Skip to content
Home » உயிர் #1 – ஒரு பூவில் என்ன இருக்கிறது?

உயிர் #1 – ஒரு பூவில் என்ன இருக்கிறது?

ஒரு பூவில் என்ன இருக்கிறது

இந்தப் பிரபஞ்சமே ஓர் ஆச்சரியம் என்றால், அந்த ஆச்சரியத்தின் பேரதிசயம் உயிர்கள். உலகில் பலதரப்பட்ட உயிர்கள் இருக்கின்றன. பூமியில் மட்டும் 87 லட்சம் வகை உயிரினங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கின்றனர். அதாவது பூமியில் மட்டும். பிரபஞ்சத்தில் வேறு எங்காவது ஒரு கோளில் உயிர் இருந்தால் அவை இந்தக் கணக்கில் சேராது. இப்போது இருப்பதை போக, ஏற்கெனவே சில உயிர்கள் பூமியில் வாழ்ந்து அழிவைச் சந்தித்துள்ளன.

பிரபஞ்சத்தில் உள்ள விண்மீன் மண்டலங்கள். அதில் ஒளிரும் நட்சத்திரங்கள். அந்த நட்சத்திரங்களை வட்டமிட்டு நடனமாடும் கோள்கள். அந்தக் கோள்களில் ஒன்று பூமி. அதில் அதிசயம் போல் தோன்றியவை உயிர்கள்.

பிரம்மாண்ட திமிங்கலம் முதல் கண்ணுக்கே தெரியாத வைரஸ்வரை ஒவ்வொரு உயிரும் வாழ்தலுக்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இவை எல்லாம் எங்கிருந்து பூமிக்கு வந்தன? எவ்வாறு இயங்குகின்றன? அவற்றை இயக்கும் சக்தி எது? மதங்கள் சொல்வதுபோல இந்த உயிர்களை யாரேனும் படைத்தார்களா? அல்லது தன்னிச்சையாக தோன்றியனவா? ஓர் உயிரினம் தன்னிச்சையாகத் தோன்ற முடியுமா? தன்னிச்சையாக தோன்றியது என்றால் அதற்குப் பின் ஏதாவது காரணம் இருக்கமுடியுமா? ஏன் உயிர்கள் தோன்ற வேண்டும்? எதற்கு உயிர் வாழ வேண்டும்? எதற்காகச் சாக வேண்டும்? இப்படிப் பல கேள்விகள் நமக்குள் எழும்.

நாம் சிறுவயதில் இருந்தே மாயாஜாலக் கதைகள் படித்து வளர்ந்திருப்போம். அந்தக் கதைகளில் ஏதாவது ஒரு சாமானியன் முனிவரிடம் சாபம் வாங்கிகொண்டு மானாக மாறிவிடுவான். இளவரசி முத்தமிட்டால் தவளையும் ராஜகுமாரனாக மாறிவிடும். இதுபோன்ற பல கதைகளை ரசித்திருப்போம். இவை வெறும் கதைகள் என்று நம் ஆழ்மனதிற்கு தெரியும் என்பதால் அவற்றை அத்துடன் மறந்துவிடுவோம்.

உண்மையில் இன்று பூமியில் வாழும் உயிர்களும் இப்படி உருவாகி வந்தவைதான் எனச் சொன்னால் நம்புவீர்களா? குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்று நாம் பள்ளியில் படித்திருப்போம். அது எப்படிச் சாத்தியம் என யோசித்திருக்கிறீர்களா?

உங்கள் மூதாதையரை நினைத்துகொள்ளுங்கள். மூதாதையர் என்றவுடன் உங்களுக்கு தாத்தா, பாட்டி ஞாபகம் வரலாம். இன்னும் சிலருக்குக் கொள்ளுத்தாத்தா, எள்ளுத்தாத்தா கூட கற்பனையில் நினைவில் இருக்கலாம். ஆனால் 18.5 கோடி வருடங்களுக்கு முன் சென்று உங்களுடைய முன்னோர்கள் யார் என்று பார்த்தால் யாராக இருப்பார்கள் தெரியுமா? ஒரு மீன்தான்.

உங்களுக்கு மட்டும் இல்லை. என்னுடைய மூதாதையரும் மீன்தான். ஏன் இந்தப் பூமியில் உள்ள எல்லா மனிதர்களும், எல்லா முதலைகளும், எல்லா பறவைகளும், எல்லா மரங்களும், ஏன் எல்லா பூச்சிகளும் ஒரே மூதாதையரைத்தான் கொண்டிருக்கின்றன. நம்புவதற்கு ஆச்சரியமாக இருக்கிறதா? இவை மாயாஜாலக் கதைகள் கிடையாது. மந்திர தந்திரங்கள் அல்ல. முழுக்க முழுக்க அறிவியல். உண்மை என நிரூபிக்கப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல்.

நாம் நிஜ வாழ்வில் பார்க்கும் ஒவ்வொரு உயிரினமும் ஏதோ அதிர்ஷ்டத்தினாலோ சந்தர்ப்பத்தினாலோ வந்துவிடவில்லை. எல்லாவற்றுக்கும் பின்னால் ஆழ்ந்த, அதிசயிக்கத்தக்க அறிவியல் இருக்கிறது. ஒரு கவித்துவக் காரணி இருக்கிறது. இதைப் பற்றி தெரிந்துகொள்வது நம்மை நிச்சயம் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். நாம் இப்போது அந்த நிஜத்தைப் பற்றிதான் பார்க்கப்போகிறோம். நிஜத்தில் ஒவ்வொரு பகுதியையும் அலசப்போகிறோம்.

இயற்கையைக் கவித்துவ மாயாஜாலம் எனச் சொல்லலாம். ஆழ்ந்த இசை ஓடும்போது நம்மை அறியாமலேயே கண்ணீர் வருகிறது. இது எப்படி நிகழ்கிறது? இது ஒரு மாயாஜால நிலை இல்லையா? நாம் இரவில் வானத்தைப் பார்க்கிறோம். வானில் கோடிக்கணக்கான விண்மீன்கள் மின்னிக்கொண்டு நடனமாடுகின்றன. நம் உணர்வு ஏதோ உன்னத நிலைக்குச் சென்றுவிடுகிறது. இதுவும் ஒரு மாயாஜால நிலைதானே?

சூரியன் உதிப்பதை தரிசிக்கும்போதும், மலை உச்சியில் இருந்து எழிலை ரசிக்கும்போதும், மழை வானில் வானவில் தோன்றும்போதும், இந்த மாயாஜால உணர்வு நமக்கு ஏற்படுகிறது.

சிலருக்கு உடல் சிலிர்கிறது. சிலருக்கு நாம் உயிர்ப்புடன் இருப்பதாகத் தோன்றுகிறது. இந்த நிலையை என்னவென்று அழைக்கமுடியும்? உண்மையில் இந்த உலகில் நாம் பார்க்கும் விஷயங்கள் சாதரணமாக நடைபெறும் நிகழ்வுகள்தான். ஆனாலும் சில நிகழ்வுகள் நம்மைப் பரவசப்படுத்துகின்றன. இந்த நிலையைத்தான் நாம் கவித்துவ மாயாஜாலம் என்கிறோம்.

வானத்தில் பறக்கும் பறவைக்கூட்டங்களையே நம்மால் அதிசயித்துப் பார்த்து ஆழ்ந்த நிலைக்குச் செல்ல முடிகிறது என்றால், அந்தப் பறவைகள் எப்படித் தோன்றின என அறிந்துகொள்வது எவ்வளவு பரவசமூட்டக்கூடியதாக இருக்கும்? ஒரு விதை எப்படிப் பூமியில் இருந்து துளிர்த்து எழுந்து, இலை விரித்து, மலர்களாகப் பூத்து குலுங்குகிறது என்று பார்த்தோமானால் அதைவிட சிறந்த தரிசனம் இருக்க முடியுமா?

அறிவியல் குறித்து புகழ்பெற்ற விஞ்ஞானியான ரிச்சர்ட் ஃபெயின்மேனின் கதை ஒன்று இருக்கிறது.

ரிச்சர்ட் ஃபெயின்மேனின் நண்பர் ஒருவர் ஓவியராக இருந்தார். இருவரும் ஒருநாள் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது நண்பர் கேட்கிறார்: ஒரு பூ பூக்கிறது. நான் பூவின் அழகை ரசிக்கிறேன். அதன் அழகை ஆராதனை செய்கிறேன். நீங்கள் விஞ்ஞானிகள் அதே பூவை ஆராய்கிறீர்கள். கேள்வி எழுப்புகிறீர்கள். அந்தப் பூவை பிய்த்துப்போட்டு சுவாரஸ்யமில்லாத வரட்டுத் தகவல்களை தேடுகிறீர்கள். இதனால் என்ன கண்டுவிட்டீர்கள்?

இந்தக் கூற்றை மறுத்து ஃபெயின்மேன் பதிலளிக்கிறார்: நீ பூவின் வெளிப்புறத் தோற்றத்தில் மட்டும் அதன் அழகைப் பார்க்கிறாய். நான் பூவின் அகத்திற்குள் செல்கிறேன். அதனுள்ளே ஒழுங்குடன் அமையப்பட்டிருக்கும் செல்களின் தொகுப்பில் அழகு இருக்கிறது. செல்களின் இயங்கியலில் அழகு இருக்கிறது. அழகு என்பது அதன் தோற்றம் என்ற ஒரு பரிமாணத்தில் மட்டும் கிடையாது. அதன் உள் வடிவமைப்பில் நிறைய பரிமாணங்கள் உள்ளன.

பூ ஏன் இந்த வடிவத்தில் பரிணமித்துள்ளது? ஏன் குறிப்பிட்ட இந்த நிறத்தைப் பெற்றிருக்கிறது? மகரந்தச் சேர்க்கைக்காக ஏன் பூச்சிகளைக் கவர்கிறது? ஏன் சில பூச்சிகளுக்கு மட்டும் இந்தப் பூவின் வண்ணம் ஈர்க்கிறது? அப்போது பூச்சிகளால் வண்ணங்களைக் காண முடியுமா? அப்போது பரிணாம வளர்ச்சியின் கீழ்நிலை உயிர்களுக்கும் அழகியல் உணர்வு உண்டா? அழகியல் என்ற உணர்வு ஏன் தோன்ற வேண்டும்? இது போன்று எழும் அடுத்தடுத்த சுவாரஸ்யமான கேள்விகள் அறிவியல் என்பது வெறும் வறட்டு கோட்பாடு அல்ல என்பதை நிரூபிக்கும். அது ஒரு பூவின் (ஒரு பொருளின்) அழகைச் சுற்றி இருக்கும் ஆச்சரியத்தையும், மர்மத்தையும், மலைப்பையும் பிரமிப்பையும் கூட்டுகிறது.

இதுதான் ஃபெயின்மேனின் அழகிய அறிவியல் விளக்கம்.

அவர் தொட்டுக்காட்டிய அறிவியலின் அழகைத்தான் கவித்துவ மாயாஜாலமாக நாம் அவதானிக்க இருக்கிறோம்.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *