Skip to content
Home » உலகின் கதை #18 – டிரேஜன் தூண்

உலகின் கதை #18 – டிரேஜன் தூண்

டிரேஜன் தூண்

ரோமில் இருக்கும் இன்னொரு முக்கியமான நினைவுச்சின்னம் டிரேஜன் தூண். பொஆ 98 முதல் 117 வரை ஆட்சிபுரிந்த பேரரசர் டிரேஜன் ரோமானியப் பேரரசின் கிழக்கு எல்லையை விரிவுபடுத்தினார். அவரது ஆட்சிக்காலத்தில் ரோமானியப் பேரரசு அரேபியா, அர்மீனியா, மெசபடோமியா வரையில் பரவியிருந்தது. பண்டைய கிரேக்கத்தின் வடக்குப் பகுதியில் டான்யூப் நதியருகே இருந்த பண்டைய டேஷே என்ற மாகாணத்தின்மீது போர்தொடுத்து வெற்றிகொண்டார். தற்போதைய ரொமேனியா நாட்டின் ஒரு பகுதிதான் பண்டைய டேஷே. அந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் இந்தத் தூணை நிறுவினார் டிரேஜன். பண்டைய ரோமானியர்களின் வெற்றி நாயகனாக விளங்கினார் என்றால் மிகையல்ல.

டிரேஜன் ஃபாரம் எனப்படும் வளாகத்தில் இருக்கும் பெரிய கட்டடங்களுக்கும் பொதுவெளிகளுக்கும் நடுவே ஓங்கி உயர்ந்து நிற்கிறது டிரேஜன் தூண். சுமார் 38 மீட்டர் உயரம் கொண்ட இந்தத் தூணை 19 பெரிய காரரா சலவைக்கல் உருளைகளை ஒன்றன்மீது மற்றொன்று அடுக்கிவைத்து அமைத்துள்ளனர். தூணின் உச்சியில் பேரரசர் டிரேஜனின் சிலையை நிறுவினர்.

வளாகத்தின் நுழைவாயிலில் இருக்கும் பிரம்மாண்டமான வெற்றி வளைவின் வழியே ஆறு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் பேரரசர் வருகையில் பசிலிகா உல்பியாவின் உச்சிக்கு மேலே தங்க முலாம் பூசப்பட்ட டிரேஜனின் சிலை காட்சியளிக்கும் வகையில் கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். 16ஆம் நூற்றாண்டில் டிரேஜனின் சிலைக்குப் பதில் கிறிஸ்துவ மதத்தின் முக்கிய அப்போஸ்தலரான புனித பீட்டரின் சிலை அமைக்கப்பட்டது.

டிரேஜன் வளாகத்தில் இருக்கும் கட்டடங்கள் அனைத்தும் ரோமானியப் பேரரசின் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட பல வண்ண சலவைக்கற்களாலானவை. டிரேஜன் தூணுக்கு முதன்மை வண்ணங்களான சிவப்பு, மஞ்சள், நீலம் இவற்றோடு கறுப்பு வண்ணம் தீட்டப்பட்டிருந்தது. தூணின் அடிப்பகுதியில் பேரரசர் டிரேஜன், அவருடைய அரசி இருவரின் எரிசாம்பலும் புதைக்கப்பட்டிருந்த கல்லறையைக் காணலாம்.

இதுபோன்ற பிரம்மாண்டமான நினைவுச்சின்னங்களையும் கட்டடங்களையும் அவற்றின் கலைநயத்தையும் கற்பனை வளத்தையும் இன்று வியப்போடு பார்க்கிறோம். அவை எப்போது எப்படி அமைக்கப்பட்டிருக்கும் என்று ஆய்வுகளை மேற்கொள்கிறோம். கிடைக்கும் தகவல்கள், புள்ளிவிவரங்கள் ஆகியவற்றை ஒன்றோடொன்று தொடர்புப்படுத்தி அதை ஒரு கதைபோலச் சொல்லியும் எழுதியும் சிலாகித்து மகிழ்கிறோம். இதிலெல்லாம் தவறேதுமில்லை. ஆனாலும் இவற்றை நிறுவுவதற்கு எத்தனை செலவு பிடித்திருக்கும் எத்தனை பேரின் உழைப்பு தேவைப்பட்டிருக்கும் என்பது குறித்த சிந்தனையும் கூடவே எழுகிறது. மக்களின் வரிப்பணமும் ஆட்சியை ஏற்றுக்கொள்ளும் அண்டை நாட்டு மன்னர்கள் கட்டும் கப்பமும் போர்புரிந்து கைப்பற்றப்பட்ட நாடுகளில் இருந்து வலுக்கட்டாயமாகக் கொண்டுவரப்படும் செல்வமும்தான் இப்படியான கட்டடங்களை அமைப்பதற்கு உதவியது. அப்படித்தான் டிரேஜன் வளாகமும் தூணும் அமைக்கப்பட்டன என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.

வளாகத்தின் பெரும்பாலான கட்டடங்கள் காலச் சுழற்சியில் சிதிலமடைந்து போயின. இடைக்காலத்தில் அமைக்கப்பட்ட வீடுகளைத்தான் இப்போது காணமுடிகிறது. ஆனால் டிரேஜன் தூண் மாத்திரம் பெரிய சேதம் ஏதுமின்றி அதை நிறுவிய மன்னனின் பெருமையைப் பறைசாற்றியபடி நிற்கிறது.

பண்டைய ரோமில் ராணுவம் முக்கியமான அதிகார மையமாக விளங்கியது. இயந்திரவியலிலும் தொழில்நுட்பத்திலும் சிறப்புற்றிருந்தது. போருக்கான கட்டுமானப் பணியையும் டிரேஜன் வளாகத்தையும் தூணையும் அமைத்தவர் அப்பலோடோரஸ் டமாஸ்கஸ் என்ற கட்டடவியலாளர் என்று நம்பப்படுகிறது.

டிரேஜன் தூண் இரண்டு குன்றுகளுக்கு நடுவே அமைக்கப்பட்டுள்ளது. தூண் நிறுவப்பட்ட இடத்திலும் தூணின் உயரமுடைய ஒரு குன்று இருந்தது எனவும் அது வெட்டித் தகர்க்கப்பட்டது என்றும் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. சூரிய ஒளி உள்ளே நுழைவதற்கேற்ப தூணின் உச்சிக்கு அருகே பலகணி அமைக்கப்பட்டுள்ளது. தூணின் உட்பகுதியில் மேலே ஏறிச் செல்வதற்கான மாடிப்படி இருக்கிறது.

பண்டைய ரோமானிய காலத்தைச் சேர்ந்த இந்தத் தூணின் இருபுறமும் கலை-இலக்கிய மறுமலர்ச்சிக் காலம், பாரோக் காலம் ஆகியவற்றைச் சேர்ந்த இரண்டு கிறிஸ்தவ தேவாலயங்களைக் காணமுடிகிறது. தூணின் அடிப்பகுதியில் அமைந்திருக்கும் பெயர்ப்பலகையில் ’டிரேஜனைக் கௌரவிப்பதற்காக ரோமானிய செனட்டும் குடிமக்களும் எழுப்பிய தூண்’ என்று எழுதப்பட்டுள்ளது. இந்தச் சொற்களைவிடவும் அவற்றை மிக நேர்த்தியாகச் செதுக்கியமைக்காக இந்தப் பெயர்ப்பலகை இன்றுவரையில் புகழ்பெற்று விளங்குகிறது. கணினியில் இன்று காணப்படும் டிரேஜன் என்ற ஆங்கில எழுத்துரு இதையொட்டி உருவாக்கப்பட்டதுதான்.

தூண் முழுவதும் இரண்டு டேஷியன் போர்களோடும் ரோமானியப் படைவீரர்களோடும் தொடர்புடைய காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. போர்க்கலங்களையும் ஆயுதங்களையும் வெற்றிச்சின்னங்களையும் காணமுடிகிறது. சண்டை போடுவது, முற்றுகையிடுவது, கைப்பற்றுவது எனப் போரோடு தொடர்புடைய ரோமானியப் படையின் செயல்பாடுகளோடு வீரர்கள் போருக்கும் முற்றுகைக்கும் ஆயத்தமாகும் காட்சிகளையும் செதுக்கியிருப்பதைப் பார்க்கமுடிகிறது.

தூணின் அடிப்பகுதியில் முதலாம் டேஷியன் போர்க்காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. பேரரசர் படையை வழிநடத்திச் செல்வது, வீரர்களுக்கு உற்சாகமூட்டும் உரையாற்றுவது, தியாகங்களைச் செய்வதுபோன்ற காட்சிகளை அமைத்துள்ளனர். போர்வீரர்களின் தங்குமிடங்களையும் ஆறுகளைக் கடக்க உதவும் பாலங்களையும் அமைக்கிறார்கள். குறிப்பாக, டான்யூப் நதியைக் கடக்கும் காட்சியில் நதியின் கடவுளான டான்யூபச் சித்தரித்திருப்பதோடு தாற்காலிகமாக அமைக்கப்பட்ட மிதக்கும் பாலம், அடித்தளமாகப் பயன்படும் படகுகள், நதியின் ஓட்டம், பாலத்தின்மீது நடந்துசெல்லும் வீரர்கள் என அந்தக் காட்சியை நேரில் பார்ப்பதுபோலச் சித்தரித்திருக்கிறார்கள். முன்னால் செல்லும் வீரர்கள் பதாகைகளை ஏந்திச் செல்கிறார்கள், பின்னால் வருபவர்கள் பாத்திர பண்டம் உடைமைகளை எடுத்துவருகிறார்கள்.

படைவீரர்கள் போரில் காயமடைந்து கிடப்பது, அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதுபோன்ற காட்சிகளையும் காணமுடிகிறது. தூணின் மேல்பகுதியில் டேஷியன் படையின் தளபதியான டேசபாலஸ் ரோமானியர்களிடம் உயிரோடு பிடிபடக்கூடாது என்பதற்காகத் தற்கொலை செய்துகொள்ளும் காட்சியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்படி அசைவையும் இயக்கத்தையும் வளைவான தூணில் அமைத்திருப்பது ரோமானியர்களின் கலைத்திறனைப் பறைசாற்றுகிறது. தூணைப் பலமுறை சுற்றி வந்தால்தான் பல கட்டங்களில் அமைந்த இந்தக் காட்சிகளைப் பார்க்கமுடியும். அந்தக் காலத்தில் அதற்கேற்ற வகையில் தூணைச் சுற்றிலும் நடைமேடை அமைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. கூடவே இருபுறமும் இருந்த கிரேக்க, லத்தீன் நூலகங்களின் மாடியில் இருந்தும் மக்கள் இதைப் பார்த்து ரசித்திருக்கலாம்.

அமைக்கப்பட்ட காலத்தில் மட்டுமின்றி இன்று வரையிலும் கட்டடவியல், கலை ஆகிய துறைகளில் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது டிரேஜன் தூண். இன்று வரையிலும் ரோமின் குறியீடாகவும் முக்கியமான சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. 1980ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களமாக அங்கீகாரம் பெற்றது.

0

பேரரசர் டிரேஜனின் இயற்பெயர் மார்கஸ் ஒல்பியஸ் ட்ரையேனஸ். முழு லத்தீன் பெயர் சீசர் டிவி நெர்வே ஃபிலியஸ் நெர்வா ட்ரையேனஸ் ஜெர்மானிகஸ் என்பதாகும். உண்மையாகவே முழநீளம் இருக்கிறதல்லவா. எனவேதான் வரலாற்றாசிரியர்கள் சுருக்கமாக டிரேஜன் என்று அழைக்கிறார்கள்போல.

டிரேஜனின் இளவயது வாழ்க்கை குறித்துத் தகவல்கள் எதுவும் இல்லை. தந்தை அரசாங்கப் பணியில் இருந்ததால் ரோம் நகரிலோ ராணுவத் தலைமையிடம் அமைந்திருந்த பகுதியிலோ வளர்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மக்கள் நலனுக்கான பல திட்டங்களை இயற்றிதோடு நிறைய பொதுப்பணிகளை மேற்கொண்டார். சாலைகள், பாலங்கள், கால்வாய்கள், துறைமுகங்கள் போன்றவற்றைக் கட்டியதோடு தரிசான நிலங்களை மீட்கும் பணியையும் செய்தார். இதற்கான சான்றுகளை ஸ்பெயின், வடக்கு ஆப்பிரிக்கா, பால்கன் தீபகற்பம், இத்தாலி ஆகிய இடங்களில் காணலாம். ரோம் நகரில் காணப்படும் கால்வாய், பொதுக்குளியலறை வளாகம், ஃபோரம் வளாகம் ஆகியவற்றை அப்பலோடாரஸ் என்ற கட்டடவியலாளரின் உதவியோடு அமைத்தார்.

ரோமானியப் பேரரசின் எல்லையை விரிவுபடுத்தும் முயற்சியில் முழுமூச்சுடன் செயல்பட்டார் டிரேஜன். பொஆ 115இல் பாரசீக வளைகுடாவை அடைந்தபோது முதுமையை எட்டியிருந்தார். இந்திய எல்லையைத் தொட்ட கிரேக்கப் பேரரசரான அலெக்சாண்டரின் சாதனையை முறியடிக்க முடியவில்லை எனக் கண்ணீர்விட்டார் என்று கூறப்படுகிறது.

அதே வருடம் துருக்கியின் ஆண்டியாக் நகரில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் இருந்து உயிர் தப்பினார். 116இல் புதிதாக வென்ற மாகாணங்களில் ரோமுக்கு எதிரான கலகங்கள் எழுந்தன. மனமுடைந்துபோனதோடு உடல் நோய்வாய்ப்பட்டார். ஆண்டியாக்கில் இருந்து ரோமுக்குத் திரும்பினார். வழியில் செலினஸ் என்னும் இடத்தில் உயிர் நீத்தார். அவருடைய எரிசாம்பல் ரோமுக்கு எடுத்துச் செல்லப்பட்டு முழு ராணுவ மரியாதைகளோடு டிரேஜன் தூணின் அடித்தளத்தில் வைக்கப்பட்டது.

(தொடரும்)

பகிர:
கார்குழலி

கார்குழலி

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதுபவர். பல்வேறு அரசுத் துறைகளோடும் பன்னாட்டு அரசு சாரா அமைப்புகளோடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடும் நாளிதழ்களோடும் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். துலிகா, பிரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்களில் குழந்தைகளுக்காக நாற்பத்தைந்துக்கும் அதிகமான நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *