Skip to content
Home » உலகின் கதை #31 – பாமியன் பள்ளத்தாக்கு

உலகின் கதை #31 – பாமியன் பள்ளத்தாக்கு

Bamiyan Valley

இந்து குஷ் மலைத்தொடருக்கு நடுவே அமைந்திருக்கும் பாமியன் பள்ளத்தாக்கு தற்போதைய ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ளது. இந்து குஷ், அமு டர்யா நதிகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியை பண்டைய காலத்தில் பாக்ட்ரியா என அழைத்தனர். தற்போதைய ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கியது. வடமேற்கு பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் ஒன்றிணைந்த பகுதியை பண்டைய காலத்தில் காந்தாரம் என்றழைத்தனர்.

பொஆமு 6ஆம் நூற்றாண்டு முதல் பொஆ 6ஆம் நூற்றாண்டு வரையிலான சுமார் ஓராயிரம் ஆண்டுகளுக்கு வர்த்தகம், கலை, சமயம் ஆகியவற்றின் பரிமாற்றத்தை அதிகரிக்க உதவும் மையப்புள்ளியாக விளங்கியது பாக்ட்ரியா. இந்தப் பகுதியில் காணப்படும் குன்றுகளும் கால்வாய்களும் பண்டைய காலத்தில் நீர்வளமும் செல்வச்செழிப்புமிக்க நாடாக பாக்ட்ரியா இருந்தது என்பதற்கான சான்றுகள்.

பாக்ட்ரியாவை அகமேனியர்கள் ஆட்சிபுரிந்ததற்கான பதிவுகள் உள்ளன. அவர்களைத் தொடர்ந்து அலெக்சாண்டரின் தலைமையிலான கிரேக்கர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அடுத்த நூறு ஆண்டுகளில் செலுசிட்களின் கை ஓங்கியது. செலுசிட்களின் ஆட்சியைக் கைப்பற்ற முயன்ற யூதிடிமஸ் என்ற கிரேக்க மன்னன் முறியடிக்கப்பட்டான். அந்தப் பகுதியில் இருந்து பின்வாங்கியவன் பண்டைய இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் இந்தோ-கிரேக்கப் பேரரசு ஒன்றை நிறுவினான். அவனுடைய வம்சாவளியினர் யூதிடிமிட் என்றழைக்கப்பட்டனர். யூதிடிமிட் பேரரசு தற்போதைய ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியாவின் சில பகுதிகள், பாகிஸ்தானின் பெரும்பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய நிலப்பகுதியாக இருந்தது.

பெஷாவர் பள்ளத்தாக்கு முதல் காபூல், ஸ்வாட் நதிகளின் பள்ளத்தாக்கு வரை பரவியிருந்தது காந்தாரம். தற்போதைய இந்தியாவின் வடமேற்கு எல்லையான பஞ்சாப், சிந்த் மாகாணங்கள் வரையில் காந்தாரப் பேரரசு பரவியிருந்தது என நம்பப்படுகிறது. பண்டைய மொகஞ்சதாரோவின் தொல் எச்சங்களின் மேலே எழுப்பப்பட்ட பௌத்த நகரமும் தூபியும் இன்றும் காணக்கிடைக்கின்றன. தட்சசீலம் அல்லது டாக்சிலா, புருஷபுரம் அல்லது பெஷாவர், புஷ்கலாவதி அல்லது மர்டான் ஆகியவை காந்தாரத்தின் முக்கிய நகரங்களாகும்.

காந்தாரம் என்ற பெயருக்குப் பல பொருள் கூறப்படுகிறது. கந்தம் என்றால்  ‘நறுமணம்’, அர் என்றால் ‘நிலம்’ என்பது ஒரு விளக்கம். கந்த் என்றால் குன், அதாவது கிணறு, குளம் என்பதைக் குறிக்கும். காந்தேரி, தாஷ்கண்ட், யார்கண்ட் என்பவை இந்த வேர்ச்சொல்லோடு தொடர்புடைய நிலப் பெயர்கள். இதனால் காந்தாரம் ‘ஏரிகள் நிறைந்த நிலம்’ என அழைக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இன்றளவும் பெஷாவர் பள்ளத்தாக்கு சதுப்புநிலமாக இருப்பதைக்கொண்டு இந்த இரண்டாவது கருத்தில் இருக்கும் உண்மையை ஏற்கலாம் என்கின்றனர் வரலாற்றாசிரியகள்.

பண்டைய காந்தாரம் அகமேனியர்கள், கிரேக்கர்கள், பின்னர் மௌரியர்கள் இந்தோ-கிரேக்கர்கள், ஷாகாக்கள், பார்த்தியர்கள், குஷானர்கள் என ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு வம்சத்தினரால் ஆளப்பட்டது. புதிய ஆட்சியாளர்களுடன் அவர்களின் மொழி, கலை, கலாசாரம், சமயம் எல்லாமும் வந்துசேர்ந்தன.

பொஆமு 4ஆம் நூற்றாண்டில் இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்த மௌரிய வம்சம் சிந்து சமவெளிப் பகுதியைக் கைப்பற்றியது. காந்தாரம் மௌரியப் பேரரசோடு இணைக்கப்பட்டது. டாக்சிலா புதிய மாகாணத்தின் தலைநகரானது. சந்திரகுப்தரின் வழிவந்த அரசரான அசோகரின் ஆட்சிக்காலத்தில் ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா ஆகிய பகுதிகளுக்கு பௌத்த சமயமும் கருத்துகளும் பரவின. டாக்சிலாவில் தம்ரா ஆற்றின் கரையில் தர்மரஜிகா தூபி அமைக்கப்பட்டது.

பொஆமு 2ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் டெமட்ரியஸ் என்ற கிரேக்க அரசனின் தலைமையில் கிரேக்கர்கள் காந்தாரத்தின்மீது படையெடுத்தனர். காந்தாரம், அரக்கோசியா என அழைக்கப்பட்ட தற்போதைய கண்டஹார், பஞ்சாப், கங்கைச் சமவெளியின் ஒரு பகுதி ஆகியவற்றைத் தனது பேரரசுடன் இணைத்தான். சிர்கப் என்ற புதிய நகரை உருவாக்கினான். கிரேக்கர்கள், இந்தியர்கள், பாக்ட்ரியர்கள், மேற்கு இரானியர்கள் எனப் பல இனத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து வாழ்ந்தனர். தற்போதைய பாகிஸ்தானில் சிர்கபுக்கு அருகே காணப்படும் சொராஸ்ட்ரிய வழிபாட்டிடம் இதற்குச் சான்றாகவுள்ளது.

பொஆமு 2ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மத்திய ஆசியாவில் இருந்து வந்த நாடோடிக் குழுவான ஸ்கைதியர்கள் பஞ்சாப் பகுதியைக் கைப்பற்றினர். பொஆமு ஒன்றாம் நூற்றாண்டில் பார்த்தியர்களின் வலிமை கூடியது. கிரேக்கர்களிடம் இருந்து காந்தாரம், பஞ்சாப் பகுதிகளை வசப்படுத்தினர். அது கிறிஸ்தவம் பரவிக்கொண்டிருந்த காலகட்டம். அபோஸ்தலர் தாமஸ் கோண்டோஃபேரஸ் என்ற பார்த்திய மன்னனுக்கு ஞானஸ்நானம் செய்துவைத்தார் எனக் கூறப்படுகிறது.

பொஆ 1ஆம் நூற்றாண்டில் மத்திய ஆசியா, ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இருந்து குஷான இனத்தைச் சேர்ந்தவர்கள் பெஷாவரைத் தலைநகராகக்கொண்டு தங்களின் பேரரசை நிறுவினார்கள். டாக்சிலாவை இடமாற்றம் செய்ததோடு சிர்சுக் என்று பெயர் மாற்றமும் செய்தனர். நகரைச் சுற்றிலும் 5 கிலோமீட்டர் நீளமும் 6 மீட்டர் தடிமனும்கொண்ட சுவரை எழுப்பினர். இந்தப் புதிய நகரம் ஒருபுறம் பேரரசின் ராணுவ மையமாகச் செயல்பட்டது. மறுபுறம் பௌத்த சமயம் சார்ந்த செயல்பாடுகளின் மையமாகவும் இருந்தது என்பது ஆச்சரியமான முரண். மத்திய ஆசியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வந்த புனிதப் பயணிகள் இங்கே தங்கியிருந்தனர்.

காந்தார பாணி கலை, கலாசாரம், கட்டவியல் ஆகியவை குஷானர்களின் ஆட்சியில் உச்சநிலையை அடைந்தது, இந்தப் பகுதியின் பொற்காலம் என அழைக்கப்பட்டது. இந்தியத் துணைக்கண்டத்தில் கங்கைச் சமவெளி முழுவதும் குஷானர்களின் பேரரசு விரிந்தது. ஆனால் தொடக்கம் இருக்கும் எதற்கும் முடிவும் இருந்தாகவேண்டுமல்லவா?

குஷானர்களுக்குப் பிறகு வெவ்வேறு வம்சத்தினர் காந்தாரத்தில் ஆட்சி செலுத்தினர். சசானியர்கள், கிடாரைட் குஷானர்கள், வெள்ளை ஹன்கள் ஆகியோரின் படையெடுப்புகளில் காந்தாரம் கைமாறியது. இந்தக் காலகட்டத்தில் பௌத்த சமயமும் காந்தார பாணி கலையும் மெல்ல மறைய ஆரம்பித்தன.

பொஆ 5ஆம் நூற்றாண்டில் ஹன்கள் காந்தாரத்தையும் அதன் முக்கிய பகுதிகளையும் அழித்துச் சேதப்படுத்தினர் என்றும் கூறப்படுகிறது. ஹன்கள் அரசியல் லாபத்துக்காகப் பௌத்த சமயத்தைப் புறக்கணித்து இந்து சமயத்தைப் பின்பற்றினர். அதன்மூலம் இந்தியாவில் இந்து சமயத்தை மையமாகக்கொண்டு ஆட்சிபுரிந்த குப்தர்களுடன் உறவை ஏற்படுத்தி சசானியர்களை முறியடிக்கலாம் என்பது அவர்களின் திட்டம்.

பல நூற்றாண்டுகளாக பின்பற்றிய சமயத்தையும் அதுசார்ந்த வாழ்க்கைமுறையையும் விடுத்துப் புதிய சமயத்தைப் பின்பற்றவேண்டிய கட்டாயம் காந்தாரத்தின் சமூக அமைப்பிலும் மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. காந்தாரத்தின் கலையும் கலாசாரமும் தனித்தன்மையை இழந்தன. இந்து சமயத்தின் பரவலால் பௌத்த சமயம் காந்தாரத்தின் வடக்கு எல்லைக்கு வெளியே தள்ளப்பட்டது.

இதையடுத்து வந்த நூற்றாண்டுகளில் காந்தாரத்துக்கு மேற்கே இருந்து தொடர் படையெடுப்புகள் நிகழ்ந்தன. பொஆ 11ஆம் நூற்றாண்டில் பண்டைய ஆப்கானிஸ்தானின் கஜ்னா பகுதியைச் சேர்ந்த மஹ்மூத் என்ற அரசன் காந்தாரத்தைக் கைப்பற்றி இஸ்லாமியப் பேரரசை நிறுவினான். அடுத்த சில நூற்றாண்டுகளில் பழைய நகரங்களும் வழிபாட்டிடங்களும் அழிந்துபோயின, மக்களின் நினைவிலிருந்து மறந்துபோயின. பொஆ 18ஆம் நூற்றாண்டில் இந்தப் பகுதியை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கைப்பற்றியபோது நடந்த அகழ்வாராய்ச்சிகள் இவற்றையெல்லாம் மீண்டும் உலகின் கவனத்துக்குக் கொண்டுவந்தன.

இப்படியோர் அரசியல், சமூக வரலாற்றைக்கொண்ட பாமியன் பள்ளத்தாக்கில் ஓடும் பாமியன் நதியின் கிளை ஆறுகளுக்கு நடுவே அமைந்துள்ள கலாசார, தொல்பொருள் எச்சங்கள் பண்டைய பாக்ட்ரியாவில் கலை, சமயம் இரண்டும் வளர்ந்த வரலாற்றையும் அவற்றுக்கிடையே நிகழ்ந்த பரிமாற்றங்களையும் சேர்த்தே சொல்கின்றன. காந்தாரா பாணியில் அமைக்கப்பட்ட பௌத்த சமய நினைவுச்சின்னங்களில் இந்திய, ஹெலனிய, ரோமானிய, சசானிய, இஸ்லாமிய கலை, கலாசாரம் ஆகியவற்றின் தாக்கத்தைப் பார்க்கமுடிகிறது.

எந்த நாடும் நிலப்பகுதியும் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களுக்கோ சமயத்தைப் பின்பற்றியவர்களுக்கோ மட்டும் சொந்தமாக இருக்கவில்லை. பல மக்களின் எண்ணங்களும் நம்பிக்கைகளும் கனவுகளும் ஒன்றுகலந்த சங்கமமாகவே இருந்திருக்கின்றன. இவற்றோடு பேராசை, போட்டி, பொறாமை, எதையும் தனதாக்கிக்கொள்ளும் அவா எல்லாமும் சேர்ந்துகொண்டால் எந்தப் பொருளும் நிலமும் ஒருவருக்கு மட்டுமே சொந்தமாக இருப்பதில்லை. காலமும் காட்சியும் மாறிக்கொண்டே இருக்கும் என்பது தெளிவாகிறது.

(தொடரும்)

படம்: Cultural Landscape and Archaeological Remains of the Bamiyan Valley (Afghanistan) by Roland Lin © UNESCO

பகிர:
nv-author-image

கார்குழலி

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதுபவர். பல்வேறு அரசுத் துறைகளோடும் பன்னாட்டு அரசு சாரா அமைப்புகளோடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடும் நாளிதழ்களோடும் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். துலிகா, பிரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்களில் குழந்தைகளுக்காக நாற்பத்தைந்துக்கும் அதிகமான நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *