Skip to content
Home » உயிர் #15 – பரிணாம வளர்ச்சி என்பது என்ன?

உயிர் #15 – பரிணாம வளர்ச்சி என்பது என்ன?

பரிணாம வளர்ச்சி

பரிணாம வளர்ச்சி என்பது ஓர் உயிரின் மரபுப் பண்பில் (Heritable Traits) ஏற்படும் மாற்றம். அது உடல் ரீதியான பண்பாகவும் இருக்கலாம், உள்ளுணர்வு ரீதியான பண்பாகவும் இருக்கலாம். உதாரணமாக பூனைகளின் ரோமத்தில் உள்ள நிறம், வண்ணத்துபூச்சியின் சிறகுகளில் உள்ள டிசைன்கள் உள்ளிட்டவை உடல் ரீதியான பண்புகள். நாய்கள் தங்களுக்குப் பிடித்த நபர்களைக் கண்டால் வாலை ஆட்டிக்கொண்டே சென்று முகர்வது, மான்கள் புற்கள் அசைவதைக் கண்டால் ஓட்டம் பிடிப்பது ஆகியன உள்ளுணர்வு நடத்தைச் சார்ந்த பண்புகள். இந்தப் பண்பில் தலைமுறை தலைமுறையாக ஏற்படும் மாற்றங்களை நாம் பரிணாம வளர்ச்சி என்கிறோம்.

மேலே சொன்ன வரையறை உங்களுக்குக் குழப்பமாக இருக்கலாம். இந்தப் பரிணாம வளர்ச்சி எப்படி நடைபெறுகிறது என்பதைப் பார்ப்பதன் மூலம் அதன் வரையறையை எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். உலகில் உள்ள அனைத்து ஆரோக்கியமான உயிரினங்களும் இனப்பெருக்கம் செய்வதற்கான திறனைப் பெற்றுள்ளன. அது ஒற்றைச் செல் அமீபாவாக இருக்கட்டும், செடி கொடிகளாக இருக்கட்டும், டால்பின்களாக இருக்கட்டும், மனிதர்களாகட்டும். அனைத்து உயிர்களுக்கும் இனப்பெருக்கம் என்ற பிரபஞ்ச செயல்பாடு பொருந்தும்.

இனப்பெருக்கம் என்பது சுருக்கமாகச் சொன்னால் நாமே நமது டி.என்.ஏக்களை நகல் எடுப்பது ஆகும். நமக்குக் குழந்தைகள் பிறக்கின்றன. நமது குழந்தைகள் நமது நகல்கள். நாம் நமது டி.என்.ஏக்களை நகல் எடுத்து, அவற்றை குழந்தைகளாக எதிர்கால சந்ததியினருக்குக் கடத்துகிறோம். நாம் ஏற்கனவே டி.என்.ஏ என்பது பற்றி விளக்கமாகப் பார்த்தோம். டி.என்.ஏ என்பது சங்கிலி போன்ற ஒரு வேதிப்பொருள். நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் இடம்பெற்றிருக்கிறது. அந்த செல் எப்படி வளர வேண்டும் என்பதையும், எப்படி இயங்க வேண்டும் என்பதையும் டி.என்.ஏதான் உத்தரவிடுகிறது. உங்களை எப்படி உருவாக்க வேண்டும் என்ற அனைத்துத் தகவல்களையும் குறியீடுகளாக டி.என்.ஏ கொண்டிருக்கும்.

உங்கள் டி.என்.ஏவில் காணப்படும் தகவல், ஒரு ரோஜாப்பூவின் டி.என்.ஏவில் காணப்படும் தகவலைவிட வித்தியாசமானதாக இருக்கும். அதனால்தான் உங்களின் தோற்றமும் செயல்பாடும் ரோஜாபூக்களைவிட முற்றிலும் வித்தியாசமாக இருக்கின்றன. அதேசமயம் உங்கள் டி.என்.ஏவில் இருக்கும் தகவலும் கமல்ஹாசனின் உடலில் இருக்கும் டி.என்.ஏவின் தகவலும் கொஞ்சம்தான் வேறுபட்டிருக்கும். அதனால்தான் இருவரும் ஒரே மாதிரியான உடல் அமைப்பைக் கொண்டிருந்தாலும் (மனிதர்களாக) தோற்றமும் நடத்தையும் வித்தியாசமாக இருக்கிறது.

இனப்பெருக்கம் என்ற செயல்பாட்டின்மூலம் இந்த டி.என்.ஏவை உயிரினங்கள் அடுத்தத் தலைமுறைக்குக் கடத்துகின்றன. உதாரணமாக அமீபாவை எடுத்துகொள்வோம். அமீபா என்பது ஒரு செல் உயிரினம். அந்த உயிரினம் உள்ளுக்குள்ளேயே டி.என்.ஏவை நகல் எடுப்பதுமூலம் இனப்பெருக்கும் செய்கிறது. பிறகு அந்த நகலை உடலில் இருந்து வெளியே தள்ளி, இரண்டாகப் பிரிந்து, இரண்டு உடல்களும் தனித்தனி உயிரினங்களாக வளர்கின்றன.

இந்தச் செயல்பாடு பிரச்சனை இல்லாமல் முடிந்தால் இரண்டு புதிய அமீபாக்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் இருக்காது. இதுதான் இயற்கையின் சித்தம். இயற்கையில் எந்த ஒரு விஷயமும் நேர்த்தியானது கிடையாது. இரு டி.என்.ஏக்களும் நகல் எடுக்கும்போது, அதில் பிழை ஏற்படும். இந்த பிழை டி.என்.ஏ குறியீட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும். இவற்றைதான் நாம் டி.என்.ஏ மியூட்டேஷன் என்கிறோம். அதாவது மரபணுத் திரிபு.

இந்த டி.என்.ஏ குறியீட்டில் ஏற்பட்ட மாற்றத்தால்தான் புதிய உயிர்களில் பண்பு மாற்றம் தோன்றுகிறது. அதாவது புதிய உயிர்களின் உடலின் அமைப்பிலோ இயக்கத்திலோ வேறுபாடுகள் தோன்றும். உதாரணமாக, இரண்டாகப் பிரிந்த அமீபாக்களில், ஓர் அமீபாவின் உடல் பாகங்கள் கொஞ்சம் நீளமாக இருக்கலாம். இன்னொரு அமீபா மற்ற அமீபாக்களைவிட வேகமாக நகரும் தன்மையைப் பெற்றிருக்கலாம். ஒருவேளை இந்த இரண்டு அமீபாக்களும் நன்றாக வளர்ந்து, இனப்பெருக்கம் செய்யும் அளவிற்கு உயிர் வாழ்ந்தால், அவற்றின் டி.என்.ஏவில் இடம்பெற்றிருக்கும் நீண்ட உடல் பாகம், வேகமாக நகரும் தன்மை ஆகிய தகவல்கள் அடுத்த தலைமுறைகளுக்கும் கடத்தப்படும்.

இதனால்தான் பரிணாம வளர்ச்சி என்பது ஓர் உயிரினத்தின் மரபுப் பண்புகளில் (Inheritable Traits) தலைமுறை தலைமுறையாக ஏற்படும் மாற்றம் என்கிறோம்.

அமீபாக்களை விட ஒரு டால்பின் இனப்பெருக்கம் செய்வதோ, ஒரு நாய் இனப்பெருக்கம் செய்வதோ, மனிதர்கள் இனப்பெருக்கம் செய்வதோ மிகவும் சிக்கலான செயல்பாடு. நாம் இனப்பெருக்கம் செய்வதற்கு உற்ற துணையை கண்டறிய வேண்டும். இங்கே ஆண், பெண் என்று ஒரே இனத்தைச் சேர்ந்த இரண்டு உயிரினங்கள் கலக்கின்றன.

இரு நாய்கள் இனப்பெருக்கம் செய்வதாக வைத்துக்கொள்வோம். நாய்கள் ஒன்றாக இணையும்போது தந்தையின் அணுக்களில் அவருடைய டி.என்.ஏ நகலின் பாதியும், தாயின் கருமுட்டையில் உள்ள டி.என்.ஏவின் பாதியும் ஒன்றுசேரும். அவ்வாறு சேரும்போதும், உருவாகும் புதிய செல்களில் அமைந்துள்ள டி.என்.ஏக்களில், அவை புதிய நாய்க்குட்டியாக வளர்வதற்கான அத்தனை தகவல்களும் இடம்பெற்றிருக்கும். அப்போது பிறக்கும் புதிய நாய்க்குட்டி தன் தாயின் டி.என்.ஏக்களில் இருந்து சில பண்புகளையும் தந்தையின் டி.என்.ஏக்களில் இருந்து சில பண்புகளையும் கொண்டிருக்கும்.

ஆனால் புதிதாகப் பிறந்த அந்த நாய்க்குட்டி தன்னுடைய பெற்றோரின் பண்புகளை மட்டும் கொண்டிருக்காது. நாம் ஏற்கனவே டி.என்.ஏ மியூட்டேஷன் பார்த்தோம் அல்லவா? அதன் காரணமாக அதற்கென்றே உரிய, தனித்தன்மை வாய்ந்த சில புதிய பண்களையும் உருவாக்கி இருக்கும். உதாரணமாக புதிய நாய்க்குட்டியின் உடலில் பெற்றோரை விட அதிக ரோமங்கள் இருக்கலாம். நீண்ட கால்களை கொண்டிருக்கலாம். அதிக மோப்ப சக்தியை பெற்றிருக்கலாம். ஒருவேளை அந்த நாய் இனப்பெருக்கம் செய்யும் அளவிற்கு உயிர் வாழ்ந்துவிட்டால், அதன் புதிய பண்புகள் அதன் குட்டிகளுக்கும் கடத்தப்படும். இப்படித்தான் பரிணாம வளர்ச்சி நடைபெறுகிறது.

பரிணாம வளர்ச்சி என்பது மிகவும் எளிமையானது. விஞ்ஞானிகளும் சாதாரண மனிதர்களும் பரிணாம வளர்ச்சி நடந்ததற்கான சாட்சியங்களைப் பார்த்துகொண்டுதான் இருக்கிறோம். பரிணாம வளர்ச்சியின்போது ஏற்படும் சிறிய சிறிய பண்பு மாற்றங்கள் பல தலைமுறைகளாகத் தொடர்ந்து நடைபெறும்போது, பெரிய பண்பு மாற்றமாக அவதானிக்கப்படுகிறது. அதாவது புதிய உயிரினமாகவே உருமாறும் அளவிற்கு பெரிய மாற்றமாகிறது. இதற்கான உதாரணங்களைப் பார்க்கலாம்.

நாம் இன்று பார்க்கும் நாய்கள் அனைத்தும் உண்மையில் சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சாம்பல் நிற ஓநாய்களில் இருந்து சிறிது, சிறிதாக மாற்றம் அடைந்து பரிணாம வளர்ச்சியின் வழி வந்தவை. அந்த ஓநாய்களில் நடைபெற்ற பரிணாம வளர்ச்சி, மனிதர்களால் கட்டுப்பாட்டுடன் வழிநடத்தப்பட்டு இன்று நாம் பார்க்கும் நாய் இனங்களாக உருமாறி உள்ளன. இயற்கையாக நடைபெறும் ஒரு விஷயத்தை மனிதர்கள் எப்படிக் கட்டுப்படுத்த முடியும்?

30,000 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த மக்கள் தங்களுக்குப் பிடித்த பண்புகளை வெளிப்படுத்தும் ஓநாய்களை மட்டும் தேர்ந்தெடுத்து இனப்பெருக்கம் செய்ய வைத்தனர். அவற்றுக்குப் பிறக்கும் குட்டிகளுக்கு மியூட்டேஷன்மூலம் சில மாற்றங்கள் தோன்றி இருக்கும் அல்லவா? அந்த மாற்றங்களிலும் தங்களுக்கு மிகவும் விருப்பமான பண்புகளைக் கொண்டிருந்த குட்டிகளை மட்டும் வளர்த்து, அவற்றை மீண்டும் இனப்பெருக்கத்திற்கு உட்படுத்தினர்.

இவ்வாறு பல தலைமுறைகளாகக் குறிப்பிட்ட சில பண்புகள் கொண்ட குட்டிகளே மீண்டும் மீண்டும் அடுத்தத் தலைமுறையை உருவாக்கும்போது அவை தனித்தன்மை வாய்ந்த பண்புகளைக் கொண்ட நாயினங்களாகப் பரிணமித்தன. நீங்கள் பார்க்கும் நீண்ட உயரம் கொண்ட கிரேடன் நாய்கள், பொசு, பொசு ரோமங்களைக் கொண்ட பொமேரியன் நாய்கள், வேட்டைப் பண்புகளைக் கொண்டுள்ள நாய்கள், பார்வையற்றவர்களை வழிநடத்தும் அறிவைக் கொண்டுள்ள லேப்ரடார் நாய்கள் என அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பரிணாமவளர்ச்சியின்கீழ் உருவானவை.

இன்றைக்குக் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான நாய் வகைகள் இருக்கின்றன. அவற்றில் ஹஸ்கி உள்ளிட்ட சில வகை நாய்கள் மட்டுமே பார்ப்பதற்கு தங்கள் மூதாதையர்களைப் போன்ற தோற்றத்தில் இருக்கின்றன. மற்ற நாய்கள் எல்லாம் ஓநாய்களில் இருந்து தோன்றியவைதானா என்று நாம் வியக்கும் அளவிற்கு மாறிவிட்டன. ஆனால் எல்லா நாய் இனங்களும் ஒரே ஓநாய் மூதாதரைதான் கொண்டிருந்தன என்பதற்கான நேரடி ஆதாரங்கள் மரபணுவியல், வேதியியல், தொல்லுயிரியல் ஆய்வுகள்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று உயிரினங்களின் உடலில் எற்பட்ட சிறிய பண்பு மாற்றங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு நடைபெற்றதால்தான் புலிகள் பூனையாகின, எலிகள் யானையாகின.

நாய்கள் ஓநாய்களை மூதாதையாராகக் கொண்டிருந்தால், ஓநாய்களுக்கு மூதாதையர் யார்? ஓநாய்கள் மட்டுமல்ல எல்லா உயிரினங்களும், நீங்கள், நான், தொட்டியில் வளரும் மீன், வீட்டின் கொள்ளைப்புறத்தில் இருக்கும் வாழை மரம் உள்ளிட்ட அனைத்தும் ஒரே மூதாதையரின் வழி வந்தவர்கள்தான். ஒன்றை செல் அடைந்த பரிணாம வளர்ச்சியின் நீட்சியாகக் கிளை போல விரிந்து பல உயிர்கள் உருவாகி இருக்கின்றன. நாம் அனைவரும் ஒன்றோடொன்று உறவை பகிர்ந்துகொள்பவர்கள்தான். எது முதல் உயிரினம் என்பதோ, அது எப்படி வந்தது என்பதோ நமக்கு உறுதியாகத் தெரியாது. ஆனால் இனப்பெருக்கம் என்ற வெகு எளிமையான ஒரு செயல்பாட்டின்மூலம், கோடிக்கணக்கான ஆண்டுகளாக அடைந்து வந்த சிறிய, சிறிய மாறுபாடுகள்தான் இன்று பூமியில் காணப்படும் பல்வேறு வகை உயிரினங்களாகச் செழித்து பரவி இருக்கின்றன. இன்னொன்று தெரியுமா? விஞ்ஞானிகள் அனைத்து விலங்கினங்களுக்கும் மூஞ்சூறு போன்ற ஓர் உயிரினத்தில் இருந்தே பரிணமித்து வந்ததாக கூறுகின்றனர். அப்படிப்பார்க்கும்போது இன்று நாம் பார்க்கும் யானை என்ற பிரமாண்ட விலங்கும் மூஞ்சூறு போன்ற பண்பு கொண்ட ஒரு சிறிய விலங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது. நினைத்துப் பாருங்கள் இரண்டிற்கு உள்ள வேறுபாடு எத்தனை பெரியது என்று?

இங்கே உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம். பரிணாம வளர்ச்சி என்ற தன்னிச்சையான செயல்பாடு ஒரு புத்திசாலி நாய் வளர்ப்பாளரால் கவனமாக கட்டுப்படுத்தப்ப்படும்போது ஒநாய், சிறிய அளவு நாயாக மாறி நம்மிடம் கொஞ்சி குலாவுகிறது. அதாவது ஓநாயை நாயாக மாற்ற மனிதர்களின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. ஆனால், மூஞ்சூறுபோன்ற விலங்கை யானையாக மாற்றுவதற்கு பரிணாம வளர்ச்சியை யார் வழிநடத்தி இருக்க முடியும்? கட்டுப்படுத்தி இருக்க முடியும்? அதனைக் கடவுள் செய்திருப்பாரா? இல்லை ஏலியன்களா? அல்லது வேறு ஏதாவது சக்தியா? இதற்கான விடையைதான் 19ம் நூற்றாண்டின் மத்தியில் சார்லஸ் டார்வின் என்ற மகத்தான விஞ்ஞானியும், ஆல்பர்ட் ரஸ்ஸல் வாலெஸ் என்ற விஞ்ஞானியும் தனித்தனியாக கண்டுடறிந்தனர்.

உண்மையில் பரிணாம வளர்ச்சி டார்வினுடைய கண்டுபிடிப்பு மட்டும் என்று சுருக்கிவிட முடியாது. அவர்தான் இன்று பெரும்பாலான விஞ்ஞானிகளால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தெளிவான வரையறையை வழங்கி இருக்கிறார் என்றாலும், டார்வினுக்கு முன்பே உயிரினங்களின் தோற்றம் பற்றிய கருத்துக்கள் 1748 முதல் 1859 வரையான ஆண்டுகளில் வெவ்வேறு சிந்தனையாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. அதில் ஜீன் பாப்டைஸ் லாமார்க் போன்றவர்களின் பங்களிப்பு முக்கியமானது.

இருப்பினும் டார்வினும் வாலேசும்தான் ஒரு மூஞ்சூறு யானையாகப் பரிணமிப்பதற்கு கடவுளோ, வேறு எந்த ஒரு மூன்றாம் நபரின் மேற்பார்வையோ தேவையில்லை. வேறு ஒரு ஆற்றல் இந்தத் தன்னியல்பான பரிணாம வளர்ச்சியை வழிநடத்தி பல்வேறு உயிரினங்களை உருவாக்கி இருக்கிறது. அவற்றிருக்கு இடையே ஒழுங்கையும், சிக்கலான இயக்கத்தையும்கூட கட்டுப்படுத்துகிறது என்றனர். அந்த ஆற்றலின் பெயரை இயற்கைத் தேர்வு (Natural Selection) என்று அழைத்தனர்.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *