Skip to content
Home » உலகின் கதை #24 – ஹிப்போட்ரோம் விளையாட்டரங்கம்

உலகின் கதை #24 – ஹிப்போட்ரோம் விளையாட்டரங்கம்

ஹாகியா சோஃபியா

துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல் அதன் முக்கியமான கடல்வழித் துறைமுகமாகவும் உள்ளது. இதனால் பண்டைய காலத்தின் பைசாண்டைன், ரோமானிய, ஒட்டோமான் பேரரசுகளின் தலைநகராகவும் விளங்கியது. பைசாண்டியம், கான்ஸ்டான்டினோபிள் எனப் பல்வேறு பெயர்களால் அறியப்பட்டது.

பண்டைய இஸ்தான்புல் ஐரோப்பாவுக்கும் இடையே உள்ள தீபகற்பத்தில் அமைந்திருந்த காரணத்தால் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் பகுதியில் சமயம், கலாசாரம், அரசதிகாரம் ஆகியவற்றை ஒட்டி எழுந்த முரண்பாடான அலைகளை எதிர்கொள்ளவேண்டிய நிலைமையில் இருந்தது, சில நேரம் இவற்றுக்கிடையே பாலமாகவும் இருந்தது.

பொஆமு 657இல் ஆசியாவுக்குப் படையெடுத்து வந்த கிரேக்கத் தலைவரான பைசா என்பவர் இந்த நகரத்தை அமைத்தார் எனக் கூறப்படுகிறது. பொஆ 196இல் ரோமானியப் பேரரசர் செப்டிமியஸ் செவரஸ் தனக்கு எதிராக பைசாண்டியம் நகரத்தைச் சேர்ந்தவர்கள் நடத்திய உள்நாட்டுப் போரினால் ஆத்திரமடைந்து நகரை இடித்துத் தரைமட்டமாக்கினார் எனக் கூறப்படுகிறது. பிறகு நகரை மீண்டும் கட்டியெழுப்பி அதற்கு அகஸ்டா அண்டோனினா எனத் தன்னுடைய மகனின் பெயரைச் சூட்டினார்.

பொஆ 330இல் ரோமானியப் பேரரசரான முதலாம் கான்ஸ்டாண்டைன் இந்த நகரை தன்னுடைய புதிய தலை நகரமாக அறிவித்து ‘புதிய ரோம்’ என்று பெயரிட்டார். அதற்கேற்றாற்போல ஐரோப்பாவில் இருக்கும் ரோம் நகரைப்போலவே இங்கும் ஏழு குன்றுகள் இருந்தன என்பதையும் குறிப்பிடவேண்டும். ஆனாலும் நகரின் காசுகளில் பைசாண்டியம் என்ற பெயர்தான் பொறிக்கப்பட்டது, சிறிது காலத்துக்குப் பிறகே அதை கான்ஸ்டான்டினோபோலிஸ் என மாற்றினார்.

பொஆ 1000இல் கிரேக்கர்கள் கான்ஸ்டான்டினோபிள் நகருக்குப் பயணம் செல்வதைச் சுருக்கமாக ‘எஸ் டென் போலின்’ அதாவது ’நகருக்குப் போனேன்’ எனக் குறிப்பிட்டார்கள். பொஆ 13ஆம் நூற்றாண்டுவாக்கில் நகரின் பெயர் ‘இஸ்டின்போலின்’ என மருவியது. காலப்போக்கில் இதுவும் மருவி ’இஸ்தான்புல்’ என அழைக்கப்பட்டது. 1930இல் அந்தப் பெயரே அதிகாரபூர்வமான பெயராக நிலைத்துவிட்டது.

பழைய இஸ்தான்புல் நகருக்குள் அமைந்திருக்கும் ஏழு குன்றுகள் கடந்த மூவாயிரம் ஆண்டுகளில் தட்டையாகிப்போனாலும் அவற்றின் சரிவுகள் செங்குத்தாகத்தான் உள்ளன. அவற்றில் இருக்கும் மசூதிகளும் வரலாற்று நினைவுச்சின்னங்களும் 1985இல் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டன.

0

நிலநடுக்கம், நெருப்பு, கலவரம், படையெடுப்பு ஆகியவற்றினால் இஸ்தான்புல் பலமுறை சின்னாபின்னமாகியிருக்கிறது. இருந்தாலும் தீவிரமான நகர வளர்ச்சித் திட்டங்கள் இவற்றின் சுவடே தெரியாமல் நகரைச் சீரமைக்க உதவின. நகரின் வரலாற்றுத் தொன்மைவாய்ந்த பகுதிகளில் தெருக்கள் அகலமாக்கப்பட்டுள்ளன. கற்கள் பாவிய சாலைகளில் மரத்தாலான வீடுகள் இருப்பதைக் காணலாம். மற்றொரு புறம் நவீன உலகின் வானுயர்ந்த கட்டடங்களையும் அலுவலக, வணிக வளாகங்களையும் பார்க்கலாம்.

பண்டைய இஸ்தான்புல்லைச் சுற்றிலும் அமைக்கப்பட்ட சுவர் தீபகற்பப் பகுதியை மையப் பகுதியில் இருந்து பிரிக்கிறது. அவை மிகவும் காத்திரமானவை என்பதால் இதுவரையில் ஒரே முறை மட்டுமே எதிரிகள் அவற்றை ஊடுருவ முடிந்தது. 1453இல் ஒட்டோமான் சுல்தான் இரண்டாம் மெஹ்மெத்தின் பீரங்கி துளைத்த சுவர்ப்பகுதி பீரங்கி நுழைவாயில் என அழைக்கப்படுகிறது.

சுமார் 7 மீட்டர் நீளமுள்ள இந்த இரட்டைச் சுவர்களுக்கு நடுவே அகழி தோண்டப்பட்டது. உட்புறச் சுவர் வெளிப்புறச் சுவரைக்காட்டிலும் அதிக உயரமும் அகலமும் கொண்டது. அதில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கோபுரங்களும் தூபிகளும் இன்றளவும் காத்திரமாக நிற்கின்றன. இதற்கு நேர்மாறாக கடல்பகுதியில் அமைக்கப்பட்ட சுவரில் சில பகுதிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

பேரரசர் கான்ஸ்டான்டைன் அமைத்த புதிய ரோமிலோ அதற்கு முந்தைய பண்டைய பைசாண்டியம் நகரிலோ பெரிதாக எதுவும் எஞ்சவில்லை. கான்ஸ்டான்டைன் தூண் அல்லது எரிந்த தூண் என அழைக்கப்படும் கல்தூண் நூரோஸ்மானியே மசூதி வளாகத்தருகே நிற்கிறது. ஆனாலும் அது கான்ஸ்டான்டைனின் காலத்தைச் சேர்ந்தது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை.

ஹிப்போட்ரோம்
ஹிப்போட்ரோம்

செப்டிமியஸ் செவரஸ் கட்டிய ஹிப்போட்ரோம் எனப்படும் குதிரை, தேர் பந்தயங்கள் நடைபெறும் விளையாட்டரங்கத்தை பேரரசர் கான்ஸ்டான்டைன் புதிய நகரை அமைக்கும்போது மாற்றியமைத்தார். அவரைத் தொடர்ந்து வந்த மற்ற ஆட்சியாளர்களும் பொஆ 5ஆம் நூற்றாண்டு வரையிலும் அதை விரிவுபடுத்தி சீரமைப்புச் செய்தனர் எனக் கூறப்படுகிறது. என்றாலும் அதன் தென்புறத்தில் இருக்கும் வளைவான பகுதி மட்டுமே தற்போது எஞ்சி நிற்கிறது. ஹிப்போட்ரோமில் ஒரே நேரத்தில் சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்கள் அமரும் வசதி இருந்தது. பேரரசருக்கென அமைக்கப்பட்ட சிறப்புப் பார்வையாளர் பகுதிக்கு அரண்மனையில் இருந்து வந்துசெல்ல தனிப்பட்ட பாதை இருந்தது.

விளையாட்டரங்கத்தின் மையப்பகுதியில் அலங்காரத் தூண்களும் சதுரத் தூபிகளும் அமைக்கப்பட்டன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவத்திலானவை. இவற்றுள் வெளிர்சிகப்பு நிறச் சலவைக்கல்லாலான தூபி எகிப்திலிருந்து எடுத்துவரப்பட்டது. பாம்புகள் பிணைந்திருப்பது போன்ற தூண் டெல்ஃபியில் இருக்கும் அப்பல்லோவின் வழிபாட்டித்தைச் சேர்ந்தது. மூன்றாவது தூபி சுவராலான தூபி என அழைக்கப்பட்டது, தற்போது சுல்தான் அஹ்மெட் சதுக்கத்தில் காணப்படுகிறது. ஹிப்போட்ரோமில் புகழ்பெற்ற சிற்பிகள் செதுக்கிய கடவுளர்கள், பேரரசர்கள், வீரர்கள், விலங்குகளைச் சித்தரிக்கும் சிலைகளோடு பந்தயங்களில் வெற்றிபெற்ற குதிரைகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோரின் சிலைகளும் காணப்பட்டன.

நான்கு வெவ்வேறு அரசியல் கட்சிகளின் அணிகளும் வீரர்களும் போட்டிகளில் ஈடுபட்டனர். இந்த அணிகளுக்கு நீலம், பச்சை, சிகப்பு, வெள்ளை என வண்ணங்களின் பெயர் சூட்டப்பட்டது. வெற்றிபெறும் குழு அல்லது குதிரையின்மீது பந்தயம் கட்டும் வழக்கமும் இருந்தது. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரிஃபிரியஸ் என்ற குதிரைவீரர் நீலம், பச்சை என இரண்டு அணிகளுக்காகவும் விளையாடினார்.

பந்தயத்தை ஒட்டி எதிரணிகளுக்கிடையே சண்டையும் கலவரமும் நிகழ்ந்தது. இதனால் ஒரு முறை பொதுச்சொத்துகள் அழிக்கப்பட்டன, பெருத்த பொருட்சேதமும் உயிர்ச்சேதமும் ஏற்பட்டது, சுமார் 30000 பேர் பாதிக்கப்பட்டனர். பண்டைய பைசாண்டிய பேரரசர்களின் குறிப்பேட்டில் இந்த நிகழ்வுகள் பற்றிய குறிப்புகள் எழுதப்பட்டிருந்தன.

13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த நான்காம் சிலுவைப்போரின்போது சிலைகளும் கலைப்பொருட்களும் இங்கிருந்து வெனிஸுக்கு எடுத்துச் செல்லப்பட்டன என நம்பப்படுகிறது. அத்தோடு ஹிப்போட்ரோமின் புகழும் மங்கத் தொடங்கியது.

0

ஹாகியா சோஃபியா இஸ்தான்புல்லில் அமைக்கப்பட்ட தேவாலயம், அயசோஃபியா, சான்க்டா சோஃபியா, புனித ஞான தேவாலயம் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. பைசாண்டைன் காலத்தில் கட்டப்பட்ட உலகின் முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னம்.

ஹாகியா சோஃபியா பொஆ 6ஆம் நூற்றாண்டில் பைசாண்டைன் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன் காலத்தில் கிறிஸ்துவ தேவாலயமாக கட்டப்பட்டது. பிறகு ஒவ்வொரு நூற்றாண்டிலும் அந்தப் பகுதி எந்த ஆட்சியாளரின் வசம் இருக்கிறதோ அதைப் பொறுத்து மசூதியாகவும் அருங்காட்சியகமாகவும் பயன்படுத்தப்பட்டது. ஹாகியா சோஃபியா கிறிஸ்தவ தேவாலயமாக அமைக்கப்பட்டபோது இருந்த பல வண்ண மெருகு தளங்களும் மசூதியாகப் பயன்படுத்தப்பட்டபோது அமைக்கப்பட்ட பள்ளிவாயில் தூபிகளும் வெட்டெழுத்துக்களும் இருப்பதைக்கொண்டு இதைப் புரிந்துகொள்ளலாம்.

பொஆ 4ஆம் நூற்றாண்டில் முதலாம் கான்ஸ்டாண்டைன் புறச்சமய வழிபாட்டுத்தலம் ஒன்றின்மீது கிறிஸ்துவ தேவாலயத்தை அமைத்தார். அது மரத்தாலான நினைவுச்சின்னம் என்பதால் அந்தக் காலகட்டத்தில் நடந்த கலவரமொன்றில் எரிந்துபோனது. அதையடுத்து கட்டப்பட்ட தேவாலயமும் மரக் கூரையைக் கொண்டிருந்தது. அந்த முறையும் மீண்டும் தீக்கிரையானது.

ஹாகியா சோஃபியா
ஹாகியா சோஃபியா

பொஆ 6ஆம் நூற்றாண்டில் அதே இடத்தில்தான் ஹாகியா சோஃபியாவைக் கட்டினார் முதலாம் ஜஸ்டினியன். அத்தனை பெரிய கட்டடம் ஆறு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது சாதனை. அதைக் கட்டிய ட்ரல்லஸின் அந்தெமியஸ், மில்லெடஸின் இஸிடோரஸ் இருவரும் பொறியியலிலும் கணக்கிலும் வல்லுநர்கள் என்பதையும் அறிந்துகொள்ளமுடிகிறது. பாரம்பரிய வடிவமைப்போடு அழகிய முன்வாயில்களையும் கொண்ட அமைப்பாக நிறுவப்பட்டது.

ஹாகியா சோஃபியா பேரரசின் ஒவ்வொரு மாகாணத்தின் சிறப்புவாய்ந்த பொருளையும் கொண்டு அமைக்கப்பட்டது. உள்கூரை, தரை இரண்டுக்கான சலவைக்கல்லும் அனடோலியாவில் இருந்தும் சிரியாவில் இருந்தும் வந்தது. சுவரிலும் நிலத்திலும் பாவப்பட்ட செங்கல் வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து எடுத்து வரப்பட்டது. உள்ளே காணப்படும் 104 தூண்களும் எகிப்தின் எஃபிஸஸில் இருக்கும் ஆர்டெமிஸ் வழிபாட்டிடத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. உள்ளே கிறிஸ்தவ நற்செய்தியைச் சித்தரிக்கும் காட்சிகள் வண்ணக் கற்களாலும் உலோகத்தாலும் கண்ணாடியாலும் இழைக்கப்பட்டன.

இப்படிப் பார்த்துப் பார்த்து அமைக்கப்பட்ட கட்டடத்தின் ஒரு புறம் அடுத்த சில வருடங்களில் இடிந்து விழுந்தது. முதலில் பணியாற்றிய இஸிடோரஸின் உறவினர் அதைச் சீரமைத்தார். அவர் பெயரும் இஸிடோரஸ்தான். அடுத்து வந்த நூற்றாண்டுகளில் நினைவுச்சின்னம் இயற்கை சீற்றத்தில் சேதமடைந்தது. இடிந்த பகுதிகள் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டன.

13ஆம் நூற்றாண்டில் நடந்த நான்காம் சிலுவைப் போரில் உள்ளே இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டது. 15ஆம் நூற்றாண்டில் கான்ஸ்டாண்டினோபிள் ஒட்டோமான் துருக்கியர்களின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு மசூதியாகப் புனரமைக்கப்பட்டது. அரசர் இரண்டாம் மெஹ்மெத், அவருடைய மகன் இரண்டாம் பயேஸித் இருவரின் காலத்திலும் தொழுகைக் காலத்தை அறிவிக்கும் கோபுரம், மெக்கா இருக்கும் திசையைச் சுட்டும் உள்ளமைப்பு, தொழுகை நடக்கும் இடம் ஆகியவற்றை அமைத்தனர்.

ஒட்டோமான் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு பதவியேற்ற அரசாங்கம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஹாகியா சோஃபியாவை அருங்காட்சியகமாக மாற்றியமைத்தது. தற்போது மீண்டும் மசூதியாக புதிய வடிவைப் பெற்றுள்ளது. 1985ஆம் ஆண்டில் இஸ்தான்புல்லில் இருக்கும் மற்ற கலாசார வளங்களோடு ஹாகியா சோஃபியாவும் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் இணைக்கப்பட்டது.

(தொடரும்)

பகிர:
கார்குழலி

கார்குழலி

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதுபவர். பல்வேறு அரசுத் துறைகளோடும் பன்னாட்டு அரசு சாரா அமைப்புகளோடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடும் நாளிதழ்களோடும் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். துலிகா, பிரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்களில் குழந்தைகளுக்காக நாற்பத்தைந்துக்கும் அதிகமான நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *