Skip to content
Home » உலகின் கதை #32 – பாமியன் புத்தர் சிலைகள்

உலகின் கதை #32 – பாமியன் புத்தர் சிலைகள்

Buddhas of Bamiyan

காந்தாரத்தின் புவியியல் அமைப்பை முதன்முதலில் விளக்கமாகப் பதிவுசெய்தவர் சீன பௌத்தத் துறவியான யுவான் சுவாங். பொஆ 7ஆம் நூற்றாண்டில் காந்தார நாகரிகம் முடிவுக்கு வரும் காலகட்டத்தில் அங்கே சென்றடைந்தார். பண்டைய பௌத்த ஆவணங்களைச் சான்றாகக் கொண்டு அந்தப் பகுதியையும் அங்கிருந்த நகரங்களையும் பற்றி விவரித்து எழுதினார். இன்றைய அகழ்வாராய்ச்சியாளர்கள் பல பகுதிகளை அடையாளம் காண ஆதாரமாக இருந்தன.

காந்தாரக் கலை தற்போதைய வடமேற்கு பாகிஸ்தான், கிழக்கு ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நிலப்பரப்பில் பொஆமு 1ஆம் நூற்றாண்டில் தோன்றியது என நம்பப்படுகிறது. ஓவியங்கள், சிற்பங்கள், நாணயங்கள், மட்பாண்டப் பொருட்கள் எனக் கலையின் எல்லா வடிவங்களிலும் இந்தப் பாணியின் தாக்கத்தைப் பார்க்கலாம்.

கலை வளர்ச்சியோடு காந்தாரத்தில் பல்வேறு கலாசாரப் பரிமாற்றங்களும் நடந்தன. பொஆமு 3ஆம் நூற்றாண்டில் பேரரசர் அசோகரின் ஆட்சியில் இங்கே பௌத்த சமயம் பெருமளவில் பரவியது. பௌத்த சமயத்தைக் காட்சிப்படுத்த உதவிய இந்தக் கலைப் பிரிவு கிரேக்க-ரோமானியக் கலைகளின் சாயலை வெகுவாகக் கொண்டிருந்தது. குஷானர்களின் ஆட்சியில் இந்தப் பாணி சிறப்பாக வளர்ந்து உச்சத்தை எட்டியது.

பொஆ 1ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த கனிஷ்கர் என்ற குஷான மன்னரின் காலத்தில் பெருவளர்ச்சியடைந்தது. புத்தரைத் தெய்வநிலைக்கு உயர்த்தி அவரின் உருவச்சிலையை அமைத்தது கனிஷ்கர்தான் எனக் கூறப்படுகிறது. கையிலேந்திச் செல்லக்கூடிய சிறிய சிற்பங்கள் முதல் நினைவுச்சின்னங்களாக அமைக்கப்பட்ட பெருஞ்சிற்பங்கள் வரையில் ஆயிரக்கணக்கான சிலைகள் பேரரசின் மூலைமுடுக்கிலெல்லாம் நிறுவப்பட்டன.

அசோகரின் காலத்தையடுத்து கனிஷ்கரின் காலத்தில் பௌத்த சமயம் மீண்டும் புத்துயிர் பெற்றது. வழிபாட்டிடங்கள், தூபிகள், துறவியரின் மடங்கள் என எல்லா இடங்களிலும் புத்தரின் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் பல்வேறு காந்தாரக் கலைகளின் வாயிலாக காட்சிப்படுத்தப்பட்டன. பௌத்த சமயக் கருத்தை மக்களிடையே பரப்புவது முதன்மை நோக்கமாக இருந்ததால் அன்றாடம் புழங்கும் பொருட்களும் சமயச் சின்னங்களைத் தாங்கியிருந்தன.

குஷான அரசர்கள் ரோமானியப் பேரரசுடன் தொடர்பிலிருந்தார்கள். இதனால் பௌத்த சமயக் கதைகளுக்குக் காட்சி வடிவம் கொடுக்கையில் மரபார்ந்த ரோமானியக் கலைகளின் பண்புக்கூறுகளையும் நுட்பங்களையும் பயன்படுத்திக்கொண்டது காந்தாரக் கலை.

திராட்சைக் கொடி, பூமாலையைக் கையில் ஏந்தியிருக்கும் குழந்தைத் தேவதைகள், மனித உடலின் மேல்பாகத்தையும் மீனுடைய கீழ்பாகத்தையும் கொண்டிருக்கும் ட்ரிடான் எனப்படும் உயிரினம், மனித உடலின் மேல்பாகத்தையும் குதிரையின் கீழ்பாகத்தையும் கொண்டிருக்கும் செண்டார் எனப்படும் உயிரினம் போன்ற வடிவங்கள் ரோமானியக் கலையிலிருந்து தழுவலாகும். ஆனால் அடிப்படையான உருவ அமைப்புகள் இந்தியக் கலையை ஒட்டியே அமைக்கப்பட்டன.

காந்தாரச் சிற்பங்களை அமைக்க தொடக்கத்தில் பச்சை வண்ண, சாம்பல் நீல வண்ணக் கற்களே பயன்படுத்தப்பட்டன. கஞ்சூர் கற்கள் எனப்படும் படிமப்பாறை வகையைப் பயன்படுத்துகையில் மேல்பூச்சாக சுண்ணக்காரையையும் வண்ணங்களையும் பூசினர். பொஆ 3ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் குழைகாரைப் பூச்சை உபயோகப்படுத்தினர். சிற்பங்களுக்கு வண்ணம் பூசி, தங்கத் தகட்டையும் ரத்தினக் கற்களையும் பதித்து அழகூட்டினர். காலப்போக்கில் வண்ணங்கள் மங்கிப்போனதால் தற்போது ஒரு சில மாதிரிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

காந்தாரக் கலையினால் புத்தரின் சிலைகளை அமைக்கும் கலையும் பரிணாம வளர்ச்சி பெற்றது என்ற கருத்தை அறிஞர்களில் பலர் ஏற்பதில்லை. காந்தாரக் கலையில் புத்தர் இளைஞனைப்போன்ற முகத்தோற்றத்துடன் ரோமானிய அரசக் குடும்பத்தின் உடைகளை ஒத்த ஆடைகளை அணிந்துகொண்டிருப்பார். அமர்ந்த நிலையில் காணப்படும் புத்தர் சிலை அத்தனை பிரபலமாகவில்லை.

இந்தியாவில் தற்போதைய உத்தரப் பிரதேசத்தில் தோன்றிய மதுரா சிற்பக்கலையும் காந்தாரக் கலையும் ஒன்றன்மீது மற்றொன்று பெரும்தாக்கத்தை ஏற்படுத்தின. இயல்பான தோற்றத்தைவிடவும் உயர்நிலையை எடுத்துக்காட்டும் பாணியாக இருந்தன. புத்தரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளைக் காட்சிகளாக வடித்ததன்மூலம் காந்தாரக் கலைஞர்கள் பௌத்தக் கலைக்கு நிலைத்து நிற்கும் பங்களிப்பைச் செய்தனர்.

0

ஆப்கானிஸ்தானில் உள்ள பாமியன்பற்றி பொஆ 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனப் பயணி பாஹியானும் பொஆ 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த யுவான் சுவாங்கும் பதிவு செய்துள்ளனர். பொஆ 4, 5ஆம் நூற்றாண்டுகளில் பாமியன் ஓங்கலில் பிரம்மாண்டமான இரண்டு புத்தர் சிலைகள் செதுக்கப்பட்டிருந்தன. நின்ற நிலையில் இருக்கும் இந்த புத்தர் சிலைகளில் ஒன்று 55 மீட்டர் உயரமும் மற்றொன்று 40 மீட்டர் உயரமும் கொண்டிருந்தன. யுவான் சுவாங்கின் காலத்தில் இரண்டு சிலைகளுக்கும் தங்க, ரத்தின நகைகள் அணிவிக்கப்பட்டிருந்ததாகக் கூறுகிறார்.

Buddhas of Bamiyan

40 மீட்டர் மற்றும் 55 மீட்டர் உயர பாமியன் புத்தர் சிலைகள்

பெரியது ஆண் சிலை, அதன் பெயர் சல்சல், அதாவது பேரண்டத்தை ஊடுருவிச் செல்லும் ஒளி என்பது பொருள். சிறியது பெண் சிலை, அதன் பெயர் ஷா மாமா, அதாவது அரச தாய் என்பது பொருள். சிலைகள் என்பதைவிட குடைவரைச் சிற்பங்கள் என்பதுதான் சரி. ஏனெனில் சிலைகளின் பின்பகுதி ஓங்கலின் பாறையோடு இணைந்திருந்தது.

சிலைகளின் வெளிக்கோடு மணற்பாறையிலிருந்து செதுக்கப்பட்டது என்றாலும் முகம், கைகள், அணிந்திருக்கும் ஆடையின் மடிப்புகள் போன்ற நுட்பமான பகுதிகள் மண்ணும் வைக்கோலும் கலந்த கலவையால் புனையப்பட்டு மேலே குழைகாரை பூசப்பட்டது. முகங்களின் மேற்பகுதியை மரத்தாலான முகமூடிகளைக் கொண்டு மூடினர். முதல் சிலைக்கு சிவப்பு வண்ணமும் இரண்டாவது சிலைக்கு பல வண்ணங்களும் தீட்டப்பட்டன.

பாமியன் பள்ளத்தாக்கின் பல குகைகளில் காணப்படும் பௌத்தத் துறவிகளின் மடங்களும் வழிபாட்டிடங்களும் தங்குமிடங்களும் பொஆ 3 முதல் 5ஆம் நூற்றாண்டுவரை அமைக்கப்பட்டவை. இந்தக் குகைகள் உட்புறத்தில் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பவை. இவற்றிலும் உட்புறத்தில் இருக்கும் மாடம்போன்ற குழிவுகளிலும் சுவரோவியங்களும் அமர்ந்த நிலையில் இருக்கும் புத்தரின் சிலைகளும் காணப்படுகின்றன. இந்தச் சுவரோவியங்களை ஆய்வுசெய்தபோது 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது தெரியவந்தது. இவை உலகின் மிகப் பழமையான எண்ணெய் வண்ண ஓவியங்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இரண்டு புத்தர் சிலைகளோடு அந்த ஓங்கலில் மனிதர்களால் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட குகைகளும் இருந்தன. அதனால் இந்தப் பகுதி ஆப்கானிஸ்தானின் வரலாற்றுச் சிறப்புமிக்க அகழ்வாராய்ச்சிக் களமாக இருந்தது. ஆனால் 2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபன் என்ற அரசியல் கட்சி ஆட்சியமைத்தது. தாலிபன்கள் பின்பற்றும் இஸ்லாமிய சமயம் உருவ வழிபாட்டை ஏற்றுக்கொள்வதில்லை என்பதால் இந்த இரண்டு புத்தர் சிலைகளையும் வெடிவைத்துத் தகர்க்க முடிவுசெய்தனர். உலகமுழுவதும் இருந்து அந்தச் சிலைகளை எதுவும் செய்யவேண்டாமென்ற கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும் தாலிபன்கள் ஏற்கவில்லை. இரண்டு சிலைகளும் இருந்த இடம் வெற்றிடமாக உள்ளன.

யுவான் சுவாங்கின் பதிவுகளில் படுத்த நிலையில் இருக்கும் பிரம்மாண்டமான புத்தர் சிலை ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார். 2008ஆம் ஆண்டு இந்தச் சிலையைத் தேடி மலையின் அடிவாரத்தில் இருப்பதைக் கண்டுபிடித்தனர் அகழ்வாராய்ச்சியாளர்கள். சுமார் 19 மீட்டர் நீளம்கொண்ட இந்தச் சிலையும் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.

பாமியன் ஓங்கலுக்கு தென்கிழக்கே சுமார் 3 கிமீ தூரத்தில் பாமியனின் கிளை நதிகளின் பள்ளத்தாக்குகளில் இன்னும் பல குகை தொகுப்புகளைக் காணலாம். நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கைகொண்ட இந்தக் குகைகளில் பொஆ 6 முதல் 13ஆம் நுற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த நினைவுச்சின்னங்கள் அமைந்துள்ளன. சசானிய காலத்தைச் சேர்ந்த சுமார் 10 மீட்டர் உயரமுள்ள புத்தர் சிலையின் எஞ்சியிருக்கும் துண்டுப் பகுதிகளும் ஓவியக் கோலங்களும் இங்கே உள்ளன.

ஓங்கலுக்கு தென்மேற்கே சுமார் 2 கிமீ தூரத்தில் ஃபுலாதி பள்ளத்தாக்கில் உள்ள கௌல்-இ-அக்ரம், லலாய் காமி குகைகளிலும் அலங்கார ஓவியக் கோலங்கள் காணப்படுகின்றன.

ஓங்கலுக்குத் தெற்கே பள்ளத்தாக்கின் நடுவே ஷாஹிர்-இ-குல்குலாஹ் என்றழைக்கப்படும் கோட்டை அமைந்துள்ளது. பொஆ 6 முதல் 10ம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்தது. இதுதான் பாமியனின் முதல் குடியேற்றப் பகுதி என நம்பப்படுகிறது. சீனாவையும் இந்தியாவையும் இணைக்கும் பட்டுச் சாலையில் பண்டைய பாக்ட்ரியாவில் தங்குமிடமாக இருந்தது.

பள்ளத்தாக்கின் கிழக்கே பொஆ 6 முதல் 8ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் அமைக்கப்பட்ட கல்லாய் கஃபாரி கோட்டையின் சிதிலமடைந்த சுவர்களையும் தங்குமிடங்களையும் பார்க்கலாம்.

இதற்கு கிழக்கே ஷாஹிர்-இ-ஜூஹக் என்றழைக்கப்படும் இடத்தில் பண்டைய சிதிலங்களின்மேலே எழுப்பப்பட்ட புதிய கட்டுமானங்களின் எச்சத்தைக் காணலாம். இவை பொஆ 10 முதல் 13ஆம் நூற்றாண்டுவரையில் ஆட்சிசெய்த இஸ்லாமியப் பேரரசுகளான கஸ்னாவித், கோரிட் வம்சத்தினரால் அமைக்கப்பட்டவை. 2003ஆம் ஆண்டு இந்தப் பகுதி முழுவதையும் உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது யுனெஸ்கோ.

(தொடரும்)

பகிர:
nv-author-image

கார்குழலி

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதுபவர். பல்வேறு அரசுத் துறைகளோடும் பன்னாட்டு அரசு சாரா அமைப்புகளோடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடும் நாளிதழ்களோடும் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். துலிகா, பிரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்களில் குழந்தைகளுக்காக நாற்பத்தைந்துக்கும் அதிகமான நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.View Author posts

1 thought on “உலகின் கதை #32 – பாமியன் புத்தர் சிலைகள்”

  1. அரசு செல்லையா

    எளிதில் படிக்குமாறும், பல செய்திகளைக் கொண்டும் அமைந்த கட்டுரை. பாராட்டுகள்.

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *