போர் என்பது பெரும் வேதனை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எந்தக் காலத்திலும் போரினால் மனிதர்கள் தாங்கொணாத் துயரத்துக்கு ஆளாகிறார்கள். வெற்றி, தோல்வி என்ற இருமை குறித்துப் பேசும் வரலாறு போரில் ஈடுபட்டவர்களின் தனிமனித வாழ்வில் ஏற்பட்ட இழப்புகளைப் பதிவுசெய்வதில்லை.
அதேநேரத்தில் பண்டைய காலத்தில் பயணம், வணிகம், திருமணம் ஆகியவற்றைப்போலவே போரும் கலாசாரப் பரிமாற்றம் நடைபெறுவதில் பெரும்பங்கு வகித்ததை மறுக்கமுடியாது. அதிலும் அண்டைநாடுகளாக இருந்தால் தாக்கமும் விளைவுகளும் கூடுதலாக இருக்கும். அப்படி அண்டை நாட்டினரான கிரேக்கர்களின் கலாசாரம் ரோமானியர்களின்மீது பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியது.
கிரேக்கர்கள் கலை, தத்துவம் என அறிவார்ந்த விஷயங்களில் ஆற்றல்கொண்டவர்களாக இருந்தார்கள். ரோமானியர்கள் படைத்துறை, அரசியல், சமூகம் போன்ற நிறுவனங்களில் சிறந்து விளங்கினர். ரோமானியர்கள் போர்த்திறத்தினால் மட்டுமே பெருமைபெற்றனர் என்று எண்ணிவிடக்கூடாது.
கிரேக்கர்கள் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்களைத் தங்களுடைய அரசியலிலும் ஆட்சியிலும் ஈடுபட அனுமதிக்கவில்லை. ஆனால் ரோமானியர்களோ தொடக்கம் முதலே தாங்கள் வெற்றிகொண்ட நாட்டு மக்களின் பிரதிநிதிகளைத் தங்களின் அரசியல், சமூக அமைப்புகளில் பங்குபெறச் செய்தனர். ரோமானியப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றியவர்களுக்கு ரோமானியக் குடியுரிமையை வழங்கினர்.
ரோமானியப் பேரரசர்களின் அரசவையில் வேறு நாட்டவர்களும் இடம்பெற்றனர். ஐரோப்பாவில் ரோமானிய ஆட்சியின் தாக்கத்தை பண்டைய லத்தீன் மொழியில் இருந்து கிளைத்த ரொமான்ஸ் மொழிகளான இத்தாலிய, பிரெஞ்சு, ஸ்பானிஷ், போர்த்துகீசிய, ரோமானிய மொழிகள் பரவியிருந்த நிலப்பகுதியைக்கொண்டு கணக்கிடுகிறார்கள்.
மேற்கத்திய அகரவரிசையில் இருக்கும் 26 எழுத்துகளின் எண்ணிக்கை, பன்னிரெண்டு மாதங்கள் கொண்ட நாள்காட்டி, ஒரு வருடத்தில் 365.25 நாட்கள் என்ற கணக்கு போன்றவை ஐரோப்பாவுக்கு மட்டுமின்றி உலகத்துக்கே ரோமானியர்களின் கொடையாக, இன்றுவரையில் புழக்கத்திலும் உள்ளன.
0
பொஆமு 753இல் இத்தாலியின் டைபர் நதிக்கரையில் சிறிய நகரமாக நிறுவப்பட்ட ரோம் நகரம் அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் பல நாடுகளின் ஒருங்கிணைந்த குடியரசாகவும் பேரரசாகவும் விரிந்தது. உலக வரலாற்றில் வெற்றிகரமான பேரரசுகளின் பட்டியலில் ரோம் நிச்சயம் இடம்பெறும்.
ஐரோப்பாவில் ரைன் நதிக்கு மேற்கிலும் டான்யூப் நதிக்கு தெற்கிலும் இருந்த நிலப்பகுதியோடு இங்கிலாந்துவரை பரவியிருந்தது ரோம் பேரரசு. மத்திய தரைக் கடலில் இருந்த தீவுகளோடு மேற்கு ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா என்று மற்ற கண்டங்களுக்கும் விரிவடைந்தன.
ரோமின் முதல் அரசன் ரோமுலஸ். அவனுடைய இரட்டைச் சகோதரனான ரீமஸுடன் சேர்ந்து ரோம் நகரை நிறுவினான் என்று நம்பப்படுகிறது. இந்தக் கதைக்குப் பல பதிப்புகளும் கிளைக்கதைகளும் உள்ளன. அவை ஒவ்வொன்றும் சுவாரசியமானவை. ரோமுலஸும் ரீமஸும் அல்பா லோங்கா என்ற புராணகாலத்து நகரின் இளவரசியான ரியா சில்வியாவுக்கும் ரோமானிய போர்க் கடவுளான மார்ஸுக்கும் பிறந்தவர்கள்.
ரியாவின் தந்தை நியூமிடர் அல்பா லோங்காவின் அரசன். அவனுடைய தம்பி அமுலியஸ் சகோதரனின் அரியணையைக் கைப்பற்றினான். கூடவே ரியாவைக் கன்னியாகவே இருந்த வெஸ்டா என்ற பெண் கடவுளின் வழிபாட்டிடத்தில் சேவைசெய்யும் பணியில் ஈடுபடச் செய்தான். அப்படிச் செய்தால் தன்னுடைய ஆட்சியைப் பறித்துக்கொள்ள அரச குடும்பத்தைச் சேர்ந்த வாரிசு யாரும் உருவாகமாட்டார்கள் என எண்ணினான். ஆனால் விதி வலியது.
வெஸ்டாவின் வழிபாட்டுக்காக அருகில் இருந்த மார்ஸின் புனிதச் சோலையில் நீர் எடுத்துவரச் சென்றபோது ரியா மார்ஸினால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கருவுற்றாள். இதனால் வெஸ்டாவின் கோபத்துக்கு ஆளானாள் என்பதும் அதற்காகத் தண்டிக்கப்பட்டாள் என்பதும் தனிக்கதை. எந்தக் காலத்திலும் பாதுகாப்புத் தர வேண்டியவர்களே எல்லை மீறுவது இயல்பான செயலாக இருந்திருக்கிறது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குக் கடவுளின் கருணையோ புரிதலோ கிடைப்பதில்லை. ரியாவைச் சமாதானம் செய்யும்பொருட்டு உனக்குப் பிறக்கும் குழந்தைகள் பெரும் சிறப்பைப் பெறுவார்கள் என்று வாக்களிக்கிறான் மார்ஸ்.
ஒரு வழியாக இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறாள் ரியா. இதைக் கேள்விப்பட்ட அவள் சித்தப்பா அமுலியஸ் சிசுக்களை டைபர் நதியில் மூழ்கடித்துக் கொல்லுமாறு தன்னுடைய வேலைக்காரனுக்குக் கட்டளையிடுகிறான். குழந்தைகளின்மீது பரிதாபம்கொண்ட வேலைக்காரனோ கொல்லாமல் விட்டுவிடுகிறான். ஆற்று வெள்ளத்தில் மிதந்து கரை ஒதுங்கிய அந்தக் குழந்தைகளுக்குப் பால் கொடுத்து வளர்க்கிறது பெண் ஓநாய் ஒன்று. அதைப் பார்த்த ஃபாஸ்டுலஸ் என்னும் ஆட்டிடையன் குழந்தைகளைத் தன் வீட்டுக்குக் கொண்டுபோய் வளர்க்கிறான். ஓநாய் மார்ஸின் சின்னம் என்பதால் ஓநாய் உருவில் தன்னுடைய குழந்தைகளுக்குப் பாதுகாப்பாக இருந்தான் என்று கூறப்படுகிறது. ஆனால் ரியாவோ டைபர் நதியில் குதித்துத் தன்னை மாய்த்துக்கொள்கிறாள்.
ஃபாஸ்டுலஸின் அரவணைப்பில் ஆட்டிடையப் போர்வீர்களாக வளரும் ரோமுலஸுக்கும் ரீமஸுக்கும் அமுலியஸ் பற்றியும் நியூமிடர் பற்றியும் தெரிய வருகிறது. அமுலியஸைக் கொன்று தாத்தா நியூமிடருக்கு முடிசூட்டுகிறார்கள். பிறகு, அந்த இரட்டைச் சகோதரர்கள் தங்களுக்கென ஒரு நகரத்தை அமைக்க முடிவுசெய்கிறார்கள். அதற்கான இடத்தைத் தெரிவுசெய்ய அலைகிறார்கள். டைபர் நதிக்கரையில் தாங்கள் ஃபாஸ்டுலஸால் கண்டெடுக்கப்பட்ட இடத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
அங்கு இருக்கும் அல்பன் மலைத்தொடரின் குன்றுகளில் எந்தக் குன்றின்மீது நகரை அமைப்பது என்று முடிவுசெய்வதில் இருவருக்கும் இடையே பிணக்கு ஏற்படுகிறது. கதையின் ஒவ்வொரு பதிப்பிலும் ஒவ்வொரு காரணம் சொல்லப்படுகிறது. ஆனால் ஒன்று மட்டும் மாறுவதில்லை – ரீமஸ் ரோமுலஸால் கொல்லப்படுகிறான். கூடவே அவர்களின் வளர்ப்புத் தந்தையான ஃபாஸ்டுலஸும் கொல்லப்படுகிறார். இப்படியாகத் தனக்கு நெருக்கமான உறவுகள் இருவரின் மரணத்தோடு புதிய நகருக்கு அடிக்கல் நாட்டுகிறான் ரோமுலஸ். அதற்குத் தன்னுடைய பெயரைச் சூட்டுகிறான்.
0
இத்தாலி நாட்டின் தலைநகரான ரோமுக்கு ஏழு குன்றுகளின் நகரம் என்றொரு பெயர் உண்டு. தென்னகத்தின் திருமலையோடு உலகின் பல நகரங்களுக்கு இந்தப் பட்டப்பெயர் வழங்கப்படுகிறது என்பது ஆச்சரியமான செய்தி. ரோமின் வரலாறு சுமார் 28 நூற்றாண்டுகள் பழமையானது. மூவாயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் வாழும் நகரம் என்பதால் நிலைபேறுடைய நகரம் என்ற புகழைப்பெற்றது.
ரோமானியக் குடியரசின் நகரமாக இருந்து பின் பேரரசின் தலைநகரமாக மாறிய ரோம் 4ஆம் நூற்றாண்டு முதல் கிறிஸ்துவ உலகின் மையமாக உருப்பெற்றது. பண்டைய ரோமின்மீது கிறிஸ்துவ நகரம் அமைக்கப்பட்டது. முன்பிருந்த வெளிகளும் கட்டடங்களும் கட்டுமானப் பொருட்களும் இதற்காகப் பயன்படுத்தப்பட்டன. 15ஆம் நூற்றாண்டு முதல் கத்தோலிக்கர்களின் தலைவரான போப் பதவியை வகித்தவர்கள் நகரைப் புனரமைத்துப் புதிய வடிவைக் கொடுத்தனர். கலை-இலக்கிய மறுமலர்ச்சிக் காலம் அதைத் தொடர்ந்துவந்த பாரோக் காலம் ஆகியவற்றின் ஆன்மாவைப் பிரதிபலித்தது.
ரோமின் எல்லைக்குள் இருக்கும் இன்னொரு நாடு எதுவென்று தெரியுமா? நாட்டுக்குள் நகரம் சரி, நகரத்துக்குள் ஒரு நாடா என்கிறீர்களா? கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமையிடமான வாடிகன் சிட்டிதான் ரோம் நகருக்குள் இருக்கும் நாடு, உலகிலேயே மிகச் சிறிய நாடும்கூட. ரோம் நகரின் வரலாற்று மாவட்டம், வாடிகன் சிட்டி இரண்டுமே யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஃபோரம், அகஸ்டஸ், ஹேட்ரியன் ஆகியோரின் கல்லறைகள், பாந்தியன், டிரேஜன் தூண், மார்கஸ் ஆரிலியஸின் தூண், திருத்தந்தையின் ரோம் ஆகிய நினைவுச்சின்னங்கள் புகழ்பெற்றவை.
0
லத்தீன் மொழியில் ஃபோரம் ரோமானம் என்றழைக்கப்படும் ரோமன் ஃபோரம் செவ்வக வடிவில் அமைந்த நகரச் சதுக்கம். அதைச் சுற்றிலும் பல முக்கியமான பண்டைய அரசாங்கக் கட்டடங்கள் காணப்படுகின்றன. பழங்காலத்தில் நகரின் சந்தையிடமாகவும் மக்களின் அன்றாட அலுவல் மையமாகவும் இருந்தது. வெற்றி ஊர்வலங்களும் தேர்தல்களும் பொதுச் சொற்பொழிவாற்றும் மேடையாகவும் குற்றமிழைத்தவர்களுக்கு நீதி வழங்கும் இடமாகவும் காட்சிச் சண்டைவீரர்களின் போட்டி அரங்காகவும் வணிக விவகாரங்களுக்கான மையப்புள்ளியாகவும் இருந்தது. நகரமுழுவதும் முக்கியக் குடிமக்களின் சிலைகளும் அவர்களுக்கான நினைவுச்சின்னங்களும் நிறுவப்பட்டன.
இடைக்கால ரோமானியர்கள் இந்த இடத்தை காம்போ வாச்சினோ என்றழைத்தனர்; பசுக்களின் வயல் என்று பொருள். காபிடலைன் குன்றுக்கு ஆடுகளின் குன்று எனப் பொருள்தரும் மாண்டி காப்ரினோ என்ற பெயரிட்டனர். சொல்லப்போனால் இத்தாலி என்பதற்கு கன்றுகளின் நிலப்பகுதி என்றும் பொருள் கூறப்படுகிறது. பாலில் இருந்து தயாரிக்கப்படும் பாலாடைக் கட்டிகளை பீட்ஸா, பாஸ்டா என எல்லா இத்தாலிய உணவுகளிலும் பயன்படுத்துவதற்கான காரணம் இப்போது புரிகிறது.
பாலடைன், காபிடலைன் குன்றுகளுக்கு நடுவே இருக்கும் பள்ளத்தாக்கில் இருக்கும் ஃபோரத்தின் இடிபாடுகளையும் சிதைவுகளையும் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டியெடுத்தது முதல் அவற்றைப் பார்க்க உலகமெங்கும் இருந்து வருடம்தோறும் 4.5 மில்லியன் மக்கள் வருகை புரிகிறார்கள்.
காஸ்டர், போலக்ஸ் என்ற இரட்டைக் கடவுளர்கள், சீஸர், ஸாடர்ன், வெஸ்டா, ரோமுலஸ் ஆகியோரின் வழிபாட்டிடங்களும் மாமெர்டைன் சிறைச்சாலை, க்யூரியா எனப்படும் நாடாளுமன்றம், டைடஸ், செப்டிமியஸ் சிவரஸ் ஆகிய அரசர்களின் வளைவுகளும் கிலோயேகா மாக்ஸிமா என்ற கழிவுநீர் வடிகாலும் ஃபோரத்தின் முக்கியமான கட்டட அமைப்புகள்.
வடமேற்குப் பகுதியில் மக்கள் கூடும் இரண்டு திறந்தவெளி அரங்கங்கள் அமைந்துள்ளன. அரசியல் கூடுகைகளுக்கான அரங்கை கமிட்டம் என்றும் சமூகக் கூட்டம் நடைபெறும் இடத்தை ஃபோரம் என்றும் வழங்கினர். நகரின் மற்றொரு புறத்தில் ரோமானிய மதகுருவின் வசிப்பிடமும் புனித சோதியை அணையாமல் காக்கும் வெஸ்டல்களின் வாழ்விடமும் அமைக்கப்பட்டன. அடுத்தடுத்து வந்த பேரரசர்கள் இதன் வெவ்வேறு பகுதிகளில் பல புதிய கட்டடங்களை அமைத்தனர்.
(தொடரும்)