Skip to content
Home » உலகின் கதை #21 – பெர்கமான் நூலகம்

உலகின் கதை #21 – பெர்கமான் நூலகம்

பெர்கமான் நூலகம்

அடுத்த உலகப் பாரம்பரியக் களத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்னால் கொஞ்சம் புவியியலைப் புரட்டுவோமா? தற்போது தனித்தனியாகப் பிரிந்திருக்கும் கண்டங்கள் ஒரு காலத்தில் ஒன்றோடொன்று ஒட்டியிருந்த ஒரே நிலப்பகுதியாக இருந்தன. பாஞ்சியா என்றழைக்கப்பட்ட இந்த நிலப்பகுதியைச் சூழ்ந்திருந்த பெருங்கடலின் பெயர் பந்தலஸ்ஸா. சுமார் 200 அல்லது 300 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் பாஞ்சியா துண்டு துண்டாக உடைந்து பிரிந்ததும் இப்போது நாம் பார்க்கும் ஏழு கண்டங்களும் உருவாகின என்கிறார்கள் புவியியல் வல்லுநர்கள். இந்த முடிவுக்கு எப்படி வந்தார்கள் என்பதையும் விளக்குகிறார்கள்.

முதலில் கண்டங்களின் வடிவம் குறித்த விஷயங்களைப் பார்க்கலாம். அவை யாவும் ஒன்றோடொன்று பொருந்தக்கூடிய புதிர் துண்டுகளைப்போல இருப்பதை நீங்கள் கவனித்ததுண்டா? அடுத்த முறை உலக வரைபடத்தைப் பார்க்கும்போது தென் அமெரிக்காவின் கிழக்குக் கரையும் ஆப்பிரிக்காவின் மேற்குக் கரையும் இணைகளைப்போல இருப்பதைப் பாருங்கள்.

அடுத்ததாக, சில கண்டங்களில் காணப்படும் பாறைகள் ஒத்த கனிமங்களால் ஒரே காலகட்டத்தில் ஒரேபோன்ற சூழல் மாற்றத்தாலும் தட்பவெப்ப காரணிகளாலும் உருவானவை. வட அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் அப்பலேச்சியன் மலைத்தொடர் ஐரோப்பாவின் அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்காண்டினேவியப் பகுதி எனக் கடல்தாண்டியும் தொடர்கிறது என்கிறார்கள்.

தென் அமெரிக்காவின் கிழக்குக் கரை, ஆப்பிரிக்காவின் மேற்குக் கரை என இரண்டு கடல்பகுதிகளிலும் மெசோசாரஸ் எனப்படும் நன்னீர் விலங்கினத்தின் புதைபடிவங்கள் கிடைத்துள்ளன. லிஸ்ட்ரோசாரஸ் என்ற பாலூட்டி இனத்தின் தொல் எச்சங்கள் தென்னாப்பிரிக்கா, இந்தியா, அண்டார்டிகா ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. ஆசியாவிலும் வடக்கு ஆப்பிரிக்காவிலும் மட்டுமே இருக்கும் ஒட்டகங்கள் ஒரு காலத்தில் வட அமெரிக்கப் புல்வெளிகளில் மேய்ந்துகொண்டிருந்தன. இதுபோல இன்னும் எத்தனை எத்தனையோ விஷயங்களை அறிவியல் உலகு பட்டியலிடுகிறது.

பாஞ்சியா உடைவதற்கு முன்னர் பாந்தலஸ்ஸாவின் நீரோட்டம் அதிக வேகமில்லாமலும் எளிமையாகவும் இருந்திருக்கும். புவியின் வெப்பம் இப்போதிருப்பதைவிடவும் அதிகமாக இருந்திருக்கும். கோண்ட்வானா, லாரேஸியா என இரண்டு துண்டுகளாக உடைந்தது பாஞ்சியா. இன்றைய தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அரேபியா, மடகாஸ்கர், இந்தியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகியவை புவியின் தென் பகுதியைச் சேர்ந்த கோண்ட்வானாவில் இணைந்திருந்தன. வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகியவை புவியின் வட பக்கத்தில் இருந்த லாரேஸியாவின் பகுதிகளாக இருந்தன. இந்த இரண்டு நிலப்பகுதிக்கும் நடுவே இருந்த கடலின் பெயர் டெதிஸ்.

இன்றைக்குச் சுமார் 30 முதல் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் லாரேஸியா வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா எனப் பிரிந்தாலும் முற்றிலும் தொடர்பற்ற தனித் தனி நிலப்பகுதியாக இருக்கவில்லை. தென்மேற்கு ஆசியாவின் ஒரு முனை ஐரோப்பாவைத் தொட்டும் தொடாமலும் இருப்பதுபோன்ற வித்தியாசமான நிலவமைப்பை நீங்கள் கவனித்திருக்கலாம். இந்த முனையில் இருந்த நாடுதான் ஒரு காலத்தில் ஆசியா மைனர் என்றும் தற்போது துருக்கி என்றும் அழைக்கப்படுகிறது. அடுத்து ஆசியா மைனரின் வரலாற்றைப் பார்க்கலாம்.

0

அக்காடியன் வம்சத்தின் சுட்ட களிமண் பாளங்களில் ஆசியா மைனரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இதை ஹிட்டி என்றும் இங்கு வசித்த மக்களை ஹிட்டைட்டுகள் என்றும் அழைத்தனர். பண்டைய உலகின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாக இருந்தது ஹிட்டி.

ஹிட்டைட்டுகள் தங்களின் நிலப்பகுதியை அஸ்ஸுவா என்று அழைத்தனர். இந்தச் சொல்லில் இருந்து வந்ததுதான் ஆசியா என்ற பெயர்; இதை முதலில் பயன்படுத்தியவர்கள் ரோமானியர்கள். கிரேக்கத்துக்கு கிழக்கே அமைந்த பகுதி என்பதால் அனடோலியா, அதாவது ’உதிக்கும் சூரியனின் நிலப்பகுதி’ என்று கிரேக்கர்கள் பெயரிட்டனர்.

ஆசியா மைனர் என்ற பெயரில் முதலில் அழைத்தவர் பொஆ 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரோஸியஸ் என்ற கிறிஸ்துவ வரலாற்றாசிரியர். ஆசியாவின் மற்ற பகுதிகளில் இருந்து இந்தப் பகுதியை வேறுபடுத்திக் காட்டுவதற்காக இப்படிச் செய்திருக்கலாம். பொஆ 9ஆம் நூற்றாண்டில் பைசாண்டைன் பேரரசைச் சேர்ந்தவர்கள் இந்தப் பகுதியை கிழக்கு நிர்வாகப் பகுதி எனப் பொருள்படும் கிழக்கு தீமா என்ற பெயரில் அழைத்தனர். மாலுமிகள் அந்தப் பகுதிக்கு வைத்த பெயர் லிவாண்ட், அதாவது கடலுக்கு மேலே எழும் நிலப்பகுதி என்பதாகும்.

பண்டைய காலத்தில் பெர்கமான், திரேஸ், சிலிஷே, அஸிரியா, ஐயோனியா, லைகோனியா, ட்ராய் போன்ற பல முக்கியமான பேரரசுகளும் நகரங்களும் ஆசியா மைனர் பகுதியில் நிறுவப்பட்டன. ஐயோனியாவில் எஃபிஸஸ் என்ற பகுதியில் இருந்த ஆர்டெமிஸின் வழிபாட்டுத்தலமும் ஹேலிகார்னஸிஸ் என்ற இடத்தில் அமைந்த அழகான கல்லறையும் பண்டைய காலத்தின் ஏழு உலக அதிசயங்கள் பட்டியலில் இடம்பிடித்தவை என்று பொஆமு 225இல் வாழ்ந்த ஃபிலோ என்ற வரலாற்றாசிரியரின் குறிப்பு தெரிவிக்கிறது.

உலகின் புகழ்பெற்ற பல அறிஞர்களும் ஆசியா மைனர் பகுதியில் பிறந்து வாழ்ந்தவர்கள்தாம். ஐயோனியாவின் மைலெடஸ் நகரில் மேற்குலகின் முதல் தத்துவாசிரியர் என அறியப்படும் தேல்ஸும் அவரின் மாணவர்களான அனாக்ஸிமாண்டரும் அனாக்ஸிமெனஸும் வாழ்ந்தனர். அறிவியல்பூர்வமான வினவலுக்கான வழிமுறையின் தந்தை எனப்படுகிறார் தேல்ஸ். அதேபோல வரலாற்றின் தந்தை என்றழைக்கப்படும் ஹெரோடோடஸ் ஹேலிகார்னஸிஸில் பிறந்தவர். கணித வல்லுனரும் தத்துவாசிரியருமான பிதாகரஸ் இங்கிருக்கும் சேமோஸ் என்ற தீவில் பிறந்தவர். ஹெராக்லிடஸ் என்ற கிரேக்கத் தத்துவ அறிஞர் எஃபிஸஸ் என்ற பகுதியில் வாழ்ந்தார்.

சிலிஷே என்ற பகுதியிலுள்ள டார்ஸஸ் நகரில் பிறந்தவர் திருத்தூதர் பால். இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கூடாரம் அமைப்பதில் கைதேர்ந்தவர்கள். திருத்தூதர் பாலும் இந்தப் பணியைத்தான் செய்துவந்தார். ரோமானியப் பேரரசர் மார்கஸ் ஆரீலியஸின் மருத்துவரான கேலன் என்பவர் பெர்கமானைச் சேர்ந்தவர்.

0

இத்தனை அறிஞர்கள் வாழ்ந்த பகுதியில் ஒரு நல்ல நூலகம் இருந்திருக்கவேண்டுமே எனத் தோன்றுகிறதா? சரியான கேள்விதான். எகிப்தில் இருந்த அலெக்சாண்ட்ரியா நூலகத்துக்கு அடுத்த பெரிய நூலகம் பெர்கமான் நகரில் அமைந்திருந்தது. உலகின் இரண்டாவது பெரிய நூலகம் எப்போது யாரால் அமைக்கப்பட்டது என்ற தகவல் சுவையானது.

கிரேக்கப் பேரரசு அனடோலியா பகுதியில் அமைத்த முக்கியமான நகரங்களுள் முதன்மையானதாக இருந்தது பெர்கமான். பொஆமு 281 முதல் 133 வரையில் பெர்கமானை ஆண்ட அட்டாலிட் வம்சத்தினர் மிகவும் எளிய பின்னணியில் இருந்து வந்தவர்கள். காலப்போக்கில் கிரேக்கத்தின் உறவைத் துண்டித்துக்கொண்டு ரோமுடன் உறவு ஏற்படுத்திக்கொண்டார்கள். தங்களைப் பெருமைமிகு ஆட்சியாளர்களாக நிலைநிறுத்திக்கொள்வதற்காகக் கலையையும் இலக்கியத்தையும் ஊக்குவிக்க முடிவுசெய்தனர்.

குறிப்பாக இரண்டாம் யூமனிஸ் என்ற அரசன் இலக்கியம், கல்வி இரண்டுக்கும் புரவலராக இருந்ததோடு மட்டுமின்றி தலைநகரான பெர்கமானில் இருந்த எதீனாவின் வழிபாட்டுத்தலத்தை அடுத்து நூலகமொன்றை அமைத்தான். நூலகம் நான்கு அறைகளைக் கொண்டிருந்தது. அதிக வெப்பத்தில் இருந்து புத்தகங்களைப் பாதுகாப்பதற்கு நல்ல காற்றோட்டம் தேவை என்பதால் புத்தக அலமாரிகளுக்கும் சுவருக்கும் இடையே 50 சென்டிமீட்டர் அகலத்துக்கு இடைவெளிவிட்டுக் கட்டினார்கள். இந்த அலமாரிகளில் பதனிடப்பட்ட ஆட்டுத்தோலில் எழுதிச் சுருட்டி வைக்கப்பட்ட இரண்டு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

பெர்கமான் நூலகம்
19 ஆம் நூற்றாண்டில் ஜெர்மானிய ஓவியர் வரைந்த பண்டைய பெர்கமோனின் அக்ரோபோலிஸின் காட்சி

நூலகத்துக்கு உலகெங்கிலும் இருந்து அதிகளவில் அறிஞர்களும் எழுத்தாளர்களும் வருகைதந்ததால் எழுதுவதற்கான பொருட்களுக்கும் அதிக தேவை ஏற்பட்டது. இதனால் ரோமானியர்களின் காலத்தில் பதனிடப்பட்ட ஆட்டுத்தோலை உற்பத்தி செய்வதில் முதலிடம் வகித்தது பெர்கமான். ஆங்கிலத்தில் பதனிடப்பட்ட ஆட்டுத்தோல் பார்ச்மெண்ட் (parchment) என்றழைக்கப்படுகிறது. லத்தீன் மொழியின் பெர்கமெனம் என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த சொல். பெர்கமனம் என்பது பெர்கமானைக் குறிக்கும் சொல்லாகும். கிரேக்கத்தில் பெர்கமனஸ் என்றால் உயர்ந்த நகரைச் சேர்ந்த மக்கள் என்று பொருள்.

நூலகங்கள் ஒரு நாட்டின் செல்வத்தையும் கலாசார வளத்தையும் சுட்டும் குறியீடுகள் என்பதால் பெர்கமானிலும் அலெக்சாண்ட்ரியாவிலும் இருந்த நூலகங்களுக்குள் யாரிடம் அதிக அளவில் புத்தகங்கள் இருக்கின்றன என்பதில் போட்டி நிலவியது. இலக்கியங்கள் குறித்த பொருள்விளக்கத்தை எழுதும் அறிஞர்களை நூலகத்தின் பணியமர்த்துவதிலும் அவர்களுக்கு நல்ல ஊதியம் தருவதிலும்கூட போட்டி போட்டுக்கொண்டன. இதனால் நூலக நிர்வாகம், அமைப்பு, எழுத்து, புத்தகம் ஆகியவை குறித்த பல விஷயங்கள் மேம்பட்டன, புதிய கண்டுபிடிப்புளும் நடைமுறைப்படுத்தப்பட்டன.

யூமனிஸ், அவனுடைய சகோதரன் இரண்டாம் அட்டாலஸ் இருவரும் பெர்கமானில் தீவிரப் புத்தகச் சேகரிப்பில் இறங்கினார்கள் என்றால் ஐந்தாம் டாலமி எபிஃபேன்ஸ், அவனையடுத்து ஆட்சிக்கு வந்த நான்காம் டாலமி ஃபிலோமெடர் இருவரும் எகிப்தில் அதேபோன்ற செயலில் இறங்கினார்கள். இரு நாடுகளிலும் அறிஞர்களின் தனிப்பட்ட சேகரிப்புகளில் இருக்கும் புத்தகங்களையும் நூலகங்களுக்குத் தந்துவிடுமாறு கட்டாயப்படுத்தினர். இதனால் அறிஞர்கள் தங்களிடம் இருந்த விலைமதிப்பற்ற புத்தகங்களை அரசாங்கத்துக்குத் தெரியாமல் ஒளித்துவைத்தனர் என நம்பப்படுகிறது.

பெர்கமானில் பொஆமு 138இல் ஆட்சிக்கு வந்த மூன்றாம் அட்டாலஸ் தன்னுடைய காலத்துக்குப் பிறகு பெர்கமான் பேரரசின் நூலகம் ரோமைச் சேரவேண்டும் என்று உயில் எழுதிவைத்தான். நூலகத்தின் பராமரிப்புக்கு ரோமானியப் பேரரசு பொறுப்பேற்றுக்கொண்டது.

பல ஆண்டுகள் கழித்து மார்க் ஆண்டனி பெர்கமானின் புத்தகச் சேகரிப்பு முழுவதையும் தன்னுடைய மனமுவந்த காதலியான ஏழாம் கிளியோபாட்ராவுக்கு தாரைவார்த்தான். கிளியோபாட்ரா எத்தனை பெரிய புத்தக ஆர்வலராகவும் அறிவாண்மை மிக்கவராகவும் இருந்திருந்தால் இதைச் செய்திருப்பான் மார்க் ஆண்டனி. இதையெல்லாம் விடுத்து அவள் கழுதைப்பாலில் தேனையும் பன்னீரையும் கலந்து குளித்தாள் என்பதை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறோம்.

மார்க் ஆண்டனி, கிளியோபாட்ரா இருவரின் மறைவுக்கும் பிறகு அலெக்சாண்ட்ரியா நூலகத்தில் இருந்த பெர்கமான் நூலகத்துக்குச் சொந்தமான புத்தகங்களில் சிலவற்றை அதனிடமே திருப்பித் தந்தான் ஆக்டேவியன் அகஸ்டஸ் சீஸர் என்று எழுதுகிறார் வரலாற்றாசிரியர் ப்ளூடார்க்.

பொஆ 262இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் எஃபிஸஸ் பகுதியும் பெர்கமான் நகரமும் அழிந்தபோது நூலகமும் சேதமடைந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பைசாண்டைன் பேரரசின் ஆட்சிக்காலத்தில் நூலகம் இயங்கிக்கொண்டிருந்தது. அதற்குப் பிறகு என்னவானது என்பது தெரியவில்லை. நூலகத்தில் இருந்த புத்தகங்களை நூலகர்களும் அறிஞர்களும் எடுத்துச் சென்று பாதுகாத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பொஆ13ஆம் நூற்றாண்டில் நகரத்தில் இருந்த மக்கள் இடம்பெயர்ந்து சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 2014இல் தற்போதைய பெர்காமா துருக்கிக்கு அருகே இருக்கும் பண்டைய பெர்கமான் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற்றது.

(தொடரும்)

பகிர:
கார்குழலி

கார்குழலி

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதுபவர். பல்வேறு அரசுத் துறைகளோடும் பன்னாட்டு அரசு சாரா அமைப்புகளோடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடும் நாளிதழ்களோடும் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். துலிகா, பிரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்களில் குழந்தைகளுக்காக நாற்பத்தைந்துக்கும் அதிகமான நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *