Skip to content
Home » உயிர் #10 – வேதியியலின் அதிசயம்

உயிர் #10 – வேதியியலின் அதிசயம்

ஒற்றைச் செல் உயிர்கள்

பூமியிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் சுமார் 3.5 கோடி வருடங்களுக்கு முன்பு முதன்முதலில் தோன்றிய ஒற்றைச் செல் உயிர்களில் இருந்தே உருமாறி வந்திருக்கின்றன. இதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் அந்த முதல் செல் எவ்வாறு தோன்றியது என்பதற்கான பதில் இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை. உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்கள் அந்த ரகசியத்தை தெரிந்துகொள்வதற்குத்தான் போராடிக்கொண்டிருக்கின்றனர். சிலர், உயிரைத் தோற்றுவித்த விதை விண்வெளியில் இருந்து வந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர். அதற்கான சாத்தியக்கூறுகள் விண்வெளியெங்கும் வியாபித்து இருக்கின்றன என்பதை நாம் ஏற்கெனவே பார்த்தோம்.

ஆனால் விண்ணில் இருந்து வராமல் பூமியில் நடைபெற்ற எளிய வேதி வினைகளின் மூலமே முதல் உயிர் தோன்றியிருக்கலாம் என்ற ஒரு கருத்தும் மற்றொரு தரப்பில் முன்வைக்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான விஞ்ஞானிகளால் ஏற்றுக்கொள்ளப்படும் கருத்தாகவும் இதுதான் இருக்கிறது. இதைக் குறித்துத்தான் இப்போது விரிவாகப் பார்க்கப்போகிறோம்.

பிரபஞ்சத்தில் உள்ள பருப்பொருட்கள் அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டவை. இந்த மாறுதல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைக் குறித்து அறிவதுதான் வேதியியல். குறிப்பாக எப்படி அணுக்கள் ஒன்றோடு ஒன்று ஊடாடி மூலக்கூறுகளாக, சேர்மங்களாக உருமாறுகின்றன? அந்த மூலக்கூறுகள் எப்படி ஒன்றிணைந்து ஒழுங்கமைக்கப்பட்ட வேதி அமைப்பாக (Organized Chemical System) திகழ்கிறது என்பதைத்தான் வேதியியல் ஆராய்கிறது.

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் வேதி அமைப்பால் ஆனவை. நாம் சுவாசிக்கும் காற்று, நடக்கும் தரை, நடப்பதற்காக அணிந்திருக்கும் செருப்பு, செருப்புக்குள் இருக்கும் பாதம் என உயிரற்ற, உயிருள்ள அனைத்தும் வேதிப்பொருட்களால்தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்திலுமே இடைவிடாமல் வேதி வினைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பனிக்கட்டிகள் உருகுவது, மழை பெய்வது, எரிமலை வெடிப்பது இவை வேதிவினைகள்தான். அதேபோல உயிர்களுக்குள் நடப்பதும் வேதிவினைகள்தான். நீங்கள் எந்த ஓர் உயிரினத்தின் செல்களை வேண்டுமானாலும் எடுத்துகொள்ளுங்கள். பூமியிலேயே மிகப்பெரிய உயிரினமாகக் கருதப்படும் திமிங்கலமாக இருந்தாலும் சரி, கண்ணுக்கே தெரியாத வைரஸ்களாக இருந்தாலும் சரி, அத்தனை உயிர்களுக்குள்ளும் பிரபஞ்சத்தின் இயக்கமே வேதி வினைகளாக நடைபெற்றுகொண்டிருக்கிறன.

இந்த வினைகள் தொடர்ந்து ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட பாதையில் நடைபெறுகின்றன. ஒரு வினை மற்றொரு வினையைத் தூண்டுகிறது. அது மற்றொன்றைத் தூண்டுகிறது. இவ்வாறு உயிர்களுக்குள் நடைபெறும் பல்வேறு வேதி வினைகளின் சீரமைப்பைத்தான் விஞ்ஞானிகள் வளர்சிதைமாற்றத் தடவழி (Metabolic Pathway) என்கின்றனர். முதலில் தோன்றிய உயிர் இயற்கையாகவே இவ்வாறு வளர்ச்சிதை மாற்றங்களுக்கு ஏற்றாற்போல் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

உயிரினங்களின் செல்கள் அனைத்தும் அமினோ அமிலங்கள், சர்க்கரை ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்டுள்ளன. அவைதான் கட்டுமானங்களைப்போல ஒன்றிணைந்து, சிக்கலான, அதேசமயம் ஒழுங்கமைக்கப்பட்ட மரபணுக்கள், புரதங்கள், செல்களின் சவ்வு போன்றவற்றை உருவாக்குகின்றன. ஆனால் உயிர்களுக்குள் நடைபெறும் இயக்கமும் சாதாரண வேதி வினைகள்தான் என்ற புரிதல் ஆரம்பத்தில் இல்லை.

மேற்கூறிய வகையிலான சில வேதிப்பொருட்களை, உயிரினங்களைத் தாண்டி வெளியில் வேறு எங்கும் காண முடியாது என்றே ஆரம்பத்தில் விஞ்ஞானிகள் கருதி வந்தனர். இந்தத் தனித்துவமான வேதிப்பொருள்களை உருவாக்குவது யார்? உயிர்களுக்குள்ளே மட்டும் நிகழும் இந்த விநோத இயக்கத்திற்கு ஆற்றலைத் தருவது யார்? என்பது போன்ற கேள்விகள் கடந்த காலங்களில் விஞ்ஞானிகளிடம் இருந்தன. இதற்கு, உயிர்கள் மர்மமான ஆற்றல் ஒன்றின் மூலம் இயங்குவதற்கான எரிபொருள்களைப் பெறுகின்றன என்பதே அவர்களின் வாதமாக இருந்தது. அவற்றை உயிரி ஆற்றல் / ஜீவ சக்தி என அழைத்தனர்.

கிட்டத்தட்ட 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் இந்த மர்மம் விலகத் தொடங்கியது. 1828ஆம் ஆண்டு ஃபிரெட்ரிக் வோலர் என்ற வேதியியலாளர் தற்செயலாக யூரியா என்கிற சேர்மத்தை, தனது பரிசோதனைக் கூடத்தில் கண்டறிந்துவிட்டார். யூரியா என்பது சிறுநீரில் காணப்படும் ஒரு முக்கியக்கூறு என்பது நமக்குத் தெரியும். உயிர்களுக்கு உள்ளே இருக்கும் ஜீவ சக்தியால் மட்டுமே உருவாக்கமுடியும் என எண்ணப்பட்டு வந்த ஒரு வேதிப்பொருள் திடீரெனப் பரிசோதனைக் கூடத்தில் உருவானது அந்தக் காலத்து விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

செயற்கையாகவே நம்மால் யூரியாவை உருவாக்கமுடியும் என்ற கண்டுபிடிப்பு, இதேபோன்ற தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொள்ள வைத்தது. இவற்றில், ஏராளமான மூலக்கூறுகளையும் செல்களின் செயல்பாடுகளையும் சோதனைக்கூடங்களிலேயே உருவாக்கினர். அவற்றில் சில உயிர்களுக்குள் நடைபெறும் வளர்சிதை மாற்றத்தையொத்த வினைகளைப்போலவும் இருந்தன. பரிசோதனைக்கூட ஆய்வுகளிலேயே ஆச்சரியமூட்டும் வகையில் சில மூலக்கூறுகள் தாமாகவே திரண்டு, சிக்கலான ஒழுங்கமைப்புக் கொண்ட அமைப்பாக மாறின. சில மூலக்கூறுகள் திரண்டு உள்ளீடற்ற கோளங்கள் (Hollow Spheres) போன்ற அமைப்புகளையும் உருவாக்கின. இது நவீன உயிர்களின் செல்களில் அமைந்துள்ள சவ்வுபோன்ற வடிவமாகும். சில மூலக்கூறுகளின் அமைப்பு நீண்ட தூண் போன்ற அமைப்பை ஒத்திருந்தன. இது ஆச்சரியமூட்டும் வகையில், உயிர்களின் காணப்படும் டி.என்.ஏக்களின் இழைப்போன்ற வடிவமாகும்.

இவ்வாறு நிகழ்த்தப்பட்ட கண்டுபிடிப்புகள் உயிர்களைப் பற்றிய நிலவிவந்த கண்ணோட்டங்களையே மாற்றத் தொடங்கியது. அதாவது, உயிர்களுக்குத் தேவையான ஆற்றல் மர்ம சக்தி ஒன்றால் வழங்கப்படவில்லை. அவற்றின் உள்ளேயும் நாம் சாதாராணமாக வெளியில் பார்க்கும் வேதி வினைகளால்தான் நடைபெறுகின்றன. இந்த வேதி வினைகள்தான் உயிர்களுக்கு ஆற்றலைத் தந்து அவற்றை இயக்குகின்றன என்ற புரிதல் ஏற்பட்டது. இந்தப் புரிதலால் வேறு ஒரு கேள்வியும் விஞ்ஞானிகளுக்கு எழுந்தது. உயிர்களை இயக்குவது மட்டும்தான் வேதி வினைகளா? ஏன் உயிர்களை உருவாக்கியதே வேதி வினைகளாக இருக்கக்கூடாது என்பதுதான் அது. இதையடுத்து உயிரற்ற பொருட்களில் நடைபெற்ற ஏதோ ஒரு வினையால் அது உயிர் பெற்றிருக்கலாம் என்ற கருத்தாக்கத்திற்கு விஞ்ஞானிகள் வந்தனர். அது என்ன வேதி வினை, அது எவ்வாறு நடைபெற்றது எனத் தேடத் தொடங்கினர்.

ஆனால், அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. சாதாரண வேதி வினைகளால் உயிரற்ற பொருட்களை உயிருள்ள பொருட்களாக மாற்ற முடியுமா? அவ்வாறு நடப்பது சாத்தியமா? உண்மையில் சாத்தியம் இல்லை என்று பல விஞ்ஞானிகள் மறுப்பு தெரிவித்தனர். நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல முல்லர் – உர்ரே சோதனையிலேயே உயிர்களைத் தோற்றுவிப்பதற்கான மூலக்கூறுகள் கூடங்களில் உருவாக்கப்பட்டாலும், அவை தன்னிச்சையாக இயங்கக்கூடிய உயிர் இல்லையே? பின் அவை எல்லாம் இணைந்து திடீரென்று தானாக இயங்கக்கூடிய ஆற்றலை பெற்றிருப்பது எப்படிச் சாத்தியம்? நாம் சிறுவயதில் களிமண்களைக் கொண்டு விளையாடி இருப்போம். அவற்றில் விதவிதமான பொம்மைகளைச் செய்து வைத்திருப்போம். ஒரு எளிய வேதி வினையின் மூலம் அந்தப் பொம்மைகளுக்குத் திடீரென உயிர் வந்திருக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? இதே குழப்பம்தான் விஞ்ஞானிகளுக்கு இருந்தது.

இதுமட்டுமில்லாமல் பல்வேறு உயிர்களை தோற்றுவித்தது உயிரியல் பரிணாம வளர்ச்சிதான் என்று பார்த்தோம் இல்லையா? அந்தச் செயல்பாட்டுடன் சாதாரண வேதியியல் வினையைப் பொருத்திப் பார்த்த விஞ்ஞானிகளில் ஒரு சாரார் அது உயிரைத் தோற்றுவிக்க வாய்ப்பே இல்லை என்று மறுத்தனர். ஆனால் 1992ம் ஆண்டு நடைபெற்ற ஒரு கண்டுபிடிப்பு மேலே எழுந்த மேலே பார்த்த தடைகளை சுக்குநூறாக உடைத்தது. இதைப் புரிந்துகொள்வதற்கு நாம் பரிணாம வளர்ச்சி குறித்து எளிமையாகப் பார்த்துவிடலாம்.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *