டி.என்.ஏ, மரபணுக்கள் ஆகியவை பற்றிச் சென்ற பகுதியில் பார்த்தோம். இவை நம் உடலில் இருப்பதை, இயங்கும் விதத்தை நாம் எப்படி அறிந்துகொண்டோம்? நம்மால் வெறும் கண்களால் டி.என்.ஏவின் விவரங்களைப் பார்க்கமுடியாது. சக்திவாய்ந்த மைக்ரோஸ்கோப் கொண்டு பார்த்தாலும்கூட அவை தெரியாது. பிறகு எப்படி அவை குறித்த புரிதல் ஏற்படத் தொடங்கியது? சொல்லப்போனால் டி.என்.ஏ பற்றி இன்று நாம் தெரிந்து வைத்திருக்கும் பெரும்பாலான அனைத்தும் நாம் கற்பனை செய்து, பரிசோதித்த மாதிரிகளிடம் இருந்து பெறப்பட்ட புரிதல்கள்தாம். ஆனால், டி.என்.ஏ என்ற ஒன்று இருப்பதைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே விஞ்ஞானிகள் மரபணுக்கள் குறித்த நல்ல புரிதலை பெற்றிருந்தனர். இதற்குபின் சுவாரஸ்யமான கதை ஒன்றும் இருக்கிறது.
கிரிகோர் மென்டெல் (Gregor Mendel) என்பவரைக் கேள்விப்பட்டுள்ளீர்களா? இவர், பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆஸ்திரிய பாதிரியார். தன்னுடைய தேவாலயத் தோட்டத்தில் ஆசையாகப் பட்டாணிச் செடிகளை வளர்த்து வந்தவர். வெறுமனே உணவுக்காகப் பட்டானிகளை வளர்த்திருந்தால் அவரது கதையை நாம் அறிய வேண்டிய அவசியமே வந்திருக்காது. ஆனால் அவர், பட்டாணிச் செடிகளில் காணப்படும் சிறிய, சிறிய வேறுபாடுகளைக் கண்டு அதை சோதிக்கத் தொடங்கியதால்தான் அவரது கதை அறிவியல் உலகில் முக்கியத்துவம் பெறுகிறது.
மெண்டலின் காலத்தில் மைக்ரோஸ்கோப் உள்ளிட்ட கருவிகள் இல்லாததால் சந்ததி உருவாவதற்குப் பின்னணியில் உள்ள அறிவியல் யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால் மெண்டல், தான் தோட்டத்தில் வளர்த்த பட்டாணிச் செடிகளை 8 ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வு செய்ததன்மூலம் சந்தததிகள் குறித்துச் சில முக்கியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். அவருடைய கண்டுபிடிப்பு நவீன மரபணுவியலுக்குத் தொடக்கமாக அமைந்தது. இதனால் அவர், மரபியலின் தந்தை என்றும் போற்றப்படுகிறார்.
அப்படி மெண்டல் என்ன செய்தார்?
மெண்டல் தனது தோட்டத்தில் 28,000 பட்டாணிச் செடிகளை வளர்த்தார். அந்தச் செடிகளை ஏழாக வகைப்படுத்தினார் பட்டாணி விதையின் வடிவம், நிறம், பட்டாணிக் காயின் வடிவம், நிறம், பட்டாணிப் பூக்கள் செடியில் இடம்பெறும் பகுதி, பூக்களின் நிறம், செடிகளின் உயரம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டார். இதை வைத்து அவர் ஆய்வுகளைச் செய்தார்.
தான் மேற்கொண்ட ஓர் ஆய்வில் உயரமான பட்டாணிச் செடி ஒன்றையும் குட்டையான பட்டாணிச் செடி ஒன்றையும் மகரந்தச் சேர்க்கைக்கு உட்படுத்தினார். இதனால் உருவான இரண்டாம் தலைமுறையில் விளைந்த எல்லாச் செடிகளும் உயரமானவையாகக் காணப்பட்டன. பின் இந்த இரண்டாம் தலைமுறைச் செடிகளை மீண்டும் சுயமகரந்தச் சேர்க்கைக்கு உட்படுத்தியபோது, அதில் விளைந்த மூன்றாம் தலைமுறைச் செடிகளில் மூன்று செடிகள் உயரமாகவும், ஒரே ஒரு செடி மட்டும் குட்டையாகவும் காணப்பட்டது (அதாவது நான்கில் ஒரு பங்கு). ஆக, செடிகள் அடுத்தடுத்த தலைமுறைகளை உருவாக்கும்போது இரண்டாம் தலைமுறையில் வெளிப்படாமல் இருந்த குட்டைச் செடிக்கான காரணி, மூன்றாம் தலைமுறையில் ஏதோ ஓர் விதியின் கீழ் வெளிப்பட்டுள்ளது என்ற முக்கிய உண்மையைக் கண்டறிந்தார்.
இவ்வாறு, பட்டாணிச் செடிகளின் ஏழு குணாதிசயங்களைப் பல்வேறு புள்ளியியல் கோட்பாடுகளின்கீழ் மீண்டும் மீண்டும் மகரந்தச் சேர்க்கை மூலம் இணைத்துப் பார்த்தவருக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தன.
இவற்றின்மூலம் அவர் செடிகளின் நிறம், தோற்றம், உயரம் ஆகிய குணாம்சங்களில், மரபியல் கூறுகள் என்ற அடிப்படை அலகுகள் இருக்கின்றன. மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்குக் கடத்தப்படுகின்றன. உயிரினங்கள் அனைத்திலும் மரபுத் தொடர்ச்சி உள்ளது. அதற்கு மரபணுக்கள்தான் காரணம். வீரியம் அதிகம் உள்ள மரபுக்கூறின் பண்பு அடுத்த தலைமுறைக்குச் செல்கிறது. ஒரு குரோமோசோமின் குறிப்பிட்ட குணாதிசயம், தன்னைச் சார்ந்துள்ள இன்னொரு குரோமோசோமின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது உள்ளிட்ட விஷயங்கள் மெண்டலின் ஆய்வுகள் மூலம்தான் தெரிய வந்தன.
மெண்டல் மரபணு என்ற பதத்தைப் பயன்படுத்தவில்லை. ஆனால் மரபணு பற்றிய அறிதலுக்கு அவரது ஆய்வுகளே தொடக்கமாக அமைந்தன. பின்னாளில் விஞ்ஞானிகள் மென்டல் பயன்படுத்திய வழிமுறைகளையே மற்ற உயிரினங்களுக்கும் பரிசோதனை செய்து பார்த்தனர். பட்டாணிக்குப் பதில் பூச்சிகளில் இதைச் சோதித்தனர். அதில் மரபணுக்கள், குரோமோசோம்கள் பற்றிய அதிகப்படியான புரிதல் அவர்களுக்குக் கிடைத்தது. குறிப்பாக இந்த மரபணுக்கள் குரோமோசோம்களுக்குள் எப்படி அமைந்திருக்கின்றன, எந்த வரிசையில் அமைந்திருக்கின்றன உள்ளிட்ட பல விஷயங்களை அவர்கள் அறிந்துகொண்டனர். இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. இந்தச் சோதனைகள் அனைத்தும் டி.என்.ஏ என்ற ஒன்றை நாம் கண்டுபிடிப்பதற்கு முன்பே நிகழ்த்தப்பட்டதாகும்.
அதன்பிறகுதான் டி.என்.ஏ குறித்த ஆய்வை ஜேம்ஸ் வாட்ஸன், பிரான்சிஸ் கிரிக் போன்ற விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். வாட்சனும் கிரிக்கும் டி.என்.ஏவைத் தங்களது கண்களால் பார்க்கவில்லை. அவர்களும் ஒரு மாதிரியைக் கற்பனைச் செய்துதான் சோதனை செய்தனர். டி.என்.ஏ என்பது எப்படி இருக்கும் என்பதை அவர்கள் அட்டைப் பெட்டிகளைக் கொண்டு வடிவமைத்து, அந்த மாதிரி சரியாக இருந்தால், எந்த மாதிரியான அளவீடுகள் இருக்க வேண்டும் எனக் கணக்கிட்டனர்.
அவர்கள் உருவாக்கிய பல மாதிரிகளில் ஒன்றுதான் இரட்டைத் திருகுச்சுருள் படிமம் (Double Helix Model). இந்த மாதிரியை எக்ஸ்ரேவின் துணைக்கொண்டு பார்த்தபோது ரோசாலிண்ட் பிராங்கிளின் மற்றும் மவுரிஸ் வில்கின்ஸ் என்ற விஞ்ஞானிகள் உருவாக்கி வைத்திருந்த அளவீடுகளுடன் கச்சிதமாக ஒத்துப்போனது. இதையடுத்து நான்கு பேரும் இணைந்து டி.என்.ஏவின் அமைப்பை உலகிற்கு அறிமுகப்படுத்தினர். இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், டி.என்.ஏ குறித்து தாங்கள் உருவாக்கிய மாதிரி, பல ஆண்டுகளுக்கு முன் தேவாலயத்தின் தோட்டத்தில் கிரிகோர் மென்டல் உருவாக்கிய மாதிரியின் அதே விளைவுகளைக் கொண்டுள்ளது என்பதை அவர்கள் கண்டுகொண்டனர். இதுதான் அறிவியலின் மகத்துவம்.
சரி, இப்போது ஏன் நாம் மெண்டலின் கதையைப் பார்த்துகொண்டிருக்கிறோம்? காரணம் இருக்கிறது, பட்டாணிச் செடிகளை பரிசோதித்த மெண்டல் பெற்றோரின் மரபணு, அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது என்று கண்டுகொண்டார் அல்லவா? அதில்தான் உயிர்களின் ரகசியமே பொதிந்திருக்கிறது. உலகில் இன்று நாம் காணக்கூடிய உயிர்கள் அனைத்தும் எப்படி வந்தன என்பதற்கான விடையும் அதில்தான் இருக்கிறது.
உயிர்கள் எப்படித் தோன்றின?
பூமியில் முதல் உயிர் எப்படி வந்திருக்கலாம் என்ற கோட்பாடுகளை இதற்குமுன் பார்த்தோம். அந்த உயிர் எப்படி பலதரப்பட்ட உயிர்களாக பரிணமித்தன என்பதை இப்போது பார்க்கப்போகிறோம். உயிர்களின் தோற்றம் பற்றிய கேள்வி இன்று தோன்றிய கேள்வி அல்ல. மனிதன் சிந்திக்கத் தொடங்கிய நாட்களிலேயே உதித்த கேள்வி. ஆனால் இந்த கேள்விக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை சரியான பதில் தெரியவில்லை.
நிறைய உயிரினங்கள் பூமியில் இருக்கின்றன. அனைத்தும் வெவ்வேறு வடிவத்தில், வெவ்வேறு பண்புகளைக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் எப்படிப் பூமிக்கு வந்தது என்பதை எப்படித் தெளிவாகக் கூற முடியும்? அதனால் மக்கள் இதற்கான விடையைக் கடவுள் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கி விளக்க முயன்றனர்.
ஏழு நாட்களில் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த கடவுள், மூன்றாவது நாள் நீர் நிலைகளையும் நிலங்களையும் உருவாக்கினார். இதன்பின் ஏராளமான புல்வெளிகளையும் செடிகளையும் மரங்களையும் வளரச் செய்தார். பிறகு ஐந்தாவது நாளில் கடல் முழுவதும் மீன்களையும் கடல்வாழ் உயிரினங்களையும் வானத்துப் பறவைகளையும் படைத்தார். ஆறாவது நாளில் நிலத்தில் ஊர்வன, காட்டு விலங்குகள், கால்நடைகள் எல்லாம் வேறு வேறு இனங்களில் தோன்றட்டும் என ஆணையிட்டார். இதனால் பூமி முழுவதும் விலங்குகளால் அலங்கரிக்கப்பட்டன. இதுதான் உயிர்களின் தோற்றம் குறித்து பைபிள் கூறும் கதை.
கிரேக்கப் புராணத்தில் கடவுள்களின் அரசனான ஜீயஸ் என்பவரின் ஆற்றலைப் பெற்று புரோமித்தியஸ், எபிமெதீஸ் என்கிற இரு டைடன்களும் இணைந்து பூமியில் உயிரினங்களை உருவாக்கியதாக கதை இருக்கிறது. இதேபோல ஒவ்வொரு நாகரிகமும், ஒவ்வொரு இன மக்களும் தங்களுக்கு ஏற்றாற்போல பூமியில் உயிரினங்களின் தோற்றத்தை விளக்குகின்றன. ஆனால் உண்மையில் உயிரினங்கள் எப்படி தோன்றின என்பதற்கான பதிலை சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் அறிவியல் கண்டறிந்தது.
இன்று நாம் பூமியில் பார்க்கும் உயிரினங்கள் அனைத்தும் முதலில் தோன்றிய ஒற்றைச் செல் உயிர்களில் இருந்து வந்தவைதான் என்பதை இன்றைய அறிவியல் உலகம் உறுதியாகச் சொல்கிறது. ஆனால் யோசித்துப் பாருங்கள். இது எப்படி நடந்திருக்க முடியும்? மாயாஜாலக் கதைகள் ஒரு பாம்பு திடீரென்று மனிதனாக மாறுகிறது, மனிதன் முனிவரிடம் சாபம் பெற்றுக்கொண்டு மானாக மாறுகிறான் என்றால் நம்பமுடியும். ஆனால், இதெல்லாம் நிஜ உலகில் இவை எல்லாம் சாத்தியமா? சாத்தியம்தான். இதைத்தான் அறிவியல் சொல்கிறது. இந்த செயல்முறைக்கு ஒரு பெயரும் வைத்திருக்கிறது. அதுதான் பரிணாம வளர்ச்சி.
(தொடரும்)