உலகின் மிகப் பழமையான நகரங்களுள் ஒன்று பெட்ரா. பண்டைய ஹெலனிய, ரோமானியப் பேரரசுகளின் காலத்தில் அரேபியப் பேரரசின் முக்கியமான நகரமாக இருந்தது. தற்போதைய ஜோர்டானில் இருக்கும் பெட்ரா வறண்ட பாலைவனத்தின் மேடான சமதளத்தில் நிறுவப்பட்ட நகரம். ஒரு புறம் செங்கடல், மற்றொரு புறம் சாக்கடல் இவற்றுக்கு நடுவே மலைகளும் பாறைகளும் மலையிடுக்குகளும் மலைப்பாதைகளும் சூழ்ந்திருக்கும் நிலப்பகுதியில் அமைந்த நகரம்.
ஹீப்ரூ விவிலியத்தில் பெட்ரா பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அடிமைகளாக இருந்த இஸ்ரேலியர்களை விடுதலை பெறுவதற்காக வழிநடத்திச் சென்ற மோசஸ் பாறையைத் தட்டியதும் நீர் பொங்கி வழிந்தது இந்த இடத்தில்தான். இந்த நீரூற்றை மோசஸின் ஊற்று அல்லது மோசஸின் கிணறு என அழைத்தனர். இந்தப் பள்ளத்தாக்கு வாடி மூஸா அதாவது மோசஸின் பள்ளத்தாக்கு எனவும் அழைக்கப்படுகிறது. தற்போதைய வாடி மூஸா நகரம் பண்டைய பெட்ரா நகரத்துக்கு அடுத்தாற்போல அமைந்துள்ளது.
விவிலியக் காலத்தில் சேலா என்ற பெயரில் அறியப்பட்ட நகரம் கிரேக்கர்களால் பாறை எனப் பொருள்தரும் பெட்ரா என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பொஆமு 12ஆம் நூற்றாண்டில் எடோமைட் எனப்படும் இனக்குழு இங்கு வசித்தது. அதற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு நபடியர்கள் எனப்படும் அரேபிய இனக்குழு இந்தப் பகுதியைக் கைப்பற்றி பண்டைய பெட்ராவைத் தலைநகராக்கியது. அந்தக் காலகட்டத்தில் நகரின் பெயர் ரகீமோ.
நபடியர்களின் காலத்தில் சீனா, எகிப்து, கிரேக்கம், இந்தியா என உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கிடையே சீனப் பட்டு, சமையல் நறுமணப்பொருட்களுக்கான வர்த்தகம் சிறப்பாக நடைபெற்றது. இதற்கான முக்கிய வர்த்தக மையமாகத் திகழ்ந்தது பெட்ரா. அப்போது அங்கே கிட்டத்தட்ட 20,000 பேர் வசித்ததாகக் கூறப்படுகிறது.
பொஆ 2ஆம் நூற்றாண்டில் ரோமானியர்கள் இந்தப் பகுதியை நபடியர்களிடமிருந்து கைப்பற்றினர். ரோமானியப் பேரரசின் அரேபிய மாகாணத்தின் ஒரு முக்கிய பகுதியாக விளங்கியது பெட்ரா. அதற்குப் பிறகு கடல்வழிப் போக்குவரத்துப் பரவலாகத் தொடங்கியது. பண்டைய உலகின் வர்த்தக மையமாக இருந்த பெட்ராவின் வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டது.
பொஆ 6ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நகரம் பெருத்த சேதமடைந்ததால் மக்கள் இங்கிருந்து வெளியேறினர். பொஆ 7ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியப் படையெடுப்பு நடந்தது. பொஆ 12ஆம் நூற்றாண்டில் சிலுவைப்போரில் ஈடுபட்டவர்களின் துருப்புகளின் தங்குமிடம் இங்கே அமைக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் உலகின் கண்களில் இருந்தும் நினைவில் இருந்தும் முற்றிலும் மறைந்துபோனது பெட்ரா.
பொஆ 19ஆம் நூற்றாண்டில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த யோஹான் லுட்விக் பர்க்ஹார்ட் என்பவரின் பார்வையில்பட்ட பிறகே மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தது. இதனால் ‘தொலைந்துபோன நகரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தப் பள்ளத்தாக்கு முழுவதும் சிவப்பு, இளஞ்சிவப்பு, வெளிர்மஞ்சள் எனப் பலவண்ண மணற்பாறைகளாலானது. 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விவிலிய அறிஞரான ஜான் வில்லியம் பர்கன் இந்த நகரத்தை ‘காலத்தைப்போல பழைமைவாய்ந்த இளஞ்சிவப்பு நகரம்’ என்றழைத்தார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் பழைய, புதிய கற்காலங்களைச் சேர்ந்த தொல்படிமங்கள் பெய்தா என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டன. உம்-அல்-பியாரா என்ற இடத்தில் இரும்புக் காலத்தில் அமைக்கப்பட்ட குடியிருப்புகளும் உம்-அல்-அமத் என்ற இடத்தில் செம்பு சுரங்கத் தொழில் நடைபெற்றதற்கான அடையாளங்களும் காணப்பட்டன.
தூண்களும் வளைவுகளும் உடைய சாலைகளும் மூன்று வளைவுகள்கொண்ட நுழைவாயிலும் விளையாட்டரங்கமும் பொதுக்குளியலறைகளும் கிரேக்க-ரோமானிய நகரமைப்பு அறிவுக்குச் சான்றாக உள்ளன. பைசாண்டிய காலத்தைச் சேர்ந்த தேவாலயமும் சிலுவைப்போர்க் காலத்தைச் சேர்ந்த கோட்டைகளும் ஜெபெல் ஹாரூனில் இருக்கும் மசூதிக்கான அடித்தளமும் பெட்ராவின் பழமையையும் காலங்காலமாக அங்கு மனித இனம் தழைத்த உண்மையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இன்னும் பல சான்றுகள் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
0
பெட்ராவின் இடிபாடுகளைக் காண்பதற்குக் கிழக்குத் திசையில் இருக்கும் வாடி அல் சிக் எனப்படும் மலையிடுக்கின் வழியே செல்லும் பாதையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குப் பயணம்செய்யவேண்டும். சுமார் 2000 ஆண்டுகளாக இப்படித்தான் மக்கள் இந்தப் பகுதியை வந்தடைகிறார்கள். பண்டைய காலத்தில் ஒட்டகத்தின்மீது சவாரிசெய்து பாலைவனத்தைக் கடந்தனர், தற்போது கார்களைப் பயன்படுத்துகிறார்கள்.
மலையிடுக்குப் பாதையிலிருந்து வெளியே வருகையில் முதலில் கண்ணில்படுவது அல்-கஸ்னா. எகிப்திய பாரோ ஒருவர் இங்கே தன்னுடைய செல்வங்களுடன் புதைக்கப்பட்டார் என்பதால் கருவூலம் என்ற பொருள்தரும் அல்-கஸ்னா என அழைக்கப்பட்டது. இங்கிருக்கும் செல்வத்தைக் கவர்ந்துசெல்வதற்காக பெடூயின் இனத்தைச் சேர்ந்தவர்கள் முயற்சிசெய்தனர். கல்லறையின் முற்பகுதியில் காணப்படும் தோட்டாவினால் ஏற்பட்ட துளைகளை இன்றும் காணமுடிகிறது.
நபடிய பேரரசைச் சேர்ந்த மன்னன் தன்னைப் புதைப்பதற்கெனக் கட்டிய கல்லறை இப்போது நினைவுச்சின்னமாகிவிட்டது. இப்படிப் பல மன்னர்கள் தான் இறந்தபிறகு புதைக்கப்படுவதற்காக பெட்ராவில் அர்ன் கல்லறை, பட்டு கல்லறை, கொரிந்தியன் கல்லறை, பேலஸ் கல்லறை என்று சுமார் 600 கல்லறைகளை அடுத்தடுத்த காலகட்டத்தில் அமைத்தனர். இந்த மலைப்பகுதியில் ஆங்காங்கே சிறிய நுழைவாயில்கள் காணப்படுகின்றன. இவை அரசாங்கப் பணியில் இருந்த அலுவலர்கள், அமைச்சர்கள், அரசனுக்கு நெருக்கமானவர்கள் போன்றோர் புதைக்கப்பட்ட இடங்களாகும்.
ரோமானியர்களின் காலத்தில் பந்தயங்கள், வீர்களுக்கிடையே நடைபெற்ற சண்டைகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்த இங்கே மிகப்பெரிய அரங்கமொன்று அமைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 8000 பார்வையாளர்கள் அமரக்கூடிய வசதி இருந்தது.
அல்-டேயிர் எனப்படும் துறவியர் மடம் ஒரு குடைவரை நினைவுச்சின்னம். சுமார் 800 படிகளில் ஏறி இந்த இடத்தை வந்தடையவேண்டும். உள்ளே கல்லறைகள் இல்லை என்பதால் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்ட நினைவுச்சின்னமாக இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர் வரலாற்றாசிரியர்கள். பொஆ 4ஆம் நூற்றாண்டில் கிறிஸ்துவர்கள் இதை துறவியர் மடமாகப் பயன்படுத்தினர்.
இந்தப் பாலை நிலத்தில் உருவான நகரில் அணைகளும் நீர்த்தேக்கங்களும் கட்டப்பட்டிருந்தன. நகரில் வசிக்கும் மக்களுக்கு மழை நீரைச் சேகரிக்கவும் குடிநீர் வழங்கவும் சிறப்பாகத் திட்டமிடப்பட்டிருந்தது. மலைகளையும் பாறைகளையும் குடைந்து கால்வாய் அமைத்து ஊற்று நீரை இங்கே கொண்டுவந்து சேர்த்தனர். பாலைவனச் சோலையாக இந்தப் பகுதி இருந்தது என்பதை அகழ்வாராய்ச்சி சான்றுகள் சுட்டுகின்றன. அதனால்தான் முக்கிய வர்த்தக மையமாக இருந்தது.
இந்த நினைவுச்சின்னங்கள் அனைத்தும் பெட்ரா தேசியப் பூங்கா என்ற பாதுகாக்கப்பட்ட எல்லைக்குள் காணப்படுகின்றன. என்றாலும் இயற்கையினால் ஏற்படும் மாற்றங்களினாலும் திடீரென ஏற்படும் வெள்ளத்தினாலும் அவை அழிவுக்குட்படும் ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை யுனெஸ்கோவும் ஜோர்டான் அரசும் மேற்கொண்டுள்ளன. 1985இல் பெட்ரா யுனெச்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் இணைக்கப்பட்டது.
(தொடரும்)
Photos: Al-Khazneh by Jean-Jacques Gelbart and Amos Chapple; Urn Tomb by Bernard Gagnon; en-Nejr Theatre by Douglas Perkins; Ad Deir ‘The Monastery’ by Martin Gray