நமது உடலில் உள்ள செல்லிலும் டி.என்.ஏக்கள் இருக்கின்றன. நமது ஒவ்வொரு செல்லும் 46 டி.என்.ஏ இழைகளைக் கொண்டிருக்கும். ஓர் இழை என்பது லட்சக்கணக்கான நியூக்ளியோடைட் (Nucleotides) என்ற மூலக்கூறுகளால் உருவக்கப்பட்டிருக்கும். இந்த நியூக்ளியோடைட்கள் நான்கு வகைகளில் இருக்கும். இவற்றை விஞ்ஞானிகள் A,C,T மற்றும் G எனப் பெயரிட்டுள்ளனர். இதை நாம் ஏற்கெனவே பார்த்தோம். இந்த நியூக்ளியோடைட்களின் தொகுப்புதான் மரபணுக்கள்.
எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், மரபணு என்பது டி.என்.ஏவின் ஒரு சிறப்பு இழை எனக் கூறலாம். ஒரு குறிப்பிட்ட குறியீட்டைக் கொண்டிருக்கும் A, C, T, G நியூக்ளியோடைட்களின் நெடுவரிசையை மரபணு எனலாம். கீழே இருக்கும் படத்தில் டி.என்.ஏவில் மரபணு எப்படி இருக்கிறது என காணலாம்.
ஒவ்வொரு மரபணுவும் நமது உடலில் உள்ள செல்லுக்கான தகவலைக் கொண்டிருக்கும். அந்தத் தகவல்கள் எதற்கானவை? உங்கள் கண்கள் மற்றவர்களின் கண்களைப்போல இல்லாமல் நீல நிறத்தில் இருக்கிறதா? அது உங்கள் மரபணுவில் எழுதப்பட்டுள்ள தகவல்.
உங்கள் மூக்கு சற்று நீண்டதாக இருக்கிறதா? அதுவும் மரபணுவில் எழுத்தப்பட்டுள்ள தகவல். நீங்கள் முன்கோபக்காரரா? அதுவும்கூட மரபணுவில் உள்ள தகவலாக இருக்கலாம். ஆனால் ஒரு தனிப்பட்ட மரபணு நாம் மேலே பார்த்த நீல நிற கண்ணையோ, நீண்ட மூக்கையோ, கோபத்தையோ ஏற்படுத்தாது. மரபணுக்கள் நம் உடலில் புரதங்களை உண்டாக்குகின்றன. (டி.என்.ஏ பகுதியில் நாம் பார்த்த அதே விதத்தில்) இந்தப் புரதங்கள் ஒன்றோடு ஒன்று இயைந்தும், உடலில் உள்ள எல்லா வகையான வேதிப்பொருட்களுடன் வினைபுரிந்தும், மூக்கின் நீலம், கருவிழியின் நிறம், உங்கள் மனநிலையைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் ஆகியவற்றை உருவாக்குகின்றன.
டி.என்.ஏன் ஓர் இழையில் ஆயிரக்கணக்கான மரபணுக்கள் இருக்கும். அதாவது புரதங்களை உருவாக்குவதற்கான செய்முறைகள் இருக்கும். மனித உடலில் சுமார் இருபது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரபணுக்கள் இருக்கின்றன. சில மரபணுக்கள் சிறியதாக இருக்கும். அதாவது அதன் அளவு வெறும் 300 எழுத்துகள் (A,C,T,G ஆகிய எழுத்துக்களை கலைத்துப்போட்டு வரிசையாக எழுதினால் எப்படி இருக்குமோ அப்படி) நீளம் மட்டுமே இருக்கும். சில மரபணுக்கள் மிக நீண்டதாக இருக்கும். அதில் இடம்பெற்றுள்ள எழுத்துக்கள் லட்சக்கணக்கில் இருக்கும்.
மரபணுக்களின் நீளமும் வரிசையும், அது உருவாக்கப்போகும் புரதத்தின் அளவையும், வடிவத்தையும் நிர்ணயிக்கும். ஒரு புரதத்தின் வடிவமும் அளவும், அந்தப் புரதம் உங்கள் உடலுக்குள் செய்யப்போகும் செயல்பாட்டை முடிவு செய்கின்றன. உதாரணமாக ஹீமோகுளோபினை எடுத்துகொள்வோம். ஹீமோகுளோபின் என்பது சிவப்பு ரத்த அணுக்களில் காணப்படும் ஒருவகை புரத அமைப்பு. அந்தப் புரதத்தின் வடிவமும் அளவும் உடலில் நுரையீரல் அருகே பாயும் ரத்தத்தில் இருந்து ஆக்சிஜன் மூலக்கூறுகளைப் பிடித்து வைக்க உதவுகின்றன. பிறகு அந்த ஆக்சிஜன் மூலக்கூறுகளை, ஆக்சிஜன் இல்லாமல் வாடும் திசுக்களுக்கு இடையே ரத்தம் ஓட்டம் செல்லும்போது வெளியிடுகின்றன.
பெப்சின் (Pepsin) என்று மற்றொரு புரதம் இருக்கிறது. இதுதான் ஜீரணத்திற்கு உண்டான புரதம். இதன் தனித்துவம் வாய்ந்த வடிவம் உங்கள் வயிற்றுக்குள் செல்லும் உணவுப் பொருட்களைத் துண்டாக்க உதவுகிறது. இந்தத் துண்டாக்கப்பட்ட உணவில் உள்ள சத்துக்களைத்தான் உடல் எடுத்துக்கொள்கிறது. கெராட்டின் (Keratin) என்பது ஒருவகை புரதம். இதன் தனித்துவம் வாய்ந்த அமைப்பும் அளவும், மற்ற கெராட்டின் புரதங்களுடன் இணைந்து உடலில் உள்ள கடினமான தன்மையுடய பாகங்களான நகங்கள், பறவைகளின் அலகு உள்ளிட்டவற்றை உண்டாக்க உதவுகிறது.
ஒவ்வொரு வகை உயிரினத்துக்கும் ஒவ்வொரு வகை மரபணுக்கள் இருக்கும். அதனால்தான் அவற்றின் உடல் அமைப்பும், உடல் இயக்கமும் வித்தியாசமானவையாக இருக்கின்றன. ஆனால் ஒன்று, என்னதான் உயிரினங்களுக்கு இடையேயான மரபணுக்கள் மாறுபாட்டு இருந்தாலும், அவை அனைத்தும் எழுத்தப்பட்டிருப்பது A,C,T,G எனப்படும் அடிப்படை டி.என்.ஏ மொழியில்தானே. அதனால்தான் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
பல உயிரினங்கள் ஒரே வகை மரபணுக்களைப் பகிர்ந்திருக்கின்றன. உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம், சிம்பன்சி குரங்குகளும் மனிதர்களும் நெருங்கிய சொந்தக்காரர்கள். இரு உயிரினங்களின் உடல்களிலும் உள்ள மரபணுக்கள் கிட்டதட்ட தொண்ணூற்று ஆறு சதவீதம் ஒரே மாதிரிதான் இருக்கின்றன.
இப்போது உங்களிடம் இன்னோரு கேள்வி, நீங்கள் பழங்கள் வாங்கினால் அதில் மொய்க்கும் ஈக்கள் இருக்கின்றன அல்லவா? அவற்றின் உடலில் உள்ள மரபணுக்களுக்கும், நீங்கள் உலக அழகியாக வர்ணித்துக் கவிதை எழுதும் ஒரு பெண்ணின் உடலில் உள்ள மரபணுக்களுக்கும் எவ்வளவு ஒற்றுமை இருக்கும் என நினைக்கிறீர்கள்? ஒரு சதவிகிதம்கூட இருக்காது என்பதுதானே உங்கள் பதிலாக இருக்கும். ஆனால் அது உண்மையல்ல. ஆச்சரியமூட்டும் வகையில் கிட்டதட்ட பாதிக்கும் மேற்பட்ட மரபணுக்கள் ஒத்துப்போவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஏனென்றால் அனைத்து உயிரினங்களும் டி.என்.ஏவை ஒரே மாதிரிதான் பயன்படுத்துகின்றன. மரபணு பொறியாளர்கள் (Genetic Engineers) ஒரு பாக்டீரியா உடலில் உள்ள செல்லில் இருந்து ஒரு குறிப்பிட்ட மரபணுவை எடுத்து, அதை வேறு ஒரு விலங்கின் உடலில் உள்ள செல்லிலோ, ஒரு தாவரத்தின் செல்லிலோ செலுத்தினால் என்ன ஆகும்? அந்த விலங்கோ, தாவரமோ அந்த மரபணுவில் எழுத்தப்பட்டிருக்கும் தகவலை படித்துவிட்டு பாக்டீரியா உருவாக்கிய அதே புரதங்களை உருவாக்கத் தொடங்கும்.
இப்படிதான் விஞ்ஞானிகள் வெவ்வேறு உயிரினங்களில் காணப்படும் மரபணுக்களை இணைத்தும், கலந்தும் புதிய வகை உயிரினங்களை உருவாக்குகின்றனர். அதேபோல மரபணு மாற்றம் செய்து சில புதிய பண்புகளையும் உயிர்களுக்கு தோற்றுவிக்கின்றனர்.
உதாரணமாக பூச்சிகளுக்கு எதிரான மரபணு ஒன்றை எடுத்து அதை மக்காசோளத்தின் மரபணுவுடன் இணைத்துப் புதிய வகை சோளங்களை உருவாக்கும்போது, அந்தச் சோளம் மனிதர்களைப் பாதிக்காத வகையில், ஆனால் பூச்சிகளுக்கு மட்டும் விஷமாகும் வகையிலும் இருக்கிறது. நாம் சந்தையில் காணும் பெரிய அளவு தக்காளிகள், சிறிய அளவு முட்டைக்கோஸ்கள் அனைத்தும் இவ்வாறு மரபணு மாற்றம் செய்யப்பட்டவைதான். சில ஆண்டுகளுக்கு முன் சர்ச்சையை ஏற்படுத்திய பி.டி. கத்திரிக்காயும் இதே வகைதான்.
இவ்வாறு மரபணுக்களை மாற்றி அமைப்பதன் மூலம் விஞ்ஞானிகள் புதிய வகை பாக்டீரியாக்களையும் உருவாக்கியுள்ளனர். இந்த பாக்டீரியாக்கள் மனிதர்களின் உடல் உருவாக்கும் இன்சுலின் புரதங்களைத் தாங்களே உருவாக்கும் தன்மையை கொண்டிருக்கின்றன. இதனால் கணையம் பாதிக்கப்பட்ட, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் யாருக்காவது கூடுதல் இன்சூலின் தேவைப்பட்டால், அவற்றை இந்தப் பாக்டீரியாக்களில் இருந்து நாம் பெற்றுக்கொள்ளலாம். இதேபோல மரபணு மாற்றம் தொடர்பான பல்வேறு ஆய்வுகள் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன. யாருக்குத் தெரியும்? ஒருவேளை இந்த ஆய்வுகளில் எதிர்காலத்தில் பெரிய மாற்றங்கள் நடந்தால் மனித உடலை நோய்கள் தாக்காதவாறு, மனிதர்களுக்கு வயதே ஆகாதவாறு மரபணுக்களை மாற்றக்கூடிய நிலைமைக்கூட ஏற்படக்கூடும்.
இருக்கட்டும். இப்போது நாம் மீண்டும் மரபணுக்கள் குறித்துச் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம். மரபணுக்கள் என்பது டி.என்.ஏவின் ஒரு சிறப்பு இழை. டி.என்.ஏவின் முழு இழைகளும் கிடையாது. குறிப்பிட்ட ஒரு வரிசை. இவ்வாறு பல்வேறு இழைகள் (மரபணுக்கள்) இணைந்ததுதான் முழு டி.என்.ஏ. இந்த இழைகள் ஏதாவது ஒரு செயலைச் செய்வதற்கான குறியீட்டைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு மரபணுவும் ஒரு செல் எப்படி புரதத்தை உருவாக்க வேண்டும் என்ற செய்முறை விளக்கத்தைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு உயிரினமும் வெவ்வேறு வகை மரபணுக்களை கொண்டிருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் பொதுவான A,C,T,G எனப்படும் அடிப்படை டி.என்.ஏ மொழியால் எழுதப்பட்டுள்ளன.
(தொடரும்)