ஐம்புலன்களால் உணர முடியாத விஷயங்களும் பிரபஞ்சத்தில் இருக்கின்றன. அவற்றைப் பொய் என விட்டுவிட முடியுமா?
உதாரணத்திற்கு விண்வெளியில் தொலைதூரத்தில் விண்மீன் கூட்டம் ஒன்றிருக்கிறது. அவற்றை நம்மால் வெறும் கண்ணால் பார்க்க முடியாது. அதில் இருந்து சத்தம் ஏதாவது வருகிறது என்றால் காதுகளால் கேட்கவும் முடியாது. அவற்றைத் தொட்டு உணரவோ, சுவை இருக்கிறதா என்றோ, வாசம் இருக்கிறது என்றோ நம்மால் புரிந்துகொள்ள முடியாது. பிறகு எப்படி விண்மீன் கூட்டம் இருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்கிறோம்?
தொலை தூரத்தில் இருக்கும் விண்மீன் கூட்டங்களை விடுங்கள். நமக்கு அருகிலேயே, ஏன் நமது கைகள், கால்கள், காதுகள் என உடல் மேலேயே குடும்பம் நடத்துகின்றன பாக்டீரியாக்கள். அவற்றையும் நம் வெறும் கண்களால் பார்க்க முடியாது அல்லவா? இவற்றைப் பார்க்க முடியவில்லை என்பதால் அவை உண்மை இல்லை என்ற முடிவுக்குதானே நாம் வர வேண்டும்? கிடையாது.
நம் உடலில் உள்ள புலன்களுக்கு ஓர் எல்லை இருக்கிறது. அந்த எல்லைக்கு உட்பட்ட பொருட்களை மட்டும்தான் நாம் அறிய முடியும். நம் புலன்களால் அறிய முடியாத அல்லது நம் புலன் அறிதலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை அறிவதற்கு நாம் கருவிகளை உருவாக்கி வைத்திருக்கிறோம். விண்மீன் கூட்டங்களை வெறும் கண்களால் காண முடியாது என்பதால் பார்வையை விரிவு செய்வதற்காக தொலைநோக்கியையும், பாக்டீரியாக்களைக் காண மைக்ரோஸ்கோப்களையும் பயன்படுத்துகிறோம். உண்மையில் நாம் பயன்படுத்தும் கருவிகள் நமது புலன்களின் வீச்சை அதிகரிக்கவே உதவுகிறது. நம் புலன்களின் எல்லையை விரிவு செய்யவே பயன்படுகிறது. நம் பார்வை புலன்களின் ஆற்றலை செயற்கையாக விரிவுப்படுத்தி மிகத் தொலைவில் இருப்பதையும், மிகச்சிறிய உயிர்களையும் பார்க்க இக்கருவிகள் உதவுகின்றன.
ரேடியோ அலைகளை எடுத்துகொள்வோம். ரேடியோ அலைகள் இருக்கின்றன என்பது நமக்கு எப்படித் தெரியும்? அவற்றை நம்மால் பார்க்கவும் முடியாது, கேட்கவும் முடியாதே? இதற்கும் நாம் சிறப்புக் கருவிகளை வைத்திருக்கிறோம். உதாரணத்திற்கு தொலைக்காட்சிப் பெட்டி. தொலைக்காட்சிப் பெட்டி ரேடியோ அலைகளைச் சமிக்ஞைகளாக மாற்றி நாம் பார்க்கும் வகையில் காட்சிகளாகவும், கேட்கும் வகையில் ஒலியாகவும் தருகிறது. அதனால் நம்மால் ரேடியோ அலைகளைப் பார்க்க முடியாவிட்டாலும், கேட்க முடியாவிட்டாலும் அதுவும் உண்மையின் ஓர் அங்கம் எனப் புரிந்துகொள்கிறோம்.
ரேடியோ தொலைநோக்கிகளும், எக்ஸ்ரே தொலை நோக்கிகளும் விண்மீன்களையும் விண்மீன் மண்டலத்தையும் வேறொரு பார்வைக்கு உட்படுத்துகிறது. அதாவது நம் புலன்களால் அறிந்துகொள்ள முடியாத உண்மை குறித்த புரிதலைப் பெற்றுத் தருகிறது.
நிற்க, இந்தப் பிரபஞ்சத்தில் வேறு சில விஷயங்களும் இருக்கின்றன. அவற்றை நம் ஐந்து புலன்களால் நேரடியாக உணரவும் முடியாது. அவற்றை அறிந்துகொள்ள நம் புலன்களை விரிவுப்படுத்தும் கருவிகளும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. உதாரணத்திற்கு நாம் மேலே பார்த்த அணுக்கள். அணு என்பது மிகச்சிறிய பொருள். சிறிய அளவு. பிரபஞ்சம் முழுவதும் அணுக்கள் வியாபித்து இருக்கின்றன. ஆனால் அவற்றை நாம் வெறும் கண்களால் பார்க்க முடியாது. ஐந்து புலன்களால் உணர முடியாது. எந்தக் கருவிகளை கொண்டும் காண முடியாது. பிறகு எப்படி அணு என்ற ஒன்று இருக்கிறது என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம்? எப்படி அவற்றை ஏற்றுக்கொள்கிறோம்? உறுதி செய்கிறோம்?
இதற்குதான் விஞ்ஞானிகள் ‘மாதிரி’ (Model) என்ற முறையைப் பயன்படுத்துகின்றனர். இந்த மாதிரி முறையை பயன்படுத்தி நம் புலன்களுக்கு எட்டாத ஒரு விஷயத்தை, அதன் தன்மையைச் சோதித்துப் பார்த்து உறுதி செய்ய முடியும். மாதிரி என்றால் என்ன? நாம் மனிதர்கள், கற்பனை சக்தி படைத்தவர்கள். நாம் எல்லாவற்றையும் கற்பனை செய்கிறோம். அதனால் நம் புலன்களுக்குப் புலப்படாத விஷயங்களை இப்படி இருக்கலாம் என்று ஒரு கற்பனையாகத் தீட்டுகிறோம். பிறகு அவற்றைச் சோதித்து பார்க்கிறோம். இதை வைத்து அது சரிதானா என முடிவு செய்கிறோம். இதையே மாதிரி முறை என்கிறோம்.
இந்தப் பிரபஞ்சம் எண்ணற்ற புதிர்களை கொண்டுள்ளது. அந்தப் புதிர்களுக்கான விடை புலன்களாலும் கருவிகளாலும் அறியமுடியாதவாறு இருக்கிறது. அதனால் அவற்றைத் தெரிந்துகொள்வதற்கு விஞ்ஞானிகள் மாதிரிகளை உருவாக்குகின்றனர். பிறகு அது சாத்தியமா எனக் கணிதச் சமன்பாடுகள்மூலம் சோதனை செய்கின்றனர். கருவிகளைக் கொண்டும் சோதிக்கின்றனர். பிறகு நாம் கற்பனை செய்தது, கணித்தது சரிதானா என்ற முடிவுக்கு வருகின்றனர்.
நாம் கற்பனை செய்தது சரியாக இருந்தால், அதன்பின்னும் விட்டுவிடுவதில்லை. அதை ஊர்ஜிதம் செய்வதற்கு மீண்டும் சில பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். இவ்வாறு நாம் உருவாக்கிய மாதிரியைப் பல்வேறுகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தி, அவற்றைச் செம்மைப்படுத்தி, பின் இறுதியாக உறுதி செய்கின்றனர். அதன் பிறகுதான் அவற்றுக்கு ‘உண்மை’ என்ற அங்கீகாரத்தை வழங்குகின்றனர். ஒருவேளை மேற்கூறிய வழிமுறைகளில் ஏதாவது ஓரிடத்தில் அந்த மாதிரி தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டால் தூக்கிக் கடாசிவிட்டு, வேறு மாதிரியை உருவாக்கிச் சோதனைக்கு உட்படுத்துகின்றனர். இதுதான் அறிவியல் பின்பற்றும் வழிமுறை.
நாம் பார்த்த அணுக்கள், அவை இயங்கும் முறை, அவற்றின் வடிவம், அவற்றின் உள்ளே இருக்கும் அணுக்கருக்கள், எலக்ட்ரான்கள், இரண்டுக்கும் இடையேயான இடைவேளி உள்ளிட்ட புரிதல்களை நாம் பல வகையான மாதிரிகளின் துணை கொண்டுதான் ஊர்ஜிதம் செய்திருக்கிறோம். அணுக்கள் மட்டுமல்ல. உயிர்களின் உடலுக்குள் நடைபெறும் செயல்பாடுகளையும் நாம் மாதிரிகளைக் கொண்டே தெரிந்துகொண்டோம். உயிர்களுக்குள் இருக்கும் டி.என்.ஏக்கள், மரபணுக்கள் உள்ளிட்டவை குறித்த புரிதல்களும் நமக்கு இவ்வாறுதான் கிடைத்துள்ளன.
இன்று நாம் கண்டறிந்துள்ள பல அறிவியல் உண்மைகளை மேற்கூறிய மூன்று வழிமுறைகளின் வழியில்தான் கண்டடைந்தோம். இனியும் இதே வழியைத்தான் பின்பற்றுவோம். இந்த உலகம் எப்படித் தோன்றியது? தோன்றுவதற்கு முன் என்ன இருந்தது? மனிதர்களால் காலப் பயணம் செய்ய இயலுமா? பல கடினமான கேள்விகளுக்கான பதில்களை நாம் மாதிரிகளை உருவாக்கி அதன்மூலம் தேடி வருகிறோம். அந்த பதில்கள் பலதரப்பட்ட சோதனைகளுக்குப் பிறகு மேற்கூறிய முறைகள் மூலம் ஊர்ஜிதமானால் அவையும் நம்முடைய உண்மையின் பட்டியலுக்குள் இணையும். இல்லை என்றால் மூடநம்பிக்கை என்று புறந்தள்ளப்படும்.
இங்கே ஒன்றை சொல்லியாக வேண்டும். அறிவியல் எதையும் இறுதி உண்மை என மதிப்பிடுவதில்லை. அது தொடர்ந்து தன் கண்டுபிடிப்புகளையே சோதனைக்கு உட்படுத்துகிறது. முன்பு அறிவியலால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பிறகு புறந்தள்ளப்பட்ட மாதிரிகளும், கண்டுபிடிப்புகளும் நம்மிடம் ஏராளமாக இருக்கின்றன. இவ்வளவு ஏன், இன்று நாம் உண்மை என நம்பி வரும் பல விஷயங்கள் எதிர்காலத்தில் அறிவியலால் மாற்றுப்பார்வைக்கு உட்படுத்தப்படலாம். அறிவியல் அதைத்தான் செய்யும். ஆனால் மனிதர்களுக்குத்தான் அறிவியலை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அப்போதும் தேவைப்படும்.
(தொடரும்)