இந்தியப் புராணக் கதைகளைப்போலவே கிரேக்கப் புராணக் கதைகளும் சுவாரசியமானவை, வரலாற்றோடு பின்னிப் பிணைந்தவை. அவர்களின் கடவுளர்கள் ஒரு மாபெரும் குடும்ப அமைப்பைச் சேர்ந்தவர்கள், உறவினர் முறை கொண்டவர்கள். மனித உறவில் ஏற்படும் அதே சிக்கல்களைக் கடவுளர்களும் எதிர்கொள்வார்கள். ஒரே வித்தியாசம் என்னவென்றால் தங்களை எதிர்ப்பவர்கள் அல்லது புறக்கணிப்பவர்களின்மீது கடவுளர்கள் கட்டற்ற ஆற்றலை வெளிக்காட்டித் தண்டிப்பார்கள். அப்புறம் ஒரு கடவுள் இன்னொரு கடவுளுக்கு ஆதரவாகச் செயல்படுவார் அல்லது பழிவாங்குவார்.
என்ன இப்படி சிறுபிள்ளைத்தனமான, அடாவடியான, மூர்க்கமான, அறமற்ற செயல்களைச் செய்கிறார்களே என்று தோன்றும். மொத்தத்தில் இந்தக் கடவுளர்களைவிடவும் மனிதர்களே பரவாயில்லைபோல என்ற எண்ணம் ஏற்படும். கிரேக்கர்களின் பண்டைய சமயங்களும் மதங்களும் இப்போது வழக்கத்தில் இல்லை என்பதால் இவற்றையெல்லாம் வெறும் சுவாரசியமான கதைகளாக மட்டுமே அணுகுகிறார்கள்.
அட்டிகா சமவெளியில் அமைக்கப்பட்ட ஏதென்ஸ் அக்ரபோலிஸ் நகரில் அதன் காவல் தெய்வமான கன்னி அதீனாவின் வழிபாட்டுக்காக ஆலயங்கள் அமைக்கப்பட்டன. அதீனா, பொஸைடன் எரிக்தியஸ் என இரண்டு கடவுள்களின் வழிபாட்டு மரபை ஒட்டி அமைக்கப்பட்டது எரிக்தியன் (Erechtheion). இந்த இருவரையும் ஒன்றாக வழிபடும் வழக்கம் குறித்து கிரேக்கப் பெருங்காவியமான இலியடில் எழுதினார் ஹோமர். பின்னாளில் எழுதப்பட்ட குறிப்புகளும் இதைத் தெரிவிக்கின்றன. சொல்லப்போனால் எரிக்தியஸை அதீனா போலியாஸ் என்றுதான் அழைக்கவேண்டும், முற்காலத்தில் அப்படித்தான் அழைக்கப்பட்டது. நகரத்தின் காவல் தெய்வமான அதீனாவின் ஆலயம் என்று பொருள்.
முன்பிருந்த அதீனாவின் ஆலயத்தை பாரசீகர்கள் அழித்ததால் அதை மீண்டும் நிறுவும் செயலில் இறங்கினார் பெரிக்ளிஸ். நெசிக்ளஸ் என்ற கட்டடக் கலை வல்லுநர் அதை வடிவமைத்தார். எரிக்தியன் கி.மு. 430களில் நிறுவப்பட்டது என்று தற்போதைய வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். கி.மு. 420இல் அமைக்கப்பட்டது என்று சொல்வோரும் உண்டு. இதன் கட்டுமானப் பணி கி.மு. 406இல் நிறைவுற்றது. பார்த்தனனுக்கு வடக்கே அமைந்துள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்ட புனிதத் தலங்கள், இறந்துபோன மன்னர்களின் கல்லறை போன்றவற்றுக்கு மேலே எழுப்பப்பட்டது எரிக்தியன். அதைக் குறித்த வரலாறும் பழங்கதைகளும் புராணங்களும் கணக்கில் அடங்காதது.
இந்தப் புதிய ஆலயத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்தனர். கிழக்குப் பகுதியில் அதீனாவுக்கும் மேற்குப் பகுதியில் பொஸைடன் எரிக்தியஸ், ஹெபைஸ்டாஸ், பூடஸ் ஆகியோருக்கும் வழிபாட்டுத் தலங்களை அமைத்தனர்.
எரிக்தியன் பண்டைய கிரேக்கத்தின் மற்ற கட்டடங்களில் இருந்து பெரிதும் மாறுபட்டது. நுட்பமான வேலைப்பாடுகள் உடையது. ஆனால், சமச்சீரற்ற அமைப்பைக்கொண்டது. அது நிறுவப்பட்ட நிலம் சமதளமாக இல்லை என்பதால் இப்படி ஒரு அமைப்பைத் தேர்ந்தெடுத்து இருக்கலாம். அல்லது நிலையாக இல்லாமல் மாறிக்கொண்டே இருந்த வழிபாட்டு முறைகளினால் வெவ்வேறு கோயில்களைக் கட்ட முனைந்திருக்கலாம். சமச்சீரான அமைப்பைக்கொண்ட கோயிலைக் கட்டத் தொடங்கி பாதியிலேயே நிறுத்தியிருக்கலாம். இப்படிப் பல காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் ஊக்கித்தனர்.
பண்டைய வரலாற்றுக் காலத்துக்குப் பிறகு ஏதென்ஸின் ஆக்கிரமிப்பாளர்கள் எரிக்தியனை வெவ்வேறு விதத்தில் பயன்படுத்தியதால் அதிகப் பாதிப்புக்கு உள்ளானது. அதன் உள்ளமைப்பும் அங்கிருந்த பொருட்களும் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்பதும் அதன் அமைப்பு குறித்த ஆய்வாளர்களின் குழப்பத்தை அதிகப்படுத்தியது. எப்படியாக இருந்தாலும் ஐயானிக் பாணிக் கட்டடவியலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. பின்னாளைய ஹெலனிய, ரோமானிய, கிரேக்க மீட்பியக்கப் பாணிகளின்மீது தாக்கம் ஏற்படுத்தியது என்பதும் உண்மை.
நேர்த்தியும் நளினமும் கொண்ட எரிக்தியனின் அமைப்பு அருகில் இருக்கும் பார்த்தனனின் கம்பீரமான அமைப்பைச் சமன்செய்வதுபோல இருக்கிறது. கிழக்குத் திசையில் இருக்கும் அதன் வாயிலில் உயரமான ஐயானிக் பாணித் தூண்களைக் காணலாம். வடக்கு, மேற்குப் பகுதிகளில் இருக்கும் சுவர்கள் கிழக்கு, தெற்குப் பகுதிகளில் இருக்கும் சுவர்களைவிடவும் இரண்டு மடங்கு உயரம் அதிகம். எரிக்தியன் வளாகத்தில் பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் காணப்படுகின்றன.
எரிக்தியனுக்கு இரண்டு முகப்புகள் – வடமேற்கு முகப்பை உயரமான தூண்களும் தென்மேற்கு வாயிலை ஆறு பெண் சிலைகளும் தாங்கிப் பிடிப்பதுபோன்ற அமைப்பைக்கொண்டது. எரிக்தியனின் முக்கிய கட்டடம் வடக்கு முகப்பு ஆகியவற்றின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் ஐயானிக் அலங்கார வளைவில் புராணக் கதைகளையும் வழிபாட்டு மரபுகளையும் சித்தரிக்கும் கடவுளர்கள், வெற்றிவீரர்கள், சாமானியர்கள் ஆகியோரின் உருவங்களைப் பார்க்கலாம்.
கிழக்குப் பகுதியில் அதீனா தெய்வத்தின் மரத்தாலான சிலை உள்ளது. மைசீனியன் காலத்தைச் சேர்ந்தது என்பதால் கிரேக்கத்தின் மிகப் பழமையான சிலையாகக் கருதப்படுகிறது. சிலை அமைக்கப்பட்ட காலத்தில் தலையிலும் காதுகளிலும் கழுத்திலும் தங்க அணிகலன்கள் அணிந்திருக்கும் என நம்பப்படுகிறது. கூடவே தங்கத்தாலான ஆந்தை, கேடயம், வழிபாட்டுத் திரவங்களுக்கான கொள்கலன் ஆகியவையும் இருந்திருக்கலாம் என்கிறார்கள்.
மைசீனியன் நாகரிகத்தின் பொற்காலமாகக் கருதப்பட்ட கி.மு. 14ஆம் நூற்றாண்டில் எரிக்தியஸ் என்ற மன்னன் ஒருவன் இருந்ததாகவும் அவனுடைய பெயரே இந்த ஆலயத்துக்குச் சூட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எரிக்தியஸ் குறித்து கிரேக்கப் பெருங்காப்பியங்களான இலியட், ஒடிஸி இரண்டிலும் எழுதியுள்ளார் ஹோமர். எரிக்தியஸ் மாபெரும் மாளிகையொன்றை ஏதென்ஸ் அக்ரபோலிஸில் அமைத்ததாகச் சொல்கிறார். இவை வெறும் புராணக் கதைகள் என்றாலும் மைசீனிய காலத்தில் அக்ரபோலிஸில் ஓர் அரண்மனை கட்டப்பட்டது என்பதும் அதன் இடிபாடுகள் எரிக்தியனுக்குக் கீழே உள்ளது என்பதும் வரலாறு.
டிரோஜன் போருக்குச் சுமார் நூறாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த எரிக்தியஸின் காலத்திலும் ஒரு போர் நடந்தது. அக்ரபோலிஸ் முற்றுகையிடப்பட்டது. போரில் எரிக்தியஸ் வெற்றிபெற்றாலும் நகரின் பாதுகாப்புக்கு மகளைப் பலிகொடுக்க வேண்டியிருந்தது. அந்தப் போரில் தன் மகனை எரிக்தியஸ் கொன்றதால் கோபமடைந்து எரிக்தியஸின்மீது சூலாயுதத்தை எறிந்தான் பொஸைடன். அது நிலத்தைப் பிளந்து அவனைக் கீழே அழுத்தியது. வடக்கு முகப்பில் தூண்களுக்கு நடுவே உள்ள வெற்றிடத்தில் காணப்படும் பாறைகளில் விரிசல்கள் காணப்படுகின்றன. பொஸைடன் எறிந்த சூலாயுதத்தால் ஏற்பட்டவை என்று நம்பப்படுகிறது. பொஸைடன், எரிக்தியஸ் இருவருக்கும் காணிக்கைகளைச் செலுத்தும் . வழிபாட்டு இடத்தையும் இங்கே பார்க்கலாம்.
எரிக்தியனின் உட்புறச் சுவரின் எரிக்தியஸின் சகோதரர் பூடஸின் குடும்பத்தைச் சித்தரிக்கும் ஓவியம் இருந்தது. பொஸைடன், அதீனா இருவரின் ஆலயத்திலும் பூசை செய்யும் பூசாரியாக இருந்தார் பூடஸ். எரிக்தியனின் பெண் பூசாரிகள் பூடஸின் வழித்தோன்றல்கள் என்று கூறப்படுகிறது.
எரிக்தியன் வளாகத்தில் ஆலிவ் மரம் ஒன்று காணப்படுகிறது. அது எப்போது யாரால் நடப்பட்டது என்பதற்கு ஒரு கதை உள்ளது. பண்டைய காலத்தில் அக்ரோபோலிஸின் காவல் தெய்வமாக யார் இருப்பது என்று அதீனாவும் பொஸைடனும் போட்டியிட்டனர். நகரத்தில் வாழ்ந்த மக்களின் ஆதரவைப் பெறுவதில் முனைப்பாக இருந்தனர். பொஸைடன் தன் சூலாயுதத்தை நிலத்தில் குத்தி கடல்நீர் ஊற்று ஒன்றைத் தோற்றுவித்தான். அதீனா ஆலிவ் மரமொன்றைப் பரிசாகத் தந்தாள். இருவரில் யார் காவல் தெய்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது நமக்கே தெரியும். அன்று முதல் ஆலிவ் மரம் ஏதன்ஸ் மக்களின் வாழ்விலும் வணிகத்திலும் நிரந்தர இடம் பிடித்தது.
பொஸைடன் தோற்றுவித்த ஊற்றை எரிக்தியஸின் கடல் என்று அழைத்தனர். கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க வரலாற்றாசிரியர் ஒருவர் இந்த ஊற்றைக் குறித்து எழுதியிருக்கிறார். மேற்கு வாயிலுக்குக் கீழே அமைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அதீனாவுக்கும் பொஸைடனுக்கும் இடையே நிகழ்ந்த போட்டி புதிதல்ல, இருவருக்குமிடையே பழைய பகை இருந்ததாக கிரேக்கப் புராணக் கதைகள் சொல்கின்றன. பொஸைடன் கடல், புயல், நிலநடுக்கம், குதிரை ஆகியவற்றின் தெய்வம். அதனால் தோற்றுப்போனவுடன் ஏதென்ஸ் மக்களைத் தண்டிப்பதற்காகப் பிரம்மாண்டமான வெள்ளம் ஒன்றை வரச்செய்து அட்டிகா சமவெளியை மூழ்கடித்தான். காவல் தெய்வமாகத் தேர்ந்தெடுக்காவிட்டாலும் மக்கள் அவனை வழிபடுவதை நிறுத்தவில்லை என்பதற்கு எரிக்தியன் வழிபாட்டு வளாகமே சான்று.
(தொடரும்)