Skip to content
Home » உலகின் கதை #11 – தீப்ஸ் தலைநகரின் வரலாறு

உலகின் கதை #11 – தீப்ஸ் தலைநகரின் வரலாறு

பண்டைய எகிப்தில் ஆட்சி செய்த 30 வம்சாவளியினரை அவர்கள் ஆட்சி புரிந்த காலத்தின் அடிப்படையில் ஆதி வம்சாவளி, பழைய பேரரசு , இடைக்காலப் பேரரசு, புதிய பேரரசு என்று நான்கு பிரிவுகளாக வரலாற்று அறிஞர்கள் பிரித்திருக்கிறார்கள் என்பதையும் இவற்றுள் இன்னும் பல உட்பிரிவுகள் உள்ளன என்பதையும் பார்த்தோம். எந்தப் பேரரசையும்போலவே வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த அரசர்களிடமும் அண்டை நாட்டில் இருந்து படையெடுத்து வந்தவர்களிடமும் கைமாறிக்கொண்டே இருந்தது ஆட்சி.

ஆட்சியையும் அதன்மூலம் அதிகாரத்தையும் தக்கவைத்துக்கொள்வதற்காகப் போட்டி, பொறாமை, பேராசை, துரோகம் என மனிதர்களின் அடிப்படையான உணர்ச்சிகள் எகிப்திய ஆட்சியாளர்களையும் விட்டுவைக்கவில்லை. எந்தக் காலத்திலும் எல்லா நிலத்திலும் மக்களின் செயல்பாடுகள் ஒன்றுபோலத்தான் இருந்திருக்கின்றன என்பதற்கு வரலாற்று நிகழ்வுகள் சான்றாகின்றன.

எகிப்தியப் பேரரசிற்கு இரண்டு நகரங்கள் தலைநகரமாக இருந்துள்ளன. பழைய பேரரசைச் சேர்ந்தவர்கள் மெம்ஃபிஸைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். இவர்களின் ஆட்சிக்குப் பிறகு எகிப்தியப் பேரரசு தனித்தனி நாடுகளாகச் சிதறுண்டது. பல வருடங்கள் கழித்து அவற்றை ஒன்றிணைத்து மீண்டும் பேரரசை நிறுவியவர் தீப்ஸைச் சேர்ந்தவர் என்பதால் அதையே தலைநகரமாக்கினார்.

எகிப்தியர்கள் பண்டைய தீப்ஸ் நகரை வாஸேட் (Waset) என்று அழைத்தார்கள். தெற்கு எகிப்தில் இருக்கும் இன்றைய லக்ஸர் நகரத்தின் ஒரு பகுதிதான் தீப்ஸாக இருந்தது. பல நூறு ஆண்டுகளுக்கு ஆட்சியாளர்களின் திறமையைப் பொருத்து தீப்ஸின் சிறப்பு எழுவதும் விழுவதுமாக இருந்தது எனத் தெரியவருகிறது. அந்தக் காலகட்டத்தில் எகிப்தியர்களோ எதிரி நாட்டவர்களோ யார் அரசாண்டாலும் தீப்ஸைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். பின்னாளில் கிரேக்க கவிஞரான ஹோமர் தீப்ஸின் வளத்தைப் பற்றிக் கவிபாடினார் என்றால் பாருங்களேன்.

தீப்ஸ் நகரம் 4ஆம் வம்சாவளியினரின் காலத்திலேயே நிறுவப்பட்டு இருந்தது. இங்கிருக்கும் நினைவுச்சின்னங்களின் சிதிலங்களை ஆராய்ந்ததில் இவை 11ஆம் வம்சாவளியினர் தொடங்கி அவர்களைத் தொடர்ந்து வந்த அரசர்களால் எழுப்பப்பட்டவை என்று உறுதிசெய்தனர். சுமார் 700 ஆண்டுகளுக்கும் மேலாக இடைக்கால, புதிய பேரரசுகளின் ஆட்சி உச்சம்பெற்ற காலகட்டத்தில் தலைநகரமாக விளங்கியது தீப்ஸ். அப்போது நோவே அல்லது நூவே (Nowe or Nuwe) என்று அழைக்கப்பட்டது. ஏமுன் (Amun) என்ற கடவுளின் நகரமாகக் கருதப்பட்டது. இவரை ரே என்ற சூரியக்கடவுளுடன் ஒன்றிணைத்து வணங்கினர்.

12ஆம் வம்சாவளியின் காலத்தில் அரச குடும்பத்தினரின் அரண்மனைகளும் மாளிகைகளும் மெம்ஃபிஸுக்கு இடமாறின. என்றாலும் அரசர்களின் குடும்ப தெய்வமான ஏமுனுக்கான கோயில்களை தீப்ஸில்தான் எழுப்பினர். இடையில் சில நூறு ஆண்டுகள் இன்றைய சிரியாவில் இருந்து வந்த ஆட்சியாளர்கள் எகிப்தை அரசாண்டனர். அயல்நாட்டு வம்சாவளியினரைத் துரத்தியடித்துவிட்டு மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார்கள் எகிப்தைச் சேர்ந்த அரசர்கள்.

18ஆம் வம்சாவளியைச் சேர்ந்த பாரோக்களின் ஆட்சியில் தீப்ஸ் நகரம் புதுப்பொலிவு பெற்றது. அரச குடும்பத்தினரும் பெருங்குடிமக்களும் அழகிய மலர்த்தோட்டங்களால் சூழப்பட்ட வண்ணமயமான மாளிகைகளைக் கட்டினார்கள். புதிய பேரரசைச் சேர்ந்த பாரோக்கள் வெளிநாடுகளில் இருந்து கவர்ந்துவந்த செல்வங்களைக் கொண்டு தீப்ஸில் தங்களின் கடவுளர்க்குக் கோயில் எழுப்பினார்கள். மூன்றாம் ரேமிசீஸின் காலம் வரையிலும் இது தொடர்ந்தது.

0

நைல் நதியின் இரு கரைகளிலும் சுமார் 93 சதுரகிலோமீட்டர் அளவுக்குப் பரந்து விரிந்தது பண்டைய தீப்ஸ் நகரம். நகரின் முக்கியப் பகுதி கிழக்குக் கரையிலும் இறந்த அரசர்களின் கல்லறைகளும் பிணவறைக் கோயில்களும் மேற்குக் கரையிலும் அமைந்திருந்தன. எகிப்திய ஆட்சியாளர்களுக்கு நேரடிச் சேவை வழங்கிய பூசாரிகளும் இராணுவ வீரர்களும் கைவினைக் கலைஞர்களும் பணியாளர்களும் மேற்குக் கரையில் வசித்தனர். இந்தக் கோயில்களும் நினைவுச்சின்னங்களும்1979ஆம் ஆண்டு உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற்றன.

நைலின் கிழக்குக் கரையில் கர்னக் நகரில் இருக்கும் ஏமுன்-ரேயின் கோயில் பண்டைய எகிப்தில் கட்டப்பட்ட பெரிய கோயில்களுள் ஒன்றாகும். சுமார் 1.5 கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இந்தக் கோயில் வளாகத்தில் வெவ்வேறு கடவுளர்க்கான வழிபாட்டிடங்கள் காணப்படுகின்றன. அடுத்தடுத்து வந்த பாரோக்களின் ஆட்சிக்காலத்தில் புதிய கட்டடங்களும் கோயில்களும் நிறுவப்பட்டன அல்லது முன்னர் கட்டப்பட்டவை மாற்றி அமைக்கப்பட்டன என்பதால் முறையான வடிவமைப்பு இல்லாமல் காணப்படுகிறது. 3000 ஆண்டுகளுக்குப் பின்னரும் எல்லோருடைய கருத்தையும் கவரும் விதத்தில் இருப்பதே இதன் சிறப்புக்குச் சான்று.

ஏமுன்-ரே, ஏடுன் என்ற சூரியக் கடவுள், ப்டாஹ் என்ற படைத்தலுக்கான கடவுள், கோன்ஸ் என்ற சந்திரக் கடவுள், ஓபெட் என்ற நீர்யானையின் தலையைக் கொண்ட பெண் கடவுள் எனப் பல கடவுளர்க்கான கோயில்களும் இங்கே காணப்படுகின்றன. வளாகத்தின் உள்ளே இருக்கும் உயரமான அலங்காரத் தூண்களும்கூடப் பல பாரோக்களின் ஆட்சியில் நிறுவப்பட்டவை.

முதலாம் தூட்மோஸ், இரண்டாம் தூட்மோஸ், ஹட்ஷெப்சூட், மூன்றாம் தூட்மோஸ் என்று புதிய பேரரசைச் சேர்ந்த பாரோக்கள் பல அலங்காரத் தூண்களையும் சதுரத் தூபிகளையும் அமைத்தார்கள். இவர்களில் மூன்றாம் தூட்மோஸ் கோயிலை விரிவுபடுத்தினான். கோயிலின் பின்பக்கச் சுவரில் தன்னுடைய ஆட்சியில் ஆசியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட வித்தியாசமான விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றைச் சிற்பமாக வடித்துள்ளான்.

தெற்குப் புறத்தில் இருக்கும் ஏமுனின் மனைவியான மூட் என்ற பெண் கடவுளுக்கான கோயிலில் குதிரை லாட வடிவப் புனிதக் குளம் உள்ளது. மோன்ட் என்ற போர்க் கடவுளுக்கான கோயிலின் இடிபாடுகள் மட்டுமே தற்போது காணப்படுகின்றன. இந்த இரண்டு கோயில்களையும் எழுப்பிய கட்டடக் கலைஞருக்குச் சிலை எழுப்பிச் சிறப்பித்துள்ளனர். கர்னக் கோயிலை லக்ஸரில் இருக்கும் கோயில் வளாகத்தோடு இணைக்கும் இரண்டு மைல் தூரச் சாலை நெடுக இருபுறமும் ஸ்பிங்க்ஸ் சிலைகள் காணப்படுகின்றன.

0

லக்ஸர் கோயிலைத் திறந்தவெளி அருங்காட்சியகம் என்றழைக்கின்றனர். இது பாரோக்களின் புத்தெழுச்சியைக் கொண்டாட எழுப்பப்பட்டது. கடவுளர்களின் அரசரான ஏமுன், அவர் மனைவி மூட், அவர்களின் மகன் கோன்ஸ் இவர்களுக்காக எழுப்பப்பட்ட இந்த அழகிய கோயிலைச் சுற்றி வளர்ந்தது தீப்ஸ் நகரம்.

18ஆம் வம்சாவளியைச் சேர்ந்த மூன்றாம் அமென்ஹோடெப் என்ற பாரோவினால் கட்டப்பட்ட கோயில் வளாகத்தில் பெரிய தூண்கள் சூழ்ந்த முற்றமும் பல அறைகளின் கூட்டுத்தொகுதியும் காணப்படுகின்றன. முற்றத்தின் மூன்று பக்கமும் இரட்டை வரிசையில் அமைந்திருக்கும் தூண்களின் வடிவமைப்பு பேபிரஸ் செடிகளின் நீண்ட காம்பையும் மொட்டையும் போன்றிருக்கின்றன.

மூன்றாம் அமென்ஹோடெப் தொடங்கிய பணிகளை முடித்து வைத்ததோடு வேறு புதிய பகுதிகளையும் அமைத்தான் டூடன்காமூன் என்ற பாரோ. இரண்டாம் ரேமிசீஸ் இன்னொரு முற்றத்தையும் தூணையும் சதுரத் தூபியையும் அமைத்தான். இவற்றில் சிரியாவின்மீது அவன் போர் தொடுத்துச் சென்றபோது நிகழ்ந்த நிகழ்வுகள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. இவனுடைய பிரம்மாண்டமான சிலைகளும் இங்கே காணப்படுகின்றன.

இங்கிருக்கும் மூட் என்ற பெண் கடவுளின் கோயில் ரோமானியர்களின் காலத்தில் அவர்களின் வழிபாட்டிடமாகவும் பிறகு கிறித்துவ தேவாலயமாகவும் உருமாறியது. கோயிலின் பின்புறத்தில் பேரரசர் அலெக்சாண்டர் கட்டிய சிறிய கோயில் ஒன்று காணப்படுகின்றது. பிற்காலத்தில் ரோமானியப் படையொன்றின் தலைமையிடமாகவும் இருந்தது லக்ஸர் கோயில் என்கிறது வரலாறு.

0

அரசர்களின் பள்ளத்தாக்கு என்றழைக்கப்படும் இடத்தில் சுமார் 500 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 18, 19, 20ஆம் வம்சாவளியைச் சேர்ந்த பாரோக்களும் பெருங்குடி மக்களும் புதைக்கப்பட்டனர். ஒன்றாம் தூட்மோஸ் முதல் பத்தாம் ரேமிசீஸ் வரையில் தேர்-அல்-பாஹ்ரி என்ற மலைப்பகுதியில் மீளா உறக்கம் கொண்டுள்ளனர் என்று சுருக்கமாகச் சொல்லலாம்.

இங்கிருக்கும் சுமார் 60க்கும் மேற்பட்ட கல்லறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சில பாரோக்களின் கல்லறைகளில் எகிப்திய புராணக்கதைக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இவை பண்டைய ஈமச் சடங்குகளையும் இறந்தோர் குறித்து நிலவிய நம்பிக்கைகளையும் புரிந்துகொள்ள உதவுகின்றன.

பாரோக்களைப் புதைக்கும்போது மறுமையில் அவர்களுக்குத் தேவைப்படும் விலைமதிப்பற்ற பொருட்களையும் சேர்த்தே புதைத்தனர். அவை எல்லாமே 21ஆம் வம்சாவளியினரின் காலம் தொடங்கிச் சிறிதுசிறிதாகத் திருடப்பட்டுவிட்டன என்றாலும் எஞ்சியிருப்பவை அவர்களின் செல்வ வளத்தையும் அதிகார பலத்தையும் புரிந்துகொள்ள உதவுகிறது.

இதற்குப் பின்னால் வந்த புதிய பேரரசைச் சேர்ந்த பாரோக்கள் தங்களோடு சேர்த்துப் புதைக்கப்படும் விலைமதிப்பற்ற பொருட்கள் திருடுபோவதைத் தடுப்பதற்காக இந்தக் கல்லறைகளை மலைப்பாங்கான இடத்தில் நிலத்துக்குப் பல அடி கீழே அமைத்தனர். உள்ளே இருக்கும் பாதைகளும் சுரங்கங்களும் சுற்றுவழிகளும் திருடர்களைக் குழப்பியடிக்கும் வகையில் அமைக்கப்பட்டன. அப்படிச் செய்தும் பெரிய பலனில்லை என்பது வேறு விஷயம். இதனால் சில கல்லறைகளில் இருந்த பதப்படுத்தப்பட்ட உடல்களைப் பாதுகாப்பதற்காக அரச குடும்பத்தினர் வேறு இடத்துக்கு எடுத்துச் சென்றனர். விலைமதிப்புள்ள பொருட்கள் மீண்டும் அரசாங்கக் கருவூலத்தில் சேர்க்கப்பட்டன.

டூடன்காமூன் என்ற பாரோவின் சின்னஞ்சிறிய கல்லறை 1922ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டபோது அவற்றில் இருந்த எல்லாப் பொருட்களும் வைத்தது வைத்தாற்போலவே இருந்தது ஆராய்ச்சியாளர்களுக்கு வியப்பைத் தந்தது. இந்தப் புதையல் மொத்தமும் இப்போது கெய்ரோவில் இருக்கும் எகிப்திய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது.

0

அரசியரின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் இடம் ஆங்கில எழுத்தான Y வடிவத்தில் அமைந்துள்ளது. இதை டா-சேட்-நெஃபரூ, அதாவது அழகான இடம் என்று பொருள்படும் பெயரால் அழைத்தனர். இங்கே புதிய பேரரசைச் சேர்ந்த எகிப்திய அரசியர், அரச குடும்பத்து வாரிசுகள் ஆகியோரின் கல்லறைகள் அமைந்துள்ளன. இங்கே இருக்கும் 90க்கும் அதிகமான கல்லறைகள் ஒவ்வொன்றிலும் ஒரு நுழைவாயிலும் அதனுள்ளே அறைகளும் கல் சவப்பெட்டியும் இருக்கும். சில கல்லறைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட சவப்பெட்டிகளும் காணப்படுகின்றன.

பண்டைய தீப்ஸ் நகரம்

முதலாம் ரேமிசீஸின் மனைவி சிட்ரேயின் கல்லறைதான் முதலில் அமைக்கப்பட்டது. இரண்டாம் ரேமிசீஸின் அரசியரில் அவருக்குப் பிரியமான நெஃபர்டாரியின் கல்லறையும் இங்கே காணப்படுகிறது. அரசி நெஃபர்டாரியின் கல்லறையில் தீட்டப்பட்டுள்ள பல்வண்ணச் சித்திரங்கள் காலத்தைக் கடந்து இன்றும் காணக்கிடைக்கின்றன. ஒன்றாம் தூட்மோஸின் மகளான அஹ்மோஸும் இங்கேதான் புதைக்கப்பட்டாள். 19ஆம், 20ஆம் வம்சாவளியைச் சேர்ந்த அரசியர், அரச குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் ஆகியோரையும் இந்த இடத்தில்தான் புதைத்தனர்.

அகழ்வாராய்ச்சியாளர்கள் அரசியரின் பள்ளத்தாக்கைக் கண்டுபிடித்தபோது இத்தனைக் கல்லறைகளை அமைக்க இந்த இடத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. அரசர்களின் பள்ளத்தாக்கு அருகில் உள்ளது என்பதால் இருக்கலாம். கூடவே ஹாதோர் என்ற புத்தெழுச்சிக்கான பெண் கடவுளின் புனிதக் குகை அருகில் இருப்பது இன்னொரு காரணமாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.

(தொடரும்)

பகிர:
கார்குழலி

கார்குழலி

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதுபவர். பல்வேறு அரசுத் துறைகளோடும் பன்னாட்டு அரசு சாரா அமைப்புகளோடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடும் நாளிதழ்களோடும் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். துலிகா, பிரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்களில் குழந்தைகளுக்காக நாற்பத்தைந்துக்கும் அதிகமான நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *