வானூர்திகளும் அதிவேக ரயில்களும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அதிகத் தொலைவில் இருக்கும் இடங்களுக்கும் சில மணி நேரங்களில் சென்றுவிட முடிகிறது. பண்டைய மக்கள் முதலில் நிலத்தின் வழியே பல இடங்களுக்குப் பயணம் செய்தனர். பொஆமு 2ஆம் நூற்றாண்டு தொடங்கி சீனா முதல் ஐரோப்பா வரையிலும் செல்லும் 6400 கிலோமீட்டர் தூரமுள்ள பாதையொன்று இருந்தது.
சீனாவில் நெய்யப்பட்ட வெண்பட்டுத் துணிகளோடு நறுஞ்சுவைப் பொருட்கள், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், வாசனைத் திரவியங்கள் போன்றவற்றின் வர்த்தகத்துக்காக உருவான பாதையென்பதால் வரலாற்றாசிரியர்கள் இதை ’பட்டுச் சாலை’ என அழைத்தனர். தற்கால வரலாற்று அறிஞர்கள் இந்த வலையமைப்புக்கு ’பட்டுத் தடங்கள்’ என்று பெயரிட்டுள்ளனர். பொஆ 15ஆம் நூற்றாண்டு வரையிலும் புழக்கத்தில் இருந்த இந்தப் பாதை கடல்வழிப் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பயன்பாட்டில் இருந்து மறையத் தொடங்கியது.
பண்டைய மக்கள் நீண்டதூரக் கடல்வழிப் பயணங்களை மேற்கொள்ளத் தேவையான கலங்களை அமைக்கும் திறனையும் அனுபவ அறிவையும் பெற்றதும் நறுஞ்சுவைப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள், பட்டு ஆகியவற்றின் வர்த்தகத்தின் பொருட்டு நிலம், கடல் இரண்டின் வழியாகவும் பயணங்களை மேற்கொண்டனர். ஸ்பைஸ் ரூட் (Spice Route) எனவும் சில்க் ரோட் எனவும் (Silk Road) அழைக்கப்படும் இந்தத் தடங்கள் கிழக்கையும் மேற்கையும் ஒன்றிணைத்தன. சுமார் 15000 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க உதவின.
கிழக்கில் இருக்கும் ஜப்பான் தீவுகளின் மேற்குக் கரையில் தொடங்கி இந்தோனேசியத் தீவுகளின் வழியாக இந்தியத் தீபகற்பத்தை அடைந்து அங்கிருந்து மத்திய கிழக்கு நாடுகளின் வழியாகவும் செங்கடலின் வழியாகவும் சென்று மத்தியத் தரைக் கடலில் பயணத்தைத் தொடர்ந்து ஐரோப்பாவின் கரைகளைச் சென்று சேர்ந்தனர். இத்தனை நீண்ட வழித்தடத்தை ஒரே ஒருவரோ ஒரே சமயத்திலோ கண்டடைந்துவிடவில்லை. வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த பலரின் கூட்டுமுயற்சியின் பலன் இது.
எடுத்துக்காட்டாக, இந்தியப் பெருங்கடலும் அட்லாண்டிக் பெருங்கடலும் கலக்கும் ஆப்பிரிக்காவின் தென்முனையில் புயலும் கடல் கொந்தளிப்பும் அதிகமாக இருக்கும். அதனால் ஆப்பிரிக்காவின் தென்முனையைக் கடந்து ஐரோப்பாவுக்குச் செல்லும் பாதையைக் கண்டுபிடிப்பதற்குப் பல நூற்றாண்டுகளாகின.
1488இல் அந்தச் சாகசத்தைச் செய்தவர் பர்தலோமியூ டயஸ் என்னும் போர்த்துகீசிய மாலுமி. கடல்காற்று, பெருங்கடல் நீரோட்டம் குறித்த அவருடைய அறிவும் சமயோசிதமான முடிவும் ஆப்பிரிக்காவின் தென்முனையைக் கடந்து இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைய உதவியது.
கரையோரத்தில் வசித்த ஆப்பிரிக்க இனக்குழுக்களின் எதிர்ப்பினாலும் கையில் எடுத்துப்போன உணவு இருப்பு குறைந்ததாலும் இந்தியாவரையிலும் செல்லும் பயணத்தை ஒத்திப்போட்டு சொந்த மண்ணுக்குத் திரும்பினார். டயஸ் அந்தக் கடல்வழியைக் கண்டுபிடித்த பிறகு சரியாகப் பத்தாண்டுகளில் 1498இல் போர்த்துகீசில் இருந்து கிளம்பிய வாஸ்கோடா காமா இந்தியாவின் மேற்குக் கரையில் வந்திறங்கினார்.
ஐரோப்பாவைச் சேர்ந்த மன்னர்களும் பெரும் செல்வந்தர்களும் உயிரைப் பணயம் வைக்கும் இந்தச் சாகசப் பயணங்களை மேற்கொள்ளத் தத்தம் குழுக்களுக்குத் தேவையான பொருளுதவியைச் செய்தனர். இந்தியா, சீனா இரண்டிலும் கொட்டிக்கிடக்கும் பட்டு, ரத்தினக் கற்கள், சுவையூட்டிகள், நறுமணப்பொருட்கள் ஆகியவற்றைத் தங்களின் நாட்டுக்கு எடுத்துவரவேண்டும் என்ற வர்த்தக நோக்கம்தான் முதன்மைக் காரணம்.
அந்தக் காலகட்டத்தில் இந்தப் பொருட்கள் எளிதில் கிடைக்கக் கூடியவையாக இல்லை என்பதோடு மருத்துவ குணங்கள் கொண்டவையாகவும் இறைவழிபாட்டோடு தொடர்புடையவையாகவும் இருந்தன. உணவுப்பண்டங்களுக்குச் சுவை கூட்டுவதோடு அவற்றைப் பதப்படுத்தி நீண்டநாள் பாதுகாத்துவைக்கவும் நறுஞ்சுவையூட்டிகளும் நறுமணப்பொருட்களும் பயன்பட்டன.
பண்டமாற்றோ பணம்கொடுத்துப் பொருளை வாங்குவதோ எதுவாகினும் அந்த வர்த்தகப் பரிமாற்றத்தில் பல விற்பனையாளர்களும் வாங்குவோரும் இருந்தனர், பல வர்த்தக நிலைகளும் இருந்தன. இப்படிப் பல கண்ணிகளின் வழியாக வணிகம் நடைபெற்றதால் இதை வர்த்தகத் தடம் என்கிறார்கள். நறுஞ்சுவையூட்டிகள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றின் வர்த்தகம் நல்ல லாபத்தைக் கொடுத்தது.
சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே இலங்கையின் லவங்கப்பட்டையும் சீனாவின் கருவாய்ப்பட்டையும் இந்த வர்த்தகத் தடத்தின் வழியாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று சேர்ந்தன. இந்தியாவிலும் சீனாவிலும் விளைந்த மிளகும் இஞ்சியும் ரோமானியர்களின் உணவில் முக்கிய அங்கம் வகித்தன. பசிபிக் பெருங்கடலில் இருக்கும் தீவுக்கூட்டத்தில் கிடைக்கும் கிராம்பு, ஜாதிக்காய் போன்ற தரமிக்க நறுஞ்சுவையூட்டிகள் உலகில் வேறெங்கும் இருக்கவில்லை.
கூடவே மருத்துவ குணம்கொண்ட தாவரப் பொருட்கள், தந்தம், பட்டு, பீங்கான், உலோகங்கள், ரத்தினக் கற்கள் போன்றவையும் பெரும் லாபத்தை ஈட்டித் தந்தன. இதனால் உயிருக்கு ஆபத்தான கடல்வழிப் பயணம் மேற்கொள்வதற்குக்கூட யாரும் தயங்கவில்லை. இந்த வர்த்தகத்தைக் கைப்பற்றுவதற்காகவும் பயணம் செல்லும் பாதையை ரகசியமாக வைத்திருக்கவும் தத்தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் ஒவ்வொரு குழுவும் முனைந்ததால் போர்கள் நடந்தன, உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
இந்த வர்த்தகத்தின்மூலம் பண்டங்களின் பரிமாற்றம் மட்டுமே நடைபெற்றது என்று சொல்லமுடியாது. அறிவுப் பரிமாற்றமும் நடைபெற்றது. புதிய இடங்களில் வசிக்கும் புதிய மக்களின் அறிமுகம், அவர்களின் சமயம், மொழி குறித்த புரிதல், அறிவுத்திறன், கலை, அறிவியல் திறன்கள் ஆகியவற்றின் பரிமாற்றம் போன்றவையும் நிகழ்ந்தன. கடல்வழிப் பட்டுச் சாலைகளும் நறுஞ்சுவையூட்டித் தடங்களும் புதிய எண்ணங்கள், தகவல்கள் ஆகியவற்றின் கொதிகலன்களாக இருந்தன. கப்பலில் வணிகப்பொருட்கள் மட்டுமின்றி புத்தம்புது அறிவும் கொள்முதல் செய்யப்பட்டு அடுத்த துறைமுகத்தைச் சென்றடைந்தன. இந்தப் பரிமாற்றங்கள் உலகின் வரலாற்றை மாற்றியமைத்தன.
தெற்கு இஸ்ரேலில் இருக்கும் நெகெவ் பாலைவனத்தின் ஹலூஸா, மாம்ஷிட், அவ்தட், ஷிவ்டா ஆகிய நான்கு நகரங்களும் கஸ்ரா, நெகராட், மக்மல், கிரஃபான் ஆகிய கோட்டைகளும் மோஆ, சஹரோனிம் ஆகிய காரவன் செராய்களும் நறுஞ்சுவையூட்டிகள், வாசனைத் திரவியங்களின் வர்த்தகத் தடத்தின் முக்கிய அங்கமாக விளங்கின. இந்த வர்த்தகத் தடத்தின் முக்கிய பகுதியாக விளங்கிய நபேடிய பேரரசின் தலைநகரான பெட்ராவுக்கு மிக அருகில் இந்தப் பத்து மையங்களும் அமைந்திருந்தன.
பொஆமு 3ஆம் நூற்றாண்டு முதல் பொஆ 4ஆம் நூற்றாண்டு வரையிலும் ஹெலனிய, ரோமானிய காலங்களில் இந்த வர்த்தகம் கொடிகட்டிப் பறந்தது. சுமார் 2000 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தத் தடத்தை வாசனைத் திரவியத் தடம் என்று குறிப்பிடுகிறார்கள் வரலாற்றாசிரியர்கள். அரேபிய தீபகற்பத்திலுள்ள யேமன், ஓமான் பகுதிகளில் இருந்து பெறப்பட்ட சாம்பிராணி, வெள்ளைப்போளம் எனப்படும் மிர்ஹ் ஆகிய பொருட்கள் இந்தத் தடத்தின் வழியாகத்தான் மத்தியத் தரைக்கடல் பகுதிக்கு எடுத்துச்செல்லப்பட்டன.
பண்டைய காலத்தில் இந்த நகரங்களில் அமைக்கப்பட்ட குடிநீர் சேகரிப்பு, வடிகால் அமைப்புகள், நகரமைப்புக் கட்டடங்கள், கோட்டைகள், காரவன் செராய் எனப்படும் வழிமனைச் சத்திரங்கள் ஆகியவற்றின் அடையாளங்களை இங்கே காணமுடிகிறது. கடுமையான பாலைவனத்தில் வாணிபம், விவசாயம் போன்றவற்றை மேற்கொள்வதற்கான மக்களின் இடையறாத முயற்சிக்கும் வெற்றிக்கும் சான்றாக இவை விளங்குகின்றன.
பண்டைய விவசாய நிலங்களின் அமைப்புகளையும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களையும் ஆற்றுப்படுகைகளிலும் மலைச்சரிவுகளிலும் இன்றும் காணமுடிகிறது.
பண்டைய ஹெலெனிய, ரோமானிய உலகில் வாசனைத் திரவியங்களுக்கிருந்த வர்த்தக, சமூக, கலாசார முக்கியத்துவத்தையும் இந்தத் தடங்களின்மூலம் தெரிந்துகொள்ளமுடிகிறது. வாணிபப் பொருட்களோடு பலதரப்பட்ட சிந்தனைகளும் அறிவும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
2005ஆம் ஆண்டில் இந்த நகரங்கள், கோட்டைகள், காரவன் செராய்கள் அடங்கிய பகுதி உலகப் பாரம்பரியங்களின் பட்டியலில் இணைக்கப்பட்டது. மாம்ஷிட் பகுதியில் கட்டப்பட்ட சில முறைசாரா கட்டடங்கள் அகற்றப்பட்டன. இந்தப் பகுதியின் பாதுகாப்பு இஸ்ரேல் அரசாங்க அமைப்புகளின் பொறுப்பில் உள்ளது. இங்கே அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான திட்டம் குறித்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.
(தொடரும்)