பல்வேறு கலாசாரங்களும் கருத்துகளும் மதங்களும் இனங்களும் ஒருங்கிணையும் இடமாக இருந்ததால் கலாசாரக் கொதிகலன் என்னும் பெயர் எகிப்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். உலகின் முக்கியமான இனங்களோடும் அவை தோற்றுவித்த வாழ்க்கை, அரசியல், வழிபாட்டு முறைகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளதைப் பார்க்கமுடிகிறது. நாம் ஒவ்வொருவருமே இப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் வாழ்கிறோம் என்றாலும் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கையில் இது இன்னும் தெளிவாகிறது.
நைல் நதியின் கழிமுகத்தின் கிழக்குக் கரையில் அமைந்திருக்கும் எகிப்தின் தலைநகரான கெய்ரோ இன்றைய உலகின் முக்கியமான நகரங்களுள் ஒன்று. ஒருங்கிணைந்த அரபு ஆப்பிரிக்க நிலப்பகுதிகளின் மிகப் பெரிய நகரம். காலங்காலமாக வரலாற்றில் நிலைத்திருக்கும் பேறுபெற்ற நகரம் எனப் பல சிறப்புகளைப் பெற்றது.
எல்லாத் தொன்மையான நகரங்களையும்போலவே பழமையின் சின்னங்களும் புதிய உலகின் நாகரிகத்தைப் பறைசாற்றும் வானைமுட்டும் கட்டடங்களும் ஒன்றோடொன்று உரசியபடி நிற்கும் காட்சியை இங்கே காணமுடியும். இடைப்பட்ட ஆண்டுகளின் கட்டடங்களும் இவற்றுக்கு நடுவே ஆங்காங்கே தட்டுப்படும் என்பது வியப்புக்குரியது.
கெய்ரோ நகரின் ஒவ்வொரு கட்டடமும் வெவ்வேறு காலகட்டத்தில் பலவிதப் பாணியில் எழுப்பப்பட்டவை. ரோமானிய, அரேபிய, இஸ்லாமிய, ஐரோப்பிய எனப் பல கலாசாரங்களின் தாக்கத்தைக் காணலாம்.
10ஆம் நூற்றாண்டில் உருவான பண்டைய கெய்ரோ இஸ்லாமிய உலகின் முக்கிய அரசியல், கலாசார, சமய மையமாக இருந்தது. இப்போதும்கூட அரேபிய உலகின் மிக முக்கியமான நகரங்களுள் ஒன்றாக விளங்குகிறது. நகரம் முழுவதும் அமைந்திருக்கும் சுமார் 800 நினைவுச்சின்னங்களே இதற்கு சாட்சி. இதனால் கெய்ரோ 1979ஆம் ஆண்டு உலகப் பாரம்பரியப் பட்டியலில் இணைக்கப்பட்டது.
இஸ்லாம் மதத்தை நிறுவிய இறைத்தூதர் முகம்மது நபியின் மறைவுக்குப் பிறகு 7ஆம் நூற்றாண்டில் அரேபியப் படைகள் அண்டைநாடுகளின்மீது படையெடுத்தன. அப்போது உமர் காலிஃப் என்ற அரேபிய அரசர் நைல் நதியின் கரையில் அல்-ஃபுஸ்தாத் என்ற புதிய தலைநகரை அமைத்தார்.
காலப்போக்கில் ஆட்சி வெவ்வேறு அரேபிய இனத்தவர்களின் கைகளுக்கு மாறியபோது அவர்களின் தேவைக்கேற்ப தலைநகரையும் மாற்றி அமைத்துக்கொள்வது இயல்புதானே. 9ஆம் நூற்றாண்டின் இறுதியில் கொஞ்சம் வடகிழக்கு நோக்கி நகர்ந்து அல்-கதாய் என்ற இடத்தில் அமைந்தது தலைநகரம். அங்கே அகண்ட முற்றங்களையும் அலங்கார வளைவுகளையும் கொண்ட இபின் துலுன் என்ற மசூதி கட்டப்பட்டது. இன்றளவும் கெய்ரோ நகரில் காணப்படும் சிறப்பான நினைவுச்சின்னங்களில் ஒன்றாக இருக்கிறது.
10ஆம் நூற்றாண்டில் ஃபதிமித் பேரரசின் காலத்தில் அமைக்கப்பட்ட புதிய தலைநகரமான அல்-கஹிரா பின்னர் கெய்ரோ என்று அழைக்கப்பட்டது. அய்யூபித், மம்லுக் என மிகப் பிரபலமான இஸ்லாமியப் பேரரசுகளின் தலைநகரமாகத் தொடர்ந்தது. அல்-ஃபுஸ்தாத், அல்-கதாய், அல்-கஹிரா ஆகிய மூன்று பழைய தலை நகரங்களையும் உள்ளடக்கியது பண்டைய கெய்ரோ.
12ஆம் நூற்றாண்டில் சலாதீன் என்ற அரசரால் கட்டப்பட்ட கெய்ரோ கோட்டை இன்றளவும் கம்பீரமாக நிற்கிறது. அதன் பிரம்மாண்டமான சுற்றுச்சுவர்களுக்குள் பழமையான மசூதிகள், மதராஸாக்கள், ஹமாம்கள், நீரூற்றுகள், அருங்காட்சியகங்கள் எனப் பலவிதமான கட்டடங்கள் அமைந்துள்ளன.
13 முதல் 16ஆம் நூற்றாண்டு வரையில் ஆட்சிபுரிந்த மம்லுக்குகளின் காலத்தில் இறந்தவர்களுக்கான நகரமான அல்-கராஃபா என்ற பகுதியில் பல அழகிய நினைவிடங்கள் அமைக்கப்பட்டன. பழைய நகர்ப்பகுதியில் அமைந்துள்ள சுல்தான் ஹஸனின் மசூதியும் மதராஸாவும் ஒன்றிணைந்த நினைவுச்சின்னம் 14ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கட்டப்பட்டது. அதன் பிரம்மாண்டமான நுழைவாயிலும் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட முன்புறமும் காண்போரின் மனதை மயக்குபவை.
16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மம்லுக் பேரரசைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றிய ஓட்டோமான் பேரரசு இன்னும் பல அழகிய நினைவுச் சின்னங்களை அமைத்தது. முகம்மது அலி மசூதி இவர்களின் காலத்தில்தான் கட்டப்பட்டது.
கான்-அல்-கலீலீ என்ற கெய்ரோ நகரின் பரந்துவிரிந்த மையப் பகுதியில்தான் கோட்டை, இபின்-துலுன் மசூதி, அல்-அஸார் மசூதி ஆகியவை அமைந்துள்ளன. இங்கிருக்கும் வணிகப் பகுதியில் தங்கம், செம்பு, துணிரகங்கள், தரைவிரிப்பு, நறுமணப்பொருட்கள், தோல்பொருட்கள் என்று எதை வேண்டுமானாலும் வாங்கமுடியும்.
நகரின் கிழக்கு, தெற்குப் பகுதிகளில் மறைந்தவர்களுக்கான நினைவுச்சின்னங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் அஸ்-ஸய்யிதா நஃபீஸா என்பதுதான் அளவில் பெரியது. அல்-இமாம் அஷ்-ஷஃபல், கயித்பே இரண்டும் அளவில் சிறியவை. ஆப்பிரிக்காவின் முதல் மசூதியான அம்ர-இபின்-அல்-அஸ் இந்தப் பகுதியில்தான் கட்டப்பட்டது. அதே நேரம் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சர்ச் என்ற கிறிஸ்தவப் பிரிவின் மையமாகவும் விளங்கியது. இந்தப் பகுதி காப்டிக் கெய்ரோ என்று அழைக்கப்படுகிறது.
காப்டிக் கெய்ரோவில் பண்டைய ரோமானியர்களால் கி.மு.30இல் அமைக்கப்பட்ட பாபிலோன் கோட்டையின் சிதிலங்களைப் பார்க்கலாம். இதற்குள்ளே பல கிறிஸ்துவ தேவாலயங்களும் காப்டிக் அருங்காட்சியகமும் காணப்படுகின்றன.
0
அபு மெனா எகிப்தின் மற்றுமொரு பாரம்பரியக் களம். வரலாற்றுப் புகழ்பெற்ற துறைமுக நகரான அலெக்சாண்ட்ரியாவுக்குத் தெற்கே அமைந்துள்ளது. கிறிஸ்துவர்களின் புனித நகரமாகக் கருதப்படுகிறது. இங்கிருக்கும் கிறிஸ்தவ தேவாலயம், இடைக்காலத்தைச் சேர்ந்த வழிபாட்டிடங்கள், மடாலயங்கள், பொதுக் கட்டடங்கள், தெருக்கள், பணிமனைகள், வீடுகள் எல்லாமே மேனாஸ் எனப்படும் புனிதத் தியாகியின் கல்லறையின்மீது அமைக்கப்பட்டவை.
கி.பி. 3ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த டயோகிளிஷன் என்ற ரோமானியப் பேரரசரின் ராணுவ அலுவலராக இருந்தவர் மேனாஸ். ரோமானிய ராணுவம் கைப்பற்றிய பகுதிகளில் வசித்த கிறிஸ்துவர்களைக் கொல்லமாட்டேன் என்றும் தானும் ஒரு கிறிஸ்தவர்தான் என்றும் வெளிப்படையாக அறிவித்தவர்.
பிறகு ராணுவத்தில் இருந்து விலகி வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காகவும் தான் பற்றுக்கொண்ட சமயத்துக்காகவும் அர்ப்பணம் செய்தவர். அவருடைய மறைவுக்குப் பின் அவரின் உடல் புதைக்கப்பட்ட பாலைநிலத்தில் நீர் ஊற்றுகள் தோன்றின என்றும் நிலம் செழித்தது என்றும் நம்பப்படுகிறது. திராட்சைக் கொடிகளும் ஆலிவ் மரங்களும் வளர்ந்த இந்தப் பகுதியை புனித மேனாவின் திராட்சைத் தோட்டம் என்று அழைத்தார்கள்.
1900ஆம் ஆண்டு முதல் இந்தப் பகுதியில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெறுகின்றன. கி.பி. 5, 6ஆம் நூற்றாண்டுகளில் அபு மேனா பெரிய நகரமாக வளர்ந்தது என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இங்கு ஊற்றெடுத்த புனித நீரைத் தேக்கி வைப்பதற்காகக் கட்டப்பட்டது தெர்மல் பசிலிக்கா என்ற வழிபாட்டிடம். புனிதப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் இங்கே தங்கியிருந்து வழிபாட்டை முடித்துவிட்டுத் திரும்புகையில் இந்தப் புனித நீரைச் சிறிய குடுவைகளில் அடைத்து எடுத்துச் சென்றனர்.
இந்தக் குடுவைகளில் காணப்படும் முத்திரைகளில் புனித மேனாஸின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளது. மண்டியிட்டு அமர்ந்திருக்கும் இரண்டு ஒட்டகங்களுக்கு நடுவே புனித மேனாஸ் நிற்பதுபோல அமைந்துள்ள இந்த முத்திரை ரோமானியர்கள் வசித்த இடங்களில் எல்லாம் பரவியிருந்தது. தெர்மல் பசிலிக்காவைச் சுற்றிலும் பல கட்டடங்களும் மடாலயமும் எழுப்பப்பட்டதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.
0
வரலாற்றில் எகிப்தின் நிலப்பகுதியும் மக்களும் நீங்காத இடத்தைப் பிடித்துவிட்டார்கள் என்பதை யாருமே மறுக்கமுடியாது. அறிவியல் உலகின் உயிர்களின் பரிணாம வளர்ச்சி குறித்த கேள்விக்கான விடைகளும் எகிப்தின் நிலப்பகுதியில் கிடைத்துள்ளன என்பது வியப்பை ஏற்படுத்துகிறது.
வாடி-அல்-ஹிடன் என்பதற்கு திமிங்கிலப் பள்ளத்தாக்கு என்று பொருள். இந்தப் பள்ளத்தாக்கு மேற்கு எகிப்தின் பரந்து விரிந்த பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளது. கடல்வாழ் உயிரினங்களில் வித்தியாசமானது திமிங்கிலம். முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்காமல் கன்றை ஈன்றெடுக்கும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தது. இது எப்படிச் சாத்தியம்? திமிங்கிலம் ஒரு காலத்தில் நிலத்தில் வாழும் விலங்காக இருந்தது. பின்னர் பரிணாம வளர்ச்சி அடைந்து நீரை நோக்கி நகர்ந்தது. அப்போது அதன் உடல் கடலில் நீந்தவும் வசிக்கவும் ஏற்றாற்போல மாற்றங்களை அடைந்தது என்பதைப் புதைபடிவங்களைக்கொண்டு நிறுவியுள்ளார்கள் அறிவியலாளர்கள்.
திமிங்கிலங்களின் பள்ளத்தாக்கு முழுவதும் ஆர்கியாசெட்டி எனப்படும் தொடக்க காலத்தைச் சேர்ந்த திமிங்கில வகையின் தொல் எச்சங்கள் காணப்படுகின்றன. இந்த வகைத் திமிங்கிலங்கள் இப்போது முற்றிலும் அழிந்துவிட்டபோதிலும் அவற்றின் புதைபடிவங்கள் உயிர்களின் பரிணாம வளர்ச்சியின் முக்கியமான கண்ணியை நாம் புரிந்துகொள்ள உதவியாக உள்ளன. இந்த வகைத் திமிங்கிலங்களுக்குப் பின்னங்கால்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இளவயதுத் திமிங்கிலங்களின் பின்னங்கால்கள் சிறிது சிறிதாக மாற்றமடைவதையும் பார்க்கமுடிகிறது. பாசிலோரஸ் என்ற டைனோசர் இனம்தான் காலப்போக்கில் திமிங்கிலமாக உருமாற்றம் பெற்றது என்றும் நம்ப்படுகிறது.
இந்தப் புதைபடிவங்களை கண்டெடுத்த பகுதி இன்று வறண்ட பாலை நிலத்தின் மேல் பகுதியாக இருக்கலாம். ஆனால் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இதே இடம் டெதிஸ் என்று அழைக்கப்படும் பெருங்கடலாக இருந்தது. இயற்கை எத்தனை வியப்பூட்டுவதாக இருக்கிறது!
திமிங்கிலங்கப் பள்ளத்தாக்கு இயற்கையிலேயே பாதுகாக்கப்பட்ட நிலப்பகுதியாக அமைந்துவிட்டது. இங்கே இருக்கும் புதைபடிவங்கள் அதிக அளவில் இருப்பதோடு அதிகச் சேதமில்லாமலும் உள்ளன. அதே நேரம் சிறிய அளவிலான நிலப்பரப்பில் அதிகமான எண்ணிக்கையில் காணப்படுகின்றன. இங்கே இருக்கும் அருங்காட்சியகத்தில் இந்த நிலப்பகுதியைப் பற்றிய குறிப்பைத் தெரிந்துகொள்ளலாம்.
(தொடரும்)