட்சியை நயவஞ்சகமாகக் கைப்பற்றிய தற்பெருமையும் கர்வமும் கொண்டவள்’ என்றும் ’அவளுடைய உண்மையான பழிபாவத்துக்கு அஞ்சாத தன்மை வெளியே தெரியவந்தது’ என்றும் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த வரலாற்று அறிஞர்கள் எண்ணினார்கள். ஆனால் சமீபகால ஆராய்ச்சியாளர்களோ அரச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களிடம் இருந்து ஆட்சிக்கு அச்சுறுத்தல் வந்திருக்கலாம். அதனால் அரசியல் நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவை ஹட்ஷெப்சூட் எடுத்திருக்கலாம் என்கிறார்கள். அவர் மூன்றாம் தூட்மோஸை சிறைப்படுத்தவில்லை என்பதையும் மாறாக அவன் தொடர்ந்து போர்த்திறத்தைக் கற்றுக்கொண்டிருந்தான் என்பதையும் இந்தக் கருத்துக்கு ஆதாரமாகச் சுட்டுகிறார்கள்.

இதுவரையில் பெண் உடலோடும் பெண்கள் அணியும் ஆடை ஆபரணங்களையும் அணிந்ததுபோல ஓவியங்களிலும் சிற்பங்களிலும் சித்தரிக்கப்பட்டார் ஹட்ஷெப்சூட். முடிசூட்டிக்கொண்ட பின்னர் பெண் உடலோடு இருந்தாலும் ஆண்களின் அணிகலன்களை அணிந்திருப்பதுபோலச் சித்தரிக்கப்பட்டார் என்பது தெரியவருகிறது. வெவ்வேறுவிதமான ஆண் அரசர்களின் சின்னங்களை அணிந்துகொண்டிருக்கும் அவரின் ஓவியங்களின் மூலமாக இது தெரிய வருகிறது. ஆண்கள் அணிந்துகொள்ளும் தலையணி, மணிமுடி இவற்றோடு ஒட்டுத் தாடியையும் வைத்துகொண்டார். இதையும் ஒரு நுட்பமான நகர்வு என்கிறார்கள் சமீபத்திய வரலாற்று அறிஞர்கள்.

அந்தக் காலத்தில் ஒரு பெண் மன்னராக ஆட்சிபுரிவதற்கும் மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் பெரிய வரவேற்பில்லை என்பதால் தன்னையே மீள் கண்டுபிடிப்புச் செய்துகொண்டார் ஹட்ஷெப்சூட். சூரியக் கடவுளான ராவின் (Ra) ஆன்மா என்று பொருள்படும்படி மாட்கரா என்ற புதிய பெயரையும் சூட்டிக்கொண்டார். தனது தெய்வீகத் தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்த சூரியக் கடவுளிடம் தனக்கிருக்கும் நேரடித் தொடர்பை வலியுறுத்துவது அவசியமாக இருந்தது.

அதேநேரம் தன்னுடைய உண்மையான பாலினத்தை அவர் ஒருபோதும் மறைக்கவில்லை. அவருடைய சிற்பங்களின்மீது ’ராவின் மகள்’ என்றோ ’மாட்சிமைபொருந்திய அரசர், இவள்தான்’ என்றோ குறிப்பிடப்பட்டது. அரசியாக இருந்தாலும் சாமானியராக இருந்தாலும் பெண் என்ற பாலின அடையாளம் ஒருவரின்மீது கூடுதல் சுமையைத்தான் சுமத்துகிறது என்பது காலத்தைக் கடந்து நிற்கும் உண்மை போலும்.

ஹட்ஷெப்சூட் திறமையான அரசியல் வல்லுநர்களின் விசுவாசத்தைப் பெற்றிருந்தார். அப்படிப்பட்டவர்களைத் தனக்கு நெருக்கமான வட்டத்தில் வைத்திருந்தார். அரசாங்கப் பொறுப்புகளை அவர்களுக்குப் பகிர்ந்தளித்தார். அவரது மகள் நெஃபரூரேயின் ஆசிரியரான செனன்மூட் அவருக்கு நெருக்கமானவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தார். அரசாங்கத்தில் முக்கியப் பங்குவகித்ததோடு அரசிக்கு நிகரான செல்வாக்கையும் பெற்றிருந்தார் செனன்மூட். அரசி, அரசியல் வல்லுநர் என்பது தவிர இருவருக்கும் இடையே வேறு எந்த உறவும் இல்லை என்று அடித்துச் சொல்கிறார்கள் அறிஞர்கள்.

ஹட்ஷெப்சூட்டுக்கு முன்னர் ஆட்சியில் இருந்த எகிப்திய அரசர்கள் தங்களின் பெரும்பாலான நேரத்தை எல்லைகளைப் பாதுகாப்பதற்குச் செலவிட்டார்கள். ஆனால் வர்த்தகத்தின்மூலம் உறவைப் பலப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பது ஹட்ஷெப்சூட்டின் வெளியுறவுக் கொள்கையாக இருந்ததால் அவரின் ஆட்சிக்காலத்தில் அமைதி நிலவியது. தேர் அல்-பாஹ்ரி கோயிலின் சுவரோவியங்கள் ஹட்ஷெப்சூட்டின் வாழ்க்கை நிகழ்வுகளைச் சித்தரிக்கின்றன.

நூபியாவில் ஒரு சிறிய சண்டையை நடத்திமுடித்தார் என்ற செய்தி அவருடைய போர்த்திறத்துக்கும் சான்றாக இருக்கிறது. அடுத்து ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் இருந்த பூண்ட் என்ற பண்டைய நகரத்தோடு கடல்வழி வாணிபத்தில் ஈடுபட்டார் ஹட்ஷெப்சூட். இந்த நகரம் இன்றைய எரித்ரியா அல்லது சோமாலியாவில் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தங்கம், கருங்காலி மரம், மிர் எனப்படும் நறுமணப் பொருள், விலங்குகளின் தோல், பபூன் இனக் குரங்குகள் எனப் பலவகையான பொருட்களை எகிப்துக்குக் கொண்டுவந்தார்கள். வேரோடு பிடுங்கப்பட்ட மிர் மரங்களை தேர் அல்-பாஹ்ரியின் தோட்டங்களிலும் பூங்காக்களிலும் நட்டார்கள்.

கட்டடங்களையும் நினைவுச்சின்னங்களையும் கட்டுவது அரசரின் முக்கிய கடமையாகக் கருதப்பட்ட காலம் அது. அந்த மரபை இன்றைய அரசுகளும் கடைப்பிடிக்கின்றன என்பதைக் கண்கூடாகப் பார்க்கமுடிகிறது. தீப்ஸிலும் அதைச் சுற்றியிருந்த பகுதிகளிலும் பல பொதுத்துறைப் பணிகளை மேற்கொண்டார் ஹட்ஷெப்சூட். சாலைகளையும் வழிபாட்டிடங்களையும் அமைத்தார். தீப்ஸ் நகரில் தேசியக் கடவுளான ராவுக்குக் கோயில் எழுப்பினார். கர்னக் கோயில் வளாகத்தில் 100 அடி உயரமுள்ள இரண்டு சதுரத் தூபிகளை நட்டார்.

தேர் அல்-பாஹ்ரியில் தனக்கென அவரே எழுப்பிய மாபெரும் நினைவுச்சின்னம் பண்டைய உலகின் வியத்தகு கட்டட அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த நினைவுச்சின்னம் இறப்புக்குப் பின்னர் நிலைபேறுடைய வாழ்க்கையைப் பெறுவதற்கான வழிபாட்டு முறையோடு தொடர்புடையதாக இருந்தது. ஹட்ஷெப்சூட்டுக்கு முந்தைய அரசர்கள் எழுப்பிய கோட்டைபோன்ற நினைவுச்சின்னங்களில் இருந்து மாறுபட்டு நளினமும் நுண்மைத்தன்மை கொண்டதாகவும் இருந்தது. இத்தனைப் பணிகளையும் மேற்பார்வையிடும் பொறுப்பில் இருந்தார் செனன்மூட். சொல்லப்போனால் அவருடைய வழிகாட்டுதலின் பெயரில்தான் இந்தக் கட்டடங்களையெல்லாம் ஹட்ஷெப்சூட் கட்டினார் என்பது தெரியவருகிறது.

அரசர்களின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்ட இடத்தில் இறந்தபின் தன்னைப் புதைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார் ஹட்ஷெப்சூட். தன் தந்தை முதலாம் தூட்மோஸையும் ஏற்கெனவே புதைத்திருந்த இடத்தில் இருந்து இடம்பெயர்த்து தனக்கருகே புதைக்கும்படிச் செய்தார். இதன்மூலம் தன்னுடைய ஆட்சி முறையானது என்பதையும் சட்டத்துக்குட்பட்டது என்பதையும் தான் அரச வாரிசு என்பதையும் உறுதிப்படுத்தினார்.

ஹட்ஷெப்சூட் 1458ஆம் ஆண்டு தன்னுடைய 50வது வயதை எட்டுமுன்னர் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அந்த வருடம் ’மாட்டின் ஆட்சியாளன்’ என்ற பட்டப்பெயரைத் தனக்குச் சூட்டிக்கொண்டான் மூன்றாம் தூட்மோஸ். ஹட்ஷெப்சூட்டின்மீது கொண்டிருந்த வெறுப்பையெல்லாம் அவருடைய இறப்புக்குப் பிறகு அவர் எழுப்பிய கட்டடங்களின்மீதும் நினைவுச்சின்னங்களின்மீதும் வெளிக்காட்டித் தணித்துக்கொண்டான். அவருடைய பெயரையும் புகழையும் வரலாற்றில் இருந்து முற்றிலும் அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டான்.

அது உடனடியாக நடந்தது என்று சில அறிஞர்களும் இல்லையில்லை 20 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாம் தூட்மோஸின் ஆட்சியின் இறுதிப்பகுதியில் நடந்தது என்றும் சமீப காலத்திய அறிஞர்களும் இரு வேறுபட்ட கருத்துகளை முன்வைக்கிறார்கள். தன்னுடைய மகன் அரியணை ஏறவேண்டும் என்பதோடு வேறு யாருக்கும் ஆட்சி அதிகாரம் கைமாறிவிடக்கூடாது என்ற எண்ணமே காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அல்லது ஹட்ஷெப்சூட்டின் அடியொற்றி மற்ற அரச குடும்பத்துப் பெண்களும் ஆட்சிக்கட்டிலில் ஏறும் எண்ணத்தைப் பெற்றுவிடக்கூடாது என்பதும் இன்னொரு காரணமாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஹட்ஷெப்சூட்டின் வாழ்க்கை வரலாற்றைப் புத்தகமாக எழுதிய ஜாய்ஸ் டில்ஸ்லீ ‘பெரிய பனிப்பாறையின் சின்ன முனையைத்தான் பார்க்கிறோம். ஹட்ஷெப்சூட்டைப் பற்றி நமக்குத் தெரியாத பல விஷயங்கள் இருக்கின்றன,’ என்கிறார். 2007இல் அரசர்களின் பள்ளத்தாக்கில் ஒரு பெண்ணின் பதப்படுத்திய உடல் கிடைத்தது. அது ஹட்ஷெப்சூட்டின் உடலாக இருக்கும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். ஆராய்ச்சியின் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

(தொடரும்)

பகிர:
கார்குழலி

கார்குழலி

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதுபவர். பல்வேறு அரசுத் துறைகளோடும் பன்னாட்டு அரசு சாரா அமைப்புகளோடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடும் நாளிதழ்களோடும் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். துலிகா, பிரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்களில் குழந்தைகளுக்காக நாற்பத்தைந்துக்கும் அதிகமான நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *