இன்று போரால் அலைக்கழியும் சிரியாவில் இருக்கும் டமாஸ்கஸ் மத்திய கிழக்காசியாவின் பழமை வாய்ந்த நகரங்களுள் ஒன்றாகும். சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட நகரம் என்பதோடு ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா கண்டங்களை ஒன்றிணைக்கும் நாற்சந்தியாக இருந்ததால் வர்த்தகம், கலை இரண்டுக்குமான பரிமாற்று மையமாக இருந்தது. அதன் ஒப்பற்ற அழகும் செழுமையும் ’கிழக்கின் முத்து’ என்ற சிறப்புப் பெயரைப் பெற்றுத் தந்தது.
‘மல்லிகை நகரம்’ என்ற பெயரோடு ‘நறுமணம்’ எனப் பொருள்தரும் அல்-ஃபாய்ஹா என்ற பெயரும் உண்டு. அதைச் சுற்றியுள்ள பழத்தோட்டங்களும் பூங்காக்களும் இந்தப் பெயருக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. நகரின் சிற்றோடைகளின் கரையில் ஆஸ்பென், பாப்லர் மரங்களும் ஆப்ரிகாட் பழங்களும் பலவிதமான கொட்டைகளைத் தரும் பழங்களின் தோட்டங்களும் ஆலிவ் மரச் சோலைகளும் காய்கறித் தோட்டங்களும் இருந்தன.
நீர்வளமும் புவியியல் அமைப்பும் டமாஸ்கஸின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்தன. ஆன்டை லெபனான் மலைகளில் (Anti-Lebanon) தோன்றி இந்தப் பகுதியில் ஓடிய பரடா என்ற ஆற்றின் வளத்தால் இங்கே ஒரு நகரை அமைத்தனர். கடலில் இருந்து சுமார் 700 மீட்டர் உயரத்தில் இருக்கும் நிலப்பகுதியில் அமைந்துள்ளது டமாஸ்கஸ் நகரம். இந்த முதல் குடியேற்ற நகரம் பழைய டமாஸ்கஸுக்கு கிழக்கே அமைந்தது. நிரந்தரமான நீர்வளத்தால் நகரமும் அதைச் சுற்றியமைந்த பாலைவனச் சோலையும் ஒன்றாகச் செழித்துவளர்ந்தன.
சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே குடியேறியவர்கள் நுட்பமான நீர்வடிகால் அமைப்பை வடிவமைத்தனர். ஆற்று நீர் நகரமுழுவதும் சென்றுசேரத் தேவையான கால்வாய்களையும் குழாய்களையும் அமைத்தனர். இதனால் இந்தப் பகுதி மற்ற பகுதிகளைவிடவும் வேகமாக வளர்ச்சியடைந்தது.
ஆன்டை லெபனான் மலைப்பகுதியில் இருந்து செல்லும் பாதை கிழக்கு முனையில் அமைந்திருந்த டமாஸ்கஸைச் சென்றடைந்தது. இதனால் நெடுந்தூரப் பயணியருக்கான தங்குமிடங்களின் தொடங்குமிடமாகவும் முடியுமிடமாகவும் இருந்தது. இஸ்லாமிய சமயத்தின் பரவலுக்குப் பிறகு மெக்கா, மெதினா புனித நகரங்களுக்குப் பயணம் செல்லும் பாதையாகவும் இருந்தது.
10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புவியியல் வல்லுநரான அல்-மக்திஸி என்ற அரேபியர் நிறைய பயணங்களை மேற்கொண்டவர். ‘பூவுலக சொர்க்கம்’ என்று அவர் பட்டியலிட்ட நான்கு நகரங்களுள் ஒன்று டமாஸ்கஸ். 1867இல் டமாஸ்கஸுக்குப் பயணம் மேற்கொண்ட மார்க் ட்வெயின் இப்படி எழுதினார்: ‘பேரரசுகள் எழுவதையும் வளமை பெறுவதையும் பின்னர் நொறுங்கிவிழுந்து அழிவதையும் கொண்டு காலத்தை அளவிடும் சாகாவரம் பெற்றவள் டமாஸ்கஸ்.’
5000 ஆண்டுகளாக மக்கள் தொடர்ந்து வாழும் நகரமாக இருக்கிறது பழைய டமாஸ்கஸ். உலகின் ஒரு சில நகரங்களுக்கு மட்டுமே இப்படியான பெருமை வாய்க்கிறது. சொல்லப்போனால் நகரின் வெளிப்புறத்தில் இருக்கும் ரமத் குன்றில் நடந்த அகழ்வாராய்ச்சிகள் டமாஸ்கஸ் நகரில் சுமார் 10000 முதல் 12000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே மக்கள் வசித்துவருவதைச் சொல்லுகின்றன. அராமிய இனத்தவர்கள் அங்கு வந்துசேர்ந்த பின்னர் முக்கியத்துவம் பெற்றது.
மத்திய காலத்தில் கைவினைப்பொருட்கள் தயாரிப்பில் முதலிடம் பிடித்தது. உலகத்தின் சிறந்த வாள்களைத் தயாரித்ததோடு பூத்தையல் இழைகளைப் பின்னுவதிலும் கைதேர்ந்த தையல் கலைஞர்களைக் கொண்டிருந்தது. முற்றிலும் எதிரெதிரான விஷயங்களில் தேர்ச்சி பெற்றிருந்தது முரணாகத் தோன்றினாலும் அந்தப் பகுதியில் கைவினைஞர்கள் திறமை கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதற்கு சான்று.
பழைய டமாஸ்கஸ் நகரைச் சுற்றிலும் மத்திய காலத்தில் கட்டப்பட்ட ஐந்து கிலோமீட்டர் நீளமுள்ள சுவரொன்றைக் காணலாம். இந்தச் சுவரின் பெரும்பாலான பகுதிகள் இன்று வரையிலும் அதிக சேதமில்லாமல் உள்ளன. பழைய நகருக்குள் நுழைவதற்கு ஏழு வாயில்கள் உள்ளன. பழைய நகரில்தான் கோட்டை அமைந்துள்ளது, அதனோடு கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டிடங்களையும் இங்கே பார்க்கமுடியும்.
இவற்றைத் தாண்டி உள்ளே வந்ததும் நகரின் குறுகலான தெருக்களையும் சந்துகளையும் கடந்துசெல்லவேண்டும். நகரமுழுவதும் ஒட்டோமான் பேரரசு காலத்தில் கட்டப்பட்ட நேர்த்தியான மாளிகைகளையும் தனிப்பட்ட வீடுகளையும் பார்க்கலாம். சுற்றுலாப் பயணிகளுக்காக இவற்றைத் தற்போது அருங்காட்சியகங்களாகவும் கலைக்கூடங்களாகவும் ஆடம்பர தங்கும் விடுதிகளாகவும் பாரம்பரியமிக்க உணவகங்களாகவும் மாற்றியமைத்துள்ளனர்.

கிழக்காசிய நகரங்களில் மட்டுமே காணப்படும் சூக் எனப்படும் திறந்தவெளி சந்தைகளை டமாஸ்கஸிலும் பார்க்கலாம். வெவ்வேறு விதமான பொருட்களை விற்கும் சூக் உள்ளூர் மக்கள் ஒன்றுகூடும் இடமாகவும் இருந்தது. டமாஸ்கஸில் இருக்கும் சூக்குகள் பழமை வாய்ந்த கிழக்காசிய பாணியில் கட்டப்பட்டவை. ஒரு பொருளை விற்கும் பல கடைகள் அடுத்தடுத்து அமைந்திருக்கும். இந்த அமைப்பு சிக்கலான பாதைகளின் நடுவே கொட்டிக்கிடக்கும் புதையலை நினைவூட்டும். டமாஸ்கஸின் தனிச்சிறப்பு வாய்ந்த உலோகச் சரிகை வேலைப்பாடுகொண்ட அடர்ந்த பட்டுத் துணிகள் முதல் தந்தமும் முத்துச் சிப்பியும் பதிக்கப்பட்டு நுட்பமாகச் செதுக்கப்பட்ட வழவழப்பான மரப் பலகைகள் வரையில் பலவிதமான கலைப்பொருட்கள் இங்கே விற்கப்பட்டன.
கான் என அழைக்கப்படும் வழிமனைச் சத்திரங்கள் நெடுந்தூரப் பயணியருக்கான தங்குமிடங்கள். மத்திய கிழக்காசிய நகரங்களின் மற்றுமொரு முக்கியமான வர்த்தக, கலாசாரப் பரிமாற்றம் நிகழும் மையமாகவும் இவை இருந்தன. உலகின் பல மூலைகளில் இருந்தும் வரும் வணிகர்களும் பயணியரும் இங்கே தங்கி இளைப்பாறி பின் பயணத்தைத் தொடர்ந்தனர்.

கான்கள் பொருட்களைச் சுமந்துவரும் ஒட்டகங்கள் நுழைவதற்கேற்ற வகையில் அகலமான முன்வாயிலையும் மரக்கதவையும் உயரமான வளைவுகளையும் கொண்டிருந்தன. பயணியருக்கான தங்கும் அறைகளோடு வணிகர்கள் தங்களின் பணிகளைச் செய்வதற்கான அலுவலக அறைகளும் ஒட்டகம், குதிரை ஆகியவற்றுக்கான கொட்டில்களும் அமைக்கப்பட்டிருந்தன. முதல் மாடியில் உணவு பரிமாறும் கூடங்கள் இருந்தன. இப்போது கான்கள் கலைக்கூடங்களாகவும் கைவினைப்பொருட்களின் விற்பனைக்கூடங்களாகவும் உணவு விடுதிகளாகவும் புதிய உருப்பெற்றுள்ளன.
0
டமாஸ்கஸ் நகரம் முழுவதும் வெவ்வேறு வரலாற்றுக் காலங்களில் கட்டப்பட்ட 125க்கும் மேற்பட்ட நினைவுச்சின்னங்கள் உள்ளன. பெரிய மசூதி என்றழைக்கப்படும் உம்மயத் மசூதி உம்மயத் காலிஃப் முதலாம் அல்-வலித் என்பவரால் 8ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டது.
டமாஸ்கஸின் புகழுக்கும் சிறப்புக்கும் காரணமான தட்பவெப்பம், நீர்வளம், கனி வகைகள், குளியலறைகள் ஆகிய நான்கோடு ஐந்தாவது காரணமாக இந்த மசூதி விளங்கும் என்று ஒரு பொது அறிவிப்பையும் வெளியிட்டார். மசூதிக்கு அடுத்தாற்போல புகழ்பெற்ற இஸ்லாமியத் தலைவரும் அய்யூபித் சுல்தானுமான சலாதினின் கல்லறை காணப்படுகிறது. கிறிஸ்தவர்களுக்கு எதிரான சிலுவைப்போரில் எருசலேம் நகரைக் கைப்பற்றி இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த வீரர் என அறியப்படுகிறார்.

தற்போது உம்மயத் மசூதி காணப்படும் இடத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக வெவ்வேறு சமயங்களின் வழிபாட்டிடங்கள் அமைக்கப்பட்டிருந்தன என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். பொஆமு 3000மாவது ஆண்டில் இங்கே அரேமிய வழிபாட்டிடம் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. பின்னர் 1ஆம் நூற்றாண்டில் ரோமானியர்களின் காலத்தில் ஜூபிடர் என்ற ரோமானிய கடவுளின் வழிபாட்டிடம் அமைக்கப்பட்டது. கிரேக்கர்களின் ஜீயஸுக்கு இணையானவர். இந்த அடித்தளத்தின்மீதுதான் புனித திருமுழுக்காளரான புனித யோவானின் தேவாலயம் நிறுவப்பட்டது. இந்தப் புனித தலத்தில் தேவாலயத்தின் எஞ்சியுள்ள பகுதிகளும் புனித யோவானின் தலையும் பாதுகாக்கபடும் மாடமும் காணப்படுகிறது.

இஸ்லாமிய கட்டவியலுக்குச் சான்றாக இருக்கிறது உம்மயத் மசூதி. மசூதியின் வளாகம் நாற்கோண வடிவில் அமைந்துள்ளது. பெரிய திறந்தவெளி முற்றத்தின் எல்லாப்புறமும் வளைவுகளும் தூண்களும் காணப்படுகின்றன. தொழுகை நடக்கும் கூடத்தில் இருக்கும் சலவைக்கல் சாளரங்களில் நுட்பமான வேலைப்பாடுகளைக் காணலாம். உட்புறச் சுவரில் திருக்குரானில் சொல்லப்பட்ட மறுமைச் சொர்க்கத்தின் நிலப்பகுதியைச் சித்தரிக்கும் பலவண்ணக் கற்கள் இழைக்கப்பட்டிருந்தன. 15ஆம் நூற்றாண்டில் படையெடுத்த துருக்கியப் பேரரசனான தைமூர் இவற்றையெல்லாம் சேதப்படுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. அரேபியர்கள் அதைச் சீரமைத்தனர் என்றாலும் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் மசூதியின் பெரும்பாலான பகுதிகள் அழிந்தன. மீண்டுமொரு முறை சீரமைக்கப்பட்டாலும் பழைய எழிலும் அழகும் திரும்பவில்லை. ஆனாலும் இன்றளவும் சிறப்பான கட்டடவியலைப் பறைசாற்றும் நினைவுச்சின்னமாக உள்ளது உம்மயத் மசூதி.
டமாஸ்கஸ் நகரில் கிழக்கு மேற்காக ஓடும் நேர் சாலையின் லத்தீன் பெயர் வயா ரெக்டா. ரோமானியர்களின் காலத்தில் அமைக்கப்பட்டது. இந்தச் சாலையின் வழியே நடந்தால் ரோமானிய, கிறிஸ்தவ, இஸ்லாமிய காலத்தைச் சேர்ந்த பல்வேறு நினைவுச்சின்னங்களைக் காணலாம்.
புனித அனனியாஸின் தேவாலயம் பழைய கிறிஸ்தவப் பகுதியில் நேர் சாலையின் முடிவில் அமைந்துள்ளது. தொடக்க காலக் கிறிஸ்தவர்களின் வழிபாட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. டமாஸ்கஸின் முதல் கிறிஸ்தவத் தலைமைக் குருவான இல்லம் இதே இடத்தில்தான் அமைந்திருந்தது. தன்னுடைய இல்லத்தில்தான் புனித பாலுக்கு புனித திருமுழுக்கு செய்வித்து அவரைக் கிறிஸ்தவராக மாற்றினார் அனனியாஸ். பிறகு ரோமானியர்களால் கைதுசெய்யப்பட்டு கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார்.
மற்ற நகரங்களின் கோட்டைகள் பெரும்பாலும் பாதுகாப்புக்காக மலையுச்சிகளில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் டமாஸ்கஸ் கோட்டை நகர் இருக்கும் மட்டத்திலேயே அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. பொஆ 2ஆம் நூற்றாண்டில் துருக்மெனியப் போர்த் தலைவனான அட்ஸிஸ்-பின் உவக் என்பவரால் இதன் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. அவர் கொலையுண்ட பிறகு செல்ஜுக் வம்சத்தைச் சேர்ந்த முதலாம் டுடுஷ் என்பவரால் கட்டிமுடிக்கப்பட்டது. பழைய டமாஸ்கஸின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள கோட்டையில் 12 உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பழைய டமாஸ்கஸின் அழகான சூக் என்ற பெயர்பெற்றது அல்-ஹமிதியா சூக். துணிவகைகள் முதல் கைவினைப்பொருட்கள், நறுமணப்பொருட்கள், இனிப்புவகைகள் என எல்லாவிதமான பொருட்களும் இங்கே கிடைக்கின்றன.

உம்மயத் மசூதிக்கு அருகே இருக்கும் அல்-அசிம் அரண்மனை 1750ஆம் ஆண்டு ஒட்டோமான் ஆளுனரான அசாத் அல்-அசிம் என்பவரால் கட்டப்பட்டது. டமாஸ்கஸ் பாணி கட்டடவியலுக்குச் எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது. வெளியே இருந்து பார்க்கையில் எளிமையாகத் தோற்றமளிக்கும் அரண்மனை உட்புறத்தில் செல்வச்செழிப்பையும் தாராளமாகச் செலவுசெய்து அழகுபடுத்தப்பட்டதையும் காட்டும் வகையில் அமைந்திருந்தது என்று சொல்லலாம். இப்போது நாட்டுப்புற கலைகளின் அருங்காட்சியமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இறைத்தூதர் முகமது நபியின் பேரனான ஹுசைன்-பின்-அலியின் இளையமகள் சய்யிதா ருக்கய்யாவின் அழகான கல்லறைக்கு ஒரு சோகக் கதை இருக்கிறது. மூன்று வயது குழந்தையாக இருக்கையில் கர்பலா போரில் சிறைப்பிடிக்கப்பட்ட அவளுடைய தந்தையின் தலை கொய்யப்பட்டது. தந்தையின் தலையைத் தன்னருகே படுக்கையில் வைத்துக்கொண்டாள் ருக்கய்யா. அதைப் பார்த்து அழுதழுது உயிரைவிட்டாள். ஈரானின் ஷியா கட்டடவியல் பாணியையொட்டி கட்டப்பட்ட இந்தக் கல்லறையில் கூடும் மக்கள் இன்றும் அவளுக்காக கண்ணீர் விடுகிறார்கள். பொம்மை, விளையாட்டுப் பொருள் ஆகிய பரிசுகளைக் கொண்டுவந்து அவளின் அழுகை நிற்பதற்காகக் கல்லறையில் விட்டுச்செல்கிறார்கள். இதற்கான வரலாற்றுச் சான்றுகள் இல்லையென்றாலும் மக்களின் நினைவில் சய்யிதா ருக்கய்யா நிரந்தரமாக இடம்பிடித்துவிட்டாள் என்பதே போதுமானதாக இருக்கிறது.
0
டமாஸ்கஸ் சென்றால் நீங்கள் தவரவிடக்கூடாத ஒரு விஷயம் இருக்கிறது. மாலை நேரங்களில் உணவகங்களில் கதைசொல்லும் ‘அல்-ஹகவடி’களின் கதையைக் கேட்பதன்மூலம் டமாஸ்கஸின் பழமைவாய்ந்த பாரம்பரியத்தை நீட்டிக்கும் ஒரு கண்ணியாக மாறிவிடுவீர்கள்.
ஹெகாயே என்றால் கதை என்று பொருள். ஹகி என்றால் பேசுவது என்று பொருள். கதைசொல்லிக்கு ஹகவடி என்று பெயர். ஹகவடி ஒரு நீண்ட கதையைச் சிறிய அத்தியாயங்களாகச் சொல்வார். முந்தைய நாளின் கதையைச் சொல்லமாட்டார், ஆனால் கதை முடியாமல் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

சில நேரம் புத்தகத்தில் இருந்து கதையைப் படிக்கும்போது ஹகவடி கதையோடு ஒன்றிப்போய் உணர்ச்சிவயப்படுவார். கையில் தட்டையான வாளைப் பிடித்துக்கொண்டு காற்றில் சுழற்றுவார். கதை கேட்போரை அமைதியாக இருக்கச்சொல்வதற்காக அவ்வப்போது மேசையில் ஓங்கியடிப்பார். அல்லது சொல்லவரும் செய்திக்கு சுவைகூட்டவும் அப்படிச் செய்வதுண்டு.
காதல், வஞ்சகம், சண்டை, முரண் எனப் பல கருப்பொருட்களை மையமாகக்கொண்ட கதைகளை ஆண்டாண்டுகாலமாகச் சொல்லும் பாரம்பரியம் எல்லா நாகரிகங்களிலும் உண்டென்றாலும் ‘ஆயிரத்தோரு இரவுகள்’ கதைகள் சொல்லப்பட்ட ஊரில் கதை கேட்பதும் கதை சொல்வதும் இன்றும் பொதுவெளியில் அன்றாடம் நடப்பது ஆச்சரியமூட்டும் விஷயம்தானே.
தொலைக்காட்சியும் கைபேசிகளும் மனிதக் கதைசொல்லிகளின் இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளன. அதனால் இப்போதெல்லாம் ஹகவடி சுற்றுலாப்பயணிகளுக்காக காபி உணவகங்களில் அரேபிய மொழியில் கதைசொல்கிறார். மொழி தெரியாத சுற்றுலாப் பயணிகளும் அதைப் பார்த்து ரசிக்கிறார்கள்.
(தொடரும்)
Photos: Great Mosque of the Umayyads by Martin Gray © Sacred Sites; Ancient City of Damascus by Ron Van Oers © UNESCO; Assad Pasha Khan (caravanserai) by Ko Hon Chiu Vincent; Roman triumphal arch on Damascus Straight Street (Via Recta in Latin) and Al-Hamidiyah Souq by Bernard Gagnon; Great Umayyid Mosque and the Shrine of John the Baptist in the Mosque by Ko Hon Chiu Vincent; Syrian storyteller (Al-Hakawati) Abu Shadi at The Nawfara Café by Peter Aaron © OTTO