Skip to content
Home » உலகின் கதை #10 – நூபியன் நினைவுச்சின்னங்கள்

உலகின் கதை #10 – நூபியன் நினைவுச்சின்னங்கள்

அபு சிம்பெல் பகுதி

உலகப் பாரம்பரியப் பட்டியலில் எகிப்தின் நூபியன் பள்ளத்தாக்கில் உள்ள பண்டைய கலாசாரக் களங்களும் இடம்பெற்றுள்ளன. பண்டைய நூபியா ஆப்பிரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்த நிலமாகும். நைல் நதிப் பள்ளத்தாக்கின் ஒரு பகுதியான மேல் எகிப்தில் இருந்து தொடங்கி கிழக்கில் செங்கடல் வரையிலும் பரவியிருந்தது. மேற்கில் லிபியா அதன் எல்லையாக இருந்தது. தற்போதைய சூடான் பண்டைய காலத்தில் கார்த்தூம் எனப்பட்டது; தெற்கில் இந்த நிலப்பகுதியை உள்ளடக்கியதாக இருந்தது.

உலகின் பழமையான இனங்களில் ஒன்றான நூபியன் இனம் வளமிக்க வரலாற்றையும் கலாசாரத்தையும் கொண்டது. பண்டைய எகிப்தின் வரலாற்றுக்கு வடிவம் தருவதில் முக்கியப் பங்கு வகித்த இனமென்றும் சொல்லவேண்டும். தற்கால எகிப்தின் தெற்கு எல்லையும் சூடானின் வடக்குப் பகுதியும் ஒன்றிணையும் மத்திய நைலைச் சுற்றியுள்ள பகுதியில் வசித்த நூபியர்கள் இன்றளவும் அதே பகுதியில் வசித்து வருகிறார்கள். அவர்களுடைய மொழிகள் இப்போதும் புழக்கத்தில் உள்ளன. பல இனக் குழுக்களின் தொகுப்பைத்தான் நூபியன் என்று அவர்கள் வசித்த இடத்தின் பெயரால் அழைத்தார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.

நூபியர்களும் எகிப்தியர்களும் புவியியல் எல்லையைப் பகிர்ந்துகொண்டதால் அவர்களுக்கு இடையே சிக்கலான உறவு நிலவியது. அண்டை நாட்டினர் என்பதால் ஒருவரின் நிலத்தை மற்றவர் ஆக்கிரமித்து வெற்றிகொள்வது தொடர் நிகழ்வாக இருந்தது. கிமு 2040 தொடங்கி அடுத்த நானூறு ஆண்டுகளுக்கு பண்டைய எகிப்து சாம்ராஜ்யம் தெற்கில் நூபியர்கள் வசித்த பகுதியில் விரிவடைந்தது. வர்த்தகப் பாதைகள் எகிப்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. நைல் நதியின் தடத்தில் புதிய கோட்டைகள் கட்டப்பட்டன.

நூபியர்கள் வீரத்திற்குப் பெயர்போனவர்கள் என்றாலும் பண்டைய எகிப்தில் வணிகர்களாகவும் கோயில் பணியாளர்களாகவும் ஏவலாட்களாகவும் பணிபுரிந்தனர். இரு நாட்டவர்களுக்கும் இடையே திருமண உறவும் இருந்தது. பல பாரோக்களின் உடம்பில் நூபிய ரத்தமும் ஓடியிருக்கலாம் என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

இரு நாடுகளுக்கு இடையேயும் வர்த்தகத் தொடர்பு நிலவியதை கிமு 2300இல் பழைய பேரரசின் காலத்தில் எழுதப்பட்ட எகிப்தியக் குறிப்புகளின் வாயிலாகத் தெரிந்துகொள்ளமுடிகிறது. கால்நடை, தங்கம், தந்தம், மரம், வாசனைப் பொருள், படிகம், பேரீச்சை போன்ற பொருட்களில் வணிகம் நடந்தது. இரு நாட்டு மக்களும் விவசாயத்தில் ஈடுபட்டனர், ஒருவரின் சமூக நிலையையும் செல்வத்தையும் அவரிடமிருந்த கால்நடையின் எண்ணிக்கையைக் கொண்டு கணக்கிட்டனர்.

0

பண்டைய நூபியர்கள் பெருவாரியாக வசித்த அபு சிம்பெல் பகுதியில் இருக்கும் நினைவுச்சின்னங்கள் மூவாயிரம் ஆண்டுகள் பழமையானவை. இவை நூபியர்கள் வசித்த பகுதியில் அமைந்திருப்பதால் நூபியன் பள்ளத்தாக்கு நினைவுச்சின்னங்கள் என்று அழைக்கப்படுகின்றனவேயன்றி நூபியர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல.

எகிப்திய பாரோக்கள் நூபியன் பகுதியில் தங்களின் கை மேலோங்கி இருந்ததைக் காட்டுவதற்காகக் கட்டப்பட்டவையாக இருக்கலாம். எகிப்தியர்களின் ஆட்சி எழுவதும் வீழ்வதுமாக இருந்ததால் நூபியர்களின் மனதில் இடம்பிடிக்கவோ அச்சுறுத்தவோ எழுப்பியிருக்கலாம் என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள்.

அபு சிம்பெலில் இருக்கும் பிரம்மாண்டமான குடைவரைக் கோயில்கள் இரண்டாம் ரேமிசீஸினால் கிமு 1264இல் அமைக்கப்பட்டவை. இவற்றைக் கட்டி முடிக்க இருபது வருடங்கள் ஆயின. நைல் நதியின் மேற்குக் கரையில் மணற்பாறை ஓங்கலைக் குடைந்து உருவாக்கப்பட்ட இந்தக் கோயில்கள் காலத்தின் சுழற்சியில் மண்ணுக்குள் புதைந்துபோயின. 1813ஆம் ஆண்டில் இந்தப் பகுதிக்கு வந்த சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரால் கண்டுபிடிக்கப்பட்டன.

இரண்டாம் ரேமிசீஸ் கோயில்
இரண்டாம் ரேமிசீஸ் கோயில்

ஓங்கலின் குழிவான பகுதியில் பிரதான வாயிலின் இரண்டு புறமும் பக்கத்துக்கு இரண்டென ரேமிசீஸின் நான்கு உருவச்சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை பண்டைய எகிப்தியர்களின் தொழில்நுட்பத் திறனுக்குச் சான்றாக இருக்கின்றன. 20 மீட்டர் உயரம்கொண்ட இந்தச் சிலைகளின் தலையில் மேல் எகிப்து, கீழ் எகிப்து இரண்டையும் குறிக்கும் இரட்டை மணிமுடிகள் காணப்படுகின்றன. காலடியில் பாரோவின் அரசி நெஃபெர்டாரி, தாய் முத் தூயி, குழந்தைகள் ஆகியோரின் சிறிய உருவச்சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அபு சிம்பெலில் இருக்கும் இரண்டு கோயில்களுள் பெரியது சூரியக் கடவுள்களான அமோன் ரே, ரே ஹொராக்தே ஆகியோரின் வழிபாட்டுக்காகவும் கோயிலை உருவாக்கவேண்டும் என்று கட்டளையிட்ட பாரோ இரண்டாம் ரேமிசீஸுக்கு மரியாதை செலுத்தவும் எழுப்பப்பட்டது. கோயிலின் உட்புறத்தில் 56 மீட்டர் நீளத்துக்கு அடுத்தடுத்து மூன்று பெரிய அறைகள் அமைந்துள்ளன. அறைகளின் சுவரில் அமைந்திருக்கும் மன்னனின் முகவமைப்புப்போன்ற சிலையை ஆசிரிடே (Osiride) என்றழைக்கிறார்கள். கூடவே கதேஷ் போரிலும் வேறு போர்களிலும் ரேமிசீஸின் வெற்றியைச் சொல்லும் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 22, அக்டோபர் 22 ஆகிய இரண்டு நாட்களில் உதிக்கும் சூரியனின் முதல் கதிர்கள் கோயிலின் உட்புறம் வரையில் ஒளியூட்டும் வகையில் கட்டப்பட்டிருந்தது சிறப்பு.

கோயிலின் உட்புறத்தில் ஆசிரிடே (Osiride) என்றழைக்கப்படும் மன்னனின் முகவமைப்புப்போன்ற சிலைகள்
கோயிலின் உட்புறத்தில் ஆசிரிடே (Osiride) என்றழைக்கப்படும் மன்னனின் முகவமைப்புப்போன்ற சிலைகள்

ரேமிசீஸின் கோயிலுக்கு வட கிழக்குப் பகுதியில் இருக்கும் சிறிய கோயில் ஹாதோர் என்ற பெண் கடவுளின் வழிபாட்டுக்காகவும் இரண்டாம் ரேமிசீஸின் அரசி நெஃபர்டாரிக்கு மரியாதை செலுத்தவும் எழுப்பப்பட்டது. இதன் நுழைவாயிலில் பாரோ, அரசி இருவரின் 10 மீட்டர் உயரமுள்ள சிலைகளை அமைத்துள்ளார்கள்.

பொதுவாக பாரோவின் முழங்கால் உயரத்துக்குத்தான் அரசியின் சிலை இருக்கும். ஆனால் இங்கே இருவரின் சிலையும் ஒரே உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. பாரோக்களுக்குக் கிடைக்கும் அதே அளவு மரியாதையும் அங்கீகாரமும் அவர்களின் அரசியர்க்குக் கிடைப்பதில்லை என்பதால் இது தனித்துவம் பெற்றது என்பதில் சந்தேகமில்லை.

ஹாதோர் மற்றூம் நெஃபர்டாரி கோயில்
ஹாதோர் மற்றூம் நெஃபர்டாரி கோயில்

கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கு 30 வம்சாவளிகள் ஆண்ட பண்டைய எகிப்தில் அரசிகளுக்கென தனியாக அமைக்கப்பட்ட இரண்டாவது கோயில் இது என்பதையும் தெரிந்துகொள்வது அவசியம். முதல் கோயில் அகினாடென் என்ற பாரோ தன் மனைவியும் அரசியுமான நெஃபெர்டீட்டீக்கு அமைத்தது.

அபு சிம்பெல் கோயிலின் உட்புறம் முழுவதும் மன்னரும் அரசியும் தங்கள் நாட்டின் வடக்குப் பகுதியிலும் தெற்குப் பகுதியிலும் இருக்கும் எதிரிகளை அழிப்பதுபோன்ற சுவரோவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. கூடவே எகிப்தின் எண்ணற்ற கடவுளர்களுக்கு அவர்கள் பூசை செய்வதையும் இசைக்கருவிகளை வாசிப்பதையும் சித்தரிக்கும் ஓவியங்களும் காணப்படுகின்றன.

0

கோயில் தீவு என்று அழைக்கப்படும் ஃபீலே தீவு தெற்கு எகிப்தில் உள்ளது. நைல் நதியில் பழைய அஸ்வான் அணைக்கும் புதிய அணைக்கும் இடையே அமைந்திருக்கும் நிலப்பகுதி இது. பண்டைய எகிப்தில் பாலேக் என்று அழைக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் வழக்கில் இருந்த காப்டிக் மொழியில் பீலக் என்றால் இறுதி அல்லது எட்ட இருக்கும் பகுதி என்று பொருள். நூபியாவின் எல்லைக்கருகே இருந்ததால் இந்தப் பெயரில் அழைத்திருக்கலாம். ஃபீலே என்பது பன்மைப் பெயர் என்பதால் முற்காலத்தில் இங்கே இரண்டு தீவுகள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஃபீலே தீவு
ஃபீலே தீவு

ஃபீலேயில் இருக்கும் ஐஸிஸ் கோயில் ஐஸிஸ், ஆசிரிஸ், ஹோரஸ் ஆகிய எகிப்தியப் பெண் கடவுள்களுக்காக அமைக்கப்பட்டது. ஃபீலே கோயிலின் முதற்கட்ட அமைப்புகளை 25ஆம் வம்சாவளியைச் சேர்ந்த பாரோவான தஹர்கா என்பவர் எழுப்பினார். அவருக்குப் பின் வந்த செய்த ஆட்சியாளர்கள் கோயிலின் வெவ்வேறு பகுதிகளை அமைத்தனர். காலப்போக்கில் அவற்றுள் பல பகுதிகள் பிரித்து எடுக்கப்பட்டு தோலெமி அரசர்களால் எழுப்பப்பட்ட கட்டடங்களில் பயன்படுத்தப்பட்டன. 30ஆம் வம்சாவளியின் கடைசி ஆட்சியாளரான இரண்டாம் நெக்டனீபோ பாரோக்களின் வரிசையில் கடைசி மன்னர். கோயிலில் தற்போது காணப்படும் தூண்களை அவர்தான் அமைத்தார்.

ஐஸிஸ் கோயில்
ஐஸிஸ் கோயில்

ஐஸிஸின் கோயிலின் நுட்பமான கட்டட அமைப்புகள் இரண்டாம் தோலெமி (Ptolemy) ஃபிலடெல்ஃபியஸ், அவர் மகன் மூன்றாம் தோலெமி இருவராலும் கட்டப்பட்டவை. பிற்கால தோலெமி மன்னர்களும் அகஸ்டஸ், டைபீரியஸ் ஆகிய ரோமானியப் பேரரசர்களும் இங்கே இருக்கும் அலங்கார வளைவுகளை அமைக்க முற்பட்டனர் என்றாலும் முழுவதுமாகக் கட்டிமுடிக்கவில்லை. இந்தக் கட்டடத் தொகுதியின் மேற்குப் புறத்தில் இருக்கும் வாயிலை ஹேட்ரியன் என்ற ரோமானியப் பேரரசர் அமைத்தார்.

இமோடெப், ஹதோர், ஆசிரிஸ், ஹோரஸ், நெஃப்திஸ் ஆகிய எகிப்திய கடவுளர்களுக்கென சிறிய கோயில்களும் வழிபாட்டுத் தலங்களும் இதே வளாகத்தில் அமைக்கப்பட்டன. கோயிலுக்கு முன் பக்கம் இருந்த இரண்டு சதுரத் தூபிகளை ஆங்கிலேயர்கள் இங்கிலாந்தில் உள்ள டோர்செட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

0

பண்டைய ஃபீலே தீவு நைல் நதியில் ஆண்டுதோறும் பெருக்கெடுக்கும் வெள்ளத்தினால் பாதிக்கப்படாத உயர்வான பகுதியாக இருந்தது. அதனால், பண்டைய காலக் கட்டடக் கலைஞர்கள் புதிய வழிபாட்டு இடங்களை அமைக்க இந்தப் பகுதியைத் தேர்ந்தெடுத்தனர் என நம்பப்படுகிறது. இந்தக் கலாசார வளங்களின் இருப்பை அறிந்ததும் உலக முழுவதும் இருந்து ஆராய்ச்சியாளர்கள் இங்கே வந்து ஆய்வுகளை நடத்தினார்கள். ஆய்வுகள் முடிந்ததும் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் கட்டடங்களை உறுதிப்படுத்தினார்கள். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பழைய அஸ்வான் அணை அமைக்கப்பட்டபோது கட்டடங்களின் ஒரு பகுதி நீரால் சூழப்பட்டன. நீரில் இருந்த உப்பு வண்ணங்களையும் வேலைப்பாடுகளையும் அரிப்பது தெரிய வந்தது.

1960களில் புதிய அஸ்வான் உயர் அணை கட்டப்பட்டபோது நூபியன் பள்ளத்தாக்கு முழுவதும் அணையின் நீர்த்தேக்கமான நாஸர் ஏரியின் கீழ் புதைந்துபோனது. நீர் சூழ்வதற்கு முன்னால் பள்ளத்தாக்கு சுமார் 250 கிலோமீட்டர் நீளத்துக்கு அஸ்வானுக்கும் சூடான் எல்லைக்கும் இடையே நீண்டிருந்தது. இங்கேதான் அபு சிம்பெல் முதல் ஃபீலே வரையிலான பகுதியில் மொத்தம் 11 கலாசார வளங்கள் அமைந்திருந்தன.

யுனெஸ்கோவும் எகிப்து அரசாங்கமும் ஒன்றிணைந்து செயல்பட்டு நீர் முழுவதையும் வெளியேற்றின. பிறகு பெரும்பாலான கட்டடங்களில் இருந்த பல்லாயிரக்கணக்கான கற்களையும் ஒவ்வொன்றாகப் பிரித்தெடுத்துச் சென்று வேறு இடங்களில் மீண்டும் அமைத்தன.

அபு சிம்பெல், ஃபீலே கலாசாரச் சின்னங்களை மீட்பதில் பல தொழில்நுட்பச் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அபு சிம்பெல் கோயில்கள் இரண்டும் இருந்த இடத்திலேயே 60 மீட்டர் உயரத்துக்கு மேலே அமைக்கப்பட்டன. ஃபீலே கோயில் அருகில் உள்ள அகில்கியா என்ற தீவில் கட்டப்பட்டது. இந்த மீட்புப் பணியிலும் புனரமைப்பிலும் வெகுவாக உதவிய ஸ்பெயின், நெதர்லாந்து, அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு நன்றிக்கடனாக நான்கு கோயில்களைப் பரிசளித்தது எகிப்திய அரசு.

(தொடரும்)

பகிர:
கார்குழலி

கார்குழலி

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதுபவர். பல்வேறு அரசுத் துறைகளோடும் பன்னாட்டு அரசு சாரா அமைப்புகளோடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடும் நாளிதழ்களோடும் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். துலிகா, பிரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்களில் குழந்தைகளுக்காக நாற்பத்தைந்துக்கும் அதிகமான நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *