Skip to content
Home » உலகின் கதை #28 – பண்டைய பாரசீகத்தின் பெர்சிபோலிஸ் நகரம்

உலகின் கதை #28 – பண்டைய பாரசீகத்தின் பெர்சிபோலிஸ் நகரம்

பெர்ஸிபோலிஸ்

ஆசியாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஈரான் நாடு பண்டைய காலத்தில் பாரசீகம் என அழைக்கப்பட்டது. தெற்கு ஈரானில் தற்போது ஃபார்ஸ் என அழைக்கப்படும் பகுதிதான் பண்டைய காலத்தில் பெர்ஸிஸ், பார்ஸ், பார்ஸா எனப் பல பெயர்களால் அறியப்பட்டது. சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் பார்ஸா என்ற இந்தோ-ஐரோப்பிய நாடோடி இனமொன்று இந்தப் பகுதிக்கு வந்து குடியமர்ந்தது. அதனால் அந்தப் பெயரால் அறியப்பட்டிருக்கலாம்.

நாளடைவில் பண்டைய கிரேக்கர்கள் ஈரானியப் பீடபூமி முழுவதையும் பாரசீகம் அல்லது பெர்சியா என அழைத்தனர். ஆனால் அந்தப் பகுதியில் வசித்த மக்கள் தங்கள் நாட்டுக்கு ‘ஆரியர்களின் நாடு’ என்ற பொருள்தரும் ஈரான் என்ற பெயரையே சூட்டினர். 1935இல் அந்தப் பெயரே அதிகாரபூர்வமான பெயராகவும் ஆனது.

பாரசீகத்தை மெடியன், அகமெனிட், செலூசிட், பார்தியன் ஆகிய பல வம்சாவளியினர் ஆட்சிசெய்தனர். பாரசீகப் பேரரசை முதலில் அமைத்தவர் பொஆமு 550ஆம் ஆண்டு முதல் 300 வரையில் ஆட்சிசெய்த அகமெனிட் வம்சத்தைச் சேர்ந்த மாபெரும் சைரஸ் அல்லது இரண்டாம் சைரஸ் என்ற பேரரசர். அதனால் அதை அகமெனிட் பேரரசு என்றும் அழைத்தனர்.

இரண்டாம் சைரஸ் பொஆமு 590 முதல் 580 வரையிலான காலகட்டத்தில் பிறந்தவர். சரியான ஆண்டு தெரியவில்லை. சைரஸின் தந்தையின் பெயர் காம்பிஸிஸ். பெர்ஸிஸ் என்ற சிறிய நாட்டின் குறுநில மன்னர். மெட் நாட்டின் பேரரசரான அஸ்டியேஜஸுக்கு கப்பம் கட்டி வந்தார். அஸ்டியேஜஸ் தன் மகளை காம்பிஸிஸுக்குத் திருமணம் செய்துகொடுத்தார், அவர்களின் மகன்தான் சைரஸ். சைரஸின் பிறப்பும் வாழ்க்கையும் ஒரு புராணக்கதையை ஒத்திருந்தது.

பொஆமு 559இல் கொடுங்கோலரான தாத்தாவுக்கு எதிராகப் புரட்சிசெய்து மெட் பேரரசைக் கைப்பற்றினார் சைரஸ். பிறகு நபோனிடஸ் மன்னரை வெற்றிகொண்டு அண்டை நாடான பாபிலோனியாவை வெற்றிகொண்டு நியோ-பாபிலோனியப் பேரரசைத் தன்னுடைய பேரரசோடு இணைத்தார். இதனால் மெசபடோமியா மட்டுமின்றி ஏற்கெனவே பாபிலோனியப் பேரரசின்கீழ் இருந்த சிரியா, பாலஸ்தீனம் ஆகிய பகுதிகளும் அகமெனிட் பேரரசோடு இணைக்கப்பட்டன. மெசபடோமியா, எகிப்தின் நைல் நாகரிகம், இந்தியாவின் சிந்து சமவெளி நாகரிகம் எனப் பண்டைய உலகின் மூன்று முக்கிய நாகரிகங்களைத் தன்னுடைய பேரரசின்கீழ் ஒருங்கிணைத்த பெருமையைப் பெற்றார் சைரஸ்.

அகமெனிட் மன்னரின் முடிசூட்டுதல், 100 கால் மண்டபம் தென்மேற்கு வாயிலில் வீரர்களின் புடைப்புச் சிற்பம்

539இல் செதுக்கப்பட்ட களிமண் உருளை ஒன்றில் சைரஸ் மன்னரைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை வடித்திருக்கிறார்கள். அரச பரம்பரையில் பிறந்தவர் என்பதை மெசபடோமியாவில் கிடைத்த குறிப்புகள் சொல்கின்றன. மெட் நாட்டைக் கைப்பற்றினாலும் அந்த ஆட்சியாளர்களின் மரபுகளைப் பின்பற்றினார். மெட், பாரசீகம் என இரு நாட்டு மக்களையும் ஒன்றுபோலவே நடத்தினார். சகிப்புத்தன்மையோடு சீரிய ஆட்சியாளராக இருந்த காரணத்தால் பண்டைய பாரசீக மக்கள் அவரைத் தங்களின் தந்தை என அன்புடன் அழைத்தனர் எனக் கூறப்படுகிறது.

ஸீனோஃபோன் என்ற கிரேக்கர் சைரஸின் வாழ்க்கைக் கதையை சைரோபீடியா என்ற புத்தகமாக எழுதினார். அந்தப் புத்தகத்தில் கிரேக்க அரசர்கள் சைரஸை ஒரு முன்மாதிரியாகக்கொண்டு நடக்கவேண்டும் எனக் குறிப்பிட்டார். அவருடைய காலத்திலும் அவருடைய சந்ததிகளின் காலத்திலும் மட்டுமில்லாது இன்று வரையிலும் கொண்டாடப்படுகிறார் மாபெரும் சைரஸ். 1971ஆம் ஆண்டில் மாபெரும் சைரஸ் ஆட்சிப்பொறுப்பேற்ற 2500வது ஆண்டுவிழாவைக் கொண்டாடியது ஈரான் அரசு என்றால் அவர் எத்தனை சிறப்புப் பெற்றவர் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

0

அகமெனிட் பேரரசின் நான்காவது அரசர் முதலாம் டேரியஸ். அவருடைய ஆட்சிக்காலத்தில் பாரசீகப் பேரரசின் வடக்கு எல்லை மேற்கு ஆசியாவில் இருக்கும் காகஸஸ் முதல் ஐரோப்பாவின் பண்டைய பால்கன் தீபகற்பம், மத்திய ஆசியாவில் இருக்கும் கருங்கடல் வரையிலும் பரவியிருந்தது. கிழக்கில் சிந்து சமவெளியைத் தொட்டது. தெற்கு எல்லை ஆப்பிரிக்காவின் எகிப்து, லிபியா ஆகிய பகுதிகளை உள்ளடக்கியிருந்தது.

டேரியஸின் தந்தை ஸட்ரப், அதாவது பாரசீகப் பேரரசின் மாகாண ஆளுநராக இருந்தவர். பார்தியா என்ற பகுதிக்குப் பொறுப்பு வகித்தார். அரச பரம்பரைக்கு நேரடி வாரிசு இல்லையென்றாலும் ஒரு வகையில் உறவுக்காரர். இரண்டாம் சைரஸின் மகன்களின் இறப்புக்குப் பின்னர் தன்னையே மன்னராக அறிவித்துக்கொண்டார் டேரியஸ். அவை இயற்கையான மரணங்களல்ல, பெரும் சதியினால் செய்யப்பட்ட கொலைகள் என வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்தக் கொலைகளால் மாகாண குறுமன்னர்களும் மக்களும் டேரியஸைத் தங்களின் அரசராக ஏற்றுக்கொள்ளவில்லை, அவரை எதிர்த்துப் புரட்சிசெய்தனர். வலிமையைப் பயன்படுத்தி தன்னுடைய ஆட்சியை நிலைநாட்டினார். ஒன்பது எதிர்ப்பாளர்களைப் பத்தொன்பது போரில் எதிர்கொண்டு அவர் வெற்றிபெற்றதாகச் சொல்லப்படுகிறது. தன்னுடைய பேரரசின் எல்லைகளை வலுப்படுத்தவும் எதிரிகளின் ஊடுறுவலைத் தடுக்கவும் பல போர்களை மேற்கொண்டான் டேரியஸ்.

எது எப்படியோ, நாளடைவில் அகமெனிட் வம்சத்தின் மற்றுமொரு சிறப்பான ஆட்சியாளராக டேரியஸ் உருப்பெற்றார் என்பதை எல்லோரும் ஒருமனதாக ஒத்துக்கொள்கின்றனர். பேரரசு முழுவதையும் ஸட்ரபி எனப்படும் மாகாணங்களாகப் பிரித்து கப்பம் கட்டச் செய்தான். வெளிநாட்டு வாணிபத்தையும் வர்த்தகத்தையும் விரிவுபடுத்தினார். தன்னுடைய பேரரசு முழுவதும் ஒரே பணத்தைச் செலாவணியாக அறிவித்தார், ஒரே மாதிரியான அளவைகளை நடைமுறைப்படுத்தினார்.

பேரரசு முழுவதையும் இணைக்கும் நெடுஞ்சாலைகளையும் கடல்வழிகளையும் அமைத்தார். ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று கண்டங்களையும் ஒன்றிணைக்கும் பாதையை உருவாக்கிய பெருமைகொண்டார். அராமிக் மொழியைத் தேசிய மொழியாக அறிவித்தார். உலகின் முதல் தபால் சேவையை அறிமுகப்படுத்தியதும் டேரியஸ்தான் எனக் கூறப்படுகிறது.

மேற்கு ஈரானில் இருக்கும் பெஹுஷ்டுன் மலையில் பல மொழிகளில் செதுக்கப்பட்ட கல்வெட்டில் மன்னரின் நற்குணங்களும் சாதனைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. க்யூனிஃபார்ம் எனப்படும் சித்திர எழுத்தைப் புரிந்துகொள்ள இந்த எழுத்துகள் உதவியாக இருந்தன.

அகமெனிட் அரசர்கள் சொராஸ்ட்ரானிய சமயத்தைப் பின்பற்றினார்கள். சொராஸ்டர் அல்லது சரதுஸ்ட்ரா என அழைக்கப்பட்ட இறைத்தூதரால் நிறுவப்பட்ட சொராஸ்ட்ரானியம் உலகின் பழமையான சமயங்களுள் ஒன்று. பல தெய்வ வழிபாட்டில் இருந்து விலகி ஒரே கடவுளை வழிபடுவதைக் கோட்பாடாகக்கொண்டது.

பெர்சிபோலிஸில் சொராஸ்ட்ரிய சமயத்தின் சின்னம் (ஃபரவஹர்)

மாபெரும் சைரஸ் சொராஸ்ட்ரிய சமய விதியான அஷாவின்படி உண்மை, நேர்மை என்ற கோட்பாடுகளை மையமாகக்கொண்டு ஆட்சிசெய்தார். வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த மக்கள் அவரவர் மொழியைப் பேசவும் சமயத்தைப் பின்பற்றவும் அனுமதித்தார். பாபிலோனில் சிறைவைக்கப்பட்ட யூதர்களை விடுவித்து எருசலேமுக்குச் செல்ல அனுமதித்தார் என ஹீப்ரூ புனிதநூல்கள் அவரைப் புகழ்கின்றன.

சைரஸ் மட்டுமின்றி அவரைத் தொடர்ந்து அகமெனிட் பேரரசை ஆட்சிசெய்த டேரியஸ் உள்ளிட்ட எல்லா மன்னர்களும் மக்கள் அவரவர் சமயத்தையும் சமூகப் பழக்கங்களையும் பின்பற்றும் சுதந்திரத்தை வழங்கினர். இந்தக் காலகட்டத்தை பாக்ஸ் பெர்சிகா அல்லது பாரசீக அமைதி என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

0

பாரசீகப் பேரரசின் தலைநகராக விளங்கிய பார்ஸா நகரம் பொஆமு 518இல் முதலாம் டேரியஸ் மன்னரால் நிறுவப்பட்டது. பெர்ஸிபோலிஸ் என்ற பெயர் கிரேக்கர்களால் சூட்டப்பட்டது. புல்வார், கோர் ஆகிய இரண்டு நதிகளும் சங்கமிக்கும் மர்வ்தெஷ்ட் சமவெளியில் அமைக்கப்பட்டது பெர்ஸிபாலிஸ். நகரைச் சுற்றிலும் இரானியப் பீடபூமியின் ஸர்கோஸ் மலைத்தொடரைக் காணலாம்.

எதிரிகளின் படையெடுப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக பண்டைய காலத்தில் தலைநகரங்களும் முக்கியமான நகரங்களும் குன்று அல்லது உயரமான பகுதியில் அமைக்கப்பட்டன. பெர்ஸிபோலிஸ் நகரமும் அப்படியொரு மேடான பகுதியில் அமைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதி இயற்கையாகவே மேடாக அமைந்தது, மற்ற பகுதிகள் செயற்கையாக மேடாக்கப்பட்டவை. கூடவே நகரைச் சுற்றிலும் அரணாகச் சுவர் எழுப்பப்பட்டது.

டேரியஸ் அரண்மனை

முதலாம் டேரியஸை அடுத்து அவனுடைய மகன் முதலாம் செர்க்ஸெஸ், பேரன் முதலாம் அர்டாசெர்க்ஸெஸ் ஆகியோரும் பெர்ஸிபோலிஸ் வளாகத்தில் பல புதிய அரண்மனைகளையும் மாளிகைகளையும் அமைத்து சிறப்பு சேர்த்தனர். எந்தக் கட்டடம் எந்த மன்னரால் நிறுவப்பட்டது என்ற தகவலைக் கல்வெட்டுகளில் செதுக்கியுள்ளனர்.

‘கடவுளே, இந்த நாட்டை எதிரி, பஞ்சம், பொய்மை ஆகியவற்றில் இருந்து காப்பாற்று’ என்ற சொற்றொடர் தெற்குப் பகுதியில் உள்ள சுவரில் காணப்படுகிறது. இது தன் மக்களுக்காக முதலாம் டேரியஸ் செய்த வேண்டுதலாகும். அவர் நிறுவிய மண்டபத்தில் இருந்து 1933இல் தோண்டி எடுக்கப்பட்ட தங்க, வெள்ளித் தகடுகளில் பண்டைய பாரசீகம், எலாமைட், பாபிலோனியா என்ற மூன்றுவிதமான க்யூனிஃபார்ம் எழுத்து வடிவத்தில் தகவல்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை அவருடைய பேரரசின் மூன்று முக்கிய எல்லைகளைக் குறிக்கும் மொழிகள்.

‘அகமெனிட்டின் ரத்தினக்கல்’ என்று புகழப்படும் பெர்ஸிபோலிஸ் நகரம் கட்டடக் கலை, நகரமைப்புத் திட்டம், கட்டடத் தொழில்நுட்பம், கலை நுட்பம் எனப் பலவிதங்களில் ஓர் எடுத்துக்காட்டு நகரமாக விளங்கியது. இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் அதன் சிதைவுகள் பண்டைய நாகரிகத்தின் சிறப்புகளையும் செழிப்பையும் எடுத்துச்சொல்கின்றன.

பெர்ஸிபோலிஸ் காட்சிப் பேழையாகவும் கண்ணைக் கவரும் கலைநுட்பத்தை எடுத்துக்காட்டும் நகரமாகவும் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு நிறுவப்பட்டது. கம்பீரமான வளைவுகளும் படிக்கட்டுகளும் வரவேற்பறைகளும் இன்றும் காண்போரின் கருத்தைக் கவர்கின்றன. அகமெனிட் பேரரசின் அண்டை நாடான மெசபடோமியாவில் அமைக்கப்பட்ட நகரங்களைப் பின்பற்றி பெர்ஸிபோலிஸ் அமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

நகரின் மேல்மட்டத்தைச் சென்றடைய இரண்டு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் சுவர் முழுவதும் பேரரசரின் ஆற்றலை எடுத்துக்காட்டும் பல சிற்பங்கள் காணப்படுகின்றன. ஒரு பக்கம் அரக்கர்களை வெற்றிகொள்ளும் காட்சியும் மற்றொரு புறம் தோல்வியுற்ற எதிரி அவரை அரியணையில் தூக்கிச்செல்லும் காட்சியும் வீரர்களும் காவலர்களும் உயர்பதவியாளர்களும் கப்பம் செலுத்துபவர்களும் ஊர்வலமாகப் பின்னே செல்லும் காட்சியும் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

இங்கிருக்கும் நினைவுசின்னங்களுள் அபடனா அரண்மனையும் ஆயிரம் தூண்களைக்கொண்ட அரியணை மண்டபமும் முக்கியமானவை. கருஞ்சாம்பல் வண்ண கற்களை சலவைக்கற்களைப்போல வழவழப்பாக பட்டைதீட்டி பெரிய பாளங்களாக வெட்டி ஒன்றன்மீது ஒன்றை அடுக்கி இந்தக் கட்டடங்களை அமைத்தனர்.

எடை குறைவான கூரைகளையும் மரச்சட்டங்களையும் பயன்படுத்துவதன்மூலம் திறந்தவெளிக் கூரைகளைத் தாங்கிப் பிடிக்க அதிக தடிமனில்லாத தூண்களை உபயோகிக்கமுடிந்தது. தூண்களை நுட்பமாகச் செதுக்கியதோடு அவற்றின் உச்சியில் அலங்காரச் சிலைகளை அமைத்தனர். முன்னங்காலை மடித்துவைத்து உட்கார்ந்திருக்கும் காளைகள், சிங்கங்கள், குதிரை முகங்கள், கிரிஃபின் எனப்படும் புராணக் கதை விலங்கு, மனித முகமும் விலங்கு உடலும் கொண்ட உருவம் போன்றவற்றைக் காணலாம்.

நகரமுழுவதும் பாரசீக, மெடிய, எலாமைட் பகுதிகளின் நிர்வாகிகள் மன்னருக்கு மரியாதை செலுத்தும் காட்சியைப் பாறைச்சிற்பங்களில் வடித்திருக்கிறார்கள். சூரியன் நில நடுக்கோட்டைக் கடக்கும் நாள் தேசிய விழாவாகக் கொண்டாடப்பட்டதையும் அந்த நாளில் பேரரசின் கடைக்கோடி பகுதியைச் சேர்ந்த பிரதிநிதிகள் முக்கிய தலைவரின் தலைமையில் மன்னரைச் சந்தித்துப் பரிசுப் பொருட்களை வழங்கினார்கள் என்பதையும் தெரிந்துகொள்ளமுடிகிறது.

பெர்ஸிபோலிஸ் வளாகம்

அகமெனிட் அரசர்களின் கல்லறைகள் காணப்படும் நக்‌ஷ்-ஈ-ரஸ்டாமில் குதிரைப்படைகள், போர்க்காட்சிகள் ஆகியவற்றைச் சித்தரிக்கும் சிற்பங்களைப் பார்க்கலாம். அடிவாரத்தில் காணப்படும் காபை-யே ஸரதுஷ்ட் என்ற சதுர வடிவமான கட்டடம் மெக்காவில் இருக்கும் காபாவை குறிப்பதாக நம்பப்படுகிறது.

நக்‌ஷ்-ஈ-ரஸ்டாம் : முன்புற கல் கோபுரம்  காபை-யே ஸரதுஷ்ட்; பின்னனியில் இடதுபுறம் இரண்டாம் டேரியஸின் கல்லறை, வலதுபுறம் முதலாம் டேரியஸின்  கல்லறை

அகமெனிட் பேரரசைச் சேர்ந்த பண்டைய பாரசீகர்கள் பலவிதமான கலைகளுக்கும் கைவினைப்பொருட்களுக்கும் பெயர்பெற்றவர்கள். உலோகக் கலைப்பொருட்களையும் கற்பாறை கட்டடங்களையும் நெசவுத் தொழிலையும் நேர்த்தியாகவும் நுட்பமாகவும் உருவாக்கினர்.

பேரரசு பரந்து விரிந்திருந்த காரணத்தால் மற்ற நாகரிகங்களைச் சேர்ந்த கலைஞர்களுடன் ஏற்பட்ட பரிமாற்றம் புதிய கலை வடிவங்கள் உருவாக உதவியது. பாரசீகத்தின் பண்டைய நாடோடி இனக்குழுக்கள் மென்மயிர்க் கம்பளங்களை நெய்வதில் சிறந்து விளங்கினர். அவற்றின் நுட்பமான வடிவமைப்பும் பளீரென்ற வண்ணங்களும் கிரேக்கர்களைக் கவர்ந்தன. இன்று இந்தக் கம்பளங்கள் கம்பளி, பட்டு என வெவ்வேறு பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. 1979ஆம் ஆண்டு பெர்ஸிபோலிஸ் நகரம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் இணைக்கப்பட்டது.

(தொடரும்)

Photos – Crowning of the Achaemenid King, Relief of Soldiers by Ko Hon Chiu Vincent; Stone-carving of Faravahar, one of the best-known symbols of Zoroastrianism by Aneta Ribarska; Palace of Darius by Alfred Molon; Apadana Staircase relief art from Tehran Times, Persepolis ruins by Aneta Ribarska; Naqsh-e Rostam – Ka’ba-ye Zartosht in the foreground and  tomb of king Darius II and I in the background by Maasaak – Wikipedia

பகிர:
கார்குழலி

கார்குழலி

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதுபவர். பல்வேறு அரசுத் துறைகளோடும் பன்னாட்டு அரசு சாரா அமைப்புகளோடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடும் நாளிதழ்களோடும் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். துலிகா, பிரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்களில் குழந்தைகளுக்காக நாற்பத்தைந்துக்கும் அதிகமான நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *