Skip to content
Home » உலகின் கதை #15 – ஏதென்ஸின் காவல் தெய்வம் எதீனா

உலகின் கதை #15 – ஏதென்ஸின் காவல் தெய்வம் எதீனா

ஏதென்ஸின் காவல் தெய்வம் எதீனா

ஏதென்ஸ் அக்ரோபோலிஸின் முக்கியமான கட்டடங்களான பார்த்தனன், எரிக்தயன், பிரோபிலியா, எதீனா நைகியின் வழிபாட்டிடம் ஆகியவை கிரேக்கர்களின் புகழையும் மாட்சியையும் நிலைநிறுத்தவும் மக்களுக்கு ஊக்கத்தை அளிக்கவும் பெரிக்ளிஸால் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள். அக்ரோபோலிஸ் என்றால் உயரமான நகரம் என்று பொருள். அதனால் குன்றின்மீது எதீனா தெய்வத்துக்காக எழுப்பப்பட்ட நகரம் ஏதென்ஸ் அக்ரோபோலிஸ் என்று அழைக்கப்பட்டது.

பிரோபிலியா என்றால் நுழைவாயில் என்று பொருள். கிரேக்கக் கட்டடவியலில் புனித இடங்கள் அல்லது சமய நினைவுச்சின்னங்களின் தொகுப்பு போன்றவற்றின் நுழைவாயிலையோ முன் தாழ்வாரத்தையோ பிரோபிலியம் என்கிறார்கள். அந்த நுழைவாயில் நெடிதுயர்ந்த தூண்களைக்கொண்ட மண்டபம்போன்ற அமைப்பில் இருக்கும். நினைவுச்சின்னத்தின் முக்கிய வாயிலுக்கு வெளியே அல்லது உள்ளே என எப்படி வேண்டுமானாலும் அமைந்திருக்கும். சொல்லப்போனால் நகரின் பொதுப் பகுதியையும் வழிபாட்டுத் தலத்தையும் பிரிக்கும் அமைப்பாகவும் இருந்தது.

பிரோபிலியா எனப்படும் இந்த நுழைவுமண்டப அமைப்பு பொ.ஆ.மு. 17ஆம் நூற்றாண்டில் கிரீட்டில் ஆட்சிசெய்த மினோவா பேரரசின் கட்டடவியலின் அங்கமாக இருந்தது. பொ.ஆ.மு. 14ஆம் நூற்றாண்டு கிரேக்கத்தைச் சேர்ந்த மைசீனியர்களின் கட்டடவியலிலும் காணமுடிந்தது. பண்டைய கிரேக்கத்தில் ஒலிம்பியாவில் இருக்கும் வழிபாட்டிடத்திலும் இந்த அமைப்பைப் பார்க்கலாம்.

தற்காலத்தில் 18, 19ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட வேறு பல முக்கியமான நுழைவாயில்களையும் பிரோபிலியா என்று அழைக்கிறார்கள். ஜெர்மனி நாட்டின் முனிக் நகரில் இருக்கும் முனிக் பிரோபிலியனும் பெர்லின் நகரில் இருக்கும் பிராண்டென்பர்க் வாயில் இரண்டுமே பிரோபிலியம் வகையைச் சேர்ந்தவை.

இவற்றையெல்லாம்விட ஏதென்ஸ் அக்ரோபோலிஸில் இருக்கும் மாபெரும் நுழைவுமண்டபமான பிரோபிலியாதான் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. மைசீனியன் காலமுதலே அக்ரோபோலிஸின் முக்கிய நுழைவாயில் மேற்குத் திசையில்தான் அமைதிருந்தது. பொஆமு 480இல் பாரசீகர்களுடன் நடந்த போரில் அது சிதைவடைந்தது. அதனால் பிரோபிலியாவையும் அதே இடத்தில் அமைத்தனர்.

பொஆமு 437இல் கட்டப்பட்ட பிரோபிலியாவுக்கு வடிவம் தந்தவர் நெசிகிள்ஸ் என்ற வல்லுநர். இதை அமைப்பதில் ஒரு சிக்கலை எதிர்கொண்டார் நெசிக்ளிஸ். ஏற்கெனவே அங்கு இருந்த எதீனா நைக்கியின் அரணையும் ஆர்டெமிஸ் பிரொரோனியாவின் மதிலையும் அரவணைத்துக் கட்டவேண்டியிருந்தது. அத்தோடு நிலத்தின் அமைப்பும் சீராக இல்லாமல் மேடும் பள்ளமுமாக இருந்தது. பார்த்தனனைக் கட்டிமுடிக்கும் தருவாயில் பிரோபிலியாவை அமைக்கும் பணி தொடங்கியது. பார்த்தனனின் வடிவமைப்போடு ஒத்திருக்கும்படி பார்த்துக்கொண்டனர்.

பிரோபிலியா

விலைமதிப்புமிக்க பென்டெலிக் வகை வெள்ளை வண்ணச் சலவைக் கற்களைப் பயன்படுத்தினர். கூரையைத் தாங்கிப் பிடிப்பதற்கென சலவைக்கல் உத்தரத்திற்குள் இரும்புக் கம்பிகளைச் சொருகினர். அதைத்தவிர, வேறு எங்கும் எந்த உலோகத்தையும் பயன்படுத்தவில்லை என்பதும் கூடுதல் சிறப்பு. நெசிகிள்ஸின் வடிவமைப்புத் திட்டம் நேர்த்தியாக இருந்தது.

பெலப்பனீஷன் போரின் காரணமாக பொஆமு 431இல் கட்டுமானப் பணி நிறுத்திவைக்கப்பட்டது, மீண்டும் தொடங்கப்படவே இல்லை. முக்கியமாக பிரோபிலியாவின் இருபுறமும் தனிப் பகுதிகளைக் கட்டத் திட்டமிட்டிருந்தனர். பினகோதெக் எனப்படும் பகுதியில் கலைக்கூடம், விருந்துக்கூடம் ஆகியவற்றை அமைக்க முடிவுசெய்திருந்தனர். ஆனால், அவற்றை முழுவதுமாகக் கட்டிமுடிக்கவில்லை. நல்லவேளையாக மத்தியில் இருந்த முக்கியமான பகுதிகள் பெருமளவு நிறைவடைந்திருந்தன.

பிரோபிலியா நுழைவுமண்டபம் ஐந்து பாதைகளைக் கொண்டிருந்தது. பாதசாரிகளுக்கென நான்கு பாதைகளும் வாகனப் போக்குவரத்துக்குப் பெரிய பாதை ஒன்றும் அமைக்கப்பட்டது. மேற்கூரையின் உட்புறத்தில் நீலவண்ணப் பின்னணியில் பொன்வண்ணத் தாரகைகளும் விரிந்த பனங்குருத்தை ஒத்த வடிவங்களும் வரையப்பட்டிருந்தன.

மற்ற எந்த நினைவுச்சின்னத்தையும்போலவே காலப்போக்கில் பல புதிய அமைப்புகள் இதனுடன் இணைக்கப்பட்டன. பொஆமு 178இல் நடைபெற்ற பான்எதினீயா விளையாட்டுகளில் வெற்றிபெற்ற பெர்கமன் என்ற அரசனைக் கௌரவப்படுத்தும் வகையில் பிரோபிலியாவின் முன்புறத்தில் 10 மீட்டர் உயர மேடை ஒன்றை அமைத்து நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேரின் சிலையை நிறுவினார்கள். பொஆ 1ஆம் நூற்றாண்டில் அதே மேடையில் ஆண்டனி, கிளியோபட்ராவின் சிலைகளை அமைத்தார்கள்.

பிரோபிலியாவினுள் நுழைந்ததும் இடதுபுறம் நினைவுச்சின்னம் நிற்கும் மேடையும் வலதுபுறம் எதீனா நைகியின் வழிபாட்டிடமும் இருப்பதைக் காணலாம். இந்த வழிபாட்டிடம் ஏதென்ஸ் அக்ரோபோலிஸின் மற்ற நினைவுச்சின்னங்களைவிடவும் சிறியது என்றாலும் கலைநுட்பம்கொண்டது. பொஆமு 420இல் கட்டிமுடிக்கப்பட்டது. பண்டைய கிரேக்கர்கள் கட்டிய வழிபாட்டிடம் சுமார் 2000 வருடங்கள் நிலைத்துநின்றது.

ஆனால் அதற்குப் பிறகு நடந்த படையெடுப்புகளும் போர்களும் இந்த நினைவுச்சின்னங்களைச் சேதப்படுத்தின. துருக்கிய, பாரசீக மன்னர்களின் படையெடுப்பின்போது பேராயரின் மாளிகையாகவும், ஆளுநரின் வசிப்பிடமாகவும்கூடப் பயன்பட்டது பிரோபிலியா. துருக்கியர்கள் எதீனா நைகியின் ஆலயத்தில் இருந்த கற்களைப் பிரித்தெடுத்து பாதுகாப்புச் சுவரொன்றை எழுப்பினார்கள்.

18ஆம் நூற்றாண்டில் கிரேக்கம் விடுதலை பெற்ற பிறகு அக்ரோபோலிஸையும் எதீனா நைகியின் வழிபாட்டிடத்தையும் மறுசீரமைப்புச் செய்தனர். 20ஆம் நூற்றாண்டில் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் வழிபாட்டிடத்தின் மறுசீரமைப்பு சரியாகச் செய்யப்படவில்லை என்று சொன்னதால் 21ஆம் நூற்றாண்டில் அந்தப் பணியை மீண்டும் செய்தனர். பிரோபிலியாவைச் சீரமைக்கும் பணி 20ஆம் நூற்றாண்டு தொடங்கி இந்த 21ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்து நடைபெறுகிறது.

0

காவல் தெய்வம் எதீனா

ஏதென்ஸின் காவல் தெய்வமான எதீனா எப்படிப் பிறந்தாள், அவளுடைய பெற்றோர் யார் என்பது குறித்த கிரேக்கப் புராணக் கதை சுவாரசியமானது. கிரேக்கக் கடவுளர்களின் தலைவனும் அரசனுமான ஜீயஸின் மகள்தான் எதீனா. அவளின் பிறப்பு விசித்திரமானது. நேரடியாக ஜீயஸின் நெற்றியிலிருந்து பிறந்த குழந்தை என்று ஒரு கதை வழங்குகிறது. இல்லையில்லை, அதற்குக் காரணம் என்னவென்றால் மெடிஸ் என்ற பெண் கடவுள் கருவுற்றிருந்தபோது அவளை ஜீயஸ் விழுங்கிவிட்டார். தாயின் வயிற்றில் இருந்த எதீனா ஜீயஸின் நெற்றி வழியாக வெளியே வந்தாள் என்கிறது இன்னொரு கதை. எப்படியோ அவள் ஜீயஸின் பிரியமான மகள் என்பதால் சிறப்பான ஆற்றலைப் பெற்றிருந்தாள் என்பதை எல்லாக் கதைகளும் எந்தச் சந்தேகமும் இல்லாமல் ஒத்துக்கொள்கின்றன.

பண்டைய கிரேக்கத்தில் போர், கைவினைத்திறன், நடைமுறை நியாயம் ஆகிவற்றுக்கான கடவுள் எதீனா. நகரத்தைச் சேர்ந்தவள், நயத்தக்க நாகரிகத்தின் குறியீடாக இருந்தாள். விவசாயம், சமையல், இசைக்கருவிகள் ஆகியவற்றோடும் தொடர்புள்ளவளாகக் கருதப்பட்டாள். கிரேக்கம் முழுமைக்குமான கடவுளாக இருந்தவள் பின்னர் ஏதென்ஸோடு மட்டும் தொடர்புடையவளானாள். ரோமானியர்கள் எதீனாவை மினர்வா என்று அழைக்கிறார்கள்.

உடல் கவசம், தலைக் கவசம் ஆகியவற்றை அணிந்திருப்பதோடு கையில் கேடயத்தையும் ஈட்டியையும் தாங்கியிருப்பாள். பிறக்கும்போதே இவற்றையெல்லாம் ஏந்தியிருந்தாள் எனவும் கூறப்படுகிறது. எதீனா பறவைகளோடு தொடர்புடையவள், குறிப்பாக ஏதென்ஸ் நகரின் சின்னமான ஆந்தையோடு காணப்படுவாள்.

எதீனா பல்வேறு கிரேக்க நகரங்களின் அக்ரோபோலிஸ்களோடு தொடர்புடைய கடவுளாக இருந்தாள். அவளுக்கென துணையோ குழந்தைகளோ கிடையாது. இதனால் கன்னித்தன்மை கொண்டவளாகச் சித்தரிக்கப்பட்டிருக்கலாம். பார்த்தனஸ் என்றால் கன்னித்தன்மை கொண்டவள் என்று பொருள். போர்க்கடவுள் என்பதால் அவள்மீது மற்ற கடவுளர்கள் யாரும் அதிகாரம் செலுத்தமுடியாது. அரண்மனையின் கடவுள் என்பதால் அவளைமீறி யாரும் செயல்படமுடியாது.

எதீனாவோடு ஏரீஸ் என்ற கடவுளையும் போருக்கு அதிபதியாக நியமித்தார் ஜீயஸ். கிரேக்கப் பெருங்காப்பியங்களுள் ஒன்றான இலியடில் கிரேக்க வீரர்களுக்கு ஊக்கமூட்டுவதோடு அவர்களின் தோளோடு தோள் நின்று சண்டையிடும் போர்க் கடவுளாக அவளைச் சித்தரித்தார் ஹோமர். அவள் பெயரைச் சொன்னாலே போர்த்திறனைக் குறித்தது. போரின் அறிவார்ந்த, நாகரிகமிக்க பக்கத்தின் குறியீடாகவும் இருந்தாள். ஆனால் ஏரீஸோ ரத்த வெறிகொண்டவனாக இருந்தான். போரின் இரக்கமற்ற கொடூரமான பக்கத்தின் குறியீடாக இருந்ததால் ஏரீஸை கிரேக்கர்கள் வழிபடவில்லை.

ஹோமரின் இன்னொரு பெருங்காப்பியமான ஒடிஸியில் எதீனாவை ஒடிஸியஸ் என்னும் மன்னனின் காவல் தெய்வமாகச் சித்தரித்தார். அதற்கும் முந்தைய புராணங்களில் பெர்ஸியஸ், ஹிரக்ளிஸ் போன்ற மன்னர்களுக்கு உதவிபுரியும் கடவுளாக இருக்கிறாள். அதனால் கலந்தாய்வு, நுட்பத்தோடு செயலாற்றுவது, நடைமுறை அறிவு ஆகியவற்றைக் குறிப்பவளாக இருந்தாள். கிரேக்கம் மன்னராட்சி முறையில் இருந்து மக்களாட்சிக்கு மாறிய சமயத்தில் அவளும் நகரத்தின் காவல் தெய்வமாக மாறியிருக்கலாம்.

0

எதீனா, நைகி

எதீனா பற்றித் தெரிந்துகொண்டோம், இந்த நைகி யார்? வழிபாட்டிடத்தை ஏன் எதீனா நைகி என்று இருவரின் பெயரால் அழைக்கிறார்கள். நைகி வெற்றியின் தேவதை. எதீனாவின் பண்புகளின் ஓர் அங்கமாகக் கருதப்பட்டதால் ’வெற்றியாளர்களின் எதீனா’ எனப் பொருள்தரும் எதீனா நைகி என்ற பெயர் நிலைத்துவிட்டது.

எதீனாவுக்கு இப்படிப் பற்பல பெயர்கள் உண்டு. எதீனா பார்த்தனஸ் என்றால் கன்னி எதீனா என்று பொருள். பலஸ் எதீனா என்றும் அழைக்கப்பட்டாள். இளம்வயதில் கடல் கடவுளான ட்ரைடனின் மகள் பலஸும் எதீனாவும் விளையாட்டுத் தோழிகள். இருவரும் விளையாட்டாகச் சண்டையிடுகையில் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டாள் பலஸ். அன்றுமுதல் தன்னுடைய ஆழ்ந்த துக்கத்தின் வெளிப்பாடாக பலஸின் பெயரைத் தன் பெயருடன் இணைத்துக்கொண்டதால் பலஸ் எதீனா என்ற பெயரும் உண்டு. இவை குறித்து வெவ்வேறு விளக்கங்களைத் தரும் பல கதைகள் கிரேக்கப் புராணத்திலும் வரலாற்றிலும் கொட்டிக்கிடக்கின்றன.

நைகியை நைஸ் என்றும் ’சிறகுகொண்ட வெற்றி’ என்றும் அழைப்பதுண்டு. பலஸ் என்ற இராட்சதனுக்கும் வெறுப்புக்குத் தேவதையான ஸ்டிக்ஸ் என்பவளுக்கும் பிறந்தவள். டைடன்களுடான போரில் ஜீயஸ் வெற்றிபெற உதவியதால் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடவுளர்கள் வசிக்கும் ஒலிம்பஸ் மலையில் அவளும் வசிக்க அனுமதி தரப்பட்டது.

நைகி சிறகுகளுடையவள் என்றாலும் எதீனாவுடன் இணைத்து எதீனா நைகியாகச் சித்தரிக்கப்படுகையில் சிறகுகள் இருப்பதில்லை. நைகி கையில் பனங்குருத்தையோ வளையத்தையோ பிடித்திருப்பாள். கூடவே வெற்றிச் செய்தியைக் கொண்டுவரும் தூதரென்பதால் ஹெர்மிஸ் என்ற கடவுளர்களின் தூதுவரின் கைத்தடியையும் வைத்திருப்பாள்.

ஏதென்ஸ் மக்கள் போர், விளையாட்டு என எல்லாவிதமான செயல்பாட்டிலும் வெற்றியை எட்டிப்பிடிக்க உதவுபவள் என்பதால் எப்போதும் சிறகுகளை விரித்துப் பறப்பதுபோலவோ வெற்றிக் கோப்பையைப் பிடித்திருப்பதுபோலவோ காணப்படுவாள். எதீனா நைகி வழிபாட்டிடத்தில் இருக்கும் சலவைக்கல் சிற்பத்தில் நைகி காலணிகளை அணிவது, கழற்றுவது, மலர்வளையங்களைப் பிடித்திருப்பது, ஆடையைச் சரிசெய்வது எனப் பலவிதமான தோற்றத்திலும் நிலைகளிலும் காணப்படுகிறாள்.

ரோமானியர்கள் நைகியை விக்டோரியா என்று அழைத்தார்கள். ரோமானியர்களின் ஆட்சிமன்றமான செனட்டின் காவல்தெய்வமாகக் கருதப்பட்டாள்.

(தொடரும்)

பகிர:
கார்குழலி

கார்குழலி

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதுபவர். பல்வேறு அரசுத் துறைகளோடும் பன்னாட்டு அரசு சாரா அமைப்புகளோடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடும் நாளிதழ்களோடும் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். துலிகா, பிரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்களில் குழந்தைகளுக்காக நாற்பத்தைந்துக்கும் அதிகமான நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *