ஜீவநதிகள் மனித நாகரிகத்தை வளர்த்தெடுத்த தொட்டில்கள் என்று வரலாற்றாசிரியர்கள் சொல்வார்கள். உயிர்கள் வாழ்வதற்கேற்ற தட்பவெப்பமும் புவியியல் அமைப்பும் இயற்கைவளமும் அமைந்த உலகின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் மனித இனம் செழித்து வளர்ந்தது என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. சீனாவின் மஞ்சள் நதி எனப்படும் யாங் ட்ஸே கியாங், இந்தியாவின் சிந்து நதி, இன்றைய ஈரானின் ஒரு பகுதியான பண்டைய மெசபடோமியாவின் யூப்ரடிஸ், டைக்ரிஸ் நதிகள், எகிப்தின் நைல் நதி ஆகியவற்றின் கரைகளில் மனிதர்கள் குடியேறி, நிலத்தைப் பண்படுத்தி பயிர்களை சாகுபடிசெய்து குடியிருப்புகளை அமைத்தனர்.
ஆசியாவின் தென்மேற்குப் பகுதியில் பாய்ந்த யூப்ரடிஸ், டைக்ரிஸ் என்ற இரண்டு நதிகளுக்கு நடுவே இருந்த வளமான நிலத்தில் வளர்ந்தது மெசபடோமிய நாகரிகம். ’மெசோ’ என்றால் ’நடுவில்’ என்றும் ‘படோமஸ்’ என்றால் ’நதி’ என்றும் பொருள். தற்போதைய ஈராக், குவைத், துருக்கி, சிரியா நாடுகள் அமைந்த நிலப்பகுதி பண்டைய காலத்தில் மெசபடோமியா என அழைக்கப்பட்டது. இன்றைய அரசியல் காலகட்டத்தில் பல நாடுகளையும் இனங்களையும் பண்பட்டவர்களல்ல என்ற பார்வை கொண்டிருக்கிறோம். ஆனால் அந்தப் பகுதிகள்தாம் மனித நாகரிகம் தோன்றி வளர்வதற்கு ஏற்ற சூழலாக இருந்தன என்பது முரண்நகை.
இன்றைக்கு 14000 ஆண்டுகளுக்கு முன்னர் மெசபடோமியாவில் மனிதர்கள் குடியேறத் தொடங்கினார்கள் என்பதைத் தொல் எச்சங்கள் சுட்டுகின்றன. அதற்கு ஐந்தாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு விவசாயம் செய்வது, காட்டு விலங்குகளைப் பழக்குவது என ஒவ்வொரு படியாக மனித நாகரிகம் வளர்ந்தது.
மெசபடோமியா ஒரு பரந்துபட்ட நிலப்பகுதி. அதன் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலகட்டத்தில் சுமேரிய, அஸ்ஸிரிய, அக்கேடிய, பாபிலோனிய நாகரிகங்கள் தோன்றி, வளர்ந்து, மறைந்தன. இவை ஒவ்வொன்றும் அடுத்து வந்த நாகரிகத்துக்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தன என்று சொல்லலாம்.
இவற்றுள் சுமேரிய நாகரிகம் பொஆமு 3200ஆம் ஆண்டு முதல் மெசபடோமியாவில் வேரூன்றியது. எரிடு, நிப்புர், லகாஷ், உருக், கிஷ், உர் ஆகிய சுமேரிய நகரங்கள் தனி நாடுகளைப்போன்ற ஆட்சி அதிகாரத்துடன் சிறப்பான முறையில் செயல்பட்டன. கிஷ் நாட்டின் மன்னனான எடனா என்பவன் எல்லா நாடுகளையும் ஒன்றிணைத்து சுமேரிய நாட்டை உருவாக்கினான்.
சுமேரியர்கள் மண்ணால் செய்யப்பட்ட செங்கற்களைக் கொண்டு இருப்பிடங்களையும் நகரங்களையும் அமைத்தனர். சக்கரத்தைப் பயன்படுத்தி களிமண்ணால் செய்யும் பானை முதலிய பாத்திரங்களை அதிகளவில் செய்யமுடியும் என்பதைக் கண்டுபிடித்தார்கள். வண்டிகளில் விலங்குகளைப் பூட்டி இழுத்துப்போகச் செய்தார்கள். வெவ்வேறு வகையான ஏர்களைச் செய்ததோடு அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்ற குறிப்புகளையும் எழுதிவைத்தனர்.
யூப்ரடிஸ், டைக்ரிஸ் ஆறுகளில் பொங்கிய வெள்ளத்தைத் தேக்கிவைக்கவும் கால்வாய் வெட்டி வயல்களுக்கு நீர்ப்பாசனம் செய்யவும் சுமேரியர்களுக்குத் தெரிந்திருந்தது. விலங்குகளின் ரோமத்தைச் சேகரித்து கம்பளி ஆடைகளை வீட்டு உபயோகத்துக்கு மட்டுமின்றி வணிகத்துக்காகவும் நெய்தனர். செம்பினாலான ஈட்டி முனை, கத்தி, உளி போன்றவற்றையும் விலங்குகளின் உருவங்களையும் செய்தனர். உறவுகளையும் குடும்பங்களையும் தாண்டி எல்லோரையும் ஒன்றுதிரட்டி பெருவணிக நிறுவனங்களை நடத்தினர்.
இவை எவற்றையும்விட மிக முக்கியமான விஷயமொன்றையும் சுமேரியர்கள் செய்தனர். எழுத்துருக்களைக் கண்டுபிடித்த பெருமையும் அவர்களைத்தான் சேரும். சுட்ட களிமண் வில்லைகளில் சித்திர எழுத்துகளால் வணிகக் கணக்குவழக்குகளை எழுதினார்கள். காலப்போக்கில் இவை குறிப்பிட்ட பொருட்களையும் ஒலிகளையும் குறிக்கும் எழுத்துக்களாக மாற்றம்பெற்றன.
அக்கேடியர்களின் பேரரசு பொஆ 2234இல் சர்கான் என்ற அரசனின் தலைமையில் அமைக்கப்பட்டது. இவரின் பிறப்பும் வளர்ப்பும் விவிலியத்தில் சொல்லப்படும் மோசஸின் பிறப்பை ஒத்தது. சர்கானின் தலைமையில் சுமேரியா முழுவதும் வெற்றிகொள்ளப்பட்டு அக்கேடியப் பேரரசின்கீழ் கொண்டுவரப்பட்டது. மெசபடோமியாவின் எல்லைகளையும் தாண்டி வர்த்தகம் நடந்தது. கட்டடங்கள் இன்னும் நுட்பத்தோடு அமைக்கப்பட்டன. ஜிக்குரட் எனப்படும் பிரமிட் வடிவில் தட்டையான மேல்பாகத்தைக்கொண்ட கட்டடங்களை அக்கேடியர்கள் அமைத்தனர்.
பொஆ 2193இல் அக்கேடியப் பேரரசின் இறுதி மன்னரான ஷர்-கலி-ஷர்ரியின் மறைவுக்குப் பின்னர் ஆட்சி பலரின் கைமாறியது. பொஆ 2100இல் உர் நாட்டின் மன்னரான உர்-நம்ம சுமேரியர்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தார்.
உலகின் முதல் சட்ட விதிகள் உர்-நம்ம மன்னரின் காலத்தில் உருவாக்கப்பட்டது என்று பதிவுசெய்யப்பட்ட வரலாறு தெரிவிக்கிறது. ’உர்-நம்மவின் விதி’ என அழைக்கப்பட்டது. பொஆ 2004இல் இவர் ஆட்சி முடிவுக்கு வந்தது.
இதையடுத்து பாபிலோனியப் பேரரசு அமரியர்களால் அமைக்கப்பட்டது. உர் பேரரசின் காலத்தில் பாபிலோன் மாகாண நகரமாகத்தான் இருந்தது. உர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பொஆமு 1894இல் அமரிட் மன்னன் சுமுஅபும் என்பவனின் காலத்தில் பாபிலோனியப் பேரரசின் தலைநகரமானது பாபிலோன். மனிதர்களைப்போலவே நகரங்களுக்கும் தோற்றம், வளர்ச்சி, தனித்தன்மை, அதையொட்டிய வரலாறு ஆகியவை இருப்பதை பாபிலோனின் வரலாற்றில் இருந்து தெரிந்துகொள்ளமுடிகிறது.
அமரிட் மன்னர்களில் புகழ்பெற்றவனான ஹமூரபி, பொஆமு 1792 முதல் 1750 வரையில் ஆட்சிசெய்தான். சுற்றியிருந்த நகர நாடுகளை வென்று தெற்கு மெசபடோமியா, அஸ்ஸிரியா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பாபிலோனியப் பேரரசை அமைத்தான். அவன் ஆட்சிக்காலத்தில் பாபிலோன் நகரம் அரசியல் முக்கியத்துவம் பெற்றதோடு வர்த்தக, நிர்வாக மையமாகவும் நிலைபெற்றது. அதேநேரத்தில் அதன் வளம், செல்வாக்கு, புகழ் ஆகியவற்றால் எதிரிநாட்டினர் கைப்பற்றத் துடிக்கும் நகரமாகவும் இருந்தது.
ஹமூரபியின் சட்ட விதிகள் கடுமையானவையாக இருந்தன. பாபிலோனியர்களின் கடவுளான மர்டுக்கின் வழிபாட்டுத்தலத்தில் இருக்கும் கல்வெட்டில் அவற்றைச் செதுக்கினான். அதில் ஒரு பகுதி அகழ்வாராய்ச்சியாளர்களுக்குக் கிடைத்திருக்கிறது. உலகின் வரலாற்றுப் பழமைமிக்க விளக்கமான சட்ட விதி என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. அடுத்தடுத்து நடந்த அகழ்வாராய்ச்சிகளில் இதைக்காட்டிலும் பழமையான சுருக்கமான சட்ட விதிகளைக் கண்டெடுத்தார்கள் என்றாலும் பண்டைய கால வாழ்க்கைமுறை பற்றி நமக்குக் கிடைத்த முதல் ஆவணம் என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.
வர்த்தகம், வாணிபம், விலை, சுங்கவரி எனப் பொருளாதார சட்ட விதிகள், திருமணம், மணவிலக்கு எனக் குடும்ப வாழ்க்கைசார்ந்த விதிகள், தாக்குதல், திருட்டு போன்ற குற்றவியல் சட்டங்கள், அடிமைப்படுத்துதல், கடன் போன்ற பொது வழக்குச் சட்ட விதிகள் என மொத்தம் 282 வழக்குகளுக்கான தீர்ப்பை வழங்க உதவியாக இருந்த சட்ட விதிகள் ஹமூரபியின் ஆட்சிக்காலத்தின் இறுதிப்பகுதியில் தொகுக்கப்பட்டன. தவறு அல்லது குற்றமிழைத்தவர்களின் சமூகப் படிநிலை, சூழல் ஆகியவற்றை கணக்கில்கொண்டு தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டன.
நூற்றாண்டுக்காலமாக சுமேரியாவில் பண்பட்ட மக்கள் சமூகம் பின்பற்றிய சுமேரிய சட்டவிதிகள்தான் இதன் அடித்தளமாக இருந்தது. இந்தச் சட்ட விதிகள் அக்காடிய மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் செமிடிக், சுமேரியப் பாரம்பரியத்தையும் மக்களையும் ஒன்றிணைப்பதற்காக அனைவருக்குமான ஒரே சட்டமாகப் புழக்கத்தில் இருந்தவை. குடும்ப ஒற்றுமையை நிலைநாட்டுவது, சட்ட ஒழுங்கில் அரசாங்கத்தின் பொறுப்பு, குற்றம் சாட்டப்பட்டவரைச் சிரமங்களுக்கு உள்ளாக்கி அவரது குற்றத்தை நிறுவுவது, கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் எனப் பழிதீர்ப்பின்மூலம் நீதி வழங்குவது போன்ற சில பழமையான விதிகள் புழக்கத்தில் இருந்தன. என்றாலும் குடும்பப் பகை, தனிப்பட்ட பழிதீர்ப்பு, சிறைப்பிடித்து வந்து திருமணம் செய்துகொள்வது போன்ற செயல்களை அது ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தக் காலகட்டத்தைக் கணக்கில்கொண்டு பார்க்கையில் ஹமூரபியின் சட்ட விதிகள் முற்போக்கானவை என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.
ஹமூரபியின் ஆட்சிக்குப் பிறகு சரியான நிர்வாகம் இல்லாததால் அமரிட் மன்னர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஹிட்டைட்டுகள், காசைட்டுகள் என வெவ்வேறு வம்சத்தின் ஆட்சி நடைபெற்றது. காசைட்டுகள் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு ஆட்சிபுரிந்தனர். அந்தக் காலகட்டத்தில் பாபிலோன் இலக்கியம், சமயம் என இரண்டுக்குமான மையமாக விளங்கியது. மர்டுக் கடவுள் மெசபடோமியாவின் முதன்மைக் கடவுளாக உயர்த்திவைக்கப்பட்டார்.
பல நூற்றாண்டுகள் பல வம்சத்தைச் சேர்ந்த மன்னர்களின் ஆட்சி மாறி மாறி நடைபெற்றாலும் பாபிலோனின் அரசியல் முக்கியத்துவமும் சிறப்புநிலையும் மங்கவில்லை. பொஆமு 1124இல் இசின் வம்சத்தின் முதலாம் நெப்யூகெட்னேசர் என்ற மன்னன் ஆட்சிக்கு வந்தான். அவன் அந்த நகரைச் சேர்ந்தவனில்லை என்றபோதும் பாபிலோனை தலைநகராகத் தேர்ந்தெடுத்தான் என்பது அதற்கு சாட்சி.
7ஆம் நூற்றாண்டில் கால்டியன் வம்சத்தைச் சேர்ந்த இரண்டாம் நெப்யூகெட்னேசர் என்ற மன்னன் அரியணை ஏறினான். பொஆமு 605 முதல் 562 வரையில் பல மாற்றங்களைச் செய்தான். சிரியாவையும் பாலஸ்தீனத்தையும் தன்னுடைய பேரரசோடு இணைத்தான். யூதா, யெருசெலேம் நகர்களை அழித்து யூதர்களை சிறைப்பிடித்தார்.
பாபிலோன் என்றதும் தொங்கும் தோட்டம் என்பதுதான் நினைவுக்கு வரும். அதை அமைத்தவர் இரண்டாம் நெப்யூகெட்னேசர். மர்டுக்கின் வழிபாட்டிடத்தைச் சீரமைத்து ஜிக்குரட்டை அமைத்தார்.
பொஆமு 539இல் இரண்டாம் சைரஸின் தலைமையில் நடந்த போரில் பாரசீகப் பேரரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. செல்வவளமிக்க சட்ரபியின் தலைநகரமாக விளங்கியது. பொஆமு 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹெரடொடஸ் உலகின் மிகச் செழிப்பான நகரம் என வருணிக்கிறார்.
பொஆமு 331இல் மாபெரும் அலெக்சாண்டரின் படையிடம் அடிபணிந்தது பாபிலோன். அலெக்சாண்டர் அதன் சிறப்புரிமைகளை உறுதிசெய்ததோடு முந்தைய அரசர்களால் அழிக்கப்பட்ட வழிபாட்டுத்தலங்களைச் சீரமைக்க உத்தரவிட்டார். பாபிலோனின் வர்த்தக முக்கியத்துவத்தையும் அறிந்திருந்ததால் அதன் ஆட்சியாளரான சட்ரபுக்கு நாணயங்களை அச்சடிக்க அனுமதி வழங்கினார். கடல்வழி வாணிபத்தை வளர்ப்பதற்கு துறைமுகமொன்றை கட்டத் தொடங்கினார். பாபிலோனைத் தன்னுடைய பேரரசின் தலைநகராக்கும் முடிவிலிருந்தார். ஆனால் அதற்குள்ளாக பொஆமு 323இல் இறந்துபோனார்.
அலெக்சாண்டரின் ஆட்சியில் கிரேக்க, பாபிலோனிய கலாசாரங்கள் ஒன்றன்மீது மற்றொன்று தாக்கத்தை ஏற்படுத்தின. ஹெலெனிய அறிவியல் சிந்தனையை பாபிலோனிய வானியல் அறிவு வளப்படுத்தியது. அலெக்சாண்டரின் மறைவுக்குப் பிறகு பாபிலோன் செலூசிட் வம்சத்துக்குக் கைமாறியது, அதையடுத்து அதன் புகழும் செல்வாக்கும் மங்கத்தொடங்கின.
(தொடரும்)