பெர்கமான் என்பது கிரேக்க மொழி. பெர்கமம் என்பது ரோமானியர்களின் லத்தீன் மொழியில் வழங்கப்படும் பெயர். மைசியாவைச் சேர்ந்த பண்டைய நகரம் பெர்கமான். இது ஏஜியன் கடலில் இருந்து 16 மைல் தொலைவில் ஓடிய பண்டைய கைகஸ் ஆற்றுக்கு வடக்கே இருக்கும் பள்ளத்தாக்கில் நிற்கும் கேல் குன்றின்மீது அமைக்கப்பட்ட நகரமாகும். தற்போதைய துருக்கியின் பெர்கமா நகரம் இந்தப் பண்டைய நகரத்தின்மீது அமைக்கப்பட்டுள்ளது. பெர்கமான் பொஆமு 5ஆம் நூற்றாண்டு முதலே இருக்கும் நகரம் என்றாலும் ஹெலனிய காலம் எனப்படும் பொஆமு 3ஆம் நூற்றாண்டில் முதல் பண்டைய உலகின் முக்கிய நகரங்களுள் ஒன்றாக விளங்கியது.
அட்டாலிட் வம்சத்தின் இருப்பிடமாகத் திகழ்ந்தது பெர்கமான். அவர்களின் கோட்டையும் அரண்மனையும் குன்றின் உச்சியில் அமைக்கப்பட்டது. பொதுமக்கள் குன்றின் சரிவில் வசித்தனர். ரோமானியர்களின் காலத்தில் நகரம் குன்றின் அடிவாரத்தில் இருக்கும் சமவெளியில் நிறுவப்பட்டது.
பெர்கமாம் நாடு விவசாய வளம்கொழித்தது. அந்த நிலத்தில் வெள்ளிச் சுரங்கங்கள் இருந்தன. இதனால் அட்டாலிட் வம்சத்தைச் சேர்ந்த அரசர்களுக்கும் அவர்களுக்குப் பின் வந்த ரோமானியப் பேரரசுக்கும் நிறைய நிதியை அள்ளித்தந்தது. இந்தக் காரணங்களால் அட்டாலிட் மன்னர்கள் பெர்கமானை உலகின் மிக அழகான நகரமாக மிளிரச் செய்தனர்.
இங்கே பெர்கமான் நூலகத்தை அமைத்ததோடு கிரேக்கத்தில் இருந்து கலைப்பொருட்களை எடுத்துவந்து நகரின் வழிபாட்டுத்தலங்களையும் முற்றங்களையும் அழகுபடுத்தினர். சிற்பங்களையும் ஓவியங்களையும் அலங்காரப் பொருட்களையும் உருவாக்குமாறு உள்நாட்டுக் கலைஞர்களை ஊக்குவித்தனர். பண்டைய காலத்தில் திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரங்களில் முதன்மையானதாக இருந்தது பெர்கமான்.
நகரமுழுவதும் குழாய்களின் வழியாக நீர் விநியோகம் செய்யப்பட்டது. நீர் வடிகால் அமைப்பு பண்டைய மக்களின் பொறியியல் அறிவுக்குச் சான்றாக விளங்குகிறது. ரோமானியப் பேரரசின் ஆசிய மாகாணத்தின் தலைநகராக விளங்கியது. ரோமானியர்களின் காலத்தில் பெர்கமான் பெருநகராக உருப்பெற்றது; முந்தைய அரசர்கள் அமைத்தவற்றோடு புதிய கட்டடங்களையும் அமைத்தனர். இவற்றுள் பெர்கமான் பலிபீடம் பண்டைய பெர்கமானின் முக்கிய நினைவுச்சின்னமாகும்.
பெர்கமான் பலிபீடம் முன்புறத்தில் சுமார் 35 மீட்டர் அகலமும் பக்கவாட்டில் சுமார் 3 மீட்டர் அகலமும் கொண்டது. முன்புறம் இருக்கும் படிக்கட்டு சுமார் 20 மீட்டர் அகலமுடையது. இவற்றில் ஜிகாண்டஸ் எனப்படும் பூதாகரமான உருவம்கொண்ட இனத்துக்கும் ஒலிம்பியா மலையில் வாழும் கடவுளர்க்கும் இடையே நடைபெற்ற ஜிகாண்டோமாக்கி எனப்படும் போர்க்காட்சிகள் சிற்பமாக வடிக்கப்பட்டன. வழிபாட்டுத்தலத்தின் உட்புறச் சுற்றுச்சுவரில் பெர்கமான் நகரை நிறுவியவரான டெலிஃபஸின் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் சித்தரிக்கப்பட்டன. டெலிஃபஸ் கிரேக்கப் புராண வீரரான ஹீரக்ளிஸின் மகன்.
பெர்கமான் பலிபீடம் நகரின் மேல்பகுதியில் அமைந்திருந்த எதீனாவின் வழிபாட்டுத்தலத்தின் பலிபீடமாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. பலிபீடத்தில் காணப்படும் சிற்பங்களின் அடிப்பகுதியில் அவற்றை அமைக்கப் பொருளதவி செய்த புரவலர்களின் பெயரோடு எதீனாவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதைச் சுட்டுகின்றனர். கடவுளர்களின் தலைவனான ஜீயஸ், எதீனா இருவருக்காகவும் அமைக்கப்பட்ட வழிபாட்டுத்தலமாகவும் இருக்கலாம் எனவும் கருதுகிறார்கள். ஆனால் எதையும் அறுதியிட்டுச் சொல்வதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை. பண்டைய காலத்தில் எல்லா வழிபாட்டுத்தலங்களிலும் பலிபீடம் இருக்கும். அதே நேரம் எல்லா பலிபீடங்களும் வழிபாட்டுத்தலங்களோடு தொடர்புடையவையாக இருக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை என்பதையும் குறிப்பிடுகிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.
0
எஃபிஸஸ் நகரம் மேற்கு துருக்கியில் இருந்தாலும் பண்டைய கிரேக்க பேரரசின் முக்கிய அங்கமாக இருந்தது. சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்பு கேய்ஸ்ட்ராஸ் ஆற்றின் கழிமுகத்தில் அமைக்கப்பட்ட நகரம் இது. ஆனால் கழிமுகத்தில் ஏற்பட்ட வண்டல்படிவினாலும் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட இயற்கையான மாற்றங்களினாலும் துறைமுகமும் நகரமும் இடம்பெயர்ந்துகொண்டே இருந்தன என்கிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்கள்.
புதிய கற்காலத்தின் குடியேற்றப் பகுதியாக இருந்த சுகுரிசி குன்று ஒரு காலத்தில் கழிமுகத்தின் தெற்கு எல்லையில் இருந்தது. தற்போது அது நிலத்தின் உட்பகுதியில் அமைந்துள்ளது. இதைக்கொண்டு இயற்கையின் தாக்கத்தால் நிலத்தில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொள்ளலாம்.
எஃபிஸஸ் 9000 ஆண்டுகளுக்கு முந்தைய நகரம் என்ற முடிவுக்குத் தொல்லியல் ஆய்வாளர்கள் எப்படி வந்தனர் என்பது தெரியுமா? ஒரு சின்னஞ்சிறிய 2 செண்டிமீட்டர் நீளமுள்ள தாயத்தைக் கண்டுபிடித்ததில் ஒரு நகரத்தின் தொன்மை ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றது என்று சொன்னால் நம்புவீர்களா? அந்தத் தாயத்து கறுப்பு நிறக் கல்லில் செதுக்கப்பட்டது. அதை அணிபவரை நோயில் இருந்தும் ஆபத்துக்களில் இருந்தும் காக்கும் ஆற்றல்கொண்டது. அதில் செதுக்கப்பட்டிருந்த உருவத்தின் மார்பும் இடைப்பகுதியும் பெரிய அளவில் இருந்தன என்பதால் அது ஒரு பெண்ணின் உருவம் என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால் முகம் தெளிவாக இல்லை. அந்த உருவத்தின் நடுவே ஒரு துளை ஒன்றும் இருந்தது. அந்தக் கல்லின் தன்மையைக் கொண்டு காலத்தைக் கணக்கிட்டனர்.
வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால் எஃபிஸஸ் நகரம் ஆற்றலும் செல்வாக்குமிக்க பெண்களுடன் தொடர்புகொண்டதாக இருந்துவருவதைக் காணலாம். அமேசானியப் பெண்கள் எஃபிஸஸில் வசித்ததாகத்தான் கிரேக்கப் புராணம் குறிப்பிடுகிறது. எஃபிஸஸின் ஆர்டெமிஸ் கடவுள் பண்டைய அனடோலியாவின் தாய்க் கடவுளான கைபெலின் வழித்தோன்றல் என்று நம்பப்படுகிறது. கிறிஸ்தவர்களின் காலத்தில் கன்னி மரியாள் இறுதி நாட்களை இங்கேதான் கழித்தார் என்றும் கூறப்படுகிறது.
இவற்றுள் பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான ஆர்டெமிஸ் வழிபாட்டிடம் உலகின் மிக முக்கியமான செல்வாக்குமிக்க இடமாக திகழ்ந்தது. கிரேக்க, ரோமானியர்களின் காலத்தில் மத்தியதரைக்கடல் பகுதியில் வாழ்ந்த மக்கள் வருடமுழுவதும் இங்கு வந்துபோயினர். சொல்லப்போனால் பன்னாட்டு வங்கியாகவும் இந்த இடம் செயல்பட்டது என்று கூறப்படுகிறது.
பொஆமு 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆண்டிபெட்ராஸ் என்ற கிரேக்க கவிஞர் ஆர்டெமிஸ் வழிபாட்டிடத்தை அழகின் சிகரம் என்றும் ஒளிரும் அதிசயம் என்றும் வருணனை செய்கிறார். பண்டைய உலகின் முதல் சலவைக்கல் வழிபாட்டிடமும் நினவுச்சின்னமும் இதுதான். லிடியாவின் கிரோயஸஸ் மன்னன் தன்னுடைய காலத்தின் மிகச் சிறந்த கட்டடவியலாளர்களையும் சிற்பிகளையும் இதைக் கட்டும் பணியில் ஈடுபடுத்தினான். வழிபாட்டிடம் முழுவதையும் கட்டிமுடிக்க சுமார் 120 ஆண்டுகள் ஆயின.
இப்படிப்பட்ட புகழ்வாய்ந்த நினைவுச் சின்னத்தைத் தீக்கிரையாக்கவேண்டும் என எவரேனும் நினைப்பார்களா? ஆனால் அப்படி எண்ணியதோடு மட்டுமின்றி செயல்படுத்தவும் செய்தான் ஒருவன். அவன் பெயர் ஹெரோஸ்ட்ராடஸ். கிரேக்கத்தைச் சேர்ந்தவன். பொஆமு 356இல் ஆர்டெமிஸ் வழிபாட்டிடத்தை தீயிட்டு அழித்தான். எப்படியாவது புகழ்பெறவேண்டும் என்ற எண்ணத்தில் இந்தச் செயலைச் செய்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
அன்றைய தினம் அலெக்சாண்டர் மன்னனின் பிறந்தநாளாகவும் இருந்தது. வழிபாட்டிடத்தைப் புனரமைக்கத் தேவையான பொருளுதவியைச் செய்வதற்கு முன்வந்தான் அலெக்சாண்டர். ஆனால் எஃபிஸஸின் ஆட்சியாளர்கள் அதை ஏற்க மறுத்தனர். அலெக்சாண்டரின் இறப்புக்குப் பிறகு பொஆமு 356ஆம் ஆண்டுவாக்கில் வழிபாட்டிடத்தைப் புனரமைக்கும் பணி தொடங்கியது.
ஆர்டெமிஸின் வழிபாட்டு மரபு கிழக்கத்திய சமயங்களின் மரபுகளைப் பிரதிபலித்தது. அத்தோடு ஹிட்டைட்டுகளின் குபாபா, ஃபிர்ஜியர்களின் கைபெல் ஆகிய பெண் கடவுளர்களின் தன்மையைக் கொண்டிருந்த காரணத்தாலும் பண்டைய அனடோலியா மக்களின் மனதுக்கு நெருக்கமான கடவுளாகக் கொண்டாடப்பட்டாள் ஆர்டெமிஸ். இந்தப் பரிமாற்றம் எப்போது எப்படி நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் கிரேக்க கடவுளர்களைப்போல இல்லாமல் எகிப்திய கடவுளர்களைப்போலச் சித்தரிக்கப்பட்டாள்.
0
பொஆமு 2ஆம் நூற்றாண்டில் ரோமானியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த எஃபிஸஸ் செழித்து வளர்ந்தது. பண்டைய மன்னர்கள் தங்களின் வலிமையையும் வளத்தையும் செல்வாக்கையும் உலகுக்குப் பறைசாற்ற அற்புதமான நினைவுச்சின்னங்களைக் கட்டினர். இந்தப் பட்டியலில் நூலகங்களும் அடங்கும். குறிப்பாக, செல்சுஸ் நூலகமும் மாபெரும் அரங்கமும் இந்தக் காரணத்துக்காகக் கட்டப்பட்டவை. அலெக்சாண்ட்ரியாவிலும் பெர்கமானிலும் இருந்த நூலகங்களுக்கு அடுத்த இடத்தில் இருந்தது செல்சுஸ் நூலகம். அதன் தன்னிகரற்ற முகப்பும், சலவைக்கல் படிக்கட்டுகளும் தூண்களும் அதனுடைய பழைய வசீகரத்தை எடுத்துக்காட்டுகின்றன.
ரோமானிய ஆட்சிக்குழுவின் உறுப்பினரும் செல்வாக்கும் பெரும்பிரபலமும் கொண்ட செல்சுஸ் என்பவரைக் கௌரவிக்கும் வகையில் அவரது மகன் கேயஸ் அக்விலஸ் என்பவரால் பொஆ 135இல் கட்டப்பட்டது இந்த நூலகம்.
வியப்பூட்டும் கலைநயத்தோடு நூலகத்தின் தேவைகளையும் உள்ளடக்கிய கட்டடமாக வடிவமைக்கப்பட்டது செல்சுஸ் நூலகம். நூலகத்தின் உட்பகுதி செவ்வக வடிவமானது. கையெழுத்துப் பிரதிகளையும் பாபிரஸ் சுருள்களையும் அடுக்கிவைக்க சிறப்புப் பெட்டிகளும் சிறிய மாடங்களும் அமைக்கப்பட்டன. கிட்டத்தட்ட பன்னிரெண்டாயிரத்துக்கும் அதிகமான சுருள்கள் இருந்திருக்கலாம் என்கிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்கள்.
பெரும்பாலும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கண வல்லுநர்கள், அறிஞர்கள் ஆகியோரில் ஒருவரே நூலகராக நியமிக்கப்பட்டனர். நூலகத்துக்கு வருகைபுரியும் பொதுமக்கள் இவர்களின் உதவியோடு தேவையான புத்தகங்களைத் தேடியெடுத்துப் படித்தனர். நூலகத்தின் படிப்பறைகள் சூரிய வெளிச்சத்தைப் பெறுவதற்கு ஏற்ற வகையில் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டன.
நூலகத்தின் இரண்டு பக்கமும் இருக்கும் படிக்கட்டுகளில் இருக்கும் கல்வெட்டுகள் செல்சுஸின் கதையைச் சொல்கின்றன. வெளிப்புறச் சுவரில் இருக்கும் நான்கு பெண் சிலைகளும் ஞானம், அறிவு, நுண்ணறிவு, நற்பண்பு ஆகியவற்றைக் குறிக்கின்றன.
நூலகத்தின் முகப்பு அகலமாகத் தெரிவதற்காக கட்டடவியலாளர்கள் காட்சி யுக்தியொன்றைப் பயன்படுத்தினார்கள். நூலகம் உண்மையில் மூன்று தளங்களைக் கொண்டிருந்தாலும் முகப்பைப் பார்க்கையில் இரண்டு தளங்கள் மட்டுமே இருப்பதுபோலக் காட்சியளிக்கும்.
எஃபிஸஸில் இருக்கும் கன்னி மரியாளின் வசிப்பிடமும் புனித ஜான் தேவாலயமும் 5ஆம் நூற்றாண்டு முதல் கிறிஸ்துவர்களின் முக்கியமான புனிதத்தலமாகின. இவற்றை உள்ளடக்கிய தற்போதைய சேசுக் மாகாணத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் எஃபிஸஸ் நகரத்தின் சிதிலங்கள் கலாசார, வரலாற்றுச் சிறப்புமிக்கவை என்பதால் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
(தொடரும்)