தொன்மையான பாரம்பரியமும் வரலாறும் கொண்ட எந்த நகரமும் நிலப்பரப்பும் காலப்போக்கில் பல மாற்றங்களை எதிர்கொள்ளும் என்பதை வரலாறு துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது. எதையும் யாரும் அவரவர் விருப்பப்படி அப்படி அப்படியே தக்கவைத்துக்கொள்ளலாம் என்பதைச் சிறிது காலத்துக்கு வேண்டுமானால் செயல்படுத்தமுடியும். காலமும் வாழ்க்கையும் எவரின் கட்டளைகளைக்கும் கட்டுப்படாது; எவரின் எண்ணங்களையும் நிறைவேற்றாது என்ற பாடத்தையும் வரலாறு அதன் பக்கங்களில் எழுதிச் செல்கிறது.
கிறிஸ்தவத்துடன் எந்தத் தொடர்புமற்ற தற்போது பேகன் என வழங்கப்படும் புறச்சமயத்தைப் பின்பற்றிய பண்டைய ரோம் நான்காம் நூற்றாண்டு முதல் கிறிஸ்தவத்தின் தலைமையிடமாக மாறியது. மத்தியத் தரைக்கடல் பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பேரரசின் தலைநகரமாக இருந்த ரோம் கிறிஸ்தவ மதத்தின் தலைமையிடமாக உருப்பெற்றது. பண்டைய நகரத்தின் கட்டடங்களின்மீது புதிய கிறிஸ்தவ நகரம் எழுப்பப்பட்டது. 15ஆம் நூற்றாண்டு முதல் அந்நகரைப் புணரமைத்ததோடு அதுகுறித்த மக்களின் பார்வையையும் மாற்றியமைக்கும் முயற்சியை மேற்கொண்டனர். ரோம் வரை வந்துவிட்டு ரோமன் கத்தோலிக்க சமயத்தின் தலைமையிடமான வாடிகனைப் பார்க்காமல் போகமுடியுமா?
டைபர் நதியின் கரையிலுள்ள சதுப்பு நிலத்தின் பெயர் ஏஜர் வாடிகனஸ். பண்டைய ரோமானியப் பேரரசின் முக்கிய அரசாங்க அதிகாரிகளின் வசிப்பிடமாக இருந்ததால் சொகுசான மாளிகைகளையும் தோட்டங்களையும் இங்கே அமைத்தனர். பொஆ 64இல் நீரோ மன்னனின் ஆட்சிக்காலத்தில் ஏசுபிரானின் முதன்மைச் சீடரான புனித பீட்டரையும் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றிய வேறு பலரையும் கொன்று வாடிகன் குன்றின் அடிவாரத்தில் புதைத்தனர்.
அதற்குப் பிறகு பொஆ 312இல் பதவியேற்ற பேரரசர் முதலாம் கான்ஸ்டாண்டைன் புனித பீட்டரின் கல்லறையின்மீது தேவாலயம் ஒன்றை நிறுவினார். இதைத் தொடர்ந்து கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய மக்கள் அங்கே புனித யாத்திரை மேற்கொண்டதில் முக்கிய சமயத் தலமாகப் புகழ்பெற்றது. அதைச் சுற்றிலும் தேவாலயத்தின் குருமார்களுக்கும் பணியாளர்களுக்கும் வீடுகள் அமைக்கப்பட்டதால் வணிக மையமாகவும் மாறியது.
பொஆ 9ஆம் நூற்றாண்டில் கொள்ளைக்காரர்கள் புனித பீட்டர் தேவாலயத்தைச் சூறையாடினார்கள். இதனால் நான்காம் லியோ என்ற போப் தேவலாயத்தையும் அதை ஒட்டியுள்ள பகுதிகளையும் சுற்றி 39 அடி உயரமுள்ள சுவரொன்றை எழுப்பினார். 1640ஆம் ஆண்டு வரையிலும் வெவ்வேறு போப்களும் இந்தச் சுவரை விரிவுபடுத்திக் கட்டினர். அது இன்றளவும் வாடிகனுக்கும் போர்கோ மாவட்டத்துக்கும் அரணாக உள்ளது. சுவரில் இருக்கும் ஆறு வாயில்களில் மூன்று மட்டுமே நகருக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் பயன்பாட்டுக்கானவை.
பொஆ 1309இல் போப்பாண்டவரின் தங்குமிடம் பிரான்ஸுக்கு இடம் மாறியதில் சில ஆண்டுகளுக்கு மக்களின் வரவு தடைப்பட்டது. 1377இல் போப்பாண்டவர் மீண்டும் வாடிகனுக்கே திரும்பினார். இதைத் தொடர்ந்த ஆண்டுகளில் பல முக்கிய கட்டடங்கள் இங்கே நிறுவப்பட்டன.
1450இல் ஐந்தாம் நிக்கோலஸ் போப்பாண்டவருக்கான அப்போஸ்தலிக் மாளிகையை நிறுவினார். அது போப்பாண்டவர்களின் நிரந்தர இருப்பிடமானது. ஐந்தாம் நிக்கோலஸ் சேகரித்த புத்தகங்கள் வாடிகனின் நூலகத்துக்கு அடித்தளமானது. 1470இல் நான்காம் ஸிஸ்டஸின் காலத்தில் சிஸ்டைன் தேவாலயத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. கலை-இலக்கிய மறுமலர்ச்சிக் காலத்தைச் சேர்ந்த பொட்டிசெல்லி, பெருஜெனோ போன்ற ஓவியர்களின் கைவண்ணம் தேவாலயத்தின் சுவர்களை அலங்கரித்தது. போப்பாண்டவரின் அன்றாட அலுவல்களைச் செய்ய உதவியாக இருக்கும் ரோமன் கியூரியா எனப்படும் அமைப்பையும் நான்காம் ஸிஸ்டஸ் நிறுவினார்.
0
ரோம் நகருக்கு நடுவே அமைந்த வாடிகன் நகரம் 1929இல் தனி நாடாக அங்கீகாரம் பெற்றது. 121 ஏக்கர் பரப்பளவு மட்டுமே கொண்டிருக்கும் உலகின் மிகச் சிறிய நாடும் இதுதான். ரோமன் கத்தோலிக்க மதத்தின் தலைவரான போப்பாண்டவரின் இருப்பிடம் வாடிகன் நகரில் அமைந்துள்ளது. நகரின் நிர்வாகத்தையும் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் அரசாங்கத்தை ஹோலி சீ என அழைக்கிறார்கள், லத்தீன் மொழியில் புனித இருக்கை என்று பொருள். போப்பின் தலைமையை உலகம் முழுவதுமுள்ள ரோமன் கத்தோலிக்க மதத்தவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். போப் என்ற சொல் கிரேக்க பப்பாஸ், லத்தீன் பப்பா என இரண்டிலும் புழங்கியது. தந்தை என்பது பொருள். போப் ரோமன் கத்தோலிக்கர்களின் அருட்தந்தை. 1929ஆம் ஆண்டில் புனித இருக்கை வாடிகன் நகருக்குள் இருந்து இயங்கத் தொடங்கியது.
வாடிகன் நகருக்கெனத் தனிப்பட்ட தொலைபேசி அமைப்பு, தபால் நிலையம், வானியல் ஆய்வுக்கூடம், வானொலி நிலையம், வங்கி அமைப்பு, மருந்தகம் இவற்றோடு போப்பாண்டவரின் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ள சுவிஸ் காவலர் தனிப்படையும் இங்கே இயங்குகிறது. உணவு, நீர், மின்சாரம், எரிவாயு என எல்லாம் இறக்குமதி செய்யப்படுகிறது. வருமான வரியோ நிதி ஏற்றுமதி இறக்குமதிக்கு கட்டுப்பாடோ கிடையாது.
வாடிகனின் அரசாங்கம் என்னும் முறையில் உலகமெங்கும் இருக்கும் சுமார் நூறு கோடி ரோமன் கத்தோலிக்கர்களின் நன்கொடைதான் இதன் வருமானம். நிதி முதலீட்டில் இருந்தும் தபால்தலைகள், நாணயங்கள், பிரசுரங்கள் ஆகியவற்றின் விற்பனையில் இருந்தும் வருமானம் கிடைக்கிறது. 1980 முதல் நிர்வாக செலவுக்கான நிதி அறிக்கை பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்படுகிறது.
பொஆ 4ஆம் நூற்றாண்டு முதல் 1870 வரையில் ரோமைச் சுற்றிலும் இருந்த பேபல் ஸ்டேட்ஸ் எனப்படும் போப்பாண்டவர் நாடுகளின் தலைநகராக இருந்தது வாடிகன். 1929இல் முசோலினியின் ஆட்சிக்காலத்தில் லாடெரன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதில் வாடிகன் நகரின் தனியுரிமை அங்கீகரிக்கப்பட்டது. ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் போப்பண்டவர் இந்தத் தனியுரிமையினால் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றார். இன்று வரையில் செயலாட்சித் தலைவராகவும் சட்டம் இயற்றும் உரிமை பெற்றவராகவும் நீதித்துறை அதிகாரங்களைப் பெற்றவராகவும் இருக்கிறார்.
1984இல் ரோமன் கியூரியாவின் செயல்பாடு மாற்றியமைக்கப்பட்டு வாடிகன் நகரின் அன்றாட நிர்வாகம் அரசு செயலகத்தால் நியமிக்கப்பட்ட ஐந்து கார்டினல்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கார்டினல் என்பவர் போப்பாண்டவரின் மன்ற உறுப்பினர், போப்பாண்டவருக்கு அடுத்த நிலையில் இருப்பவர். வாடிகன் நகரில் பெரும்பாலும் பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும் மட்டுமே வசிக்கிறார்கள் என்றாலும் செயலகம், உள்நாட்டு நிர்வாகம், வர்த்தகம் ஆகிய சேவைத் தொழில்களில் ஈடுபடும் நூற்றுக்கணக்கான சாதாரண மக்களும் இருக்கிறார்கள்.
ரோமில் இருக்கும் பத்துக்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கும் அல்பன் ஹில்ஸில் உள்ள போப்பாண்டவரின் கோடைக்கால இல்லமான காஸ்டல் காண்டோல்ஃபோவிற்கும் சிறப்பு வெளிநாட்டுச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் உலகின் பல நாடுகளில் வாடிகன் நகரின் தூதரகங்கள் உள்ளன.

வாடிகனில் உள்ள நூலகத்தின் சேகரிப்பில் பல லட்சம் விலைமதிப்புமிக்க தொன்மையான கையெழுத்துப் பிரதிகளும் அச்சுப் புத்தகங்களும் காணப்படுகின்றன. வாடிகனுக்கென லாசர்வாடோர் ரோமானோ என்ற தனிப்பட்ட நாளிதழும் உள்ளது. அங்குள்ள அச்சகத்தில் பழைய திருச்சபை ஜார்ஜியன் மொழி முதல் தமிழ் வரையில் 30 மொழிகளில் புத்தகங்களையும் துண்டுப்பிரசுரங்களையும் அச்சிட முடியும். 1983 முதல் வாடிகனுக்கென தனித் தொலைக்காட்சி அமைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுகின்றன. வாடிகனின் வானொலி சுமார் 40 மொழிகளில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது. 1984ஆம் ஆண்டு வாடிகன் நகர் உலகப் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
(தொடரும்)