Skip to content
Home » உலகின் கதை #9 – பிரமிடு என்னும் உலக அதிசயம்

உலகின் கதை #9 – பிரமிடு என்னும் உலக அதிசயம்

பிரமிடு என்னும் உலக அதிசயம்

பண்டைய எகிப்தைக் கிட்டத்தட்ட முப்பது வம்சாவளியைச் சேர்ந்த பாரோக்கள் ஆட்சி செய்தனர். இவர்களைப் பற்றிய முழுமையான குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. பற்பல வருடங்களுக்கும் மேலாகக் கிடைத்த துண்டுத் துண்டான தகவல்களை வரலாற்று அறிஞர்கள் கால வரிசைப்படி ஒன்றிணைத்து நமக்குப் புரியும் வகையில் எழுதியுள்ளார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஒவ்வொரு வம்சாவளியும் வெவ்வேறு நாள்காட்டிகளைப் பயன்படுத்தியதால் வருடங்களைப் பற்றிய குறிப்புகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருப்பதையும் நினைவில்கொள்வது அவசியம்.

பாரோக்கள் ஆட்சி புரிந்த காலத்தின் அடிப்படையில் ஆதி வம்சாவளி, பழைய பேரரசு, இடைக்காலப் பேரரசு, புதிய பேரரசு என்று நான்கு பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள். இவற்றில் நுட்பமான உட்பிரிவுகளும் உண்டு. இவர்கள் ஒவ்வொருவரும் பலவிதமான கட்டடங்களையும் கோயில்களையும் நினைவிடங்களையும் அமைத்தார்கள். இவற்றில் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்துவது பிரமிடுகள். மெம்ஃபிஸில் கீஸா முதல் தாஹ்ஸுர் வரையிலும் அமைந்திருக்கும் பிரமிடுகள் உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஆதி வம்சாவளியைச் சேர்ந்த எகிப்திய அரசர்கள் முதலில் மஸ்தாபா எனப்படும் நீள் இருக்கை வடிவ நினைவிடங்களைக் கட்டினார்கள். பழைய பேரரசைச் சேர்ந்த பாரோக்கள்தான் பிரமிடுகளைக் கட்டினார்கள். ஜோஸர் என்ற மன்னனின் கட்டடக் கலைஞரான இமோடெப் ஆறு மஸ்தாபாக்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிப் படிபோன்ற அமைப்பைக் கொண்ட பிரமிடைக் கட்டினார். இந்தப் படி பிரமிட் நைல் நதியின் மேற்குக் கரையில் மெம்ஃபிஸுக்கு அருகில் இருக்கும் சக்காரா என்ற இடத்தில் நிறுவப்பட்டது. படி பிரமிடின் உட்பகுதியில் மன்னரின் புதைவிடத்தோடு பல்வேறு அறைகளும் நீள் பாதைகளும் அமைக்கப்பட்டன.

சரிவான பக்கங்களைக் கொண்ட பிரமிடுகள் முதன்முதலில் பழைய பேரரசின் நான்காம் வம்சாவளியைச் சேர்ந்த ஸ்னெஃப்ரூ என்ற மன்னனின் ஆட்சிக்காலத்தில் மேய்டம் என்ற இடத்தில் கட்டப்பட்டன. மூன்றாம் வம்சாவளியைச் சேர்ந்த ஹூனி என்ற மன்னன் கட்டத் தொடங்கியதை ஸ்னெஃப்ரூ முடித்துவைத்தான் என்றும் சொல்லப்படுகிறது. முதலில் படி பிரமிடை அமைத்து பிறகு அந்தப் படிகளுக்கிடையே இருந்த இடைவெளிகளைக் கற்கள், சுண்ணாம்புக் கற்கள் ஆகியவற்றால் நிரவினார்கள் என்பதால் இதைப் பொய் பிரமிடு என்றும் அழைக்கிறார்கள்.

தாஹ்ஸூர் என்ற இடத்தில் இருக்கும் பிரமிடின் பக்கச் சரிவின் கோணம் பாதி உயரம் வரையிலும் 51 பாகையாகவும் பிறகு 43 பாகையாகவும் இருப்பதால் இதை வளைந்த பிரமிடு என்கிறார்கள். இதே தாஹ்ஸூரில் 43 பாகை கோணம் கொண்ட தட்டையான அமைப்பைக் கொண்ட பிரமிடு ஒன்றும் இருக்கிறது. பலவிதமான பிரமிடுகளைக் கட்டிப் பார்த்து இறுதியில் ஒரு வடிவத்தை முடிவு செய்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. இவை இரண்டுமே ஸ்னெஃப்ரூவின் காலத்தில் அமைக்கப்பட்டவை.

0

கீஸாவில் இருக்கும் மூன்று முக்கியமான பிரமிடுகள் குஃபு, கஃப்ரே, மென்கவுரே ஆகிய மன்னர்களுடையவை. ஸ்னெஃப்ரூவின் மகன் குஃபு கி.மு. 2613க்கும் 2494க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தான். அவனுக்காகக் கீஸாவில் கட்டப்பட்ட பிரமிடு மற்றவைகளைவிடவும் பெரியது, புகழ்வாய்ந்ததும்கூட. இது பெரிய பிரமிடு என்றும் அழைக்கப்படுகிறது. தன்னுடைய இருபதாவது வயதில் அரியணை ஏறியவுடன் இந்தப் பெரிய பிரமிடை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டான் குஃபு.

உலகிலேயே இதுவரை மனிதனால் எழுப்பப்பட்ட மிக உயரமான கட்டடம் குஃபுவின் கீஸா பிரமிடுதான். 147 மீட்டர் உயரம் கொண்டது. அதன் அடிப்பகுதியின் ஒவ்வொரு பக்கமும் சுமார் 230 மீட்டர் நீளமாகும். அதன் சாய்வு பக்கங்கள் 51 பாகை கோணத்தில் அமைந்திருப்பதோடு திசைகாட்டும் கருவியின் நான்கு முதன்மைப் புள்ளிகளோடு ஒத்திசைந்து காணப்படுகிறது. கூடவே சூரியக் கடிகாரமாகவும் இருக்கிறது. கல்லில் குறிக்கப்பட்டு இருக்கும் அடையாளத்தின்மீது விழும் நிழலைப் பார்த்து நேரத்தைச் சொல்லமுடியும். வானில் சூரியனின் பயணத்தைக் கணக்கிடும் சூரிய நாட்காட்டியாகவும் இருந்திருக்கலாம்.

கீஸா பிரமிட் பண்டைய எகிப்தியர்களின் தொழில்நுட்பத் திறனுக்கும் கட்டடக் கலை குறித்த அறிவுக்கும் சான்றாக இருக்கிறது. இதன் உட்புறம் மஞ்சள் வண்ணச் சுண்ணாம்புக் கல்லாலும் வெளிப்புறச் சுவர் வழவழப்பான இளம் வண்ணச் சுண்ணாம்புக் கல்லாலும் மன்னரின் உடல் புதைக்கப்பட்டிருக்கும் உள்ளறை கருங்கல்லாலும் அமைக்கப்பட்டுள்ளது.

5.75 டன் எடையுள்ள இந்தப் பிரமிடை அமைப்பதற்காகக் கிட்டத்தட்ட 2.3 மில்லியன் கற்கள் வெட்டப்பட்டு இங்கே கொண்டுவரப்பட்டன. பிரமிடின் நுழைவாயில் வடக்குப் பகுதியில் நிலத்தில் இருந்து 18 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அங்கிருந்து கீழ்நோக்கிச் செல்லும் சாய்வான பாதை மன்னனும் அவரது தாயும் புதைப்பட்டிருக்கும் அறைகளுக்கு இட்டுச் செல்கிறது.

கீஸாவில் இருக்கும் மூன்று பிரமிடுகளுக்கும் அருகே பிணவறைக் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பிணவறைக் கோயிலில் மண்டபம், கிடங்கு, நீள் வடிவ வழிபாட்டு அறைகள், தொழுகையிடம், காணிக்கைளை அடுக்கி வைக்கும் மேசை ஆகியவை இருக்கின்றன. அந்தக் காலத்தில் பூசாரிகள் ஒவ்வொரு நாளும் நீத்தார் சடங்குகளைச் செய்ததோடு இறந்த மன்னனின் காவல் ஆத்மாவுக்கு உணவும் காணிக்கைப் பொருட்களும் படைத்தார்கள்.

மன்னர் குஃபுவின் பிரமிடுக்கு அருகே அவருடைய தாய் அரசி ஹெடஃபெரஸ் புதைக்கப்பட்ட அறை இருக்கிறது. கல்லாலான காலி சவப்பெட்டியைச் சுற்றிலும் இருக்கும் அறைக்கலன்களும் நகைகளும் பண்டைய எகிப்திய கைவினைஞர்களின் கலைத்திறனுக்கும் செய்நேர்த்திக்கும் சான்று.

பண்டைய காலத்திலும் இடைக்காலத்திலும் பிரமிடுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த விலைமதிப்புமிக்க பொருட்கள் வெவ்வேறு நபர்களால் சூறையாடப்பட்டன. மன்னனோடு புதைக்கப்பட்ட அரிய பொருட்களும் ஆபரணங்களும் திருடப்பட்டன. அதோடு கீஸா பிரமிடின் கற்களும் திருடப்பட்டதால் அதன் தற்போதைய உயரம் 138 மீட்டராகிவிட்டது.

இத்தனைப் பெரிய பிரமிடு எப்படிக் கட்டப்பட்டது என்று வியப்பு ஏற்படுகிறதா? அது குறித்த ஆராய்ச்சியும் அலசலும் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. பிரமிடு கட்டப்படும் இடத்தைச் சுற்றிலும் செங்கல், மண், மணல் ஆகியவற்றாலான சாய்வான மேடு ஒன்றை எழுப்பி பிரமிடு உயர உயர மேட்டின் உயரத்தையும் அதிகப்படுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பிரமிடு கட்டுவதற்கான சுண்ணாம்புக் கற்களைச் சாரம், சறுக்கூர்தி, உருளை, நெம்புகோல் ஆகியவற்றின் உதவியால் மேலே ஏற்றியிருக்கலாம்.

பிரம்மாண்டமான சிற்பமொன்றை எப்படி எடுத்துச் சென்றார்கள் என்பதை ஓவியமாக வரைந்து வைத்திருக்கிறார்கள். அதைப் பார்த்து பிரமிடுக்குத் தேவையான அதிக எடையுள்ள கற்களையும் அப்படித்தான் கொண்டுபோயிருப்பார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. முதலில் வழுக்கும் திரவமொன்றை நிலத்தில் ஊற்றிப் பரவச் செய்து அதன்மீது சறுக்கூர்திகளை நகர்த்தினார்கள் என்பது தெரியவருகிறது.

கீஸாவில் இருக்கும் பிரமிடுகளுக்கான கற்கள் கீஸா பீடபூமியில் இருந்து கொண்டுவரப்பட்டன. சுண்ணாம்புக் கற்களை நைல் நதியின் எதிர்க்கரையில் இருக்கும் டூராவில் இருந்து எடுத்து வந்தனர். கருங்கற்கள் அஸ்வானில் இருந்து வந்தவை. கற்களை வெட்ட உளி, ரம்பம், துளையிடும் கருவி போன்ற செம்புக் கருவிகளைப் பயன்படுத்தினர். கடினமான கற்களை மண்காகிதத்தால் இழைத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

மன்னன் குஃபுவைப் பற்றி கிரேக்க வரலாற்றியலாளர் ஹெரோடெட்டஸ் எழுதிய குறிப்பில் கொடூரமானவன் என்றும் கொடுங்கோலன் என்றும் அவன் ஆசைப்பட்ட பிரமிடைக் கட்டி முடிப்பதற்காக மக்களை அடிமைப்படுத்தினான் என்றும் எழுதுகிறார். பெரிய பிரமிடைக் கட்டி முடிக்க நூறாயிரம் பணியாளர்கள் ஓர் ஆண்டுக்கு மூன்று மாதமென 20 ஆண்டுகள் உழைத்தார்களாம். ஆனால் தற்காலக் குறிப்புகளோ அவனொரு மரபார்ந்த தலைவன் என்றும் மக்களின் நலனுக்காகச் செயல்பட்டான் என்றும் சொல்கின்றன.

தேர்ந்த கல்தச்சர்களும் சிற்பிகளும் வருடமுழுவதும் கட்டடப் பணியில் ஈடுபட்டனர். பணியாளர்கள் அவ்வப்போது தேவைக்கேற்ற அளவில் இந்தக் குழுவோடு சேர்ந்து பணியாற்றினார்கள். இவர்கள் பெரும்பாலும் விவசாயத் தொழிலாளர்கள் என்பதால் விவசாய நிலத்தில் வேலை குறைவாக இருந்த காலத்தில் மட்டுமே பிரமிடு கட்டுமானப் பணியில் ஈடுபட்டனர் என்று கருதப்படுகிறது. கூடவே மருத்துவர்கள், பூசாரிகள், சமையற்காரர்கள் ஆகியோரும் கட்டடப் பணியில் ஈடுபட்டார்கள் என்று கூறப்படுகிறது. பணியாளர்களுக்கென இருப்பிடங்களும் அடுமனைகளும் கிடங்குகளும் பட்டறைகளும் இருந்தது தெரிய வந்துள்ளது.

20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரமிடைச் சுற்றி நடந்த அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் இதைத்தான் சுட்டுகின்றன. பிரமிடு கட்டுமானப் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள், கைவினைஞர்கள் ஆகியோரின் நினைவிடங்களும் இங்கே காணப்படுகின்றன. இவை மண், செங்கல், கல் போன்ற பலவகைப் பொருட்களாலானவை. கல் சுரங்கப் பணியாளர் குழுக்களின் அடையாளக் குறியும் பெயரும் பல கற்களில் இருக்கிறது. ஹீரோக்ளிஃப் எனப்படும் சித்திர எழுத்துக்கள் இறந்தோரின் பெயரையும் அவர்களைப் பற்றிய மற்ற தகவல்களையும் குறிப்பிடுகின்றன.

0

எகிப்து என்றாலே பிரமிடோடு நினைவுக்கு வரும் இன்னொரு விஷயம் ஸ்பிங்க்ஸ். கீஸாவில் இருக்கும் பெரிய பிரமிடுக்குத் தெற்கே பெரிய ஸ்பிங்க்ஸின் சிலை உள்ளது. இது 73 மீட்டர் நீளமும் 20 மீட்டர் உயரமும் கொண்டது. ஒற்றைச் சுண்ணாம்புக் கல்லில் உருவாக்கப்பட்டது. விலங்கின் உடலும் ஆண் முகமும் கொண்டிருப்பதோடு பாரோக்கள் அணியும் தலையணியோடு அமைக்கப்பட்டுள்ளது. பெண் பாரோக்களைச் சித்தரிக்கும் ஸ்பிங்க்ஸ்களும் இருக்கின்றன. குறிப்பாக, ஹட்ஷெப்சூட்டின் சாடையில் கருங்கல், வெண்கல் ஆகியவற்றால் செய்யப்பட்ட ஸ்பிங்க்ஸ் சிலைகளைக் கண்டெடுத்துள்ளனர்.

பெரிய ஸ்பிங்க்ஸின் மேலே நிறமிகளின் மிச்சங்கள் இருப்பதால் ஒரு காலத்தில் வெளிப்புறம் முழுவதும் சிவப்பு வண்ணம் பூசப்பட்டிருக்கலாம். கிட்டத்தட்ட 100 பணியாளர்களின் மூன்று ஆண்டுகாலம் இதை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்கள் என்று பல்வேறு விஷயங்களைக் கணக்கில்கொண்டு தற்போதைய வரலாற்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

பண்டைய எகிப்தில் ஸ்பிங்க்ஸ் ஆன்மிகப் பாதுகாப்பாளராகக் கருதப்பட்டது. வழிபாட்டு வளாகங்களிலும் கல்லறை அமைப்புகளிலும் பல ஸ்பிங்க்ஸ் சிலைகள் நிறுவப்பட்டன. மேல் எகிப்தில் லக்ஸார், கர்னக் கோயில்களை இணைக்கும் இரண்டு மைல் தூரச் சாலை முழுவதும் பல ஸ்பிங்க்ஸ் சிலைகள் காணப்படுகின்றன. பாரோவின் ஆன்மாவை உயிர்த்தெழச் செய்வதற்காகச் சூரியக் கடவுளான ரா, இன்னும் பிற கடவுளர்களின் ஆற்றலை ஒன்றுகுவிக்கப் பயன்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

எகிப்திய பெரிய ஸ்பிங்க்ஸ் கஃப்ரே மன்னனின் உருவச் சிலை என்று கூறப்படுகிறது. ஏனெனில் அவன் கட்டிய பிரமிடு வளாகத்தில் மற்ற சிலைகளோடு இதுவும் காணப்படுகிறது. ஆனால் குஃபு மன்னனின் சாடையில் இருப்பதால் அவர் நினைவாக மகன் கஃப்ரேயால் அமைக்கப்பட்டது என்ற கருத்தும் உண்டு. இல்லையில்லை, குஃபுவின் இன்னொரு மகனான பாரோ ஜெடேஃப்ரீயால் கட்டப்பட்டது எனவும் சொல்லப்படுகிறது. இவர்கள் எல்லோரும் பழைய பேரரசைச் சேர்ந்தவர்கள். வேறு சிலரோ அது புதிய பேரரசைச் சேர்ந்த நான்காம் தூட்மோஸால் நிறுவப்பட்டது என்கிறார்கள்.

பழைய பேரரசின் ஆட்சி முடிவுக்கு வந்தது. காலத்தின் சுழற்சியில் பாலைவன மணலுக்கு நடுவே புதைந்துபோனது ஸ்பிங்க்ஸ். பல வருடங்கள் கழித்துப் பதினெட்டாம் வம்சாவளியைச் சேர்ந்த நான்காம் தூட்மோஸின் கனவில் தோன்றி மண்ணுக்கு நடுவிலிருந்து தன்னை மீட்டெடுத்தால் அவன் பாரோவாக உதவுவதாகச் சொன்னதாம். கனவில் ஸ்பிங்க்ஸ் வந்தது உண்மையா என்பது தெரியவில்லை. ஆனால் நான்காம் தூட்மோஸின் ஆட்சிக்காலத்தில் ஸ்பிங்க்ஸ் அரசரின் சின்னமாகவும் சூரியனின் ஆற்றலின் குறியீடாகவும் விளங்கியது. பெரிய ஸ்பிங்க்ஸ் சிலையின் முன்னங்கால்களுக்கு நடுவே இருக்கும் இளஞ்சிவப்பு வண்ணக் கல்வெட்டில் இந்தக் கனவு பற்றியும் ஸ்பிங்க்ஸின் வாக்குறுதி பற்றியும் பொறிக்கப்பட்டுள்ளது.

மற்ற எல்லா வரலாற்றுச் சின்னங்களையும்போல ஸ்பிங்க்ஸையும் ஆராய்ச்சி செய்கிறார்கள் வல்லுநர்கள். ஸ்பிங்க்ஸின் சிலையில் இயற்கையின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பலவித அரிப்புகளையும் சேதங்களையும் உற்று நோக்கிய வரலாற்று அறிஞர்கள் அது பழைய பேரரசின் காலத்தைச் சேர்ந்ததாகத்தான் இருக்கமுடியும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அதனால் நான்காம் தூட்மோஸ் அதை மீட்டெடுக்கும் பணியைச் செய்திருக்கலாம்.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ஸ்பிங்க்ஸ் என்பது கிரேக்கப் புராணத்தில் காணப்படும் பெயர். கிரேக்க நாடகாசிரியர் சோஃபாக்ளிஸ் எழுதிய ஈடிபஸ் மன்னனின் கதையில் வரும் ஸ்பிங்க்ஸ் பற்றி நீங்கள் படித்திருக்கலாம். எகிப்தில் இருக்கும் இந்த ஸ்பிங்க்ஸ் சிலையை நிறுவிக் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்துத்தான் ஸ்பிங்க்ஸ் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. எகிப்தியர்கள் அதை என்ன பெயர் சொல்லி அழைத்தார்கள் என்பது இன்று வரையிலும் விடைதெரியாத புதிராக இருக்கிறது.

(தொடரும்)

பகிர:
கார்குழலி

கார்குழலி

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதுபவர். பல்வேறு அரசுத் துறைகளோடும் பன்னாட்டு அரசு சாரா அமைப்புகளோடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடும் நாளிதழ்களோடும் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். துலிகா, பிரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்களில் குழந்தைகளுக்காக நாற்பத்தைந்துக்கும் அதிகமான நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *