பண்டைய அனடோலியாவின் வடமேற்கில் இருந்த நகரமான டிராய் 4000 ஆண்டுகள் பழைமையானது. கருங்கடலையும் ஏஜியன் கடலையும் இணைக்கும் மர்மரா கடலிலுள்ள டார்டனெல்லஸ் நீரிணையின் ஒருபுறம் டிராயும் மற்றொரு புறம் ஐரோப்பிய நிலப்பகுதியின் கல்லிபோலி தீபகற்பமும் அமைந்திருந்தன. மற்றெந்த கடல்வழிப்பாதையையும்விட இந்தப் பகுதியில் இடைத்தூரம் குறைவானதாக இருந்ததால் ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையே நடைபெற்ற வணிகப் போக்குவரத்துக்குப் பாலமாக இருந்தது டிராய். டிராயைச் சுற்றியிருந்த நிலப்பகுதியை டிரோட் என்று அழைத்தார்கள்.
தொல்பொருள் ஆய்வில் மட்டுமின்றி இலக்கியத்திலும் காலத்தால் அழிக்கமுடியாத இடத்தைப் பிடித்த நகரமொன்று உண்டென்றால் அது டிராயாகத்தான் இருக்கமுடியும். கிரேக்கப் பெருங்காப்பியமான இலியட் கிரேக்கர்களுக்கும் டிராய் நகரைச் சேர்ந்த மக்களுக்குமிடையே நடைபெற்ற டிரோஜன் போரைச் சொல்வது.
செவ்வியல் காலத்தைச் சேர்ந்த கிரேக்க, ரோமானிய கவிஞர்கள், எழுத்தாளர்கள், நாடகாசிரியர்கள் முதல் கடந்த சில நூற்றாண்டைச் சேர்ந்த கலைஞர்களின் கற்பனையையும் டிரோஜன் போர் வெகுவாகத் தூண்டியது. இது குறித்த பல படைப்புகள் இன்றுவரையிலும் தொடர்கின்றன. அதெல்லாம் இருக்கட்டும், டிரோஜன் போர் எப்போது, எப்படித் தொடங்கியது?
டிராயின் அரசர் பிரியாம், அரசி ஹெகுபாவின் மகன் இளவரசன் பாரிஸ் என்னும் அலெக்சாண்ட்ரோஸ். அவன் பிறப்பதற்கு முன் ஹெகுபாவுக்குத் தோன்றிய கனவு நாடே பற்றி எரியும் காட்சியாக விரிகிறது. பின்னால் வரப்போகும் தீமையைக் குறிக்கிறது என்று நம்பும் ஹெகுபா குழந்தை பிறந்தவுடனே கொண்டுபோய் இடா மலையின்மீது போட்டுவிடச் சொல்கிறாள். இயற்கையின் சீற்றத்தில் குழந்தை இறந்துபோகும் என்று நம்பிக்கை கொள்கிறாள்.
எதிர்பாராதவிதமாக, மலைமேல் கிடக்கும் குழந்தைக்கு பெண் கரடியொன்று பாலூட்டுகிறது. பிறகு அந்தப் பகுதிக்கு வரும் செம்மறியாட்டு மேய்ப்பர் ஒருவர் குழந்தையை எடுத்துச் சென்று வளர்க்கிறார். இளைஞனானதும் ஆண்டுதோறும் டிராயில் நடைபெறும் திருவிழாவுக்குச் செல்கிறான் பாரிஸ். அங்கு நடக்கும் குத்துச்சண்டைப் போட்டியில் அரசர் பிரியாமின் மற்ற மகன்களை வெல்கிறான். அவனுடைய பிறப்பின் கதையும் அவன் யார் என்பதும் தெரியவருகிறது. அரசர் பிரியாம் அவனைக் குடும்பத்தில் ஒருவனாகச் சேர்த்துக்கொள்கிறார்.
பாரிஸ் இதற்கு முன்னர் மேய்ப்பனாக வாழ்ந்த காலத்தில் நடந்த நிகழ்வொன்றுதான் கதையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்துகிறது. எரிஸ் என்ற பெண் கடவுள் பூசல்களை உருவாக்குவதில் கெட்டிக்காரர். ’மிகவும் அழகானவளுக்கு’ என்ற சொற்கள் பொறிக்கப்பட்ட தங்க ஆப்பிளைக் கடவுளர்கள் எல்லோரும் கூடியிருக்கும் திருமண விருந்தொன்றில் உருட்டிவிடுகிறாள். தானே அழகானவள் என்று எண்ணிக்கொண்டிருக்கும் ஹெரா, எதீனா, அஃப்ரோடைட் என்ற மூன்று பெண் கடவுள்களும் தங்க ஆப்பிள் தனக்கே சொந்தம் என்று வாக்குவாதம் செய்கிறார்கள். பஞ்சாயத்துக்குக் கடவுளர்களின் அரசனான ஜீயஸிடம் போகிறார்கள். அவரோ அந்த முடிவைச் சொல்வதற்குச் சரியான ஆள் பாரிஸ்தான் எனக் கைகாட்டிவிடுகிறார்.
உடனே மூவரும் பாரிஸைச் சந்திக்கிறார்கள். தன்னைத் தேர்ந்தெடுத்தால் அவனுக்கு அரச பதவியைக் கொடுப்பதாகச் சொல்கிறாள் ஹெரா. வலுவான போரிடும் திறனைத் தருவதாகச் சொல்கிறாள் எதீனா. உலகின் மிக அழகான பெண்ணைக் காதலிக்க உதவுவதாக உறுதி தருகிறாள் அஃப்ரோடைட். எதைவிடவும் அழகியின் உறவைப் பெறுவது முக்கியமாகப் படுகிறது பாரிஸுக்கு. ஒரு வேளை அந்த இளம்வயதில் மற்ற இரண்டும் அத்தனை முக்கியமாகப்படவில்லையோ என்னவோ! இந்த உளவியல் காரணத்தை யாராவது ஆராய்ச்சி செய்தார்களா அதுகுறித்து எழுதியுள்ளார்களா என்பது தெரியவில்லை. இந்த நிகழ்வின்போது அவனுக்கு ஏற்கனவே எனோன் என்ற பெயருடைய மனைவி இருந்தாள்.
தங்க ஆப்பிளை அஃப்ரோடைடிடம் கொடுக்கிறான் பாரிஸ். இதனால் மற்ற இரண்டு பெண் கடவுள்களும் அவன்மீது கோபம் கொள்கின்றனர். அஃப்ரோடைடின் தூண்டுதலில் மனைவியின் பேச்சைக்கூடக் கேட்காமல் டிராயில் இருந்து கிரேக்கத்தின் ஸ்பார்டாவுக்கு பயணமாகிறான் பாரிஸ்.
மெனலஸ் அரசனின் மனைவியான ஹெலன் பேரழகி. அவளை மணந்துகொள்ள எத்தனையோ இளவரசர்கள் வரிசையில் வந்தார்கள். விலைமதிப்புமிக்க ஆடம்பரமான அன்பளிப்புகளை அவளுக்குத் தரக் காத்திருந்தார்கள். ஆனால் சுயம்வரத்தில் மெனலஸ் வெற்றிபெற்று ஹெலனைக் கைப்பிடிக்கிறான். இருவருக்கும் ஹெர்மியானி என்ற மகள் இருக்கிறாள்.
பாரிஸ் ஸ்பார்டாவுக்கு வந்த நேரம் மெனலஸ் அங்கே இல்லை. அஃப்ரோடைட் தன்னுடைய ஆற்றலின்மூலம் ஹெலனை பாரிஸிடம் மனம் மயங்கச் செய்கிறாள். மெனலஸ் இல்லாத சமயத்தில் ஹெலனையும் அவளோடு வேறு பொக்கிஷங்களையும் கவர்கிறான் பாரிஸ். எகிப்து, ஃபீனீசியா வழியாக ஹெலனை டிராய்க்கு அழைத்து வருகிறான்.
செய்தியறிந்த மெனலஸும் ஸ்பார்டா மக்களும் ஆத்திரம்கொள்கிறார்கள். ஹெலனை மீட்டுத் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தைத் தீர்க்க மெனலஸின் சகோதரன் அகமெம்னானின் தலைமையில் ஒன்றுதிரண்டது கிரேக்கப் படை. மெனலஸின் திருமணத்தின்போது நடந்த ஒப்பந்தத்தின்படி கிரேக்கத்தின் வெவ்வேறு அரசர்களும் கரம்கோர்த்து டிராயை முற்றுகையிடுகின்றனர். முதலில் மெனலஸும் பாரிஸும் நேருக்கு நேர் மோதிக்கொள்கிறார்கள். மெனலஸ் பாரிஸை அடித்துத் துவைத்துவிடுகிறான். ஆனால் அஃப்ரோடைட் பாரிஸ் உயிர்பிழைக்க உதவுகிறாள். அடுத்து இரு நாட்டுப் படைகளுக்குமிடையே போர் நடக்கிறது.
ஹெலனின் அழகை யாருக்கும் விட்டுத் தர மறுக்கிறது டிராய். டிராயின் படைக்கு பாரிஸின் மூத்தச் சகோதரன் ஹெக்டார் தலைமை ஏற்கிறான். பத்து நீண்ட வருடங்களுக்குப் போர் நடக்கிறது. பாரிஸ் சில நேரம் தைரியமும் வலிமையும் கொண்டவனாகப் போர் புரிகிறான். சில நேரம் பயங்கொண்டவனாக இருக்கிறான் என்கிறார் ஹோமர்.
இருபுறமும் ஏகப்பட்ட உயிர்ப்பலிகள். தங்களுக்கு அழிவை ஏற்படுத்திய போருக்குக் காரணமான பாரிஸை டிராய் மக்கள் வெறுக்கிறார்கள். இதற்கிடையே பாரிஸுடன் காதல்வயப்பட்டதற்காகத் தன்னுடைய முட்டாள்தனத்தை நொந்துகொள்கிறாள் ஹெலன். கணவனையும் மகளையும் விட்டுப் பிரிந்த துயர் அவளை வாட்டுகிறது.
பாரிஸ் போரில் காயம்பட்டு இறந்துவிடுகிறான். என்றாலும் போர் நின்றபாடில்லை, ஹெலனையும் திருப்பி அனுப்பவில்லை. ஹெலனை பாரிஸின் இன்னொரு சகோதரன் டெய்ஃபோபஸ் மணந்துகொள்கிறான். இப்படியொரு இக்கட்டில் மாட்டிக்கொண்ட ஹெலன் கிரேக்கர்களுக்கு உதவியாக இருப்பதோடு தன்னுடைய கணவன் மெனலஸிடம் டெய்ஃபோபஸை காட்டிக்கொடுக்கிறாள்.
இறுதியில் போர் எப்படி முடிவுற்றது என்பது சுவாரசியமானது. போரில் இருந்து பின்வாங்குவதைப்போல நடிக்கிறார்கள் கிரேக்கர்கள். மரத்தாலான பெரிய குதிரையொன்றை டிராயில் விட்டுச் செல்கிறார்கள். உள்ளே கிரேக்க வீரர்கள் ஒளிந்திருப்பது தெரியாத டிராய் மக்கள் மரக்குதிரையை அவர்களின் கோட்டைக்குள் இழுத்து வருகிறார்கள். குதிரையின் உள்ளே இருக்கும் வீரர்கள் வெளியே வந்து கோட்டையின் கதவைத் திறந்து தங்களின் படை உள்ளே நுழைய உதவுகிறார்கள்.
டிராயின் ஆண்களைக் கொன்று குவித்துவிட்டு பெண்களைத் தூக்கிச் செல்கிறது கிரேக்கப் படை. ஹெலன் மீட்கப்படுகிறாள். மெனலஸ் ஹெலனை மன்னித்து ஏற்றுக்கொள்கிறான். மீண்டும் ஊரெல்லாம் சுற்றி ஒருவழியாக ஸ்பார்டாவைச் சென்றடைகிறார்கள் இருவரும்.
இந்தக் கதையை வெவ்வேறு படைப்பாளர்கள் பல மாற்றங்களுடனும் வெவ்வேறு விவரங்களுடனும் சொல்கிறார்கள். பாரிஸுடன் டிராய்க்குச் சென்றது உண்மையான ஹெலனில்லை என்கிறது ஒரு கதை. அதேபோல மெனலஸ் ஹெலனை உடனடியாக மன்னித்து ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறது மற்றொரு கதை. எது எப்படியோ, கிரேக்க நாடான ஸ்பார்டாவின் அரசியான ஹெலன் இன்றுவரையிலும் அவளை அபகரித்துச்சென்ற பாரிஸின் நாட்டின் பெயரில் ’டிராயின் ஹெலன்’ என அழைக்கப்படுவது முரண்நகை.
0
சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஹோமரின் காப்பியத்தில் குறிப்பிடப்பட்ட டிராய் நகரம் வடமேற்குத் துருக்கியில் புதையுண்டிருக்கலாம் என்ற கருத்தை வரலாற்று அறிஞர்கள் முன்வைத்தபோது பெரிதாக யாரும் செவிசாய்க்கவில்லை.
சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் தொல்பொருள் ஆய்வாளர்கள் டிராயைக் கண்டுபிடித்துத் தோண்டியபோது ஒன்பது நிலையில் வெவ்வேறு காலத்தில் நிறுவப்பட்ட நகரத்தின் தொல்படிவங்கள் அதிகளவில் கிடைத்தன. ஆசியாவின் அனடோலியா பகுதியிலும் மத்தியதரைக்கடல் பகுதியிலும் வளர்ந்த நாகரிகங்கள் எப்போது முதன்முதலில் சந்தித்தன என்பது பற்றித் தெரிந்துகொள்ள இவை உதவின.
துருக்கியின் ஏஜியன் கடற்கரையை அருகே இருக்கும் சமவெளியின் முடிவில் இருக்கும் ஹிஸார்லிக் குன்றில் டிராய் அமைந்திருந்தது என்பதைக் கண்டுபிடித்து இந்தப் பகுதியில் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கினார்கள். தொடர்ந்து நடைபெற்ற ஆராய்ச்சியில் வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல், அதாவது 8000 ஆண்டுகளாக, இந்தப் பகுதியில் மக்கள் வசித்து வருவதை உறுதிசெய்தது. பல்லாயிரமாண்டுகளாக ஆசியப் பகுதிக்கும் ஐரோப்பிய பகுதிக்கும் இடையே நடைபெற்றுவந்த தொழில், வணிகம், அறிவுப்பரிமாற்றம், மக்கள் குடியேற்றம் ஆகியவற்றுக்கு டிராய் ஒரு முக்கிய பாலமாக இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
கடந்த 150 ஆண்டுகளில் 24 அகழ்வாராய்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஒன்பது அடுக்குகளில் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த படிமங்கள் கிடைத்தன. இவை ஒவ்வொரு காலகட்டத்திலும் கோட்டைப் பகுதியிலும் மக்கள் வசிக்கும் பகுதியிலும் நகரம் எப்படி இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள உதவின. கிரேக்கர்களின் காலத்திய நினைவுச்சின்னங்களும் ரோமானியர்களின் நகர நிர்வாகத்தைச் சுட்டும் முக்கியக் கட்டடங்களும் அதிகச் சேதமின்றி கிடைத்துள்ளன.
இந்தப் பகுதியைச் சுற்றிலும் வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய மக்கள் வசித்த பகுதிகள், இறந்தவர்களின் கல்லறைகளோடு அவர்களின் நினைவில் அமைக்கப்பட்ட மேடுகள், கிரேக்க, ரோமானிய மக்கள் குடியமர்ந்த பகுதிகள், பாலங்கள் போன்றவை இருப்பதும் தெரியவந்தது.
கடந்த சில நூற்றாண்டுகளில் இந்தப் பகுதியில் அதிகமான கட்டுமானப் பணிகளோ சீரமைப்புகளோ நடைபெறவில்லை. அப்படி சீரமைக்கப்பட்டவைகளும் அங்கீகரிக்கப்பட்ட முறைகளைப் பின்பற்றியே நடந்துள்ளன என்பதால் இவை நம்பத்தகுந்த ஆதாரங்கள் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
(தொடரும்)