Skip to content
Home » உலகின் கதை #19 – கொலஸியம் அரங்கமும் ட்ரெவி நீரூற்றும்

உலகின் கதை #19 – கொலஸியம் அரங்கமும் ட்ரெவி நீரூற்றும்

கொலஸியம்

ரோமின் வரலாற்று மையம் யுனெஸ்கோவின் 1980ஆம் ஆண்டு உலகப் பாரம்பரியப் பட்டியலில் இணைக்கப்பட்டது. மூவாயிரம் வருடங்களின் வரலாற்றுக்குச் சான்றாக இருக்கும் அதன் ஈடுஇணையற்ற விலைமதிப்பற்ற கலைப் பாரம்பரியம் பாதுகாக்கப்படவேண்டியது என்பதில் சந்தேகமில்லை. பல நூற்றாண்டுகளாக ரோமின் கலைப்படைப்புகள் உலகமுழுவதும் நகரமைப்புத் திட்டம், கட்டடவியல், தொழில்நுட்பம், கலை என எல்லாத் துறைகளின்மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரோமின் தொல்பொருள் களங்கள் நாகரிகத்தின் மையங்களாக இருந்துள்ளன என்பதோடு மூவாயிரம் வருடங்களாக எந்தத் தடையுமின்றி தொடர்ந்து வருகிறது என்பதையும் உலகம் முழுவதுமுள்ள வரலாற்றாசிரியர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். கூடவே கடந்த இரண்டாயிரம் வருடங்களாக உலகின் முக்கியமான மதத்தின் தலைமையிடமாக இருந்தாலும் மேற்குலக கலாசாரத்தின் மதச்சார்பற்ற தலைநகரமாகவும் இருந்து வருகிறது. எனவே, ரோமிலும் அதைச் சுற்றியும் இத்தாலியிலும் உள்ள 58 வரலாற்று நினைவுச்சின்னங்களும் இயற்கை வளங்களும் உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

0

ரோம் என்றாலே நினைவுக்கு வருவது கொலஸியம் என்ற நீள்வட்ட வடிவ அரங்கம்தான். பண்டைய காலத்தில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான அரங்கம் என்பதோடு இன்றுவரையிலும் காணக்கிடைக்கும் நினைவுச்சின்னம் என்பது கூடுதல் சிறப்பு. பொஆமு 72இல் பேரரசர் வெஸ்பஸனின் காலத்தில் இதைக் கட்டும் பணி தொடங்கியது என்றாலும் அவரின் வாரிசான டைடஸின் காலத்தில் பொஆமு 80இல் கட்டி முடிக்கப்பட்டது. கொலஸியம் கட்டி முடிக்கப்பட்டு அதிகாரபூர்வ திறப்புவிழாவை நடத்தினார் டைடஸ். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நூறு நாட்கள் விளையாட்டுகள் நடந்தன.

அதைத் தொடர்ந்து பேரரசர் டொமிஷனின் காலத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. நான்காவது தளம் இவரின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டது. இந்த மூவரும் ஃபிளேவியன் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இது ஃபிளேவியன் அரங்கம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.

வெஸ்பஸனுக்கு முன்னர் ஆட்சி செய்த நீரோ மன்னனின் கதையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். முறைகேடான செயல்களிலும் கேளிக்கைகளிலும் ஈடுபட்டதோடு பொது மக்களைப் பல இன்னல்களுக்கு உட்படுத்தினான். கிறிஸ்தவர்களுக்குப் பல கொடுமைகளைச் செய்தான். ரோம் நகரைத் தீக்கிரையாக்கினான் என்றும் அந்த நேரத்தில் இசைக்கருவியை வாசித்துக்கொண்டிருந்தான் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நீரோ மன்னன் கட்டிய பிரம்மாண்டமான அரண்மனையின் நடுவில் அமைந்த செயற்கை ஏரியின்மீது கொலஸியம் அமைக்கப்பட்டது.

ரோமானியர்களின் கட்டடவியல் அறிவுக்குச் சான்றாக விளங்குகிறது கொலஸியம். சுமார் 48 மீட்டர் உயரத்தில் நீள்வட்ட வடிவில் நான்கு தளங்களைக் கொண்டது. ட்ராவர்டைன் எனப்படும் ஒரு வகை சுண்ணாம்புக்கல், டஃப் எனப்படும் ஒரு வகை எரிமலைக் கால், வெளிப்புறத்தில் செங்கல்லைக்கொண்ட கற்காரை போன்ற கட்டுமானப் பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்டது கொலஸியம்.

அதுவரையில் கட்டப்பட்ட அரங்கங்கள் அனைத்தும் பக்கவாட்டில் தாங்கிப்பிடிக்கும் வலுவான அமைப்பு வேண்டும் என்பதற்காக மலைப்பாங்கான இடங்களில் அமைக்கப்பட்டன. ஆனால் கொலஸியம் கல்லும் கற்காரையும் கொண்டு நட்டநடுவெளியில் உருவாக்கப்பட்டது. அதைத் தாங்கிப் பிடிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட இணைப்புகள் நுட்பமானவை, வலுவானவை. டோரிக், அயானிக், கொரிந்தியன் என மூன்று பாணியில் தூண்கள் நிறுவப்பட்டன.

ஒரே நேரத்தில் சுமார் 80,000 பார்வையாளர்கள் அமரும் வசதியுடையது. நிலத்தடியில் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதைகளும் அறைகளும் நிகழ்ச்சிகளுக்குத் தயாராகவும் மேடையேற்றுவதற்கான ஆயத்தங்களைச் செய்யவும் பயன்பட்டன. பாரம்தூக்கிகள் பொறிக் கதவுகள் போன்ற அமைப்புகள் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களும் விலங்குகளும் நிகழ்ச்சிக்குத் தேவையான பொருட்களும் அரங்கிற்கு கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்டன. பார்வையாளர்களைச் சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பதற்காக திரைச்சீலைகளைப்போல உள்ளிழுத்துக்கொள்ளும் தன்மையுடைய மாபெரும் பந்தல் அமைக்கப்பட்டது.

கிளாடியேட்டர் போட்டிகள், விலங்குகளின் வேட்டை, போர் வீரர்கள் விலங்குகளோடு போரிடும் நிகழ்ச்சிகள், கடல் போர் விளையாட்டுகள், ரோமானியப் புராணக்கதைகளை அடிப்படையாகக் கொண்ட நாடகங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு பொது நிகழ்வுகளுக்கு கொலஸியம் பயன்படுத்தப்பட்டது. குற்றவாளிகளின் மரண தண்டனையை நிறைவேற்றும் அரங்காகவும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் கிறிஸ்தவர்களைக் கொல்லும் களமாகவும் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

கொலஸியத்தைக் கட்டுவதற்கான நிதி எங்கிருந்து, எப்படிக் கிடைத்தது என்பதற்கு டைடஸின் படையெடுப்புகளைச் சூட்டுகிறார்கள் வரலாற்றாசிரியர்கள். ரோமானிய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த யூதர்களின் நாடான எருசலேத்தின்மீது படையெடுத்துச் சென்று அங்கிருந்து கொண்டுவந்த செல்வம் இதைக் கட்டப் பயன்படுத்தப்பட்டது.

பின்னர் இடைக்காலத்தில் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயமாகவும் இருந்தது. ஒவ்வொரு புனித வெள்ளியின்போதும் கொலாஸியத்துக்கு அருகில் சிலுவையின் வழி எனப்படும் ஊர்வலத்தைத் தொடங்கி வைப்பார் போப்பாண்டவர். ஒரு காலத்தில் ஃபிரஞ்சிபனி, அன்னிபல்டி ஆகிய பிரபலமான ரோமானியக் குடும்பங்களின் கோட்டையாகவும் இருந்தது.

காலப்போக்கில் இயற்கைச் சீற்றங்களான இடி, மின்னல், நிலநடுக்கம் ஆகியவற்றால் பலத்த சேதமடைந்தது கொலஸியம். சலவைக்கல் இருக்கைகளும் அலங்காரப் பொருட்களும் காணாமல் போயின. அடுத்த ஆயிரம் வருடங்களுக்கு கல் சுரங்கம்போல ஆகிப்போனது. மற்ற இடங்களில் நினைவுச் சின்னங்களை அமைப்பதற்காக இங்கிருக்கும் கற்களை எடுத்துச்செல்ல ஆரம்பித்தனர்.

ஒரு காலத்தில் மரண தண்டனைகளை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட கொலஸியம் இன்று மரண தண்டனைக்கு எதிரான போராட்டங்களின் குறியீடாக மாறியுள்ளது. 1948இல் இத்தாலியில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டது. 2000இல் மரண தண்டனைக்கு எதிரான பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து உலகின் எந்த நாட்டிலும் மரண தண்டனை விதிக்கப்பட்டவரின் தண்டனை குறைக்கப்பட்டாலோ அல்லது அவர் விடுதலை செய்யப்பட்டாலோ அல்லது ஏதேனும் ஒரு பகுதியில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டாலோ அது கொலஸியத்தில் பிரதிபலிக்கும் ஏற்பாட்டொன்றைச் செய்துள்ளனர் ரோம் நகரின் அதிகாரிகள்.

எப்போதும் இரவு நேரத்தில் வெண்ணிற விளக்கால் ஒளியூட்டப்படும் கொலஸியம் அன்றைய தினம் மாத்திரம் பொன்னிற விளக்கில் ஒளிரும். சமீபத்திய நிகழ்வொன்றைச் சொல்லவேண்டுமென்றால் அமெரிக்காவின் கனக்டிகட் மாகாணத்தில் மரண தண்டனை நவம்பர் 2012இல் ஒழிக்கப்பட்டது. அன்று இரவு கொலஸியம் பொன்னிறத்தில் ஒளிர்ந்தது.

கடந்த ஜூன் மாதத்தில் கொலஸியம் ஒரு வித்தியாசமான காரணத்துக்காக செய்தியில் வந்தது. இங்கு வருகைபுரிந்த சுற்றுலாப் பயணி ஒருவர் கொலஸியத்தின் சுவரில் தன்னுடைய காதலியின் பெயரைப் பொறித்திருக்கிறார். இதை இன்னொரு சுற்றுலாப் பயணி முதலாமவருக்குத் தெரியாமல் தன்னுடைய அலைபேசியில் படம்பிடித்திருக்கிறார். அதை கொலஸியத்தின் காவல் பணியில் இருந்த காவலர்களிடம் காண்பித்தபோது அவர்கள் பொருட்படுத்தாததால் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இப்போது பெயரைப் பொறித்த சுற்றுலாப்பயணி யார் என்பதைக் கண்டுபிடித்துவிட்டார்கள், ஆனால் அவருடைய பெயரும் மற்ற அடையாளங்களும் வெளியிடப்படவில்லை. இந்த வருடம் மாத்திரம் இவருடன் சேர்த்து நான்கு சுற்றுலாப் பயணிகள் இப்படிப் பிடிபட்டுள்ளனர். கொலஸியத்தைச் சேதப்படுத்தும் வகையில் நடந்துகொண்டால் 15000 டாலர் அபராதத்துடன் 5 வருடம் சிறைத் தண்டனையும் உண்டு.

0

கான்ஸ்டாண்டைன் வளைவு பண்டைய ரோமின் கிறிஸ்தவரல்லாத கடைசி பேரரசரான முதலாம் கான்ஸ்டாண்டைனின் வெற்றியைக் குறிப்பதற்காக பொஆ 312இல் எழுப்பப்பட்டது. பலடைன் குன்றுக்கும் கொலஸியத்துக்கும் இடையே அமைந்திருக்கும் இந்த வளைவின் வழியே பல வெற்றிப் படைகள் பயணித்துள்ளன.

இந்த வளைவு அதன் வடிவியல் நேர்த்திக்காகச் சிறப்புப் பெற்றது. கீழ்ப்பகுதி முழுவதும் சலவைக்கற்களால் ஆனது. மேல்பகுதி செங்கல்லும் சலவைக்கல்லும் சேர்ந்து உருவாக்கப்பட்டது. முதன்மை வளைவுகளின் மேற்பகுதியில் வெற்றியைக் குறிப்பிடும் சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கீழே இருக்கும் சிறிய வளைவுகளில் நதியின் தெய்வங்களும் வேட்டையாடும் காட்சிகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன.

0

ரோமில் பார்க்கவேண்டிய மற்றுமொரு முக்கியமான நினைவுச்சின்னம் ட்ரெவி நீரூற்று. பரோக் காலத்தின் முதன்மைப் படைப்பாக கருதப்படும் இது ரோமின் எண்ணற்ற நீரூற்றுகளுள் சிறந்தது என்பதில் சந்தேகமில்லை. மூன்று முக்கிய சாலைகள் சந்திக்கும் இடத்தில் அமைக்கப்பட்டதால் ட்ரிவியம் அதாவது மூன்று சாலைகளின் சந்திப்பு என்ற பொருள்தரும் வகையில் பெயரிடப்பட்டது.

இதற்கு முன்னர் இந்த இடத்தில் இருந்த நீரூற்று 17ஆம் நூற்றாண்டில் சேதமடைந்தது. அப்போது புதிய நீரூற்று ஒன்றை அமைப்பதற்கான வடிவமைப்புப் போட்டி நடத்தப்பட்டது. அதில் நிக்கோலா சால்வி வெற்றிபெற்று 1732இல் இதை வடிவமைக்கும் பணியைத் தொடங்கினார். 1951இல் அவரின் எதிர்பாராத மரணத்தினால் ஜூஸப் பன்னினி என்பவர் அந்தப் பணியை ஏற்றுக்கொண்டார். 1762இல் இன்னும் பல கட்டடவியலாளர்களின் உதவியோடு நீரூற்றை நிறுவும் பணி நிறைவுபெற்றது.

ரோம் நகருக்கு வருபவர்கள் ட்ரெவி நீரூற்றில் காசுகளை விட்டெறிந்தால் மீண்டும் ரோமுக்கு வரும் வாய்ப்பு அமையும் என நம்பப்படுவதால் தினமும் இங்கு வருகைதரும் லட்சக்கணக்கான பயணிகள் காசுகளை எறிகிறார்கள். ஒவ்வொரு நாளும் 3000 யூரோ மதிப்பிலான காசுகள் சேகரிக்கப்படுகின்றன. இந்தத் தொகை முழுவதும் ஒவ்வொரு வாரமும் சமூக சேவை நிறுவனங்களிடமும் அறக்கட்டளைகளிடமும் சேர்ப்பிக்கப்படுகின்றது.

நிக்கோலா சால்வியின் வடிவமைப்பு அரண்மனையின் முகப்பையும் மனதில்கொண்டு உருவாக்கப்பட்டது. நீரை அடக்குவது என்ற கருப்பொருளை ஒட்டி வடிவமைக்கப்பட்டது என்பதால் ரோமானியப் புராணக் கதைகளின் நாயகர்களும் உருவகப் படைப்புகளையும் ஒருங்கிணைத்திருப்பதைக் காணலாம். ஓஷனஸ் எனப்படும் பூமியைச் சுற்றி ஓடும் நதியின் தெய்வம் ஹிப்போகம்ப் எனப்படும் கடலில் பயணிக்கும் குதிரைகளால் இழுத்துச் செல்லப்படும் தேரில் பவனிவரும் காட்சியைப் பார்க்கலாம். மிகுதியின் தேவதையின் கையிலிருக்கும் பானையில் இருந்து நீர் வழிந்தோடுகிறது. ஆரோக்கியத்தின் தேவதை ஏந்தியிருக்கும் கோப்பையிலிருந்து சிந்தும் நீரைப் பாம்பொன்று பருகுகிறது.

நீரூற்று அமைக்கப்பட்ட காலத்தில் அதன் நீர் பண்டைய ரோமின் அக்வா வெர்ஜைன் எனப்படும் வாய்க்காலின் வழியே நகருக்குள் கொண்டுவரப்பட்டது. சுவைமிகுந்து என்பதால் வாடிகன் நகருக்கு ஒவ்வொரு வாரமும் பல பீப்பாய் தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டது என்றால் பாருங்களேன். ஆனால், அது இப்போது பழங்கதையாகிப்போனது, எல்லாப் பெருநகரங்களின் நீர்நிலைகளைப்போலவும் ட்ரெவி நீரூற்றில் பொங்கும் நீரும் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை.

(தொடரும்)

பகிர:
கார்குழலி

கார்குழலி

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதுபவர். பல்வேறு அரசுத் துறைகளோடும் பன்னாட்டு அரசு சாரா அமைப்புகளோடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடும் நாளிதழ்களோடும் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். துலிகா, பிரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்களில் குழந்தைகளுக்காக நாற்பத்தைந்துக்கும் அதிகமான நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *