Skip to content
Home » உலகின் கதை #17 – ரோமின் பாந்தியன் கட்டடம்

உலகின் கதை #17 – ரோமின் பாந்தியன் கட்டடம்

பாந்தியன்

சென்னையை நன்கு அறிந்தவர்களுக்கு பாந்தியன் சாலையைத் தெரிந்திருக்கும். ரோம் நகரில் இருக்கும் பாந்தியன் என்னும் கட்டடத்தின் பெயரைத்தான் எக்மோரில் இருக்கும் ஒரு கட்டடத்துக்குச் சூட்டினார்கள் என்பதும் அதனால் சாலைக்கும் அதே பெயர் அமைந்தது என்பதும் சுவையான செய்தி. இந்திய விடுதலைக்கு முன்பு சென்னையில் வசித்த ஐரோப்பியர்கள் ஒன்றுகூடும் மாலை நேர விருந்து, நடனம், நாடகம் போன்ற நிகழ்ச்சிகளை இங்கே நடத்தினார்கள். சென்னை அருங்காட்சியகமும் மியூசியம் தியேட்டரும் கன்னிமாரா நூலகமும் இந்த பாந்தியன் வளாகத்தில்தான் அமைந்துள்ளன.

ரோம் நகரில் காணப்படும் பாந்தியன் பொஆமு 27இல் மார்கஸ் விப்ஸானியஸ் அக்ரிப்பாவினால் கட்டப்பட்டது. தற்போது அவர் பெயரில் அக்ரிப்பாவின் பாந்தியன் எனவும் ரோமின் பாந்தியன் எனவும் அழைக்கப்படுகிறது.

பாந்தியன் என்றால் பல கடவுள்களின் தொகுப்பு என்பது பொருள். அரச மரபைச் சேர்ந்தவர்களின் கடவுள்களை ஓரிடத்தில் வழிபடுவதற்காக அக்ரிப்பா இதை அமைத்தார் எனப் பரவலாக நம்பப்படுகிறது. ஆனால் பல வரலாற்றாசிரியர்கள் இந்தப் பெயர் காரணத்தை மறுக்கிறார்கள் என்பதையும் மனதில்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒரு காலத்தில் பண்டைய ஆட்சியாளர்களின் சிலைகளும் இங்கே காணப்பட்டன. ஆட்சியாளர்கள், கலைஞர்கள் எனப் பலரின் கல்லறைகளும் இங்கே உள்ளன. தற்போது கிறிஸ்துவர்களின் தேவாலயமாக இருக்கிறது. பல நூறு வருடங்களாகப் பயன்பாட்டில் இருப்பதால் சிறப்பாகப் பராமரிக்கப்படும் நினைவுச்சின்னங்களில் ஒன்றாக இருக்கிறது.

அக்ரிப்பா ரோமின் முதல் பேரரசரான அகஸ்டஸின் மருமகன். அகஸ்டஸ் சீசர் ஜூலியஸ் சீசரின் அரசியல் வாரிசாகப் பதவியேற்றவர். கூரையின் முகப்பில் ‘மார்கஸ் அக்ரிப்பா, லூசியஸின் மகன், மூன்றாம் முறை ஆட்சிக்கு வந்தபோது கட்டப்பட்டது’ என்று லத்தீனில் பொறிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாம் காணும் பாந்தியன் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுப்பப்பட்ட கட்டடம் இருந்த அதே இடத்தில் அமைந்திருப்பது சிறப்பு. பொஆமு 27 முதல் 25ஆம் ஆண்டு வரையில் மார்கஸால் முதல் பாந்தியன் அமைக்கப்பட்டது. அது பொஆ 80இல் நெருப்பினால் சேதமடைந்தது. அதற்கடுத்து டெமிஷன் என்ற அரசர் அதை மீண்டும் கட்டினார். அதுவும் பொஆ 110இல் இடி தாக்கியதால் உருக்குலைந்தது.

மூன்றாவது பாந்தியனின் கட்டடப் பணிகள் ட்ராஜன் என்ற அரசரால் தொடங்கப்பட்டன. ஆனால் ஹாட்ரியன் என்ற பேரரசரின் காலத்தில் பொஆ 125இல் கட்டி முடிக்கப்பட்டது. ரோமானிய செனட் எனப்படும் ஆட்சியாளர்களின் கூடுகை இடமாக இருந்த அந்த மூன்றாவது பாந்தியனைத்தான் நாம் இப்போது பார்க்கிறோம்.

சேதமடைந்த கட்டடங்களைப் புனரமைப்பதோடு அவற்றை முதலில் கட்டியவரின் பெயரிலேயே அர்ப்பணிக்கும் வழக்கம்கொண்டவர் ஹாட்ரியன். இதனால் பாந்தியனின் முதல் அமைப்பாளரான மார்கஸ் அக்ரிப்பாவின் பெயரை பாந்தியனின் முன்கூரையில் பொறித்தார் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே அமைக்கப்பட்ட கட்டடங்களை முற்றிலும் மாறுபட்ட விஷயங்களுக்குப் பயன்படுத்துவது, பயன்படுத்தாமல் மூடிவைப்பது, அவற்றுக்குப் புதிய பெயரையோ தன்னுடைய பெயரையோ சூட்டுவது எனக் குளறுபடி செய்யும் ஆட்சியாளர்களின் காலத்தில் வாழும் நமக்கு இதுபோன்ற வரலாற்று நிகழ்வுகள் வியப்பை ஏற்படுத்தலாம்.

பண்டைய வழிபாட்டுத் தலங்களின் அமைப்பை ஒட்டி செவ்வக வடிவில் இருக்கும் கட்டடம் இது. முக்கோண வடிவில் அமைந்த முன்கூரையை கொரிந்தியன் பாணித் தூண்கள் தாங்கிப்பிடித்துள்ளன. இந்த முக்கோண வடிவ முன்பகுதி தற்போது வெறுமையாகக் காணப்பட்டாலும் ரோமானியர்களின் கடவுளான ஜூபிடரைக் குறிக்கும் பித்தளையாலான கழுகு அல்லது மலர்வளையத்தின் சிலை அங்கே பொருத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பாந்தியனின் உட்பகுதியும் உட்கூரையும் வட்டவடிவமானவை. முன்வாயிலில் பித்தளையாலான கனமான பிரம்மாண்டமான இரட்டைக் கதவுகளைக் காணலாம். இந்த முன்பகுதியின் வடிவமைப்பு பண்டைய காலத்தில் பரவலாகப் பின்பற்றப்பட்ட பாணியை பிரதிபலித்தாலும் அதன் வட்டவடிவக் குவிந்த கூரை அந்தக் காலத்தைப் பொருத்தவரையில் புதுமையானதாகவும் புரட்சிகரமானதாகவும் இருந்தது.

பாந்தியனின் குவிந்த கூரை மிகப் பெரியது, ஏறக்குறைய 43 மீட்டர் உயரமும் 43 மீட்டர் விட்டமும் கொண்டது. கூரையின் கீழ்ப்பகுதி தவிர வேறு எங்கும் அதைத் தாங்கிப்பிடிக்கும் வளைவுகள் அமைக்கப்பட்டிருக்கிறதா என்பது தெரியவில்லை. இத்தனை பெரிய கூரையை எப்படிக் கட்டினார்கள் என்ற புதிர் இன்னும் விடுவிக்கப்படவில்லை. தரமான கட்டுமானப் பொருட்கள், கலவை, செங்கல் இவற்றோடு பசால்ட், டூஃபா, பமிஸ் போன்ற எரிமலைப் பாறைகள் என ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பொருளைப் பயன்படுத்தியுள்ளார்கள்.

பாந்தியன் ரோம் நகரின் குறுகலான தெருக்களுக்கு நடுவே அமைந்துள்ளது. வெளியே இருந்து பார்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அமைப்பைக் கொண்டதில்லை. ஆனால் அதன் உட்புறம் கண்ணைக்கவரும் வண்ணச் சலவைக் கற்களாலானது. குவிந்த மேல்கூரையில் சதுர வடிவக் குழிவுகளின் வரிசையைக் காணலாம். கூடவே வட்ட வடிவக் கூரையைத் தாங்கிப்பிடிக்கும் வகையில் எல்லாப் புறமும் இரட்டைத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. உட்கூரையில் பித்தளையினாலான அலங்கார வளைவுகளையும் வண்ண ஓவியங்களையும் காணலாம்.

கூரையின் நடுவே சுமார் 8 மீட்டர் விட்டம்கொண்ட பெரிய துளையொன்றைக் காணலாம். இதன் வழியே உள்ளே பாயும் சூரிய ஒளி கட்டடம் முழுவதற்கும் ஒளியூட்டுகிறது. இந்தத் துளையை ஆக்குலஸ் (அதாவது கண்) என்று அழைக்கிறார்கள். அந்தக் காலத்தில் வேறெந்த கட்டடத்திலும் இப்படியான அமைப்பொன்று இல்லை. இதன் வழியே கட்டடத்துக்குள் விழும் மழைநீர் வடிவதற்கேற்றவாறு தரையின் மட்டத்தை அமைத்திருக்கிறார்கள்.

பொஆ 3ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செப்டிமியஸ் செவரஸ், காரகல்லா ஆகிய பேரரசர்கள் பாந்தியனின் அமைப்பில் மேலும் சில திருத்தங்களைச் செய்தனர். பொஆ 330இல் பேரரசர் கான்ஸ்டாண்டைன் ரோமானியப் பேரரசை ரோமிலிருந்து துருக்கியில் இருக்கும் பண்டைய பைசாண்டியம் நகருக்கு இடமாற்றம் செய்தார். அதன் பிறகு பாந்தியன் சரியாகப் பராமரிக்கப்படவில்லை.

பொஆ 609இல் பைசாண்டைன் பேரரசர் ஃபோகாஸின் அனுமதிபெற்று போப் நான்காம் போனிஃபேஸ் பாந்தியனை சான்க்டா மரியா அட் மார்டிரஸ் என்ற கிறிஸ்தவ தேவாலயமாக மாற்றினார். புறச்சமயத்தைச் சேர்ந்த ரோமானிய வழிபாட்டுத் தலமொன்று முதன்முறையாக கிறிஸ்துவ சமயத்தின் வழிபாட்டிடமாக மாறியது. இந்தச் சமயமாற்றத்தினால் பாந்தியன் புனரமைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கலை-இலக்கிய மறுமலர்ச்சிக் காலத்தைச் சேர்ந்த ஓவியர் ரஃபேல், இசைக் கோர்வையாளர் கோரல்லி, கட்டட வல்லுநர் பெருஸ்ஸி போன்றோர் பாந்தியனில் புதைக்கப்பட்டனர். 19ஆம் நூற்றாண்டில் இருந்து 20ஆம் நூற்றாண்டு வரையில் இரண்டாம் விட்டோரியோ எம்மானுவேல், அவரது மகன் ஊம்பெர்டோ, கூடவே அவன் மனைவி அரசி மார்கரிடா ஆகியோரின் கல்லறைகளும் பாந்தியனில் காணப்படுகின்றன. இன்றளவும் இங்கிருக்கும் தேவாலயத்தில் கத்தோலிக்க முறையைப் பின்பற்றி வழிபாடு நடைபெறுகிறது.

பல நூற்றாண்டுகள் கழித்து புகழ்பெற்ற ஓவியர் மைக்கலேஞ்சலோ பாந்தியனைப் பார்த்தபோது இது மனிதனால் வடிவமைக்கப்பட்டதல்ல, தேவதைகளால் உருவாக்கப்பட்டது என்று சொன்னதாக நம்பப்படுகிறது. ஐரோப்பாவைச் சேர்ந்த கட்டடவியலாளர்கள் மட்டுமின்றி மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களின் கலைப்படைப்புகளின்மீது பாந்தியன் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் சட்டமன்றக் கட்டடமான காபிடல், வர்ஜினியா பல்கலைக்கழகக் கட்டடம் ஆகியவை குவிந்த கூரையைக்கொண்ட வட்டவடிவமான அமைப்பைக் கொண்டவை. அமெரிக்க அதிபர் தாமஸ் ஜெஃபர்ஸன் பாந்தியனைப்போலவே இவற்றை வடிவமைத்தார் என்று கூறப்படுகிறது.

பாந்தியனின் நுழைவு வாயிலுக்கு வெளியே அமைந்திருக்கும் பாந்தியனின் நீரூற்று போப் பதிமூன்றாம் கிரகரியின் உத்தரவின் பெயரால் 1575இல் கட்டப்பட்டது. பிறகு 1711இல் போப் பதினொன்றாம் கிளமெண்ட் அதை மாற்றி வடிவமைக்கச் சொன்னார். 1886இல் மற்றுமொரு முறை வடிவமைக்கப்பட்டது. முன்னர் இருந்த சலவைக்கல் சிற்பங்கள் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அவற்றின் இடத்தில் அவற்றைப்போலவே இருக்கும் வேறு சிற்பங்கள் நிறுவப்பட்டன.

(தொடரும்)

பகிர:
கார்குழலி

கார்குழலி

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதுபவர். பல்வேறு அரசுத் துறைகளோடும் பன்னாட்டு அரசு சாரா அமைப்புகளோடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடும் நாளிதழ்களோடும் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். துலிகா, பிரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்களில் குழந்தைகளுக்காக நாற்பத்தைந்துக்கும் அதிகமான நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *