கம்போடியாவில் இருக்கும் அங்கோர் தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய அகழ்வாராய்ச்சிக் களங்களில் ஒன்று. தொன்மையான கட்டடங்களும் வனப்பகுதியும் இணைந்திருக்கும் அங்கோர் அகழ்வாராய்ச்சிப் பூங்காவில் கெமர் பேரரசின் தொல்பொருள் அழிபாட்டுச் சின்னங்களைக் காணலாம்.
கெமர் தென்கிழக்கு ஆசியாவின் பெரிய, வளமிக்க, பண்பாடுமிக்க பேரரசாகக் கருதப்படுகிறது. பொஆ 9ஆம் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டு வரையிலும் கம்போடியா பகுதியை ஆட்சிசெய்த கெமர் பேரரசின் காலம் பொற்காலம் எனப்படுகிறது.
கெமர் பேரரசு வடக்கு தெற்காக இந்தோசீன தீபகற்பம் முதல் சீனாவில் இருக்கும் யுன்னான் மாகாணம் வரையிலும் பரவி இருந்தது. கிழக்கு மேற்காக வியட்நாம் முதல் வங்காள விரிகுடா வரையிலும் நீண்டது. 9ஆம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுக்காலம் முதல் அங்கோரைத் தன்னுடைய வசிப்பிடமாக மாற்றியது முதலாம் யஷோவர்மன் என்ற கெமர் அரசன்.
கெமர் அரசர்கள் கடவுளின் பிரதிநிதியாகக் கருதப்பட்டனர் என்பதால் அங்கோர் நகரம் நிர்வாக மையமாக மட்டுமின்றி அரசரை வழிபடுவதற்கான மையமாகவும் இருந்தது. இந்தியாவின் சமய, அரசியல் கோட்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு அதே நேரம் கம்போடியா பகுதியின் கலாசாரத்தையும் ஒருங்கே கொண்டது அங்கோர் நகரம்.
முதலாம் யஷோவர்மனின் காலத்தில் அங்கோர் நகரம் யஷோதரபுரா என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இந்து சமயம் விவரிக்கும் அண்டவியல் மாதிரியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. நடுவே இருக்கும் கூர்ங்கோபுர வடிவ வழிபாட்டிடத்தை கடவுளர்கள் வசிக்கும் மேரு மலையாக உருவகப்படுத்திக்கொண்டு அதைச் சுற்றிலும் நகரம் அமைக்கப்பட்டது. அந்தப் பகுதியில் இயற்கையாக அமைந்திருக்கும் ப்னோம் பாகெங்க் மலையின் சாயலை ஒத்திருந்தது.
அதேபோல ஒவ்வொரு வழிபாட்டிடத்தின் மையத்தில் அமைக்கும் கட்டடமும் மேரு மலையின் நிலையைப் பிரதிபலிப்பதாக இருந்தது. அண்டம் அல்லது உலகின் எல்லையில் இருக்கும் மலைகளின் அமைப்பை ஒத்திருக்கும் வகையில் நகரின் வெளிச்சுவர் உருவாக்கப்பட்டது. உள்ளே பேரரசர் வசிக்கும் அரண்மனையும் இருந்ததால் எதிரிகளின் படையெடுப்பில் இருந்து நகரையும் மக்களையும் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டது எனக் கொள்ளலாம்.
அங்கோரின் நீர்த்தேக்கங்களும் கால்வாய்களும் அகழிகளும் அண்டத்தின் நீரை நினைவுபடுத்துவதாக இருந்தாலும் நீர்மேலாண்மை, நீர்ப்பாசனம் ஆகிய மக்கள் நலன் சார்ந்த முக்கிய பணிகளையும் நிறைவேற்றின. கெமர் அரசர்கள் அங்கோர்வாட், அங்கோர் தோம், பேயோன் ஆகிய வழிபாட்டிடங்களைக் கட்டினார்கள்.
அங்கோர் வாட்டை நகோர் வாட் என்றும் அழைக்கின்றனர். ’கோயில் நகரம் என்று பொருள். நகோர் என்றால் ’நகரம்’ என்றும் ‘வாட்’ என்றால் கோயில் என்றும் பொருள். வடமொழி அல்லது பாலி மொழி வேர்ச்சொற்களை அடிப்படையாகக் கொண்டது. ‘வ்ரஹ் விஷ்ணுலோகா’ அல்லது ‘பரம விஷ்ணுலோகா’ என்பதுதான் மூலப்பெயர்.
அங்கோர் வாட் வழிபாட்டு வளாகம் பொஆ 1113 முதல் 1150ஆம் ஆண்டு வரையில் ஆட்சியில் இருந்த இரண்டாம் சூர்யவர்மனால் கட்டப்பட்டது. முந்தைய மன்னர்களின் சிவ வழிபாட்டில் இருந்து விலகி திருமாலுக்கான வழிபாட்டிடத்தை அமைத்தான் எனக் கூறப்படுகிறது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட நினைவுச்சின்னங்களைக்கொண்ட இந்த வளாகம் உலகின் கலாசார ஆச்சரியங்களில் ஒன்றாகும். வழிப்பாட்டிடம், மன்னனின் மறைவுக்குப் பிறகு அவனுடைய நினைவிடம் என இரு வேறு குறிக்கோளோடு கட்டப்பட்டது. 400 ஏக்கர் பரப்பளவுகொண்ட இந்த வளாகத்தைக் கட்டிமுடிக்கச் சுமார் முப்பது வருடங்களானது.
வெளிச்சுவரைத் தாண்டி உள்ளே வந்ததும் இருக்கும் திறந்தவெளியில் இருக்கும் அகழியைக் கடந்துதான் வழிபாட்டிடத்தை அடையமுடியும். கிழக்கில் மண்ணாலான பாலமும் மேற்குப்புறத்தில் மரப்பாலமும் காணப்படுகின்றன. வழிபாட்டிடம் நகரின் மட்டத்தில் இருந்து சற்றே உயரமான தளத்தில் அமைந்திருக்கிறது.
அங்கோர் வாட் வழிபாட்டிடத்தின் நுட்பமான வடிவங்களும் அலங்கார அமைப்புகளும் இந்து சமயத்தை மையமாகக்கொண்டு அமைக்கப்பட்டன. மையத்தில் இருக்கும் ஐந்து கோபுரங்களும் இந்து புராணத்தில் கடவுளர்களின் வாழ்விடமாகச் சொல்லப்படும் மேரு மலையைக் குறிப்பன. சுற்றி இருக்கும் பிரம்மாண்டமான அகழி மேரு மலையைச் சுற்றி இருக்கும் பெருங்கடலைச் சுட்டுகிறது.
தற்போது தெற்கு கோபுரத்தில் காணப்படும் எட்டுக் கைகளைக்கொண்ட டா ரீச் என்ற கடவுளின் சிலை விஷ்ணுவின் சிலை என்றும் ஒரு காலத்தில் மைய கோபுரத்தில் இருந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. நான்கு புறமும் இருக்கும் கோபுரங்களுக்கு நடுவே நீண்ட மண்டபங்களைக் காணலாம். மைய கோபுரத்தின் இருபுறமும் இருக்கும் பெரிய வாயிலை ‘யானை வாயில்’ என்று அழைக்கின்றனர். ஒரு காலத்தில் யானைகள் இங்கே வருவதற்காக அமைக்கப்பட்டிருக்கலாம். மண்டபங்களின் உட்கூரையிலும் சுவரிலும் அலங்காரப் பலகணிகள், தாமரை மலர் வடிவங்கள், நடனமாடும் அப்சரஸ்கள், விலங்குகளின்மீது அமர்ந்திருக்கும் வீரர்கள் போன்ற சிற்பங்களைப் பார்க்கலாம். இரண்டாவது மண்டபத்தின் அடைவதற்கான படிக்கட்டின் இருபுறமும் சிங்கச் சிலைகளைக் காணலாம். வழிபாட்டிட வளாகத்தின் வடக்கு தெற்கு பகுதிகளில் நூலகங்கள் காணப்படுகின்றன, நான்கு புறம் இருந்தும் உள்ளே நுழையும்படியாக வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேற்கில் இருக்கும் கூடத்துக்கு ப்ரியா போஆன், அதாவது ’ஆயிரம் புத்தர்களின் கூடம்’ என்று பெயர். பல நூற்றாண்டுகளாக இங்கே வருகை தரும் பக்தர்கள் புத்தரின் சிலைகளை விட்டுச்செல்வது வழக்கம் என்பதால் இந்தப் பெயர் வந்திருக்கலாம். இப்போது அந்தச் சிலைகள் எதுவும் இல்லை என்றாலும் பெயர் மட்டும் தங்கிவிட்டது. இந்தப் பகுதியில் கெமர், பர்மிய, ஜப்பானிய மொழிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
வழிபாட்டிடத்தின் இரண்டாம் நிலையில் இருந்து தேவதைகளின் சிற்பங்களைப் பார்க்கமுடிகிறது. அடுத்த நிலைக்குச் செல்ல உயரமான படிக்கட்டுகள் உள்ளன. கடவுளர்களின் சாம்ராஜ்யத்தை எளிதில் அடையமுடியாது என்பதற்கான குறியீடாக இருக்கலாம். இதையடுத்து அமைந்திருக்கும் உட்புறக் கூடத்தை பகான் என்கின்றனர். உட்கூரைகளில் பாம்பு உடலும் சிங்கம் அல்லது கருட முகம் கொண்ட உருவங்கள் உள்ளன. வாயில்களில் அலங்காரமாகச் செதுக்கப்பட்ட நிலைப்படிகளை அமைத்துள்ளனர். மையத்தில் இருக்கும் கோபுரம் நாற்புறமும் உள்ள கோபுரங்களைவிடவும் உயரமான நிலையில் உள்ளது.
கோவிலின் சுவர்களில் இந்துக் கடவுள்களின் வடிவங்கள், இந்து இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின் காட்சிகள், பண்டைய கெமர் பற்றிய காட்சிகள் ஆகியவை புடைப்புச் சிற்ப பாணியில் வடிக்கப்பட்டுள்ளன. மேற்கே இருக்கும் கூடத்தில் இலங்கையில் இராமனுக்கும் இராவணனுக்கும் இடையே நடைபெற்ற போர், மகாபாரதப் போர் நடைபெற்ற குருட்சேத்திரப் போர் ஆகியவை சித்தரிக்கப்பட்டுள்ளன. கிழக்குக் கூடத்தில் பாற்கடலைக் கடையும் காட்சியைக் காணலாம். வடக்குப் புறத்தில் பாணாசுரனை கிருஷ்ணர் வதம் செய்யும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தெற்கே மன்னன் இரண்டாம் சூரியவர்மன் நகர்வலம் செல்லும் காட்சியைப் பார்க்கமுடிகிறது.
1177இல் கெமர்களைத் தோற்கடித்து சம் இனத்தவர்கள் வியட்நாமைக் கைப்பற்றினர். 1181 முதல் 1220ஆம் ஆண்டு வரையில் ஆட்சிசெய்த இரண்டாம் ஜெயவர்மன் இந்துக் கடவுள்கள் தனக்கு நன்மைசெய்வார்கள் என்ற நம்பிக்கையை இழந்தான். மனைவி இந்திராதேவி பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர். மன்னனும் பௌத்த சமயத்தை ஏற்றுக்கொண்டு அங்கோர் தோம் என்ற புதிய தலைநகரை எழுப்பி பௌத்த சமயத்துக்கு சமர்ப்பித்தான். அதற்குப் பிறகு அங்கோர் வாட்டும் பௌத்த வழிபாட்டிடமாக மாறியது. அங்கிருந்த இந்துக் கடவுளர்களின் சிற்பங்கள் அகற்றப்பட்டு பௌத்த கலைசார்ந்த சிற்பங்கள் நிறுவப்பட்டன.
15ஆம் நூற்றாண்டுவாக்கில் அங்கோர் பகுதி பொது மக்களின் நினைவுகளில் இருந்து மறைந்தாலும் முற்றிலும் மறக்கப்படவில்லை. 17ஆம் நூற்றாண்டில் ஜப்பானைச் சேர்ந்த பௌத்த துறவியர் இங்கே வந்து தங்கி அங்கோர் வாட்டைப் பராமரித்தனர் என்பதற்கான 14 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இதை ஜேதவனா என்னும் புத்த விகாரை என எண்ணினர். பௌத்த சமயத்தின் புனிதப் பயணம் செல்லும் புண்ணியத் தலமாக கருதப்பட்டது அங்கோர் வாட். 1632இல் ஜப்பானியப் பயணி உகோண்டாயூ கசுஃபூசா இந்த வழிபாட்டிடத்தில் தங்கியிருந்து ஏப்ரல் 13-14 தேதிகளில் கெமர் புத்தாண்டான மஹா சங்க்ராந்தியைக் கொண்டாடினார் என்பதற்கான குறிப்புகள் கிடைத்துள்ளன.
நகரின் வெளிச்சுவரையும் வழிபாட்டிடத்தையும் அமைக்க மணற்பாறையைப் பயன்படுத்தினர், மற்ற பகுதிகளை மரத்தால் அமைத்தனர் என்பதால் அவை காலப்போக்கில் சேதமடைந்துவிட்டன. நிலநடுக்கம், உள்நாட்டுப் போர் எனப் பல காரணங்களால் அங்கோர் வாட் அழிவைச் சந்தித்தது.
1863ஆம் ஆண்டு பிரெஞ்சு காலனி ஆட்சியில் அங்கோர் வாட் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டது. கிரேக்கர்களோ ரோமானியர்களோ நிறுவிய எந்த நினைவுச்சின்னத்தைவிடவும் அழகும் நேர்த்தியும் கம்பீரமும் கொண்டது எனக் கொண்டாடப்படுகிறது. உலகின் மிகப் பெரிய சமய நினைவுச்சின்னம் என்ற கின்னஸ் புத்தகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றது. 1992ஆம் ஆண்டு யுனெஸ்கோ பாரம்பரியப் பட்டியலில் இணைக்கப்பட்டது.
(தொடரும்)
Photo of the central structure of Angkor Wat by Jakub Hałun, Wikipedia